Rainbow kanavugal-9

9

 

அன்று முழுக்கவும் நீதமன்ற வேலைகள், வழக்கு என்று அலைந்து திரிந்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் கடற்கரை சாலையருகில் உள்ள அந்த மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தனர் அந்த தோழிகள் இருவரும்!

மதுவும் ரேகாவும் ஒரு அறைக்குள் நுழைய, அங்கே படுக்கையில் நாற்பது வயது மதிக்கத்தக்க நிலையில் ஒருவர் சாய்ந்தமர்ந்திருந்தார். அருகில் அவர் மனைவி அவருக்கு கஞ்சி ஊட்டி கொண்டிருக்க,

“இப்போ உங்க வீட்டுகாரருக்கு பரவாயில்லையா மா?” என்று கேட்டு கொண்டே, தான் கையில் எடுத்து வந்த பழங்களை மது மேஜை மீது வைத்தாள்.  

மதுவை பார்த்த நொடி அவளருகில் வந்த அந்த பெண் உணர்ச்சிவசத்தோடு அவளின் கைகளை பற்றி கொண்டு, கண்ணீர் வடிக்க,

மது புரியாமல் தன் தோழி ரேகாவை பார்க்க, அவளும் என்னவென்று குழப்பத்தோடு இவள் முகத்தை ஏறிட்டாள்.

“என்னாச்சு மா?” என்று மது அந்த பெண்ணிடம் கேட்க, அப்போது படுக்கையிலிருந்த நபர், “நீங்க தெய்வமா எங்களுக்கு?” என்று கையெடுத்து கும்பிட்டார்.

மது லேசாக அவர்களின் அந்த வார்த்தைகளில் தடுமாறினாலும் பின் சிரித்து கொண்டே, “நான் மட்டும் தெய்வமா இருந்தா… இங்க இருக்க எல்லோரையும் ஒரு வழி பண்ணி இருப்பேன்… ஒழுங்கா கடமையை செய்யாம இருக்க அதிகாரிங்க… பதவி மேல பைத்தியம் புடிச்சு சுத்திகிட்டு இருக்க அரசியல்வாதிங்கன்னு எல்லாரையும் துவம்சம் பண்ணி இருப்பேன்” என்றாள்.

அவள் சிரித்து கொண்டே சொன்னாலும் ஆழமாக அவள் உள்ளிருந்து வெளிப்பட்ட கோபம் அது. அந்த ஏழை தம்பதிகள் அவளை வியப்பாக பார்த்திருக்க,

“அது இருக்கட்டும்… இப்போ நீங்க ரெண்டு பேரும் என்னை தெய்வமா கும்புடுற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு?” என்று கேட்டாள் மது.

உடனே அந்த பெண் ஒரு பையிலிருந்து இரண்டு பெரிய பணக்கட்டுகளை எடுத்து காண்பித்தாள். தோழிகள் இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

மது ரேகாவின் காதோடு, “காலையிலதானே பேசிட்டு வந்தோம்… அதுக்குள்ள எப்படி… சான்சே இல்லயே” என்று சொல்ல ரேகாவும் அவள் வார்த்தையை ஆமோத்தித்தாள். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு நேர்மாறாக,

 “இந்த பணத்தை அவரை இடிச்சிட்டு போன வணடிக்காரன்களே கொண்டாந்து குடுத்தாங்கமா” என்றதும் மது ஆச்சரியம் தாங்காமல், “நிஜமாவா?” என்று கேட்டாள்.

அந்த தம்பதிகள் இருவரும் ஆமென்று தலையசைக்க, ரேகா வாயடைத்து போய் நின்றாள். 

“எவ்வளவு கொடுத்தாங்க?” என்று மது கேட்க,

“இரண்டு லட்சம்… அது இல்லாம ஹாஸ்பெடில் பில்லையும் மொத்தமா அவங்களே கொடுத்துட்டாங்க மா” என்றாள் நெகிழிச்சியான உணர்வோடு!

