அத்தியாயம் – 19

சிவக்குமாரையும் தங்களோடு அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தனர். அதன்பிறகு பாலும், பழமும் கொடுத்துவிட்டு அனைவரும் ஓய்வாக அமரவே, “சுமிம்மா அடுத்து என்னோட கல்யாண ஏற்பாட்டை கவனிங்க..” பாரதி தான் முதலில் பேச்சைத் தொடங்கினான்.

அவனின் வேகம் கண்டு மற்றவர்கள் குறும்புடன் புன்னகைக்க, “டேய் இது புயல் வேகம்டா..” என்று சுமிம்மாவும் அவர்களுடன் சேர்ந்து கிண்டலில் இறங்கினார்.

“புயல் வேகத்தில் போனால் தானே நான் என்னோட ஏஞ்சலைத் தேடி போக முடியும்..” என்று பிரவீன் முணுமுணுக்க அது பாரதியின் காதில் தெளிவாக விழுந்தது..

“பிரவீன் நீ என்னைவிட வேகமாக போக பார்க்கிற இது சரியில்ல..” என்றவன் புன்னகைக்க,

“ஆமா அண்ணாவுக்கு தான் முதலில் திருமணம் முடிக்கணும்.. அப்போதானே எங்களோட ரூட் எல்லாம் கிளியராகும்..” அஜய் கிண்டலில் இறங்கினான்..

“ஆமா ஆமா ஆல்ரெடி எல்ல ஜோடியும் திருமணத்திற்கு தயார்தான்.. பசங்க எல்லாம் முடிவில் ஸ்ட்ராங்கா இருக்காங்க பொண்ணுங்கதான் முதுகெலும்பு இல்லாமல் இருக்காங்க..” என்று சுமிம்மா வேண்டுமென்றே கூறினார்.

அவர் பேசுவதைக் கேட்டுகொண்டே சமையறையிலிருந்து வேகமாக வெளியே வந்த நிலா, “சுமிம்மா யாருக்கு முதுகெலும்பு இல்ல..” அவரிடம் சண்டைக்கு வரவே, ‘வாடி மகளே வா.. உன்னை தான் எதிர்பார்த்தேன்..’ மனதிற்குள் நினைத்தவர்,

“நான் உன்னை சொன்ன மாதிரி எதுக்குடி என்னிடம் சண்டைக்கு வர..” என்று பாவமாக முகத்தை வைத்துகொண்டு கூறிய சுமிம்மாவின் நடிப்பைக் கண்டு,

“ஆஸ்கர் அவார்டு உங்களுக்கு தான் சுமிம்மா கொடுக்கணும்..” குறும்புடன் கண்சிமிட்டினான் பாரதி..

சிவகுமாரும், சிந்துவும் அங்கே நடக்கும் ரகளையை சுவாரசியமாக வேடிக்கை பார்க்க, “நிலா வசமாக மாட்டிகிட்ட..” ரேணு கிண்டலாக கூறிவிட்டு சமையலை கவனிக்க,

“எதுவரை போகும் என்று பார்க்கலாம் விடு” என்ற ரித்து புன்னகையுடன் காய்கறியை கட் பண்ணினாள்..

“என்னை எப்பொழுது பார்த்தாலும் சிக்கலில் மாட்டிவிடுவதே நீங்கதான் சுமிம்மா..” என்று பாரதியை முறைத்தவள், “இப்போ நீங்க எதுக்கு அப்படி சொன்னீங்க..” கோபத்துடன் கேட்டாள்

“பாரதி திருமண ஏற்பாட்டை கவனிக்க சொல்றான்.. நான் உன்னை நம்பி இறங்கலாமா? என்னை டீலில் விடமாட்டீயே..” சுமிம்மா அவளைப் பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்திட,

“நான் எப்போ திருமணத்திற்கு சரின்னு சொன்னேன்..” என்று சாதுர்யமாக பின் வாங்கினாள் நிலா..

“பாருங்க சுமிம்மா.. இதை நீங்களே கேளுங்க..” என்றான் பாரதி அவளை முறைத்தவண்ணம்..

“அவன் கேட்பதும் சரிதானே? அப்புறம் எதற்கு கோவில் முன்னாடி அவங்ககிட்ட அப்படி சொன்ன..” என்று அவளை வசமாக சிக்கலில் சிக்க வைத்தார் சுமிம்மா.

