vav6

vav6

வா… அருகே வா! –  6

பூங்கோதை தன் அதரங்களைத் துடைத்துக் கொண்டாள். அவன் ஸ்பரிசம் கோபத்தை உண்டுபண்ணியது. அவன் தீண்டிய இடம், கனலாய் எரிந்தது. “முதலில் குளிக்கணும்…” என்று முணுமுணுத்துக் கொண்டாள் பூங்கோதை.

‘நான் கோழையா? என்னால் அவனை ஒரு அடி கூட அடிக்க முடியலையே? அம்மா, அப்பான்னு எனக்கு ஒரு குடும்பம் இருந்திருந்தா, என் நிலைமை இப்படி இருக்குமா? ஆச்சி கிட்ட சொன்ன, இதுக்குத்தேன் கல்யாணும்ன்னு சொல்லும். இதையும் அத்தான் கிட்டதேன் சொல்லனுமா?’ என்று பூங்கோதை கண்கலங்கினாள்.

அவன் பிடியில் சிக்கி, மீளமுடியாமல் தவித்த தவிப்பு, கோபத்தைத் தாண்டியும் அவள் இயலாமையை எடுத்து காட்டியது. ‘ஆம்பிளைக்கே  பலம் அதிகம் போல… அதிலும் இவன் மிலிட்டரிகாரன் ரொம்பத்தேன் பலம். என்னால அவனை தாண்டி வரக்கூட முடியல…’ என்று தன் இன்றைய தோல்வியின் எண்ணத்தோடு பூங்கோதையின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது

அதே நேரம், ‘ரொம்ப ஓவரா போய்ட்டமோ?’ என்ற எண்ணம் தோன்ற தன் தலையைத் தட்டிக் கொண்டான் திலக்.

“ஐயோ… அவளை பார்கலைனா, நான் நல்லாத்தேன் இருக்கேன். பார்த்துட்டா, எதுமே என் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குதே. பயந்திருப்பாளோ? கண் கலங்கினா மாதிரி இருந்திச்சு. அதை என் கிட்டச் சொல்ல வேண்டியதுதானே? அதை ஏன் என்கிட்டே மறைக்கனும்? சின்ன வயசிலிருந்து, நான் பார்க்கத்தேன் வளர்ந்தா. என்கிட்டே ஏன் இந்த வீராப்பு? ராட்சசி…” முணுமுணுத்து அவளுக்காக துடியாய் துடித்தான் திலக்.

 

இரு வேறு எண்ணங்களில் இருவரும் வாசலை நோக்கி செல்ல, “கதிரேசன் அரிசி ஆலையில் தீ பிடிச்சிருச்சு…. உங்க அத்தான், மாமா இரெண்டு பெரும் அங்கனதென் நிக்காக போல! நீ இங்கன என்ன பண்ணுதே?” என்று ஒரு நடுத்தர வயது பெண் கேட்க, தன் தாவணியை தூக்கி சொருகி கொண்டு பதறியடித்துக் கொண்டு ஓடினாள் பூங்கோதை.

பூங்கோதையை பார்த்த கயல், “இவ்வுளவு நேரம் இங்னத்தேன் இருந்தியா? ஏடி… பய போ… நானும் என்னன்னு பார்க்க வாரேன்…” என்று கயலின் பேச்சு காற்றில் தான் மிதந்தது.

“அத்தான்னா… ஊரு உலகத்தில் இவளுக்கு யாரையும் ஞாபகம் இருக்காது…” என்று கயல் புலம்பிக்கொண்டே நடக்க, பின்னால் மோட்டார் பைக்கில் வந்த  திலக்கின் காதில் விழுந்தது. புன்னகைத்துக் கொண்டான்.

கதிரேசன் திலகிற்கு அலைபேசியில் அழைத்திருந்தான். பூங்கோதையோடு பேசிக் கொண்டிருந்ததில் திலக் அதைக் கவனிக்கவில்லை.

