ஆறு மாதங்களுக்கு பிறகு….
நள்ளிரவு பன்னிரண்டு மணியை நெருங்க இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தது.
அனுஸ்ரீ ஒரு கண்ணால் சுவற்றில் இருந்த கடிகாரத்தை பார்ப்பதும் மறு கண்ணால் தன் அருகில் அசந்து தூங்கி கொண்டிருந்த ரிஷியைப் பார்ப்பதுமாக இருந்து கொண்டிருந்தாள்.
‘நாளைக்கு என் பிறந்தநாள் அதுவும் கல்யாணத்துக்கு அப்புறமாக வர்ற முதல் பிறந்தநாள் ஒரு வாரமாக நானும் பல மாதிரி சிக்னல் கொடுத்து சொல்லி பார்த்துட்டேன் கொஞ்சம் கூட அவர் புத்திக்கு ஏறவே இல்லை மணி வேற போயிட்டே இருக்கு பன்னிரண்டு மணிக்கு இன்னும் இரண்டு நிமிஷம் தானே இருக்கு! கொஞ்சம் கூட அசையாமல் தூங்குறதைப் பாரு!’ மனதிற்குள் ரிஷியைப் போட்டு அனுஸ்ரீ வறுத்தெடுத்துக் கொண்டிருக்க அவனோ அது எதைப்பற்றியும் கவலை இன்றி நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான்.
பன்னிரண்டு மணிக்கு இன்னும் அரை நிமிடங்களே இருக்க கோபமாக ரிஷியைத் திரும்பி பார்த்தவள் தன்னருகில் இருந்த தலையணையைத் தூக்கி அவன் மேல் போட்டு விட்டு மறுபுறம் திரும்பி படுத்து கொண்டாள்.
திடீரென்று தன் மேல் ஏதோ விழவும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவன் சுற்றிலும் திரும்பி பார்க்க அவன் மேல் தலையணை ஒன்று இருந்தது.
“நம்ம மேல தலகாணியை யாரு போட்டு இருப்பா? அனு தூக்கத்தில் தட்டி விட்டுட்டா போல” கண்களை மூடி இருந்த அனுஸ்ரீயை ஒரு தடவை திரும்பி பார்த்தவன் மீண்டும் அந்த தலையணையை எடுத்து அது இருந்த இடத்தில் வைத்து விட்டு தன் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தான்.
ரிஷி எழுந்து விட்டு மறுபடியும் தூங்குவதைப் பார்த்து கோபத்துடன் அவனை முறைத்து பார்த்தவள் மீண்டும் அந்த தலையணையை தூக்கி அவன் மீதே போட்டு விட்டு போர்வையை தன் தலை வரை இழுத்து மறைத்து கொண்டு தூங்கத் தொடங்கினாள்.
ரிஷி புன்னகையோடு அந்த தலையணையை கட்டி கொண்டு தூங்க அனுஸ்ரீயோ அவனை திட்டி கொண்டே தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்தாள்.
காலையில் தன்னை யாரோ தட்டி எழுப்புவது போல இருக்க கண்களை சிரமப்பட்டு திறந்து பார்த்தவள் அந்த அறையில் ஒன்று கூடி நின்ற தன் பாட்டி, பெற்றோர், தாமரை மற்றும் ரிஷியின் குடும்பத்தினரைப் பார்த்து ஆச்சரியத்துடனும், அதே நேரம் சற்று சங்கடத்துடனும் எழுந்து அமர்ந்து கொள்ள அவளருகில் புன்னகையோடு வந்து அமர்ந்து கொண்ட தாமரை
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!” என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள்.
“ஹேய்! தாங்க்ஸ் தாமரை” புன்னகையோடு பதிலுக்கு அனுஸ்ரீயும் அவளை அணைத்துக் கொண்டாள்.
அதன் பிறகு ஒவ்வொருவரும் அனுஸ்ரீக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்க அவள் கண்களோ சுற்றிலும் இருந்த அந்த இடத்தையே ஆராய்ந்து பார்த்து கொண்டிருந்தது.