“அது நான் அவங்களுக்காக சொன்னது. என்னை நம்பி யாரும் எந்த விசயமும் செய்ய வேண்டாம். எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்ல..” என்று கூறியவள் சமையலறை நோக்கி திரும்பினாள் நிலா.

அவளின் பதில் மற்றவர்களுக்கு திருப்திகரமாக இல்லை என்பதை அவர்களின் முகமே படம்பிடித்து காட்ட, “நிலா நீ பேசுவது சரியில்ல..” என்று சுமிம்மா அவளைக் கண்டித்தார். பாரதி அவளின் வழியை மறிக்க, அவள் நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.

“அங்க அத்தனை பேருக்கு முன்னாடி அப்படி சொல்லிட்டு வந்துட்டு இங்கே வந்து இப்படி பேசற.. என்ன உன்னோட போதைக்கு நான் ஊறுகாயா?” அவன் இளக்காரமாக கேட்டான்..

“அஸ்திவாரம் இல்லாமல் மணல்வீடு கட்டலாம்.. ஆனால் கற்பனையில் கோட்டை கட்டினால் ஆட்டம் கண்டுவிடும்.. அதனால் நிதர்சனம் புரிஞ்சிகிட்டு உன்னோட முடிவை மாத்திக்கோ பாரதி..” மெல்லிய குரலில் அழுத்தத்துடன் கூறினாள்.

“சுமிம்மா இவ என்ன பேசற..” என்று அஜய் கோபத்துடன் திரும்பவே, அவனின் கையில் அழுத்தம் கொடுக்க, “நீ அமைதியாக இரு அஜய்.. அது பாரதியின் வாழ்க்கை.. நீ தலையிடாதே..” என்று அவனின் கையில் அழுத்தம் கொடுத்தார்.

“உன்னோட முட்டாள்தனமாக முடிவுகளுக்கு தலையாட்டும் பாரதி நான் இல்ல. நீ என்னை பேச்சில் இழுக்காத வரையில் எந்த பிரச்சனையும் இல்ல. என்னை கட்டிக்கிறேன்னு ஏன் சொன்ன? இப்போ ஏன் வேண்டான்னு சொல்ற..” என்றவனின் பார்வை அவளின் விழிகளில் ஊடுருவிச் சென்று இதயத்தை உலுக்கியது..

“உங்களுக்கு கொடுக்க இங்கே எதுவும் இல்ல..” என்று தன்னுடைய அடிவயிற்றில் அடித்துக்கொண்ட நிலா அவனைவிட்டு விலகவே மற்றவர்கள் அவளை புரியாத பார்வை பார்த்தனர்.

“முதலில் இந்த வாக்கியத்திற்கு விளக்கத்தை சொல்லிடி.. மனுஷனோட பொறுமையை ரொம்ப சோதிக்காதே..” அவளிடம் எரிந்து விழுந்தான் பாரதி..

“கொஞ்சம் பொறுமையாக கேளு பாரதி..” என்று சிவக்குமார் சொல்ல, “நீங்க என்னிடம் எதுவும் சொல்லாதது எனக்கு பெருசாக தெரியல.. இவ ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசற.. எனக்கு புரியல.. என்னோட கேள்விக்கு பதில் தெரியனும்.. அதையும் இவதான் சொல்லணும்..” என்று அழுத்தமாக கூறிய பாரதி அவளை எரிப்பது போல பார்த்தான்.

“நிலா நீ அண்ணாவோட கேள்விக்கு பதில் சொல்லிரு.. அப்புறம் அவர் உன்னை கட்டாயபடுத்த மாட்டார். அவருக்கு தேவை விளக்கம்தானே..” குழந்தைக்கு கூறுவது போல கூறினான் திவாகர்.

“ஐயோ என்னை ஏன் யாரும் புரிஞ்சிக்க மாட்டேங்றீங்க..” என்று வீடே அதிரும்படி கத்திய நிலா, “எனக்கு கல்யாணம் ஆகிருச்சு! இப்போ கோவில் முன்னாடி நீங்க பார்த்தது வேற யாரும் இல்ல.. ஒன்னு என்னோட புருஷன் சங்கர், இன்னொன்னு என்னோட கூட பிறந்த அக்கா கோகிலா..” தன்னை மீறி கத்திவிட்டு முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

“அண்ணி என்ன சொல்ற..” என்று பிரவீன் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.

