KS 13

KS 13

காதல் சன்யாசி 13

விடியற்காலை பொழுதில் வெண்பனி வேய்த சாலையில், தமிழ்ச்செல்வி தன் வீட்டை நோக்கி நடந்து சென்றாள்.

அங்கிருந்தவர்களின் விசித்திர பார்வையில் இருந்து தப்பித்து, வீட்டுக்குள் வந்து கதவை தாழிட்டு கொண்டவளுக்கு,
திக்கு தெரியாத நடு காட்டில் மாட்டிக் கொண்டது போன்ற திக்கென்ற உணர்வு நெஞ்சில் மையமிட்டிருந்தது.

குளியலறைக்கு வந்தவள் சில்லென்ற தண்ணீரை கையில் பிடித்து தன் முகத்தில் நான்கைந்து முறை வீசினாள். பிடித்தது போகட்டும் என்று.

கண்ணாடியில் அவள் முகம் உயிர்ப்பற்று பிரதிபலித்தது.

அவள் கழுத்தில் ஒளிர்ந்த மஞ்சள் கயிறு பிம்பமாய் தெரிய, அவள் முகம் கடுமையாக, வெறுப்புடன் அதை கழற்றி எறிந்து விட அவள் கைகள் பரபரத்தன.

அழைப்பு மணியோசை தொடர்ந்து ஒலித்து அவளை கலைக்க, முகத்தை துடைத்து கொண்டு வந்து கதவை திறந்தாள்.

அந்த வீட்டின் சொந்தகார முதியவர் தான் தயக்கமாக உள்ளே வந்தார்.

“உன் சொந்த விசயத்தை பத்தி நான் பேச விரும்பல மா. அது எனக்கு அவசியமில்ல.”

“நிவி பாப்பா சொல்லுச்சுன்னு தான். உன் பாதுகாப்புக்காக இங்க தங்க அனுமதிச்சேன். இப்ப உடனே வீட்டை காலி செய்யறது உனக்கு நல்லது மா” என்று தன்மையாக உத்தரவிட்டார்.

அவரிடம் நியாயம் பேசி பயனில்லை என்று தோன்றியது இவளுக்கு. எனவே, “சரிங்க ஐயா, நான் போயிறேன்” என்று சொல்ல,அவரும் தலையசைத்து விட்டு சென்றார்.

மறுபடி கதவை சாற்றியவளுக்கு இனி என்ன செய்வதென்ற யோசனை. எதுவுமே புரியவில்லை. அவளின் அரைகுறை பாதையும் பயணமும் மொத்தமாய் முடிந்து போனதாக உணர்ந்தாள்.

மீண்டும் அழைப்பு மணியோசை விடாமல் கேட்க, இப்போது சலிப்பாக கதவை திறந்தவள், “அதான், உங்க வீட்டை காலி பண்றேன்னு சொல்லிட்டேன் இல்ல. வேற என்ன?” என்று படபடத்தவள், அங்கே ராகுலை பார்த்து, வெறுப்புடன் முகத்தை திருப்பி கொண்டாள்.

“தமிழ்…” அவன் பேச வாயெடுக்க,

“உன்கூட பேச எதுவுமில்ல. மரியாதையா இங்கிருந்து போயிடு” என்று வேகமாக படபடக்க,
அந்த இளங்காலை பொழுதின் வழக்கமான புத்துணர்வில் அவன் சற்று மன இறுக்கத்தில் இருந்து தெளிந்து இருந்தான். எனவே பொறுமையாகவே அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“நான் என்ன சொல்ல வரேன்னு கூட நீ கேட்க மாட்டியா?” என்று கேட்க, அவள் இறுக்கமாகவே நின்றிருந்தாள்.

“நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக உன்கிட்ட மன்னிப்பும் கேக்கிறேன். ஆனா, உண்மை எதுவுமே தெரியாம பேசன அத்தனை பேரோட வாயையும் அடைக்க, எனக்கு வேறவழி தெரியல. அதனால தான் அந்த முடிவெடுத்தேன்.”

