KS 25

KS 25

காதல் சன்யாசி 25

பார்வதி கடிகாரத்தையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.

தமிழ்ச்செல்வி சமைத்த உணவுகளை உணவு மேசையில் எடுத்து வைக்க,
“நேரமாச்சு தமிழ், ஏன் கிருஷ்ணா இன்னும் வரல?” என்று கேட்டார்.

“சாரி ம்மா, அவர் வர லேட் ஆகும்னு சொன்னார். நான் தான் உங்க கிட்ட சொல்ல மறந்திட்டேன்” என்றாள் தமிழ் தயக்கமாய்.

“முன்ன தான் இப்படி நேரம் கழிச்சு வந்திட்டு இருந்தான். கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச நாளா சீக்கிரம் தான வந்துட்டு இருக்கான். இன்னைக்கு அப்படி என்ன புதுசா வேலை வந்துச்சோ?” என்று முணுமுணுத்தவராய் பார்வதி தொலைக்காட்சியில் கவனம் பதித்தார்.

தமிழின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தபடி இருந்தது.

நிவேதாவை சந்திக்க போவதாக ராகுல் இவளிடம் சொல்லிவிட்டு தான் போயிருந்தான்.

அவர்கள் நல்ல முடிவாக எடுக்க வேண்டும் என்று அவள் பதைபதைத்து கொண்டிருந்தாள்.

அழைப்பு மணி ஒலிக்க, பார்வதி எழுந்து சென்று கதவை திறக்க, இறுகி சிவந்த முகத்தோடு ராகுல் உள்ளே வந்தான்.

“ஏன் டா, இன்னைக்கு இவ்வளோ லேட்டு?”

பார்வதியின் கேள்விக்கு பதில் தராமல், “எங்க ம்மா அவ?” என்று பற்களை கடித்தபடி, தன் தோள் பையை கழற்றி சோஃபா மீது வீசி எறிந்தான்.

“ஏய் தமிழ்…” அவன் உயர்த்திய குரலில் பதற்றமாய் கூடத்திற்கு வந்தவள், அவன் சீற்றமான தோற்றம் கவனித்து தயங்கி நின்றாள்.

“நிவி கிட்ட என்னடி சொல்லி தொலைச்ச?” என்று அவளிடம் சீறினான் ராகுல்.

அவன் கோபத்தின் காரணம் இப்போது அவளுக்கு ஓரளவு புரிய, “நான் எதுவும் தப்பா மேம் கிட்ட சொல்லல… அஆக்!”
அவள் சங்கடமாய் உண்மை மறைத்து கூற, ராகுல் ரௌத்திரமாய் அவள் கன்னத்தில் அறைந்து இருந்தான். தமிழ் துடிதுடித்து போனாள். வலியில் அவள் கன்னம் சிவந்து கண்களில் நீர் பெருகியது.

பார்வதி பதறி வந்து தமிழை பிடித்து கொண்டு, “என்ன டா இது புது பழக்கம்? கட்டின பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கறது, ஆம்பளன்ற திமிர் வந்திடுச்சா உனக்கு?” என்று மகனை அதட்டினார்.

“எதுவும் தெரியாம பேசாத ம்மா. இவ என்ன காரியம் செஞ்சிட்டு வந்திருக்கா தெரியுமா?” என்று குரலை உயர்த்தினான் அவன்.

“என்ன இருந்தாலும் நீ அடிச்சது தப்பு தான் கிருஷ்ணா.”

“ம்மா, நிவேதா கிட்ட போய் எதை எதையோ சொல்லி அவளோட மனசை கலச்சிருக்கா, இவ சொன்னதை எல்லாம் நம்பி அவளும் என்கிட்ட வந்து நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேக்குறா” ராகுல் ஆத்திரம் குறையாமல் பேச,

“மேம் கிட்ட நான் எதுவும் தப்பா சொல்லல” தமிழும் தேம்பலுடன் தன் பக்கம் பேசினாள்.

