MMV-17

MMV-17

அத்தியாயம் – 17

அவளின் அறையில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த நிலாவின் முகத்தில் கண்ணீர் கோடுகளை கவனித்த சுமிம்மா, ‘அவன் அவனோட மனசை வெளிபடுத்திவிட்டான்’ என்பதை உணர்த்து கொண்டார்.

‘இருவருக்கும் இடையே என்ன நடந்தது என்று அவருக்கும் தெளிவாக தெரியாததால் அவரும் அவன் வரும் வரை காத்திருப்போம்’ என்ற முடிவிற்கு வந்தார்.

அதன்பிறகு மற்றவர்கள் நிலா மற்றும் பாரதியைப் பற்றி கேட்க சுமிம்மா அவர்களிடம் பொய் சொல்லி சமாளித்தார். அவர் சொன்னதை பிரவீன் மட்டும் நம்ப மறுத்தான்.

‘அவர்களின் மனதை அவர்கள்தான் வெளிபடுத்த வேண்டும் என்ற விஷயத்தில் உறுதியாக இருந்தார் சுமிம்மா. அவரை பொறுத்தவரை அவரிடம் இருக்கும் பிள்ளைகளை நல்வழிப்படுத்த வேண்டும் என்று மட்டும்  நினைப்பவர் அவர்களை வழிநடத்தி செல்லவும் மறப்பதில்லை.

அன்று ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற நிலா மறுநாள் தான் கண்விழித்தவளிடம் அவர் ஏதும் கேட்கவில்லை. முதல்நாள் நடந்த எதுவும் அவளுக்கு ஞாபகம் இல்லாததால், பாரதி அவளிடம் பேசியதெல்லாம் தன்னோட கனவு என்று நினைத்துக் கொண்டாள்.

அவளின் நாட்கள் சீரான வேகத்தில் நகர்ந்தது என்றாலும் கூட பாரதி இல்லாத வீடு வெறுமையாக இருப்பது போலவே உணர்ந்தவள் அவளையும் அறியாமல் அவனின் வரைவை எதிர்பார்த்தது அவளின் மனம். அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை. இரண்டு நாளில் வருகிறேன் என்று சென்றவன் ஒரு வாரம் சென்ற பின்னர்தான் வீடு வந்து சேர்ந்தான்.

“சுமிம்மா அண்ணா எங்கே போனான்?” எரிச்சலோடு அவன் தொடங்க, “நீ அவனிடமே கேட்க வேண்டியது தானே?” என்று வழக்கம் போல அவனை வம்பிற்கு இழுத்தார் சுமிம்மா.

நிலா அமைதியாக சாப்பிட, “அண்ணா போன் சுவிச் ஆப் என்று வருது சுமிம்மா..” என்றான் அவன் மீண்டும் அண்ணனுக்கு அழைத்தவண்ணம்.

“அவன் ஏதோ முக்கியமான வேலையாக போயிருக்கான் பிரவீன் வந்துவிடுவான்..” என்றவரின் பார்வை நிலாவின் மீது படிந்தது. தெளிந்த நீரோடை போல தெளிவாக இருக்கும் அவளின் முகம் இன்று குழப்பத்தில் கலங்கிய குளம் போல இருந்தது.

அவரின் பார்வையை கவனித்த பிரவீன், “அண்ணி ஒரு பாட்டு பாடுங்க..” என்றவன் இயல்பாக சொல்ல நிலாவிற்கு தூக்கிவாரிப் போட்டது.

அவனின் அண்ணி என்ற அழைப்பில் திடுக்கிட்டு நிமிர்ந்த நிலா, “என்ன சொல்லி கூப்பிட்டீங்க பிரவீன் அண்ணா..” என்று அவள் ‘அண்ணா’வில் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து கேட்டாள்.

“நான் உங்களுக்கு அண்ணா இல்ல.. நீங்கதான் எனக்கு அண்ணி..” என்று அவளைவிட அழுத்தமாக கூறினான் பிரவீன்.

அவள் இங்கே வந்த நாளில் இருந்து அண்ணாவின் பார்வையில் மாற்றத்தை உணர்ந்தவன், அவர்களே முடிவெடுக்கட்டும் என்று அமைதியாக இருந்தான். அது தானாக நடக்காது என்று பாரதியின் பிறந்தநாளுக்கு பிறகு புரிந்துகொண்டவன் வேண்டுமென்றே குண்டை தூக்கிப்போட்டான்.

