வா… அருகே வா! – 8
ஜீப் வேகமாகச் செல்ல, “மிலிட்டரி! அத்தானுக்கு தெரிஞ்சிது, உன்னை உண்டில்லைன்னு பண்ணிருவாக. ஒழுங்கு மரியாதையா, வீட்டுக்கு போ.” என்று பூங்கோதை அவனிடம் சண்டையிட, அவள் பேச்சை உல்லாசமாக ரசித்தபடி ஜீப்பை ஊருக்கு வெளியே இருக்கும் சிறிய கோவிலுக்கு முன் நிறுத்தினான் திலக்.
“இறங்கு…” என்று திலக் கட்டளையிட, “முடியாது…” என்று ஒற்றை வார்த்தையில் மறுப்பு தெரிவித்தாள் பூங்கோதை.
“தூக்கிட்டு போகணுமா பியூட்டி?” என்று திலக் சரசமாக வினவ, அவனை அச்சம் கலந்த பார்வையோடு பார்த்தாள் பூங்கோதை.
‘கயலை அனுப்பி இருக்கக் கூடாது. இவனுக்கு எப்படி இவ்விளவு துணிச்சல் வந்துச்சு?’ என்று எண்ணியபடி, இறங்கி அவன் பின்னே நடந்தாள் பூங்கோதை.
திலக் சட்டைப் பையில், அவன் கைகளை விட, பூங்கோதையின் இதயம் படபடவென்று வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
பூங்கோதையின் கால்கள் பின்னலிட, மெல்லமாக பின்னே நடக்க ஆரம்பித்தாள். கோவிலில் மதில் சுவருமில்லை. ஜன நடமாட்டமுமில்லை.
அருகே இருந்த அரச மரத்தடியில் சாய்ந்து நின்றாள் பூங்கோதை. சற்று பலம் தோய்ந்து அங்கிருந்த கல்லில் அமர, அவள் அருகே கண்ணியமாய் இடம் விட்டு அமர்ந்தான் திலக்.
“அம்மா, அப்பாவுக்கு இந்த கோவில் ரொம்ப பிடிக்கும். அப்பாவும் மிலிட்டரி தான். அப்பா, காஷ்மீரில் நடந்த தாக்குதலில் இறந்துட்டாங்க. அந்த செய்தி கேட்ட நொடி, அம்மா படுக்கையில் விழுந்துட்டாங்க. அப்படியே கொஞ்ச நாளில் அம்மாவுடைய ஆயுசும் முடிஞ்சிருச்சு. அப்பாவுக்கு, நானும் மிலிட்டரி போகணும்னு ஆசை. அம்மாவுக்கு விருப்பமில்லை தான். ஆனால், நாட்டுக்காக வாழறதில், எனக்கு எதோ ஒரு சந்தோசம். அப்பா இரத்தம் போல!” என்று யோசனையோடு தன் போக்கி திலக் பேச, பூங்கோதை அவனை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவன் கதை எனக்கு எதுக்கு? என்கிட்டே ஏன் சொல்றான்?’ என்ற எண்ணத்தோடு அவள் அசட்டையாக அமர்ந்திருந்தாள்.
அவள் கேள்விக்கு பதில் கூறுவது போல் சரேலென்று அவளை சுற்றி வளைத்து பூங்கோதையின் காதோரத்தில், “எம் பொஞ்சோதிக்கு என்னை பத்தி தெரிஞ்சிருக்கணும்ல?” என்ற சரசமாக பேசியபடியே அவள் இடுப்பில் ஒரு மெல்லிய கம்பியை முறுக்கினான் திலக்.
“ஏய்! மிலிட்டரி… என்ன பண்ற?” என்று பூங்கோதை அவன் கட்டியதைக் கழட்ட முயற்சிக்க, “ஹா… ஹா… முடியாது. உன்னால் கழட்ட முடியாது.” என்று பெருங்குரலில் சிரித்தான் திலக்.
