UNT 5

UNT 5

உயிர் தேடல் நீயடி 5

காவ்யதர்ஷினி வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்து இருந்தன.
இப்போது அந்த நிறுவனத்தில் ஓரளவு பொறுந்தியிருந்தாள்.

அவளுடையது அலுவலக பணி என்பதால் மேலாளர் உத்தரவின் கீழ் தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்.

பெரும்பாலும் இவளுக்கு உத்தரவு வருவது மேலாளரிடம் இருந்து தான். ஏதேனும் முக்கிய விவரங்களை
கலந்தாலோசிக்கும் சமயங்களில் மட்டுமே விபீஸ்வரை காண முடிந்தது.

விபீஸ்வர் தான் துவங்கி இருந்த ஆர்கானிக் ஆடை தயாரிப்பில் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருந்தான்.

அவன் நிறுவனத்தில் செயற்கை இழைகள் கொண்ட ஆடை தயாரிப்புகள் தான் சக்கரவர்த்தி இருந்தவரையில் நடைபெற்று வந்தது. அதனோடு சேர்த்து ஆர்கானிக் ஆடை உற்பத்தி ஆலையையும் இவன் தற்போது நிறுவி இருந்தான்.

முழுவதும் இயற்கை முறையில் பருத்தி, சணல் மற்றும் வாழைநார் கொண்டு தயாரிக்கப்படும் ஆடைகள் தோலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாதவை. அதோடு அவற்றில் ஏற்றப்படும் சாயங்களும் இலைதழை கலவைகள் கொண்டு முற்றிலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படுபவை ஆதலால் சுற்றுசூழல் பாதிப்பும் குறைவு.

எனவே தான் இதன் விலை சற்று அதிகம் என்றாலும் கூட ஆர்கானிக் உடைகளை வாங்குவதில் நிறைய மக்கள் ஆர்வம் காட்டி வருவதால், ஆர்கானிக் ஆடை உற்பத்தியிலும் வெற்றிகளையும் லாபங்களையும் குவித்துக் கொண்டிருந்தான். அதோடு சிலபல வியாபார எதிரிகளையும் கூட.

ஏனோ இன்னும் இன்னும் தன்னை வேலைகளுக்குள் புகுத்தி கொள்ளும் அப்படியோரு வேகம் விபீஸ்வருக்குள். அது அப்படியே அவன் தந்தையின் குணம். அதனாலேயே அவரால் தனித்து நின்று உயரத்தை எட்ட முடிந்தது.

எட்டிய உயரம் போதவில்லை இன்னும் இன்னும் மேலே என்ற உத்வேகம் இவனுக்குள் எப்போதுமே எரிந்து கொண்டிருக்கும்.

வீடு, ஆடை உற்பத்தி ஆலைகள், அலுவலகம், நிறுவனம் என்று ஓயாமல் சுற்றி திரிபவன் சோர்ந்து போகும் சமயங்களில் நாடுவது கேளிக்கை களியாட்டங்களை தான். விபீஸ்வர் எங்கு சென்றாலும் ராக்கி அவனுடன் நிழல் போலவே தொற்றிக் கொண்டிருப்பான்.
விபீஸ்வரும் தான் சொல்வதை அப்படியே செய்யும் வேலையாள் என்ற வகையில் அவனை உடன் வைத்திருந்தான் அவ்வளவே.

அன்றைய காலை பொழுதிலே அந்த பங்களாவின் போர்டிகோவில் கார் சீறிப்பாய்ந்து வந்து நின்றது. இத்தனை காலையில் யாரென்று லலிதாம்பிகை பார்க்க, அங்கே ஜனனி துள்ளலுடன் வந்து அவரை கட்டிக் கொண்டாள்.

“என்ன ஜெனிம்மா, காலையில ஏழு மணிக்கெல்லாம் வந்திருக்க?” அவர் வியப்பாய் கேட்க,

“மறந்துட்டிங்களா ஆன்ட்டி, இன்னைக்கு நைட் எனக்கு ஃப்ளைட், உங்களை எல்லாம் விட்டு போக மனசே இல்ல” என்று அவள் சிணுங்க, “அப்ப போகாத இங்கேயே இருந்திடு” அவர் புன்னகையோடு பதில் தந்தார்.

“என்னோட கெரியர் பத்தியும் யோசிக்க வேண்டியதா இருக்கே, அதான் போகாம இருக்க முடியல” என்று காரணம் கூறினாள்.