“நான் உங்களுக்கு அண்ணி இல்ல பிரவீன்..” என்றவளின் முகம் கொஞ்சம் மாறவே, “இல்ல நான் சொல்றேன் நீங்க எனக்கு அண்ணி தான்..” என்று அவளிடம் சண்டைக்கு தயாராகவே சுமிம்மா அவர்களின் சண்டையை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்தார்.

அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த பாரதி, “அவள் தான் உனக்கு அண்ணி என்று நீயே முடிவு பண்ணிவிட்டாயா பிரவீன்..” என்றவனின் குரல்கேட்டு நிலா திரும்பிப் பார்த்தாள்.

தன்னோட வழக்கமான கம்பீரத்துடன் நடந்து வருபவனை பார்த்து அவளின் இமைகள் இமைக்க மறந்தது. ஒரு வாரம் அவனை பார்க்காமல் இருந்த தாக்கமா? இல்லை அவனின் மீது அவள் கொண்ட காதலா? என்ற கேள்விக்கு அவளுக்கே விடை தெரியவில்லை.

அவனின் உருவத்தை மெல்ல தன்னுடைய இதயப்பெட்டகத்தில் சேமித்தவளின் விழிகள் அவனோடு மௌன பாசை பேசியது. அவளின்  பார்வை தன்மீது நிலைக்கவே, ‘உள்ளுக்குள் காதலை வெச்சிகிட்டு வெளியே வேஷமா போடற..’ என்றவனின் பார்வை அவளின் மீது மையலுடன் படிந்தது.

“நான் முடிவே பண்ணிட்டேன் அண்ணா. நீ இவங்களை தான் கல்யாணம் பண்ணனும். இவங்கதான் என்னோட அண்ணி..” என்று பிடிவாதமாக பிரவீன் சொல்ல, “கல்யாணம் பண்ணிட்டால் போச்சு..” என்று சாதாரணமாகவே கூறிவே, “இது தான் என்னோட அண்ணா..” பிரவீன் அவனுக்கு ஹை-பை கொடுத்தான்.

அவனின் வார்த்தைகளில் தன்னை மீட்டெடுத்த நிலா, “அதுக்கு நான் இருந்தால் தானே..” என்றவள் எழுந்து அறைக்குள் செல்ல அவனின் பார்வை அவளை பின் தொடர்ந்தது.

அவள் அறைக்குள் சென்றதை உறுதி செய்துகொண்ட சுமிம்மா, “பாரதி எங்கே போயிருந்த?” என்று கண்டிப்புடன் கேட்க, “அம்மா உங்களோட அனைத்து கேள்விக்கும் பதில் சொல்றேன்..” என்றவன் சாப்பிட அமர்ந்தான் பாரதி.

அதன்பிறகு அவன் சுமிம்மாவிடம் அனைத்து உண்மைகளையும்  சொல்ல, “இப்படியும் சிலர் இருக்காங்களா பாரதி? அவங்களும் ஒரு மனுஷங்களா? நீ சொல்வதை கேட்பதற்கே அவருப்பாக இருக்கு..” என்றவர் முகம் சுளித்தார்.

“இருக்காங்க சுமிம்மா..” என்றான் பாரதி. சிறிதுநேரம் அங்கே மெளனமாக கழிந்தது.

ச“பாரதி உன்னோட முடிவு என்ன?” என்று தீர்க்கமான பார்வையுடன் கேட்கவே பாரதி சிறிதும் தாமதிக்காமல் பதில் கொடுத்தான்

“இதற்கு மேல் யோசிக்க எதுவும் இல்ல சுமிம்மா. எனக்கு நிலா வேண்டும். அவளை இழக்க தயாராக இல்லம்மா. அவளோட மனசில் இருக்கும் காயத்தை மறக்கடிக்க என்னோட காதலால் முடியும்..” என்றவன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தான்.

“அஸ்திவாரம் இல்லாமல் மணல்வீடு கட்டிய சந்தோஷத்தில் அவள் பேசும் பொழுதே அவளின் வார்த்தைகளை நான் கொஞ்சம் உன்னிப்பாக கவனித்திருந்தால் எல்லாம் அன்றே சரி செய்திருக்கலாம். இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது..” என்றான் அவன் சிந்தனையுடன்.