கதிரேசன் அழைத்திருந்ததால், உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று புரிந்து தன் அவசர ஓட்டத்தை நிறுத்திவிட்டு, தேவையான உதவிகளோடு அங்குச் சென்றான் திலக்.

 

திலக் கதிரேசனோடு இணைந்து கொள்ள, தீ விரைவாக அணைக்கப் பட்டது. கிராமத்தினர், ஒன்று கூடி அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டனர். யார் உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. ஆனால், அந்த இடமே வெப்பம் சூழ்ந்து, புகை மண்டலத்தோடு கரிய நிறத்தில் காட்சி அளித்தது. பல அரிசி மூடைகள் சாம்பல் நிறத்தில் கோரமாகக் காட்சி அளித்தது.

உயிர்ச்சேதம் இல்லை என்றாலும், அந்த இடம் பொருள் சேதாரத்தை வெளிப்படையாகக் காட்டியது. புகை சூழ்ந்த அரிசி மூடை, எதற்கும் பயன்படுத்த முடியாத நிலையில் சிக்கிக் கொண்டிருந்தது.

ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, ஊர் மக்கள் சற்று கலைந்து விட, நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் அங்கு அவர்களுக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தனர்.

பூங்கோதை, கயல், திலக், கதிரேசன் வேலையில் மூழ்க, முத்தமா ஆச்சி மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். செல்லம்மா அதிர்ச்சியில் அமர்ந்திருக்க, “அண்ணாச்சி… ரொம்ப பொருள் சேதம் இருக்கும் போலையே?” என்று அக்கறையாகக் கைலாசத்திடம் விசாரித்தார்.

கைலாசம், அங்கு நடந்த இழப்பை பார்த்தபடி, சோர்வாகத் தலை அசைத்தார்.

 

“வருத்தப்படாதீக… ஏதோ நேரம் சரி இல்லை. இப்படி நடந்திருச்சு…” என்று சமாதானமாகக் கூற, “நேரத்தேன்… இனி இந்த வீட்டோட நேரம் நல்லா இருக்காது. ஒரு நாளும் நல்லா இருக்காது… சிலர் காலடி எடுத்து வைக்கணுமுன்னு நினைச்சாலே வீடு விளங்காமத்தேன் போகும்.” என்று செல்லமா தன் புடவை முந்தானையில் கண்ணீரைத் துடைத்தார்.

“பூங்கோதை… உங்க அத்தை தலையில்  விழுந்திருக்கணும் இந்த தீ. இதுதேன் சாக்குன்னு உன்னை இழுக்குது.” என்று கயல் பூங்கோதை காதில் கிசுகிசுக்க, திலக்கின் பார்வையும் பூங்கோதையை தீண்டியது.

‘விளையாடக் கூடப் போக முடியாத வீட்டுக்கு வாழ போவியா?’ சற்று முன் திலக் கேட்டது நினைவு வர, பூங்கோதையையும் அறியாமல், அவள் பார்வை திலக்கை தீண்டியது.

அந்த பார்வை தீண்டலில், அவன் செய்த அத்துமீறலும் நினைவு வர, தனக்காகக் கேட்க யாருமே இல்லாத அவல நிலை பூங்கோதையை இம்சிக்க விரக்தியாகப் புன்னகைத்து தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அப்பொழுது அங்கு அமர்ந்திருந்த, நடுத்தர வயது பெண்மணி, “கல்யாணம் பேசி, இப்படி நடந்தது கொஞ்சம் அபசகுணமாத்தேன் இருக்கு. உங்க, சாஸ்தா கோவிலுக்கு வேணா போயிட்டு வாங்களேன்! பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நல்லது.” என்று அக்கறை தொனித்த குரலில் அறிவுரை கூறினார்.

