vav3

vav3

வா… அருகே வா! –  3

புதை குழி திலக்கை மெல்ல மெல்ல உள்ளே இழுக்க, மரவேரில் அவன் பிடிமானம் இறுகியது. இருப்பினும், அவன் கண்கள் நம்பிக்கையை இழக்க, தட தடவென்ற காலடி சத்தம் அவனை நெருங்கச் செவிகள் அவனுக்கு நம்பிக்கை கொடுக்க, தன் பிடிமானத்தை இறுக்கி, தன் வலிகளைத் துச்சம் எனக் கருதி, “மெய்ன் யஹா ஹுன்…”, நான் இங்கு இருக்கிறேன், என்று ஹிந்தியில் சத்தம் எழுப்பினான் திலக்.

திலக் காப்பாற்றப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். கைகளில் ஏற்பட்ட காயத்தால் வந்த ரத்தம், கால்களில் அதீத வலி என்ற நிலையில் திலக் சுயநினைவை இழந்திருந்தான்.

மருத்துவமனையில், சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் சிறிது காலம் ஓய்வு தேவை எனக் கூற, திலக் தன் கிராமத்தை நோக்கிப் பயணித்தான்.

காலையில், கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்தாள்  பூங்கோதை. அவள் தாவணி, சுடிதாராக மாறி இருந்தது. கால்கள் தட், தட் எனச் சத்தம் எழுப்ப, வீட்டின் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள் பூங்கோதை.

“ஏட்டி… உன் மனசுக்கு என்ன கீனம் வந்துச்சு. காலைலேருந்து நானும் பாக்கேன். இங்கன நிக்க… அங்கன நிக்க… ஒரு சோலியும் பாக்கல. நான் உன்னை வையக்கூடாதுன்னு இருக்கேன் பாத்துக்கோ.” என்று முத்தம்மா ஆச்சி கடுப்பாகக் கூறினார்.

“ஏன் சும்மா இருக்க? வையென்…  நீங்க கொஞ்சமாவது அறிவோடு நடந்துகிறீகளா?” என்று அவரை விட அதீத கடுப்போடு கேட்டாள் பூங்கோதை.

“ஆமா டீ மா… நான் ஒரு கோட்டிக்காரி. உன்னைப் பத்தி யோசிக்கறேன்ல… நான் கோட்டிக்காரி தான்.” என்று முத்தமா ஆச்சி தலையில் அடிக்க, “பூங்கோதை… பூங்கோதை…” என்று இடது பக்கத்து வீட்டில் உள்ள பெண்ணின் சத்தம் கேட்டது.

‘வரேன் கயல்…” என்று கூறி மீண்டும் தன் வாக்குவாதத்தை ஆச்சியிடம் தொடர்ந்தாள் பூங்கோதை.

“ஆச்சி… நல்ல கவனிச்சுக்கோ. கதிரேசன் அத்தான்தேன் எனக்கு மாப்பிளை. ஆனால், அது நான் என் படிப்பு முடிஞ்ச புறவுதேன்.  அதுக்கு முன்னாடி என் கல்யாண பேச்சை எடுத்த,  அத்தானை தொந்திரவு பண்ண, நானே உன் சங்கை நெரிச்சிருவேன்.” என்று பூங்கோதை ஆச்சியை மிரட்ட, “யார் சங்கை, யார் நெறிக்க? எடு வாரியல…” என்று முத்தமா ஆச்சி சேலையை சொருவிக் கொண்டு உள்ளே செல்ல, பூங்கோதை தன் கல்லூரி பையோடு வெளியே ஓடி வந்தாள்.

வந்த வேகத்தில் வாசலில் ஆஜானுபாகுவானாய் நின்று கொண்டிருந்தவன் மேல் மோதி பூங்கோதை விழ எத்தனிக்க, அவளை அவன் தாங்கி பிடித்தான்.

ஒரு ஆணின் தீண்டலில், சரேலென்று விலகி நின்றாள் பூங்கோதை.

“மிலிட்டரி… இங்க நிக்கற? இரண்டு நாளைக்கி முன்னாடித்தேன், உன்னை தீவிரவாதி கடத்திட்டாங்கன்னு கிழவி அழுத்துச்சு. உன்னை கடத்தி ஒரு பிரோஜனனமும் இல்லைன்னு விட்டுடாங்கள்ளா? இல்லை உன்னை கடத்துற அளவுக்கு நீ தகுதியே இல்லைன்னு கடத்தவே இல்லையா?” என்று பாவமாகக் கேட்டாள் பூங்கோதை.