அவள், அவன் சொல்லும் எதையும் கேட்கவோ, ஏற்கவோ தயாராக இல்லை.
இறுக்கமாகவே நின்றிருந்தாள். அவனை ஏகத்திற்கும் முறைத்தபடி,

வாசற்கதவு தடாலென்று திறக்கப்பட, இருவரும் திடுக்கிட்டு திரும்ப,
ஒரு பெண்மணியும், இளைஞனும் கோபமாக உள்ளே நுழைந்தனர்.

அவர்களை பார்த்து தமிழ்ச்செல்வியின் கண்களில் மிரட்சி தொற்றிக் கொண்டது.

ராகுல் அவர்களை கண பொழுதில் அடையாளம் கண்டு கொண்டான். அவர் தமிழ்ச்செல்வியின் சித்தி என்றும், அவன் சித்தியின் மகனென்றும்.

‘இவர்கள் இங்கே எப்படி? அதுவும் இத்தனை சிக்கிரம்?’ அவன் யோசனையை அந்த பெண்மணியின் பார்வை தடை செய்தது.

அவர் பார்வையின் வீச்சில் தமிழ்ச்செல்வி மிரண்டு போய் தலை கவிழ்ந்தாள்.

இவள் கழுத்தில் மின்னிய புது மஞ்சள் கயிற்றை பார்த்து அவர் கண்கள் அகல விரிய, ‘அந்த பார்வையில் இந்த கயிறு பற்றி எரிந்து விடுமோ?’ என்று தோன்றியது ராகுலுக்கு.

“என்னடி இது கோலம்? இந்த கண்ராவிக்கு தான், கண்காணாத தூரத்தில வந்து வேலைய தேடிகிட்டியா?”

அவருடையது நாக்கா? இல்லை தேள் கொடுக்கா? ஒவ்வொரு வார்த்தைகளிலும் விஷம் தெறித்தது.

“எப்ப புருசன் சாவான், இன்னொரு புருசனை கட்டிக்கலாமுன்னு காத்து கிடந்தியாக்கும்?”

அவரின் வார்த்தைகள் இவள் நெஞ்சில் நெருப்பு கணக்குகளை வீச, இவள் கண்களில் கண்ணீர் திரண்டது.

“மூதேவி, பொறந்தவுடனே அம்மாவ தின்ன, கட்டிகிட்ட கொஞ்ச நாள்ல புருசனையும் தின்னு தொலைச்ச, உன்ன பாத்தாலே பாவம் சுத்திக்கும். இப்படி மானங்கெட்டு வாழறதுக்கு எங்கையாவது விழுந்து செத்து தொலைஞ்சிருந்தா, தலை மூழ்கி இருப்போமே.”

அந்த பெண்மணியின் பேச்சு அத்தனை கொடுமையானதாக இருக்க, ராகுலால் மேலும் பொறுக்க முடியவில்லை.

“என்ன நடந்ததுன்னு தெரியாம ஏன் இப்படி வாய்க்கு வந்த மாதிரி பேசறிங்க? அவளோட அம்மா இடத்தில இருக்கீங்க. கொஞ்சமாவது இங்கிதத்தோடு பேசுங்க” என்று அப்போதும் மரியாதையாகவே அறிவுறுத்தினான்.

அவர் சரேலென இவன் புறம் திரும்பி, “என்ன, ரோசம் பொத்துகிட்டு வருதோ? ஒரு பொண்ணு தனியா, கைநிறைய சம்பாரிச்சா, உங்களுக்கு பொறுக்காதே?”

ராகுல் பற்களைக் கடித்து கொண்டு நின்றான்.

“பாக்க வாட்ட சாட்டமா நல்லா தான இருக்க, உனக்கு வேற எவளும் கிடைக்கலயா? இந்த கழுதை தான் கிடைச்சாளா?” என்ற பேச்சுடனே தமிழை ஓரிடி இடித்து வைத்தாள்.

“பெரியவங்க ஆச்சேன்னு பார்க்கறேன். இல்ல, கண்டபடி பேசற நாக்கை வெட்டி போட்டுடுவேன்!” ராகுல் மலையேறினான்.