ஜனனி தனது மேற்படிப்பை முடித்து திரும்ப எப்படியும் வருட கணக்கில் ஆகுமென்று லலிதாவும் அறிந்திருந்தார். எனவே, “மறுபடி எப்ப வருவ ஜெனிம்மா, உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன் டா” என்று வாஞ்சையோடு வினவினார்.

“விபிய என்னை கட்டிக்க சொல்லுங்க, என் படிப்பெல்லாம் தூக்கி போட்டுட்டு உங்க கூடவே இருக்கேன்” என்று ஜனனி கண்ணடித்து சொல்ல,

“நீ எனக்கு மருமகளா வந்தா கசக்குமா என்ன? ம்ம் ஆனா விபி தான் மேரேஜ்ல இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்லிகிட்டு திரியிறானே, என்ன பண்ண” அவர் குரலில் லேசாக கவலையும் தொற்றியிருந்தது.

“விடுங்க ஆன்ட்டி, கொஞ்ச நாள்ல அவனே மனசு மாறுவான், இப்ப விபி எங்க?” என்று கேட்க, அவன் உடற்பயிற்சி அறையில் இருப்பதாக லலிதாம்பிகை கூற, ஜனனி அங்கு விரைந்தாள்.

விபீஸ்வர் பனியனும் ஷார்ட்ஷும் அணிந்து அமர்ந்தபடி உடற்பயிற்சி உபகரணத்தின் எந்திர கைகளை ஒவ்வொரு முறையும் அவன் கைகள் இழுத்து விடும் போதும் அவன் புஜங்கள் புடைத்து அதன் முறுக்கேறிய வலிமையைக் காட்டி கொண்டிருந்தன.

அவனை ரசனையோடு அளவிட்டபடி, அருகில் வந்தவள், வியர்வை வழிந்த அவன் தோளில் ஆசையாய் தன் இதழ் பதிக்க, “ஹேய் ஜெனி, என்ன காலையிலேயே வந்திருக்க” கேட்டபடியே தன் பயிற்சியைத் தொடர்ந்தான் விபீஸ்வர்.

“ஏன் விபி, அநியாயத்துக்கு இப்படி அழகா இருந்து தொலைக்கற, கிறுக்கு பிடிக்குது டா உன்மேல எனக்கு” அவள் காதலும் மயக்கமுமாய் சொல்ல, இவன் தனது சில்லென்ற சிரிப்பை பதிலாக சிதறவிட்டான்.

அவன் கழுத்தை கட்டிக் கொண்டவள், “நான் உன்ன விட்டு தூரமா போக போறேன் விபி, உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்று சிணுங்க,

அவளின் இடை வளைத்து தன்னோடு இறுக்கி கொண்டவன், “மீ டூ பேப், இந்த மிஸ்ஸ மிஸ் பண்ணாம இருக்க என்ன செய்யலாம் ம்ம்…” அவள் கன்னத்தில் தன் நுனி விரலால் கிறுக்கல்கள் வரைந்தான்.

அவள் இமைகள் மயங்கி சொருக, “என்ன செய்ய போற…” அவள் குரலும் மயங்கியது. தன் இதழ் கிறுக்கல்களில் மேலும் அவளுக்குள் தாபம் கூட்டலானான் அவன்.

அவனை பார்த்த முதல் நொடியில் இருந்து அவனருகாமையில் மட்டும் தன்னிலை இழந்து நிற்கும் தன் பெண்மையின் புதிர் மட்டும் ஜனனிக்கு விளங்கவே இல்லை இப்போதும்.

ஆனால் அவள் செல்லின் ஒவ்வொரு அணுவும், ‘விபி, விபி’ என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறது. அவனை சந்தித்த நாள் முதலாய்.

அவளும் தன்னால் முடியும் மட்டும் தன் காதலை எல்லாவகையிலும் அவனுக்கு உணர்த்தி விட்டாள். ஆனால் அவன் தான் காதலிக்கவும் தயாராயில்லை. திருமணத்திற்கும் தயாராயில்லை என்று பிடிவாதம் பிடிக்கிறான்.

அவன் சேட்டைகள் எல்லையை கடக்க தயாராக, “விபி… வீட்ல ஆன்ட்டி இருக்காங்க…” என்றாள் தவிப்புடன்.

“சும்மா இருந்தவனை உசுப்பி விட்டது நீதான பேப்…” அவன் குரலும் கிறங்கியது.

