IM 8

IM 8

அன்று நிச்சயதார்த்தம் ஏற்பாடாகி இருந்தது மயூரவள்ளிக்கு! மயூரி பக்கம் உறவினர்கள் என்று ஒருவருமில்லை! விஷ்ணுவும் அவன் குடும்பத்தினர் மட்டுமே அவளுக்கிருந்தவர்கள்!

அந்த வீடு அவர்களின் மற்ற பிற சொந்தங்களின் வருகையால் களை கட்டியிருந்தது! மயூரி கவனித்த வரை விவேக் முகத்தில் ஆத்மார்த்தமான சந்தோஷம் மிஸ்ஸிங்! அவன் நினைத்தபடி எல்லாம் நடக்கிறது என்றாலும் கூட…ஏனிப்படி என்பதும் அவளுக்கு புரியத் தான் செய்தது! ‘உனக்காக இதெல்லாம் இல்லை, இது என் கடமை’ என்பது போலல்லவா இருந்தது அவள் அன்று அவனிடம் சொன்னது!

அடுத்தவர் முன் அவன் சிரித்த முகமாய் நடித்தாலும் அதில் சற்றும் உண்மையில்லை! சிறிது நாட்களுக்கு முன் அவனுக்கு அவளிடம் தோன்றியிருந்த இணக்கம் இப்போது காணாமல் போயிருந்தது!

வழக்கமாய் எங்கும் நடக்கும் அதே நிகழ்வுகள் தான் அவர்களுக்கும்! மோதிரம் மாற்றிக் கொண்டனர்! பெரியவர்களிடம் ஆசி பெற்று அவன் பக்கம் அமர்ந்தவளுக்கு அது நிறைவாகவே இருந்தது! பெண் மனதில் என்ன மாற்றம் நடக்கும் என்பதை அறியத்தான் முடியுமா!

விசேஷம் நிறைவுபெற்று அனைவரும் சென்ற பின்னரே மயூரி தன் அறைக்கு திரும்பினாள்! மொட்டை மாடி கதவை மூடிவிட எண்ணி அங்குவர விவேக் நின்றிருந்தான்! ஏனோ பேசத் தோன்றியது அவளுக்கு!

“என் மேல் ஏதும் கோபமா விவேக்?”

குரல் கேட்டதற்கு திரும்பி அவள் முகத்தை பார்த்தவன் இப்போது தன் பழைய நிலைக்கு சென்றுவிட்டான்,

“இல்லையே!” என்ற பதிலுடன்!

அவளை நேராக பார்க்க பிடிக்காததை போல்

திரும்பி நின்றுக் கொண்டான்!

மயூரியை காட்டிலும் ஒன்றரை அடிகளாவது உயர்ந்திருப்பான்! இத்தனை நேரமும் அணிந்திருந்த உடையிலிருந்து மாறி இப்போது அரைக்கால் சட்டையும் , ஆகாய நீலத்தில் ஒரு ‘ரவுண்ட் நெக்’ டிஷர்ட்டில் ஜம்மென்றிருந்தான்!

‘தாலி செண்டிமெண்ட் என்றால் கூட பரவாயில்ல! ஜஸ்ட் மோதிரம் மாத்திகிட்டதுக்கே இப்படியா மிஸ்.மயூரவள்ளி! அடடா என்னவொரு ரியாக்‌ஷன்!’

விவேக் மீது இவள் பார்வை சென்ற சமயம் எல்லாம் விஷ்ணு அவளை கிண்டல் செய்து தள்ளியிருந்தது வேறு இப்போது நினைவில் வந்தது அவளுக்கு! எத்தனை நேரம் அவனை வெறித்தபடியிருந்தாளோ தெரியாது, நினைவுக்கு திரும்புகையில் அவன் இவள் புறம் முழுவதுமாய் திரும்பியிருந்தான்! அவன் பார்வையை சந்தித்தவள், எதையாவது கேட்டு வைக்க வேண்டுமே என்ற உந்துதலில்,

“உங்க ரிங் காட்டுங்க!” என்றாள்!

என்ன நினைத்தோ பதில் கேள்வி கேட்கவில்லை, கைகளை அவள் பக்கம் நீட்டினான்!

‘மயூரி’ என்ற பெயர் அதில் அழகான தமிழில் பொறிக்கப்பட்டிருந்தது! அந்த மோதிரமும் அவன் விரல்களுக்கு பாந்தமாய்…! அதனை ரசித்தபடியிருந்தவள், பிடித்திருந்த அவனின்  கையை விடவில்லை, அவனும் விலக்கிக் கொள்ளவில்லை!

