vav7

vav7

வா… அருகே வா! –  7

ஆச்சியின் கோபத்தை  அறிந்த பூங்கோதை, “அத்தான்…” என்று அலறிக்கொண்டு குறுக்கே பாய, ஆச்சியின் கோபமும், பூங்கோதையின் பாசமும் அறிந்த கதிரேசன் விலகி குறுக்கே பாய்ந்த பூங்கோதையை தன்பக்கம் இழுத்தான்.

அரிவாள் வீசப்பட்ட வேகத்தில், கயல் திலக் இருவரும் முத்தமா ஆச்சி வீட்டுக்குள் வந்தனர்.

இழுத்த வேகத்தில் பூங்கோதை கதிரேசன் மேல் சாய்ந்தாள். கதிரேசனால் பூங்கோதையை காப்பாற்ற முடிந்ததே தவிர, அந்த அரிவாள் அவள் கைகளைப் பதம் பார்ப்பதை  தவிர்க்க முடியவில்லை.

பதறிக் கொண்டு வந்தார் முத்தமா ஆச்சி. “அட… கூறு கெட்டவளே! அறிவு இருக்கா உனக்கு? உனக்கு உங்க அத்தான் மேல இருக்க பாசம் எனக்கு எம் பேரன் மேல இருக்காதா?. நான் வீசுத அரிவாள்ல இருந்து எம் பேரனுக்கு விலக தெரியாது. கோழி மிதிச்சி குஞ்சு சாவுமா? நான் வீசுத அரிவாள், எம் பேரனை பதம் பார்க்குமா? எங்க பேச்சில் நீ ஏண்டீ குறுக்கால வந்த?” என்று ஆச்சி பூங்கோதையிடம் சண்டை பிடித்தார்.

“பேச்சு பேச்சா இருந்தா, நான் ஏன் குறுக்கால வாரேன்? பேசும் போது அரிவாள்ல வீசுத!” என்று பூங்கோதை பேச, “புறவு பேசலாம். இப்ப ஆஸ்பத்திரிக்கு போவோம்.” என்று பதட்டமாகக் கூறினான் கதிரேசன்.

திலக்கின் அறிவுரையில், ஒரு ஈரத் துண்டை, அதன் மேல் சுற்றினாள் கயல். இரத்தம் சற்று மட்டுப்பட்டிருந்தது.

“ஆஸ்பத்திரி எல்லாம் வேணாம். காபித்தூள் வச்சா சரியாகிரும்.” என்று பூங்கோதை கூற, “லூசா நீ? எந்த காலத்தில் இருக்க? காபித்தூள் வச்சா செப்டிக்தென் ஆகும்.” என்று திலக் பற்களை நறநறக்க, பூங்கோதை வலியால் சோர்வாக அமர்ந்தாள்.

“பூங்கோதை வா…” என்று கதிரேசன் அவள் கைகளைப் பிடிக்க, கீழே இருந்த அரிவாளை மீண்டும் எடுத்தார் முத்தமா ஆச்சி.

“கையை வச்சா வெட்டிருவேன்… விடுறா, என் பேத்தி கையை… அதுதேன் என் பேத்தி ராசி சரியில்லைன்னு கட்டிக்க மாட்டேன்னு அம்மையும், பிள்ளையும் சொல்லிடீகள்ல? புறவு உனக்கு இங்ஙன என்ன சோலி? போ… நான் என் பேத்தியை பார்த்துப்பேன்.” என்று கறாராகக் கூறினார் முத்தமா ஆச்சி.

‘இவுக சரிபடமாட்டாக…’ என்ற எண்ணத்தோடு வேகமாக வெளியே சென்றான் திலக்.

“ராசி என்னல ராசி? மனுச புத்தி… நல்ல நேரம் வா… அருக வான்னுட்டு காத்திருக்கிறது தானலே! சும்மா தான் தப்பு பண்ணிட்டு, நேரம் சரி இல்லை. ராசி சரி இல்லைன்னு பழிய போடவேண்டியது.” என்று முத்தமா ஆச்சி நக்கலாகக் கூறினார்.

“ஆச்சி… விடு ஆச்சி… அத்தான் என்ன பண்ணுவாக? அவுகள ஏன் வைதீக? நீங்க பல வருஷம் கனவை வளத்தத்துக்கு அத்தான் என்ன செய்ய முடியும்?” என்று அந்த வலியோடும் கதிரேசனுக்காக பேசினாள் பூங்கோதை.