அவனுடைய முடிவில் மாற்றம் இல்லை என்று உணர்ந்த சுமிம்மாவின் மனதில் நிம்மதி பரவியது. அன்று இரவு அனைவரும் உறங்கிய பிறகு படிக்கட்டில் தனியாக அமர்ந்திருந்தாள் நிலா.

இருளில் தனித்து அமர்ந்திருந்தவளின் மனம் வேறு திசையில் பயணிக்க, ‘என்னோட பின்னணி தெரிந்தால் இவ்வளவு சீக்கிரம் சரின்னு சொல்வாரா? இதெல்லாம் இனக்கவர்ச்சி..’ என்று நினைத்தாள்.

‘பாரதியோட உண்மையான காதல் உனக்கு இனகவர்ச்சியா? காதலுக்கும் இனகவர்ச்சிக்கும் வித்தியாசம் உனக்கு தெரியாமல் தான் நீ இருக்கிற? நீ அவன் மீது வைத்திருக்கும் அன்பிற்கு பெயரும் இனகவர்ச்சிதானா?’ என்று அவளின் மனமே அவளை கேள்வி கேட்க அவள் மௌனமானாள்.

பாரதியோட காதல் உண்மை என்று அவளுக்கு தெரியும். அவன் பலமுறை தன்னை பார்க்கும் பார்வையில் அவளும் அதை உணர்ந்திருக்கிறாள். ஆனால் அவள் எப்பொழுது அவனைக் காதலிக்க தொடங்கினாள்? என்றவள் சிந்தனையில் ஆழ்ந்தாள்.

முதல்நாள் சந்திப்பில் இருந்தது இன்று நடந்தது வரை அவளின் மனதில் வரிசைகட்டி நின்றது. பாரதியின் காதல், சுமிம்மாவின் தாய்பாசம், அஜய் மற்றும் திவாகரின் தங்கை பாசம், ரேணு மற்றும் ரித்துவின் உண்மையாக நட்பு இவற்றின் முன்னால் அவள்தான் தோற்று போனாள்.

பாரதி காதலில் சுயநலம் இல்லை என்ற உண்மையை உணர்ந்த நிலாவின் மனதில் வலி அதிகரிக்க அவர்களை எல்லாம் ஏமாற்றிக்கொண்டு தன்னை நினைத்தவள், ‘இவங்களை எல்லாம் ஏமாற்றியது நான் தான்..’ என்ற உண்மை உணர்ந்து விழிகள் கலங்கியது. அவளின் உதடுகள் தானாக பிரிந்தது.

அலையில் ஆடும் காகிதம் அதிலும் என்ன காவியம்..

நிலையில்லாத மனிதர்கள் அவர்க்கும் என்ன உறவுகள்..

உள்ளம் என்றும் ஒன்று அதில் இரண்டும் ஒன்றல்லவா?

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்..

வசந்தகால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்..

கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்..”  என்றவளின் குரல் அறையில் விழித்திருந்த பாரதியின் கவனத்தை ஈர்க்கவே, ‘கனவுகள் கலையாது நிலா..’ என்று மனதிற்குள் கூறியவன் மெல்ல கதவு திறந்து வெளியே வந்தான்.

விடிவிளக்கின் வெளிச்சம் அவள் அமர்ந்திருக்கும் இடத்தை அவனுக்கு காட்டிகொடுக்க அவளின் பாடலை ரசித்தவண்ணம் தன்னுடைய அறையின் வாசலில் நின்றிருந்தான் பாரதி. அதன்பிறகு வந்த நாட்கள் அதன்போக்கில் சென்றது.

அன்றைய காலைபொழுது அழகாக விடியவே எழுந்து குளிக்க சென்றாள் நிலா. அவள் அணிந்திருந்த வெள்ளை சுடிதார் முழுக்க ரத்தகரை இருப்பதை பார்த்ததும் முதலில் அதிர்ந்தாள்.

தன்னுடைய அடிவயிற்றில் கைவைத்து பார்த்தவள் ‘இது எப்படி சாத்தியம்..?’ என்று சிந்தனையுடன் குளித்துவிட்டு அந்த துணியை நன்றாக துவைத்து கொடியில் காயவைத்த்துவிட்டு மாடியின் கைப்பிடி சுவற்றில் சாய்ந்து நின்றாள்.