“ஏய், நமக்குள்ள எந்த உறவும் இல்லன்னு நீ சொல்லாம நிவிக்கு எப்படி தெரிஞ்சது?” அவன் குறுக்கு கேள்வியில் தமிழ் தலை குனிய,

“ச்சே நம்ம ரெண்டு பேருக்கு மட்டுமான அந்தரங்க விசயம் டீ, அதை போய் மத்தவங்க கிட்ட சொல்லி… ச்சீ உனக்கு வெட்கமா இல்ல” என்று ராகுல் வெறுத்து போய் பேசினான்.

பார்வதிக்கு மகனின் கோபம் நியாயமானதாகவே பட்டது.

“உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்கா என்ன? பைத்திய காரி கூட இந்த வேலைய செய்ய மாட்டா” என்று அவரும் ஆதங்கமாக அவளை கடிந்து கொள்ள,

“இல்ல ம்மா, இன்னும் உங்க புள்ள மனசுல நிவேதா மேம் தான் இருக்காங்க. இல்லன்னு சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்” கண்ணீரை துடைத்து கொண்டு தமிழும் தேம்பலுடனே இருவருக்கும் இடையே வாதாடினாள்.

அவன் விட்ட ஒற்றை அறைக்கே அவள் கன்னம் இன்னும் எரிந்து கொண்டிருந்தது.

பார்வதி மகனைப் பார்க்க, ராகுல் குறையாத கோபத்துடன் தமிழை முறைத்து நின்றிருந்தான்.

“என்ன தமிழு நீ, மனசுல முதல் முதலா ஆசபட்ட பொண்ண அவ்வளவு சுலபத்தில யாராலையும் மறக்க முடியாது தான். அதுக்காக, கட்டினவளை விட்டுட்டு காதலிச்சவ பின்னாடி போக முடியுமா என்ன?” பார்வதி நிதர்சனத்தை சொல்லி அவளுக்கு புரிய வைக்க முயன்றார்.

“அவளோட குரங்கு புத்தியில உரைக்கிற மாதிரி நல்லா சொல்லு ம்மா. எந்த பொண்ணும் தன் புருஷனுக்கு இப்படியொரு வேலையைச் செஞ்சிருக்க மாட்டா” ராகுல் கோபமாக பேச,

“நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல டா” தமிழ் செய்வதறியாது ஆற்றாமையில் குரலை உயர்த்தினாள்.

ராகுல், “ஏய்ய்…” ஆவேசமாய் அவளை அடிக்க மறுபடி கையோங்க, பார்வதி பதறி குறுக்கே வந்து தடுத்தார்.

“போதும் விட்றா, பொட்ட புள்ளய அடிக்கற வேலையெல்லாம் வச்சுக்காத” என்று சொல்ல, தமிழ் பயந்து பார்வதியின் பின்னால் ஒடுங்கி நின்றிருக்க,

“உன்ன எல்லாம் திருத்தவே முடியாது டீ ச்சே…” என்று வெறுப்பும் சலிப்புமாக அறைக்குள் சென்றவன், கதவை தடாலென சாத்தினான்.

அவள் கண்ணீரும் தேம்பலுமாக நின்றிருக்க, புயலுக்கு பிந்தைய அமைதி போல, அவ்விடம் இப்போது நிசப்தமானது.

“பைத்தியக்கார பொண்ணு மா நீ” பார்வதி சலிப்பாக சொல்ல, தமிழ் தயக்கத்தோடு அவரை ஏறிட்டாள்.

“கல்யாண மண்டபத்தில ராகுல் அவனோட வாழ்க்கைய பத்தி யோசிக்கல, உன் மானத்தை காப்பாத்த தான் உன்ன கட்டிக்க முடிவெடுத்தான்.”

“…!”

“நீ வேணாம்னு சொந்தக்காரங்க எல்லாரும் எதிர்த்தாங்க. ஏன்? நான் கூட தான் நீ வேணான்னு அவன்கிட்ட சொன்னேன். ஆனாலும் அவன் யார்கிட்டேயும் உன்ன விட்டு கொடுக்கவே இல்ல தெரியுமா?”

“…!”