சில மாதங்கள் முன்பு வரை கூட இவனுடன் வாழ முடியாது என்றிருந்த மனநிலை தற்போதில்லை! ஆனாலும் ஏதோ ஒன்று அவளை அவனிடம் முழுவதுமாய் ஒன்ற விடாமல் தடுத்தது! பழைய விஷயங்களா?

அவனை நேராக பார்த்தவள்,

“எனக்கு டைம் கொடுங்க விவேக்! ஏதோ என்னை சுற்றி எல்லாமே அவசர அவசரமாய் நடக்கிற மாதிரி உணர்றேன்!”

நிச்சயத்துக்காக அலங்கரித்தவளின் அலங்காரம் இன்னும் சொச்சமாய் மிச்சமிருந்தது! தலையை ஆட்டி அவள் பேசிய தினுசில், காதிலிருந்த ஜிமிக்கியும் அசைந்தாடியது! அவனும் அதையெல்லாம் ரசிக்கத் தொடங்கியிருந்தான்! அவள் சொன்னதற்கு ஒரு மெல்லிய புன்னகை மட்டுமே அவனிடத்தில்!

இத்தனை நாள் இல்லாத விஷ்ணுவும் இப்போது அங்கே குடிக்கொண்டுவிட வீடு களைகட்ட ஆரம்பித்திருந்தது. விஷ்ணுவுக்கு வேலை கிடைத்தாயிற்று! மயூரி தன் கல்லூரி ஹாஸ்டலில் இருந்தாலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவதை ஒரு பழக்கமாய் வைத்திருந்தாள். விவேக் தன் பணியில் கவனமாயிருந்தாலும் மயூரி அவனிடம் தன் உறவுமுறையை சீராக்க தொடங்கியிருந்தாள்!

அடிக்கடி விவேக்குடன் மெசேஜில் பேசிக் கொள்கிறாள் மயூரி! முதலில் அவளிடம் கொஞ்சம் ஒதுங்கி இருப்பது போல் தோன்றினாலும், போக போக அவள் பக்கம் அவன் சாய்ந்ததென்னவோ உண்மை! அவனுக்கு அதைத் தவிர வேறு வழியும் புலப்படவில்லை!

விவேக்கை பற்றி கொஞ்சம் கொஞ்சமாய் புரிந்து கொள்கிறாள் மயூரி! அவனுக்கு அவனை முன்னிலை படுத்துவது அவசியம் என்பதை பல முறை காட்டியிருக்கிறான்… மயூரிக்கு இப்போது ‘விவேக் வைரஸ்’ இருந்தபடியால் அவன் சொல்வது அத்தனையும் அவளுக்கு சரியாகப் பட்டன, எல்லா பெண்களையும் தாக்கும் அதே ‘நோய்’ அவளையும் விட்டு வைக்கவில்லை!

சமையல், உடை, எண்ணம் எல்லாம் அவனுக்கு ஏற்றதாய் மாறின!

வழக்கம் போல் அன்று தன் அறைக்கு வந்தவன் அவளை அங்கு எதிர்பார்க்கவில்லை!

“இங்கே என்ன செய்றே நீ!”

அவன் கேள்வியில் அர்த்தமே இல்லை என்பது போல் அவனை பார்த்தவள்,

“இன்னும் கொஞ்ச நாளில் இது என்னோட ரூமும் தானே விவேக்!”

என்றபடி அவர்களின் நிச்சயதார்ர்த்த புகைப்படத்தை அங்கே சுவற்றில் மாட்டி வைத்துக் கொண்டிருந்தாள்!

அவள் அந்த அறையை விட்டு போன வெகுநேரத்திற்கு பிறகும் கூட அவன் மயூரியை புகைப்படத்தில் ரசித்துக் கொண்டிருந்தது அவனுக்கும் நமக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்!

இப்படி நடப்பதெல்லாம் அவர்கள் இருவரை மாத்திரம் சந்தோஷமாக வைத்துக் கொள்ளவில்லை, அமுதாவையும் தான்!

மயூரி விவேக் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும் திசையை அவர்கள் அறியாது ஆவலாய் பார்த்துக் கொண்டிருந்தார். விஷ்ணுவும் அங்கிருப்பதால் அவனிடமும் நேரில் இதைபற்றியெல்லாம் சொல்லிக் கொள்ள முடிந்தது, போன் செலவு மிச்சப்படுத்தி!

ஆனால் இந்த விஷ்ணு மயூரி உறவு நிலை எவரும் எதிர்பாராத வேறு ஒரு நிலைக்கு போயிருந்தது! கொஞ்சம் சண்டை கொஞ்சம் கோபம் இப்படியாய்…

அவள் அன்று செய்திருந்த ‘வெஜ் மச்சூரியனை’ யாருக்கும் இல்லாமல் செய்துக் கொண்டிருந்தான் அவள் நண்பன்!