மதுவின் முகத்தில் ஆச்சரிய ரேகைகள் படர, ரேகா அப்போது அவள் காதோரம், “நீ பெரியாளுதான் மது… சாதிச்சிட்ட… அதுவும் மொத்தமா ரெண்டு லட்சம்” என்று வாய் பிளந்தாள்.

“அவங்க பேர்ல தப்பு இருக்கு… கொடுத்திருக்காங்க” என்று தன் தோழியிடம் சொன்னவள் பின் அந்த பெண்ணிடம் திரும்பி,

“பரவாயில்ல உங்களுக்கு கெட்டதுலயும் ஒரு நல்லது நடத்திருக்கு… இந்த பணத்தை வைச்சு எதாச்சும் தொழில் பண்ணிக்கோங்க” என்றவள் சொல்லிவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து புற்பட்டாள்.

வெளியே வந்த இருவரும் தங்கள் ஸ்கூட்டியில் பயணிக்க தொடங்க, மது ஓர் ஆழ்ந்த அமைதியோடு வண்டியை ஒட்டி கொண்டு வந்தாள். அவள் கையும் கண்களும் வண்டியை இயக்கினாலும் மனம் வேறோங்கோ தனியாக இயங்கியது.

ரேகா அவள் எண்ணவோட்டத்தை கலைத்தபடி,  

“நீ அவங்களை அடிமிட் பண்ணும் போது கட்டின காசை கேட்டு வாங்கிட்டு வந்திருக்கலாம் இல்ல” என்க,

“லூசா டி நீ… அல்பம் மாதிரி உதவி செஞ்ச காசை போய் கேட்க சொல்றியா?” என்றாள் மது கடுப்போடு!

“பின்ன கேட்காம… நீயென்ன பாரி வள்ளல் பரம்பரையா? கொடுத்த காசை கூட திரும்பி வாங்காம ஏமாந்த சோணகிரி மாதிரி கிளம்பி வந்துட்ட… உஹுக்கும்… அந்தம்மாகாச்சும் குடுக்கனும்னு தோணுச்சா பாரு” என்று ரேகா சொல்ல,

“வாயை மூடு… இப்ப அந்த காசை வந்துதான் எனக்கு நிறைஞ்சிட போகுதாக்கும்” என்றாள் மது.

“நீ எப்புடுறி இப்படி இருக்க… கோர்ட்ல பாதி கேசை நீதான் செலவு பண்ணி நடத்திட்டு இருக்க… இதுல முக்கால்வாசி பொதுநல வழக்கு வேற… அதுல முக்கால்வாசிய அவங்களே தள்ளுபடி பண்ணிடுறாங்க” என்றவள் பாட்டுக்கு புலம்பி கொண்டே வர,

“நீ இப்படியே பேசிக்கிட்டே வந்த… உன்னை இங்கயே தள்ளிவிட்டுட்டு போயிடுவேன் சொல்லிட்டேன்” என்றாள்.

“நீ செஞ்சாலும் செய்வடி” என்று சொல்லிவிட்டு அதோடு ரேகா அவள் வீடு வரும் வரை வாயை திறக்கவில்லை. ரேகாவை இறக்கிவிட்ட பின் மது தன் வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் நன்றாக இருட்டிவிட்டிருந்தது.

அவள் எப்போதும் பைக்கை வீட்டின் முன்னே நிறுத்துவதுதான் வழக்கம். ஆனால் அந்த இடத்தை இன்று வழமைக்கு மாறாக ஒரு கம்பீரமான சாம்பல் நிற கார் ஆக்கிரமித்திருந்தது.

‘யாருடா அவன்… நம்ம வீட்டு வாசலில காரை நிப்பாட்டி இருக்கிறது’ என்ற யோசனையோடு தன் பைக்கை நிறுத்தி ஸ்டேன்ட் போட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

இத்தனை விலையுயர்ந்த காரை எடுத்து கொண்டு இந்த தெருவில் யாரை பார்க்க வந்திருக்க கூடும் என்று யோசித்த மூளையில் வேறோரு நினைவு பட்டென்று அவள் தலையை தட்டியது.

