UKK21

உலாவரும் கனாக்கள் கண்ணிலே-21 (ஈற்றியல் பதிவு)

 

வலது முன்கையில் இருந்த கட்டினைக் கண்ட அர்ச்சனா பதற, பதற்றமில்லாமல் வழமை போல வீட்டிற்குள் வந்திருந்தான் அமர்நாத்.

“என்னங்க இது… கைல காயம்”

“ஆமா, நான் கொஞ்சம் கேர்லெஸ்ஸா கைய வச்சிட்டேன், மெஷின்ல இருந்து பைப் அன்லோடு பண்ணும் போது மெஸர்மெண்ட்காக அந்தப் பக்கமா போனேன்.  கால் தடுமாறி பேலன்ஸ்கு மெஷின பிடிக்கும் போது அன்லோடாகிட்டு இருந்த அயன் ராடு பைப்  என் கைல பட்டு முன்கைய கிழிச்சிருச்சு, உடனே கைய எடுத்தும் ஆழமா கீறீருச்சு”

“கட்டு போடற அளவுக்கு பெரிய காயமாங்க”

“ஆமா”, சோர்வாகச் சொன்னான்.

“என்ன சொன்னாரு டாக்டரு?”

“சதைப்பகுதிய ராடு  கிழிச்சிட்டதால ஆழமா காயம் வந்திருச்சு.  ஓப்பன் ஊண்ட்னால காயத்தைக் க்ளீன் பண்ணி மருந்து போட்டுருக்காரு, அப்டியே ஒரு ட்டி.ட்டி இன்ஜெக்ஷன் போட்டாரு”

“என்னங்க சாதாரணமா சொல்றீங்க”

“வேற என்ன செய்யணும்னு எதிர்பாக்கற?”

மனைவியின் கேள்விகளுக்கு நிதானமாக பதில் சொல்லியபடியே தனது வேலைகளைக் கவனித்தான் அமர்.  கேஸூவல் உடையை மாற்றிவிட்டு தன்னை ரெஃப்ரெஷ் செய்து வந்தவனுக்கு உணவு எடுத்து வந்து கொடுத்தாள் அர்ச்சனா.

வலக்கையை அசைக்க முடியாமல் வலியெடுக்க,

“அச்சு எனக்கு ஒரு ஸ்பூன் தா”

“எடுத்துட்டு வரேங்க”, என்றவள் ஸ்பூனுடன் வர, அதை பெற்றுக் கொண்டவன் இடது கையால் ஸ்பூனில் உணவை எடுத்து உண்ணத் தொடங்கினான்.

“ரொம்ப வேதனையா இருக்காங்க”, அமரின் முகத்தில் தெரிந்த வேதனையைக் கண்டு கேட்டிருந்தாள்.

“ஆமா, சாப்டுட்டு டேப்ளட் போட்டா கொஞ்சம் சரியாகும்னு நினைக்குறேன்”, மனைவியின் வருத்தத்தைப் போக்கும் விதமாக கூறியிருந்தான்.

“சரி சாப்பிடுங்க”

கணவன் உண்டு முடிக்கும் வரை அருகில் இருந்து அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தாள்.  அலைபேசி அழைப்பை ஏற்காததால் உண்டான பதற்றத்தில் அதுவரை உண்ணாமல் இருந்தவள், அதன் பிறகு மதிய உணவை உண்டாள்.

அரை மணித்தியாலம் கடந்த பின் மாத்திரைகளை உண்டவன், மாத்திரையின் உபயத்தால் உறங்கினான் அமர்.

கொல்கத்தா சம்பவத்திற்குப் பிறகு, அன்பரசி தினந்தோறும் அலைபேசியில் மருமகளுக்கு அழைத்துப் பேசுவதை வழக்கமாக்கியிருந்தார்.

மாமியாரின் அழைப்பு வந்தால் அமரின் கை பற்றி கூறுவதா வேண்டாமா என அழைப்பு வருமுன் யோசித்தபடி இருந்தவள், அன்பரசி அழைத்து பேச ஆரம்பித்ததும் மறைக்காமல் விடயத்தை கூறியிருந்தாள்.

