vav14

vav14

வா… அருகே வா! –  14

                 அதிகாலை நேரம். சூரியன் அதன் பொன்னிற கதிர்களைப் பரப்பிக் கொண்டு அதன் பயணத்தை நகர்த்த, அந்த கதிர்வீச்சில் கண்களைத் திறந்து பதட்டமாக எழுந்தாள் பூங்கோதை.

                தன் உடையைச் சரி செய்துகொண்டு, தன் தலைமுடியை, ஓரமாக ஒதுக்கி தன் கண்களைச் சூழவிட, அங்கு அவளைப் பார்த்தபடி மாடி சுவரின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தான் திலக்.

       “இல்லை… இவ்வுளவு நேரம் எப்படி தூங்கினேன்னு தெரியலை. எதோ ஒரு பாதுகாப்பான இடத்தில், இருந்த மாதிரி நிம்மதி. அது தான் நல்ல தூங்கிட்டேன் போல.” என்று பதட்டத்திலும், தூக்கத்திலும் அவளறியாமல் தன் மனதை வெளியிட்டுக் கொண்டிருந்தாள் பூங்கோதை.

                        தன் இரவின் தேடலுக்கு, விடிந்தும் விடியாத வேளையில் பதில் கிடைக்கும் என்றறியாத திலக்கின் முகத்தில் ஓர் ஆச்சரியக்குறி.

   ‘பியூட்டி மனசில் எதோ இருக்கு. இப்ப தூக்க கலக்கத்தில், எதோ சொல்லறா… அவசரப்பட்டிராத திலக்…’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, பதட்டமாகப் போர்வையை மடித்து வைத்துக்கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தான் திலக்.

 “பியூட்டி! இப்ப எதுக்கு இவ்விளவு பதட்டம்?” என்று அவன் கேட்க, “இல்லை… நீங்க எனக்கு முன்ன முழிச்சிடீக. நான் இவ்வுளவு நேரம் தூங்கிட்டேன். ஆச்சிக்கு தெரிஞ்சா, அவ்விளவுத்தேன்.” என்று பூங்கோதை கூற, “ஆச்சிக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான் திலக்.

               “பார்வதி ஆச்சி…” என்று பூங்கோதை இழுக்க, “என்னை மீறி, யாரும் உன்னை ஒன்னும் சொல்லமாட்டாக.” என்று திலக் கூற, ஓர் நொடிக்கும் கம்மியான நேரத்தில் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் பூங்கோதை.

                   ‘இது என்ன மின்னல் பார்வை?’ என்ற கேள்வியை மனதில் தேக்கிக் கொண்டு, “மாடியில், இங்கன என்  அறை இருக்கு…அங்க…” என்று திலக் ஆரம்பிக்க, “எனக்கு தெரியும். நாங்க, இங்னத்தேன் ஐஸ் பால் விளையாடும் பொழுது ஒளிஞ்சிப்போம்.” என்று கூறிக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் பூங்கோதை.

      “இதெல்லாம், நல்லா பேசுவா!” என்று முணுமுணுத்துக் கொண்டு கீழே இறங்கினான் திலக்.

    ‘அட! மிலிட்டரி எனக்கு சேலை எல்லாம் எடுத்து வச்சிருக்கு?’ என்று அந்த சேலையை வருடியபடியே அதைப் பார்த்தாள் பூங்கோதை.

                    “நீல நிறம்… அவுகளுக்கு பிடிக்குமோ?” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தது .

                      குளித்து நீல நிற சேலையில் அவள் வெளியே வர, அவளுக்காகக் கோப்பையோடு காத்திருந்தான் திலக்.

               “நீங்க எதுக்கு இதெல்லாம் எடுத்திட்டு வரீக?” என்று பூங்கோதை கேட்டாலும், அவள் கண்களில் ஓர் மகிழ்வு.

‘குடி…’ திலக் பார்வையால் கூற, ஒரு மிடறு குடித்துவிட்டு, “ரொம்ப நல்லாருக்கு.” என்று கண்களில் நன்றி உணர்ச்சியோடு கூறினாள் பூங்கோதை.