டக் டக் இருமுறை கதவை தட்டிவிட்டு, “சர் காஃபி” என்று கலில் உள்ளே நுழைய, இருவரும் பிரிந்து நின்றனர். இருவருக்கும் கருப்பு குளம்பி கோப்பையை அளித்துவிட்டு அவன் நகர, ஜனனியும் விபியும் ஒருவரை ஒருவர் பார்த்து சட்டென சிரித்தும் விட்டனர். ஏனோ அவர்களுக்கு சிரிக்கத்தான் தோன்றியது.

“நைட் தான உனக்கு ஃப்ளைட், இப்பவே டாடா காட்ட வந்துட்டியா ஜெனி” என்றான் கேலியாக. தனக்கான ப்ளாக் காஃபியை பருகியபடி.

“ம்ஹும் இல்லடா, உன்ன பிரிஞ்சு முழுசா ரெண்டு வருசம்… எப்படி இருக்கபோறேனு ஒண்ணுமே புரியல. உன்னால ரொம்ப கெட்ட பொண்ணா ஆகிட்டேன் தெரியுமா?” என்று சிணுங்கினாள்.

“நம்ம ரிலேஷன்ஷிப் வேற, உன் கெரியர் வேற, சோ ரெண்டையும் சேர்த்து குழப்பிக்காத, ஓகே” விபி தெளிவாக சொல்ல, ஜனனிக்கு தன் நெற்றியில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.

“எப்படி இப்படி உன்னால நல்லதனமா எல்லாம் பேச முடியுது? கொஞ்ச நேரம் முன்னால அப்படி இப்படி எல்லாம் செஞ்சுட்டு” அவள் கண்மணிகளை உருட்டி கேட்க, விபி சட்டென சிரித்து விட்டான்.

“சிரிச்சு தொலைக்காத டா, நான் நிஜமா உன்ன ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் தெரியுமா”

“ஓ மை காட், எனக்கு புரியாத வேர்ட்ஸ் எல்லாம் பேசி என்னை மூட் அவுட் பண்ணாத ஜெனி” என்று விபீஸ்வர் சட்டென சொல்லிவிட, இவள் முகம் சுருங்கி போனது.

‘காதலென்ற சொல்லே புரியாதவனிடம், எப்படி தன் காதலை புரிய வைப்பது?’

அவள் வாட்டம் கண்டு விபி பேச்சை மாற்றினான்.

“பேக்கிங் எல்லாம் முடிஞ்சது இல்ல? ப்ரீ தானே, அப்ப என்னோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாமே”

“ம்ம் உனக்காக தான் இவ்வளோ காலையில அடிச்சு பிடிச்சு ஓடி வந்தேன்” ஜனனி சிறுகுரலாய் சொல்ல,

“குட் பேப், வெய்ட் பண்ணு நான் ப்ரஷ் ஆயிட்டு வந்திடுறேன்” என்று அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து விட்டு, மாடி நோக்கி விரைந்தான்.

ஜனனியின் பார்வையும் அவன் பின்னோடே தொடர்ந்தது.

அவன் மென்மையாய் இட்ட ஒற்றை நெற்றி முத்தத்திற்கே இவள் உள்ளம் அவன் காலடியில் சரிந்து போயிருந்தது.

அவனிடம் இருந்த ஏதோ ஒன்று, இல்லை அவனே அவனாய் மொத்தமாய்… எதிலோ அவனிடம் தன்னை முழுவதுமாக தோற்றுவிட்டிருந்தாள் அவள்.

விபியை சந்திக்க நேர்ந்த முதல் சந்திப்பை இவளின் மனம் திருப்பியது.

தோழியின் பிறந்தநாள் விழாவில் தான் ஜனனி, விபீஸ்வரை முதன் முதலில் நேராக பார்க்க நேர்ந்தது.

எத்தனை கூட்டத்தில் நாம் செல்லும்போதும் ஏதோ ஒருசிலரின் நேர்த்தியான உடையோ, அழகோ, நிறமோ, ஆளுமையோ நம் பார்வையை கவர தவறுவதில்லை. அனிச்சையாய் நம் கண்கள் அவரை திரும்பி பார்த்து விடும்.

அப்படித்தான் அந்த விழாவில் தோழியரோடு வாயடித்து கொண்டிருந்தவளை அவன் கடந்து செல்லும் போது இவள் பார்வை மறுபடி அவனிடம் தாவி இருந்தது.

அவன் உடை, நடை, சிகை, பாவனை, அந்த இதழோர குறுஞ்சிரிப்பு என மொத்தமாய் அவன் அவளை கவரத்தான் செய்தான்.

‘நல்லாதான் இருக்கான்’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே பார்வையை விலக்க முயன்ற கணத்தில் அவன் பார்வையும் இவளை வருடியது.