“அத்த, அவருக்கு இன்னிக்கு சைட்டுல இருக்கும்போது வலது  முன்கைல காயம் பட்டிருச்சு”

“பாத்து நிதானமா செய்யாம அப்படி என்ன கவனச் சிதறல்… ரொம்ப பலமான காயமா?”

“ஆமா, கைல ஆழமா கீறீ விட்ருச்சு போல, மாத்திரை போட்டு தூங்கறார்”

“அவன் எழுந்தவுடனே கால் பண்ணச் சொல்லு”, என்றுவிட்டு வைத்துவிட்டார் அன்பரசி.

சற்று நேரத்தில் பத்ரி, அமரின் அலைபேசிக்கு அழைக்க உறக்கத்தில் இருந்தவனின் அலைபேசி அழைப்பை அர்ச்சனா ஏற்று பேசினாள்.

“அவரு தூங்கறாரு மாமா, எதுவும் அவரிட்ட சொல்லணுமா?”

“சும்மா தான்மா கால் பண்ணேன்.  இந்த நேரத்தில பங்கு தூங்க மாட்டானே… என்ன திடீர்னு?”

“அது… அது… வந்து… அவரு கைல அடிபட்டதால மாத்திரை போட்டு தூங்கறாரு”

“என்ன செஞ்சான்? கைல அடிபடற மாதிரி”

“எனக்கு அவரு சொன்னது அவ்வளவா புரியல, ஏதோ ராடு கீறிருச்சுனு சொன்னாங்க”

“ராடு கீருற அளவுக்கு அது கிட்ட போயி என்ன செஞ்சான், சரிமா நான் அப்றம் கால் பண்ணி பேசறேன். அவன தொந்திரவு பண்ணாத…”

“சரி மாமா”, என்றவுடன் பத்ரி அழைப்பை துண்டித்திருந்தான்.

 

அன்று மாலை எழுந்தவனிடம் மாமியார் மற்றும் பத்ரி அழைத்ததைக் கூறினாள் அர்ச்சனா.  அதன்பின் இருவருக்கும் அழைத்துப் பேசிவிட்டு வைத்தவன்

“இருக்குற வேதனைல இவங்க ரெண்டு பேரும் அட்வைஸ் பண்ணியே கொல்றாங்கடி என்ன… நீ தான அவங்களுக்கு விசயத்தை சொன்ன உண்மை விளம்பி”

“ஆமா… அத்த சாதாரணமா தான் பேசுனாங்க… நான் சொல்லாம இருந்து, நீங்க அவங்ககிட்ட விசயத்த சொன்னா என்னப் பத்தி என்ன நினப்பாங்க… அதான் அவங்க பேசும்போது நானே சொல்லிட்டேன்”

“வர… வர… தெளிவாகிட்ட… ரெண்டு மூனு நாள்ல அப்டி என்னதான் நடந்துச்சு ஊருல…, மாமியார் மெச்சுற மருமகளா மாறிட்டியடி”, என ஆச்சர்யமாக கேட்டான் அமர்.

“அத உங்ககிட்ட சொல்லக் கூடாதுனு அத்த சொல்லிருக்காங்க”, என்றாள் சிரித்தபடி

“சொல்லாட்டிப் போ… எங்கம்மாட்டயே கேட்டுக்கறேன் நான்”

“அத்தயும் உங்கட்ட சொல்ல மாட்டாங்களே”

“கூட்டணி கூடிட்டிங்க, குயினு தலைமைல ரெண்டு தொண்டர் படையா”

“ஆமா”

“சங்கம் ஒன்னும் ஆரம்பிக்க வேண்டியதுதான”

“அத பத்திதான் யோசிச்சிட்டு இருக்கோம்”, சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு அர்ச்சனா கூற

“இது வேறயா”

“இன்னும் நிறய இருக்கு… ஆனா சங்க விசயத்தை சல்லிப் பசங்ககிட்டல்லாம் சொல்லக் கூடாதுன்னு ருல்ஸ்… அதான் அத சீக்ரெட்டா மெயிண்டென் பண்ற மாதிரி இருக்கு”, என யோசிப்பது போல செய்கை செய்து காண்பித்தாள்.