“திருமணத்திற்கு சம்மதம் சொல்லு என்று கேட்கிறீங்களே.. என்னோட இழப்பு எவ்வளவு பெருசு என்று உங்க யாருக்கும் தெரியாது? அது எனக்கு மட்டும் தான் தெரியும்..” என்றவளால் அதற்கு மேல் பேச முடியாமல் துக்கத்தை தொண்டைக்குள் அடக்க நினைத்தாள்.

“சூழ்ச்சியில் எதைவேண்டும் என்றாலும் இழக்கலாம்.. ஆனா நான் என்னை மாதிரி கற்பப்பையை மட்டும் எந்த ஒரு பெண்ணும் இழக்கக்கூடாது..” என்று அடிவயிற்றில் கைவைத்தாள்.

அவளின் பேச்சு மற்றவர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்க பாரதியும், சுமிம்மாவும் சலனமே இல்லாமல் அமைதியாக இருந்தனர். அவளின் தோளை தொட்டு, “இந்த சூழ்ச்சியை யார் பண்ணாங்க..” என்று அவளிடம் கேட்ட பாரதி அவளை அருகிலிருந்த சோபாவில் அமர வைத்தான்.

ரித்து தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க, “இந்தா இதை முதலில் குடி..” என்று கூறியவன், “நீ எதுக்கும் கலங்கக்கூடாது. இதெல்லாம் இப்பொழுது சாதாரணம்?” என்று அவளை இயல்புநிலைக்கு கொண்டு வந்தான்.

சுமிம்மா அவளின் கூந்தலை மெல்ல வருடிக்கொடுக்க, “என்னோட இழப்புக்கு காரணம் என்னோட சொந்த அக்காவோட சூழ்ச்சி என்று சொன்னா நீங்க யாராவது நம்புவீங்களா சுமிம்மா?” என்று கேட்டாள்.

“நான் உன்னை நம்பினேன் நிலா.. அதனால்தான் உன்னோட அக்காவை டைவர்ஸ் பண்ணிட்டு வந்தேன்..” என்றதும் யாருக்கும் எதுவும் தெளிவாக புரியவில்லை..

அடுத்தடுத்து வந்த அதிர்ச்சியில் அவர்கள் அமைதியாக இருக்க, “நீங்க இவளோட அக்கா வீட்டுக்காரா?” என்று ரேணு அதிர்ச்சியுடன் கேட்க,

“ம்ம் ஆமாம்மா.. நிலாவோட வாழ்க்கை இப்படியாக நானும் ஒரு காரணம்..” என்றார் சிவகுமார்.

பிறகு நிலாவின் பக்கம் திரும்பி, “இவங்க எல்லோரும் உன்னோட குடும்பம் நீதான் அவங்களிடம் உண்மையை சொல்லணும்.. நான் இல்ல..” என்று கண்டிப்புடன் கூறியவர் தொடர்ந்து,

“எனக்கு உன்னோட வாழ்க்கையில் என்ன நடந்தது என்று தெரியாது.. நீ சொன்னால் தான் தெரியும்..” என்றார். அவளும் தன்னுடைய கடந்த காலத்தை சொல்ல தொடங்கினாள்..
கோகிலாவிற்கும், நிலாவுக்கும் பத்து வருடங்கள் வயது வித்தியாசம்.

சிவகுமாருக்கும் – கோகிலாவிற்கும் திருமணம் முடியும் பொழுது அவளுக்கு ஏழு வயது. அவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் நிலாவை தன்னுடைய மகளாக பாவித்து வளர்த்தார் சிவகுமார்.

எந்தவிதமான கவலையும் இல்லாமல் பட்டாம்பூச்சி போல பறந்து திரிந்த அவளின் சிறகுகளை உடைப்பது போலவே அவளின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, அவளை வேலைக்கு அனுப்பினார்கள். ஒரு வருடம் மின்னல் வேகத்தில் சென்று மறைய அவளிடம் எந்தவிதமான சம்மதமும் கேட்காமல் சங்கருக்கும் – நிலாவிற்கும் திருமணம் செய்து வைத்தனர்.

அறியாத வயதில் திருமணத்தின் அறிசுவடே அறியாத நிலையில் திருமண வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தாள் நிலா.