“எப்பவும் எதுக்காகவும் என் மகன் அடங்கி போனது இல்ல. ஆனா நீ அடிச்சும் கூட… உனக்காக அவன் பொறுத்து போனதை நான் பார்த்தேன்.”

“…!”

“இப்ப கூட உன்மேல இருக்குற அக்கறையில தான் கோபமா பேசிட்டு போறான். அவன் மனச புரிஞ்சிக்க பாரு தமிழு” பார்வதி நிதானமாக எடுத்து சொல்ல, தமிழின் மனபாரம் மேலும் கூட தான் செய்தது. இதெல்லாம் அவளுக்கும் முன்பே தெரிந்தவை தானே!

“இப்ப, முதல்ல போய் அவனை சமாதானபடுத்தி சாப்பிட கூட்டிட்டு வா போ” என்று அறிவுறுத்த, தமிழ் அறையை நோக்கி மெல்ல நடந்தாள்.
ராகுலிடம் கேட்க, அவளிடம் ஒரேயொரு கேள்வி தான் இருந்தது.

ராகுல் கட்டிலில் சாய்ந்த வாக்கில் அமர்ந்தபடி கைகட்டி கண்மூடி இருந்தான்.

அவனின் கோபம் அடங்காமல் இன்னும் கொதித்து கொண்டிருந்தது. தமிழ் செய்த காரியத்தை என்ன முயன்றும் அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

அவள் இத்தனை இறங்கி போவாளென்று அவன் நினைக்கவே இல்லை.

தமிழ்ச்செல்வி அவனருகில் வந்து சங்கடத்துடன் நிற்க,

“இங்க ஏன் வந்த? என் முன்னாடி நிக்காம போயிடு?” ராகுல் கண்கள் திறக்காமல் வெறுப்பாக பேசினான்.

தமிழ் தயக்கமாக, “நீ மேம் கிட்ட என்ன பதில் சொன்னனு…?” அவள் தொடங்க, ஆத்திரமாய் நிமிர்ந்தவன்,

“வாங்கன அறை போதல டீ உனக்கு?” என்று பற்களை கடித்தபடி அவளை ஏகத்திற்கும் முறைக்க, தமிழ் அவன் கோபத்தை கண்டு கொள்வதாக இல்லை.

“பரவால்ல, உன் ஆத்திரம் தீர்ற வரைக்கும் என்னை அடிச்சிடு. ஆனா, அங்க என்ன நடந்ததுன்னு தெரியாம நான் இங்கிருந்து நகர மாட்டேன்” என்று வீம்பாய் அவனெதிரில் மெத்தை மீது அமர்ந்து கொள்ள, அவனுக்கு அப்படியே பற்றி கொண்டு வந்தது.

கோபமாக அவளை அடிக்க கை வீச, அவள் பயத்தில் முகத்தை திருப்பி கொண்டு கண்களை இறுக மூடி கொண்டாள்.

அவள் கன்னத்தில் தன் ஐந்து விரல்களும் அப்படியே அச்சாய் பதிந்து சிவந்திருந்ததைப் பார்த்து இவன் மனம் இறங்க, ஓங்கிய கரத்தை கீழிறக்கி கொண்டான்.

‘ச்சே எவ்வளவு முரட்டு தனமா தமிழ அடிச்சிட்டேன்!’ என்று அவன் தன் மனதிற்குள் நொந்து கொண்டான்.

அவன் சாந்தமானதை கவனித்தவள், “டேய் நிவேதா மேம் கிட்ட நீ சரின்னு தான சொன்ன?”

சிறு குழந்தையைப் போல அவள் அத்தனை ஆர்வமாய் கேட்க, ராகுல் அவள் முகத்தை பரிதாபமாக வெறித்தான்.

அங்கு நடந்தவற்றை அப்படியே அவளிடம் சொல்ல தொடங்கினான்.

#
#
#

பூங்காவில்,

நிவேதா, ராகுல் அணைப்பில் நிறைந்து போனாள். “என்னால உன்ன மறுபடியும் இழக்க முடியாது கிருஷ்! நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ப்ளீஸ்” அவள் அவனோடு மேலும் ஒன்றி போக,

இவன் சட்டென அவளை விட்டு விலகி நின்றான். அந்த பனியிலும் அவன் முகம் வியர்த்து போனது.