‘இந்த காரை நம்ம அந்த பெரிய பங்களால பார்த்தோம்  இல்ல… இதெப்படி இங்க?’ என்று யோசித்த மறுகணமே அவள் மனதிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றியது.

படபடவென மாடி படிக்கட்டுகளில் ஏறியவள் தன் காலணிகளை அவசரமாக கழற்றிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

அவள் வீட்டு முகப்பறையில் அஜய் ஒய்யாரமாக சோபாவில் அமர்ந்து, அவள் தாய் நந்தினியிடம் பேசி கொண்டிருந்ததை பார்த்த நொடி அவள் உள்ளம் படபடத்தது. ஏதோ விபரீதமாக எண்ண தோன்றியது.

அடுத்த நொடியே அவன் முன்னே வந்து நின்றவள்,

“ஹலோ மிஸ்டர்… எதுக்கு நீங்க என் வீட்டுக்கு வந்தீங்க? உங்களுக்கு இங்க என்ன வேலை? என்ன மிரட்ட வந்தீங்களா?” என்றவள் சரவெடியாக வெடிக்க, அவனோ மத்தாப்பாக அவளை பார்த்து சிரித்தபடி அமர்ந்திருந்தான்.

“ஏ மது” என்று நந்தினி மகளை தடுக்க முனைய,

“உனக்கு அறிவே இல்ல நந்து… யார் என்னன்னு தெரியாம நீ பாட்டுக்கு உள்ளே உட்கார வைச்சி பேசிட்டு இருக்க” என்று தன் அம்மாவையும் பேச விடாமல் அவள் வெடித்தாள்.

“நீ இன்னுமும் திருந்தலயா… உங்க அம்மா அப்பாவை பேர் சொல்லித்தான் கூப்புடுறியா?” என்று அஜய் நக்கலான புன்னகையோடு கேட்க அவளுக்கு எரிச்சலானது.

“நான் எங்க அம்மா அப்பாவை எப்படி வேணா கூப்பிடுவேன்… உங்களுக்கு என்ன மிஸ்டர்?” என்று கேட்டு கொண்டிருந்தவளின் குரலில் சுருதி மெல்ல இறங்க, அவளுக்கு அந்த நொடி அவன் கேட்ட கேள்வியும் அந்த கேள்வி வந்த தோரணையும் வேற எதையோ நினைவுப்படுத்தியது.

அவள் அமைதியாக அவன் முகம் பார்த்து குழம்பி நிற்கும் போது, “ஐயோ மது! அது யாரோ இல்ல… நம்ம அஜய் டி” என்று நந்தினி மகளிடம் சொல்ல, அஜய் இதழ்கள் விரிந்தன.

மதுவின் இதழ்கள் இறுக பூட்டி கொண்டன. அப்போது நந்தினி அஜயிடம், “தப்பா நினைச்சுக்காத அஜய்… அவ நீ யாருன்னு தெரியாம” என்று சொல்லவும்,

“பரவாயில்ல மாமி” என்றான் மிதமான முறுவலோடு!

மதுவின் மூளை அப்போதுதான் நடந்த அனைத்தையும் வைத்து கணக்கு போட்டு கொண்டிருக்க நந்தினி அஜயிடம்,

“அம்மா அப்பா அனன்யாலாம் எப்படி இருக்காங்க அஜய்? அனன்யாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்று வரிசையாக தம் நல விசாரிப்புகளை தொடங்கியிருந்தார்.

“போன வருஷம்தான் அனன்யாவுக்கு கல்யாணம் முடிஞ்சுது… பாப்பா பிறந்து ரெண்டு மாசம் ஆகுது… அப்பா நல்ல இருக்காரு… அம்மா” என்று நிறுத்தி யோசித்தவன்,

“அவங்களும் நல்லா இருக்காங்க” என்று முடிக்க, மதுவிற்கு பால் மணம் மாறாத அந்த குழந்தையின் முகம் நினைவுக்கு வந்தது. மெல்லிய புன்னகை அவள் உதட்டில் மலர, ‘அனன்யா பாப்பாவா அது’ என்று மனதில் எண்ணி கொண்டாள்.