“யார பாத்துடி சல்லி பசங்கனு சொல்லுற?”

“உங்கள பாத்து தான் சொன்னேன்”

“நான் சல்லியாடி…  அப்ப நீ…”

“நீங்களே கண்டுபிடிங்க பாக்கலாம்”

“சல்லிப்பய பொண்டாட்டிய பத்தி சொன்னா சேதாரமெல்லாம் ஆகுமே”, என ஒரு மார்க்கமாகச் சிரித்தான்.

“சேதாரமா… யாருக்கு…?”

“ம்… வேற யாருக்கு? எனக்குத்தான்”

“உங்களுக்கா?”

“ம்…”

“புரியுற மாதிரி சொல்லுங்க”

“சல்லிப்பசங்கள்லாம் என்ன செய்வாங்கனு தெரியுமா?”

“தெரியாதே”

“தெரிஞ்சுக்கோ”, என்றவன் அமரின் இடது புறமாக அமர்ந்திருந்த அர்ச்சனாவின் இடையை தனது ஒரு கையால் வளைத்து தூக்கியவன் தனது மடியில் அமர வைத்து இறுக அணைத்தபடி காதில் ஏதோ விடயத்தைக் கூற

எதிர்பாராமல் நிகழ்ந்த நிகழ்வினால் சற்று நிதானமாக நிகழ்வுக்கு வந்தவள் கணவன் தன் காதுக்குள் கூறிய ரகசிய செய்தியைக் கேட்டவள்,

“ச்சீய்… போங்க… என்ன சொல்றீங்க… நீங்க சும்மா சொல்றீங்க”, என பதறினாள்.

“ஏய்… எதாவது ஒரு வார்த்தைய அர்த்தம் புரியாம நீ பேசிட்டு… அதுக்கு அர்த்தம் சொன்னா என்னய நம்ப மாட்டிங்கற”

“அப்ப நிஜமாத்தான் சொல்றீங்களா?”

“உங்கிட்ட பொய் சொல்லி என்ன செய்யப்போறேன்”

மடியில் இருந்து எழுந்தவள், “சாரிங்க”

“சாரியெல்லாம் தீபாவளிக்கு ஊர்ல போயி எடுத்துட்டாப் போச்சு”, என அமரே பேச்சை மாற்றியிருந்தான்.

“உங்களுக்கு எப்பவும் விளையாட்டுத்தான்”

“நீ சீரியசா இருந்து இப்ப என்ன சாதிச்சிட்ட”

“இப்டி விளையாடிட்டே போயி தான் கைய கிழிச்சுட்டு வந்து நிக்கிறீங்களோ?”

“அருமையான கண்டுபிடிப்புடி அச்சு”

“அப்ப அவார்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க”

“வர வர நல்ல ஃபார்முக்கு வந்துட்டே இருக்கடி”, என மனைவியுடன் தனது வலியை மறந்து பேசியபடி இருந்தான் அமர்நாத்.

 

அன்று இரவு சற்று சுரம் போல இருக்கவே, அமரின் அனத்தலில் எழுந்தவள் இரவில் அவனுக்கு வேண்டியவற்றை கேட்டுக் கேட்டு கவனித்தாள்.

ஆனாலும் சுமையை மாற்றித் தந்து, அதனைக் குறைக்கும் வழி இருக்கும் வாழ்வில், வலியை மாற்றி கணவனின் வேதனையை குறைக்க முடியாத நிதர்சனத்தை எண்ணியவளாய் வருந்தியபடி இருந்தாள் அர்ச்சனா.

இரண்டு நாட்கள் மிகவும் வேதனையுடன் இருந்தவனைக் காண அர்ச்சனாவிற்கு தாளவில்லை.  அத்தனை வேதனையையும் அமர் உடலில் அனுபவிக்க, அமரின் வேதனையைக் கண்டு உள்ளத்தால் நொந்திருந்தாள், அர்ச்சனா.

அர்ச்சனாவின் மாறுபாட்டைக் கவனிக்கும் நிலையில் அமர் இல்லாததால் அவன் அவளின் நிலையினைக் கருத்தில் கொள்ளவே இல்லை.

