வா… அருகே வா! –  10

              ரயில் மெல்ல மெல்ல அவர்கள் கண் பார்வையிலிருந்து மறைய, கதிரேசனும் பூங்கோதையும் அவர்கள் வீட்டை நோக்கி நடந்தனர்.

    ‘அத்தான் எதுவும் கேப்பாகளோ? மிலிட்டரி சொன்னது வச்சி பார்த்தா, அத்தானுக்கு எல்லாமே தெரியுமோ?’ என்ற கேள்வி தோன்ற, கதிரேசனின் முகத்தைப் பார்த்தாள் பூங்கோதை.

         கதிரேசன் எதுவும் பேசாமல், சாலையைப் பார்த்தபடி நடந்தான். ‘என்னை விட, மிலிட்டரி நெருக்கம் போல? நம்ம கிட்டயே விஷயத்தை மறைக்குதா பூங்கோதை?’ என்ற கேள்வி கதிரேசனின் மனதில் தோன்றியது.

                     பொறாமை இல்லை. கோபம் இல்லை. ஆனால், சொல்ல முடியாத உணர்ச்சி ஒன்று கதிரேசனின் மனதில் தோன்றியது. அந்த உணர்ச்சி மெல்லிய புன்னகையை அவன் முகத்தில் படர விட்டது.

       ‘நான் எதையும் கேட்க போவதில்லை. பூங்கோதையே சொல்லட்டும்.’ என்று முடிவு செய்தவனாக கதிரேசன் மௌனமாகவே நடந்தான்.

           ‘அத்தான் கிட்ட சொல்லணும்… ஆனால், எதை? எப்படி சொல்றது? இந்த மிலிட்டரி பண்ண வேலை எல்லாம் அப்படி…’ என்று யோசித்தவாறே, நடந்தாள் பூங்கோதை.

     அப்பொழுது பூங்கோதையின் அலைபேசி ஒலிக்க, “டேசனுக்கு போயிட்டு வர இவ்விளவு நேரமா?” என்று பூங்கோதை ஆச்சியின் குரல் ஒலிக்க, “இதோ வரேன் ஆச்சி. நடந்து தானே வர முடியும். பறந்தா வர முடியும்? அ…” என்று பூங்கோதை மேலும் கூற ஆரம்பிக்க, கதிரேசன் மறுப்பாக தலை அசைத்தான்.

     கதிரேசனின் சொல் புரிந்து, பூங்கோதையுடன் கதிரேசன் வருவதை கூறாமல், தன் பேச்சை முடித்துக் கொண்டாள்.

                “நான் வரேன்னு சொன்னா, ஆச்சி வைவாக.” என்று கதிரேசன் கூற, பூங்கோதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தாள்.

     என்ன தான் கேட்கக் கூடாது என்று கதிரேசனின் அறிவு எச்சரித்தாலும், பூங்கோதை மேல் அவன் கொண்ட பாசம் அவன் மௌனத்தை உடைத்தது.

         “பூங்கோதை…” மென்மையாக அழைத்தான் கதிரேசன்.

                  “அத்தான்…” பூங்கோதையின் இமைகள் படபடத்தன. ‘அத்தானிடம் மறைக்கிறோம். எல்லாரிடமும் மறைக்கிறோம்.’ பூங்கோதையின் உள்ளம் அச்சத்தில், குற்ற உணர்ச்சியில் தவித்தது.

                “எந்த பிரச்சனையும் இல்லையே?” என்று அக்கறையாக வெளிவந்தது கதிரேசனின் குரல்.

                                                “அ… அதெல்லாம் ஒன்னும் இல்லை  அத்தான்… நான் நல்லாருக்கேன் அத்தான்.” என்று பூங்கோதை முதல் முறையாக கதிரேசனிடம் தடுமாற்றத்தோடு கூறினாள்.

     ‘நான் ஏன் மிலிட்டரி பற்றி மறைக்குதேன். அப்படி என்ன மிலிட்டரி எனக்கு நெருக்கம்? ச்சீ… ச்சீ… நெருக்கம் எல்லாம் இல்லை. அவனைப் பத்தி சொன்னா, என் மானமும் சேர்ந்தே போகும்.’ என்று  பூங்கோதை தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.

               ‘பூங்கோதை அவ மனசுக்கு பிடிக்கலைன்னா, என் கிட்ட சொல்லிருப்பா…’ என்ற நம்பிக்கையோடு, பூங்கோதையை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் கதிரேசன் அவளை முத்தமா ஆச்சி வீடு  வரை விட்டுவிட்டு, உள்ளே செல்லாமல் நேராக அவர்கள் வீட்டை நோக்கி நடந்தான்.

தன் சட்டைப் பையில் உள்ள,  கம்பியில் கோர்க்கப்பட்ட மணிகளைக் கையில் எடுத்தான் திலக்.