“என்னக்கா? மாமாவை தேடுறீங்களா?” தாமரை அனுஸ்ரீயின் காதில் மெதுவாக கேட்க அவளை திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
“நீங்க தூங்கி எழுந்ததும் இதை உங்க கிட்ட மாமா கொடுக்க சொன்னாங்க உங்களுக்கு ஏதோ சர்ப்பரைஸாம்!” தாமரை தன் கையில் இருந்த காகிதம் ஒன்றை அவள் புறம் நீட்டி ராகமாக இழுத்து கொண்டே கூற சட்டென்று அவள் கையில் இருந்த அந்த காகிதத்தை வாங்கி கொண்டவள் ஆவலுடன் அதை பிரித்து படித்து பார்த்தாள்.
‘நைட் பன்னிரண்டு மணிக்கு சொன்னால் தான் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதாக அர்த்தம் இல்லை என் தேவிக்கு நான் அவ பிறந்த நேரத்தில் சொல்றது தான் சரி இதை படித்த உடனே நான் எங்கே இருப்பன்னு உனக்கு தோணுதோ அங்கே வா உனக்காக சர்ப்பரைஸ் வெயிட்டிங்’ அனுஸ்ரீயின் இதழ்கள் புன்னகையில் விரிய
“இனி நமக்கு இங்க வேலை இல்லை வாங்க நாம எல்லாரும் போகலாம்” தாமரையோ மற்ற எல்லோரையும் அழைத்து கொண்டு கீழே ஹாலுக்கு சென்றாள்.
“ரிஷி! உங்களை!” சிரித்த படி முணுமுணுத்துக் கொண்டே குளியலறைக்குள் நுழைந்து கொண்டவள் அவசரமாக குளித்து விட்டு வெளியே வர அங்கே கட்டிலில் ஒரு சேலையும், அதன் மேல் ஒரு சிறு கடதாசியும் இருந்ததைப் பார்த்தாள்.
‘என்னுடைய தேவிக்காக…’ என்று அந்த காகிதத்தில் எழுதப்பட்டிருக்க அதன் கீழே சிவப்பு நிறத்தில் தங்க நிற அகலமான பட்டி பிடிக்கப்பட்டிருந்த டிசைனர் சேலை ஒன்று இருந்தது.
“ரிஷி! இன்னும் என்னென்ன பண்ணி வைத்து இருக்கீங்க?” புன்னகையோடு அந்த சேலையை வருடிக் கொடுத்தவள் சிறிது நேரத்தில் அந்த சேலையை கட்டி கொண்டு ரிஷியைப் பார்ப்பதற்காக ஆவலுடன் படியிறங்கி வந்தாள்.
“என்ன அனும்மா முகத்தில் ஒரே சிரிப்பா இருக்கு! இவ்வளவு அவசரமாக யாரைப் பார்க்க போற?” தெய்வநாயகி வேண்டுமென்றே அனுஸ்ரீயின் முன்னால் வந்து நின்று கேட்க
தன் முகச் சிவப்பை மறைக்க பெரும் பிரயத்தனப்பட்டு கொண்டவள்
“போங்க பாட்டி!” என்றவாறே வெட்கத்தோடு அவரை தாண்டி ஓடிச்சென்றாள்.
“அனும்மா பார்த்து!” மகிழ்ச்சி துள்ளலோடு செல்லும் தன் பேத்தியை பார்த்து கூறியவர் உள்ளமோ நிம்மதியிலும், சந்தோஷத்திலும் நிறைந்து போய் இருந்தது.
எந்த இடத்திலும் நிற்காமல் ரிஷியைத் தேடாமல் நடந்து சென்ற அனுஸ்ரீ அவர்கள் மாந்தோப்பிற்கு நுழைந்து கொண்டாள்.
அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் அந்த மாந்தோப்பின் பின்புறம் இருந்த ஓடையின் அருகில் நின்று கொண்டிருந்தான் ரிஷி.
அனுஸ்ரீயைப் பார்த்ததும் புன்னகையோடு அவளருகில் வந்து நின்றவன்
“பரவாயில்லை கரெக்டா கண்டு பிடித்து வந்துட்ட” புன்னகையோடு அவளைப் பார்த்து கேட்க
அவன் தோளில் செல்லமாக தட்டியவள்
“நீங்க இந்த ஊரில் சுற்றி வளைத்து எங்க போவீங்கன்னு எனக்கு தெரியும் தானே!” என்று விட்டு மேலும் இரண்டு, மூன்று அடிகளை அவனுக்கு பரிசாக வழங்கினாள்.