அன்று பிங்க் வண்ண லாங் ஃப்ராக்கில் மிதமான அலங்காரத்தில் பேரழகாக தெரிந்தாள் அவள். அவனின் ஒற்றை புருவம் ஏறி இறங்கி பாராட்டை வெளிபடுத்த, ஜனனி தடுமாற்றத்துடன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

சற்று நேரத்தில் அவனே அவள் எதிரில் வந்து, ‘ஹாய் பேப், ஐ’ம் விபீஸ்வர்” என்று அறிமுகம் செய்து கொள்ள, சற்று தயக்கத்தோடு இவளும், “ஹாய், நான் ஜனனி” என்றாள் மென்னகையோடு.

‘அச்சோ இவன் தான் விபீஸ்வரா?’ அவள் மனம் சன்னமாய் அதிர்ந்து நிற்க, அவனோ வழக்கம் போல அவளை ஹக் செய்து, “நைஸ் டூ மீட் யூ ஜெனி” என்றான்.

முதல் சந்திப்பிலேயே அவன் அழகாய் உச்சரித்த தன் செல்ல பெயர் சுருக்கம் அவளுக்குள் தித்திக்க தான் செய்தது.

“கேன் யூ ஜாய்ன் வித் மீ?” விபி நேராக கேட்க, இவள் விழிகள் வியப்பாக விரிந்தன.

“இவ்வளோ அழகான கண்ணுக்குள்ள விழ, யாருக்குதான் கசக்கும்… நான் மொத்தமா விழுந்துட்டேன் பேப்” அவன் பார்வையிலும் வார்த்தைகளிலும் இவளுக்குள் குறுகுறுப்பு.

“என் அப்பாக்கு இதெல்லாம் பிடிக்காது” ஜெனனி தயக்கமாக சொன்னாள்.

‘இல்லை தன் அப்பாவுக்கு இவனை தான் சுத்தமாக பிடிக்காது என்று சொல்லி இருக்க வேண்டுமோ!’ அவள் மனம் கேள்வி எழுப்ப,

“ம்ஹும்” என்று அவன் சொன்ன தோரணை மேலும் இவளை அவனிடமே ஈர்த்தது.

அவளின் தயக்கமாக முகத்தை கவனித்தவன், “ஜஸ்ட் சில் ஜெனி, உனக்கு என்னை பிடிச்சிருக்கு, எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு. தட்ஸ் ஆல். இதுல உன் அப்பாக்கு என்னை பிடிச்சிருக்கா, பிடிக்கலையான்றது தேவையில்ல” வெகு சாதாரணமாக சொன்னான்.

அவளுக்கும் அவனை பிடித்து இருந்தது தான். எனினும், அவனை பற்றி அவள் அறிந்திருந்த விசயங்கள் அவளை தயங்க செய்தது.

“உன் பார்வையில என்மேல இன்ட்ரஸ்ட் தெரிஞ்சது, பட் உனக்கு பிடிக்கலன்னா இட்ஸ் ஓகே” என்றான் அலட்டாமல்.

“எனக்கு உன் கேரட்க்டர் நல்லாவே தெரியும் விபி, உன்னோட மத்த கேர்ள் ஃப்ரண்ஸ் போல நான் கிடையாது” ஜெனனி சொல்ல, இவன் முகம் புரியாத பாவனை காட்டியது.

“எனக்கு உன்ன பிடிச்சிருக்குனா உன்ன மட்டும் தான் பிடிச்சிருக்குனு அர்த்தம்” ஜனனி அழுத்தி சொல்ல, விபி தன் அக்மார்க் புன்னகையைச் சிதறவிட்டு அவளை தோளோடு அணைத்து கொண்டவன், “இவ்வளோ தானா இல்ல வேற ஏதும் கண்டிஷன்ஸ் இருக்கா பேப்” என்று அவள் காதுமடலோரம் கிசுகிசுத்தான்.

அவன் கண்களை நிமிர்ந்து பார்த்தவள், “உனக்கு எப்பவுமே நான் மட்டும் ஸ்பெஷலா இருக்கணும்” என்றாள் தீர்க்கமாய்.

“ஆஹான்” என்றவனின் பார்வையில் அத்தனை குறும்பு கூத்தாடியது.

பேச்சு, சிரிப்பு, தீண்டல், சிணுங்கல், கூடல் என்று அன்று இரவோடு அவனோடே கலந்து கரைந்து போயிந்தாள் ஜனனி.