“இல்ல, என்னால தமிழுக்கு துரோகம் செய்ய முடியாது” ராகுல் பதற்றமாக மறுத்து சொல்ல, நிவேதாவிற்கு அவன் மனநிலை நன்றாகவே புரிந்தது.

“தமிழ்ச்செல்வி நம்ம முடிவை மறுக்க மாட்டாங்க கிருஷ்” என்று சமாதானம் சொல்ல, அவன் குழம்பி தவித்து போனான்.

இரு பெண்களுக்கும் இடையில் அவன் தலை இரண்டாய் பிளந்து விடும் போலானது.

இரு கைகளாலும் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டு அருகிருந்த கல் மேடையில் உட்கார்ந்து விட்டான்.

அவன் பரிதவிப்பை உணர்ந்து நிவேதா மனமும் துவண்டு போனது.

“நம்ம காதல் உண்மை கிருஷ். அதனால தான் நாம ஒருத்தர ஒருத்தர் மறக்க முடியாம தவிச்சிட்டு இருக்கோம்.”

“…!”

“இத்தனைக்கு அப்புறமும் உன்னால என் ஞாபகத்தை உன் மனசுல இருந்து அழிக்க முடிஞ்சதா சொல்லு?”

அவளின் கேள்வி அவன் இதயத்தை தாக்க, நிலை கொள்ளாமல் எழுந்தவன், அவளை நிமிர்ந்து பார்க்க தீரமின்றி அவளுக்கு எதிர் புறமாய் திரும்பி நின்றான்.

அவன் எண்ண அலைகள், புயலில் கடலலை போல ஆர்ப்பரித்து கொண்டிருந்தன.

“என் நிலைமைய புரிஞ்சிக்க நிவி. என்னால தமிழ நிர்கதியா தவிக்க விட முடியாது” அவன் கலக்கமாக சொல்ல,

“தமிழ்ச்செல்வியோட ஃபியூச்சர்காக நாம அவங்களுக்கு எல்லாத்தையும் செய்யலாம் கிருஷ். அவங்களை நாம நிர்கதியா விடணும்னு இல்ல” நிவேதா பொறுமையாகவே எடுத்து சொல்ல, இவனுக்கு சுருக்கென்றது.

“நான் இல்லாத எந்த எதிர்காலத்தை என் மனைவிக்கு கொடுக்க நினைக்கிற நிவி? வசதியும் பணமும் மட்டும் எல்லா சந்தோசத்தையும் கொடுத்துடாது. என் தமிழ் பணம், பகட்டுக்கு ஆசபடறவளும் இல்ல” ராகுலின் பதிலும் குத்தலாக வந்தது.

ராகுல், ‘என் தமிழ்’ என்று அடைமொழியிட்டு சொன்னது நிவேதாவின் உள்ளத்தை நெருட, “ஏன் சும்மா தமிழ், தமிழ்னு அதையே சொல்லிட்டு இருக்க கிருஷ்? இப்ப மட்டும் என்ன நீங்க சேர்ந்து கணவன், மனைவியாவா வாழுறீங்க?” ஏதோவொரு ஆதங்கத்தில் வார்த்தையை விட்டு விட்டாள்.

ராகுல் அவள் புறம் சடாலென திரும்பினான். “இப்ப என்ன சொன்ன?” அவன் நெற்றி சுருக்கி வேகமாய் கேட்க, நிவேதா திணறி நின்றாள்.

“…!”

இப்போது தான் ராகுலின் குழப்பம் மெல்ல விலகி, அவன் சிந்தையும் தெளிவாக மூளையும் சுறுசுறுப்பானது.

நிவேதா முகத்தை நேராய் பார்த்தவன், “நிவி, தமிழ் தான் உன்ன என்கிட்ட பேச சொல்லி சொன்னா இல்ல?” அவன் சரியாய் கணித்து அமர்த்தலான பார்வையோடு வினவ, அவள் சற்றே கலவரமானாள்.