“நான் சொல்றேன் கேட்டுக்கோ. நல்ல நேரம் காலத்தின் சுழற்சி. வாழ்ந்தவன் வீழ்வதும், வீழ்ந்தவன் வாழறதும் இயற்கை. எம் பேத்தி வாழுவா டா. நீ கல்யாணம் பண்ணி சந்தோசமா வாழவைப்பேன்னு நான் நினச்சேன். ஆனா, என் பேத்தி இந்த ஊரு வியக்க வாழுவா…” என்று முத்தமா ஆச்சி சபதமிட்டார்.

துண்டை தாண்டியும் பூங்கோதையின் கைகளில் ரத்தம் வழிய, “அதுக்கு பூங்கோதை உயிரோட இருக்கணும். இப்படி ரத்தம் போச்சுன்னா, அவ இருக்கவே மாட்டா ஆச்சி.” என்று திலக் முத்தமா ஆச்சியிடம் கூறிக்கொண்டு, தான் நண்பனின் ஜீப் கொண்டு வந்திருப்பதாகவும் அழைத்து செல்வதாகவும் கூறினான்.

சிறு வயதிலிருந்து பார்க்கும் திலக்கின் மீது, முத்தமா ஆச்சியின் சந்தேகம் திரும்பவில்லை. ஆனால், அந்த வலியிலும், பூங்கோதையின் இதயம் வேகமாகத் துடித்தது.

கயல் கூட செல்வதாகச் சொல்ல, கயல், பூங்கோதை திலக்கின் ஜீப்பில் ஏறினர்.

கதிரேசன் உடன் செல்ல, எத்தனிக்க, “ஏல… நீ போய்டு… வராத! வேண்டாம்.” என்று முத்தமா ஆச்சி மீண்டும் பிரச்சனையைத் துவங்க, “அத்தான், நீங்க போங்க நான் பாத்துக்கறேன்.” என்று பூங்கோதை கூற, திலக் கதிரேசனைப் பார்த்தான்.

கதிரேசன் சம்மதமாகத் தலை அசைக்க, ஜீப் வேகமாகச் சென்றது.

அத்தனை பெரிய காயம் இல்லை என்பதாலும், வீட்டைப் பூட்டுவதற்கு நேரம் எடுக்கும் என்பதாலும், கயல் உடன் செல்வதாலும் ஆச்சி வீடு தங்கிவிட்டார்.

 

“ஆச்சி…” என்று கதிரேசன் அழைக்க, “கதிரேசா போய்டு… வராதா… நீ வந்தா என் கனவு மண்ணா போனதுதேன் நியாபகம் வரும்.  உங்க அம்மை மாதிரி நான் சாபம் கொடுக்க மாட்டேன். நீ என் பேரன்… நீயும் நல்லாருக்கணும். ஆனா,  அம்மா, அப்பா இல்லாத பேத்தி எனக்கு ரொம்ப முக்கியம்.” என்று கூறியபடி வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்.

அவர் காலடியில் கதிரேசன் அமர, “ஆம்புள புள்ளையா, உங்க அம்ம்மாவை அடக்க தெரியல…  அம்மா… அம்மான்னு கால்ல விழுந்துட்டு. இனி இங்க வராத… போய்டு…” என்று ஆச்சி கடுமையாகக் கூற, “ஆச்சி…” என்று கதிரேசன் பேச ஆரம்பிக்க, “வராதா. இனி உன் ஞாபகம், என் பேத்திக்கு வரக்கூடாது.” என்று முத்தமா ஆச்சி கூற, மௌனமாக எழுந்து தளர்ந்த நடையோடு வெளியே சென்றான் கதிரேசன்.

‘காலம் அனைத்தையும் சரி செய்யும்…’ என்ற நம்பிக்கையோடு வீட்டை நோக்கி நடந்தான் கதிரேசன்.