கிட்டதட்ட நான்கு வருடங்கள் மென்சஸ் ஆகாத நிலா அன்றுதான் மென்சஸ் ஆகிருந்தாள். அவளின் மனதில் ஏற்பட்ட சந்தேகத்திற்கு விடை கிடைக்காமல் போக, “சுமிம்மா நான் வேலைக்கு கிளம்பறேன்..” என்று வீட்டிலிருந்து கிளம்பிய நிலா மருத்துவனையைச் சென்றடைந்தாள்.

தன்னுடைய உடலை செக் பண்ண சென்ற இடத்தில் தான் அவளின் பழைய தோழி ரூபிணியை சந்திக்க நேர்ந்தது. அவளை சுடிதாரில் பார்த்த அவளின் தாயார் செல்வி, “நீ நிலாதானே..” என்று அவளை கண்டு அவர் அடையாளம் கேட்டார்.

“ம்ம்.. ஆமா நீங்க..” என்றவள் நின்று அவரிடம் பெச்சுகொடுக்க, “நான் ரூபினியோட அம்மா..” என்று அவரை அறிமுகம் செய்யவே நிலாவின் முகம் தாமரை மலரென்று மலர்ந்தது.

“அம்மா நல்ல இருக்கீங்களா? ஆமா ரூபிணி எங்கே..”என்று அவள் ஆர்வத்துடன் கேட்க, “அவளுக்கு குழந்தை பிறந்திருக்கு அறையில் இருக்கிற..” என்று அவளை அழைத்துக்கொண்டு சென்றார்.

கதவு திறப்பதைக் கண்டு திரும்பிய ரூபிணி தாயின் பின்னோடு நின்ற நிலாவை அடையாளம் கண்டதும், “ஏய் நிலா எப்படி இருக்கிற..” என்றவள் குழந்தையைத் தாயிடம் கொடுத்தாள்.

ரூபிணி நிலாவின் பள்ளிதோழி. நிலாவின் சரித்திரம் அவளுக்கு அத்துபடி. இத்தனை வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் நேரில் சந்திக்கின்றனர்.

“அம்மா குழந்தையைக் கொடுங்க..” என்று அவரின் கையிலிருந்து குழந்தையை வாங்கிய நிலா, “பெண் குழந்தையா ரூபிணி.. ரொம்ப அழகாக இருக்கிற..” அவளின் அருகில் அமர்ந்து குழந்தையிடம் இயல்பாக பேசினாள்..

“குட்டிம்மா இங்கே பாரு அத்தை வந்திருக்கேன்..” என்று அவள் குழந்தையிடம் பேச அந்த குழந்தை க்ளுக் என்று சிரித்தது.

அவளின் உடையை கவனித்த ரூபிணி, “நீ எப்படி இருக்கிற நிலா.. ஆளே மாறிப்போயிட்ட..” என்றவள் தோழியைப் பார்த்த சந்தோஷத்துடன் கூறினாள்.

“வாழ்க்கை ஒரே மாதிரி இருக்க கூடாது ரூபி. கொஞ்சம் மாற்றமும் வேண்டும்..” புன்னகையுடன் அவள் பதில் கொடுக்க, “நம்ம ஊரில் எல்லோரும் உன்னை ஓடிபோயிட்ட என்று பேசறாங்க நிலா..” என்ற ரூபினியின் குரலில் வருத்தமே மிஞ்சியது.

“ஊர் ஆயிரம் பேசும் அதற்காக நம்ம என்ன பண்ண முடியும்?” என்றவளின் மனம் புரியாதவள் அல்ல ரூபிணி. அவளின் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் அவளுக்கு தெரியும். ஆனாலும் அவளின் மனம் தோழியின் நிலையை எண்ணி கலங்கியது.

“இந்நேரம் உனக்கு குழந்தை இருந்திருந்தால் ஆறு வயது ஆகிருக்கும்.. ஏண்டி எல்லாத்தையும் விட்டுட்டு வந்து நீ என்ன சாதிச்ச?” என்று கேட்டதும் நிமிர்ந்த நிலா, “நான் என்ன சாதிக்கல. நான் இப்பொழுது டிகிரி முடிச்சு வேலைக்கு போயிட்டு இருக்கேன். வீட்டைவிட்டு வந்தவள் எல்லாம் ஓடிப்போனவள் இல்ல ரூபி..” என்றவள் தோழியின் முகத்தை தீர்க்கமாக பார்த்தாள்.