அவளின் மௌனம் உண்மை கூற, அவனுக்கு எல்லாமே தெளிவாக புரிய வர, தமிழின் மீது கோபகோபமாய் கனன்று எழுந்தது.

‘நான் அவ்வளோ சொல்லியும், தமிழ் உன்ன…!’ அவனுக்குள் ஆத்திரம் பொங்க,

“அவ தான் எதையாவது உளறி வச்சான்னா, உனக்குன்னு சொந்த புத்தி கூட இல்லாம போச்சா நிவி?” என்று வந்த கோபத்தை நிவேதாவிடமும் காட்டினான்.

நிவேதாவின் பதிலும் நேராக வந்தது. “தமிழ்ச்செல்வி சொன்னதுக்காக மட்டும் தான் இங்க வந்தேன்னு நினக்கிறியா? அவங்க எதுவுமே சொல்லாம இருந்தாலும் ஒரு நாள், இதே கேள்வியோட உன் முன்னால வந்து நின்னு தான் இருப்பேன்.”

“…!”

“ஏன்னா? நான் உன்ன அவ்வளவு லவ் பண்ணி தொலைச்சிட்டேன் கிருஷ்.”

”என்மேல சந்தேகப்பட்டப்போ இந்த காதல் எங்க போச்சு’ன்னு நீ கேக்கலாம். உன்ன பிரிஞ்சு இத்தனை நரக வேதனை அனுபவிப்பேன்னு எனக்கு முன்ன தெரிஞ்சிருந்தா, நான் உன்ன விட்டு விலகி இருக்கவே மாட்டேன் கிருஷ்.” நிவேதா தன் வெளி தோரணை எல்லாவற்றையும் உதறிவிட்டு அவனிடம் சாதாரண பெண்ணாய் கலங்கி நின்றாள்.

ராகுலின் இதயத்திலும் பாரம் கூடத்தான் செய்தது. அவளின் காதலும் கண்ணீரும் அவனை கலங்கடித்து கொண்டிருக்க, தன் மனஉறுதியை தளர விடாமல் இறுக்கி பிடித்து இருந்தான்.

“தமிழ்ச்செல்வியே நாம சேரணும்னு நினைக்கும் போது நீ ஏன் இவ்வளவு தயங்கற கிருஷ்? உனக்கு என்மேல இருக்க கோபம்‌ இன்னும் தீரலயா?” அவன் பதிலின்றி நின்றிருக்க, அவள் பரிதவிப்பாய் கேட்டாள்.

“உன்மேல இப்ப எனக்கு எந்த கோபமும் இல்ல நிவி அதோட, இனிமே நாம சேரவும் முடியாது”

“ஏன் கிருஷ் அப்படி சொல்ற?” அவள் அச்சமாகவே பதற, ராகுல் சற்று நேரம் பொறுத்து தன்னை நிதானித்து கொண்டு ஓரளவு திடமாகவே பதில் பேசினான்.

“தமிழ் உன்கிட்ட என்ன சொன்னாள்னு எனக்கு தெரியாது. ஆனா, நான் தமிழ… மனசார மனைவியா ஏத்துகிட்டேன்.”

“அப்ப… என்னை நீ மறந்திட்டியா?” கலங்கிய விழிகளில் அவனை அதிர்ந்து வெறித்தபடி கேட்டாள்.

“மறக்க தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்”

“முடியுமா உன்னால?” கலங்கி கேட்டவளின் காதல் அவன் நெஞ்சையும் அழுத்த தான் செய்தது.

“தெரியில நிவி, ஆனா நான் உன்ன மறந்து தான் ஆகணும். இன்னும் உன்ன நினச்சிருந்தா அது… என் மனைவிக்கு நான் செய்யற துரோகமாயிடும்” என்று சொன்ன அவன் விழிகளும் ஈரமானதை நிவேதா கவனித்தாள்.

“அப்ப நம்ம காதல்?”

“…?”

“உன்னையே நினச்சு தவிச்சிட்டு இருக்க, என் நிலமை?”