“என்னடா வாய் நீளுது? பொம்பள பொறுக்கி தானடா நீ…” அவள் வரம்பின்றி பேசிக்கொண்டே போக, “சித்தீ…” தமிழ்ச்செல்வியின் குரல் கர்ஜித்தது.

“என்னடீ குரல் உசருது? தாயில்லாத உன்ன இத்தனை வருசம் வளர்த்துவிட்டேன் பாரு, அதுக்கு தான் குரல் உசத்தி பேசுறியா? இல்ல, கட்டனவன காவு கொடுத்து நாதியத்து நின்னவளை வீட்டுக்குள்ள தங்க இடங்கொடுத்தேனே அதுக்கு குரல் உசத்திரியோ?” அவர் ஆவேசமாக சொல்லி காட்ட,

“தயவு செஞ்சு பிரச்சனை பண்ணாதீங்க சித்தி” என்றாள் கலக்கமாக.

“தரிகெட்டு நிக்கிறியே கழுத உன்ன என்னனு கேக்க வந்தா, பிரச்சனைக்கு வந்தவளா தெரியுதா உனக்கு?”

“…”

“மாசம் பொறந்து பத்து நாளாச்சே, செலவுக்கு காச கூட அனுப்பாம, என்ன கிழிக்கிறானு பார்த்தா, ஜோடி தேடிட்டு இருந்தியோ?”

“வார்த்தைய அளந்து பேசுங்கன்னு முன்னவே சொல்லிட்டேன். நீங்க பெத்த பொண்ணா இருந்தா கூட இப்படி தான் தரங்கெட்டு பேசுவீங்களா? இப்ப கூட தமிழ் வாழ்க்கை என்னாச்சுன்னு பார்க்க வரல, கேவளம் காசு, பணத்துக்காக ஓடி வந்து இருக்கீங்க இல்ல.” அவனும் எதிர்வாதம் செய்தான்.

“ஆமா எனக்கு கேக்க உரிமை இருக்கு நான் கேக்குறேன். அவள வளர்த்து ஆளாக்கினதுக்கு, சீர்செனத்தி செஞ்சு கட்டி கொடுத்ததுக்கு, வாழாவெட்டியா வந்து நின்னவள சேர்த்துகிட்டு ஆக்கி போட்டதுக்கு, அவ இந்த சென்மம் முழுசும் சம்பாரிச்சு போட்டாலும் என் கடனை அடைக்க முடியுமா அவளால?”
அங்கு பேச்சு தடிக்க,

தமிழ்ச்செல்வி வேகமாய் அறைக்குள் சென்று ஒரு கவரை எடுத்து வந்து அவரிடம் நீட்டினாள்.

அதை பிடுங்காத குறையாய் வாங்கி பிரித்து பார்க்க, கணிசமான பணதாள்கள் அதிலிருந்தன. இந்த திருமண அலைச்சலில் இந்த மாதம் பணம் அனுப்ப மறந்திருந்தாள் அவள்.

அந்த வெறுப்பில் இருந்தவருக்கு இவளுக்கு திருமணம் முடிந்த சேதி எட்ட, சென்னையில் இருந்து இரவோடு இரவாக அடித்து பிடித்து ஓடிவந்திருந்தார்.

அதை எண்ணி பையில் பத்திரபடுத்திக் கொண்டவர், “என்ன இவ்ளோ தான் இருக்கு? எனக்கு என்ன பிச்சை போடறியா நீ?” அவர் வாய் அடங்குவதாக இல்லை.

“இதுக்கு மேல என்கிட்ட எதுவுமே இல்ல. விட்டுடுங்க ப்ளீஸ்” என்று ஆற்றாமையோடு கைகூப்பினாள்.

பார்த்து நின்ற ராகுலுக்கு மேலும் ஆத்திரம் கூடியது.

“அச்சோ ம்மா போலாம் வா. இனிமே அக்காவுக்கு வேலையும் கிடையாதாம். நீ என்ன கத்தினாலும் ஒண்ணும் தேறாது” அவர் மகன் சலிப்பாக சொல்ல,

“பொறந்த வீடு, அப்பன்னு சொந்தம் சொல்லிகிட்டு வீட்டு பக்கம் எப்பவாவது வந்துடாத, அப்பறம் நான் மனுசியா இருக்க மாட்டேன்” என்று எச்சரிக்கையும் செய்து விட்டு அகன்றனர்.