     “பியூட்டி… பொய் சொல்ற… நல்லார்க்குன்னு சொல்லு, ஒத்துக்கலாம். ஆனால், ரொம்ப நல்லாருக்குனு சொல்ற அளவுக்கெல்லாம் இருக்காது. நான் அவ்விளவு நல்லா எல்லாம் செய்ய மாட்டேன்.” என்று திலக் அவளிடம் விடாமல் பேச்சை வளர்த்தான்.

   “ஆச்சிக்கு, வயசாகிருச்சு. சின்ன பிள்ளையா இருக்கும் பொழுது ஆச்சி எனக்கு எல்லாம் குடுப்பாக… ஆனா, விவரம் தெரிஞ்சி நாந்தேன் எனக்கு எல்லாம் பண்ணுவேன். நீங்கதேன் எனக்காக…” மேலும் வார்த்தைகள் வராமல் தடுமாறினாள் பூங்கோதை.

                    குளித்து, வேஷ்டி சட்டையிலிருந்த திலக், தன் மனைவியை முன்னே நிற்க வைத்து, அவள் தோள் மீது கைபோட்டு ஒற்றை புருவம் உயர்த்தி மறுப்பாகத் தலை அசைத்தான்.

                 “நான் எதுமே பண்ணலை பியூட்டி. எதாவது யோசிச்சி நீயே உன்னை ரொம்ப வருத்திக்கற.” என்று கூற பூங்கோதை அவனை ஆழமாகப் பார்த்தாள்.

“சேலை பிடிச்சிருக்கா?” என்று அவன் அவளை ரசனையோடு பார்த்தபடி கேட்க, பூங்கோதை முகம் சிவந்து தலை அசைத்தாள்.

“எனக்கு இந்த பியூட்டியை பிடிக்கவேயில்லை. பட் பட்டென்று பேசும் பியூட்டியைத்தேன் பிடிக்கும்.” என்று திலக் அழுத்தமாகக் கூற, “அந்த பியூட்டி, முத்தமா ஆச்சி வீட்டில் இருப்பா. அங்கன போய் பாருங்க.” என்று பூங்கோதை கூற, திலக் பெருங்குரல் எடுத்து சிரித்தான்.

     கையிலிருந்த கோப்பையைத் திண்டில் வைத்துவிட்டு, அவசரமாக அவன் வாயை மூடினாள் பூங்கோதை.

      “ஏற்கனவே, இவ்விளவு நேரம் இங்கன நிக்கறதுக்கே, நாம அவ்விளவு பேச்சு வாங்க வேண்டி வரும். இதில்,  இப்படி சத்தம் போட்டு சிரிச்சி என்னை மாட்டிவிட்ருவீக போல?” என்று அவன் காதில் கிசுகிசுத்தாள் பூங்கோதை.

      பூங்கோதை எம்பி அவன் காதில் கிசுகிசுக்க, அவள் சேலையின் தீண்டலில், அவள் கூந்தல் வாசத்தில்  மௌனமாகி அவளைப் பார்த்தான் திலக்.

   “எனக்கு ஒரு விஷயம் தெரியணும்.” என்று அவன் ஆர்வமாகக் கேட்க, அவன் கூறும் விஷயமறிந்து தன் கைகளைக் குறுக்கே கட்டிக்கொண்டு மறுப்பாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.

           அவன் கண்கள் அவளைக் கெஞ்ச, அவன் கைகள் அவளைத் தீண்ட பூங்கோதை அவன் அன்பில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.

    ‘கதை படிச்சிட்டு, சினிமா பார்த்துட்டு காதலும் அதன் இனிமையும் பங்களாக்காரர்களுக்கும், காரில் பயணிப்பவர்களுக்கு மட்டுமுன்னு நினைச்சோமே? காதலும், இனிமையும் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அன்பு செலுத்தும் எல்லார் வீட்டிலும் இருக்குமோ?’ என்ற எண்ணியபடி திலக்கை பூங்கோதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 ‘இவ கிட்ட நான் நிறைய பக்குவமா  பேசணுமே?’ என்ற எண்ணத்தோடு, “நாம எங்கயாவது வெளிய போவோமா?” என்று கேட்க, சம்மதமாக தலை அசைத்தாள் பூங்கோதை.

