vav-11

vav-11

வா… அருகே வா! – 11 

எதிர் பக்கம் யாரோ ஹிந்தியில் பேச, “ஹலோ… ஹலோ…” என்று கூறினாள் பூங்கோதை.

“மைம் தும்செ பியார் கர்த்தா ஹும்…” நிதானமாக ஒலித்தது அவன் குரல்.

“தும் கெளன் ஹோ?” என்று அசட்டையாகக் கேட்டாள் பூங்கோதை.

“ஹே சும்மா ஜம்முனு ஹிந்தி பேசுத பியூட்டி?” என்று உற்சாக குரலில் திலக் கேட்க, “எதுக்கு இப்ப கால் பண்ணிருக்க?” என்று ஆச்சிக்கு கேட்காதவாறு முணுமுணுத்தாள் பூங்கோதை.

‘ஒரு வருசமா இப்படி பண்ணதில்லையே?’ என்ற கேள்வி பூங்கோதையின் மனதில்.

“ஏன் இவ்விளவு நாள் கால் பண்ணலைன்னு கோபமா பியூட்டி? என்னை மிஸ் பண்ணியா பியுட்டி?” என்று திலக் சகஜமாகப் பேச, ‘என்ன இவன் இப்படி பேசுதான்?’ என்று பூங்கோதை மௌனித்தாள்.

திலக் பூங்கோதையின் பதிலுக்காகக் காத்திருக்கவில்லை.

“உன் படிப்பு முடியும் வரை உன்னை தொந்திரவு பண்ண கூடாதுன்னுதேன் பியூட்டி.” என்று விளக்கமளிக்க, “பூங்கோதை, யாரு?” என்று முத்தமா ஆச்சி கேட்டார்.

“பிரென்ட்…” என்று பூங்கோதை கூற, “உன் மனசிலும் காதல் வந்திருச்சு போல?” என்று திலக் நக்கல் தொனித்த குரலில் கேட்டான் திலக்.

“என்ன உளறுதீக?” என்று பூங்கோதை சிடுசிடுக்க, “காதல் பொய் சொல்ல சொல்லும். நீ இப்ப உங்க ஆச்சி கிட்ட பொய் சொல்லுதியே?” என்று திலக் பூங்கோதையை வம்பிழுத்தான்.

அவள் ஆச்சி இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்து, “மிலிட்டரி இப்ப எதுக்கு கால் பண்ணிருக்க?” என்று பூங்கோதை காரியத்தில் கண்ணாகக் கேட்டாள் பூங்கோதை.

“நாளைக்கி ஊருக்கு வரேன் பியூட்டி. அதை உன்கிட்ட சொல்லனுமுனு தோணுச்சு.” என்று திலக் கூற, “என்னது?” என்று அதிர்ச்சியாக கேட்டாள் பூங்கோதை.

“பியூட்டி, நான் வரேன்னு அதிர்ச்சியாகுற… பாரு, பிற்காலத்தில் நான் வரலைனா அதிர்ச்சி ஆகுவ!” என்று திலக் கேலி பேச, “ம்… க்கும்… நினைப்புதென்.” என்று கழுத்தை நொடித்தாள் பூங்கோதை.

திலக் மேலும் பேச ஆரம்பிக்க, “வரேன்னு சொல்லதென் கால் பண்ணீக? சொல்லிட்டல நாளைக்கி, ஊரில் மேளதாளம் எல்லாம் தயார் பண்ண சொல்லுதேன். போதுமா? வைக்கட்டுமா?” என்று பூங்கோதை கேட்க, “பச்சக்…” என்று முத்தத்தை அவன் அலைபேசி வழியாகப் பறக்க விட பூங்கோதை அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

பூங்கோதை வார்த்தை வராமல் தடுமாற, “நான் போன தடவை கொடுத்தது ஒரு வருஷம் தாங்கியிருக்கும்னு நினக்கேன் பியூட்டி. இது நான் நாளைக்கி வர வரைக்கும் தாங்கும். இந்த முறை கல்யாணத்தை முடிச்சிட்டுதேன் போவேன்…” என்று மேலும் காதல் மொழி பேசிவிட்டு, தன் பேச்சை முடித்தான் திலக்.

‘இந்த மிலிட்டரி என்ன நினைச்சுகிட்டு இருக்கான்? எல்லாம் அவன் நினச்சதுதானா? எனக்குன்னு யாருமில்லை… ஆனால் மனசு கூட இல்லையா?’ என்று கோபமாக எண்ணிக் கொண்டிருந்தாள் பூங்கோதை.