ராகுலின் இதழில் ஓர் அரிதான புன்னகை தோன்றி மறைய, “உனக்காக உன் அப்பா, அம்மா, வீடு, சொத்து, கம்பெனி, தொழில், சொந்தபந்தம்னு எல்லாமே இருக்கு. ஆனா தமிழுக்கு என்னைத்தவிர இந்த உலகத்தில வேற எதுவுமே இல்லை. என்னால எப்படி அவளை விட முடியும்?”

ராகுல் அவளிடம் முடிவாய் சொல்ல, அவள் மனதில் பெரும் சுழல் சூழ, கொழு கொம்பற்ற கொடியாய், கீழே துவண்டு அமர்ந்து விட்டாள்.

உண்மைநிலை அவளுக்கும் நன்றாக உரைக்க, வாய்விட்டு உடைத்தழுது விட்டாள்.

கண்கள் விழித்திருக்கும் போதே உயிர் காதலை களவு கொடுத்தவள் அவள்!

நிவேதாவின் நிலை கண்டு ராகுலும் துடித்து தான் போனான்.

“நீ அழறத என்னால தாங்க முடியல நிவி, ப்ளீஸ்” அவளை தேற்ற வார்த்தையின்றி கெஞ்சி நின்றான் அவன்.

நிவேதா தன்னை முயன்று சமாளித்துக் கொள்ள அவளுக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது.
தன் கண்களையும் முகத்தையும் அழுத்தி துடைத்து கொண்டு எழுந்து நின்றவள், அவனை வெறுமையாய் ஏறிட்டாள்.

“நீ அப்ப, நம்ம காதல் செத்துப் போச்சுன்னு சொன்னதுக்கான அர்த்தம்… எனக்கு இப்ப தான் புரியுது… ரொம்ப வலிக்குது…” அவள் திணறி, கலங்கி மொழிய,

“நான் உன்ன ஏமாத்திட்டதா நினைக்கிறியா நிவி?” அவன் மன உறுத்தலோடு கேட்டான்.

இல்லையென்று தலையசைத்த நிவேதா, “உன்ன நினச்சு பெருமைபடறேன் கி… ராகுல்.”

“ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுல நினக்கிறது மட்டுமில்ல. ஒருத்தர்காக ஒருத்தர் வாழறது தான் காதல்னு எனக்கு நீங்க ரெண்டு பேரும் புரிய வச்சிட்டிங்க.”

“…!”

“உங்களுக்கு நடுவுல இருக்க ஆழமான அன்பை நான் தான் கவனிக்க தவறிட்டேன்!”

ராகுல் கிருஷ்ணாவின் சந்தோசத்திற்காக, தமிழ்ச்செல்வி அவள் வாழ்க்கையை இழக்க துணிந்ததும், தமிழ்ச்செல்வியின் வாழ்க்கைக்காக ராகுல் தன் காதலை மறக்க துணிந்ததையும் எண்ணி பார்த்த நிவேதாவிற்கு அவர்களிடையே இருக்கும் புனிதமான நேசத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.

அவள் தவிப்பினை கண்டும் ஏதும் செய்ய இயலாதவனாய், “சாரி நிவேதா” அவளிடம் ராகுல் சங்கடத்துடன் மன்னிப்பு கேட்டான்.

புன்னகைக்க முயன்றாள், “ஐ மிஸ் யூ ராகுல்! தமிழ்ச்செல்வி ரொம்ப கொடுத்து வச்சவங்க” சொல்லும் போதே நிவேதாவின் தொண்டை அடைக்க, மேலும் அங்கே நிற்க முடியாமல் வேகமாக திரும்பி நடந்தாள்.

நிவேதா தன்னை புரிந்து கொண்டதில் ராகுலின் மனதும் சற்று சமன்பட, ஒருவித நிம்மதி உணர்வோடு அவனும் நகர்ந்தான்.

அதுவரை மறைவில் அவர்களை கவனித்து இருந்த இரண்டு கண்கள்… ராகுலை மெச்சுதலாய் பார்த்து புருவங்கள் உயர்த்தின.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!