“நீ பேசுற பேச்சுக்கு…” என்று திலக் அவளை மேலும், கீழும் பார்க்க… “நானும் பார்ப்பேன்…” என்று கூறிக்கொண்டே, அவனை மேல் இருந்து கீழ்வரை  பூங்கோதை பார்க்க… “ஐயையோ… கால் உடைஞ்சிருச்சா? இனி மிலிட்டரி இங்கயே தான் இருப்பியா?உன்னை ராணுவத்தில் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்களா?” என்று பதட்டத்தோடு கேட்டாள் பூங்கோதை.

“பூங்கோதை நமக்கு நேரமாச்சு டீ.” என்று கயலின் சத்தம் ஓங்கி ஒலிக்க, பூங்கோதை அவனை முந்திக் கொண்டு செல்ல எத்தனிக்க, அவள் வெளியே செல்ல வழி விடாமல் வழி மறித்து நின்றான் திலக்.

பூங்கோதை அவனை அண்ணாந்து பார்க்க, “என் சேக்காளிக்காக உன்னை விடுதேன். இல்லைனா, நீ பேசின பேச்சுக்கு உன்னை…” என்று கனல் கக்கும் பார்வையோடு அவளைப் பார்த்தான் திலக்.

“உன்னால, என்னை என்ன பண்ண முடியும்?” என்று பூங்கோதை மிடுக்காக எங்கோ பார்த்தபடி கேட்க, “என்ன வேணாலும்?” என்று குரலில் மையலோடு, கண்களில் காதல் வழிய திலக் கூற, அந்த குரலில் உள்ள மாறுபாட்டில் படக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் பூங்கோதை.

திலகின் முகம் மீண்டும், சினத்தை வெளிப்படுத்த, “என்ன வேணாலும் பண்ணுவானா? பண்ணுவான்… பண்ணுவான். மிலிட்டரி துப்பாக்கி எடுத்தா, நான் அரிவாள் எடுப்பேன்.” என்று முணுமுணுத்து கழுத்தை நொடித்து விட்டுச் சென்றாள் பூங்கோதை.

“பார்த்து….” என்று பின்பக்கமாக நின்று, திலக் புன்னகைக்க, பூங்கோதை விடுவிடுவென்று நடந்து சென்றாள்.

“என்னை பார்த்து முறைகரான் கயல். இவனை அத்தான் கிட்ட சொல்லி, ரெண்டு கண்ணையும் நோண்ட சொல்லணும்.” என்று சிடுசிடுத்தபடி நடக்க, அவன் புன்னகையைக் கண்ட கயல், “ஏய்… அவன் முகத்தில் ஒரே சிரிப்பாணி டீ பூங்கோதை.” என்று கூற, “என்ன உளறுற?” என்று பூங்கோதை அவனை திரும்பிப் பார்க்க, அங்கு அவன் முத்தம்மா ஆச்சியோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தான்.

பூங்கோதை வேகமாக நடக்க, ‘நான் உளறுகிறானே?’ என்ற எண்ணத்தோடு கயல் திலக்கை திரும்பிப் பார்க்க, அவன் கண்கள் இவர்களைத் தழுவ, “பூங்கோதை… அவன் நம்மளை பாக்கான்.” என்று பூங்கோதையின் செவிகளில் முணுமுணுத்தாள் கயல்.

“உன்னை பார்கிறானோ? இருக்கட்டும். இருக்கட்டும்… நாம மாங்காய் பறிக்கிற மாதிரி, அவன் மண்டையை உடைத்தால் எல்லாம் சரியாகிரும்.” என்று பூங்கோதை கயலைச் சமாதான படுத்த, ‘அவன் என்னைப் பார்க்கிறானா? இல்லை இவளை பார்க்கிறானா? சர்வ நிச்சயம் உதை வாங்க  போறான்.’ என்று எண்ணியபடி, கயல் நடக்க, பூங்கோதை எதோ சலசலத்தபடி வேகமாக நடந்தாள்.