தனக்கு மூத்தாளின் பெண் என்ற வகையில் இவருக்கு எப்போதும் தமிழ்ச்செல்வி ஆகாதவள் தான்.

தன் சித்தியின் சுடு சொற்களை கேட்டு, அவர் சொல்படியெல்லாம் வேலைகளை செய்தே தமிழின் குழந்தை பருவம் சென்றுவிட்டது. தனக்கு மகன் பிறந்தவுடன் அவளின் அப்பாவிற்கும் இவள் மீது பாசம் குன்றி போனது.

படிப்பில் முதல் தர மாணவியாய் இருந்ததால் அவள் மேல் படிப்பிற்கு முட்டுக்கட்டை ஏற்படவில்லை. அதுவும் கல்வி உதவித்தொகையில் தான் அவளின் கல்லூரி நாட்கள் நகர்ந்தன. அதோடு பகுதிநேர வேலையும் செய்தபடி தன் படிப்பை முடித்திருந்தாள் தமிழ். கல்லூரியில் அவள் நண்பர்களின் ஆதரவு அவளுக்கு பெரிதும் கைக்கொடுத்திருந்தது எனலாம்.

இந்நிலையில் படிப்பு முடிந்த சில மாதங்களிலேயே இவர்கள் அவளுக்கு திருமண ஏற்பாடு செய்தனர். பெற்ற கடன் தீர்ந்தால் போதுமென்ற எண்ணம் அவர்களுக்கு. தமிழும் பெரிதாய் மறுப்பு சொல்லவில்லை.

ஆனால் அவள் திருமண வாழ்க்கை துளிரும் போதே கருகி போனதுதான் சோகம். மீண்டும் தந்தை வீட்டிலேயே அடைக்கலம் ஆனாள். அவளின் மாத சம்பள வரவிற்காய் அவள் சித்தியும் அமைதியாகவே ஏற்றுக் கொண்டாள்.

பிறகு நேர்முக தேர்வு மூலம் கொடைக்கானலில் வேலை கிடைக்க, அவளின் சம்பள தொகையை கேட்டதுமே அவரின் வாய் பிளந்தது.

இதோ இந்த இரண்டரை வருடம் அவரிடம் பணபுழக்கமும் அதிகம் தான். எல்லாவற்றிற்கும் சேர்த்து வேட்டு வைத்து நின்றவளை பார்த்து அவருக்கு பற்றி கொண்டு எரிந்தது.

அவளுக்கு திருமணம் முடிந்தது என்பதை விட, அவளின் வேலை இல்லை என்றானது தான் அவரின் ஏகோபித்த எரிச்சலுக்கு காரணமாகி இருந்தது.

கடைசியாய் கிடைத்தவரை லாபம் என்று இப்போது அவளை தலைமுழுகி சென்று விட்டார்.

பணத்தை பார்த்தால் தன் சித்தியின் வாய் அடங்கிவிடும் என்ற தமிழ்ச்செல்வியின் கணிப்பு சரியாகவே இருந்தது.

அவர்களை பொறுத்தவரை இவள் வெறும் பணம் தரும் இயந்திரம் தானே, இதுநாள்வரை.

இப்போது அந்த இடம் புயல் அடித்து விட்டது போல அமைதியானது.

“நீயும் இங்கிருந்து வெளியே போயிடு” ராகுலையும் வாசல் நோக்கி கை காட்டினாள்.

“நீ வராம நான் இந்த இடத்தை விட்டு போறதா இல்ல” என்று ராகுல் கிருஷ்ணன் உறுதியாக நின்றான்.

