Kalam 1

அந்த இன்டர்நேஷனல் விமான நிலையத்தில் முகம் முழுக்க பூரிப்பில் நின்றிருந்தான் உதய் பிரகாஷ். ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்தில், பார்ப்பவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் அழகுடன் இருந்தவன் அத்தனை கம்பீரமாக இருந்தான். என்றும் விட இன்று அவன் முகம் மலர்ச்சியில் விகசித்துக் கொண்டிருந்தது.. பின்னே தாய் நாடு திரும்ப போகிறான் என்றால் சும்மாவா??? அத்தனை மகிழ்ச்சியுடன் இருந்தான்.. அவன் அமெரிக்கா வந்து எட்டு வருடங்கள் ஓடிவிட்டது.. இடையில் ஒரு முறை கூட ஊர் பக்கம் செல்லவில்லை.. தான் நினைத்ததையெல்லாம் சாதித்த பின் தான் ஊர் செல்ல வேண்டும் என்ற அவனது எண்ணம் ஈடேறியதே ஒரு பக்கம் மகிழ்ச்சியென்றால் அங்கே அவனுக்காக காத்திருக்கும் அவனது உயிரை சந்திக்க போகும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் தாண்டவமாடியது.. இரவெல்லாம் ஒரு பொட்டு தூங்கவில்லை… எப்போது விடியும்.. எப்போது ப்ளைட் ஏறுவோம் என்பது மட்டுமே அவனது முழு எண்ணமாக இருந்தது.. இப்போதும் விமான நிலையத்தில் அவனது கால்கள் நிலைக்கொள்ளாமல் தவித்தது… 

 

அவனது ஒவ்வொரு அசைவையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் அவனது நண்பன், சீனியர், ரூம் மேட் என பல பதவிகளில் வகிக்கும் விக்கி.. இருவரும் ஒன்றாக தான் தாய்நாடு கிளம்புகிறார்கள்.. விக்கியின் சொந்த ஊர் சென்னை.. பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். அவனது ஆசைக்காக மூன்று வருடங்களாக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்தான்.. இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்பதால் அமெரிக்காவுக்கு குட் பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.. 

 

உதய் வேலை பார்க்கும் கம்பெனியில் தான் விக்கியும் வேலையில் சேர்ந்தான்.. எவ்வளவு தான் பணக்காரன் என்றாலும் தனக்கென்று தனி வீடு தேடாமல், நண்பர்களுடன் தங்குவது போன்ற வீட்டை அவன் தேட, உதய் அவனுக்கு உதவி செய்தான்.. உதயுடன் தங்கியிருந்தவன் வேறு இடத்திற்கு வேலை மாறுதல் வாங்கிக் கொண்டு சென்றுவிட்டதால் விக்கியை தன்னோடு தாராளமாக இணைத்துக் கொண்டான்… விக்கியும் அனைவரிடமும் எளிதாக ஒட்டிக் கொள்பவன் என்பதால் இருவரும் வெகு சீக்கிரமாகவே நண்பர்களாகிவிட்டனர்.. எவ்வளவு தான் விக்கி அவனோடு ஒட்டிப் பழகினாலும் உதயிடம் எப்போதுமே ஒரு ஒதுக்கம் இருக்கும்… விக்கி அதை உணர்ந்தாலும் பெரிதுபடுத்தவில்லை… அதோடு உதயின் குணம் அவனுக்கு பிடித்திருந்தது.. தவறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்த போதும் அவன் ஒரு போதும் தவறியதில்லை.. விக்கி கூட எப்போதாவது மற்ற நண்பர்களோடு பீர் அடிப்பான்.. ஆனால் உதய் அமைதியாக பார்த்திருப்பானே தவிர அதை தொட்டுக் கூட பார்க்க மாட்டான்… இப்படியான சில குணங்களே விக்கியை உதயிடம் பிடித்து நிறுத்தியது…

 

“சீனியர்….என்ன பண்றீங்க??? கனவா??? சீக்கிரம் வாங்க…” நகராமல் ஒரே இடத்தில் நின்றுக் கொண்டிருந்த விக்கியின் முன்னால் சொடக்கிட்டு அழைத்தவன், அவனது பதிலை எதிர்பாராமல் விடுவிடுவென இழுத்து சென்றான்.

 

உதயை பற்றி சிந்தித்ததில் அப்படியே நின்றுவிட்டோம் என்பது புரிய, அவனோடு இணைந்து நடந்தான் விக்கி… நூறு வார்த்தைகளுக்கு பத்து வார்த்தை பேசுபவன் இன்று தலைகால் புரியாமல் ஓடவும் விக்கிக்கு ஒன்றும் புரியவில்லை.

 

செக்கிங், இமிகிரேஷன் முதலியவற்றை முடித்தவர்கள், தங்களது இருக்கையில் சென்று அமர்ந்து பெருமூச்சு ஒன்றை விட, உதய் கண்மூடி சீட்டில் நன்றாக சாய்ந்து அமர்ந்துக் கொண்டான்.. அவன் அமர்ந்திருந்த தோரனையே அவன் எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்பதை புரிய வைக்க, விக்கி அவனை கண்களால் அளந்தவாறு இருந்தான்…

 

விமானம் கிளம்ப போகும் அறிவிப்பும் வழங்கப்பட்டுவிட, அனைவரும் தங்களது சீட் பெல்ட்களை போட்டுக் கொண்டு தாயராக இருந்தனர்…

 

விமானம் கிளம்பி சீராக சென்றுக் கொண்டிருக்க, மீண்டும் விக்கியின் பார்வை உதய்யின் மேல் படிந்தது..

 

“என்ன சீனியர்?? ஏன் அப்படி பார்க்கிறிங்க??” கேள்வி என்னவோ விக்கியிடம் இருந்தாலும் அவன் நினைவுகள் மொத்தமும் வேறெங்கோ இருந்தது…

 

“என்னடா??? நீ உதய் தானா??? தனியா சிரிக்கிற.. ஏதோ முனுமுனுக்கிற.. வயசுக்கு வந்தவன் மாதிரி வெட்கப்படுற.. என்னடா நடக்குது??? அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்க போற நானே சும்மா இருக்கேன்.. உனக்கு என்னடா???” அவ்வளவு நேரமும் உதயை கவனித்ததின் பலனாக விக்கி படபடவென்று பொரிய.. உதயின் முகத்தில் அழகாக ஒரு முறுவல் படர்ந்தது…

 

“ப்ச்ச் போங்க சீனியர்.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை.. சொந்த ஊருக்கு போற சந்தோஷம் தான்…” வாய் என்னமோ ஒரு பதிலை கூறிவிட்டாலும் அவன் கண்கள் வேறு கதை கூறியது.

 

“பார்த்தா அப்படி தெரியலையே டா… ஊருக்கு போறதுக்கும் வெட்கப்படுறதுக்கும் என்னடா தொடர்பு??? உண்மையை சொல்லு… எதாச்சும் லவ்????” கேள்வியாக நிறுத்தி, விக்கி உதயின் முகத்தை பார்க்க, உதய் மாட்டிக் கொண்ட உணர்வில் தலையை கோதினான்.. 

 

அவனின் செயலில் அது தான் என விக்கிக்கு புரிந்தாலும், ஆச்சரியமாக இருந்தது.. இதுவரை ஒரு பெண்ணையும் ஏறெடுத்து அவன் பார்த்ததாக ஞாபகம் இல்லை… அதற்கு காரணம் இப்போது புரிவது போல் இருந்தது..

 

“ஹேய் உதய்.. அப்போ அது தான்… என்னடா நீ??? உன்னோட லவ்வை பத்தி என்கிட்ட சொல்லவே இல்லை பாரு..” விக்கிக்கு அதிர்ச்சி என்பதை விட ஆச்சரியமாக தான் இருந்தது. தன்னிடம் ஏன் இவ்வளவு நாள் கூறவில்லை என்று கோபம் எழவில்லை அவனுக்கு. எவ்வளவு தான் நண்பர்கள் போல் பழகினாலும், உதய் அவனது எல்லையை தாண்டி விக்கியிடம் பேசியது இல்லை… 

 

“ம்ம் லவ் தான்.. எட்டு வருஷம் கழிச்சி அவளை பார்க்க போறேன்.. அந்த சந்தோஷம் தான் சீனியர்…” இதற்கு மேல் மறைக்க எதுவுமில்லை என்பது போல் அவன் கூறி விட, விக்கி வியப்பாக பார்த்தான்.. 

 

“எட்டு வருஷம் எப்படி டா பார்க்காமா இருக்கிற??? நானெல்லாம் மூனு வருஷத்துக்கே செத்துட்டேன்.. தினமும் அவ முகத்தை ஒரு தடவை வீடியோ சேட்டில் பார்த்தா தான் நிம்மதியா இருக்கு…..” தன் வருங்கால மனைவியை நினைக்கையிலே விக்கியின் முகம் மென்மையாக மாறியது.   

 

“ஹ்ம்ம் அவளை மனசுல சுமந்துட்டே வாழ்ந்துட்டேன் சீனியர்… எப்போவும் அவ என் பக்கத்துல இருக்கிற மாதிரியே ஃபீல் பண்றேன் சீனியர்…” தன்னவளை பற்றி கூறுகையில் அவன் குரலும் குழைய, விக்கி அவனை வியப்பாக பார்த்தான். 

 

உதய் கூறுவதில் இருந்து இருவரும் எட்டு வருடங்களாக பேசிக் கொள்வது இல்லை என்பதை யூகித்தவன்,

 

“என்னடா ஞானி மாதிரி பேசுற??? அப்போ போன்ல கூட நீ பேசுறது இல்லையா???” என நம்பமாட்டாமல் கேட்டான்.

 

“இல்லை சீனியர்.. தினமும் மனசார என் பொம்மு கிட்ட பேசுறேன்.. என்ன செஞ்சாலும் என் இதயத்துல வாழ்ற அவக்கிட்ட சொல்லிட்டு தான் செய்றேன். இவ்வளவு நாள் அவளோட நினைவுகளை சுமந்துட்டு இருந்த நான் இனி தான் நேர்ல போய் அவளை பார்த்து பேசணும்… எனக்காக அவ காத்துகிட்டு இருப்பா…” என்றவனின் கண்களில் இப்போது மெல்லிய நீர் படலம்.

 

 முரணான அவனது பதிலில், விக்கி திகைத்தான்.. இது எப்படி சாத்தியம்?? எட்டு வருடங்கள் தன்னவளை மனதில் நினைத்துக் கொண்டு ஒருவனால் வாழ்ந்து விட முடியுமா??? அவன் அண்ணன் கூட அப்படி இருந்தான் தான், ஆனால் அவர்களுக்கு திருமணம் முடிந்து விதியின் வசத்தால் பிரிந்திருந்தார்கள்… 

 

“என்னடா சொல்ற??? உன் பொம்மூ இப்போ என்னடா பண்ற??,” அவனின் கவலையான முகம் விக்கியை ஏதோ செய்ய, ஆறுதலாக அவன் கைகளை பற்றிக் கொண்டான்.

 

“தெரியலை சீனியர்…” என்றவனின் கண்களில் இப்போது ஒரு வித வலியும் வெறுமையும் மட்டுமே இருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வெளியே வர துடிக்க, கஷ்டப்பட்டு அதை அடக்கிக் கொண்டான். 

 

“உதய்???? என்னடா சொல்ற?? தெரியாதா?? ஒன் சைட் லவ்வா??”  ஒருவேளை அப்படி இருக்குமோ என விக்கி கேட்க, உதய் மறுப்பாக தலையசைத்தான்..

 

“இல்லை சீனியர்.. டபுள் சைட் தான் ஆனா சில பல பிரச்சனைகள் அதனால இங்க வர வேண்டியதா போச்சு..” அன்றைய நினைவில் பெருமூச்சு ஒன்றை விட்டவன், அந்த நாள் தன் வாழ்வில் வராமல் போயிருக்காகாதா எனும் வேண்டுதல் இருந்தது.

 

“ஹ்ம்ம் பொண்ணு சைட் பிரச்சனை பண்ணிட்டாங்களா என்ன???” தெரிந்து கொள்ளும் ஆவலில் விக்கி கேட்க, உதய் மறுக்காமல் தலையசைத்தான்..

 

“உன்னை எப்படி டா வேண்டாம்ணு சொன்னாங்க??? உன்னோட பெர்ப்பெக்ஷனுக்கு எனக்கு பொண்ணு இருந்தா கூட, உடனே கட்டி கொடுப்பேன்” உதயின் குணநலன்களை மூன்று வருடங்களாக பார்த்த தைரியத்தில் விக்கி உரைக்க, உதய் புன்னகைத்தான்.

 

அவன் சிரிப்பை புரியாமல் பார்த்தவன், “என்னடா எதுக்கு சிரிக்கிற???” என்க,

 

“இதே வார்த்தையை எட்டு வருஷத்துக்கு முன்னாடி என்னை பார்த்திருந்தா சொல்லியிருப்பிங்களான்னு நினைச்சேன்.. சிரிச்சேன்..” கண்களில் கேலி சிரிப்புடன் உதய் கூற, விக்கி அவனை நம்பாமல் பார்த்தான்..

 

“பொய் சொல்லாத டா. மூணு வருஷம் உன்னை பார்க்கிறேன்.. எல்லாத்துலையும் ஒரு பெர்பெக்ஷன். அவ்வளவு டெடிக்கேஷன்.. உன்னை எப்படி தான் வேண்டாம்னு சொல்ல மனசு வந்துச்சோ???” விக்கி அலுத்துக் கொள்ள,

 

“ஹாஹா.. சீனியர்.. இதெல்லாம் இந்த எட்டு வருஷமா தான்.. அதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு வந்து பாருங்க.. அப்புறம் சொல்லுங்க..” என்றவனின் நினைவுகள் எட்டு வருடங்களுக்கு முன்பு சென்றது..

 

விக்கியும் கதை கேட்கும் ஆவலில் சீட்டில் நன்றாக அமர்ந்துக் கொண்டு உதயின் முகம் காண, அவனும்,

 

“போகலாமா சீனியர் என்னோட வீட்டுக்கு???” ஏதோ டைம் ட்ராவல் செய்து அவனை அழைத்து போவது போல் உதய் கூறினாலும் விக்கிக்கு பிடிக்கவே செய்தது.. கதை சுவாரஸ்யமாக இருக்க போகிறது என்ற ஆர்வத்தில்,

 

“கண்டிப்பா டா.. வா கிளம்பலாம்” என்றவன் அவனது கதையில் பயணிக்க தயாரானான்..

 

“எனக்கு அப்பா கிடையாது சீனியர். என்னோட சின்ன வயசுல கடன் தொல்லைனால தூக்குல தொங்கிட்டார். அப்புறம் அம்மாவோட வழி பாட்டி வீட்டுல இருந்தோம். எல்லாரும் கடன்காரனோட பையன்னு கிண்டல் பண்ணுவாங்க. ரொம்ப கோவம் வரும். தினம் ஒரு சண்டை. இனியும் அங்க இருந்தா நான் ரவுடியா மாறிடுவேன்னு என்னை எங்க அம்மா சென்னை கூட்டிட்டு வந்துட்டாங்க. அங்க தான் எங்கம்மாவோட அண்ணன் இருந்தார். அவரும் அவரோட வீட்டு மாடியிலே எங்களை தங்க வச்சிக்க, என் அம்மா பக்கத்துல இருக்கிற பள்ளிகூடத்துல வேலை பார்த்துட்டே என்னை படிக்க வச்சாங்க.. நான் மாறிடுவேன்னு நினைச்சு தான் ஊர்ல இருந்து இங்க கூட்டிட்டு வந்தாங்க ஆனா பாருங்க நான் மாறவேயில்லை..” உதய் சிரிப்புடன் கூற, விக்கியும் உடன் சிரித்தான்…

 

மேலும் தொடர்ந்தவன், “சரி வாங்க என்னோட வீட்டை காண்பிக்கிறேன்” என்றவனின் மணக்கண்ணில் தன் வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்க காரணமாக இருந்த அந்த நாள் படமாக விரிந்தது…

 

அந்த வீட்டின் ஹாலில் நடுநாயமாக நின்றுக் கொண்டிருந்தார் அவர். பெரிய மீசையுடனும் சற்று தடித்த உடம்புடனும் நின்றிருந்தவருக்கு வயது நாற்பதுகளில் இருக்கும். அவர் நின்றுக் கொண்டிருந்ததுக்கு மறுபுறம் அவரது மனைவி காயத்ரி நடுங்கிக் கொண்டு நிற்க, அவரது பின்னால் அவர்களது மகள் மது வாயை மூடி சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். இன்னொரு புறமோ கையை பிசைந்தபடி நின்றுக் கொண்டிருந்தார் அவரின் தங்கை சரஸ்வதி.. அண்ணணுக்காக பேசவா அல்லது மகனுக்காக பேசவா என்று தடுமாறிக் கொண்டிருந்தவரின் விழிகள் மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது. 

 

அனைவரின் விழிகளும் ஒவ்வொரு பாவத்தில் அவனை பார்த்துக் கொண்டிருக்க, அவனோ அலட்சியமாக நின்றுக் கொண்டிருந்தான்.. 

 

கலரிங் செய்யப்பட்ட சிகை அவனை போலவே யாருக்கும் அடங்க மாட்டேன் என சிலுப்பிக் கொண்டு நிற்க, ஒற்றை காதில் கடுக்கண் போல் சிறிய தோடு.. வெள்ளியில் செய்யப்பட்ட செயினில் பிளேடும் அருவாளும் டாலராக, அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்க, வலது கையிலோ நடிகர் சிம்புவை போல பல நூறு சுற்றுகள் சுற்றியது போன்ற கறுப்பு கயிறு. 

 

“ஸ்டே அவே” என கொட்டை எழுத்துகளில் இருந்த வாசகம் அவனது டீ சர்ட்டில் இடம் பெற்றிருக்க, அவன் அணிந்திருந்த பேன்ட் அவனது இடுப்புக்கு கீழ் இருந்து அவன் அணிந்திருந்த உள்ளாடையின் மேல் பட்டியை காண்பித்துக் கொண்டிருந்தது. அதிலும் ஏதோ வாசகம் எழுதப்பட்டிருந்தது..

 

மொத்ததில் அல்ட்ரா மாடர்னாக இருந்தான் அவன். தன் மாமனின் கோபப் பார்வையை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் தன் முடியை ஸ்டைலாக கோதியவன், தன் மாமாவை “வாட் டியுட்” என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருக்க, அவரது பீ.பி எக்கச்சக்கத்திற்கு எகிறிக் கொண்டிருந்தது..

 

“ஸ்டாப் இட்..” விக்கியின் கத்தலில் கதை கூறிக் கொண்டிருந்த உதய் நிறுத்தி என்னவென்று பார்க்க, உதய் பேயறைந்தது போல் அவனை பார்த்தான்.. 

 

“என்னாச்சு சீனியர்??”

 

“அ..அது நீயா???” வார்த்தைகள் தடுமாற தன் சுட்டு விரலை நீட்டி விக்கி கேட்க, உதய் முகத்தில் புன்னகை மட்டுமே.

 

“ஆமா சீனியர். இட்ஸ் மீ.. தி மிஸ்டர் பெர்பெக்ட் உதய் பிரகாஷ்.” பழைய நினைவுகளில் உற்சாகமாக கூறிய உதயை வாய் பிளக்காத குறையாக பார்த்திருந்தான் விக்கி.

 

“நான் கதையை சொல்ல போறேன் சீனியர்.. இனி நோ டிஸ்டர்பென்ஸ்.” அதிர்ச்சியில் உறைந்திருந்தவனை கண்டுக் கொள்ளாமல் தன் கதையை கூறரலானான் உதய் பிரகாஷ். 

 

தன் முன்னால் அலட்சியமாக நின்றுக் கொண்டிருந்த உதய்யை எரிப்பது போல் பார்த்தார் அவனது தாய்மாமா செந்தில் நாதன். இவ்வளவு நேரம் அவனை திட்டி திட்டி அவருக்கு தான் தொண்டை கட்டியிருந்ததே தவிர, உதயிடம் எந்த மாற்றமும் இல்லை.. கண்டுக் கொள்ளாத பாவனையில் தான் நின்றிருந்தான்.

 

“உன்கிட்ட தான்டா கத்திட்டு இருக்கேன். நீ என்னடா யாருக்கு வந்த விருந்தோ அப்படிங்கற மாதிரி நிக்கிற?? உன்னை என்ன தான்டா பண்றது??? உன்னை எவ்வளவு கஷ்டப்பட்டு உன் அம்மா படிக்க வைக்கிறா?? ஆனா நீ கண்டவனோடவும் சேர்ந்துக்கிட்டு ரவுடிசம் பண்ணிட்டு இருக்கிற.. இல்லை தெரியாம தான் கேட்கிறேன்.. உனக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கா இல்லை அதை அடமானம் வச்சிட்டியா??”, செந்தில் நாதன் ருத்ர மூர்த்தியாக தாண்டவமாடிக் கொண்டிருக்க, உதய்யோ அவரது ஒவ்வொரு கேள்விக்கும் மனதில் கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

சலனமே இல்லாமல் நிற்பவனை காண காண அவருக்கு அத்தனை எரிச்சலாக வந்தது. அவனை எப்படியாவது நல்ல நிலையில் அமர்த்திட வேண்டும் என அவர் துடியாய் துடித்துக் கொண்டிருக்க, அவனோ அனைத்து பிரச்சனைகளையும் இழுத்துக் கொண்டு வந்துவிடுகிறான். இப்போதும் கல்லூரியில் கலாட்டா செய்யப்போக, அவனது படிப்பே கேள்விகுறியான நிலையில் இருக்கிறது. ஏற்கனவே ஒரு முறை கல்லூரியும் மாற்றியாயிற்று. அந்த நான்கு வருட இன்ஞ்சினியரிங் படிப்பை படிக்க வைப்பதற்குள் அவருக்கு நாக்கு தள்ளிவிடும் போல் இருந்தது. 

 

“உன் காலேஜ் சேர்மன் பையனை அடிச்சிட்டு வந்திருக்க.. அவர் இப்போ என்கிட்ட டீ.சி யை வாங்கிட்டு போங்கன்னு சொல்றாரு. நான் என்ன தான்டா பண்ணட்டும்?? இத்தோட படிப்பை இழுத்து மூடிட்டு மாடு மேய்க்க போறியா???” உதயின் கல்லூரி தாளாளர் நேற்று அவரை அழைத்து விட்டிருந்த டோஸில் அவர் உதயிடம் எகிற, அவனோ சரி தான் போறிங்களா என்ற ஒரு பாவனையில் முகத்தை திருப்பிக் கொண்டான்.

 

அவனது பாவனையில் சூடாகிய செந்தில் நாதன், “உனக்கு பொறுப்பு வருமா வராதா டா?? நானும் தலைப்பாடா அடிச்சிக்கிறேன்.. ஆனா ஒவ்வொரு தடவையும் எருமை மாட்டுக்க மேல மழை பெஞ்ச மாதிரி அப்படியே நிக்கிற.. என்னடா தலை இது?? இல்லை… நான் தெரியாம தான் கேட்கிறேன்.. கடைசியா நீ எப்போடா குளிச்ச???” கலரிங் செய்யப்பட்டிருந்த அவனது சிகையை பார்த்து செந்தில் நாதன் வெடிக்க, உதய்க்கு சுர்ரென்று கோபம் மூண்டது. 

 

“நான் தினமும் ரெண்டு முறை குளிக்கிறேன்.. அதோட இது கலரிங்.. நியூ பேஷன்.. அதெல்லாம் உங்களை மாதிரி ஓல்டிஸ்க்கு புரியாது..” என்றவன் அலட்சியமாக தன் தலையை கோதிக் கொண்டான். 

 

மதுவிற்கு தன் தந்தையையும் உதயையும் கண்டு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. 

 

“பேஷன்???” ஒரு மாதிரியாக அவனை பார்த்தவர், அவனை மேலிருந்து கீழ்வரை அளந்து விட்டு, 

 

“என்னடா பேஷன்??? வீட்டுக்கு அடிக்கிற பெயின்டை உன் தலையில கொட்டியிருக்க, பொம்பள பிள்ளை மாதிரி காது குத்தி கம்மல் போட்டிருக்க, நாயை கட்டி போடுற சங்கிலியை உன் கழுத்துல மாட்டியிருக்க.. அதெல்லாம் விட, இப்போ விழவா இல்லை அப்புறம் விழவா? அப்படின்னு கேட்கிற மாதிரி ஒரு பேன்ட்.. ஏன்டா இதெல்லாம் போட்டுட்டு எப்படி டா வெளியே போற?? பேண்ட் கழந்து விழுமோன்னு பயமா இருக்காது???” நக்கல் தெரிக்க அவர் கேட்க, மதுவால் அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியவில்லை.. வஞ்சம் இல்லாமல் அவள் சிரித்து வைக்க, உதய் அவளை முறைத்தான்..

 

“இப்போ என்ன நடந்துப்போச்சுன்னு இப்படியெல்லாம் பேசுறிங்க??” தன்மான சிங்கமாக உருமாறி அவன் கத்த துவங்க, அவனது அன்னையின் பார்வை மகனிடம் கெஞ்சியது. அதில் அவன் சத்தம் சிறிது குறைந்தாலும், நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் நின்ற விதம் அங்கிருந்த அனைவருக்குமே அடுத்து என்ன நடக்குமோ என பயத்தை கிளப்பியது. 

 

அவனது பார்வைக்கெல்லாம் அசருவேனா என்பது போல் நின்றிருந்தார் செந்தில்நாதன். 

 

“இனி நீ இங்க இருந்தா சரிபட்டு வர மாட்ட.. நாளைக்கே ஊருக்கு கிளம்பு. அங்க உன்னோட படிப்பை கண்டினியூ பண்றதுக்கு நான் எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்.” என்றவர் தன் தங்கையிடம் திரும்பி, 

 

“உன்னோட முகத்துக்காக தான் மா ரொம்ப கஷ்டப்பட்டு நம்ம ஊர் பக்கம் இருக்கிற காலேஜில் சீட் வாங்கியிருக்கேன்…. இவனை மரியாதையா அங்க போய் படிக்க சொல்லு…” என உதயை கண்டுக் கொள்ளாமல் பேசிக் கொண்டே போக, 

 

“யாரை கேட்டு முடிவு பண்ணுணிங்க??? நான் அங்க போக மாட்டேன். என்னால அங்க எல்லாம் போக முடியாது” என இடைமறித்தான் உதய்.

 

“யாரை கேட்கணும்???? காலேஜ் முதல் வருஷம் சண்டைப் போட்டுட்டு வந்த.. சரின்னு இந்த காலேஜில் சேர்த்துவிட்டேன். இப்போ இங்கேயும் சண்டை… இனி நான் தான் உனக்காக காலேஜ் கட்டணும்.” 

 

“நீங்க என்னவும் கட்டுங்க.. உங்க ஆசைக்காக நானே முதல் ஸ்டூடன்டா அங்க சேர்ந்துக்கிறேன் ஆனா ஊருக்கெல்லாம் போக மாட்டேன்” கேலியாக கூறியது போல் கூறினாலும் உதய் தீவிரமாக மறுத்தான்.

 

அவனையும், கண்களில் தவிப்புடன் நின்றிருக்கும் தன் தங்கையையும் நிதானமாக ஒரு பார்வை பார்த்தவர்,

 

“வேற என்னடா பண்றதா இருக்க??? படிப்பையும் விட்டுட்டு ஊதாரியா சுத்த போறியா?? அப்படி இருக்கிறதா இருந்தா இந்த வீட்ல உனக்கு இடம் இல்லை… நீ தாராளமா வெளியே போகலாம்..” என்க, 

 

உங்களுக்கு நான் குறைந்தவன் இல்லை என்பது போல் அனைவரின் முகத்தையும் ஒரு தரம் பார்த்தவன் வேகமாக தன் அறைக்கு சென்றான், வீட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தோடு…

 

அவன் என்ன செய்ய போகிறான் என்பதை யூகித்தவராக அவனது தாயும் அவனது பின்னோடு போக, உதயின் எதிர்காலத்தை குறித்த பயத்தில் செந்தில்நாதன் அங்கிருந்த சோபாவில் தொப்பென்று அமர்ந்தார். 

 

மது அதற்கு மேல் அங்கு நிற்காமல் தன் அறைக்கு சென்றுவிட, காயத்ரி தன் கணவனை நெருங்கினார். அவரின் அருகே அமர்ந்தவர்.

 

“சின்ன பையன் தானேங்க.. மாறிடுவான்..” 

 

“எப்போ மாறுவான் காயு???? அவனை ஒரு நல்ல நிலையில் கொண்டு வந்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும். அவனை பத்தி கவலைப்பட்டே என் தங்கச்சி ஆயுசு முடிஞ்சிரும் போல இருக்கு. அவனுக்காக தான் அவ வாழ்றா, ஆனா அதை புரிஞ்சிக்காம இப்படி இருக்கான்.” சிறுபிள்ளையாக இருந்தால் அடித்து திருத்தலாம், ஆனால் இளங்காளை போல் சிலிர்த்து கொண்டு நிற்பவனை எப்படி கையால்வது என்று அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

 என்ன தான் அவனிடம் கண்டிப்பு காட்டினாலும் அவருக்கு உதய் என்றால் தனிப்பிரியம் உண்டு. அதோடு அவருக்கு ஆண் பிள்ளை இல்லை என்பதால் அவனை தன் மகனாக தான் எண்ணுகிறார். மனதில் அவன் மேல் அதிகமாக பிரியம் இருந்தாலும் அதை அவர் அவனிடம் காட்டியது இல்லை. ஒருவேளை அன்பை காட்டியிருந்தால், இப்படி மாறியிருக்க மாட்டானோ என்பது கடவுளுக்கே வெளிச்சம்.  

 

மாடியில் தன் அறையில் தன் துணிகளை அள்ளி வேகமாக பையில் திணித்துக் கொண்டிருந்தான் உதய். இதற்கு மேல் இங்கு தங்கினால் அவமானம் என்பது போல் அவன் அனைத்தையும் அள்ளி திணிக்க, அவனது தாய் சரஸ்வதியோ அவனை சமாதனம் செய்யும் முயற்சியில் இருந்தார்.

 

“உதய் கண்ணா… என்னடா பண்ற?? மாமா உன் நல்லதுக்காக தானே சொல்றாங்க.. புரிஞ்சிக்காமா கோபப்பட்டா எப்படி டா???” கலங்கிய கண்களோடு உதயை அவர் பார்க்க, அதை கண்டுக் கொள்ளாதவன்,

 

“இவ்வளவு நேரம் அந்ந ஆள் திட்டும் போது நீ சும்மா தானே நின்னுட்டு இருந்த.. இப்போ மட்டும் என்ன அக்கறை உனக்கு.. நான் போறேன்.. நான் போன அப்புறம் நீ சந்தோஷமா இரு…” தனக்காக அவர் பரிந்து பேசவில்லை என்ற ஆத்திரத்தில் அவரிடம் வெடித்தவன், தன் பையில் துணிகளை அடுக்குவதில் மும்முரமானான். 

 

“நீ போன அப்புறம் நான் மட்டும் எப்படி டா சந்தோஷமா இருப்பேன்.. உன் படிப்பு முக்கியம் அதனால தான் நான் அமைதியா இருந்தேன்.. சேர்மன் பையனை அடிச்சா.. அவங்க சும்மா விடுவாங்களா டா???” உதயின் மேல் உள்ள தவறை அவர் சுட்டிக் காட்ட, 

 

“அடிச்சேன் அடிச்சேன்னு சொல்றிங்க ஆனா ஏன் அடிச்சேன்னு யாராச்சும் கேட்கிறிங்களா??? அந்த பொறிக்கி என் கூட படிக்கிற பொண்ணோட கையை பிடிச்சு இழுத்தான். அதை பார்த்துட்டு எப்படி சும்மா இருக்கிறது??? அதனால தான் அடிச்சேன்.. அது தப்புன்னு எனக்கு தோணலை…”  தன் பக்க நியாயத்தை கேட்காமல் அனைவரும் தன்னை குறை கூறுவதை பொறுக்க முடியாமல் உதய் எகிற, சரஸ்வதிக்கோ மகனை நினைத்து கவலையாக தான் இருந்தது. 

 

“நீ சொல்றது எல்லாம் சரி தான் உதய் ஆனா இப்போ பிரச்சனையில மாட்டிக்கிட்டது நீ மட்டும் தான். நீ காப்பாத்தினதா சொல்ற பொண்ணு கூட உனக்காக சேர்மன் கிட்ட பேச வரல..” மகன் நல்லதே செய்திருந்தாலும் அவரால் அவனை பாராட்ட முடியவில்லை. இன்று கேள்வி குறியாகி நிற்பது அவனது எதிர்காலம் ஆகிற்றே…. 

 

“அந்த பொண்ணு எனக்காக பேசியிருந்தாலும் என்னை வெளியே தான் அனுப்பியிருப்பாங்க ஏன்னா அது அவங்க காலேஜ்.” என்றவனின் கண்களில் அத்தனை வெறுப்பு. 

 

“உனக்கே புரியுது ஆனாலும் ஏன் உதய் கண்ணா இப்படி நடந்துக்கிற??? எனக்கு உன்னை விட்டா யாருடா இருக்கா??? உன்னை நல்லா படிக்க வச்சி நம்மளை பார்த்து சிரிச்ச அந்த ஊர் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டணும்னு நினைக்கிறேன் டா.. ஆனா நீ இப்படி..” என்றவர் அதற்கு மேல் பேச முடியாமல் கட்டிலில் அமர்ந்து அழ, உதய்யால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. 

 

என்ன தான் யார் சொல்வதையும் கேட்காமல் சுற்றி திரிந்தாலும் அவனால் அவன் அன்னை அழுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்.

 

“இப்போ எதுக்காக அழுற??? நான் எங்கேயும் போகல.. இங்கேயே எதாச்சும் காலேஜ்ல சேர்ந்துக்கிறேன்.” அப்போதும் அவன் ஊருக்கு செல்ல தயாராக இல்லை.

 

“முடியாது. என் மேல உண்மையாவே உனக்கு பாசம் இருந்தா… மாமா சொல்ற மாதிரி பாட்டி வீட்டுக்கு கிளம்பு. இல்லை உன் இஷ்டப்படி தான் இருப்பேன்னு சொன்ன.. நீ தாராளமா வீட்டை விட்டு வெளியே போகலாம்” என்றவர் உதய்யின் கண்களை நேராக பார்த்து, “ நீ போன அடுத்த நிமிஷம் என் உடம்புல உயிர் இருக்காது” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். 

 

அவர் கூறிய வார்த்தைகள் அவனை சரியாக தாக்கினாலும் அவனால் ஊருக்கு செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அதே சமயம் தாயின் கண்ணீரையும் அவனால் காண முடியவில்லை. 

 

“ம்மா.. எனக்கு அந்த ஊரே சுத்தமா பிடிக்காது. என்னோட அப்பாவை கொலை பண்ணின ஊர் அது.” வெறுப்பாக கத்தியவன், துணிகளை திணித்துக் கொண்டிருந்த தன் பையை தூக்கி எறிய, சரஸ்வதி நின்று திரும்பிப் பார்த்தார்.

 

முகம் முழுவதும் கோபத்தில் மின்ன, எதிரில் இருந்த சுவற்றை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த உதயை பார்த்து அவருக்கு பயமாக இருந்தது. பனிரெண்டு வருடங்களுக்கு முன்பு அவனிடம் பார்த்த அதே கோபம். இந்த கோபத்தை பார்த்து பயந்து தானே அவர் சென்னைக்கு அவனை அழைத்து வந்தது. ஆனால் இன்றளவும் அந்த கோபம் அணையாமல் கொளுந்துவிட்டு எரிவதை பார்க்கும் போது அவர் மனம் கலங்கியது. 

 

எதுவும் கூறாமல் அவன் அருகே அமர்ந்தவர், அவன் சிகையை கோத, தாயின் மடி தேடும் கன்றாக அவர் மடியில் தன் முகத்தை புதைத்துக் கொண்டான். சரஸ்வதியும் பெருமூச்சுடன் அவன் தலையை ஆறுதலாக தடவிக் கொடுத்தார். 

 

“அப்படி சொல்லாத உதய். உன் அப்பாவுக்கு சமாளிக்க தெரியலை. தற்கொலை எல்லாத்துக்கும் முடிவுன்னு நினைச்சி பண்ணிட்டார் ஆனா நம்மளை பத்தி யோசிக்கவே இல்லை. அவரால நீயும் நானும் தான் அவமானப்பட்டு நின்னோம்.. அன்னைக்கு செந்தில் அண்ணா மட்டும் இல்லாட்டி நாமளும் செத்து தான் போயிருப்போம்.” என்றவருக்கு அன்றைய நினைவுகளில் துக்கம் தொண்டையை அடைத்தது. அடக்கி வைத்திருந்த அழுகை மீண்டும் பெருக்கெடுக்க, உதய்யின் மனமும் கடந்த காலத்தை நினைத்து ஊமையாக அழுதது. 

 

‘இல்லை… என் அப்பா சமாளிக்க தெரியாதவர் இல்லை. அந்த ஊர்க்காரங்க தான் என் அப்பாவை ஏமாத்தினாங்க’ மனம் அரற்றினாலும், வெளியே அவன் எதுவும் கூறவில்லை. அமைதியாக இருந்தான். 

 

சரஸ்வதியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து உதய்யின் கன்னத்தில் தெறிக்க, அவரை நிமிர்ந்து பார்த்தவன், அவரின் கண்களில் தெரிந்த தவிப்பையும் பயத்தையும் கண்டு,

 

“சரிம்மா நான் போறேன்.. படிக்கிறேன்.. உனக்காக.. உன்னோட சந்தோஷத்துக்காக “ என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.. 

 

உதய் ஒத்துக்கொண்ட சந்தோஷத்தில் சரஸ்வதியின் அழுகை நின்றாலும், மகனின் மேல் முழுதாக நம்பிக்கை வரவில்லை.

 

“நிஜம்மா தான் சொல்றியா???” நம்பாமல் அவர் கேட்க,

 

“ம்ம்.. உனக்காக…” 

 

“நிஜம்மாவா… நான் போய் இப்போவே அண்ணாகிட்ட சொல்றேன்…” என்றவர் சந்தோஷமாக அங்கிருந்து தன் அண்ணாவை தேடி சென்றார்.

 

தாயின் முகத்தில் சந்தோஷத்தை கண்டுவிட்டாலும் உதய்யின் மனம் கொதித்துக் கொண்டு தான் இருந்தது. எப்போதும் கண்டிப்புடன் இருக்கும் அவனது மாமாவை அவனுக்கு சிறு வயதில் இருந்தே பிடிக்காது. அதிலும் தனக்கு அந்த ஊருக்கு செல்ல பிடிக்காது என தெரிந்தும் தன்னை அனுப்பி வைக்க நினைப்பவரை நினைத்து ஆத்திரமாக வந்தது. 

 

“அங்க போனா மட்டும் நான் திருந்திடுவேனா?? இரண்டே நாள்ல அங்கேயும் பிரச்சனை பண்ணிட்டு வரேன்…” அனைத்திற்கும் காரணம் அவர் தான் என மனதில் முடிந்தவரை அவரை வசை பாடியவன், விருப்பமேயின்றி ஊருக்கு செல்ல தன் மனதை தயார்படுத்த ஆரம்பித்தான்.

 

உதய் கூறியதை கூறி சரஸ்வதி மகிழ, செந்தில் நாதனுக்கும் மகிழ்ச்சியே.. மறுநாளே அவனை அனுப்புவதற்கான வேலைகளில் அவர் இறங்க, உதய் மட்டும் எதிலும் ஈடுபடாமல் இருந்தான். அவன் கண்களுக்கு தன்னை தன் தாயிடம் இருந்து பிரிக்கும் வில்லனாகவே செந்தில்நாதன் தெரிந்தார். 

 

பிடித்தமின்மையுடனும், வெறுப்புடனும் உதய்யின் பயணம் தன் வாழ்வின் அடுத்த பகுதியை நோக்கி துவங்கியது..

 

பனிப்பூக்கள் தொடரும்…….

 

error: Content is protected !!