“எந்த சாமியும், சிலர் வாழ்க்கையைச் சரி செய்ய முடியாது. அதெல்லாம் விதிப்படித்தேன் நடக்கும். என் பிள்ளை தலையெழுத்தில் கூட சேர்ந்து சீரழியணும்னு இருந்தா, பெத்தவ நான் மட்டும் மாத்திர முடியுமா?” என்று செல்லமா, கழுத்தை நொடித்தாள்.

“அம்மா…” என்று கதிரேசன் அலற, திலக் அங்கு நடப்பவற்றைக் கவனித்தபடி வேலை செய்து கொண்டிருந்தான்.

“இந்த பாரு… இந்த மறைமுக குத்தல் பேச்செல்லாம் என்கிட்டே வேண்டாம். உனக்கு ஒரு கூறு இல்லை. கூறு கெட்டவ… வீட்டுக்கும், இங்கனைக்கும் அப்படி என்ன தொலைவா இருக்கு? இங்க ஒரு எட்டு வந்து பார்க்க வேண்டியதுதானே? அப்பப்ப வந்து பாக்க முடியல? எவன் பீடியை குடிச்சிட்டு போட்டானோ? என் பேத்தியை சொல்லுத?” என்று முத்தமா ஆச்சி தன் புடவையை சொருவிக் கொண்டு சண்டைக்கு வந்தார்.

“என்ன ஆச்சி, இப்படி கோபப்படுத்தீக? செல்லமா சொல்றதிலயும் ஒரு நியாயம் இருக்கில்ல. பூங்கோதை ராசி கொஞ்சம் கட்டை தானே?” என்று அங்கிருந்த பெண்மணி கூற, “யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்லுத? என் பேத்தி கிளி மாதிரி இருக்கா? நல்லா படிப்பா? அவ கெட்டிக்காரத்தனம் உங்களுக்கு வருமா?” என்று முத்தமா ஆச்சி எகிறினார்.

 

“அழகு இருந்தா போதுமா? இல்லை படிப்பிருந்தா போதுமா? கைராசி வேண்டாமா?” என்று அங்கிருந்த பழுத்த சுமங்கலிப் பெண் கூற, அங்கிருந்த கூட்டம் அதை ஆமோதித்தது.

“படிப்பும் குணமும் இருந்தா போதாதா?” என்று கயல் கடுப்பாக முணுமுணுக்க, இந்த பேச்சை ஆரம்பித்த தன் தாயைப் பரிதாபமாகப் பார்த்தான் கதிரேசன்.

“அப்படி என்ன கைராசி, உங்ககிட்ட இருக்கு?” என்று முத்தமா ஆச்சி வெடிக்க, “அதெல்லாம் உங்களுக்கு புரியாது. உங்களை வைத்து ஒரு மங்கள செயலை ஆரம்பிக்க முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே, அந்த கூட்டம் நகர்ந்தது.

வெகுசிலரே அங்கு நின்று கொண்டிருக்க, ‘ஆச்சி… இதெல்லாம் தேவையா?’ என்பது போல் பார்த்து, “நாம கிளம்புவோமா?” என்று கேட்டாள் பூங்கோதை.

‘இந்த பேச்செல்லாம் பியூட்டியை பாதிக்கலையா? எப்படி இப்படி இருக்கா? ஒரு சொட்டு கண்கலங்களை… கோபப்படலை… ஆனால், என்கிட்டே கண்கலங்கின மாதிரி இருந்துச்சே! நான் செய்த வேலையில், ரொம்ப வருத்தப்பட்டுட்டாளோ? சரி… பரவால்லை… கல்யாணத்துக்கு அப்புறம் அவ சொன்னதெல்லாம் கேட்டு நடந்துக்கலாம்.’ என்று யோசித்து முடிவு செய்து கொண்டான் திலக்.