 

ஜீப் தெருமுனையைத் தாண்ட, “கயல் நீ இறங்கிக்கோ… நான் பூங்கோதையை பாத்துக்கறேன்…” என்று திலக் அழுத்தமாக கூற, “என்ன விளையாடுதீகளா? ஆச்சி, என்னை நம்பித்தேன் பூங்கோதையை அனுபிருக்காக… என்னால் முடியாது.” என்று கயல் மறுப்பு தெரிவிக்க, “கயல், நீ இறங்கு… மிலிட்டரி தானே. நான் பாத்துக்கறேன். கோவிலுக்கு போயிட்டு, அப்புறம் வீட்டுக்கு போ. நேரமாச்சுன்னு நான்தென் கிளம்ப சொன்னேன்னு சொல்லு.” என்று பூங்கோதை கூற, கயல் அவளைச் சந்தேகமாகப் பார்த்தாள்.

பூங்கோதை தன் கண்களை மூடி, தன் முடிவின் அழுத்தத்தைக் கூற, கயல் தயக்கத்தோடு இறங்கினாள்.

ஜீப் அசுர வேகம் எடுத்து, மருத்துவமனை முன் நின்றது. காயம் அத்தனை ஆழம் இல்லை. ஆனால், தையலிட வேண்டிய நிலையில் தான் இருந்தது. மருத்துவரின் பல கேள்விகளுக்கு நாசுக்காகப் பதில் கூறிவிட்டு சிகிச்சையை முடித்துவிட்டு இருவரும் கிளம்பினர்.

எதற்கு இந்த தனிமையை திலக் விரும்பினான் என்று பூங்கோதையும் கேட்கவில்லை. திலக்கும்  கூறவில்லை.

அவர்கள் திரும்புகையில், ஜீப் அதன் பாதையை விட்டு வேறு வழியாகச் சென்று ஆள் அரவமில்லாத இடத்தில் நின்றது.

பூங்கோதை சோர்வாகச் சீட்டில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

இன்று விளையாடும் பொழுது அவள் முகத்திலிருந்த, ஒளிர்வு இப்பொழுது இல்லை.

‘எவ்வளவு நடந்திருச்சு?’ என்ற எண்ணத்தோடு, “வலிக்குதா?” என்று அக்கறையாகக் கேட்டான் திலக்.

“இல்லை அரிவாள் பட்ட இடம் குளுகுளுன்னு ஜில்லுன்னு இருக்கு.” என்று சாலையைப் பார்த்தபடி கூறினாள். பூங்கோதையின் சோர்வு அவனைத் தாக்க, அவளைச் சீண்டும் எண்ணம் திலகிற்கு இல்லை.

மௌனமாக புன்னகைத்தான்.

“வருத்தப்படுதியா?” என்று திலக் அக்கறையாகக் கேட்க, பூங்கோதையின் கண்கள் கலங்கியது.

‘ஆச்சி என்னை ஒரு வார்த்தை கேட்கலையே? ஆச்சிக்கு அது பேசினது நடக்கலேன்னு தான் வருத்தம். நான் என்ன நினைக்கனு கேட்கவே இல்லையே? என் வயசில் யாரவது இருந்தா கேட்டிருப்பாகளோ? கயல் கேட்பா…’ என்ற எண்ணத்தோடு, மறுப்பாகத் தலை அசைத்தாள் பூங்கோதை.

“கல்யாணம் நின்னது வருத்தமில்லையா?” என்று திலக் மீண்டும் சந்தேகமாக கேட்க, “தெரியல… ஆனால், அத்தான் பாவம். அவுக என்ன பண்ணுவாக. அத்தை அப்படித்தேன். எல்லாரும் அத்தானை தான் வைவாக. அத்தை எல்லாம் அவ்வுளவு எளிதா சமாளிக்க முடியாது.” என்று விரக்தியாக கூறினாள் பூங்கோதை.

“அத்தானை அவ்வளவு பிடிக்குமா?” என்று திலக் கேட்க, கண் மூடி சீட்டில் சாய்ந்து தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள் பூங்கோதை.

தன் காதலியின் வருத்தம் அவனை பாதிக்க, அவள் தலை கோத, திலக்கின் கைகள் பரபரத்தது. ஆனால், அவள் முகத்திலிருந்த சோகம், அவனைத் தூர நிறுத்தியது.

“உன் அத்தானுக்கு உன் மேல் காதல் இல்லை.” என்று அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கோடு மெதுவாக கூறினான் திலக்.

“தெரியும்…” ஒற்றை வார்த்தையாகக் கூறினாள் பூங்கோதை. “உனக்கும் உங்க அத்தான் மேல் காதல் இல்லை.” என்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறினான் திலக்.