அஜயின் பார்வையோ மது ஏதாவது பேசுவாளா என்று ஏக்கமாக அவளையே பார்க்க நந்தினி மகளின் தோளை இடித்து,

“என்னடி இத்தனை வருஷம் கழிச்சு அஜய் நம்மல தேடிகிட்டு வந்திருக்கான்… நீ என்னடான்னா ஒன்னும் பேசாம பிடிச்சு வைச்ச பிள்ளையாராட்டமா நிற்குற” என்றார்.

“இல்ல… அது வந்து… நான் ப்ரெஷாகிட்டு வந்திடுறேன்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்”  என்று அவள் அவசர அவசரமாக தன்னறைக்குள் சென்றுவிட, “ஏ மது” என்ற நந்தினியின் குரல் அவளை பின்தொடர்ந்தது.

ஆனால் அவள் வேகமாக உள்ளே சென்று அறை கதவை மூடி கொண்டாள்.  

‘எப்படி என்னால அஜயை அடையாளம் கண்டுபிடிக்க முடியாம போச்சு… அப்பவே பார்த்த மாதிரி தோணுச்சுதான்… நான்தான் யோசிக்காம விட்டேன்… இப்படி உயரமா வாட்டசாட்டாம வளர்ந்திருப்பான்னு யார் கண்டா… அப்பவே அஜய் உயரம்தானே… ஆனா இப்போ பயங்கர ஸ்மார்ட்டாயிட்டான்…’ தன் மனதிற்குள் ஆராய்ச்சியை மேற்கொண்டவளுக்கு அவனிடம் பேச வேண்டுமென்று உள்ளுர மனம் துடித்த போதும் முன்னே போல் இயல்பாக பேச முடியுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

‘நான்தான் அவன் மதுன்னு கண்டுபுடிச்சு… அஜய் எனக்காக என்னை தேடி வந்திருக்கானா? இல்ல எனக்காகன்னு இருக்காது… எல்லாருக்காகவும் வந்திருப்பான்’ என்று தம் எண்ணப்போக்கில் யோசித்தவள் சற்று நிதானித்து,

‘ஐயோ! இப்படி மரியாதை இல்லாம யோசிக்கிறேன்… பேசும் போதும் அதையே போல வந்து தொலைச்சிட்டா… தப்பு தப்பு… அஜய் இப்போ நம்ம வீட்டுக்கு வந்திருக்க கெஸ்ட்… அதுவுமில்லாம அஜய் இப்போ முன்ன மாதிரி இல்ல… எவ்வளவு பெரிய ஆளாயிட்டான்… நோ நோ… ஆயிட்டாங்கன்னு சொல்லணும்

அவனை… ஐயோ! அவங்ககிட்ட மரியாதையாதான் பேசணும்… ஆனா அது ரொம்ப கஷ்டமாச்சே… ஆர்டிபிசியலா இருக்குமே!’ இவள் இப்படி திண்டாடி கொண்டிருக்கும் போதே,

“மது” என்று நந்தினி அறை கதவை தட்டினார்.

“இதோ வந்திடுறேன் ம்மா” என்று குரல் கொடுத்தவள் தன் முகத்தை அலம்பி கொண்டு கண்ணாடியில் அவசரமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை திறந்தாள்.

அப்போது கதவருகிலேயே காத்திருந்த நந்தினி, “ஏ மது… நீ அஜய் கிட்ட பேசிட்டு இருக்கியா?… நான் நம்ம சரோ கடையில போய் கேரட் வாங்கிட்டு வந்திடுறேன்” என்று சொல்ல,

“ஏன் எதுக்கு?” என்று கேட்டாள் மது.