“அவருக்கும் கொஞ்சம் வையேன் டா விஷ்ணு, எல்லாத்தையும் நீயே சாப்பிடுறே!

சாப்பிடும் போது அவனுக்கு காது கேட்காது என்ற விஷயத்தை அவள் மறந்திருந்தாள்!

“சொல்றேனில்ல விஷ்ணு! வை டா அவருக்கு!”

வாய் வரை கொண்டு போனவன் என்ன நினைத்தானோ! மொத்தத்தையும் சாப்பிடாமல் விட்டான்!

‘இவளுக்கு இப்போதெல்லாம் அண்ணன் மட்டுமே முக்கியம்! நண்பன் எல்லாம் பழைய கதையாகி போனது!’ என்ற பல நாள் கடுப்பு அவனுக்கு! சேர்த்து வைத்திருந்ததெல்லாம் வெடிக்க கிளம்பியது!

“அம்மா வீடு மாதிரி வள்ளி நான் உனக்கு! புதுசா வந்தவனை பார்த்ததும் என்னை உதாசினப்படுத்துறே இல்ல, உனக்கு இருக்கு வள்ளி ஒரு நாள்!”

அவன் உடலசைவு அவன் கோபத்தை வெளிப்படுத்த கொஞ்சம் நடுங்கித் தான் போனாள் மயூரவள்ளி! அவன் அவளிடம் அப்படியெல்லாம் பேசியதில்லையே!

“சரி கோவப்படாதே விஷ்ணு, நீயே சாப்பிடு இந்தா…”

அவள் தந்ததை தட்டி விட்டான்!

“என்னடா இது அண்ணியா வரப்போறவ கிட்ட கொஞ்சம் கூட  மரியாதை இல்லாம! வெளியே யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க!”

“அமுதா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா!”

தோழியின் பக்கம் திரும்பியவன்,

“இந்தா வள்ளி மொத்தத்தையும் அவனுக்கே குடு!”

தன் நண்பனின் கைப்பற்றி நிறுத்தி பார்த்தாள்!

அவள் கையை முரட்டுத்தனமாய் உதறியவன், வெளியேறிய அடுத்த நொடி பைக்கை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டான்!

வள்ளிக்கு இந்த அனுபவம் வேண்டாம் என்றிருந்தது. அவளுக்கு இருவருமே முக்கியம் ஆனால் இப்போது நடந்துக் கொண்டது தன் தவறு தானோ!

விஷ்ணுவின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்!

நண்பனையும் விட்டு விட முடியவில்லை!

அவனுக்கு போன் செய்து பார்த்தாள் எடுத்தானில்லை.

“சாரி விஷ்ணு, வீட்டுக்கு வா டா உனக்கு ஆலு பராத்தா செஞ்சு தரேன்!”

பார்த்தும் பதில் இல்லை! அந்த நாள் அந்த வீட்டில் அனைவருக்கும் மெளனத்தில் கழிந்தது!

இரவு அனைவரும் படுக்கைக்கு சென்ற பின்னரே வீடு திரும்பினான் விஷ்ணு! அமுதா எதுவும் பேசாமல் அவனுக்கு உணவு எடுத்து வைக்க,

“அம்மா எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்.” என்றான்!

மகனின் பேச்சில் மெல்லிய புன்னகை அவர் முகத்தில்!

“உனக்கு எவன் டா பொண்ணு கொடுப்பான்!”

அத்தனை நேரம் அவன் இருந்துவிட்டு வந்த இடத்திலிருந்த கடல் காற்று அவன் மனநிலையை மாற்றியிருந்தது!

“ஏன் மா வொய்! எனக்கு என்ன குறை! அழகில்லையா, அறிவில்லையா!”

“இப்பெல்லாம் வேலைக்கு எத்தனை வருஷம் அனுபவம் கேட்குறாங்களோ அதே மாதிரி கல்யாணம்னு வந்துட்டா மாப்பிள்ளை எத்தனை வருஷமா வேலையில் இருக்காருன்னு கேட்குறாங்க டா!”

புதுக் தகவல்!

“அப்படியா அமுதா!” உணவில் கவனமாயிருந்தான்!

“எனக்கு தெரிஞ்சு உனக்கு இன்னும் ஒரு மூணு வருஷமாகும் டா மகனே!”

அன்னையின் பேச்சுக்கு, ‘ஆ’ வென தன் நெஞ்சில் கைவைத்து அதை சமாதானம் செய்வது போல் நடித்தான் விஷ்ணு!

“மூணு வருஷம் ஒரு முரட்டு சிங்கிளா இந்த வள்ளி & விவேக் செய்ற அட்டூழியத்தை பார்த்தா நான் என்ன மா ஆவேன்!”

அமுதா சிரித்து முடிக்க, அவன் உணவை முடித்திருந்தான்!

“என்னை மாதிரி இருக்க பழகிக்க, எதுக்கும் ஓவர் ரியக்‌ஷன் குடுக்காம!”

“ஆஹாங்! அது எப்படின்னு கொஞ்சம் சொல்லேன்!”

“வெண்டைக்காய் உன் அண்ணனுக்கு பிடிக்காது, அது அவளுக்கு தெரியும் ! நான் அதில் ஏதாவது செஞ்சா காச் மூச்சுன்னு கத்துவான்! ஆனா அவ போன வாரம் செய்து தந்ததை நல்லாயிருக்குன்னு சாப்பிடுறான் டா! எனக்கு எப்படியிருக்கும்னு யோசிச்சு பாரு!”

“ஆமா நிஜமாவே பெரிய பிரச்சனை தான் அமுதா! எனக்கு புரியுது” என்றான் அன்னையின் தோள்களை தட்டி, நக்கலாய்!

“மாமியார் மருமகள் பிரச்சனைக்கு எல்லாம் இந்த மகன்கள் தான் காரணமா இருப்பாங்களோன்னு எனக்கு இப்ப தோணுது! நீ அதைப் பத்தி என்ன நினைக்கிற விஷ்ணு!”

“உனக்கு உன் கவலை! மா என் பிரச்சனைக்கு வா மா! கல்யாணம் எப்ப செஞ்சு வைப்பே!”

“கல்யாணமெல்லாம் நீ நினைக்கிற மாதிரி ஈசியா செய்ய முடியாது ராசா! அதுக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு! அதையெல்லாம் நீ எப்போ நிறைவு செய்றியோ அப்போ தான் உனக்கு டும் டும் டும்!”

“இது வேறையா? சரி சொல்லேன் கேட்போம்”

சோபாவில் கால் நீட்டி படுத்துக் கொண்டான்!

“இந்த வீட்டு பேரில் கொஞ்சம் லோன் இருந்தது, அதை விவேக் அடைச்சிட்டான்! அதில் பாதியை நீ தந்திடணும்!

அப்புறம் உன் கல்யாண செலவுக்கு அட்வான்ஸா எங்க கிட்ட காசை தந்து வைக்கணும், அப்ப தான் பொண்ணு பார்க்கவே ஆரம்பிப்போம்!”

என்றாள் அன்னை!

“ஓஹோ! அப்போ நானே பார்த்துகிட்டா தர வேண்டாமா!”

“எப்படியா இருந்தாலும் தரணும் டா மகனே!”

“அப்புறம் வரப்போற மருமகளுக்கு நகை போடணும்ல அதுக்கும் கொஞ்சம்!”

“அடடா…முடிஞ்சதா இல்லையா?”

“கடைசியா உன் அம்மா நான் கொஞ்சம் லிஸ்ட் வச்சியிருக்கேன், நீ சம்பாதிக்க ஆரம்பிச்ச பிறகு அதையெல்லாம் வாங்கித் தரணும்னு!”

அவன் முழித்த முழியை பார்த்தவள், “இதுக்கெல்லாம் மூணு வருஷம் கம்மி தானில்ல!”

அமுதா சொன்ன லிஸ்டை கேட்டு நிஜமாகவே ஆடிப்போயிருந்தான்!

“யாரைக் கேட்டு நீ இப்படி எல்லாம் லிஸ்ட் போடுறே! உன் பேச்சை எப்பவும் கேட்குறேன்னு என் தலையில் மிளகாய் அரைக்கிறியா நீ! விவேக் கிட்ட இப்படியா கேட்ட!”

“அட ஆமா டா! இங்க பாரு இந்த தாலி செயின் வளையல் எல்லாம் அவன் காசில் வாங்கினது தான்!”

அன்னையை சந்தேகமாய் பார்த்தான்!

“நம்ப மாட்டே தானே நீ, இரு வரேன்!”

பேங்க் வரவு புத்தகத்தை எடுத்துக் காட்டினாள்!

“நேத்து கூட அனுப்பியிருக்கான் பாரு, வள்ளிக்கு கல்யாணத்துக்கு நகை வாங்கன்னு!”

 சுளையாய் ஒரு பெரிய தொகையை அனுப்பியிருந்தான் அண்ணன்! முதன் முதலாக விஷ்ணுவிற்கு தன் எதிர்காலத்தை நினைத்து பெருங்கவலை உண்டாயிற்று!?

error: Content is protected !!