கதிரேசன் புன்னகையோடு, திலக்கின் வீட்டிற்குள் நுழைய, “கதிரேசா! உஞ் சேக்காளி வந்தாதென், உன் முகரையில் சிரிப்பாணி பொங்குது.” என்று பார்வதி ஆச்சி கேலி பேச, “ஆச்சி… என்னை சொல்லுதீக? நீங்களும் இப்பத்தேன் கலகலன்னு பேசுதீக…” என்று ஆச்சியை கேலி பேசியபடி திலக்கை நோக்கிச் சென்றான் கதிரேசன்.

இருவரும்  ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி தங்கள் முகமன்களை முடித்துக் கொண்டனர்.

திலக், தான் நன்றாக இருப்பதாகவே உறுதி செய்ய, கால்களில் சிறிய கட்டோடு இருந்தாலும் தன் நண்பனோடு நடக்க ஆரம்பித்தான் திலக்.

இருவரும் பொது விஷயம் பேசிக்கொண்டே செல்ல, “உனக்கு எப்ப கல்யாணம்? அம்மா சொல்லிட்டே இருப்பாகளே? என்ன முடிவு பண்ணிருக்காக?” என்று இனியும் தாமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தோடு கேட்டான் திலக்.

சற்று எதிர்பாராத இந்த கேள்வியில் கதிரேசன் திகைத்தாலும், “என்ன திடீருனு கேட்க?” என்று கதிரேசன் கேட்க சற்று தடுமாறினான் திலக்.

“இல்லை… பூங்கோதையை அம்மாவுக்கு பிடிக்காது. ஆனால் அந்த பொண்ணு எப்ப பாரு விவரமில்லாம உன் பெயரரையே சொல்லிக்கிட்டு சுத்துது.” என்று திலக் தட்டுத்தடுமாறி கூற, தன் நண்பன் கூறாவிட்டாலும், அவன் மனதை அறிந்த கதிரேசனின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.

‘இவன் என்னிடம் நேரடியாக கூறமாட்டானா?’ என்ற எண்ணம் தோன்ற, ‘கூற வைத்து விட வேண்டும்.’ என்ற வைராக்கியத்தோடு, “அம்மாவுக்கு பிடிக்கலைன்னா என்ன?’ என்று நக்கலான கேள்வியோடு நிறுத்தினான் கதிரேசன்.

திலக் கதிரேசனை யோசனையாகப் பார்க்க,  ‘என்ன?’ என்று கதிரேசன் அவன் புருவத்தை உயர்த்த, தன்னை சுதாரித்துக் கொண்டு, “அப்ப, அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணந்தேன்.” என்று நண்பனின் தோள்களில் கை போட்டு சகஜமாகக் கேட்டான் திலக்.

“பூங்கோதை படிப்பு முடியனும். நம்ம கையில் என்ன இருக்கு?” என்று கதிரேசன் பிடி கொடுக்காமல் பேச, திலக் யோசனையோடு கேட்டுக் கொண்டான்.

‘திலக் என்ன யோசிக்குறான்? பார்வதி ஆச்சி என்ன சொல்லுவாக? நம்ம முத்தமா ஆச்சி என் தலையை சீவிருவாக. முதலில் பூங்கோதை! அத்தான்… அத்தான்னு என்னை சுத்தி வாரா.’ என்ற எண்ணம் மேலோங்க, ‘இப்ப என்ன அவசரம்? பாத்துக்கலாம்.’ என்று கதிரேசன் தன்னை தானே சமாதானம் செய்து கொண்டான்.

‘என் எண்ணத்தை கதிரேசன், கணித்திருப்பானோ? கணித்திருந்தாலும் நல்லது தான். இல்லையென்றாலும், அவன் விருப்பப்படி நடக்கட்டும். ராணுவக்காரனுக்கு எதுக்கு கல்யாணம்?’ என்ற எண்ணத்தோடு அமைதி காத்தான் திலக்.

விதி, பல ரூபங்களில் இவர்களைத் துரத்தப் போவது தெரியாமல் நண்பர்கள் மேலும் பல இடங்களைச் சுற்றி விட்டு மாலை நேரத்தில் வயல் வரப்பின் ஓரமாக நடந்தனர்.

