காலையிலேயே குருவிகளின் சத்தத்தில் கண்விழித்து விட்டாள் மித்ரமதி. சுற்றிவர நிறைய மரங்கள் இருந்ததால் கிளிகளும், குருவிகளும் அங்கு ஏராளம்.

மனது இதமாக இருக்கத் திரும்பிப் பார்த்தாள். கார்த்திக் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான். நேற்றைய இரவை நினைத்த போது அவள் முகத்தில் வெட்கத்திற்குப் பதிலாகக் குழப்பமே தெரிந்தது.

‘கார்த்திக் ஏன் அப்படி நடந்து கொண்டான்?’ தனக்குப் பிடிக்காது என்று தெரிந்த பின்னும் விலகிப் போகாமல் ஏன் நெருங்கி வந்தான். அதுதான் இளமையின் வேகமா?
எதற்குமே விடை தெரியாமல் காலைக் கடன்களை முடித்தாள் மித்ரமதி. ரூமை விட்டு வெளியே வந்தவள் மாடியிலிருந்த அறைகளை ஒரு முறை பார்வையிட்டாள்.

நான்கைந்து ரூம்கள் தாராளமாக இருக்க எதற்கு அவளை அவன் ரூமிலேயே தங்க வைத்தான் கார்த்திக் என்று இப்போது லேசாகப் புரிந்தது. சிரித்துக் கொண்டாள்.

அன்று அவன் அமர்ந்திருந்த ஆஃபீஸ் ரூம், அதையடுத்தாற் போல அவனது பெட்ரூம். அதற்கு எதிர்த்தாற் போல இன்னுமொரு பெட்ரூம் நல்ல விசாலமாக இருந்தது.
மித்ரமதி கீழே போன போது பத்மா கிச்சனில் தான் நின்றிருந்தார்.

“குட் மார்னிங் மித்ரா.”

“குட் மார்னிங் ஆன்ட்டி.” புதுப் பெண்ணிற்கே உரித்தான மலர்ச்சி அங்கு இல்லை. குரலும் நலிந்து போயிருந்தது.

“மித்ரா… ஆர் யூ ஓகே?”

“ஆ… ஆமா ஆன்ட்டி.” அவள் தடுமாறவும் பக்கத்தில் வந்தார் பத்மா. அவர் கண்கள் மருமகளை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தது.

“மித்ரா, எங்க ஃபாமிலியில பொண் குழந்தைங்க இல்லை. எனக்கும் என் தங்கைக்கும் பையனுங்க தான். அதால பொண்ணுங்களை…” இப்போது பத்மா தடுமாறச் சிரித்தாள் மித்ரமதி.

“ஏதாவது ப்ராப்ளமா மித்ரா?” இதற்கு மேல் தன் மகனின் மனைவியிடம் என்ன கேட்பது என்று பத்மாவிற்குப் புரியவில்லை.

“ஒரு ப்ராப்ளமும் இல்லை ஆன்ட்டி.” புன்னகைத்தவளிடம் டீ யை நீட்டினார் பத்மா.

“டாக்டர் கிட்ட போகணுமா மித்ரா?” மாமியாரின் குரலில் சங்கடம் கலந்த அக்கறை.

“தேவையில்லை ஆன்ட்டி.”

“அப்போ சரிம்மா, நான் பயந்துட்டேன். உங்க வீட்டுல டீ தான் குடிப்பீங்க இல்லை?”

“ஆமா ஆன்ட்டி. தான்க் யூ. பின்னாடி தான் தோட்டம் இருக்கில்லை ஆன்ட்டி?” அவள் கேட்கவும் கிச்சன் கதவைத் திறந்து விட்டார் பத்மா.

வீட்டிற்குப் பின்னால் ஒரு கால் ஏக்கர் அளவு நிலம் இருந்தது. வீட்டை அடுத்திருந்த பகுதி வெறுமையாக இருக்க அதில் ஒன்றிரண்டு பயிர்கள் தெரிந்தது.

அதற்கு அடுத்தாற்போல நல்ல ஓங்கி உயர்ந்த மரங்கள் செறிவாகக் காணப்பட்டது. மித்ரமதிக்கு இந்தப் பயிர் பச்சைகளிலெல்லாம் அத்தனை ஆர்வம் இருந்ததில்லை.

ஆனால், இப்போது இந்த இடத்தைப் பார்க்கும் போது கொஞ்சம் அதற்காகவும் நேரம் செலவழித்தால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.

‘பாட்டியிடம் அடுத்த முறை பேசும் போது இதுபற்றிக் கேட்கவேண்டும்.’ டீயை அருந்திய படியே மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மனித நடமாட்டம் ஆரம்பிக்காததால் எங்கும் ‘கீச் கீச்’ என்று சத்தம். நகரத்திற்குள் இருக்கும் மாசு கலந்த காற்றையே சுவாசித்துப் பழகியவளுக்கு, இப்போது நுரையீரலை நிரப்பிய சுத்தமான காற்று சுகமாக இருந்தது.

எத்தனை நேரம் அப்படியே நின்றிருந்தாளோ…

“மித்ரா.” என்ற குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தாள். கார்த்திக் தான் நின்றிருந்தான். ப்ளூ டெனிம், வயிட் ஷர்ட். அவள் கூட அப்போது டெனிம், குர்தா தான் அணிந்திருந்தாள்.

“குட் மார்னிங் பேபி.”