மூன்றாம் நாள் இயல்பு நிலைக்கு வந்திருந்தவனிடம் பழைய வேகம் மீண்டு வந்திருக்க அவனின் வேதனை குறைந்ததை அவனின் செயல்பாடுகளில் உணர்ந்து நிம்மதி அடைந்திருந்தாள் அர்ச்சனா.

அதன்பின் வந்த நாட்களில் அமர் முற்றிலும் குணமாகிவிட வசந்தங்களுடன் வானவில் போல வந்த பலவிதமான நிகழ்வுகளுடன் மகிழ்வாகச் சென்றது.

 

**************************

 

கேரளா பயணத்தின் இனிமையை அனுபவிக்க இயலாதவாறு சுசீலா மகனை பேச அழைத்தார். உள்வீட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும் பொருட்டு தீர்ப்பைக் கூறும் பெண் நாட்டாமையாக அமர்ந்து விசாரணைக்கான கேள்விகளை முன்வைத்திருந்தார்.

 

“சேகரு, அப்பா என்னென்னமோ சொல்றாறே அதல்லாம் உண்மையா?”

“அப்பா என்னம்மா சொன்னாரு?”

“நீ சொன்னத தான் சொல்லுவாறு… வேற என்னத்த எங்கிட்ட சொல்லப் போறாரு”, சுசீலா

“எதுனாலும் சுத்தி வளைக்காம, நேரடியா கேளும்மா”

“சொத்தெல்லாம் அந்தப் பொண்ணு பேருல மாத்திட்டியாம்”

“எந்த சொத்த? எந்தப் பொண்ணு பேருல மாத்திருக்கேன்”

“உங்க அப்பா தான் தம்பி எங்கிட்ட சொன்னாரு, ரெண்டு நாளைக்கு முன்னாடியே எல்லாத்தையும் அந்தப் பொண்ணு அதான் உன் பொண்டாட்டி பேருக்கு மாத்திட்டனு”

 

விடயம் புரிந்ததும் ‘ஒரு அக்ரிமெண்ட் போட்டதுக்குத்தான் இந்த அக்கப்போறா’ என்று எண்ணியவன், “என்னம்மா சொல்ற?”, எரிச்சலாகக் கேட்டிருந்தான்.

“முதல்ல சாண் போச்சு, அப்புறம் முழம் போச்சு, இப்போ எல்லாம் முழுசா போச்சு அத ஒரு பெத்த தாயிக்கிட்டயே மறைக்க நினைக்கிற”

“அம்மா என்னதான் உன் பிரச்சனை? எதுவும் எங்கயும் போகல, நீயா எதாவது நினச்சுகிட்டு பேசுனா நான் என்ன பண்றது?”

“இத்தன வருசமா பெத்து வளத்து ஆளாக்குன எங்கள  ஒரு நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லாம மாத்தி வச்சுட்டு, நேத்து வந்தவள கொண்டு போயி உச்சாணியில கொண்டு வச்சா என்ன அர்த்தம் சேகரு”

“புரியாம எதாவது வாயிக்கு வந்தபடி பேசாதம்மா”

“இன்னும் உன்ன புரிய என்ன இருக்கு, அதான் அவ எல்லாத்தையும் தன் கைக்குள்ள போட்டுக்கிட்டு எங்கள ஓட்டாண்டியா வீட்ட விட்டு துரத்துற நாள கிட்ட கொண்டு வந்துட்டியே”, சுசீலா

அருகில் அமைதியாக அமர்ந்து இருந்த செழியனை நோக்கிய சந்திரசேகர்

“அப்பா நான் என்ன உங்க கிட்ட சொன்னேன்?  முதல்ல நீங்க அத எங்கிட்ட சொல்லுங்க”

“…”

“உங்களத்தாம்பா கேக்குறேன்”

“அம்மா கேக்குறதுக்கு பதில் சொல்லு, அதவிட்டுட்டு எங்கிட்ட என்ன கேள்வி கேட்டுக்கிட்டு?”, கேள்வி எழுப்பி சமாளித்திருந்தார் செழியன்.