“கழுத்தில் கட்டினா தான் தாலியா? இதுவும் அப்படி தான். உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். நீ என் பொஞ்சாதின்னு. அம்மன் சாட்சியா, உரிமையா கட்டிருக்கேன் பியூட்டி.” என்று திலக் கூற, பூங்கோதை தன் இடுப்பில் அவன் இறுக்கிக் கட்டிய கம்பியைப் பார்த்தாள்.
முத்துக்கள், சிவப்பு மணி, கருமணி இன்னும் பல பளபளவென்று மின்னிய கற்கள் கொண்டு கோர்க்கப்பட்டிருந்தது.
“நல்லாருக்கா பியூட்டி? காஷ்மீர், டெல்லி எங்க போனாலும் எனக்கு உன் ஞாபகம்தென் வரும். உனக்காக, தேர்ந்தெடுத்து நானே கோர்த்தது.” என்று ரசனையோடு திலக் கூற, அவள் வழுவழுப்பான இடுப்பில் ஜொலித்த மணியைக் காட்டமாகப் பார்த்தபடி, “யோவ்! மிலிட்டரி லூசா நீ?” என்று கடுப்பாகக் கேட்டாள் பூங்கோதை.
“தெரியலை…” என்று அசட்டையாகத் தோள்களைக் குலுக்கினான் திலக்.
அம்மன் முன்னிருந்த குங்குமத்தை அவள் நெற்றியில் வைத்து, “பியூட்டி, அடுத்த வருஷம் உன் படிப்பு முடிஞ்சிரும். அப்புறம் ஊரறிய நமக்கு டும் டும் டும்… சரியா?” என்று தீவிரமாகக் கேட்டான் திலக்.
“நீ எதையோ கட்டினா, அது கல்யாணமா? ஊரை விட்டு வெளியே, கூட்டிட்டு வந்து உன் இஷ்டப்படி என்னவேனாலும் பண்ணுவியா? என் சம்மதமில்லாமல், நடந்த இதெல்லாம் கல்யாணமா? இது உன் கர்வம். உன் திமிர். உன் ஆணவம். நான் ஒரு நாளும் இதை ஏத்துக்கவே மாட்டேன். வீட்டுக்கு போனவுடன் இதை கழட்டி எரிஞ்சிருவேன்.” என்று பூங்கத்தை கூற, ஜீப் மீது ஒயிலாகச் சாய்ந்து நின்று பூங்கோதையை பார்த்து புன்னகைத்தான் திலக்.
“அதை யார் உதவியோடு தான் கழட்ட முடியும். யார் கிட்டக் கேட்ப, உங்க ஆச்சி கிட்டயா? கேள்வி கேட்டே உன்னை கொன்னுப்புடுவாக. மறைச்சிதென் வச்சாகனும் பியூட்டி.” என்று திலக் கண்சிமிட்டினான்.
“பொஞ்சாதி…” என்று திலக் விளிக்க, “அப்படிச் சொல்லாத…” என்று பூங்கோதை தன் காதுகளை மூடி கத்த, “என்ன செஞ்சா நம்புவ பியூட்டி?” என்று அவன் அவளை நெருங்க, அவள் விழிகள் மிரண்டு விழித்தன.
அவனிடமிருந்து தப்பித்து ஓட வேண்டுமென்று அவள் அறிவு கூறியது. தன் சுற்றுப்புறத்தை நோட்டமிட்டாள். ‘இவனிடமிருந்து தப்பிக்க முடியாது.’ அவள் மனம் ஓலமிட்டது.
‘எனக்கு மட்டும் ஏன் இத்தனை சோதனைகள்?’ அவள் மனம் இறைவனிடம் யாசித்தது.
பூங்கோதையின் எண்ணங்களை அவள் முகம் வெளிப்படுத்த, அவள் தலை கோதினான் திலக்.
“ஒரு காதலியிடம் என்னால் எல்லை மீற முடிஞ்சது. ஆனால், மனைவி கிட்ட இல்லை. எம் பொஞ்சாதி மனசு எனக்கு முக்கியம். உன்னை பாதுக்காக்க வேண்டிய இடத்தில் இப்ப நான் இருக்கேன் பியூட்டி.” என்று திலக் கூற, அவன் கண்கள் மெலிதாக கலங்கியது.