“இப்ப என்ன உனக்கு? என்னை உன்னோட வந்து வாழ சொல்றியா? அப்படி கேட்க உனக்கு வெட்கமா இல்ல?” தமிழ்ச்செல்வி ஆற்றாமல் பேச, அவன் தன் கோபத்தை அடக்கியபடி தன்மையாகவே அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“கோபத்தில நீதான் தப்பு தப்பா பேசற தமிழ். இப்ப உனக்கு வேலையும் இல்ல. வீட்ட காலி பண்ணணும். உன் வீட்டுக்கும் போக முடியாது. உன் எல்லா பிரச்சனைக்கும் நான் தான காரணம்!” என்று வேதனையாக நிறுத்த,

அவளுக்கும் வேதனையாக தான் இருந்தது. ஒரே நாளில் எல்லாமே தலைகீழாக மாறிவிடும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லையே.

“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம், எப்படி உன்ன நிராதரவா விட்டுட்டு போக முடியும் என்னால?”

“அதை தான் நானும் சொல்றேன். இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நான் எப்படி உன் கூட…” அவள் தொண்டை அடைக்க, கண்கள் கலங்கின.

“அழாத ப்ளீஸ், உன் அழுகைக்கெல்லாம் நான் காரணம்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு” அவன் குரலும் உடைந்தது.

தமிழ் கண்களை அழுத்த துடைத்து கொண்டாள். நேற்று அவளுக்கு ஏற்பட்ட அவமானத்தின் ரணமும் வலியும் இப்போதும் அவள் நெஞ்சில் தீயை வார்த்து கொண்டிருந்தது. அதோடு தன் நண்பனை வேறாக பார்க்கும் துணிவு அவளுக்கு இருக்கவில்லை. தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த புதிய உறவுமுறை, எண்ணும் போதே அவளை நடுங்க செய்தது.

கணவன், மனைவி உறவிற்கான முழு அர்த்தம் அவளுக்கு நன்றாகவே தெரியும் ஆதலால், அவள் தன் நிலை எண்ணி அருவெறுத்து போயிருந்தாள்.

எந்த நிலையிலும் அவனோடு போக கூடாது என்ற உறுதியோடு நின்றிருந்தாள்.

“உனக்கு இப்ப தங்க, ஒரு பாதுகாப்பான இடம் வேணும். அது என் வீடா இருக்கட்டும். உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க நான் ஏற்பாடு செய்றேன்.”

“இல்ல, இது சரிபட்டு வராது. நீ உன் வாழ்க்கையை பார்த்து போ. நான் என் வழிய பார்த்துக்கிறேன்” அவன் சமாதானம் அவளை மேலும் கலவரப்படுத்தவே செய்தன.

“ப்ச், புருசன்ற உரிமையில கூப்பிடல, உன் ஃப்ரண்ட்டா தான் கூப்பிறேன்”

“என்னடா ஃப்ரண்டு? ஒரு ஃபிரண்ட் செய்யற காரியத்தையா செஞ்சு வச்சிருக்க? பதறுதுடா, என் கண்ணு முன்ன நிக்காத போ”

“பின்ன என்னை வேற என்னதான் செய்ய சொல்ற? சுத்தி இருக்க எல்லாரும் நம்மல இணைச்சு தப்பா போசும் போது, நம்ம மேல எந்த தப்பும் இல்லன்னு திரும்ப திரும்ப சொல்லியும் யாருமே… நம்பாத போது, ஏன்? நிவியே நம்ம ரெண்டு பேரையும் நம்பலைன்றப்போ வேறென்ன பண்ண?” அவனும் ஆற்றாமையோடு குரலை உயர்த்தினான்.

“…”

“நம்ம வாழ்க்கை சிக்கலாயிடுச்சு தான், நீ விலகி போறதால மட்டும் இங்க எதுவும் சரியாகாது தமிழ், நேத்து அவ்ளோ வேகமா சாக போன, ஏன் எனக்கு கஷ்டம் இல்லையா? நானும் உன்ன மாதிரி சாக முடிவெடுத்தா உனக்கு சந்தோசமா?”

தமிழிடம்‌ பொறுமையாக பேசி, அவளுக்கு நிலையை புரியவைக்க தான் நினைத்தான். ஆனால், சற்றுமுன் அவள் சித்தி ஆடிய ஆட்டத்தில் இவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அவர் அவ்வளவு கீழ்த்தரமாக பேசியும் எதிர்த்து பதில் பேசாமல் கலங்கி நின்றிருந்த தமிழின் மீது அவனுக்கு கோபம் வரத்தான் செய்தது. அதன் காரணமாக அவன் வார்த்தைகள் வேகம் பிடிக்க தமிழ் பதிலின்றி கலங்கி நின்றாள்.