கயல், பூங்கோதை இருவரும் கல்லூரி முடிந்து, வீட்டை நோக்கி நடந்து வந்தனர்.

அப்பொழுது எதிரே, ஒரு இளைஞன் கடந்து செல்ல, “கயல்…” என்று பூங்கோதை அவள் காதில் கிசுகிசுக்க, “என்ன… என் அத்தான்னு சொல்ல போறியா? சொல்லிராத. அத்தான்னா… உனக்கு இருக்காக பாரு. அந்த மாதிரி இருக்கணும். எனக்கு இருக்குதே…” என்று தலையில் அடித்துக் கொண்டு கயல் பெருமூச்சோடு கூற, “கயல்… இவ்வுளவு பெருமூச்சு ஆகாதும்மா. உங்க வீடு ஜன்னல் வழியா, அது எங்க வீட்டுக்கே வருது.” என்று தன் தோழியைச் செல்லமாக மிரட்டினாலும், பூங்கோதையின் குரலில் பெருமை வழிந்து ஓடியது.

“உங்க அத்தான் பெருமையெல்லாம் சரிதேன். ஆனால், உங்க அத்தை உன்னை வாழ விடுமா?” என்று கயல் தன் சந்தேகத்தைக் கேட்க, பூங்கோதை ஒரு நொடி மௌனித்தாள்.

“அத்தான் பாத்துப்பாக. அத்தான் என் நல்லதுக்காக எதுவேணாலும் செய்வாக.” என்று ஆழமான குரலில் கூறினாள் பூங்கோதை. தன் தோழியின் வாழ்க்கை திருமணத்திற்கு பின்னாவது ஜொலிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொண்டாள் கயல்.

இருவரும் பேசிக்கொண்டே வயல் பரப்பைக் கடக்க, அப்பொழுது திலக் புகை பிடித்தபடி கதிரோடு பேசிக்கொண்டிருக்க, அதை பார்த்த பூங்கோதை வேகமாக அவர்கள் இருவர் அருகேவும் செல்ல, ‘ஐயோ… திலக் வேற இருக்கானே? இவ என்ன ஏழரையோ கூட்டுவாளோ? அவன் பார்வை வேற இவளை பார்த்தா சரியில்லையே?’ என்ற பதட்டகோடு அவள் பின்னோடு ஓடினாள் கயல்.

திலக்கிடமிருந்து சிகரெட்டை பிடுங்கி அதை கீழே போட்டு மிதித்தாள் பூங்கோதை. “மிலிட்டரி! நீ சிகரட் பிடி. உன் குடல் வெந்து நாசமா போகட்டும். அதை பத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை. ஆனால், என்  அத்தான் முன்னாடி சிகரெட் பிடிக்காத. என் அத்தானுக்கு கேன்சர் வந்திரும்.” என்று பூங்கோதை திலக்கை மிரட்ட, “பூங்கோதை…” என்று கண்டிப்போடு அழைத்தான் கதிரேசன்.

“கதிரேசா விடு. அவுக சொல்றதிலயும் ஒரு நியாயம் இருக்கில்ல.” என்று திலக் பூங்கோதைக்காக வக்காலத்து வாங்க, “மிலிட்டரி… என் அத்தான் என்னை வைதாக! உனக்கு எங்கன வலிக்கி?” என்று திலக்கிடம் சண்டைக்கு போனாள் பூங்கோதை.

பூங்கோதையின் கேள்வியில் திலக் நமுட்டு சிரிப்போடு நிற்க,  ‘இந்த திலக் விவகாரமான ஆள் ஆச்சே! இவன் கிட்ட இவ ஏன் வம்புக்கு போறா?’ என்று கயல் பதறினாள்.

“பூங்கோதை வீட்டுக்கு போ.” என்று கதிரேசன் பூங்கோதையிடம் கண்டிப்பாகக் கூற, “அத்தான். இவுக உங்க பக்கத்தில் நின்னு சிகரெட் பிடிச்சா, நீங்க தள்ளி நில்லுங்க.” என்று கதிரேசனுக்கு உரிமையோடு கட்டளையிட, திலக் பதிலாக கூறிய வார்த்தையில் பூங்கோதை, கயல் இருவரின் இதயமும் ஒரு நொடி நின்றது.

வா… அருகே வா!  வரும்….

error: Content is protected !!