‘இது என்ன சாத்தான் வேதம் ஓதுது?’ என்ற சந்தேகம் தோன்றினாலும் பூங்கோதையின் மனதில் பல கேள்விகள்.
‘இவன் என்னை மனைவினே முடிவு பண்ணிட்டானா? நான் சம்மதிக்க வேண்டாமா?’ என்ற கேள்விகளோடு, பூங்கோதையின் தைரியமும் மீண்டு கொண்டது.
“நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். பயப்படாதா! வா… வீட்டுக்கு போவோம்.” என்று திலக் கூற, “நான் ஒன்னும் பயப்படலை. எங்க அத்தான் இந்நேரம் என்னைத் தேடிருப்பாக.” என்று பூங்கோதை கூற, திலக்கின் அலைபேசி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
திலக் சற்று ஒதுங்கிப் பேசிவிட்டு வர, “அத்தான் தானே?” என்று பூங்கோதை கேட்க, திலக் பதில் எதுவும் கூறவில்லை.
“நீங்க அத்தான் கிட்ட, சம்மதம் கேட்டுதேன் என்னை கூட்டிட்டு வந்தீகன்னு தெரியும்.” என்று பூங்கோதை தலை சிலுப்ப, ‘அத்தான் பெயரை சொல்லும் போது எனக்கு கூட மரியாதை குடுப்பா’ என்ற எண்ணத்தோடு அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் திலக்.
பூங்கோதை எதோ பேச ஆரம்பிக்க, “பியூட்டி… சண்டை வேண்டாம். நான் நாளைக்கி கிளம்பறேன். வர ஒரு வருஷம் ஆகும். உன்கிட்ட எப்படியாவது என் காதலை புரிய வைக்கணும்ன்னு நினச்சேன். ஆனால் தோத்துட்டேன்… எனக்கு புரிய வைக்க தெரியலை போல!” என்று ஆழமான குரலில் கூறினான் திலக்.
” மில்லிட்டரிகாரனுக்கு தோத்து பழக்கம் இல்லை. அது தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.” என்று வெற்றி புன்னகையோடு கூறினான் திலக்.
“நீ தான் எம் பொஞ்சாதி.” என்று திலக் கூற, அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தாள் பூங்கோதை.
“நான் காலேஜ் படிக்கிற சின்ன பொண்ணா இருக்கலாம். உன்னை எதிர்க்கிற தைரியம் இல்லாம இருக்கலாம். எனக்குன்னு யாரும் இல்லாம போகலாம். ஆனால், எனக்கு உலகம் தெரியும்.” என்று அழுத்தமாகக் கூறினாள் பூங்கோதை.
“நீ சொல்றதுக்கு பெயர் காதல் இல்லை. வன்முறை. நீ சொல்றதுக்கெல்லம அசைஞ்சி குடுக்க நான் ஆளில்லை. அதுக்கெல்லாம் வேற ஆளை பாரு.” என்று பூங்கோதை தெனாவட்டாக கூறினாள்.
“பியூட்டி… நான் காத்திருப்பேன். வருஷ கணக்கா உனக்காக…” என்று திலக் கூற, “வீணா ஆசையை வளத்துகாத… காட்டாயப்படுத்தி காதல் வராது. வேற நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ.” என்று ஜீப் சீட்டில் சாய்ந்தமர்ந்து கூறினாள் பூங்கோதை.
நீ என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை என்பது போல் மேல பேசினான் திலக்.
“பியூட்டி… நீ உன் பிரச்சனையை யார் கிட்ட சொல்லுவ? உன் ஆச்சி கிட்டயா? இல்லை உன் அத்தான் கிட்டயா?” என்று திலக் பூங்கோதை பிரச்சனையின் அடி நாடியைப் பிடித்தான் திலக்.