             “உன்னை ஊட்டி, கொடைக்கானல் அப்படி எங்கயாவது கூட்டிட்டு போகணுமுணுத்தேன் ஆசை. ஆனால், அவ்விளவு லீவு இல்லை பியூட்டி. நாம, குற்றாலம், அகஸ்தியர் பால்ஸ் போவோமா?” என்று திலக் தயக்கமாகக் கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து, “நாம்ம திருநெல்வேலி நெல்லைப்பர் கோவிலுக்கு போயிட்டு, அப்படியே திருச்செந்தூர், சங்கரகோவில் போய்ட்டு…” என்று பூங்கோதை தலை அசைத்து தீவிரமாகப் பேச, அவளை மேலும் கீழும் பார்த்தான் திலக்.

       “எனக்கு அவ்வுளவு கடவுள் நம்பிக்கை இல்லை. பல இழப்புகளை கண்முன் பார்த்தவன் நான்.” என்று திலக் அழுத்தமாகக் கூற, “எனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு. பல இழப்புகளுக்குப் பின்னும் வாழ்க்கை இருக்குன்னு நினைக்குறவ நான்.” என்று அழுத்தமாகக் கூறினாள் பூங்கோதை.

     ‘நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லமாட்டா. மனசில் என்ன நினைக்குதான்னு சொல்ல மாட்டா!  இதெல்லாம் வக்கணையா பேசுவா.’ என்ற எண்ணம் தோன்றக் கடுப்போடு, “அப்படியே காசி, ராமேஸ்வரம் போவோம்.” என்று எங்கோ பார்த்தபடி கூறினான் திலக்.

ஒரு நாளுக்கு முன் ஏற்பட்ட இந்த ஒட்டுதலில், ஏற்பட்ட இடைவெளி பிடிக்காமல், அவனை தன் பக்கம் திருப்பி, “மிலிட்டரி, நம்ம குழந்தைகளை கட்டிகொடுத்திட்டு, காசி ராமேஸ்வரம் போலாம்.” என்று சமாதானமாகக் கூறிவிட்டு, அவள் பேசிய பேச்சின் அர்த்தம் புரிந்து முகத்தைச் சுருக்கினாள் பூங்கோதை.

    அவளை மேலும் சங்கடப்படுத்தாமல், “நீ சொன்ன சரித்தேன் பியூட்டி.” என்று திலக் கூற, வேகமாகப் படி இறங்கி வந்தாள் பூங்கோதை.

             இருவரும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று நெல்லையப்பரையும், காந்திமதி அம்மனையும் தரிசித்தனர்.

                 கோவில் பிரகாரத்தைச் சுற்ற, அவன் முகத்தைப் பார்த்தாள் பூங்கோதை. அவன் நெற்றியில் விபூதி அங்குமிங்கும் இருக்க, “சரி பண்ணிக்கோங்க.” என்று நெற்றியைச் சுட்டிக்காட்டினாள் பூங்கோதை.

   “சரி பண்ணு.” என்று அவன் கூற, “எனக்கு எட்டாது.” என்று கூறி வேகமாக முன்னே நடந்தாள் பூங்கோதை.

      அவள் தூணைக் கடக்க, அங்கு யாருமில்லாமல் போக, சரேலென்று அவளைத் தூக்கினான் திலக்.

          “என்ன பண்ணுதீக?” என்று பூங்கோதை பற்களை நறநறக்க, “இப்ப சரி பண்ணு.” என்று பிடிவாதமாகக் கூறினான் திலக்.

“என்னை கீழ இறக்கி விடுதிகளா?” என்று பூங்கோதை கெஞ்ச, மறுப்பாகத் தலை அசைத்தான் திலக்.