“வாழ்க்கை உனக்கு விளையாட்ட நிலா. கட்டிய தாலியை கலட்டி கணவன் மூஞ்சியில் வீசிட்டு வந்தவள் இன்னைக்கு படிப்பை முடிச்சிட்டு வேலைக்கு போகிறேன் என்று ஈசியாக சொல்ற..” என்று இத்தனை நாளாக மனதை அரித்த கேள்வியை கேட்டுவிட்டாள் ரூபிணி..

“காலுக்கு ஆகாத செருப்பை கலட்டிதான் எறியணும் தலைமேல் தூக்கி வெச்சிட்டு போகவும் முடியாது. பூஜை ரூமில் வைத்து கும்பிடவும் முடியாது.. என்னை பொறுத்தவரை நான் செய்தது சரிதான் ரூபி..” என்று உறுதியாக கூறினாள் நிலா.

அவளின் தோழி அவளை பார்த்து புருவம் உயர்த்திட, “என்னோட கழுத்தில் ஏறிய தாலி எனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பியது எல்லாம் ஒரு காலம் ரூபி. அந்த கயிறே என் கழுத்துக்கு தூக்கு கயிறாக மாறுவதை பார்த்துட்டு சும்மா இருக்க என்னால முடியல. அதுதான் கலட்டி வீசிட்டு வந்துட்டேன்.. ஊர் உலகம் ஆயிரம் சொல்லும் சொல்றவங்களுக்கு என்னோட இழப்பு என்னனு தெரியுமா?” என்றவள் மடியில் தூங்கிய குட்டி தேவதையின் தளிர் விரல்களை பாசத்துடன் வருடிகொடுக்க அந்த அறையில் அமைதி நிலவியது.

“ரூபி நீயுமா என்னை புரிஞ்சிக்கல..” என்று வருத்ததுடன் கேட்ட நிலாவின் விழிகள் அவளையும் மீறி கலங்கியது. அவளின் உணர்வுகள் புரிந்தாலும் கூட அவள் தனித்து வாழ்ந்து விடுவாளா இந்த சமுகத்தில் என்பது அவளின் கேள்வியாக இருந்தது.

அவளின் நிலையை புரிந்துகொண்டு ரூபிணி, “எனக்கு உன்மேல் சந்தேகம் இல்ல நிலா. இனிமேல் உன்னோட வாழ்க்கையை இப்படியே தனியாக வாழ்ந்துவிடுவது என்று முடிவு பண்ணிட்டியா?” அவள் சந்தேகமாக இழுக்க நிலா நிமிர்ந்து தோழியின் முகம் பார்த்தாள்.

“கண்டிப்பா இல்ல ரூபி. என்னை எனக்காக விரும்பும் ஒருத்தரை கல்யாணம் பண்ணிட்டு வாழ போறேன்..” என்று தன்னுடைய முடிவை தோழியிடம் கூறிய நிலாவின் முகம் மலரவே ரூபியின் மனமும் நிம்மதியானது!

அதுவரை அமைதியாக இருந்த செல்விம்மா வந்து அவளின் கூந்தலை வருடி, “ரொம்ப நல்ல முடிவு எடுத்திருக்கிற நிலா. பெண்கள் கொட்ட கொட்ட குனி கூடாதும்மா..” என்றவர் அவளை மார்போடு சேர்த்து அணைத்துகொண்டார்.

“தவறு செய்தவர்களே இந்த சமுகத்தில் தலை நிமிர்ந்து வாழும் பொழுது எந்த தவறும் செய்யாத நான் ஏன் அம்மா வாழக்கூடாது? கண்டிப்பா நான் கல்யாணம் பண்ணிக்குவேன் அம்மா..” என்றவள் பெருமூச்சுடன் நிமிர்ந்தாள்.

“ம்ம் நீ சொல்வதும் சரிதான் நிலா..” என்று ரூபி புன்னகைத்தாள்.

“அவன் முன்னாடி நான் தோற்றுபோக மாட்டேன்ம்மா. இத்தனை நாள் தனியாக இருக்கலாம் என்ற முடிவில் தான் இருந்தேன். ஆனால் இன்னைக்கு என்னோட பாதையில் ஒரு மாற்றம்..” என்றவள் தொடர்ந்து,

“அவன் முன்னாடி நான் வாழ்ந்து காட்டணும் அம்மா..” என்று தெளிவாக கூறிய நிலாவின் முடிவில் அறைக்குள் இரண்டு உள்ளங்கள் நிம்மதியடைந்தது. அந்த அறைக்கு வெளியே நின்று அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த பாரதியின் மனமும் நிறைந்தது.

 

error: Content is protected !!