அதையும் புன்னகையோடு வாங்கி கொண்டவன் அவள் கையை பற்றி அவளை பின்புறமாக நின்றவாறு அணைத்துக் கொண்டே அவள் தோளில் தன் முகம் பதித்து கொண்டு
“நம்ம காதலையும் சரி மனதில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளையும் வெறும் வார்த்தையால் சொல்றதை விட செயலால் காட்டுறது தான் எனக்கு சரின்னு பட்டது அது தான் நான் என்னை முழுமையாக உணர்ந்த இந்த இடத்தில் உன் பிறந்தநாளை கொண்டாட நினைத்து இங்கே உன்னை வர வைத்தேன்” என்று கூறவும் அனுஸ்ரீ எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து விட்டு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
தன் பேண்ட் பாக்கெட்டில் சுருட்டி வைக்கப்பட்டு இருந்த ஒரு பைலை எடுத்து அவளின் புறம் நீட்டியவன்
“என் தேவிக்காக என்னோட சின்ன கிஃப்ட் பிரித்து பாரு” என்று கூற அவளும் ஆவலுடன் அதை வாங்கி பார்த்தாள்.
அதைப் பிரித்து பார்த்தவள் கண்களோ ஆச்சரியத்தில் விரிந்து போயின.
“ரிஷி! இது!” தன் வியப்பு மாறாமல் அனுஸ்ரீ அவனைப் பார்க்க
புன்னகையோடு அவளருகில் வந்து அவளது தோளில் தன் கையை போட்டு கொண்டவன்
“நீ சொல்லி தான் உன் மனதில் இருக்கும் ஆசைகள் எனக்கு தெரியணும்னு இல்லை நீ சொல்லாமலும் தெரியும்” என்று கூறவும் அவள் கண்கள் கலங்க அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அந்த பைலில் இருந்தது வேறு ஒன்றும் இல்லை.
அனுஸ்ரீயின் பெயரில் ஒரு குழந்தைகள் காப்பகம் அமைக்க பதிவு செய்யப்பட்டு இருந்தது அந்த இடத்தின் பெயர் ‘நாயகி குழந்தைகள் காப்பகம்’.
“ஆனால் ரிஷி இந்த விஷயம் எனக்கு மட்டும் தானே தெரியும் அப்புறம் எப்படி உங்களுக்கு?” அனுஸ்ரீ குழப்பத்தோடு அவனை பார்க்க ரிஷியோ வாய் விட்டு சிரிக்க தொடங்கினான்.
“நீ என்னை ரொம்ப நல்ல பையன்னு நினைச்சுட்டு இருக்க தேவி! சத்தியமாக நான் நல்ல பையன் இல்லை நீ உன் டைரியை அன்னைக்கு மேஜையில் மறந்து வைத்துட்டு போயிட்டியா நம்ம கை வேற சும்மா இருக்காதே! அது தான்”அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவன் கண்ணடித்துக் கூற
“அடப்பாவி! இப்படி கோல்மால் பண்ணிட்டு ஏதோ நீங்களே கண்டு பிடித்த மாதிரி பில்டப் வேற!” என்றவாறே அனுஸ்ரீ அவன் மார்பில் தட்டினாள்.
“எது எப்படியோ என் தேவி ஆசைப்பட்டதை நான் பண்ணிட்டேன் அது போதும்”
“ரொம்ப தாங்க்ஸ் ரிஷி! இது என் சின்ன வயசு ஆசை என் கூட எல்லாரும் இருந்தும் நான் நிறைய நாள் தனியாக தான் உணர்ந்து இருக்கேன் எல்லாம் இருந்தும் எனக்கு இந்த நிலைமைன்னா யாரும் இல்லாத அந்த சின்ன குழந்தைகள் எல்லாம் எவ்வளவு பாசத்துக்காக ஏங்கி இருக்கும்னு நான் அடிக்கடி யோசிப்பேன் அப்போ தான் எனக்கு இந்த எண்ணமே வந்தது என்னால் முடிந்தால் பெற்றோர் இல்லாத நிறைய பசங்களைப் பார்த்துக்கணும் அவங்களை எல்லாம் பாசத்துக்காக ஏங்கி தவிக்க விடக்கூடாதுனு ஆசைப்பட்டேன்
ஆனா அந்தளவிற்கு எனக்கு வசதி இல்லை அதனால ஒவ்வொரு வருடமும் என் பிறந்தநாளைக்கு ஒவ்வொரு ஆசிரமத்திற்கு என்னால முடிந்த பணஉதவி பண்ணிட்டு வந்தேன் இன்னைக்கும் உங்க கூட ஒரு ஆசிரமத்திற்கு போகலாம்னு இருந்தேன் ஆனா நீங்க இவ்வளவு பெரிய சர்ப்பரைஸ் கொடுத்துட்டீங்க”
“உன் ஆசை என் ஆசையும் தான் தேவி! இனி உன் ஆசைப்படி நிறைய குழந்தைகளை நீ பார்த்துக்கலாம் இப்போ அந்த இடத்தில் கொஞ்சம் வேலை நடந்துட்டு இருக்கு இன்னும் ஒரு இரண்டு, மூணு மாதத்தில் எல்லாம் முடிந்துடும் அதற்கு அப்புறம் அந்த காப்பகம் உன் பொறுப்பு!”
“ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் ரிஷி! இது நான் சத்தியமாக எதிர்பார்க்காத கிஃப்ட்”
“தாங்க்ஸ் சொல்றியா?” அனுஸ்ரீயை சற்று கண்டிப்புடன் பார்த்த வண்ணம் ரிஷி கேட்க
“ஓஹ் ஸாரி! ஸாரி!” என்றவள் தன் சேலையில் முடிந்து வைக்கப்பட்டு இருந்த ஒரு பொருளை அவனுக்கு காட்டாமல் தன் கைகளுக்குள் மறைத்து கொண்டு அவன் முன்னால் தன் மூடப்பட்ட கையை நீட்டி காட்டினாள்.
“என் பிறந்தநாள் பரிசு நீங்க கொடுத்துட்டீங்க இது உங்களுக்கு என் பரிசு!” மூடியிருந்த தன் கையின் ஒவ்வொரு விரல்களாக அவள் திறக்க அவள் உள்ளங்கையில் அழகான ஒரு சிற்பம் இருந்தது.
“ஹேய்! சூப்பராக இருக்கு தேவி!” அந்த சிற்பத்தை ரசித்து பார்த்து கொண்டே கூற
அவனது தலையில் செல்லமாக தட்டியவள்
“அதை கொஞ்சம் நல்லா கவனித்து பாருங்க” என்று கூறினாள்.
“என்ன இருக்கு?” ரிஷி யோசனையோடு அந்த சிற்பத்தை உற்று பார்த்தான்.
ஒரு பெண் ஒரு ஆணின் தோளில் சாய்ந்து நிற்க அந்த ஆணின் ஒரு கரம் அந்த பெண்ணின் தோளை வளைத்து பிடித்து கொண்டு இருக்க இன்னொரு கரமோ அந்த பெண்ணின் மேடிட்ட வயிற்றில் இருப்பதை போல அந்த சிற்பம் இருந்தது.
சிறிது நேரம் அந்த சிற்பத்தையே பார்த்து கொண்டு நின்றவன்
“இதில் என்ன தேவி இருக்கு? ஒரு பொண்ணு இருக்கா பக்கத்தில் ஒரு பையன் இருக்கான் ஒரு கை அந்த பொண்ணோட தோளில் இருக்கு இன்னொரு கை அவ வயிற்றில்…” அவனுக்கு அப்போது தான் எல்லாம் புரிந்தது.
“ஹேய்! தேவி! நிஜமாவா?” கண்களில் ஆசையைத் தேக்கி வினவ அவளோ வெட்கத்துடன் தன் தலையை குனிந்து கொண்டாள்.
“தேவி! இதை விட விலைமதிப்பற்ற பரிசு வேற எதுவும் கிடையாது நம்ம காதலின் பரிசு!” புன்னகையோடு கண்கள் கலங்க ரிஷி அனுஸ்ரீயின் வயிற்றில் இதழ் பதித்து விட்டு அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவர்களது காதல் மீண்டும் அங்கே மாயமாக அவர்களை சூழ்ந்து கொண்டது.
மூன்று வருடங்களுக்கு பிறகு….
நாயகி இல்லத்தில் அடுத்த திருமணம் நடக்க இருப்பதற்கான அறிகுறிகளை அந்த இடத்தில் இருந்த அலங்காரங்களே பறை சாற்றியது.