 

“எங்க டீ கிளம்பிட்ட? தனியா போய், அப்படியே உங்க மாமனையும், அத்தானையும் கைக்குள்ள போட்டுக்கலாமுன்னு பாக்கறியா?” என்று செல்லமா வீராவேசமாக அவள் முன் நின்றார்.

பூங்கோதை, கோபப்படவில்லை. அஞ்சவுமில்லை. பதறவுமில்லை.

“என்னவொரு நெஞ்சழுத்தம்? நான் இப்படி காட்டு கத்து கத்தறேன். உனக்கு வந்த விதிக்கு நான் என்ன பண்ணுவேன்னு நிக்கா?” என்று செல்லமா மீண்டும் பேச, “அம்மா! தயவு செய்து சும்மா இரேன்.” என்று கெஞ்சினான் கதிரேசன்.

“செல்லம்மா…” என்று கைலாசம் தன் மனைவியை அதட்ட, “உனக்கு என்ன வேணும்? ஏன்  இப்படி கிடந்து குதிக்க?” என்று முத்தமா ஆச்சி கோபமாக கேட்டார்.

“இந்த கல்யாணம் வேண்டாம். நான் அவ முன்னாடியே, ஊர் முன்னாடியே சொல்லுதேன். ராசி கெட்டவ… அவ அம்மைய முழுங்கி, அப்பன் கூட இல்லாதவ… நானும் அவ பிறந்ததிலிருந்து பாக்கேன்… அவ இருந்த இடம் விளங்கினதில்லை.” என்று செல்லமா பேச, “அம்மா… உங்க  வாயை மூடுதிகளா?” என்று கையெடுத்துக் கும்பிட்டான் கதிரேசன்.

“என்ன பேச்சு டீ பேசுத?” என்று கைலாசம் தன் மனைவியைக் கோபித்துக் கொண்டு, அங்கிருந்த புகை மூண்ட சூழலில் இருமிக் கொண்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு அமர்ந்தார்.

“என்னலே உங்க அம்மையை கெஞ்சுகிட்டு இருக்க? இதப்பார்… சும்மா நாடகம் ஆடாத. எவனோ செய்த தப்புக்கு என் பேத்தி என்ன பண்ணுவா? இந்த கல்யாணம் நடக்கும்.” என்று முத்தம்மா ஆச்சி கடிந்து கொள்ள, “ஆச்சி, இப்ப எதுக்கு கல்யாணம் பேச்சு. அம்மா தான் புத்தி கெட்டு இப்ப அத பேசுதாக… நீங்களுமா?” என்று தன் ஆச்சியைச் சமாதானம் செய்தான் கதிரேசன்.

பூங்கோதை தர்மசங்கடமாக நெளிய, ‘இவளுக்கு இதெல்லாம் தேவையா? அட போங்க… நீங்களும், இந்த கல்யாணமும்!’ என்று கூறமாட்டாளா?’ என்று ஏக்கத்தோடு தன் காதலியை கண்களால் தழுவினான் திலக்.

கயல் தன் தோழியைப் பரிதாபமாகப் பார்க்க, செல்லம்மா பேசிய பேச்சில் கைலாசம் சோர்வாக அமர்ந்தார்.

அவர் மீண்டும் நெஞ்சைத் தடவிக் கொண்டு இரும, முத்தமா ஆச்சி தன் மகன் அருகே சென்றார்.

அதற்குள், செல்லமா பூங்கோதையின் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து, “நீ வந்தா விளங்காதுன்னு நான்தென் சொல்றேன்ல… போடி இங்க இருந்து.” என்று அவளை வெறுப்போடு தள்ள, இதை எதிர்பாராத பூங்கோதை தடுமாற, திலக் அதிர்ச்சியில் நின்றான்.

கயல் அவளை தாங்கி பிடிக்க, “அடி எதுவும் படலியே?” என்று திலக் அக்கறையோடு கேட்க, நடந்த அவமானத்தை விட, திலக் முன் நடந்தது என்ற எண்ணத்தில் கூனி குறுகி உடல் நடுங்க நின்றாள் பூங்கோதை.