அப்பொழுதுதான் தன்னுடைய இரண்டு மகளும் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று நினைத்த சகுந்தலா தன்னுடைய வீட்டிற்கு பக்கத்திலேயே இரண்டு பேருக்கும் தனிதனி வீடு பார்த்து குடி வைத்தார்.

அவளின் திருமண வாழ்க்கையில் பெரிதாக எந்தவிதமான மாற்றமும் இல்லை. நாட்கள் இயல்பாக நகரவே நான்குமாதம் ஓடி மறைய முதல் முறையாக கருவுற்றாள். கணவனும் – மனைவியும் மருத்துவனை சென்ற நாளில் தான் நிலாவிற்கு சோதனை காலம் ஆரம்பமானது..

தான் கருவுற்ற சந்தோஷத்தில் இருந்த நிலாவை செக் பண்ணிய டாக்டர், “சங்கர் இந்த விஷயத்தை நீங்க இருவரும் சாதாரணமாக எடுத்துக்கணும்.. இது இப்போ இருக்கிற பெண்களுக்கு இயல்பாக வரும் பிரச்சனை தான்..” என்று பேச்சை தொடங்கினர்.

“என்ன டாக்டர் என்ன பிரச்சனை?” என்ற சங்கரின் பார்வை அருகில் அமர்ந்திருந்த மனைவியை தொட்டு மீண்டது. அவனின் கண்களில் இயல்பான பதட்டம் நிலவியது.

“இவங்க கன்சீவாக இருக்காங்க. ஆனால் இவங்க கற்பப்பையில் கட்டி இருப்பதால், அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். ஐ மீன் குழந்தை ஊனமாக பிறக்க கூட வாய்ப்பு இருக்கு..” என்று சொல்ல அதிர்ச்சியுடன் டாக்டரைப் பார்த்தாள் நிலா.

“இப்போ என்ன பண்றது டாக்டர்?” என்று சங்கர் அவரிடம் கேட்கவே, “சின்ன ஆப்ரேஷன் ஒன்னு பண்ணும், அதில் கரு கலைய வாய்ப்பு இருக்கு.. இது ஆரம்பநிலை என்பதால் பரவல்ல. இதை இப்படியே வளரவிட்டால் இவங்க உயிருக்கு அது ஆபத்தாக முடியலாம்..” என்று அவர் அதிலிருக்கும் நன்மை தீமையை தெளிவாக கூறினார்.

அவர்கள் இருவரும் அதிர்ச்சியுடன் வீடு திரும்ப அவர்களுக்காக வீட்டில் காத்திருந்த கோகிலா, “நிலா டாக்டர் கன்பார்ம் பண்ணிடாங்களா?” என்று பாசத்துடன் கேட்டவண்ணம் அவளின் அருகில் அமர்ந்தாள்.

அவர்கள் இவரின் முகமும் சரியில்லாமல் இருப்பதை கவனித்துவிட்டு, “நிலா..” என்று அழைக்க, “அவளை எதுவும் கேட்காதீங்க நான் சொல்றேன்..” என்ற சங்கர் மருத்துவமனையில் நடந்ததை அவரிடம் கூறினார்.

கோகிலாவின் மடியில் படுத்திருந்த நிலாவின் கண்கள் தானாக கலங்கவே, “என்னங்க எனக்கு தான் குழந்தை பாக்கியம் கிடைக்கல.. அது என்னோட தலைவிதி.. ஆனால் என்னோட தங்கைக்கு அந்த நிலை வரக்கூடாது.. நீங்க ஆப்ரேசனுக்கு பணத்தை ரெடி பண்ணுங்க..” என்று அவள் இறுதி முடிவெடுத்தாள்.

அவளின் பாசத்தை கண்டு நிலாவின் கண்ணீர் அதிகரிக்கவே இந்த விஷயம் தெரிந்த சகுந்தலா, “பெரியவளோட வாழ்க்கை அப்படி போயிருச்சு.. சின்ன வாழ்க்கை இப்படி இருக்கே..” என்று புலம்பினார்.

அவரை சமாதானம் செய்த கோகிலா தான் தங்கையின் நிலையை மனதில் வைத்து அவளை கவனித்துக் கொண்டாள்.

நடுத்தர குடும்பத்தின் வாழ்வாதாரம் அவர்களின் சம்பள கணக்கை சொல்லாமல் சொல்லும். அவன் அதிகம் படிக்கவில்லை என்றாலும் ஒரு பாக்டரியில் சாதாரண வாட்ச்மேன் வேலை தான் செய்தான்.