திலக் மறுநாள், ஊர் வந்து சேர்ந்திருந்தான். பூங்கோதை, வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவள் தன்னை மறைத்துக் கொண்டு, ஜன்னல் வழியாக திலக்கை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.

‘இந்த மிலிட்டரி என்னை பாக்குறதை மட்டுமே வேலையா வச்சிருப்பான் போலியே? எங்கயும் போக மாட்டானா? நான் எப்படி வெளிய போறது?’ என்ற கேள்வியோடு ஜன்னல் வழியாக பூங்கோதை மீண்டும் எட்டி பார்த்தாள்.

“பார்க்கணுமுன்னா, நேரா பார்க்கலாம். எதுக்கு, இப்படி ஒளிஞ்சி ஒளிஞ்சி பார்க்கணும்?” என்று திலக் ஜன்னலைப் பார்த்தபடி கேட்க, “ஆஆ….” என்று சத்தம் செய்யாமல், சுவரோடு சாய்ந்து தன் முகத்தைச் சுழித்தாள் பூங்கோதை.

‘அச்சோ! சும்மாவே ரொம்ப பேசுவானே? அட பூங்கோதை இப்படி மாட்டிக்கிட்டியே.’ என்று பூங்கோதை மனதார புலம்ப, “திலக் யார் கிட்ட பேசிட்டு இருக்க?” என்று சுவரின் இந்த பக்கம் நின்று கேட்டார் முத்தமா ஆச்சி.

முத்தமா ஆச்சியின் கேள்வியில் பூங்கோதையின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

பதட்டத்தில், தன்னை மறந்து ஜன்னல் வழியாக திலக்கை பார்த்தாள் பூங்கோதை.

ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தெரிந்த அவள் முகத்தில் பார்வையை பதித்தான் திலக்.

பூங்கோதை ஆச்சிக்கு பின்பக்கம் இருக்கும் ஜன்னல் அருகே நிற்க, “பியூட்டி கிட்ட தான் ஆச்சி.” என்று உதட்டோர புன்னகையோடு கூறினான் திலக்.

அவன் வார்த்தையில் பூங்கோதையின் கைகள் உதறல் எடுக்க, அவள் கண்கள் அவனிடம் கெஞ்சியது.

பூங்கோதையின் தவிப்பை ரசித்தபடி, “இங்கன ஒரு அழகான அணில் குட்டி வரும் ஆச்சி.” என்று திலக் இழுக்க, “ஓ….” என்று முத்தமா ஆச்சி இழுத்தார்.

‘நான் அணில் குட்டியா உனக்கு?’ என்ற எண்ணத்தோடு பூங்கோதை திலக்கை பார்த்துச் சிடுசிடுக்க, “ஆச்சி, அணில் குட்டி, பாக்க ஜோரா இருக்கும். ரொம்ப அழகா தளதளன்னு இருக்கும். அப்படியே, தூக்கி கொஞ்சனுமுனு இருக்கும் ஆச்சி.” என்று பூங்கோதையை பார்த்து ரசித்தபடி கூறினான் திலக்.

“ஆஆ….” என்று வாயைப் பிளந்த முத்தம்மா ஆச்சி, “நான் இங்கனயே நடக்கேன், என் கண்ணில் படவே இல்லையே?” என்று வருந்த, பூங்கோதை தலையில் அடித்துக் கொண்டாள்.

மேலும் திலக், முத்தமா ஆச்சி பேச பூங்கோதை அவர்கள் பேசுவதை மறைந்திருந்து கேட்க ஆரம்பித்தாள்.

பூங்கோதை கண்களிலிருந்து மறைந்து விட, திலக் பூங்கோதையை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் அங்கிருந்து செல்ல எத்தனிக்க, முத்தமா ஆச்சி அவனை நிறுத்தி வைத்து நாட்டு நடப்பை பற்றி பல கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆச்சியின் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பொறுமை இல்லாமலும், நழுவ முடியாமலும் திலக் தடுமாற உள்ளூர ரசித்துச் சிரித்தாள் பூங்கோதை.

“உன் சேக்காளியை பார்க்க கிளம்பு…” என்று ஒருவாறாக முத்தமா ஆச்சி தன் பேச்சை முடிக்க, தப்பித்தோம் சென்று கதிரேசனைப் பார்க்கச் சென்றான் திலக்.