அனுஸ்ரீ, ராதா, தெய்வநாயகி, தாமரையின் அன்னை நந்தினி என எல்லோரும் மும்முரமாக, பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்க தாமரை மணப்பெண் அலங்காரத்தோடு படியிறங்கி வந்து கொண்டிருந்தாள்.
(நீங்கள் எல்லோரும் நினைப்பது சரி தான் இன்று தாமரையின் திருமணம் மணமகன் யார் என்பதை கோவிலுக்கு சென்ற பின்னர் பார்த்து கொள்ளலாம்.)
திருமணத்திற்கு தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்து வைத்த பின் அனுஸ்ரீ மற்றும் தாமரையின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமும் வசந்தபுரம் பிள்ளையார் கோவிலை நோக்கி புறப்பட்டனர்.
அதே நேரம் அங்கே கோவிலில் தங்கள் இரண்டரை வயது மகன் ஸ்ரீஹரியின் பின்னால் ஓடி கொண்டு இருந்தான் ரிஷி ஆகாஷ்.
“டேய்!ஸ்ரீ நில்லுடா! அப்பாவுக்கு மூச்சு வாங்குது ஸ்ரீ கண்ணா! ஸ்ரீ!” அவனது கத்தலுக்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் குடுகுடுவென அவனது அளவுக்கு எற்ற பட்டு, வேஷ்டி சட்டை அணிந்து ஓடி கொண்டு இருந்தான் ஸ்ரீஹரி.
அனுஸ்ரீயை பார்த்ததும்
“ம்மா!” என்றவாறே ஸ்ரீஹரி அவளை கட்டி கொள்ள
“ஸ்ரீ கண்ணா!” என புன்னகையோடு அவனை தூக்கி கொண்டவள்
ரிஷியின் அருகில் வந்து
“கொஞ்ச நேரம் கூட குழந்தையை உங்களுக்கு பார்த்துக்க முடியலயா?” என்று கோபமாக கேட்க அவனோ பாவமாக தன் மகனை திரும்பி பார்த்தான்.
“பெயருக்கு தான் நம்பர் வன் பிசினஸ் மேன் அத்தனை பெரிய கம்பெனியை பார்த்துக்க முடிஞ்சவருக்கு இந்த சின்ன குழந்தையை பார்த்துக்க முடியல என்ன தான் பிசினஸ் மேனோ?” அனுஸ்ரீ அவனைப் பார்த்து நொடித்துக் கொள்ள ஸ்ரீஹரியோ அவள் சொன்னது புரிந்தாற் போல சத்தமாக சிரித்தான்.
“டேய்! மகனே! நீயுமா?” ரிஷி தன் நெஞ்சில் கையை வைத்து கொண்டு அதிர்ச்சியானவன் போல கேட்கவும் அனுஸ்ரீயோ தன் சிரிப்பை மறைத்து கொள்ள தன் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
“தேவி! நீ இப்படி சிரிச்சா செம்ம க்யூட் தெரியுமா?” அவளின் அருகில் மெல்ல நெருங்கி வந்தவாறே ரிஷி கூறிய அதே நேரம்
“முஹூர்த்தத்திற்கு நேரம் ஆச்சு இங்க இரண்டு பேரும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்றவாறே தெய்வநாயகி அங்கு வரவும் சரியாக இருந்தது.
“இதோ வந்துட்டேன் பாட்டி” ரிஷியைப் பார்த்து தன் நாக்கை துருத்திக் காட்டி விட்டு அனுஸ்ரீ ஸ்ரீஹரியுடன் சென்று விட புன்னகையோடு ரிஷியும் அவர்களை பின் தொடர்ந்து சென்றான்.
மணமேடையில் அமர்ந்து கொண்டு யார் வீட்டு திருமணத்திற்கோ வந்தது போல சந்துருவும், தாமரையும் ஏதேதோ கதை பேசி கொண்டிருக்க நிமிடத்திற்கு ஒரு தடவை ஐயரோ
“சத்த நேரம் பேசாமல் இருங்கோ! நேக்கு மந்திரம் மறந்து போறது” என சொல்லி கொண்டே இருந்தார்.
அவர்கள் இருவரையும் பார்த்து சுற்றி நின்ற அனைவரும் சிரிக்க அந்த இடமே சந்தோஷத்தில் நிறைந்து போய் இருந்தது.
சந்துரு மற்றும் தாமரையின் திருமணம் அனுஸ்ரீயின் கருத்தினால் நடந்த திருமணம் தான்.