“மிலிட்டரி… என்னை இறக்கு.” என்று பூங்கோதை மிரட்ட, “நீ சரி பண்ணு…” என்று பிடிவாதமாகக் கூற, பூங்கோதை சரி செய்தாள்.

திலக் குறும்பாகச் சிரிக்க, “எனக்கு இதெல்லாம் பிடிக்கலை.” என்று பூங்கோதை திட்டவட்டமாகக் கூற, “எனக்கு பிடிச்சிருக்கு.” என்று அவளைப் போல் கூற, அவள் அவனைக் கோபமாக முறைத்தாள்.

       “நீ சொன்னேனு நான் கோவிலுக்கு வந்தேன்ல?” என்று அவன் கேள்வியாகக் கேட்க, “இதுக்கு தான் வந்தீகளா?” என்று பூங்கோதை கடுப்பாகக் கேட்டாள்.

“இதுக்கும்…” என்று ரசனையோடு சிரித்தான் திலக்.

     ‘பூங்கோதை… இது நல்லதுக்கில்லை. நீ, எங்கனையோ இடம் கொடுத்திருக்க. இது சரிப்பட்டு வராது.’ என்று தனக்கு தானே எச்சரித்து விலகி நடக்க ஆரம்பித்தாள் பூங்கோதை.

      கோவிலைத் தரிசித்து விட்டு,  கோபமாக நடந்து கொண்டிருந்த பூங்கோதையிடம் அல்வாவை நீட்டி சமாதானம் செய்தான் திலக்.

பூங்கோதை அவனை முறைக்க, “பியூட்டி… ரொம்ப நேரம் புருஷன், பொஞ்சாதி கோபம் பிடிக்க கூடாது. பிடிச்சா தெய்வ குத்தம் ஆகிரும்.” என்று திலக் தீவிரமாகக் கூற, பூங்கோதை தனக்கு வந்த சிரிப்பை மறைத்து அவனைப் பார்த்தாள்.

பூங்கோதை சிரிப்பைக் கண்டுகொண்டு,  “அல்வாவை, பார்த்தும்  சமாதானம் ஆகலைனா, சாமி கண்ணை குத்தும்.” என்று திலக் மீண்டும் தொடர, “நான் அல்வாவை சாப்பிடுதேன்.” என்று பரிதாபமாகக் கூறினாள் பூங்கோதை.

    “என் மேல கோபம் இல்லையே?” என்று அவன் விடாப்பிடியாக கேட்க, “எனக்குத்தேன் உங்களை பிடிக்காதில்லை. அப்புறம் எப்படி கோபம் வரும்?” என்று மிடுக்காக கேட்டாள் பூங்கோதை.

    “ஹா.. ஹா…” என்று திலக் சத்தமாகச் சிரிக்க, “நான் இவ்விளவு சொன்னதை விட, நீ சொன்னது ஒரே சிரிப்பானியா இருக்கு.” என்று கூற, அவன் பேச்சை ரசித்தும் ரசிக்காதது போல் விலகி நடந்தாள் பூங்கோதை.

       அவள் விலகலைப் புரிந்து கொண்டு, ‘திலக்… அவசரப்படாத…’ என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டான் திலக்.

‘என்ன பிரச்சனையா இருக்கும். கேட்டாலும் சொல்ல மாட்டா… பியூட்டி, அவளை வருத்திக்கிறதும் எனக்கு பிடிக்கலை.’ என்று தனக்கு தானே நொந்து கொண்டான் திலக். அவளை அதிகம் வருத்தப்போவது தெரியாமல்!

                  அவளை விலக்காமல், விலகி நின்றான் திலக்.

     உறவினர் வீட்டு விருந்து, இன்னும் சில சம்பிரதாயங்கள் அவள் கூறிய கோவில் என் நாட்கள் நகர்ந்து கொண்டே போனது.

    திலக் அவன் பெட்டியை அடுக்கிக் கொண்டிருந்தான். பூங்கோதை எதுவும் பேசாமல், அவனுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.