கதிரேசனின் நிச்சயதார்த்தம் அவ்வூரிலிருந்த திருமண மண்டபத்தில் ஏற்பாடாகியிருந்தது.

மாலை வேளையில் பூங்கோதை, ஊதா நிற தாவணி அணிந்து கிளம்ப, “எங்கன கிளம்பிட்ட?” என்று முத்தமா ஆச்சி பூங்கோதையை பார்த்துக் கேட்டார்.

“இது என்ன கேள்வி ஆச்சி? நான் உன்னோட அத்தான் நிச்சியத்துக்குத்தேன் வரேன்.” என்று பூங்கோதை வெகுளியாக கூறினாள்.

“நானே கடனென்னுதென் போறேன். இந்த ஊர் வாயிற்கு அவல் ஆகக்கூடாதுன்னு போனா, நீ எதுக்கு?” என்று முத்தமா ஆச்சி கடுப்பாகக் கேட்க, பூங்கோதை சண்டைக்குத் தயாரானாள்.

பேத்தியின் பிடிவாதம் அறிந்து, மெல்லமாக சத்தமில்லாமல் பின் கதவைச் சாத்தினார். பேசியபடியே, மெதுவாக பூங்கோதையை  உள்ளே வைத்துப் பூட்டி விட்டு, மண்டபத்திற்கு கிளம்பினார் ஆச்சி.

“ஆச்சி! என்ன பண்ணிருக்கீக? ஏன் என்னை உள்ள வச்சி பூட்டினீக? நான் நிச்சயத்துக்கு வரணும்.” என்று பூங்கோதை கத்தினாள்.

“லூசு மாதிரி கத்தாதே! நான் போயிட்டு வரவரைக்கும் அமைதியா இங்கனயே இரு. நீ அங்கன வந்தா, ஆயிரம் பேச்சு வரும். மொத்த பார்வையும், உன் மேலதேன் இருக்கும். நீ வர வேண்டாம்.” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் முத்தமா ஆச்சி.

அவர் கிளம்பி, சில நிமிடங்களுக்குப் பின், பார்வதி ஆச்சி கிளம்ப, “ஆச்சி, எங்க வீட்டு சாவி அவசரத்திற்கு உங்க வீட்டில் இருக்குமில்லை. எனக்கு கதவை திறந்து விடேன்.” என்று பூங்கோதை பார்வதி ஆச்சியிடம் கெஞ்சினாள்.

“பூங்கோதை… உங்க ஆச்சி சொல்றதுதேன் சரி. நீ வீட்டிலேயே இரு. அங்கன போனா நிறைய குழப்பம் வரும்.” என்று கூறிக் கொண்டு அவரும் கிளம்பினார்.

பூங்கோதை செய்வதறியாமல் திகைத்தது ஒரு நொடி தான். அவள் தன் அலைபேசியில், திலக்கை அழைத்தாள்.

அதே நேரம் மண்டபத்தில், கதிரேசன் அருகே அழகு பதுமையாக அமர்ந்திருந்தாள் வள்ளி. வள்ளியின் கண்கள், கதிரேசனை ஆர்வமாகத் தழுவ, கதிரேசனின் கண்களோ மண்டபத்தை வட்டமடித்துக் கொண்டிருந்தது.

முத்தமா ஆச்சி மற்றும் பார்வதி ஆச்சி அமர்ந்திருக்க, பூங்கோதையை காணாமல் கதிரேசனின் நெற்றி சுருங்கியது.

“கல்யாணம் பயதேன் போல. இருந்தும், இவ்விளவு பிரமாண்டமா நிச்சியதார்தம் பண்ணுறாக.” என்ற பேச்சு அரசால் புரசலாக மண்டபத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது.

கதிரேசன், திலக்கை அழைத்து எதோ சொல்வதற்கும், திலக்கின் அலைபேசி ஒலிப்பதற்கு நேரம் சரியாக இருக்க, கதிரேசனின் தோள்களைத் தட்டிக் கொடுத்து மண்டபத்தின் வாசலுக்கு வந்தான் திலக்.

“மிலிட்டரி…” தயக்கமாக ஒலித்தது பூங்கோதையின் குரல்.

“பியூட்டி, எதுவும் பிரச்சனையா?” அக்கறையாகக் கேட்டான் திலக். “வீட்டுக்கு வாரீகளா?” என்று பூங்கோதை அழைக்க, “இதோ வரேன் பியூட்டி.” என்று கூறிய நொடி, தன் நண்பனின் ஜீப்பில் வீட்டை நோக்கிப் பறந்தான் திலக்.