 ரயில் அதன் சத்தத்தோடு பயணித்துக் கொண்டிருந்தாலும், அதை அவன் காதருகே அசைக்க, அது, “கிணி… கிணி…” என்று சத்தத்தை எழுப்பியது.

          திலக் முகத்தில் ஓர்  கர்வ  புன்னகை தோன்றியது.

                        ‘இதே சத்தம், பியூட்டி கிட்டயும் கேட்குமில்லை?’ திலக்கின் மனம் அவன் அறிவிடம் கேட்க, அவன் அறிவு அவன் மனதிற்கு ஒத்தூதியது.

தோள் குலுங்க சிரித்தான் திலக். அவன் மனம் உல்லாசமாகச் சீட்டியடித்தது.

                ‘பியூட்டி… உனக்கு என்னைப் பிடிக்கும். பிடிக்காமலா, நம்ம வீட்டு தட்டடியில் ஒளிஞ்ச?’ அவன் மனம், பூங்கோதையை மனக்கண்ணில் நிறுத்தி, கேள்வி கேட்டது.

         ‘பியூட்டி…. நீ என்னை நம்புத. நம்பாமல், அன்னைக்கு என் கூட தனியா வந்திருப்பியா? இல்லை இன்னைக்குதேன் ரயில்வே டேசனுக்கு வந்திருப்பியா?’ என்று திலக், கண்களை மூடி புருவம் உயர்த்தி, மனதால் பூங்கோதையிடம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தான் திலக்.

                        ‘தப்பு பண்ணிட்டேன்… நான் அவளை இப்பவே ஊரறிய கல்யாணம் பண்ணிருக்கணும். இன்னும் ஒரு வருஷம், என் கை மீறி எதுவும் நடந்திருமோ?’ என்ற கேள்வி அவன் மனதுள் எழ, மறுப்பாகத் தலை அசைத்தான் திலக்.

         அவன் சிகை, அவன் எண்ணத்திற்கு ஒத்து ஊதுவது போல் அவன் போக்கில் அசைந்தது.

       திலக் கைகளில் இருந்த மணியும் அசைந்து, கிணி கிணி என்ற சத்தத்தை எழுப்பியது. அவன் அந்த மணியை ஆசையாக வருட, ஏனோ அந்த தொடுகை அவனுக்கு பூங்கோதையின் தேகத்தை நினைவுபடுத்தியது.

     அந்த மணியுலும் அவள் வாசம் நிறைந்திருக்கும் எண்ணம்  அவனுள் எழுப்ப, திலக் அந்த மணியை இறுகப் பற்றி தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டான்.

     அந்த மணி காலம் தாழ்ந்து அவனைக் கேட்கப் போகும் கேள்வியறிமால்! குற்ற உணர்ச்சியில் அவன் தவிக்கப் போகும் நொடிகள் அறியாமல்!

    மறுநாள், பூங்கோதை கல்லூரிக்குக் கிளம்பி வெளியே வர, “என்ன டீ கோட்டி மாதிரி வர?” என்று கயல் பூங்கோதையை பார்த்து விழி விரிக்க, தன் சுடிதாரை மேலிருந்து கீழ் வரை புரியாமல் பார்த்தாள் பூங்கோதை.

        பூங்கோதை புரியாமல் விழிப்பதைப் பார்த்த கயல் கலகலவென்று சிரித்து, “இல்லை கோட்டிக்காரிதேன் இப்படி சத்தம் வரமாதிரி வளையல் போடுவா… சலங்கை வச்ச கொலுசு போடுவான்னு சொல்லுவியே? இன்னைக்கி நீ போட்டிருக்க? என்ன ஆச்சரியம்?” என்று கயல் பூங்கோதையை பார்த்த நொடி தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

     ‘மிலிட்டரி…. நீ மட்டும் என்கிட்டே இன்னொரு வாட்டி தனியா சிக்கின அவ்வுளவுதென்…’ என்று திலக்கை மனதிற்குள் திட்டியபடி, “பாடத்தில் மட்டும், உனக்கு ஒன்னொன்னும் ஓராயிரம் மட்டம் சொல்லணும். இதெல்லாம் மட்டும் பார்த்தமெனிக்கே கேளு.” என்று பூங்கோதை கழுத்தை நொடித்தாள்.

    “பூங்கோதை… கொஞ்ச நாளாவே உன் போக்கே சரி இல்லை.” என்று கயல் அடுத்த சந்தேகத்தை எழுப்ப, “எதோ, ஆசையா இருக்குன்னு போட்டேன். காலேஜ்க்கு நேரம் ஆச்சு… நான் போறேன், நீ வரியா இல்லையா?” என்று கோபமாக கேட்டபடி விறுவிறுவென்று நடந்தாள் பூங்கோதை.