       “பியூட்டி… நீ சொல்லி திருச்செந்தூர் கோவிலுக்கு மட்டும் போகலை. இன்னைக்கி  போயிட்டு வந்திருவோம். நான் நாளைனைக்கி கிளம்பனும்.” என்று திலக் கூற, மௌனமாகத் தலை அசைத்தாள்.

           ‘கல்யாணம் ஆகி இரண்டு வாரத்துக்கு மேல ஆகுது. ராணுவ ரகசியத்தைக் கூட தெரிஞ்சிக்கலாம். இவ என்ன நினைக்குறானு தெரியலை.’ என்று எண்ணியபடி அவள் முகத்தை ஆழமாகப் பார்த்தான் திலக்.

      முத்தமா ஆச்சியும், பார்வதி ஆச்சியும் இவர்களுக்குத் தனிமை கொடுத்து அவர்கள் ஒருபக்கம் வயல், கோவில் குளம் என்று சுற்றி கொண்டிருந்தனர்.

   திருமணம் முடிந்த நாளைவிட பூங்கோதை இன்னும் அமைதியாக இருந்தாள்.

          இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல, “கடலுக்கு போயிட்டு கால் நினைச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு போவோம். ஆச்சி ரொம்ப நேரம் தனியா இருப்பாக.” என்று கனஅக்கறையாக பூங்கோதை கூறினாள்.

       “ஆச்சியை பார்க்கணும். கோவிலுக்கு போகணும். இதுதேன் எப்பவும் உன் கவலையா?” என்று திலக் கோபமாகக் கேட்க, அவனை மிரண்டு விழித்தாள் பூங்கோதை.

      அவள் மிரட்சியைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், “நான் உன்கிட்ட சத்த பேசணும். கோவிலுக்கு போயிட்டு, கொஞ்சம் நேரம் கடல் பக்கம் வரோம். பேசுறோம்.” என்று அழுத்தமாகக் கூறிவிட்டு இறைவன் சன்னதிக்குள் சென்றான் திலக்.

    முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, பிரகாரத்தைச் சுற்றினர். திலக் எதுவும் பேசவில்லை.

           ‘இவுக ஏன் பேசமாட்டேங்கிறாக? எப்பவும் கலகலன்னு பேசிட்டே இருப்பாகளே?’ என்ற எண்ணத்தோடு அவனை மௌனமாகப் பின்தொடர்ந்தாள் பூங்கோதை.

     ‘நான் பேசக் கூடாது. அப்பத்தேன் இவளுக்குப் புரியும். பேசலைனா, எவ்வுளவு கஷ்டமா இருக்குமுன்னு..’ என்று எண்ணியபடி மௌனமாக நடந்தான் திலக்.

     கடல் அருகே செல்லுமுன், அவளைத் திருப்பி அவள் முகத்தில் இருக்கும் குங்குமத்தைச் சரி செய்தான் திலக். அவள் முன் அவள் உயரத்திற்குக் குனிய, பூங்கோதை அவனுக்குச் சரி செய்ய எதுவும் பேசாமல் கடல் முன் அமர்ந்தான் திலக்.

        பூங்கோதைக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. எதையும் வெளிக்காட்டாமல், அவன் அருகே அமர்ந்து கொண்டாள்.

   “நான் அங்க இருந்தாலும், தினமும் உன் கிட்ட பேசுவேன்.” என்று திலக் கூற, “ம்…” கொட்டினாள் பூங்கோதை.

    “தினமும் கடுதாசி போடுவேன். அது ஒரு  மூணு நாளில் உன்கிட்ட வரும். கொஞ்ச முன்ன பின்ன கூட ஆகும். எப்பவும் நான் இருக்கும் இடத்தில சிக்னல் இருக்குமுன்னு சொல்ல முடியாது. அதுக்குத்தேன் இந்த கடுதாசி.” என்று திலக் கூற, ‘ம்…’ கொட்டவும் மறந்து தலையை அசைத்தாள் பூங்கோதை.

