திலக் ரயிலில் கண்மூடி சாய்ந்திருந்தான். ‘பியூட்டி… தனியா இருப்பாளா? எப்படி சமாளிப்பா? என்கிட்டே கூட, மனசு விட்டு பேச மாட்டெங்கா… என்ன பிரச்சனையா இருக்கும்?’ போன்ற கேள்விகள் மனதில் எழ, தலையைச் சிலுப்பிக் கொண்டான் திலக்.
‘என் மேலத்தென் தப்பு. நான் பியூட்டி கிட்ட பேசி, அவ மனசில் உள்ளதை தெரிஞ்சிருக்கணுமோ? ஏதோ நினைச்சி வருத்தப்படுதா… ‘ என்று அவன் மனம் மேலும் மேலும் குழம்ப தன் கண்களை இறுக மூடினான் திலக்.
அவன் கண்முன், பூங்கோதை வேகமாக ஓடி வந்ததும், தன்னை அணைத்ததும் அவன் கைகளைப் பற்றியதும், அவன் தீண்டலில் நெகிழ்ந்ததும் நினைவு வர, திலகின் முகத்தில் ஒர் புன்னகை.
அவன் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
‘பியூட்டி… என்னை தேடுவா. இந்த பிரிவு அவளை மாற்றும். எனக்கு ஓராயிரம் அழைப்புகள் அவளிடமிருந்து வரும். அவள் கடிதங்கள், காதல் பேசும்.’ என்று நம்பிக்கையோடு திலக்கின் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
அனைத்தும், ஏமாற்றமாக முடியப் போவது அறியாமல்!
வீட்டிற்குச் சென்றதும் அவர்கள் அறைக்குள் நுழைந்தாள் பூங்கோதை. மனம் வெறுமையாக இருந்தது.
‘இத்தனை நாள் மிலிட்டரி இல்லாமல், தானே இருந்தேன். இப்ப என்ன வந்தது எனக்கு திடீருனு?’ என்று கேள்வி மனதில் எழ அவள் அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள்.
தன்னை நிதானப்படுத்திக் கொண்டு பார்வதி ஆச்சியிடமும், முத்தமா ஆச்சியிடமும் வழக்கம் போல் பேசிக் கொண்டு இருவருக்கும் உதவியாக வேலைகளைச் செய்தாள் பூங்கோதை.
ரயிலில் சென்று கொண்டிருப்பதால், சிக்னல் தெளிவாக இல்லாததால் திலக்கும் பேசவில்லை.
ஊருக்கு சென்றவுடன் பேசுவதாகக் குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான் திலக்.
இரண்டு நாட்கள் கழித்து விடியற்காலையில், திலக் அழைக்க பூங்கோதை தூக்கக் கலக்கத்தோடு அலைபேசியை எடுத்தாள்.
திரையில், திலக்கின் முகத்தைப் பார்த்ததும் அவள் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
அதற்குள் திலக்கை யாரோ அழைக்க, “ரெண்டு நிமிசத்தில் கூப்பிடுதேன் பியூட்டி.” என்று கூறி அவள் அலைபேசி பேச்சைத் துண்டித்தான்.
சில நிமிடங்களில் திலக் மீண்டும் அழைக்க, திரை வழியாக அவள் முகத்தைப் பார்க்க, “பி… யூ… ட்… டி…” என்று கேலியாக அழைத்தான் திலக்.
அகப்பட்டுக் கொண்டவளாக அசடு வழிந்தாள் பூங்கோதை.
“இப்படி கொஞ்ச நேரத்தில், இவ்வுளவு அலங்காரமா? யாருக்காக பியூட்டி?” என்று அவன் வம்பிழுக்க, பூங்கோதை வெட்கத்தை மறைத்துக் கொண்டு, “ஆங்… எங்க ஆச்சியை பார்க்க கிளம்புதேன்.” என்று ராகம் பாடினாள் பூங்கோதை.
“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் திலக் சிரிக்க, “இப்படி சிரிக்கிறீக? பக்கத்துல உள்ளவக, எதுவம் நினைக்க மாட்டாகளா?” என்று பூங்கோதை கேட்க, “எல்லாருக்கும், பொஞ்சாதி, புள்ளை குட்டி எல்லாம் இருக்கும். எல்லாரும் சிரிப்பாக.” என்று அவன் வியாக்கியானம் பேச, “உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?” என்று பூங்கோதை கழுத்தை நொடித்தாள்.
“பேசாமலே சிலர், என்னை ஜெயிச்சராக பியூட்டி.” என்று அவன் ஆழமான குரலில் கூற, திரை வழியாக ஒருவரொருவரை பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் இடையே மௌனம் நிலவியது.