“அஜய்க்கு நான் செய்ற கேரெட் அல்வான்னா  ரொம்ப பிடிக்கும்… அதான் செஞ்சி கொடுக்கலாம்னு” என்று நந்தினி பரபரப்போடு சொல்ல,

மது உடனே, “நான் போய் வாங்கிட்டு வரேன்” என்றாள்.

 “ஒன்னும் வேண்டாம்… நீ அஜய்கிட்ட பேசிட்டு இரு… நான் வந்திடுறேன்” என்றவர் வேகமாக நகர்ந்துவிட்டார்.

‘இந்த நந்து இப்படி நம்மல தனியா மாட்டி விட்டுட்டு போகுதே’ என்று ஒரு விதமான சங்கடத்தோடு அவள் முகப்பறை நோக்கி வர, அவன் தீவிரமாக அங்கிருந்த அவளின் கல்லூரி புகைப்படங்களை பார்த்தபடி நின்றிருந்தனர்.

‘ஐயோ! இதை போயா பார்க்கணும்… ஒரு போட்டோல கூட நம்ம அடக்கம் ஒடுக்கமா நின்றிருக்க மாட்டோமே’ என்று பதட்டமானவள்,

“அந்த போட்டோ எல்லாம் பார்க்காத… தீங்க… அதெல்லாம் அவ்வளவா நல்லா இருக்காது” என்று மிகவும் பிரயத்தனப்பட்டு மரியாதையாக பேச முயன்றாள்.

அவன் பின்னே வந்து நின்றவளை திரும்பி புன்னகையோடு ஏறிட்டவன், “நல்லாதானே இருக்கு… ஆனா நீ அப்போ பண்ன சேட்டையெல்லாம் கம்பேர் பண்ணா இதெல்லாம் ரொம்ப கம்மிதான்” என்றான்.

“யார் சேட்டை எல்லாம் பண்ணது? அந்த போட்டோல எல்லாம் சும்மா அப்படி விளையாட்டா போஸ் கொடுத்திருக்கேன்… அவ்வளவுதான்” என்றவள் முகம் சுருங்க கூறவும்,

“அது சரி… எங்க வீட்டுல மேடம் சுவரேறி குதிச்சீங்களே… அதை எந்த லிஸ்ட்ல சேர்த்துக்கலாம்” என்றவன் அவளை முறைப்பாய் ஏறஇறங்க பார்த்து வினவினான்.

“அதுக்கான காரணத்தைதான் நான் காலையிலயே உங்ககிட்ட சொல்லிட்டேன் இல்ல”

“அந்த இடத்தில நான் இல்லாம வேற யாராவது இருந்து… உனக்கு ஏதாச்சும் பெரிய பிரச்சனை வந்திருந்தா” அவன் இம்முறை கொஞ்சம் கோபமாக கேட்க,

“அதெல்லாம் நான் சமாளிச்சிடுவேன்” என்றாள்.

“என்ன சமாளிப்ப? நீ என்ன லாயரா இல்ல ரவுடியா? நம்ம நாட்டோட பிரச்சனையெல்லாம் நீ ஒருத்தியா நின்னு சால்வ பண்ண போறியா? நெட்ல முழுக்க புரட்சி பெண் அது இதுன்னு போட்டு வைச்சிருக்காங்க… உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை… எதாச்சும் வம்புல கிம்புல மாட்டி வைச்சேன்னா?” அவளை பற்றிய தகவலை சேகரித்த போது இதெல்லாம் அவனுக்கு தெரிய வந்திருந்தது.

அவள் மீதான அக்கறையில் சற்றே உரிமையாக அவன் கடிந்து கொள்ள, அவளால் அவன் வார்த்தைகளை ஏற்க முடியவில்லை.