             “கடுதாசி வரலைனாலும், என் கிட்ட இருந்து கால் வரலைனாலும் ஒரு நாள், இரெண்டு நாளுக்கெல்லாம் நீ பயபடக்கூடாது. எனக்கு எதுவும் ஆகாது.” என்று திலக் கூற, பூங்கோதை உள்ளம் நடுங்கி, தலை அசைக்கவும் மறந்து அவனை இமைக்காமல் பார்த்தாள் பூங்கோதை.

   ‘பயப்படுகிறாளோ?’ என்ற எண்ணம் தோன்ற, ‘பூங்கோதை பேசவில்லை…’ என்ற கோபத்தை விடுத்து, “பி…யூ…ட்…டி…” என்று மென்மையாக அழைத்தான் திலக்.

      ‘எத்தனை நாள் தள்ளி போட்டாலும், இவளிடம் எல்லாம் சொல்லித்தானே ஆக வேண்டும்.’ என்ற எண்ணத்தோடு தேவையானதைப் பகிர்ந்து கொண்டான் திலக்.

    பூங்கோதை அவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.

              “நான் கட்டிய மணி இருக்கா?” இப்பொழுதும் ஆர்வமாகக் கேட்டான் திலக். பூங்கோதை பதில் கூறவில்லை.

“என்னை மிஸ் பண்ணுவியா பியூட்டி?” என்று திலக் ஏக்கமாக கேட்க, ‘ஓ…’ என்று கதற அவள் மனம் துடிக்க மறுப்பாகத் தலை அசைத்து கடலை வெறித்துப்பார்த்தபடி, “நீங்கதேன் என்னை விரும்பி கட்டிக்கிட்டிக… நான் இல்லை.’ என்று மெதுவாகக் கூறினாள் பூங்கோதை.

    ஓர் மெல்லிய புன்னகையோடு, தலை அசைத்துக் கேட்டுக்கொண்டான் திலக்.

திலக் ஊருக்கு கிளம்பும் நாளும் வந்தது.

                 “நீ டேசனுக்கு வரவேண்டாம்.” என்று திலக் கூற, தலை அசைத்து அவனை வழி அனுப்பினாள் பூங்கோதை.

திலக் சென்று சில நிமிடங்களில், கதிரேசனுக்கு அழைத்தாள் பூங்கோதை.

        “அத்தான்… அவுகளை வழி அனுப்ப நான் டேசனுக்கு போகணும்.” என்று பூங்கோதை கூறிய சில நிமிடங்களில் அங்கு கதிரேசன் வர அவனோடு சென்றாள் பூங்கோதை.

 “எப்பவும் இவுகளுக்கு டேசனில் என்ன வேலையோ?” என்று முணுமுணுத்தார் பார்வதி ஆச்சி, அவர் கூற்றுக்கு தலை அசைத்தார் முத்தமா ஆச்சி.

கதிரேசன், பிலட்போர்ம் டிக்கெட் வாங்கிக்கொண்டு, அவர்களுக்குத் தனிமை கொடுத்து பின்னே மெதுவாகச் செல்ல, தன் கணவனை நோக்கி ஓடினாள் பூங்கோதை. சுற்றுப்புறம் மறந்து அவனை பின்னோடு அணைத்துக் கொண்டாள்.

     தன் மனைவியின்  வாசம், ஸ்பரிசம் என் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டான் அந்த ராணுவ வீரன்.

            அவளை முன்பக்கம் இழுத்து, “என்னை, உனக்கு பிடிக்குமுன்னு எனக்கு தெரியும் பியூட்டி. ஏண்டி விலகுத?” என்று கரகரப்பான குரலில் கேட்டான் திலக்.

    “மிலிட்டரி… எனக்கு உன்னை பிடிக்காது.” பிடிவாதமாகக் கூறினாள் பூங்கோதை.

“ம்…” கொட்டினான் திலக்.