இருவரையும் பார்த்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக

“நான் இன்னும் சின்னபுள்ள இல்ல, எனக்கும் அனுபவம் இருக்கு, ஒன்னுக்கு மூனு தொழில நல்லபடியா பாத்துட்டு இருக்கேன், இது வர எந்த என்னோட தொழிலுக்கும் நீங்க யாரும் முதல் போடல…

அப்டியிருக்க நானா பாங்குல லோன போட்டு நாயா கிடந்து உழச்சு படிப்படியா முன்னேறி இந்தளவு வந்திருக்கேன். அந்த தொழில் எல்லாம் என் பேருல தான் இன்னிக்கு வர இருக்கு. அப்படியே அத மாத்தணும்னாலும் இங்க இருந்துதான மாத்த முடியும்.

அடுத்த ஸ்டேட்ல இருந்துக்குட்டு எம் பொண்டாட்டி பேருல மாத்துனேன்னு சொல்றீங்க. அத எப்டி மாத்த முடியும்னு யோசிங்க.

பூர்வீக சொத்துன்னு இருக்கறது எல்லாம் அப்பா பேருல தான் இருக்கு.  அப்டி இருக்க அத எல்லாம் ஏன் என் பொண்டாட்டி பேருக்கு மாத்தப்போறேன்.

அப்டியே என் தொழிலெல்லாம் எம்பொண்டாட்டி பேருல மாத்துறதா இருந்தாலும் அதுல என்ன தப்பிருக்கு?”

“பெரியவங்க பாத்து வச்ச கல்யாணத்துல எல்லாம் உன் இஷ்டத்துக்கு பண்ணக்கூடாது சேகரு. ஒரு வார்த்தை எங்கிட்ட முன் கூட்டியே சொல்லாம கூட அந்த பொண்ண வெளியூரு கூட்டிட்டுப் போற”, சுசீலா

“முன் கூட்டியே சொன்னா என்னம்மா செஞ்சிருப்ப?”

“பெரியவங்களுக்கு மரியாதை குடுத்துப் பழகு சேகரு, எடுத்தெரிஞ்சு பேசுற”

“போகும் போது சொல்லிட்டுத்தானம்மா ரெண்டு பேரும் போனோம்”

“அப்டி எப்டி போவ? பெரியவங்ககிட்ட கூட்டிட்டுப் போகலாமானு ஒரு வார்த்தை கேக்க  ணும்னு தோணல இல்ல உனக்கு”, சுசீலா.

“ஏம்மா உன் குடும்பத்த இது வர நீதான் முன்னாடி நின்னு நடத்துன… எல்லாத்துக்கும் அப்பத்தாகிட்டயும், தாத்தாகிட்டயுமா போயி நீயும் அப்பாவும் கேட்டுகிட்டு இருந்தீங்க?

தொழில ஆரம்பிச்ச காலத்துல கூட எனக்கு என்ன தேவைன்னு நீ கேட்டதில்ல.  நானா எம்மனசு போன போக்குல ஏதோ ஒரு தொழில ஆரம்பிச்சு அது நல்லா வந்தவுடனே அடுத்துடுத்து தொழிலுனு இறங்கனேன்.  அப்பல்லாம் எதுவும் பேசாம இருந்த நீ இப்ப வந்து மட்டும் இவ்வளவு கேள்வி கேக்குறியே ஏன்?

இப்ப எனக்கு கல்யாணம் ஆகியும் உங்கிட்ட தான் வந்து கேக்கணும்னா எதுக்கு நான் கல்யாணம் பண்ணணும்? சொல்லும்மா”

“ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க சேகரு, அப்டி தான் இன்னைக்கு நாம ரெண்டு பேரும் ரெண்டுபட்டு நிக்கறோம்”, சுசீலா.

“என்னம்மா…. ஏதேதோ சொல்லிக்கிட்டு”

“முடிவா என்ன தான் சொல்ற சேகரு?”

“என்ன சொல்ல?”