‘பூங்கோதை மௌனத்தை உடைக்க மாட்டாள்…’ என்றறிந்து, “யாருக்காக?” என்று பூங்கோதையின் நொடிப் பொழுது அலங்காரத்தில் நின்றான் திலக்.
“ஏன் உங்களுக்கு தெரியாதா?” என்று அவள் வெட்கப்பட, திலக் அவன் செல்ல சீண்டல்களைத் தொடர்ந்தான்.
அவன் கேலி பேச்சுகளுக்குப் பின், “பியூட்டி…” என்று தீவிரமாகப் பேச ஆரம்பித்தான் திலக்.
“நீ மேல படி பியூட்டி. நீ ஆசைப்பட்ட மாதிரி. நான் கதிரேசன் கிட்ட எல்லா ஏற்பாட்டையும் செய்ய சொல்லிட்டு வந்திருக்கேன். தேவையான பணத்தையும் கொடுத்திருக்கேன் பியூட்டி. பார்வதி ஆச்சி கிட்ட பேசிட்டேன். யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாக. நீ பத்திரமா போயிட்டு வா.” என்று திலக் கூற, மௌனமாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.
‘திருமணம் என்னும் சொல்லில் தன் ஆசை… கனவு என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படி எல்லாம் யோசிக்க எனக்கு தகுதி இருக்கிறதா? ஆனால், ஆசை நிராசை ஆகிவிடுமோ?’ என்ற பூங்கோதையின் ஏக்கத்தை அவள் கணவன் சர்வசாதாரணமாகத் தீர்த்து வைக்கச் சந்தோஷமாகத் தலை அசைத்து, “ரொம்ப….” என்று பூங்கோதை பேச ஆரம்பிக்க, திரை வழியாக கை உயர்த்தி அவள் பேச்சை நிறுத்தினான் திலக்.
“எதாவது சொல்லி, என்னை அந்நியமாக்காத பியூட்டி.” என்று அவன் கூற, “மிலிட்டரி… நான் பேச வாரதை, நீங்க பேச விடுறதே இல்லை. ” என்று பூங்கோதை கூற, “நான் என்ன பேச சொல்லுதேன்னு உனக்கு தெரியும் பியூட்டி.” என்று திலக் கூற, பூங்கோதை எதுவும் பதில் கூறவில்லை.
“பியூட்டி… நாளைக்கி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் போகிற இடத்தில் சிக்னல் இருக்காது. என் கடுதாசி வரும். ” என்று மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசி பேச்சைத் துண்டித்தான் திலக்.
மறுநாள் முதல் இரண்டு கடிதங்கள் வர ஆரம்பித்தன.
பார்வதி ஆச்சிக்கு ஒன்றும். பூங்கோதைக்கு ஒன்றும். பார்வதி ஆச்சிக்கு வந்த கடிதத்தை அவர்களுக்குப் படித்து விட்டு அதன் மூலம் அவன் நலத்தைத் தெரிந்து கொண்டாள் பூங்கோதை.
அவளுக்கு அவன் எழுதிய கடிதத்தை தன் அறைக்குள் சென்று மெல்லத் தடவினாள்.
தன்னோடு சேர்த்து அந்த கடிதத்தை அணைக்க, அவள் கண்களில் இரு துளி கண்ணீர். அதைப் பிரிக்க அவள் மனம் விழைய, அவள் அறிவு அவளை எச்சரித்தது.
‘பிரிச்சி படிச்சா பதில் போட தோணும்.’ என்று அறிவு கூற, அறிவின் கூற்றுக்கு தலை அசைத்து அந்த கடிதத்தை.பிரிக்காமல் தன் தலையணை அருகே வைத்துக் கொண்டாள் பூங்கோதை.
பார்வதி ஆச்சி வாரத்திற்கு ஒரு அலைபேசி அழைப்பு இல்லை என்றால் பதில் எழுத, அவர் கூறுவதை மட்டும் எழுதிவிட்டு கடிதத்தை அனுப்பிய வைத்தாள் பூங்கோதை.
திலக் சிக்னல் கிடைக்கும் பொழுது குடும்பத்தினருடன் பேசுவான்.
பூங்கோதை அவன் அழைப்புக்காகக் காத்திருந்தாள். ஆனால், அழைக்கவில்லை.
பூங்கோதை, அவன் கடிதத்தை ஆர்வமாக வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள்.