பூங்கோதை மௌனிக்க, “நான் இருக்கேன். என்ன பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு.” என்று திலக் கூற, “பிரச்சனையே நீ மட்டும்தென்.” என்று பூங்கோதை முணுமுணுக்க, “அது பாரவால்லை… பாத்துக்கலாம்…” என்று புன்னகைத்தான் திலக்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல், ஜீப்பை மௌனமாக வீட்டை நோக்கிச் செலுத்தினான் திலக்.
வீட்டை நெருங்க, “பியூட்டி… நான் நாளைக்கி கிளம்பறேன். நான் கிளம்பரத்துக்கு முன்னாடி, உன்னை ஒரு தடவை பார்க்கணும். தயவு செஞ்சி நாளைக்கி வெளிய வா.” என்று கெஞ்சினான் திலக்.
வீட்டின் முன் வண்டி நிற்க, “சரியான நேரத்துக்கு மாத்திரையை சாப்பிடு. உடம்பை பார்த்துக்கோ.” என்று அவன் அக்கறையாக கூறினான்.
அவன் முகத்தையும் பார்க்காமல் பூங்கோதை அவர்கள் வீட்டின் முன் இறங்கி உள்ளே செல்ல, “பியூட்டி… பியூட்டி… பியூட்டி…” என்று திலக் அழைத்துக் கொண்டே இருக்க, அவள் விறுவிறுவென்று உள்ள செல்ல, “பொஞ்சாதி…” என்று திலக் மெல்லமாக அழைக்க, அவனை சரேலென்று திரும்பி கோபமாக முறைத்தாள் பூங்கோதை.
“உச்…” என்று முத்தத்தைக் காற்றில் அவளை நோக்கிப் பறக்க விட்டுச் சென்றான் திலக்.
முத்தமா ஆச்சி பல கேள்விகள் கேட்டு குடைய, ஆச்சியின் கேள்விக்கு ஒருவாறு பதில் சொல்லிவிட்டு, தன் அறைக்குள் புகுந்து கொண்டாள் பூங்கோதை.
கதிரேசனின் பிரச்சனை பின்னுக்கு சென்று விட்டது. செல்லம்மா அவளை அவமானப்படுத்தியது பின்னுக்கு சென்று விட்டது.
பூங்கோதையின் முன் திலக்கின் பிரச்சனை பூதாகரமாக நின்றது.
“வாழ்க்கையில் ஒரு பிரச்சனை கூட சரியாகாதோ? ஒன்னு அதை விடப் பெரிய பிரச்சனை வந்து பழைய பிரச்சனை வந்து பழசை மறைச்சிரும். இல்லைன்னா பெரிய சந்தோசம் வந்து மறக்கடிச்சிருமோ?” என்று தனக்கு தானே சத்தமாகக் கேட்டுக் கொண்டாள் பூங்கோதை.
“ஆனால், எனக்கு மட்டும் ஒரு பிரச்சனையை இன்னொரு பிரச்சனை மறைக்கும் போல? சந்தோசத்திற்கு வழியே இல்லை.” என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டாள் பூங்கோதை.
“சாயங்காலம் நடந்த அவமானம், ஆச்சி கோபம் இப்படி யோசிச்சா… இந்த மிலிட்டரி டோபக்குனு குதிச்சிட்டான். இவனை என்ன பண்றது?” என்று தன் நாடியில் கை வைத்துக் கேட்க, அவள் இடுப்பில் அவன் கட்டிய மணி கோர்த்த கம்பி நினைவு வர, அதை கழட்ட போராடினாள் பூங்கோதை.
அது முடியமால் தோற்று போக, ‘இதை ஆச்சி கிட்ட சொல்லித்தேன் கழட்டனும். ஆயிரம் கேள்வி கேட்பாகளே? என்ன பண்றது?’ என்று யோசித்து பதில் தெரியாமல் சுவரில் சாய்ந்து அமர்ந்தாள் பூங்கோதை.