“உன்… உங்களுக்கு நான் செய்றதெல்லாம் தப்பாதான் தெரியும் மிஸ்டர் அஜய்… ஏன்னா இன்னைக்கு உங்க ஸ்டேட்டஸ் அப்படி… ரோட்ல நிற்கிற தள்ளுவண்டிக்காரனை எல்லாம் நீங்க மனிஷனா கூட மதிக்க மாட்டீங்க… இடிச்சு தள்ளிட்டு போயிட்டே இருப்பீங்க… பணம் கொடுத்து உங்க தப்பை எல்லாம் சரி செஞ்சிட முடியாது” என்றவள் சீற்றமாக உரைக்க, அந்த வார்த்தைகள் அஜயை ஆழமாக காயப்பத்டுதியது.

“ஸ்டாப் இட் மது… அந்த ஆக்ஸிடெண்டட்டை பண்ணது நான் இல்லை… அனன்யா… இன்னும் கேட்டா எனக்கு அதை பத்தி தெரிய கூட தெரியாது… நீ சொல்லித்தான் அந்த விஷயமே எனக்கு தெரிஞ்சுது” என்றவன் குரல் உடைய,

“ஒ!’ என்றவள் அந்த நொடி தான் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டோமோ என்று எண்ணி வருந்தினாள்.

அந்த அறையை சில நொடிகள் மௌனம் ஆட்சி செய்ய,

“நான் கிளம்புறேன்

மாமி வந்தா சொல்லிடு” என்று சொல்விட்டு அவன் விறுவிறுவென வெளியேற,

“அஜய் நில்லு” என்று அழைத்து கொண்டே அவன் பின்னே போனாள். ஆனால் அவன் கோபத்திற்கும் வேகத்திற்கும் அவளால் ஈடுகொடுக்க முடியவில்லை.

அவன் கார் சீறி கொண்டு அந்த சாலையைவிட்டு பாய்ந்து செல்ல, அந்த காட்சியை பார்த்த நந்தினி குழப்பத்தோடு, “என்ன மது? அஜய் கிளம்பிட்டானா?” என்று கேட்டபடி படிக்கட்டு ஏறி வந்தார்.

என்ன சொல்லி இப்போது அம்மாவை சமாளிப்பது என்று எண்ணியவள் பட்டென்று, “முக்கியமா ஏதோ கால் வந்துச்சு… போயிட்டா.. ங்க”  என்று பொய்யுரைத்துவிட்டாள்.

“ப்ச் அப்படியா?” என்று பெருமூச்செறிந்து கொண்டே  “உங்க அப்பாக்கிட்ட இப்பதான் நான் போன் பண்ணி சீக்கிரம் வர சொன்னேன்…” என்று புலம்பியபடி அவர் உள்ளே செல்ல,

மது வெளியே நின்றபடி அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள். மனம் கனத்தது.

‘வீடு தேடி வந்தவனை இப்படி எடுத்தெறிஞ்சு பேசியிருக்க கூடாது… தப்பு பண்ணிட்டேன்’ என்று குற்றவுணர்வில் தவிக்க,

“நீ ஏன் வெளியேவே நிற்குற உள்ளே வா” என்றார் நந்தினி!

“உஹும்… நான் சரோ கிட்ட போய் பேசிட்டு வரேன்” என்று அவள் கீழே இறங்கவும்,

“அவன் கடையில இல்ல… அவன தம்பிதான் இருக்கான்” என்றார்.

“இந்நேரத்தில கடையில இல்லாம எங்க போனான்?”

“அவங்க அம்மா ஊருக்கு ஏதோ கல்யாண விஷயமா பேச போயிருக்கானா?” என்று சொன்ன நொடி திரும்பி வீட்டிற்குள் நுழைந்தவள், “யாருக்கு கல்யாணம்?” என்று கேட்டாள்.