அவள் தான் தன் பாசமிகு தங்கைக்காக சந்துருவை பேசி முடித்தாள்.
அனுஸ்ரீயின் விருப்பம் தான் தன் விருப்பம் என்று தாமரை கூறி இருக்க சந்துருவோ ஏற்கனவே தன் மனதில் தாமரையின் மீதிருந்த ஒரு நல் அபிப்பிராயத்தினால் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருந்தான்.
திருமணம் பேசி இருந்த இந்த இரண்டு மாத காலமும் போனில் விடாமல் பேசி இருந்தது போதாதென்று இப்போது மணமேடையில் வைத்தும் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
ஐயர் மறுபடியும் தன் வசனத்தை கூற போக அவரை பார்த்து
“கொஞ்சம் இருங்க” என்று சைகை செய்த ரிஷி அனுஸ்ரீயை பார்த்து ஜாடை காட்ட அவனை பார்த்து சரியென்று தலை அசைத்தவள் ஸ்ரீஹரியை ராதாவிடம் கொடுத்து விட்டு தாமரையின் அருகில் வந்து நின்று கொண்டாள்.
மறுபுறம் ரிஷி சந்துருவின் அருகில் நின்று கொண்டான்.
“ஐயரே! இப்போ மந்திரத்தை சொல்லுங்க” சந்துருவின் வாயை மூடிக்கொண்ட படி ரிஷி கூற அதே கணம் தாமரையின் வாய் அனுஸ்ரீயின் கையால் மூடப்பட்டது.
“நல்ல வேளை பண்ணீங்க தம்பி” ஐயர் நிம்மதியாக பெருமூச்சு விட்டு கொண்டே மீதமிருந்த மந்திரங்களை எல்லாம் கூறி முடித்து விட்டு தாலியை சந்துருவிடம் நீட்ட தாமரை மற்றும் சந்துருவின் திருமணம் கேலியுடனும், கலாட்டாவுடனும் இனிதே நிறைவுற்றது.
சிறிது நேரத்தில் எல்லோரும் கோவிலில் இருந்து புறப்பட்டு விட ரிஷி மற்றும் அனுஸ்ரீ ஸ்ரீஹரியோடு தங்கள் காரில் ஏறி கொண்டு வேறொரு புறமாக சென்றனர்.
சிறிது நேரத்தில் நாயகி குழந்தைகள் காப்பகத்தின் முன்னால் அவர்கள் கார் நிற்க ஸ்ரீஹரியோ கார் கதவைத் திறந்த அடுத்த நொடி துள்ளிக் குதித்து ஓடிச்சென்றான்.
பல குழந்தைகளை தத்தெடுத்து அனுஸ்ரீ மற்றும் ரிஷி இந்த காப்பகத்தின் மூலம் அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தங்கள் சொந்த குழந்தையை போல அவர்கள் எல்லோரையும் அவர்கள் இருவரும் பார்க்க ஸ்ரீஹரியும் தன் பெற்றோர் போலவே அந்த இடத்தை பெரிதும் விரும்பினான்.
ஸ்ரீஹரியோடு இன்னும் பல குழந்தைகள் ஓடி வந்து அனுஸ்ரீயை
“அம்மா!” என்றழைத்தவாறே சூழ்ந்து கொள்ள அவளும் வாஞ்சையோடு அவர்கள் எல்லோரையும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
தன் வாழ்க்கையை முற்றிலும் ஆனந்தக் கடலில் மிதக்கச் செய்த தன் மனைவியையும், குழந்தைகளையும் ஆசையாக பார்த்து கொண்டு நின்ற ரிஷியும் புன்னகையோடு அவர்களுடன் இணைந்து கொண்டான்.
எத்தனை கோடி செலவழித்தாலும் பெற முடியாத தூய அன்பைத்தேடி தந்த தன் தேவியை ரிஷி தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொள்ள அதைப் போலவே எல்லாக் குழந்தைகளும் அவனோடு ஒன்றிக் கொண்டனர்.
தன் மனதைப் பாசம் எனும் மாயத்தினால் கட்டி போட்டு இருக்கும் தன் மனைவி, குழந்தைகளோடு ரிஷி ஆகாஷ் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள இந்த மகிழ்ச்சி என்றென்றும் நீடித்து நிலைபெறட்டும் என்று வாழ்த்துவோம்.
……………நன்றி…………..