“நீ இங்க என்னை சந்திக்காம இருந்திருந்தா, உன் லைஃப்ல எந்த குழப்பமும் வந்திருக்காது இல்ல,” ஏற்பட்ட பிரச்சனைகளுக்கான பழியை தன் மீதே போட்டுக் கொண்டாள் இவள்.

“சும்மா போட்டு குழப்பிக்காத, இங்க நடந்த எந்த பிரச்சனைக்கு நீ காரணமில்ல. சீக்கிரம் கிளம்பு. அம்மா உனக்காக காத்திருக்காங்க” அவன் துரிதபடுத்தியும் அசையாமல் சங்கடமாக நின்றிருந்தாள் அவள்.

“இன்னும் என்ன டி?” என்று அவன் சலித்தபடி கேட்க,

அவளுக்கு வேறு வழியும் இல்லை. அரை மனதுடனே தன் பொருட்களை எடுத்து வைத்தாள்.

ராகுல் அவள் பையை வாங்கி கொண்டு முன்னே நடக்க,அவளின் தயக்கம் விலகுவதாக இல்லை. சங்கடமாக அங்கேயே நின்றாள்.

அவளை கவனித்தவன், “என்னை அத்தனை மோசமானவனா நினைக்கிறியா தமிழ்? உனக்கு கூட என்மேல நம்பிக்கை இல்லாமல் போச்சா?” ஆதங்கமாகவே அவனிடமிருந்து கேள்வி வந்தது.

ஏனோ அவள் மனம் அவனை மோசமானவனாய் சித்தரிக்கவில்லை.

ஏதோ வெற்று நம்பிக்கையில் அவன் பின்னோடு நடந்தாள்.

# # #

“அங்கயே நில்லுங்க” வந்த இருவரையும் பார்வதியின் குரல் வாசலுடனே நிறுத்தியது.

“என்ன ம்மா?” ராகுல் சலிப்பாக நிமிர,

உள்ளே இருந்து அமலாமாமி, ஆரத்தி தட்டுடன் வர, தமிழ்ச்செல்வி விதிர்த்து, கலவரமாய் ராகுலை பார்க்க, அவன் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்.

ஆரத்தி சுற்றி இருவரையும் புன்னகையுடன் வீட்டுக்குள் அழைத்து கொண்டார்.

“நேத்தைய போராட்டத்தில, திருஷ்டி கழிக்கவே மறந்துட்டேன். அதான்”
என்று பார்வதி கூறிய காரணம் சரியாகவே தான் இருந்தது.

“போய் குளிச்சிட்டு வாங்க. நான் டிஃபன் எடுத்து வைக்கிறேன்” என்று சமையலறை நோக்கி நகர்ந்தார்.

தமிழ்ச்செல்வியின் மனம் சஞ்சலமானது. ‘வந்த உடனே இந்த கூத்து. இன்னும் என்னென்ன நேருமோ?’ என்று பதைபதைத்தவள்,
‘ராகுல் கூட நான் வந்ததே தப்பு’ என்று தன்னையே சாடிக் கொண்டாள்.

மேலும் ஏதேதோ எண்ணி அவள் குழம்பி போக, எண்ணங்களே பெரும் பாரமாய் தோன்றின.

விடையில்லா வினா தாளாய் அவள் வாழ்க்கை!

குளித்து முடித்து வெளியே வந்த ராகுல், பக்கத்து அறை வாசலில் தயங்கி நின்றிருந்த தமிழை கவனித்தான்.

எப்போதும் போலவே தயாராகி நின்றிருந்தாள். அவளின் நீண்ட ஈர கூந்தலை மட்டும் முடிச்சிடாமல் விரித்து விட்டிருந்தாள்.

முதல் நாள் பள்ளி வந்த சிறுமி போல, அவளின் பயமேறிய முகத்தை கவனித்தவனுக்கு, அன்றொரு நாள் இதே வீட்டில் இயல்பாக சமைத்து, தன்னுடன் வாயடித்துச் சென்ற தமிழ்ச்செல்வி நினைவில் வந்து போனாள்.