“தெரியும்…” என்று கூறி, தன் உடல் வலியில், தான் இன்று பட்ட அவமானத்தின் வலியிலும் தன்னையும் மீறிப் பேசினாள் பூங்கோதை.

“ஆனால், எனக்கு அத்தானை பிடிக்கும். அத்தானுக்கும் என்னைப் பிடிக்கும். ஒரு கல்யாணத்துக்குக் காதல் முக்கியம் இல்லை. ” என்று தெளிவாகக் கூறினாள் பூங்கோதை.

தன் காதலியின் வெள்ளந்தியான பேச்சில் திலகிற்கு கோபம் வரவில்லை.

“அதனாலதேன், எல்லாம் சரி வரமுன்னுனு நினச்சேன். ஆனால், இப்ப அத்தானிற்கு என்னால்தென் இவ்வளவு கஷ்டம். அந்தானைக்கு, எல்லாரும் அத்தானை வைதாக…” என்று பூங்கோதை தன்னை மீறி கூறினாள்.

 

‘சொல்லி அழக்கூட இவளுக்கு யாருமில்லை! ஆச்சியிடம் எதை சொல்லுவாள்? நான் இருக்கேன், இவள் துயர் தீர்க்க என்று சொன்னால் புரிந்து கொள்வாளா?’ என்ற எண்ணத்தோடு அவளை அமைதியாகப் பார்த்தான் திலக்.

‘கதறி அழ, என் தோள்கள் இருக்கையில், அழாமல் இப்படி இறுமாப்போடு இருக்கிறாளே?’ என்ற யோசனையோடு,  “அதை உங்க அத்தான் பார்த்துப்பான்.” என்று திலக் கூற, “ஆனா, மிலிட்டரி நீ நினைச்சது சரியாய் நீ திட்டம் போட்டபடியே நடந்திருச்சுல?” என்று தன் உதட்டைச் சுழித்து அழுத்தமாகக் கேட்டாள் பூங்கோதை.

திலக் புரியாமல் பார்க்க, “என்ன தீவிரவாதிக்கு போட வேண்டிய திட்டத்தை, எனக்கு போடுற மிலிட்டரி?” என்று பூங்கோதை காட்டமாகக் கேட்டாள்.

‘ஆக, நான் காதல் செய்ய தனியா கூட்டிட்டு வந்தா, பியூட்டி என்கிட்டே சண்டை போட தனியா கூட்டிட்டு வந்திருக்கு.’ என்ற எண்ணத்தோடு, “நீ பேசுறது எனக்கு புரியலை…” என்று திலக் பூங்கோதையை கூர்மையாகப் பார்த்தபடி கூறினான்.

“உனக்கு நான் வேணும். அதுக்காக, என் மேல் பழி சுமத்தி, எங்க அத்தான் வாயாலையே என்னை வேண்டாம்ன்னு சொல்ல வச்சிட்ட?” என்று பூங்கோதை அவன் முகம் பார்த்துக் கூறினாள்.

“இதுக்கு என்ன அர்த்தம்?” இத்தனை நேரம் பூங்கோதை மேல் தோன்றிய பரிதாபம் திலக்கிற்கு கோபமாக மாறி இருந்தது.

“இன்னைக்கு நடந்ததுக்கும், உனக்கும் சம்பந்தம் இருக்குனு அர்த்தம்.” என்று கூற, “நீ வேணும்னு கதிரேசன் அரிசி மண்டியில் நான் தீ வச்சிட்டேன்னு சொல்றியா?” என்று திலக் கோபத்தோடு அவள் கூறிய குற்றச்சாட்டை ஏற்க முடியாமல் தவிப்போடு கேட்டான்.

“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும். ஒரு பெண்ணோட கையை மடக்கி, அவள் உடல் பலவீனத்தை பயன்படுத்தி, ச்.. சீ… சொல்லவே அசிங்கமா இருக்கு. உன்னை நினைத்தா அசிங்கம்… நீ செய்த செயல் அசிங்கம்… நீயெல்லாம் த்தூ. நீ எந்த எல்லைக்கு வேணாலும் போவ!” என்று கடுப்பாக கூறினாள் பூங்கோதை.

பூங்கோதையின் பேச்சு திலக்கை சீண்ட,  “அசிங்கமா இருந்துச்சா பியூட்டி?” என்று சிகரெட்டை பற்ற வைத்தபடி ரசனையோடு கேட்டான் திலக்.