‘நான் ஏன் இவனுக்கு கூப்பிட்டேன்? இவக நான் கூப்பிட்டதும் ஒரு வார்த்தை கூட கேட்காம, இப்படி உடனே புறப்பட்டு வராகளே?’ என்ற கேள்வி மனதில் எழ, பூங்கோதை தன் கண்களை இறுக மூடினாள்.

வீட்டிற்கு வந்த திலக், “பியூட்டி… உன்னை யார் உள்ள வச்சி பூட்டினா?” என்று பதட்டமாக கேட்க, “ஆச்சிதேன்… வயசாகுதே ஒழிய ஒரு அறிவுமில்லை. நான் வந்தா ஆயிரம் பேசுவாகன்னு, என்னை உள்ள வச்சி பூட்டிட்டாக. நான் வரலைனா, ஆயிரத்து ஒன்னு பேசுவாகனு இவுகளுக்கு தெரிய மாட்டேங்குது. உங்க ஆச்சியும் இதுக்கு உடந்தை.” என்று பூங்கோதை பற்களை நறநறத்தாள்.

பூங்கோதையின் பேச்சில் சுவாரசியம் எழும்ப, “அப்படி, என்ன பேசுவாக?” என்று திலக் கேட்க, “உன் கிட்ட பேச இங்கன கூப்பிடலை. உங்க வீட்டில், எங்க வீட்டு சாவியும் ஒன்னு இருக்கும். அதை கொண்ணாந்து திறங்க.” என்று பூங்கோதை சிடுசிடுத்தாள்.

வேகமாக சென்று சாவியை கொண்டுவந்தவன், “என்ன பேசுவாகனு சொல்லு?” என்று கேட்டபடியே, அவன் பார்வை சென்ற இடத்தை கண்டுபிடித்து தன் தாவணியை இடுப்பைச் சுற்றி சொருவிக் கொண்டாள் பூங்கோதை.

திலக் தன் புன்னகையை மறைத்துக் கொண்டு அவள் முகம் பார்த்தான்.

அவன் முகத்தில் பிடிவாதம் தெரிய, “நான் அத்தானை மனசில் நினைச்சிட்டுதேன் வரலைன்னு வம்பு பேசுவாக…” என்று பூங்கோதை நறுக்கு தெறித்தார் போல் கூற, “நீ யாரை நினைச்சுகிட்டு இருக்க பியூட்டி?” என்று சுவரில் சாய்ந்து சாவியை சுழட்டி ரசனையோடு கேட்டான் திலக்.

“ம்… முக்கு கோவில் ஆஞ்சிநேயரைத்தேன். அப்படியே சந்நியாசம் போய்டலாமுன்னு இருக்கேன்.” என்று பூங்கோதை கழுத்தை நொடித்தாள்.

“சந்நியாசம் இல்லை. நிச்சயத்துக்கு கூட போகிற எண்ணம் உனக்கு இருக்கிற மாதிரி தெரியலியே பியூட்டி?” என்று திலக் கூற, “கதவு திற மிலிட்டரி.” என்று ஆணையிட்டாள் பூங்கோதை.

“மணி சத்தம் கேட்குதா பியூட்டி?” என்று திலக் காரியத்தில் கண்ணாகக் கேட்க, பூங்கோதை அவனைக் கோபமாக முறைத்தாள்.

“சரி விடு. மாமா… மச்சான்… அத்தான்…. இல்லை புருஷா… இப்படி எதாவது தேனொழுக கூப்பிடு கதவை திறக்கிறேன்.” என்று புருவம் உயர்த்தி கண்சிமிட்டினான் திலக்.

“ஈயத்தை காய்ச்சி காதில் ஊத்துறேன். தேனொழுகவாம்… தேனொழுக…” என்று பூங்கோதை முணுமுணுக்க, “ஈயத்தை எல்லாம் காய்ச்ச வேணாம் பியூட்டி, எம் பொஞ்சாதி இப்படி பட்டும் படாமலும் பேசுறதே அப்படித்தேன் இருக்கு.” என்று திலக் சோகமாகக் கூறினான்.

“முடியாது…” என்று பூங்கோதை பிடிவாதம் பிடிக்க, “கூப்பிட்டாத்தேன் திறப்பேன்…” என்று திலக் பிடிவாதம் பிடிக்க, அவர்கள் சண்டை நீண்டு கொண்டே போனது, மண்டபத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றறியாமல்!

வா… அருகே வா! வரும்….

error: Content is protected !!