ஆனால், பூங்கோதை கடிதங்களைப் பிரித்தும் பார்க்கவில்லை. கடிதங்களின் குவியல் அவளுக்கு அரணாக அமைய, அவள் அந்த மெத்தையில் துயில ஆரம்பித்தாள்.
அவள் நாட்கள், கல்லூரி படிப்பு, மிலிட்டரியின் நினைவுகள், மிலிட்டரியின் கடிதம், மிலிட்டரியின் அலைபேசி அழைப்பு என் நகர ஆரம்பித்தது.
திலக்கின் பணி கடினமாகவே இருந்தது. பூங்கோதையின் உடனான பேச்சுக்கள், அவனுக்கு இன்ப அலைகளைக் கொடுத்தாலும், அவன் மனதில் ஒர் வெற்றிடம் பரவ ஆரம்பித்தது.
‘என் பிரிவு கூட, பியூட்டியை அசைத்துப் பார்க்கவில்லையா? ஒரு நாளாவது அவளா அழைக்க மாட்டாளா? ஒரு கடிதம் எழுத மாட்டாளா?’ என்ற ஏக்கத்தோடு அவன் நாட்கள் நகர ஆரம்பித்தது.
நாட்கள், மாதங்களாக மாற கதிரேசனின் திருமண நாளும் நெருங்கி வந்தது.
திலக் அலைபேசியில் அழைத்து நான்கு நாட்கள் ஆகியிருந்தது. கடிதம் வந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், இன்று கடிதமும் வரவில்லை. நாளை வரும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தாள் பூங்கோதை.
மறுநாளும் கடிதம் வரவில்லை. அவள் கல்லூரிக்குச் செல்ல மனமில்லாமல், சோர்வாக அமர்ந்திருந்தாள்.
“பூங்கோதை… அப்பப்ப நடக்கிறதுதேன்… இரண்டு நாளில் கடுதாசி வந்திரும். நீ பயப்படாத. கிளம்பு.” என்று பார்வதி ஆச்சி தைரியம் கொடுக்க, பூங்கோதை தலை அசைத்தாலும், அவள் மனம் கேட்கவில்லை.
கடிதம் வராத நாள் முதல், மணிக்கொரு நேரம் அவள் அவனுக்கு அழைத்துக் கொண்டுதான் இருந்தாள்.
ஆனால், அலைபேசி தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாக மட்டுமே செய்தி வந்து கொண்டு இருந்தது.
பூங்கோதையின் இதயம் அதன் துடிப்பை நிறுத்தி விடுமோ என்ற அவள் எண்ண, அவள் இதயமோ வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
பூங்கோதைக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவள் தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்தத் திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காகப் பயங்கரவாதிகளைக் காஷ்மீருக்குள் ஊடுருவத் திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் ஒரு சில பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சிலர் உயிருக்குப் போராடி கொண்டிருக்கினர்.” என்ற செய்தி வர, பூங்கோதையின் உலகம் தட்டாமாலை சுற்றியது.
அதில் வந்த பெயரைக் கண் இமைக்காமல் பார்த்தாள் பூங்கோதை.
வேறு ஏதேதோ பெயர் வரவும் அவள் மூச்சு சீரானது. என்ன ஒரு சுயநலம் என்றெல்லாம் அவளுக்குத் தோன்றவில்லை.
அலங்கோலமாக இருந்த அவள் தலை முடியைக் கூட சரி செய்யாமல், செருப்பை மட்டும் மாட்டிக் கொண்டு அவள் கதிரேசன் வீட்டை நோக்கி ஓடினாள்.
“அத்தான்… அத்தான்…” என்று கதறிக்கொண்டு கதிரேசன் வீட்டிற்குள் நுழைந்தவள் அவன் மீது மோதியே நின்றாள்.
“பூங்கோதை என்ன ஆச்சு?” என்று கதிரேசன் கேட்க, அவன் முன் மண்டியிட்டுக் கதறி அழுதாள் பூங்கோதை
“அத்தான்… அத்தான்…” என்று அவள் விசும்ப, “பூங்கோதை சொன்னாத்தேன் தெரியும்.” என்று அவனும் மண்டியிட்டு, அவள் தலையைக் கோத, “அத்தான் அவுக கிட்டருந்து கால் வரலை. நான் கூப்பிட்டாலும் எடுக்கலை. இரண்டு நாளா, கடுதாசி கூட வரலை அத்தான்.” என்று பூங்கோதை கதிரேசனின் தோள் சாய்ந்து விசும்பினாள்.