“வேற யாரு? நம்ம சரோக்குதான்… ஏதோ அவங்க மாமா பொண்ணா” என்று சொல்ல,

“என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல” என்றவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஆமா… எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருப்பாங்களாக்கும்” என்று நந்தினி சொல்லி கொண்டே உள்ளே சென்றுவிட,

‘அதெப்படி என்கிட்ட சொல்லாம போகலாம்… நான் மட்டும் அவன்கிட்ட ஒன்னுவிடாம எல்லாத்தையும் சொல்றேன் இல்ல… வரட்டும் அவன்கிட்ட நான் பேசவே போறதில்ல’

அனாவசியமாக அழுதிராத அவள் விழிகள் கண்ணீரில் நிறைந்தன. அஜய் வெடுக்கென்று கோபித்து கொண்டு சென்றதன் வலி சரவணன் சொல்லாமல் போனதில் அதிகமாகிவிட, அவள் இயல்பிற்கு நேர்மாறாக தலையணையில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

மலையளவு பிரச்சனைகளை கூட உறுதியாக நின்று சமாளிக்கும் மதுவிற்கு ரொம்பவும் நெருக்கமான உறவுகளின் சின்ன நிராகரிப்பும் கோபத்தையும் தாங்கி கொள்ள முடியவில்லை.

 காதல், நட்பு இந்த இரண்டுமே தன்னை பலவீனப்படுத்தும் ஆயுதங்கள் என்று பெண்ணவளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இருவரையுமே அவள் சரிவிகிதமாக பார்த்தாலும், அவள் விதியானது ஒன்றை விட்டுகொடுத்தால்தான் இன்னொன்றை தக்கவைத்து கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு அவளை தள்ள போகிறது.

ஆனால் அஜய் அப்படியில்லை. அவனின் எல்லா உறவுகளையும் விட அவனுக்கு மது ஒரு படி மேல். அவள் அப்படி அவனை குத்தி காட்டி பேசியதும் யாரோ போல நடத்தியதும் அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை.

அவளுக்காக ஆசையாக எடுத்த வந்த பரிசு பொருளை கூட கொடுக்காமல் திருப்பி எடுத்து வந்திருந்தான்.

தன்னறைக்குள் சென்று கதவை மூடி கொண்டவன் மனமெல்லாம் நடந்த விஷயங்களை எண்ணி குமுறியது.

‘ஏன்டி இப்படியெல்லாம் பேசுன… யாரோ மாதிரி என்கிட்ட பேச உன்னால எப்படுறி முடிஞ்சுது’ என்றவன் உள்ளம் வெதும்பி கொண்டிருக்க, அவன் தந்தை பாஸ்கரன் அறை கதவை தட்டி, “அஜய்” என்று அழைத்தார்.

முகத்தை துடைத்து கொண்டு கதவை அவன் திறக்க,  

“உனக்காகதான் இவ்வளவு நேரமா காத்திட்டு இருக்கேன்… நீ பாட்டுக்கு உன் ரூமுக்கு வந்துட்ட… சரி சொல்லு ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னியே… சர்ப்ரைஸ் அது இதுன்னு வேற ஏதேதோ சொன்ன” என்றவர் ஆர்வமாக கேட்க, அவன் என்னவென்று சொல்லுவான்?

மொத்தமாக அவன் உற்சாகமும் சந்தோஷமும் வடிந்து போய்விட,

“சொன்னேன்… ஆனா இப்போ அப்படி எதுவும் இல்ல” என்றான்.

அவன் முகத்தில் அந்தளவு ஏமாற்றமும் கோபமும் குடிகொண்டிருந்தது.

“என்னடா ஆச்சு? ஏதோ அப்செட்டா இருக்க மாதிரி தெரியுது” என்று அவனிடம் அவர் கரிசனமாக கேட்க,

“உஹும் அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா” என்று மழுப்பிவிட்டான்.

“ஆனா உன் முகத்தை பார்த்தா அப்படி தெரியலயே அஜய்”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க போய் படுங்க” என்று பொய் சொல்லி அவரை சமாளித்துவிட்ட போதும் தன் மனதை அப்படி சுலபமாக ஒரு பொய்யை சொல்லி சமாளிக்க முடியவில்லை அவனால்.

‘நான் உன்னை பார்க்காமலே இருந்திருக்கலாம் மது’ என்றவன் உள்ளம் திரும்ப திரும்ப சொல்லி ஏமாற்றத்தில் தவித்தது.