“அப்ப உம் பொண்டாட்டி பேருல எந்த சொத்தும் நீ எழுதி வைக்கலனு எனக்கு சத்தியம் பண்ணு”

“அம்மா என் பொறுமைய சோதிக்காத… என்ன நினச்சு பேசிட்டு இருக்க”

“அப்ப எங்கிட்ட நீ எதையோ மறைக்கப் பாக்குற, அதான் சத்தியம் பண்ண மாட்டிங்கற”

“அப்பா, உங்களுக்காது அம்மா பேசுறது புரியுதா? இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா?”, சந்திரசேகர்.

செழியன் எதுவும் நடக்காத போல தலையை கீழே குனிந்தவாறு அமர்ந்திருந்தார்.

“முடிவா என்னம்மா சொல்ல வர்ற”

“எங்க ரெண்டு பேரு காலம் இருக்கற வர, நீ வாங்கறது எதுவும் அப்பா பேருல தான் வாங்கியிருப்பனு நாங்க நம்பிகிட்டு இருந்தோம்.  அதுலயே நீ மண்ணை அள்ளிப் போட்டுட்ட… அப்ப எங்களுக்கு என்ன மரியாதை இது வர தந்திருக்க?”

“அம்மா நிதானமா யோசி… நான் என் விவரம் தெரிஞ்சு கஷ்டப்பட்டு வாங்கி இந்தளவுக்கு கொண்டு வர அரும்பாடு பட்டதெல்லாம் எப்படி உங்க பேருல வாங்க முடியும்?

நீயும், அப்பாவும் ஊருல இருப்பீங்க, எல்லாத்துக்கும் உங்கள எதிர்பாத்தே நான் தொழில் பண்றதுங்கறதெல்லாம் சாத்தியமானு முதல்ல யோசிங்க”

“அப்ப இந்த வீடு?”

“ம்… அதுவும் என் பேருலதான் இருக்கு”

“நம்பிக்கை துரோகம் பண்ணிட்ட சேகரு”

“அவங்கவங்க கஷ்டப்பட்டு உழைச்சு அவங்க பேருல தான் வாங்குவாங்க, அப்பா சொத்து வாங்கி என் பேருலயா ரெஜிஸ்டர் பண்ணுவாறு?”

“ஊருல இந்த விசயம் தெரிஞ்சா ஒரு பய எங்கள மதிக்க மாட்டாங்க”

“ஊருல இதல்லாம் போயி எதுக்கு சொல்றீங்க?”

“அது எப்படி தெரியாம போகும்”, ஆக்ரோசமாகக் கேட்டிருந்தார் சுசீலா.

“தேவையில்லாம எதாவது பேசி மனுசன நிம்மதியாவே இருக்க விடமாட்டிங்க போல”

“உன் நிம்மதிய நாங்க கெடுக்கறோமா?”

“என்ன சொன்னாலும் புரியப் போறது இல்ல, அப்புறம் எதுக்கு என் வாயக் கிளருறீங்க, உங்களுக்கு என்ன தோணுதோ அப்படியே வச்சுக்கங்க, ஆள விடுங்க, இதுக்கு மேல இதப் பத்திப் பேசுனா நான் என்ன  செய்வேனு எனக்கே தெரியாது”, என கோபமாகப் பேசியவன் அங்கிருந்து அகன்றிருந்தான்.

 

மகன் சென்றதும், கணவரிடம் பேச ஆரம்பித்திருந்த சுசீலா,

“மரியாதை இல்லாத இடத்துல நமக்கு என்னங்க வேல, மசமசன்னு உக்காந்துட்டு இருக்காம கிளம்புங்க”

“இவ வேற… எங்க கிளம்பச் சொல்லறடீ?”

“ஊருக்குத்தான்”

“அங்க போயி அர வயிறு கஞ்சி கூட காச்சி ஊத்தமாட்ட நீ, உன்ன நம்பி நான் அங்கல்லாம் வரல, நீ போறதா இருந்தா போ, நான் இங்கயே இருக்கேன். ஏன்டி, நான் என்ன உங்கிட்ட சொன்னேன், நீ சேகருகிட்ட என்ன கேக்குற?”

“ஏன் நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?”