“பூங்கோதை… ஒன்னும் ஆகியிருக்காது. நீ சும்மா இரு.” என்று அவன் கூற, மறுப்பாக தலை அசைத்து, “அத்தான் எனக்கு பிளைட் டிக்கெட் போடுங்க அத்தான். நான் டெல்லிக்கு போகணும். அவுக வழக்கமா தங்குற இடத்துக்கு போறேன். அங்கன போனா, எனக்கு எல்லா விஷயமும் தெரிய வரும்.” என்று கூற, அவளை யோசனையாகப் பார்த்தான் கதிரேசன்.
“நான் வேணுமின்னா கூட வரட்டுமா?” என்று கதிரேசன் கேட்க, கதிரேசனின் தாயார் அவர்களை மேலும் கீழும் பார்த்தார்.
கதிரேசனின் தாயார் முன்பு போல், பூங்கோதையிடம் பகைமை பாராட்டவில்லை என்றாலும், திருமணத்திற்கு இரண்டே வாரம் இருக்கும் நிலையில் தன் மகனை அனுப்ப அவருக்கு உடன்பாடில்லை, என்பதை அவர் முகம் அப்பட்டமாகக் காட்ட, கதிரேசன் அதைக் கவனிக்கும் முன் முந்திக் கொண்டாள் பூங்கோதை.
“வேண்டாம் அத்தான். நான் மட்டும் போகணும்.” என்று அழுத்தமாக, உறுதியாகக் கூறினாள் பூங்கோதை.
பூங்கோதையின் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்க, அவளைச் சமாதானம் செய்யும் வழி தெரியாமல், “ஒரு நாள் பொறுத்துக்கோ பூங்கோதை. நான் டிக்கெட் எடுத்து தரேன்.” என்று கூற சம்மதமாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.
பூங்கோதை தளர்ந்த நடையோடு வாசல் பக்கம் திரும்ப, “பூங்கோதை, ஏதாவது குடி.” என்று கதிரேசனின் தாயார் செல்லமால் அவள் கோலம் தாங்காமல் கூற, “வேண்டாம் அத்தை…” என்று பொலிவிழந்த நிலவைப் போல் அவர்கள் வீட்டிலிருந்து மறைந்து சென்றாள் பூங்கோதை.
‘இந்த பெண்களுக்கு, எப்படி இவ்வுளவு தைரியம் வருகிறது?’ என்ற கேள்வி கதிரேசனின் மனதில் உதிக்க அதை ஒதுக்கி விட்டு, பல வேலைகளைச் செய்தான் கதிரேசன்.
வீட்டிற்குச் சென்ற பூங்கோதை தன் அறையின் கதவை அடைத்துக் கொண்டு, “ஓ….” வென்று கதறி அழுதாள்.
ஏதோ உணர்வு பெற்றவளாக, அவன் அனுப்பிய கடிதத்தைப் பிரிக்க, அவளுக்கு இதயம் அதிர்ச்சியில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றது.
வேகமாக ஒவ்வொரு கடிதமாகப் பிரிக்க, அவள் தலையில், “மடார்… மடார்…” என்று அடித்துக் கொண்டாள் பூங்கோதை.
‘என்னை பற்றி என்ன நினைத்திருப்பாக?’ என்ற கேள்வி தோன்ற, ஆறுதல் கூற ஆளின்றி தன் கைகளால் வாய் மூடி, தோள் குலுங்க அழுதாள் பூங்கோதை.
பூங்கோதையின் சோர்வான நிலையை பார்த்து, பார்வதி ஆச்சி, முத்தமா ஆச்சி இருவரும் செய்வதறியாமல் தவிக்க, கதிரேசன் கொடுத்த விமான டிக்கெட்டில் டெல்லி நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தாள் பூங்கோதை.
அவள் டெல்லி விமானத்தில் இறங்கி, விமான நிலையத்தை விட்டு வெளியே வர, யாரோ இழுப்பது போன்ற உணர்வில் அவள் பின்னே சரிய அவளை மூவர் காருக்குள் தள்ளினர்.
அவள் கண்களை இறுக மூட, பூங்கோதை நடப்பதை உணர்ந்து கத்த ஆரம்பித்தாள்.
“நீ இப்ப கத்தினா, உன் கணவரை கொன்றுவிடுவோம்.” என்று அவர்கள் மிரட்ட, ‘அப்படினா… அவுக உயிரோட தான் இருக்கிறாக…’ என்ற எண்ணத்தில் தான் கடத்தப்பட்டதை மறந்து அந்த காருக்குள் மௌனமாகப் பயணம் செய்தாள் பூங்கோதை.
‘இவர்கள் யார்? எதற்காக என்னைக் கடத்துகிறார்கள்?’ என்ற கேள்விகளோடு!
வா… அருகே வா! வரும்….
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss