அத்தியாயம் 2
சிவாவை அணைத்தவாறு அவன் கைகளில் படுத்திருந்த காயத்ரி மெல்ல கண்களை திறந்து ’ இது கனவோ? ’ என்பது போல் பார்க்க. அவன் அழகை மனதில் ரசித்தவாறே கைகளை நீட்டி அவன் கண்கள், முகம் , மீசை என்று தன்னை மறந்து வருட , எதோ உணர்ந்து அவள் உறைந்து போனாள் .
அப்பொழுது மெதுவாக கண்களை திறந்த அவன் முகத்திலோ அதைவிட பெரிய அதிர்ச்சி !
“அம்மா! ” அன்று அவள் அலறி விழுந்தடித்து கொண்டு கட்டிலின் ஒரு புறம் அவள் போய் பதுங்கி கொண்டாள் .
அவனும் அவள் கத்திய கத்தில் அரண்டு போய் கீழே உருண்டு விழுந்தான் ! இருவரும் மெதுவாக கட்டிலின் எதிர் எதிர் பக்கத்திலிருந்து எட்டிப் பார்த்தனர் .
எதோ உணர்ந்து இருவரும் தங்களை ஒரு முறை பார்த்து கொள்ள .. “ஐயோ!” என்று இருவருமே அலறிவிட்டனர்.
இருவரும் அரைகுறை உடையில்! போர்வையை இழுத்து போர்த்தி கொள்ள, இருவரும் ஒரே போர்வையை பற்றி இழுக்க .எனோ சிவா போர்வையை விட்டு கொடுத்தான் !
“ காயு நீ இங்க என்ன பண்றே ? எப்படி வந்தே? ” என்றான் கடுமையும் குழப்பமுமாக . கட்டிலின் மறுபுறத்தில் இருந்து எழாமல் ..
“நான் எங்க வந்தேன் ? நீங்க தானே வந்தீங்க? ” என்றாள் அவாளோ .அதே போல் எழாமல் .
சிறிது நேரம் அங்கே அப்படி ஒரு அமைதி இருவருமே ஒன்னும் பேச வில்லை! , எழவும் இல்லை !
கட்டிலின் அடி வழியே மெதுவாக தான் இருக்கும் இடத்தை ஆராய்தாள் அவள் , அவளின் மற்ற உடைகள் படுக்கை அறையின் வாயிலின் பக்கம் தரையில் இருந்தது .
“ஏந்துக்காதீங்க ப்ளீஸ்!” என்ற சொன்ன படியே மெதுவாக ஊர்ந்து சென்று அவள் உடையை எடுத்து கொண்டாள் !
அவனும் எதோ புரிந்தார் போல் அவள் திசை திரும்பாமல் இருந்தான் . ஊர்ந்து சென்ற அவளோ அங்கே வலது பக்கம் இருந்த கதவு குளியல் அறையாக தான் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து போர்வையை சுற்றிய வாறே கீழிருந்து எடுத்த உடைகளுடன் ஊர்ந்து சென்று குளியல் அறையில் புகுந்தாள் .
சட்டென்று அவனும் அவன் மீதி உடைகளை தேட, அதுவோ கட்டிலின் அருகில் தரையில் கிடைக்க..அவசரமாய் அவற்றை அணிந்து கொண்டான்.
மூச்சு வாங்க ஒன்றுமே புரியாமல் அவன் தலையை பிடித்து கொண்டு கட்டிலில் உட்கார்ந்தான் !
‘ என்ன நடந்தது ? ஏன் தலை இப்படி வலிக்கிறது ? ‘ குழப்பம் தாங்காமல் , கண்களை மூடி கொண்டான் சிவா.
மெதுவாக குளியல் அறையில் இருந்து எட்டி பார்த்தபடி மெல்ல வெளியே வந்தாள் காயத்ரி. அவளுக்கும் அதேபோல் தலையில் யாரோ பலமாக அடித்தது போல் பயங்கர தலைவலி ! அதே குழப்பம் ! ”
அவள் வந்த ஓசை கேட்டு. அவள் பக்கம் திரும்பாமல் ” காயு நான் திரும்பலமா? ” என்றான்… அவள் அனுமதி வேண்டுவதை போல்.
” ம்ம் ” என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது !
“என்ன நடந்தது எனக்கு ஒன்னுமே புரியல ! நாம எல்லாரும் பேசிண்டு இருந்தோம் வேற ஒன்னும் நினைவில் இல்ல ! நான் ஒன்னும் உன்கிட்ட தப்பா நடந்துக்கலை என்று நினைக்கிறேன் ! சரிதானே ? “என்று கேட்டான்
” ம்ம்ம் ! அப்படிதான் நெனைக்கிறேன் ! எனக்கும் எதுவும் ஞாபகம் இல்லை ” இப்போவும் அவளிடம் இருந்தும் பெரிதாய் குரல் வெளியே வரவில்லை.
ஆக மொத்தம் இருவருக்கும் நடந்த எதுவும் நினைவில் இல்லை ! நடப்பதும் புரியவில்லை .
மீண்டும் அங்கே ஆழ்த்த அமைதி ! அவளின் வயற்றிலோ கடா மூடா என்று சப்தம் எழ .. மெதுவாக எழுந்த சிவா மெல்ல அறையை விட்டு வெளியேறினான்.
எதோ பாத்திரம் உருளும் சத்தம் கேட்கவும் , பதறியபடி அவள் அறையை விட்டு வெளியே வந்தாள்.
எதிரே இருந்த ஓபன் சமையல் அறையில் சிவா கீழே விழுந்த பாத்திரத்தை எடுத்து மேடையில் வைத்து கொண்டிருந்தான்.
“என்னாச்சு? என்ன பண்ரீங்க ? ” என்றபடி அவளும் அங்கே செல்ல.
“உனக்கு பசிகர்துன்னு நெனச்சேன் . எனக்கும் பசி அதான் ஏதேனும் சாப்பிட இருக்கானு பாக்க வந்தேன் ! ” என்றான் அங்கே இருந்த பிரிட்ஜை திறந்த வாறே .
அப்போதுதான் அவள் அவர்கள் இருந்த இடத்தை கவனித்தாள்! அவர்கள் இருந்த கிச்சன் அப்படியே ஹாலுடன் இணைந்து இருந்தது .
ஹாலின் வலப்புறம் இடப்புறம் பெரிய கண்ணாடி சுவர்கள், வலப்புறம் வெளியே செல்ல வாயிற்கதவும் .இடப்புறம் பால்கனி செல்ல கதவும் இருந்தது.
எல்லாவற்றிற்கும் மேல் இரண்டு பக்கமும் பறந்து விரிந்த ரம்யமான நீல கடல் !
அவளுக்கு எதிர் புறம் இரு அறைகள் ஒன்று அவர்கள் இருந்த படுக்கை அறை . மற்றொன்று மூடி இருந்தது . வீடு மிகவும் நாகரிகமாக அலங்கரிக்க பட்டிருந்தது. ஹாலில் ஒரு L வடிவ சோஃபா ! அதன் எதிரே பெரிய 75 இன்ச் டிவி ! இரண்டிற்கும் நடுவில் கண்ணாடி டேபிள்.
கண்களை வெறித்த வாறே வலப்புறம் இருந்த கதவின் வழியே வெளியே பார்த்தவள் மெய் மறந்து போனாள் ! அவர்கள் இருந்த அந்த வீட்டை சுற்றி கடல்…கடல் மட்டுமே ! அதில் தீவு போல அவங்கள் இருந்த வீடு இருந்தது !
பதறி உள்ளே வந்தவள் “ சிவா நாம எங்க இருக்கோம் ? இது யார் வீடு ? உதயா கௌதம் அண்ணா எங்க ? நாம எப்படி ஒரே பெட்ல ? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவள் “ ட்ரெஸ்ஸும் ஏன்..” என்று வார்த்தைகளை விழுங்க
அவனோ எந்த பதிலும் சொல்லாமல் தோளை குலுக்கி பிரிட்ஜ்ஜில் இருந்த பழம் காய்கறிகளை எடுத்து மேடையில் வைத்து கொண்டு இருந்தான்.
“மொதல்ல ஏதான சாப்படலாம் ..அப்புறம் யோசிப்போம் ! ப்ளீஸ்! எனக்கு ரொம்ப பசிக்கறது மா ! “ என்றான் கெஞ்சலாய் .
‘ நான் தான் டென்ஷனா இருக்கேன் அவர் கூலாதான் இருக்க மாதிரி இருக்கு , இருந்தாலும் ‘ என்று அவள் எண்ணம் ஓட அதன் மேல் பசியில் மூளை வேலைநிறுத்தம் செய்ய, தன்னுள் எழுந்த கேள்விகளை சற்று ஆற விட்டாள் எப்படியும் அவனை பார்த்தால் ‘ அவளை கடத்தி கொண்டு வந்தவானை போலவும் இல்லை . கௌதம் அண்ணாவோட கிளோஸ் பிரென்ட் வேற எப்படியும் அவனும் தன்னை போன்றுதான் ‘ என்று தோன்ற. இவனிடம் கோவப்பட்டு ஒன்றும் ஆகப்போறதும் இல்லை என்று மனதில் நினைத்து தன்னை சமாதானம் செய்து கொண்டாள்.
“ம்ம்ம் சரி சாப்பிடலாம்! என்ன இருக்கு சொல்லுங்க” என்று கேட்டபடி அவனை நெருங்கினாள்.
ஒரு ஆப்பிளை கடித்தவாறே, அவளிடம் மற்றொன்றை நீட்டினான். அவளும் அதை தின்று கொண்டே அங்கே இருந்தவற்றை ஆராய்ந்தாள்.
சமையல் செய்ய தேவையான மளிகை , பாத்திரங்கள், காய்கறிகள் என்று அணைத்தும் அங்கே இருந்ததது !
“எனக்கு சமைக்கலாம் தெரியாது காயு, உனக்கு தெரியுமா?” என்று பாவமாய் அவன் கேட்க.
அவள் புன்னகைத்து கொண்டே ” தெரியும் இந்த பக்கம் வாங்க நான் சமைக்கிறேன் !” என்று அவள் முடிக்கும் முன்னமே
” நான் வேணும்னா காய்கறி கட் பண்ணித்தரேன்! அது எனக்கு நல்லா தெரியும்!! ” என்றான் உற்சாகமாய்.
இருவரும் மெதுவாக சமைத்த படி.
“ நீங்க உங்க வைஃப்கு கிச்சன்ல உதவி பண்ணுவீங்களா? அழகா காய் வெட்டறீங்களே ! “ என்றாள் .
‘ என்ன சொல்றே !’ என்பது முழித்த சிவாவோ ” அம்மா தாயே நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா ? எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை!.” என்று சிரித்தான் கண்ணில் குறுகுறுப்புடன் .
” ஓ சாரி ! ‘ என்று அவளும் வழிய.
“சமையல் செய்ய ஒருத்தர் இருகாங்க அவங்க இல்லைனா நானும் கௌதமும் சமையல் டியூட்டி பாப்போம் ! அப்போ அவன் சமையல் செய்வான் நான் கூட மாட ஒத்தாசை செய்வேன் ! அவ்ளோவேதான் என் சமையல் ஞானம் ! “
“கெளதம் அண்ணா கூடவா ? “ என்று அவள் குழம்ப
“நான் கெளதம் உதயா எல்லாரும் ரொம்ப நாளா ஒண்ணா இருக்கோம்! என்னை போலவே அவங்களுக்கும் பெற்றோர்களோ மற்ற உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லையே ! ஸோ எங்களுக்கு நாங்களே உறவா இருந்துக்குறோம் ! ” என்று சொல்லி கொண்டே அவன் வேலையை தொடர்ந்தான் .
இதை கேட்டவளின் கண்கள் சிறிது கலங்க…”எனக்கும் யாரும் இல்ல.! அப்பா நான் 12 வது முடிக்கும் போது போய்ட்டாங்க ! அப்புறம் நான் தனியாத்தான் இருக்கேன் ரெண்டு வருஷமா ! அப்புறம் புத்தகம், யு-டியூப் என்று பாத்து சமையல் கத்துண்டேன் ! ” என்றாள்.
கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் சிவா. மனதில் எதோ பலமான யோசனையுடன். சிறிது கலங்கிய கண்களை மறைக்க ” ரெஸ்ட்ரூம் போயிடு வரேன் ” என்று வேகமாய் நகர்ந்தான் .
சமையலும் முடிந்து இருவரும் பரிமாறி கொண்டு சோஃபாவில் அமர்ந்தனர். சிவா ஒரு வாய் சாப்பிடும் வரை காயத்ரி அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்.
அதை கவனித்த அவன் ” என்ன ? நல்லா தான் இருக்கு மா ! நீ சாப்பிடு ! ” என்று சொல்ல. அதற்காகவே காத்திருந்தது போல் அவளும் அதன் பின் மெல்ல சாப்பிட தொடங்கினாள்.
சாப்பிட்டு முடித்து இருவரும் சிறிது நேரம் இளைப்பாற அமர்ந்தனர் !
“சரி வா ! இப்போ என்ன செய்யலாம்னு யோசிப்போம்! முதலில் நம்ம செல்போன் எங்கன்னு பாப்போம் ” என்று அவன் சொல்ல இருவரும் வீடு முழுதும் தேடியும் அவர்கள் கைபேசிகள் கிடைக்கவில்லை ! அங்கே டெலிபோனும் கிடையாது . ஆகமொத்தம் வெளியுலகை தொடர்பு கொள்ள எந்த ஒரு கருவியும் அங்கு இல்லை ! .அவளின் கைப்பை மட்டுமே அங்கிருந்தது !
ஓய்ந்து அலுத்து சோஃபாவில் சாயும் நேரம்தான் எதிரே இருந்த மேஜையின் மேல் கிடந்த அந்த கடிதம் சிவாவின் கண்ணில் பட்டது !
அதன் மேல் ” அன்புள்ள சிவா , காயத்ரி ” என்று எழுதி இருந்தது … ” ஹேய் ! இங்க பாரு” என்று அதை எடுத்து படித்தவனோ ஏதும் சொல்லாமல் அந்த கடிதத்தை காயத்ரியின் கையில் கொடுத்துவிட்டு கண்மூடி நெற்றியை பிடித்து கொண்டு அமர்தான்.
அக்கடிதத்தில் ….
அன்புள்ள சிவா ! காயத்ரி ! .
குட் மார்னிங் !
என்னடா எங்க எப்படி வந்தோம்னு குழப்பமா இருக்கா?
நான் தான் உங்க இருவரையும் அங்க கொண்டு விட்டேன் !
ஏண்டா உனக்கு டான்ஸ் பண்ண மூட் இல்லையா ? நியாயமா? காயத்ரி கூடத்தான் அடுவேன்னு சொல்ல வேண்டியதுதானே ? ஏன்டா இந்த பூனையும் பாலை குடிக்குமான்னு முகத்தை வச்சுண்டு, நீங்க ரெண்டு பெரும் நேத்து ராத்திரி அந்த ஆட்டம் ஆடினீங்க ? டான்ஸ் என்ற பேர்ல அப்படி என்னடா ரொமான்ஸ் ரெண்டு பேருக்குள்ள ?
ஏண்டா சிவா , உனக்குள்ள ஒரு ரெமோ இருக்கறது தெரியாம போச்சே டா !
அங்க ஆடினது போறதுன்னு அது என்னடா போட்ல அப்படி ஒரு கொஞ்சலும் ,கிஸ்ஸும் ?
டேய் சிவா ! நீ காதல் கல்யாணம்னு எதுமே இல்லாம சாமியாரா இருக்கியே , பாவம் உன்ன தனியா விட கூடாதேன்னு , நான் லட்சுமிகிட்ட என் காதலை சொல்லாம ரெண்டு வருஷமா கஷ்ட படறேன். நீ என்னடான்னா அவளை மீட் பண்ண ஒடனே அவகிட்ட ” ஐ லவ் யு பேபி! ” ன்னு சொல்றதும் …அவ எதோ ஆஸ்கார் கொடுத்த மாதிரி ” ஹைய்! ஐ லவ் யு டூ பேபி ! ” ன்னு சொல்றதும்.
முடியலடா ! திஸ் ஐஸ் டூ மச் !
நீங்க தானே நாங்க தனியா இருக்கனும் , தனியா பேசணும்னு சொன்னீங்க ! அதான் தனியா விட்டேன் !
எனக்கு வேலை இருக்கு உங்கள நாலு நாள் கழிச்சு வந்து திரும்ப கூட்டிண்டு வரேன் . அதுவரை பொறுமையா இருங்க . ஒருத்தரை ஒருத்தர் பேசி புரிஞ்சுக்கோங்க .
எனக்கு நிம்மதி வேணும் .நானும் தனியா இருக்கணும் அதுனால அதுக்கு முன்னாடி என்னை எதிர் பார்க்காதீங்க !
இப்படிக்கு,
அப்பாவி அம்பி ! கெளதம்
‘லவ் யு சொன்னேனா? டான்ஸ் அடினேனா? என்ன சொல்றார் கெளதம் அண்ணா ? ‘ என்று காயத்ரி மண்டையை பிய்த்துகொள்ளாத குறையாய் முழிக்க
“நானா ஐ லவ் யு சொன்னேன் ! இவளை கிஸ் வேற பண்ணினேனா? ஐயோ எப்படி இது சாத்தியம் ? அப்படி நடந்தது நிஜம் என்றல் ஏன் ஒன்றுமே ஞாபகம் இல்லை ? ” என்று அவன் மனதிலும் பெரும் குழப்பம்.
” இது எதான விளையாட்டா இருக்குமா? ஒரு வேளை கெளதம் அண்ணா விளையாடுறாரா ? கொஞ்சம் யோசிச்சு பாருங்க ப்ளீஸ்” என்று கெஞ்சலாக அவள் கேட்க .
‘இருக்காது ! ‘ என்பது போல் அவன் தலை அசைத்தான்.
“கெளதம் இப்படி விளையாட மாட்டான், ஆனா அப்படி நடந்து இருந்தால் நமக்கு ஏன் ஞாபகம் இல்ல ? நாம எப்படி நேத்து லவ் ! கிஸ்! ” என்று தொடராமல் வார்த்தையை பாதியில் விழுங்கினான்.
அதற்க்கு மேல் அவளால் அவனை பார்க்க முடியவில்லை , பார்க்கும் வலிமை இல்லை .மனதில் ஏதேதோ நினைவுகள் . இதற்குமேல் எதையும் யோசிக்க மாட்டேன் என்று மனம் அடம் பிடிக்க காயத்ரி மௌனமானாள் ! அவன் நிலையம் அதுவே. மௌனம் நீள , இரவும் வந்தது .
“வேற வழி இல்ல ! அவனே வருவான் அப்படி நாலு நாள் நம்மள இங்க விடமாட்டான் கவலை படாதே . எனக்கு பசி இல்லை நான் தூங்க போறேன்! நீ பசிச்சா சாப்பிட்டு குட் நைட் “என்று அவள் பதிலுக்கு காத்திராமல் சிவா எழுந்தான்.
” எனக்கும் பசி இல்லை , சரி நான் எங்க தூங்கறது? ” என்று அவள் கேட்க .
அவனோ ” ஏன் இங்கதான் ! என் உயரத்துக்கு என்னால சோஃபால படுக்க முடியாதுமா ! நீ இங்க படு நான் உள்ள படுத்துகிறேன் ! தலைகாணி போர்வை எடுத்துக்கோ! குட் நைட் ! ” என்று அசொல்லி அறைக்கு சென்றுவிட . அவளும் வேண்டியதை எடுத்து கொண்டு சோஃபாவில் படுத்துகொண்டாள் .
நாள் முழுதும் இறுக்கமான மன நிலையில் இருந்ததால் படுத்ததும் இருவருமே உறங்கி விட்டனர் .
” ஆ….ஆ….” என்று அவள் அலறும் சப்தம் கேட்டு உறக்கம் கலைந்து ஹாலுக்கு ஓடி வந்து விளைக்கை போட்டு அவளை பார்த்தான் சிவா !
அவளோ சோஃபாவில் இல்லை ! மேஜைக்கும் சோஃபாகும் இடுக்கில் எலி குஞ்சு போல் சுருண்டு கிடந்தாள் !
சிரிப்பு தாங்காமல் “என்னமா நீ குழந்தையா உருண்டு விழற்துக்கு? “என்று கேட்டபடியே அவள் அருகே வந்தவன் அவள் முகம் கண்டவுடன் அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்தான் !
அவள் முகம் முழுவதும் வேர்வை துளிகளுடன் , கண்கள் வெறித்த படி உடல் நடுங்கி கொண்டு இருக்க “காயத்ரி இங்க பாரு, என்னாச்சு மா? எதானா கெட்ட கனவா?” என்று கேட்டபடி சுற்றுமுற்றும் பார்வை இட்டான். வெளி ஆள் யாரும் வந்த தடயம் இல்லை ! வர வாய்ப்பும் இல்லை !
” ரிலாக்ஸ் மா ! நான் தா கூட இருக்கேனே , பயப்படாதே ” என்று அவள் தலையை ஆறுதலாய் தடவி கொடுத்தான்.
அவள் மெல்ல சுதாகரித்து கொண்டு “உள்ள ரூம் ல என் ஹண்டபக்ல டைரி ! சீக்கிரம் ப்ளீஸ் ” என்று அவன் சொல்ல…அவன் ஓடி சென்று அவள் கைப்பையை கொண்டு வந்தான் !
உள்ளிருந்த டைரியையும் பேனாவையும் எடுத்து, எதோ அவரசமாய் எழுதினாள் ! ஒன்றுமே புரியாமல் அவனும் அவள் அருகிலேயே இருந்தான் .
அவள் எழுதி முடித்ததும் ..”காயு வா, உள்ள வந்தே தூங்கு ! என் மேல நம்பிக்கை இருந்தா வா ! புரியும்னு நினைக்கிறன்.. ம்ம்” என்று அவளை அழைத்தான்.
எழுந்த அவள் தள்ளாடுவதை கவனித்தவன் , மெல்ல கை தாங்கலாய் அவளை உள்ளே அழைத்து சென்றான் . அவள் கட்டிலின் ஓரமாய் படுத்து மெல்ல அழுது கொண்டே உறங்கி போனாள்.
அவனுக்கு அவளை தேற்ற வழி தெரியாமல் அவள் தூங்கும் வரை விழித்திருந்து பின்பு உறங்கினான் .
மறுநாள் காலை வெளியே வந்தவன் ஹாலில் இரு பைகள் இருப்பதை கண்டான். அதன் மேல் சிவா என்று மட்டும் இருந்தது . ஒரு பையில் காயத்ரியின் உடைகளும் மற்றொரு பையில் சிவாவின் உடைகளும் ஒரு கடிதமும் இருந்தது.
அக்கடிதத்தில்
அன்புள்ள சிவா !
என்மேல் கோவமாய் இருப்பேன்னு தெரியும் ! நான் பார்ட்டியில் சொன்னதை நெனச்சு பாரு அப்போ என்பக்க நியாயம் புரியும் ! இனியும் காலம் கடத்தாம மனம் திறந்து எல்லாத்தையும் அவ கிட்ட பேசு டா.
பார்ட்டில நான் தான் வெறும் சோடான்னு பொய் சொல்லி ** கலந்த ஜூஸ் கொடுத்தேன் ! இல்லையென்றால் நீ இதற்க்கு சம்மதிக்க மாட்டே.. சாரி டா !
நான் நடந்ததாக நேத்து லெட்டர்ல சொன்ன எல்லாம் நிஜம் ! நீங்கள் ரெண்டு பேரும் காதலை சொல்லி கொண்டதும் உண்மை ! இனியாவது மனதை மறைக்காமல் நீ அவ கிட்ட பழகுவேன்னு நம்பறேன் !
நான் உங்கள் அருகில் தான் இருக்கிறேன் ! ஏதாவது அவசரம் ஆபத்துன்னா என்ன செய்யணும்னு உனக்கு தெரியும் !
ரொம்ப ரொம்ப ஸாரி !
இப்படிக்கு ,
ரொம்ப அப்பாவியான கெளதம்
” டேய் நீ மட்டும் என் கையில் சிக்கினே, மவனே தொலைஞ்சே ! ” என்று பல்லை கடித்துக்கொண்டே அந்த கடிதத்தை கிழித்து குப்பையில் போட்டான் சிவா.
சிறிது நேரம் கழித்து காயத்ரி ஹாலுக்கு வந்தாள் .
அவளை கண்டதும் ” காபி போடவா ? “என்று கிச்சன் புகுந்தான் . ” இல்லை நான் காபி குடிக்கறது இல்ல . பால் அல்லது சாக்லேட் மில்க் மிக்ஸ் இருந்தா அது. நானே பாக்கறேனே ” என்று அவள் கிட்சேனுக்கு விரய.
” அப்பாடா அப்போ சரி. எனக்கு காபி போட தெரியாது , எனக்கு காபி குடிக்கும் பழக்கம் இல்ல உன்னைபோலவே சாக்லேட் மிக்ஸ் தான் , வெறும் பால்கூட அவ்வளவாய் பிடிக்காது ” என்று சொல்ல .
இருவருமாக ஹாட் சாக்லேட் கலந்து கொண்டு வீட்டின் வெளியே இருந்த வராண்டாவிற்கு சென்றனர். அங்கே நின்றபடி குடித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தனர்.
எத்தனை அழகு அந்த கடல் ! சின்ன சின்னதாய் அலைகள் அடித்துக் கொண்டும் அங்காங்கே சீகல் பறவைகள் கடலில் அமர்வதும் பறப்பதுமாய் இருக்க. சற்று தொலைவில் இதே போல் வேறொரு வீடு இருப்பது தெரிந்தது ஆனால் அது கூப்பிடும் தொலைவில் இல்லை .
அனைத்தையும் ரசித்தபடி அவனை அவள் பார்த்தபோது. சிவா குனிந்தவாறு, கைப்பிடி கம்பியில் ஒருகை முட்டியை அதில் ஊன்றி மற்றொரு கையால் கப்பை பிடித்து குடித்து கொண்டு இருந்தான் .
‘ ப்பா எவ்ளோ அழகா இருக்கான், பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே ! .’ என்று ஒரு புறம் யோசிக்க ‘ அய்யோ பேரும் டீ சைட் அடிச்சது ‘ என்று அவன் தன்னை சுத்திகரிக்கும் முன்பே.
சிவா சடார் என்று அவளை பார்த்து புன்முறுவல் செய்தபடி ” என்ன ஒரே பலமான யோசனை ? ” என்று கேட்க .
அவனுடைய நீல நிற கண்களை அவள் பார்ட்டியின் மங்கல் ஒளியிலும் , முந்தைய நாள் பதட்டத்திலும் அவள் கவத்திருக்க வில்லை.
‘ நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ! உங்க கண்ணுவேற செம்மயா ப்ளூவா இருக்கா அதன் சைட் அடிக்கிறேன் ! வேற ஒன்னும் இல்லை ‘ என்று உளறி விட்டு உதட்டை கடித்து கொண்டாள் .
அவளையே வெறித்து பார்த்தவன் ” ரொம்பத்தான் தெய்ரியம் உனக்கு ! ” என்று சொல்லி அவன் ஒரு புருவத்தை உயர்த்தியவன், மீண்டும் வேடிக்கை பார்ப்பதை தொடர்ந்தான்.
” அடக்கடவுளே ! இவன் எப்போ கேள்வி கேட்டாலும் நான் ஏன் உண்மைய உளறுறேன் ? ஐயோ நான் மௌன விரதம் தான் இருக்கணும் போல இருக்கு ! ” என்று எண்ணிக்கொண்டு காயத்ரி வீட்டினுள் ஓடிவிட்டாள்.
அன்றும் அவர்கள் இருவரும் சேர்ந்தே சமைத்தனர்.மதிய உணவிற்கு பின் மெதுவாக அவளிடம் இரவு நடந்ததை பற்றி கேட்க ஆரம்பித்தான் சிவா .
” என்ன ஆச்சு ராத்திரி ? என்ன கனவு கண்டே? அது என்ன டைரி ? நீயே ஒரு மாதிரி இருந்தே அதான் உடனே கேட்கலை !”
அவள் ஏதும் பேசாமல் மௌனமாய் இருக்கவே ” சரி சொல்ல விருப்பம் இல்லைனா விடு ” என்று அவன் சொல்ல .
“அப்படி இல்லை ! நான் சொன்ன நீங்க சிரிப்பீங்களோ இல்லை என்னை லூசுன்னு நினைப்பீங்களோன்னு யோசனை அதான் ” என்று அவள் தயங்க.
“அதெல்லாம் மாட்டேன் மா. உண்மையா சொன்ன நான் நேத்து ராத்திரி பயந்துட்டேன். பிரெண்டுன்னு நெனச்சு சொல்ல முடியும்னா சொல்லு ” என்று நிறுத்தினான்
” எனக்கு சில சமயம் வரும் கனவுகள் பெரும்பாலும் அப்படியே நடக்கும் ! அதுனால எழுந்த உடனே டைரில அத எழுதி வச்சுடுவேன் . அது என் ட்ரீம் டைரி . ராத்திரி மட்டும் இல்லை சில சமயம் பகலில் கூட இந்த கனவுகள் வரும் . அதுனாலே அந்த டைரியை பேக்லேயே வச்சுருப்பேன் ! உதயாக்கும் , லட்சுமிக்கும் மட்டும் இது பற்றி தெரியும் ! வேற யார் கிட்டயும் நான் இது பற்றி சொன்னது இல்ல ! ” என்று சொல்லி மௌனமானாள்.
உதயா பள்ளியில் இருந்தே காயத்ரியுடன் ஒன்றாக படிக்கிறாள். முதல் முதலாய் அவளுக்கு இப்படி கனவுகள் வர துவங்கும் பொழுதே அதை அவள் உதயாவிடம் சொல்லி இருக்கிறாள் !
முதலில் பயந்த உதயா பின்பு , காயத்ரியை அவள் கனவுகளை ஒரு டைரியில் குறித்து வைக்கும் படி அறிவுறித்தினாள். அப்படிதான் அவளுக்கு இந்த பழக்கம் வந்தது !
பின்பு கல்லூரியில் நெருங்கிய தோழியாய் ஆன லட்சுமியிடம், முதல் முறை அவள் கனவுகள் பற்றி சொன்ன பொழுது கூட அவள் ” என்னடி நைட் எதான இங்கிலிஷ் படம் பார்த்தியா? அதே நினைப்புல தூங்கிட்டியா?” என்று கிண்டல்தான் செயதாள் .
“நேத்து என்ன கனவு வந்தது ? ” என்று மீண்டும் கேட்ட சிவா அவள் பதிலுக்காக ஆர்வமாய் காத்திருந்தான் .