‘இல்லை… கயல் கிட்ட சொல்லி கழட்டனும். அவ வேற இன்னைக்கி நம்மளை சந்தேகமா பார்த்தா… என்ன பண்றது? இப்படியா முடுக்கி விடுவான்… லூசு…. லூசு பையன்.’ என்று திலக்கை திட்டிக் கொண்டு சோர்வாக படுத்தாள் பூங்கோதை.
‘ஒரு காதலியிடம் என்னால் எல்லை மீற முடிஞ்சது. ஆனால், மனைவி கிட்ட இல்லை. எம் பொஞ்சாதி மனசு எனக்கு முக்கியம். உன்னை பாதுக்காக்க வேண்டிய இடத்தில் இருக்கேன் பியூட்டி.’ திலக் கூறிய வார்த்தைகள் பூங்கோதையின் செவிகளில் ஒலித்தது.
“இவன் எனக்கு பாதுகாப்பு. வேலிக்கு ஓணான் சாட்சி…” என்று கோபமாக சிடுசிடுத்துக் கொண்டாள் பூங்கோதை.
நடந்தவற்றை ஒதுக்க நினைத்தாலும், ‘ஒருவேளை, திலக் பெரிய பிரச்சனையா இருப்பானோ? காதலாம் காதல். அவன் வாயில் கொள்ளிக்கட்டையை வைக்க…’ என்ற முடிவோடு நித்திரையில் ஆழ்ந்தாள் பூங்கோதை.
திலக் அவன் வீட்டில், “அன்னைக்கு ரொம்ப அவசரப்பட்டுட்டோமோ? ஆனாலும், பியூட்டி என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்குதே! காலப்போக்கில் எல்லாம் சரியாகிரும்.” என்று பேசிக்கொண்டே மொட்டை மாடியில் நடக்க, அவன் அலைபேசி ஒலித்தது.
“கதிரேசா!” என்று திலக் அழைக்க, “இவ்வுளவு நேரம் எங்க போனீக?” என்று கதிரேசன் கேட்க, திலக் மழுப்பலாக சிரித்தான்.
“திலக்… உனக்கு நான் இந்த விஷயத்தில் சேக்காளின்னு தெரிஞ்சா… பூங்கோதை கூட என்னை மன்னிக்க மாட்டா. ஆச்சி, என்னை சீவிப்புடும். பார்த்து பண்ணு. பூங்கோதை வாழ்க்கை நல்லாருக்கணும். அது, அவ மேல உயிரையே வச்சிருக்கிற உன் கூட இருக்கும் போது, நல்லாருக்கும்முனு நான் நம்புறேன்.” என்று கதிரேசன், ஆழமாகவும், படபடப்பாகவும் கூற, “கதிரேசா… கவலையை விடு… நான் அவ கிட்ட பக்குவமா பேசியிருக்கேன். அடுத்த வருஷம், நான் வரும் போது பூங்கோதை படிப்பை முடிச்சிருப்பா. புறவு கல்யாணம்தென். ஊரே மெச்சுற அளவுக்கு வாழ வைக்கேன்.” என்று திலக் உல்லாசமாகக் கூறினான்.
கதிரேசன், “ம்….” கொட்ட, “அது வரைக்கும் நீதேன் பொறுப்பு.” என்று திலக் கூறினான்.
கதிரேசனும் சம்மதமாகத் தலை அசைத்தான். பாவம் கதிரேசன் அறியவில்லை. அவன் ஆயுளுக்கும் அவனுக்காகக் காத்திருக்கும் பொறுப்பை.
மக்கள் மனதில் மண்டிக்கிடக்கும் தீவிரவாதத்தை திலக் அறியவில்லை. தேச எல்லையில் பதுங்கி இருக்கும் தீவிரவாதத்தை கதிரேசன் அறியவில்லை.
பல தாக்குதலுக்கு உள்ளாக போவது தெரியாமல் நண்பர்கள் அவர்கள் பேச்சை சுவரசியாமக தொடர்ந்தனர்.
வா… அருகே வா! வரும்….