“வாயில வந்துறப்போகுது… போடீ அங்கிட்டு… அக்ரிமெண்ட் அந்த பொண்ணு பேருல போட்டதா சொன்னானு தான நான் உங்கிட்ட சொன்னேன். நீயா இட்டுக்கட்டி சொத்தெல்லாம் எழுதி வச்சிட்டியானு நீயே அவனுக்கு போட்டுக் குடு”

“என்னங்க சொல்றீங்க, அப்ப அக்ரிமெண்ட்னா அது வேறயா?”

“நோகாம உக்காந்து தின்னா இப்படித்தான் மூளை மரத்துப் போயி பேசுவாங்களாம்”, என்றபடி எழுந்து அவரது பணிகளை கவனிக்கச் சென்றுவிட்டார்.

மகனின் கோபம் அறிந்த சுசீலா அதன்பின் சந்திரசேகர் வீட்டிலிருக்கும் வரை அறையை விட்டே வெளிவரவில்லை.

எல்லாவற்றையும் கவனித்திருந்த ஜனதா எதுவும் நடக்காதது போல அவளது பணிகளை கவனித்திருந்தாள்.  வீட்டு விடயங்களைப் பற்றி தன் தாயிடம் கூட பகிர்ந்து கொள்ள விரும்பாத தன்மையினள், ஜனதா.

கணவனின் நிலை அறிந்தவள் அவனை தொந்திரவு செய்யாமல் ஆட்டோவில் சென்று வேண்டிய காய்கறிகளை வாங்கி வந்து அடுக்களைப் பணிகளை செவ்வனே செய்தாள்.

மதிய உணவிற்கு கணவனை அழைக்க, வெளியில் உண்டு கொள்வதாகக் கூறிவிட்டான்.

எல்லாம் தனது மாமியாரின் காலை நேரப் பேச்சால் என்பதை உணர்ந்திருந்தாலும் அது பற்றி பேசாமல் வைத்துவிட்டாள்.

 

மாலை நேரம் கணினி வகுப்புகளை முடித்துவிட்டு திரும்பிய ஜனதாவைக் கண்ட சுசீலா, ஜாடை மாடையாக தன்னைப் பேசினாலும் கண்டுகொள்ளாமல் தனது பணிகளில் கவனம் செலுத்தினாள் ஜனதா.

 

இரவு வெகுநேரம் கழித்து வந்த சந்திரசேகர் முற்றிலும் மனம் சோர்ந்து வந்திருந்தான்.  அதனைக் கண்ட ஜனதா மதிய உணவினை உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து வந்திருந்த கணவனின் தோற்றத்தை வைத்துக் கணித்தவள்

“உங்களுக்கு யாரு மேல கோபம் வந்தாலும் இனி அத சாப்பாட்டுல காமிக்காதிங்க”, என்றவள் அவனின் கோபம் அறிந்து அதற்கு மேல் பேசவில்லை.

உணவினை தங்களது அறைக்கே கொண்டு வந்து வற்புறுத்தி கணவனிடம் கொடுத்து உண்ணச் செய்தாள்.

 

உண்டு முடித்தவன், “எதுவுமே நடக்காத மாதிரி உன்னால எப்டிடி இருக்க முடியுது?”

“…”

“உன்னத்தான ஜனதா கேக்குறேன்”

“என்ன சொல்லணும்னு எதிர்பாக்கறீங்க?… அதையே நான் சொன்னதா நினச்சுக்கங்க”

“என்னடி ஒட்டாம… வெட்டிப் பேசற”

“ம்…”

“எங்கம்மா என்ன கேள்வி கேட்டே கொல்லுது… நான் கேக்குறதுக்கு பதில் சொல்லாம நீ கொல்ற…”

“என்ன பேசுறீங்க, பெத்தவங்க பேசுறதெல்லாம் பெரிய விசயமாக்கிக்கிட்டு, போயி படுத்துத் தூங்குங்க நிம்மதியா”

“ஆளாளுக்கு வச்சு செய்யுங்க”, என்றபடி சென்று படுத்தவன் அன்றைய நாளின் அலைச்சலால் உறங்கியிருந்தான், சந்துரு.

வருத்தம் இருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் அடுத்த நாளின் நல்விடியலுக்காக காத்திருந்தாள், ஜனதா.

*************************