காதல் வழிந்த அவன் விழியில் இப்பொழுது பரிதாபம் மேலிட்டது.

“அரிசி மண்டி போச்சு… அடுத்து உன் மாமனைப் படுக்க வச்சிரு… பாரு நேத்துவரைக்கும் நல்லா இருந்த மனுஷன், இந்த கல்யாண பேச்சு பேசினவுடனே இப்படி ஆகிட்டார். இப்படி சோர்ந்து உக்காந்திருக்கார். என் தாலியை அறுத்தாவது,  நீ இந்த வீட்டுக்கு வந்தே ஆகணுமா?” என்று கேட்க, “அம்மா…” என்று காதுகளை  மூடிக்  கொண்டு அலறினான் கதிரேசன்.

இந்த காட்சியைக் கண்ட முத்தமா ஆச்சி வேகமாக பூங்கோதையை நெருங்கி, ஆவேசமாகப் பேசுவதற்குள், செல்லம்மா முந்திக் கொண்டார்.

 

அங்கிருந்த மண்ணை செல்லம்மா தன் கைகளால் அள்ளி,  “எனக்கு… உன்னை பிடிக்கலை… நீ வேண்டாம்ன்னு நான் சொல்லுதேன். உனக்கு என்னடி இத்தனை அகம்? பிடிவாதம்? நான் சொல்றேன்…. நீ நாசமாதான் போவ. நாசமாதான் போவ.” என்று  சாபமிட, பூங்கோதை செய்வதறியாமல் சிறு குழந்தை போல் விழிக்க, அவளை அள்ளி அணைத்து ஆறுதல் கூற, திலக்கின் கைகள் பரபரத்தது.

‘ஊர் என்ன ஊர் ? இப்பொழுதே பூங்கோதை கழுத்தில் மாலையிட்டு, தன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்.’ என்ற எண்ணம் திலகிற்கு தோன்றியது.

“உன் ராசி எல்லாரையும் அழிச்சிரும்… இங்க வராத… நீ நாசமா போவ… நாசமா போவ…” என்று பூங்கோதை நிற்கும் இடத்தில் மண்ணை தூவ, “அம்மா….” செல்லம்மாவின் கைகளைப் பற்றித் தடுத்து தன் தாயின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான் கதிரேசன்.

“அம்ம்மா… போதும் நிறுத்து… பூங்கோதை குழந்தை அம்மா… நம்ம வீட்டு குழந்தை. அவளை கல்யாணம் செய்ய கூடாது அவ்வுளவு தானே? நான் செய்யலை. எங்கிருந்தாலும் நல்லாருக்கணும்முன்னு சொல்லுமா. நீ அவளை சபிக்காத. நான் அவளை கல்யாணம் செய்துக்களை. நீ அமைதியா இரு.” என்று கதிரேசன் தன் தாயைக் கெஞ்சினான்.

“நாமளே வேற இடத்தை பார்த்து கல்யாணம் செய்து வைக்கலாம்.” என்று எழுந்து தன் தாயை சமாதானம் செய்ய, ‘உன் அத்தானே நம் கல்யாணத்தை செய்து வைப்பான்.’ என்று திலக் கூறிய வார்த்தை பூங்கோதைக்கு நினைவு வர, பூங்கோதை திலக்கை சந்தேகமாகப் பார்த்தாள்.

மற்ற அனைவரும் கதிரேசனின் செயலை அதிர்ச்சியோடு பார்க்க, “இந்த வீட்டுக்கும், எங்களுக்கும் இருந்த உறவு இன்னையோட முடிஞ்சி போச்சு. யாராவது என் வீட்டுப் பக்கம் கால் எடுத்து வச்சீக… சங்கை நெரிச்சிருவேன்.” என்று கூறிக்கொண்டு முத்தம்மா ஆச்சி பூங்கோதை கைகளைப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கிளம்பினார்.