“ஆமா… அசிங்கமா இருந்துச்சு. அருவருப்பா இருந்துச்சு. உன் வீட்டு தட்டடியில் இதை சொன்னா, யார் காதில் விழுந்து என்ன பிரச்சனை ஆகுமோன்னு சொல்லை. இப்ப சொல்றேன். இனி இந்த வேலையை என்கிட்டே காட்டின, நீ உயிரோட இருக்க மட்ட.” என்று மிரட்டினாள் பூங்கோதை.

முத்தமா ஆச்சி வேணாம், நானே உன்னை அரிவாளால் வெட்டிருவேன்.

பூங்கோதை இறங்கி வேகமாக நடக்க, அவள் வழிமறித்து நின்றான் திலக்.

“அசிங்கம் இல்லை… நான் சொல்ல வந்தது காதல். என் செயல் அத்து மீறி இருக்கலாம். ஆனால் எல்லை மீறலை.” என்று திலக் கூற, “காதலை அசிங்க படுத்தாத.” என்று கூறி பூங்கோதை மீண்டும் வேகமாக நடக்க, அவளை தன் பக்கமாக இழுத்தான் திலக்.

“நான்தென் எல்லை மீறலைன்னு சொல்றேன்ல?” என்று கேட்டான் திலக். அவன் இழுத்த வேகத்தில் அவனை நெருங்கி அவள் நிற்க, விலக எத்தனித்தாள் பூங்கோதை.

அவன் தேகம் உரசும் இடம் கனலாய் எரிய, அதை அவள் முகம் அப்பட்டமாக வெளிக்காட்ட, “பியூட்டிக்கு என் மேல சிறந்த அபிப்பிராயம் போல! என்னை பார்த்தா உனக்கு பொம்பளை பொறுக்கி மாதிரி இருக்கா? இத்தனை வருஷத்தில் உனக்கு என்னை பத்தி தெரியாதா?” என்று பதவிசமாக கேட்டான் திலக்.

“எல்லை மீறல் எது? அத்து மீறல் எதுன்னு மிலிட்டரிகாரனுக்குத்தேன் தெரியும். எனக்கு தெரியாது.” என்று பூங்கோதை பட்டென்று கூறினாள்.

“பியூட்டி! எல்லை மீறல் எது… அத்து மீறல் எதுன்னு நான் சொல்லித்தரேன். கல்யாணம் பண்ணிப்போமா?” என்று திலக் ஆர்வமாக கேட்க, அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாட்டைப் பார்த்தாள் பூங்கோதை.

“ஏய்! உன்னை தான் கேட்கறாக… கல்யாணத்துக்கு சம்மதமான்னு?” என்று பூங்கோதை மாட்டை பார்த்துக் கேட்க, அது வலது பக்கமும் இடது பக்கமும்  தலை அசைத்தது.

“ம்… ச்… அதுக்கு உன்னை  பிடிக்கலையாம்.” என்று பூங்கோதை பாவமாக கூற, அவளை மேலும் கீழும் பார்த்தான் திலக்.

“அச்சச்சோ… மாட்டுக்கு பிடித்திருந்தா அதை கல்யாணம் பண்ணிருப்பேன். ஆனா, இப்ப அதுக்கு வழி இல்லை… உன்னைத்தேன் கட்டிக்க போறேன்.” என்று ஊப் என்று புகையை வெளியேற்றியபடியே கேலியாக ஆனால் அழுத்தமாக கூறினான்  திலக்.

“என்ன நிறைய அவமானப்பட்டிருக்கேன்… வேற வழி இல்லாமல் உன் காலில் விழுவேன்னு நினைச்சியா? இந்த அவமானம் எனக்கு புதுசில்லை. எனக்கு இது பழக்கம் தான். மத்தவங்களுக்கு கஷ்டம்ன்னுதேன் யோசிச்சேன். எனக்காக இல்லை.” என்று கூறி பூங்கோதை வேகமாக நடக்க, அவளை அலேக்காக தூக்கி ஜீப்பில் வைத்து அவன் கூறிய வார்த்தையில் நடுங்கிப் போனாள் பூங்கோதை.

ஜீப் வேகமாக திலக் நினைத்த இடத்தை நோக்கிப் பயணித்தது.

வா… அருகே வா!  வரும்….

 

error: Content is protected !!