என்னதான் இருந்தாலும் மனைவின் நிலையுணர்ந்து சங்கரும் அங்கே இங்கே அலைந்து திரிந்து கடன் வாங்கி மனைவிக்கு மருத்துவ செலவை செய்ய தயாரானான்.

டாக்டர் சொன்னது போலவே அவளை குறிப்பிட்ட தேதியில் மருத்துவமனையில் சேர்க்க அவளுக்கும் செக்கப் அனைத்து முடிந்து மறுநாள் ஆபரேஷன் என்ற நிலையில் தான் கோகிலாவின் புத்தி கொஞ்சம் கோணலாக யோசிக்க தொடங்கியது.

மறுநாள் நிலாவிற்கு ஆபரேஷன் நடக்கவே அவளை ஒரு வாரம் மருத்துவமனையில் தங்க வைத்துவிட்டு அடுத்த செக்கப்பிறகு வரும்படி வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

சங்கர் அவளைவிட்டு நகர மனம் இல்லாமல் இருக்க, “நான் என்னோட தங்கையை பார்த்து கொள்கிறேன்.. நீங்க வேலைக்கு போங்க..” அவளை உடனிருந்து கவனித்து கொள்ளும் பொறுப்பை தானே முன் வந்து ஏற்றுக்கொண்டாள் கோகிலா.

தங்கைக்கு அனைத்தையும் பார்த்து பார்த்து செய்பவள் அவளால் எழுந்து வேலை செய்ய முடியவில்லை என்ற நிலையில், “உன்னோட கணவருக்கு சாப்பாடுதானே போடணும்.. அதை நான் கவனிச்சுக்கிறேன் நிலா.. நீ ரெஸ்ட் எடுத்து உன்னோட உடம்பை தேற்றும் வழியைப் பாரு..” என்று கண்டித்தாள்

இரண்டு மாதங்களும் அவளை செக்கப்பிற்கு அழைத்துச் செல்ல, “நீ ரொம்ப நல்ல கண்டீஷன் ல இருக்கிறம்மா..” என்றவர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அறியாத வயதில் தனக்கு நடந்த ஆப்ரேஷன் பற்றி அவளுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு அவள் யோசிக்கவும் இல்லை.
அந்த ஆப்ரேசன் முடிந்து இரண்டு மாதம் சென்ற பிறகும் அவள் மேசன்ஸ் ஆகாதது அவளுக்கு சந்தேகத்தை உருவாக்கியது. அது மட்டும் இல்லாமல் கணவனின் விலகல் அவளின் மனதில் சிறிய வலியைக் கொடுத்தது.

அதே நேரத்தில் கோகிலா முதல் போல இல்லாமல் இப்பொழுதெல்லாம் சோர்ந்து சோர்ந்து அமர்வதை அவள் கவனிக்கவில்லை என்பதைவிட அவளின் குழப்பம் அவளை கவனிக்கவிடவில்லை என்று சொல்லலாம்.

அவளின் சந்தேகம் நாளுக்கு நாள் வலுபெறவே தன்னுடைய உடல்நிலையை செக் பண்ண அதே மருத்துவமனைக்கு சென்ற நிலா அங்கிருந்த நர்ஸிடம், “அக்கா எனக்கு ஆபரேஷன் பண்ணாங்க.. ஆனால் நான் இன்னும் மென்சஸ் ஆகல..” என்று சொல்ல,

“உன்னோட பேரு கலைநிலா தானே..?” என்று சந்தேகமாக இழுத்தாள் நர்ஸ். அவளும் ஒப்புதலாக தலையசைக்க, “உனக்கு அறிவு கொஞ்சமாவது இருக்குதா? கற்பப்பபை இல்லாத உனக்கு எப்படி மென்சஸ் ஆகும்.. லூசு மாதிரி பெற..” என்று அவள் எரிந்து விழுந்தாள்.

அவள் சொன்ன விஷயம் நிலாவின் தலையில் நெருப்பள்ளி கொட்டியது போல இருக்கவே திக்குபிரம்மை பிடித்தவள் போல வீடு வந்து சேர்த்தாள். அங்கே அவள் கண்ட காட்சிதான் அவளுக்கு உச்சகட்ட அதிர்ச்சியைக் கொடுத்தது..

error: Content is protected !!