“ஆச்சி..” என்று கதிரேசன் அவர்களை தடுக்க, “நீ யாருலே என் பேத்திக்கு கல்யாணம் பண்ணி வைக்க… நான் பண்ணுதேன்ல, என் பேத்திக்கு கல்யாணம்… சும்மா ஜாம் ஜாம்ன்னு நடக்கும். அம்புட்டு பயலும், வாயை பிளந்து பார்ப்பீக…” என்று சாவல் விட்டு வீட்டை நோக்கி வேகமாக நடந்தார் முத்தமா ஆச்சி.

 

 

கதிரேசன் ஆச்சியை வலியோடு பார்க்க, திலக் பூங்கோதையை வலியோடு பார்த்தான்.

‘லீவு முடியறதுக்குள்ள, பியூட்டிக்கு கிட்ட என் காதலை புரிய வச்சி, அத்தான் என் மேல் வச்சிருக்கது காதல் இல்லை. நீங்க என் மேல்  வச்சிருக்கதுதென் காதல்னு சொல்லுவானு பார்த்தா, இப்படி சிக்கலாகிருச்சு. இவுக யாரு என் பியூட்டியை வேண்டாம்னு சொல்றதுக்கு? என் பியூட்டி தானே இவுகளை வேண்டாமுன்னு சொல்லணும்.’ என்று திலக் தன் எண்ணம் தோற்றுப் போன உணர்வோடு அங்கு கதிரேசனுக்கு உதவி புரிய ஆர்மபித்தான்.

‘கொஞ்சம் நேரம் செல்லட்டும். இந்த வேலையை முடிச்சிட்டு ஆச்சியைப் பார்க்க போகணும். பூங்கோதை என்ன நினைப்பா? சொன்னா புரிஞ்சிப்பா. ஒருவேளை மனசளவுள்ள உடைஞ்சி போயிருப்பாளோ? இப்பவே போகலாமா? ஆனால், இப்ப போனாலும்… இல்லை, கொஞ்சம் கழிச்சே போவோம்…’ என்ற குழப்பமான எண்ணத்தோடு, கதிரேசன் வேலையைத் தொடர்ந்தான்.

திலக்கின் எண்ணம் பூங்கோதையை சுற்றியது.

 

‘என்னை கைநீட்டி அடிக்க முடிஞ்சிது… இவுகளை எதிர்த்து ஒரு கேள்வி கேட்கமாட்டாளா? கேள்வி கேட்க வேண்டாம். அழ கூட மாட்டாளா? பூங்கோதை பற்றிய இந்த ஊர் பேச்சு தெரியும்தென். ஆனால், இந்த அளவுக்கு பேசுவாகளா? பூங்கோதை இந்த பேச்சால் இப்படி மரத்து போயிருக்காளா? கதிரேசனுக்கும் இந்த பேச்செல்லாம் பழக்கம் போல? அவன் எதிர்த்து கேட்க மாட்டானா?’ என்று திலக்கின் கோபம் தன் நண்பன் மேல் திரும்ப, சோகமாக அமர்ந்திருந்த நண்பனின் முகம் அவனை வாட்டியது.

‘நல்லவனா இருக்கணும். மரியாதை கொடுக்கணும். பாசம்… இதெல்லாம் மனிதர்களை பல நேரத்தில் கட்டிபோட்டுருது. நான் மட்டும் எதிர்த்து கேட்டேனா? ஒரு சின்ன பொண்ணை ஏன் இப்படி பேசுதீகன்னு கேட்கவா முடிஞ்சிது. என்ன இவுக இப்படி எல்லாம் பேசுதாகன்னு பார்க்க தானே செய்தேன்.’ என்று தன்னை தானே நொந்து கொண்டான் திலக்.

அவன் எண்ணம் பலவாறு ஓட்டம் கண்டு, ‘பூங்கோதை பாவம்…’ என்ற இடத்தில் நின்றது.