பார்வதி இருவரையும் பூஜை அறைக்கு அழைத்து சென்று, விளக்கு ஏற்றும் படி தமிழிடம் சொன்னதும்,

“நான் எப்படி ம்மா?” அவள் சங்கடமாக தயங்கி நிற்க,

“உன் கேள்விய எல்லாம், உன்ன கட்டி கூட்டிட்டு வந்தவன் கிட்ட கேட்டுக்கோ. இப்ப நான் சொல்றதை மட்டும் செய்” அவரின் பதில் அதிகாரமாக வந்தது.

ராகுலை ஒரு கார பார்வை பார்த்துவிட்டு தமிழ், காமாட்சி விளக்கின் திரியை தூண்டி, விளக்கு ஏற்றிட,

“கிருஷ்ணா, அவ நெத்தியில குங்குமத்தை வச்சிட்டு, சாமி கும்பிட்டு சீக்கிரம் வாங்க. எனக்கு பசிக்குது”
பார்வதிக்கு அவரின் கஷ்டம்.

ராகுல் இரு விரலிடுக்கில் குங்குமம் எடுத்து அவள் அருகில் வர, அகல விரிந்த மிரண்ட கண்களோடு தமிழ் வேண்டாமென தலையசைத்தும், உயர்ந்த அவன் கரம் அவள் நெற்றியில் குங்குமத்தை நிறைத்து விட்டு தான் இறங்கியது.

கடவுளை வணங்கி விட்டு, அவன் தன் அம்மாவின் பாதம் வணங்க, திருதிருவென விழித்து நின்றவள், வேறு வழியின்றி அவளும் அவர் காலில் விழுந்து வைத்தாள்.

“உங்க மனசு போல, உங்க வாழ்க்கையும் நல்லா இருக்கணும்!” என்று பார்வதி வேண்டுதலோடு வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

# # #

கோதண்டராமன் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

வாங்கிய கடனையும் வட்டியையும் முறையாக செலுத்தாத காரணத்தினால் அவரது தோல் ஃபாக்டரிக்கு சீல் வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்த அவரின் நெஞ்சமும் கொதிநிலையில் இருந்தது.

“அவன் சீல் வைக்கிற வரைக்கும் என்னடா கிழிச்சுட்டு இருந்தீங்க நீங்கெல்லாம்?” தன் முன் இருந்தவர்களிடம் சீறினார்.

“காலங்காத்தால திடுதிப்புனு அஞ்சாறு பேரு வந்து எங்களை எல்லாம் வெளியேத்திட்டு கதவை பூட்டி சீல் வச்சுட்டாங்க அண்ணே, நாங்க எவ்ளோ சொல்லியும் அவங்க கேக்கல” நடந்ததை அவர்கள் கூற, இது யார் வேலை என்று அவருக்கு புரிந்தது.

அன்றைய மிரட்டலுக்கு பிறகு, ராகுலிடமிருந்து எந்தவித எதிர்ப்பும் கிளம்பாமல் போகவே அவன் பயந்துவிட்டான் என்ற இருமாப்பில் இருந்தார். இத்தனை சிக்கலை தனக்கு ஏற்படுத்த தான் அவன் அமைதியாக இருந்திருக்கிறான் என்பது‌ இப்போது தான் இவருக்கு புரிந்தது.

“அந்த மேனேஜர்காரனும் கூட வந்து இருந்தானா?” என்று கேட்க,

“இல்ல, அவனுக்கு கல்யாணமா அதான் வரலன்னு கேள்விப்பட்டோம்”

“ஓ அப்படியா! புது மாப்பிள்ளைக்கு சீக்கிரம் பெரிய விருந்துக்கு ஏற்பாடு பண்ணுங்கடா, நம்ம வக்கீலை சீக்கிரம் வந்து என்னை பாக்க சொல்லு” என்று உத்தரவிட்டு அடங்காத ஆத்திரத்தோடு தன் காரில் ஏறி சென்றார்.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!