சுற்று புறத்தை பார்த்தாள் பூங்கோதை. அங்கு ஓரிருவரை தவிர யாருமில்லை. அந்த ஓரிருவரும் இவர்களைக் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு பூங்கோதை தன் கணவன் கையை இறுக்கமாகப் பற்றி அவள் இடுப்பில் வைத்தாள்.

     திலக் இப்பொழுது பதற, “பியூட்டி… என்ன பண்ணுத?” என்று அவன் கைகளை உருவிக் கொள்ள, அதை அழுத்தமாகப் பிடித்து அவன் கட்டிய மணியின் இருப்பை உறுதி செய்தாள் பூங்கோதை.

அந்த மணியின் அசைவில், அவள் காட்டிய நெகிழ்வில், “இப்ப தான் சொல்லுவியா?” என்று திலக்  ஆசையாக கேட்க, “கூக்குச்… கூக்குச்…. கூக்குச்… கூக்குச்….” என்று ரயில் சத்தம் மேலோங்கியது.

    “மிலிட்டரி… நீங்க கேட்டுட்டே இருந்தீகளே… அதுதேன்…” என்று அவள் இழுக்க, “என்னால, கழட்ட முடியல… அதனாலதேன், அது அங்கனயே இருக்கு… வேற ஒண்ணுமில்லை. எனக்கு உன்னைப் பிடிக்காது….” என்று பூங்கோதை கூறினாள்.

        “என்னை மிஸ் பண்ணுவியா பியூட்டி? என்னை தேடி அழுவியா பியூட்டி?” என்று அவள் கூறுவதற்கு அர்த்தம் புரியாதவன் போல் அவன் கேட்க ரயில் அவர்களை நெருங்கி இருந்தது.

     “நான் என்ன அழவா செய்றேன் பாருங்க… நான் உங்களை மிஸ் பண்ண மாட்டேன்.” என்று பூங்கோதை கூற, “கேட்கலை…” என்று திலக் குனிந்து, செவிகளை அவள் பக்கம் சாய்த்து நெருங்க, “நான் உங்களை மிஸ் பண்ண மாட்டேன்.” என்று சத்தமாக, அழுத்தமாகக் கூறினாள் பூங்கோதை.

                         “நான் உன்னை மிஸ் பண்ணுவேன் பியூட்டி…” என்று  திலக்  கண்கலங்க, பூங்கோதையின் இதயம் ரணமாகத் துடிக்க, கதிரேசன் அங்கு வந்து தன் நண்பனின் தோள்களைத் தட்டிக் கொடுத்தான்.

    “கதிரேசா பார்த்துக்கோ.” என்று கூறிக்கொண்டு, பெட்டியை எடுக்க மனைவியை நெருங்கி, “நீ என்னை தேடுவ… என்கிட்டே உன் காதலை சொல்லுவ…” என்று சாவல் விட்டு ரயில் ஏறினான் திலக்.

               பூங்கோதை அவனை உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்துக் கொண்டிருக்க, அவள் அறியவில்லை அவள் காதல் சொல்லப் போகும் நிலையை…

         மனைவி மீது கொண்ட காதல் திலக்கின் கண்ணீராக வழிய, அவன் தேசப்பற்று இரத்தமாக ஓட அந்த ரயிலின் படிகளில்  கண்ணீர் மல்க தன் மனைவிக்குக் கையசைத்து விடைபெற்றான் திலக்.

        தன் மனைவி புள்ளியாக மறையும்வரை அவளை உள்வாங்கிக் கொண்டு அவன் இடத்தில் அமர்ந்து தன் கண்களை இறுக மூடினான் திலக். அவன் கண்கள், இதயம் என முழுதிலும் பூங்கோதை நிறைந்திருந்தாள். அவன்  நெஞ்சம், “பியூட்டி… பியூட்டி… பியூட்டி…” எனத் துடித்தது.

‘மிலிட்டரி அடுத்து எப்ப வருவான்?’ என்ற கேள்வியோடு பூங்கோதை வீடு திரும்பினாள்.

வா… அருகே வா!  வரும்….

error: Content is protected !!