‘நான் அவளை எப்படி அணுகுவது?’ என்ற சிந்தனையோடு திலக் வேலையை முடிக்க, “போவோம் திலக். நான் பூங்கோதையை பார்க்கணும். அவ இங்க சந்தோஷமா இருக்க மாட்டான்னு புரிய வைக்கணும்.” என்று கதிரேசன் கூற, சம்மதமாகத் தலை அசைத்து அவனோடு சென்றான் திலக்.

 

பூங்கோதை வீட்டில், “ஆச்சி.. கொஞ்சம் சும்மா இரேன்… தப்பெல்லாம் உன் பேர்லதென்…” என்று பூங்கோதை கடுப்பாகக் கூறினாள்.

“அடியாத்தி… ஏன் சொல்ல மாட்ட? நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று முத்தமா ஆச்சி எகிற, “என் படிப்பு கூட முடியாம, நீ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சது  முதல் தப்பு.” என்று பூங்கோதை கூற, முத்தமா ஆச்சி மௌனம் காத்தார்.

“அதுதேன் அத்தைக்கு பிடிக்கலைல, அப்புறம் ஏன் அங்கனயே சம்மதம் பேசுற? பாரு அத்தான்தென் பாவம். அத்தானுக்கு தர்மசங்கடம்.” என்று பூங்கோதை கதிரேசனுக்கு வக்காலத்து வாங்க, அவர்கள் வீட்டைக் கடந்து சென்ற திலக்கின் மனதில் பூங்கோதையின் குணத்தை எண்ணி காதல் பொங்கி வழிந்தது.

அப்பொழுது அவர்கள் வீட்டுக்குள் நுழைந்த, கதிரேசன் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. கதிரேசனைக் கவனிக்காமல் பாட்டி, பேத்தியின் உரையாடலும் தொடர்ந்தது.

“ஆச்சி… நான் தெரியமாத்தேன் கேட்கேன். அது என்ன பிறந்தா கல்யாணம் பண்றதுதேன் வாழ்க்கை லட்சியமா? படிச்சி பெரிய ஆளா வந்தா இவுக என்னை மதிச்சு தானே ஆகணும்? அப்பவும் என்னை ராசி இல்லாதவன்னு சொல்லுவாகளா? நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்? இதெல்லாம் இவுகளுக்கு தெரியாதா? மனித ராசிதென் முக்கியமுன்னா கடவுளை ஏன் கும்பிடறாக?” என்று வாழ்க்கையில் தான் பட்ட அடிகளாலும், அவமானத்தாலும் பகுத்தறிவு பேசிக் கொண்டிருந்தாள் பூங்கோதை.

பூங்கோதை பேசிய பேச்சு, திலக்கின் காதில் விழ, ‘இந்த தெளிவு போதும், இவளுக்கு என் காதலை உணர்த்த…’ என்று நம்பிக்கையோடு திலக் சிந்திக்க, கதிரேசன் பூங்கோதையை வாஞ்சையோடு பார்த்தான்.

“இங்ஙன நல்ல பேசு. உங்க அத்தையை உண்டில்லைன்னு பண்ண வக்கில்லை.” என்று முத்தமா ஆச்சி வெளியே வர, “முடியாமல் என்ன? அத்தான் வருத்தபடுவாக…” என்று தனக்குள் முணுமுணுத்தாள் பூங்கோதை.

கதிரேசனை பார்த்த முத்தமா ஆச்சி, “ஏல! இங்கன என்ன பண்ணுத? வெளிய போய்டு.” என்று முத்தமா ஆச்சி சத்தமிட்டார்.