நடந்ததை நினைக்க, ஏனோ இப்போது இவளின் இமையோரம் சன்னமாய் நீர்க்கசிவு.

ஜனனி விரும்பிய எதற்கும் தடை சொல்லாமல் அவள் வளர்ந்த முறை, தனக்கு பிடித்த எதுவும் தன் கைக்குள்ளேயே அடங்கி இருக்க வேண்டும் என்ற அவளின் பிடிவாதம்… இப்போது அவளை எங்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.

தன் அருகே அமர்ந்து காரை லாவகமாக செலுத்தி வந்த விபீஸ்வரின் அருகில் ஜனனி நெருங்கி அமர்ந்து அவன் தோளில் தலைசாய்த்து கொண்டாள்.

அவனோடு பழகிய இத்தனை நாட்களில் மீண்டும் மீண்டும் அவன் மீது தான் கொண்ட நேசத்தை அவனுக்கு உணர்த்த அவள் முயற்சிக்க, அவன் அதனை கண்டுகொள்வதாக இல்லை. அவளிடம் சிலபொழுது உறவை மட்டுமே நாடினான்.

ஆனால் எந்த காரணம் கொண்டும் விபியை இழக்க ஜனனி மனம் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த பிரிவு தன்மீது அவனுக்குள் நேசத்தை விதைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்குள் ஒட்டி இருந்தது.

கார் அவனின் கெஸ்ட்ஹவுஸில் நிற்க, ஜனனி அவன் கைகளுக்குள் அடங்கியபடி அந்த பங்களாவின் உள்ளே சென்றாள்.

விபீஸ்வரின் உல்லாச உலகம் இது.

“ஹே ஜெனி, என்னாச்சு உனக்கு? ஏன் டல்லா இருக்க?” தன் மார்பில் சாய்ந்திருந்தவளின் கலைந்திருந்த கேசம் கோதிபடி அவன் கேட்க,

“எனக்கு நீ வேணும் விபி, உன்ன பிரிஞ்சு போகணும்னு நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு. எதுவுமே வேண்டாம் உன்கூடவே இருக்கணும்னு தோணுது” ஜனனி அவன் மார்பில் அழுத்தமாய் முகம் புதைத்துக் கொண்டாள்.

“ஜஸ்ட் சில் ஜெனி” அவளை அவன் சமாதானபடுத்த, “நம்ம மேரேஜ்க்கு ஓகே சொல்லு விபி, ப்ராமிஸ் நான் உன்ன எந்த விதத்திலும் கன்ட்ரோல் பண்ண மாட்டேன்” அவனுக்கு பிடிக்காத விசயம் என்பது தெரிந்தும் கேட்டு விட்டாள்.

“ஷிட் லைஃப் லாங் ஒருத்தியோட அட்ஜஸ்ட் பண்ற வாழ்க்கை எல்லாம் எனக்கு ஒத்து வராது ஜெனி. அதைதவிர நீ வேற என்ன கேட்டாலும் எனக்கு ஓகே” அவனிடமிருந்து சலிப்பாக பதில் வந்தது.

இந்த பதிலை இவள் எதிர்பார்த்தது தான். சட்டென வேறு யோசனையும் அவளுக்கு தோன்றியது.

“ப்யூச்சர்ல உனக்கு மேரேஜ் பண்ணிக்கிற ஐடியா வந்தா…”

“ப்ச் சான்ஸே இல்ல” அவன் மறுக்க,

“ஒருவேளை வந்ததுன்னா, உன்னோட சாய்ஸ் நானா மட்டும் தான் இருக்கணும்” ஜெனனி அழுத்தமாக சொன்னாள்.

அவளின் பிடிவாத கோரிக்கையில் விபி சிரித்து விட, “அப்படியொரு ஐடியா வந்தா… பார்க்கலாம்” என்று விபீஸ்வர் இதழ் சுழிக்க, அவள் துள்ளி குதித்து அவனை கட்டிக் கொண்டாள். அவன் ‘பார்க்கலாம்’ என்று அவன் சொன்னதே இவளுக்கு போதுமானதாக இருந்தது.

அவனிடம் விடைபெற்று, தாய் நாட்டிற்கும் விடை கொடுத்து இரவு வானில் அவள் பறந்து செல்லும் போதும் ஜனனியின் மனம் ஏதோ ஒரு வகையில் நிறைந்து தான் இருந்தது.

ஆனால் விபீஸ்வர் எப்போதும் போல அவள் சொன்னதை அலட்டிக்கொள்ளாமல் விட்டிருந்தான்.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!