     “அப்படி என்ன கேட்டுட்டேன்னு, இப்படி எரிந்து விழுத? நான் உன்னை ஒன்னும் கேட்கலை.” என்று தன் தோழியைச் சமாதானம் செய்தபடி அவளுடன் நடந்தாள் கயல்.

            திலக் பூங்கோதையின் நினைவில், அவன் கடினமான வேலையையும் எளிதாகக் கடந்தான்.   பூங்கோதை, கடினமாக திலக்கின் எண்ணத்தைத் தவிர்க்கப் போராடிக் கொண்டே நாட்களை நகர்த்தினாள்.

   நாட்கள் வருடமாக உருண்டோடியது.

                   பூங்கோதையின் படிப்பு முடிந்திருந்தது. கயலுக்கு அவள் அத்தானுடன் திருமணம் முடிந்திருந்தது.கயல் இரெண்டு வீடு தள்ளி அவள் புகுந்த வீட்டிற்கு இடம் மாறி இருந்தாள். பூங்கோதை, கயல் நட்பில் எந்த மாற்றமும் இல்லை.

கதிரேசன் வீட்டில், அவன் தந்தை கைலாசம் குழப்பமான மனநிலையில் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

      “கதிரேசா…” என்று தயக்கத்தோடு தன் மகனை அழைத்தார் செல்லமா.

              “நாளை மறுநாள்  உனக்கு நிச்சயதார்த்தம். இப்படியே எதிலும் பட்டும் படாமலும் இருந்தா என்ன அர்த்தம்?” என்று வருத்தம் தொனித்த குரலில் கேட்டார் செல்லம்மா.

                   “அம்மா! நீங்க சொன்ன வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நான் பூங்கோதையை கல்யாணம் செய்துகளை. ஆனால், பூங்கோதை கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இவ்வுளவு அவசரமா கல்யாணம் அவசியமா?” என்று கதிரேசன் தன் தாயைப் பார்த்து ஆழமான குரலில் கேட்டான்.

     ‘அவளுக்கு என்னைக்கி மாப்பிள்ளை அமைஞ்சி…’ என்று சலிப்பாக எண்ணியபடி,  “நிச்சயதார்த்தம் மட்டும்தென் இப்ப. கல்யாணத்துக்கு நாள் இருக்கு.” என்று தன் மகனைச் சமாதானப்படுத்தினார் செல்லம்மா.

    கதிரேசன் பூங்கோதையை திருமணம் செய்து கொள்வானோ என்ற பயம் செல்லமாவிற்கு.

                      தன் தாயின் சாமதானத்தில், ஏளனமாகச் சிரித்தான் கதிரேசன்.

      “அம்மா… இன்னைக்கி நீங்க சுயநலமா யோசிக்கிறீங்க. ஆனால், பூங்கோதை வாழ்க்கை சரி இல்லாமால் போனால், அந்த குற்ற உணர்ச்சியே உங்களை கொன்னுடும்.” என்று கதிரேசன் அழுத்தமாகக் கூறிவிட்டு அவன் அறையை நோக்கிச் சென்றான்.

                 அன்று மாலை, முத்தமா ஆச்சி, வாசலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

                                 “ஆச்சி! இப்ப எதுக்கு இப்படி அங்கனைக்கும், இங்கனைக்கும் நடக்கீக?” என்று பூங்கோதை சலிப்பாகக் கேட்டாள்.

   “கூறுகெட்டவ! நானும் இந்த ஒரு வருசமா உனக்கு மாப்பிள்ளை பாக்குதேன். உங்க அத்தை பண்ண வேலையால, நீ ராசி இல்லாதவன்னு ஒரு மாப்பிள்ளை வீடு கூட அமைய மாட்டேங்குது.” என்று முத்தமா ஆச்சி கடுப்பாக கூறினார்.

                     “இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் மேல படிக்கேன்.” என்று பூங்கோதை நிதானமாக கூற, “கதிரேசனுக்கு கல்யாணமாகி, உனக்கு கல்யாணம் ஆகலைனா இன்னும் உன் கல்யாணம் சிக்கலாகிரும். அவன் என்னனா, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டான்.” என்று முத்தமா ஆச்சி கதிரேசனைத் திட்ட ஆரம்பித்தார்.

                       “ஆச்சி, அத்தானை வையாதீக! அத்தான் என்ன பண்ணுவாக? அத்தை சொன்னா கேட்டுதேன் ஆகணும்.” என்று முத்தமா ஆட்சியை அவள் சமாதானம் செய்கையில், பூங்கோதையின் அலைபேசி ஒலித்தது.

                           எதிர் பக்கம் யாரோ ஹிந்தியில் பேச, “ஹலோ… ஹலோ…” என்று கூறினாள் பூங்கோதை.

             யாருக்கு யார் என்று யாரறிவார்?

வா… அருகே வா!  வரும்….

error: Content is protected !!