“ஆச்சி…” என்று அழைத்துக்  கொண்டு கதிரேசன் உள்ளே நுழைய, “ஏல… நீ என் பேரன் இல்லை. உனக்கும் எனக்குமான உறவு முறிஞ்சி பல மணிநேரம் ஆகுது. உள்ள காலடி எடுத்து வச்ச, உன் காலை வெட்டிருவேன்.” என்று கோபத்தில் கொந்தளித்தார் முத்தமா ஆச்சி.

“நான் உள்ள வரலை… நான் பேசுறதை கேளு ஆச்சி…” என்று கதிரேசன் கெஞ்ச, “ஆச்சி, அத்தான்… ” என்று பூங்கோதை இழுக்க, “அத்தான், நொத்தானு சொன்ன உன்னை வெட்டுவேன். அந்தானைக்கு வந்திற வேண்டியது அத்தானுக்கு பாஞ்சிகிட்டு.” என்று சுவரில் சாய்ந்து அமர்ந்தார் முத்தமா ஆச்சி.

அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

 

பூங்கோதை தன் ஆச்சியைப் பரிதாபமாகப் பார்க்க, “உங்க அம்மை மேல எனக்கு கோபமில்லை. அவ அப்படித்தேன். இந்த புள்ளைய பாரு. சின்ன வயசிலிருந்து ஆசையை வளர்த்து, இப்படி நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்ட. உன் மேல தான்லே எனக்கு கோபம். உங்க அம்மைக்கு இவளை பிடிக்காதுன்னு எனக்கு தெரியாதா? எந்த மாமியாக்கு மருமகளை பிடிச்சிருக்கு. உலகத்தில் பாதி பேருக்கு பிடிக்காது. எனக்கு கூடத்தேன், உங்க அம்மைய பிடிக்கல, உங்க அப்பன் என்ன உங்க அம்மைய வெட்டியா விட்டுட்டான்?” என்று பட்டாளையில் அமர்ந்து பேச, “ஆச்சி…” என்று அழைத்துக் கொண்டு உள்ளே நுழைய முற்பட்டான் கதிரேசன்.

 

கயல், திலக் இருவரின் கவனமும் இங்கு தான் இருந்தது.

 

“உள்ள வராத… எல்லாம் முடிஞ்சிது… போ…” என்று கத்தினார் முத்தமா ஆச்சி. அவருடைய பல வருடக் கனவு ஏமாற்றமாக, அது கண்ணீராகக் கரைந்து கொண்டிருந்தாலும், எரிமலையாக வெடிக்கவும் காத்திருந்தது.

அது புரிந்தாலும், சமாதானம் செய்யும் எண்ணத்தோடு கதிரேசன் உள்ளே நுழைய முற்பட, “போ… போ… போ… எனக்கு இருக்கும் கோபத்தில் பேரன்னு கூட பார்க்க மாட்டேன். எனக்கு பேத்தித்தேன் முக்கியம் போய்டு. வந்தா வெட்டிருவேன்…” என்று ஏமாற்றத்தை தாங்க முடியாமல், தன் இயலாமையில் ஆவேசமாகக் கத்தினார் முத்தமா ஆச்சி.

அதையும் தாண்டி கதிரேசன் உள்ளே நுழைய அவர் அருகே இருந்த அரிவாளை கதிரேசனைக் குறி பார்த்துத்  தூக்கி வீசினார் முத்தம்மா ஆச்சி.

“ஆச்சி…” என்று கதிரேசன் கதற, “அத்தான்….” என்று பூங்கோதையின் குரல் அலறலாய், அன்பாய் ஏக்கமாக ஒலித்தது. அங்கு ரத்தம் பீறிட்டுக் வழிந்தோடியது.

‘பல வீட்டில்,  குழந்தைகள் மனதில் வித்திடப் படுகிற  திருமண ஆசை இப்படித் தான் ஏமாற்றமாக அமைகிறதோ?’ என்ற கேள்வி அந்த கிராமத்தின் காற்றுக்குத் தோன்றியது.

வா… அருகே வா!  வரும்….

 

error: Content is protected !!