சரியாக அந்த சமயம் படிக்கட்டில் தள்ளாடி கொண்டே ஏறி வந்தாள் அனன்யா! போதை அவள் தலை வரை ஏறியிருந்தது.

அவள் அணிந்திருந்த நவநாகரிக ஆடையும் அவளின் தள்ளாட்டமான நடையையும் பார்த்த அஜயின் முகத்தில் எரிச்சல் ஊற்றெடுத்தது. அவனுக்குள் இருந்த மொத்த கோபமும் ஏமாற்றமும் அவள் மீது திரும்பியது.

“என்ன அனு இது? நல்ல வேளை அப்பா இப்பதான் ரூமுக்கு போனாரு… அவர் மட்டும் உன்னை இந்த கோலத்தில பார்த்திருந்தாருன்னா என்ன ஆகுறது?!” என்றவன் பல்லை கடித்து கொண்டு எரிச்சலாக கேட்க,

“என்ன ஆகும்?” என்று அதே கேள்வியை அவன் புறம் திருப்பினாள்.

, “உன்னால நல்ல மகளா இருக்க முடியலன்னா கூட பரவாயில்ல… ப்ளீஸ் ஒரு நல்ல அம்மாவாவாச்சும் இரு” என்றவன் கடுப்பாக சொல்ல,

“நான் நல்ல அம்மாதான்… என் அருணுக்கு இப்ப கூட எவ்வளவு காஸ்ட்லியான ஒரு பொம்மை வாங்கிட்டு வந்தேன் தெரியுமா?

அச்சோ! அதை மறந்து போய் கார்லயே வைச்சிட்டு வந்துட்டேன் அஜய்… நீ போய் எடுத்துட்டு வர்றியா?” என்று அவள் நிற்க கூட முடியாமல் தள்ளாடினாள்.

“கை குழந்தைக்கு பொம்மையா அனு முக்கியம்… தாயோட அரவணைப்புதான் தேவை… பாவம்! சுரேஷ்… எவ்வளவு நேரம்தான் அருணை வைச்சுக்கிட்டு சமாளிப்பான்” என்று அஜய் வேதனையோடு சொல்ல,

“சுரேஷ் மை டார்லிங்… அவன் எல்லா சமாளிப்பான்” என்றாள். அஜயிக்கு அதற்கு மேல் அவளிடம் பேசுவதே வீண் என்று தோன்றியது.

“அம்மா தாயே… முதல நீ உன் ரூமுக்கு போ” என்றவளை அனுப்பிவிட அப்போது தள்ளாடி விழ போனவளை அவன் தாங்கி பிடிக்க கூட தயராகயில்லை. ஆனால் அந்த நொடி வெளியே வந்த சுரேஷ் அவளை விழாமல் தாங்கி பிடித்து அறைக்குள் அழைத்து செல்ல,

அந்த காட்சியை பார்த்து அவன் கடுப்பானான்.

இந்த பணம் அந்தஸ்த்து ஆடம்பரம் இதெல்லாம்தான் அனன்யாவை இப்படி தரம்தாழ்ந்து போக செய்கிறது. ஒரு வேளை இந்த மாதிரியான காரணங்கள்தான் மது என்னிடம் அப்படி பேச காரணமோ? என்று அவள் நிலையில் நின்று யோசித்தது.

காரணம் என்னவாக இருந்தாலும் சரி. அவளை ஒரு போதும் அவனால் விட்டு கொடுக்க முடியாது.

‘நான் இல்லாத இத்தனை வருஷத்தில உன் வாழ்க்கையில வேற யார் வேணாம் வந்திருக்கலாம் போயிருக்கலாம்… ஆனால் என் இடத்தை என்னால ஒரு நாளும் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது மது’ என்றவன் தீர்க்கமாக எண்ணி கொண்ட அதேநேரம் அவள்  வாழ்க்கையில் அவன் இடம் எது என்பதையும் தெளிவாக தீர்மானித்திருந்தான்.