“குட் மார்னிங்.” அவள் சாதாரணமாகச் சொல்லி விட்டு நிற்க  அந்தக் கண்களில் நேற்றைய நிகழ்விற்கே உரித்தான நாணம் மருந்திற்கும் இல்லை. கார்த்திக் எங்கேயோ பலமாக அடி வாங்கினான். இருந்தாலும் சமாளித்துக் கொண்டான்.

“என்ன பண்ணுற மித்ரா?”

“சும்மா தான். இந்த இடம் ரொம்ப அழகா இருந்தது. அப்படியே பார்த்துக்கிட்டு நிக்கிறேன்.” அவள் கோபப் படுவாள் என்று அவன் எதிர்பார்க்க, அவள் சரளமாகப் பதில் சொன்னாள்.

“கொஞ்ச தூரம் நடக்கலாமா?” அவன் கேட்கவும் ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தவள் கையிலிருந்த ‘கப்’ ஐ பக்கத்திலிருந்த குட்டிப் பாறையின் மேல் வைத்து விட்டு அவனோடு நடந்தாள்.

கார்த்திக் எதுவுமே பேசவில்லை. அமைதியாகவே நடந்தான். எட்ட நடந்த அவள் விரல்களை அவன் கிட்ட வந்து பற்றிய போது மித்ரா எதுவும் சொல்லவில்லை. நடந்த படியே இருந்தார்கள்.

“மித்ரா!”

“ம்…” அவள் திரும்பிப் பார்க்க, அவளை அங்கிருந்த மரமொன்றில் சாய்த்தான்
கார்த்திக்.

“கோபமா?”

“எதுக்கு?” அவள் சட்டென்று கேட்க இப்போது கார்த்திக் குழம்பிப் போனான்.

“ஓ… அப்போ கோபமில்லையா?” கேட்டபடியே அவன் அவளை நெருங்க, அவன் நெஞ்சில் கை வைத்து அவனை அங்கேயே நிறுத்தினாள் மனைவி.

“நீங்க என்ன பேசுறீங்க ன்னே எனக்குப் புரியலை கார்த்திக். பை த வே… எனக்கு ஆஃபீஸுக்கு லேட் ஆகுது கார்த்திக்.”

“வாட்! ஆஃபீஸா?” அவன் அதிர்ச்சியாகக் கேட்க நடந்து போனவள் நின்று திரும்பி இவனைப் பார்த்தாள்.

“ஏன் கார்த்திக்? கூடாதா?” புன்னகை முகமாகக் கேட்டுவிட்டு அவள் நகர்ந்து விட கார்த்திக்கின் நெற்றியில் குழப்ப முடிச்சுகள் வீழ்ந்தது.

மனைவியின் நடவடிக்கைகள் அவனுக்கு விசித்திரமாக இருந்தது.‌ அவள் உணர்வுகளை சிறிதும் மதிக்காமல் அவர்களின் இல்லறத்தை அவன் ஆரம்பித்ததில் அவளுக்கு அத்தனை வருத்தம் இருக்கும் என்று அவன் கணக்குப் போட்டிருந்தான்.
ஆனால் அனைத்தையும் அவள் பூச்சியம் என்றாக்கியபோது குழம்புவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அவனுக்கு.

அவள் நடந்து போவதையே பார்த்திருந்தவன் அவள் பின்னோடு போக கிச்சனில்
வைத்து பத்மா மகனைப் பிடித்துக் கொண்டார்.

“என்ன கார்த்திக்? மித்ரா ஆஃபீஸ் போகணும்னு சொல்றா.”

“எனக்கும் புரியலை ம்மா.” நகர்ந்த மகனை நிறுத்தியது அன்னையின் குரல்.

“நில்லு கார்த்திக். காலையிலேயே மித்ராவோட முகம் அவ்வளவு நல்லா இல்லை.
உனக்கும் மித்ராக்கும் ஏதாவது மனஸ்தாபமா?”

“இல்லையே ம்மா.”

“இந்த ஒரு மாசமாத்தான் நான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன் கார்த்திக். அதுல தயவு பண்ணி மண்ணை அள்ளிப் போட்டுடாத.” பத்மா காட்டமாகக் கூறவும் ஒரு சலிப்போடு மாடி ஏறினான் மகன்.

கறுப்பு நிற ஸ்கர்ட்டும் வெள்ளை நிற ஷர்ட்டுமாக பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள் மித்ரா. அவளையே பார்த்தபடி ரூம் ஜன்னலில் சாய்ந்திருந்தான் கார்த்திக்.

“கார்த்திக், இன்னைக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு.”

“அதுக்கு ரிச்சர்ட் போறதா ஏற்கெனவே முடிவாச்சு மித்ரா.”

“கரெக்ட்… ஆனா இப்போ நான் போனா பெட்டரா இருக்கும்ன்னு ஃபீல் பண்ணுறேன் கார்த்திக்.” சொல்லி விட்டு நகர்ந்தவள் பாதியிலேயே நின்றாள்.

“ஆங்… கார்த்திக்! ஒன்னு சொல்ல மறந்துட்டேன். இந்த ரூமுக்கு ஆப்பொசிட்டா இருக்கிற ரூமை நான் எடுத்துக்கிறேன். என்னோட திங்ஸ் எல்லாத்தையும் நான் அங்க ஷிஃப்ட் பண்ணிக்கிறேன்.”

“……………”

“உங்களுக்கும் பிடிச்சிருந்தா நீங்க தாராளமா அங்க வரலாம். ஆனா வரும்போது… நீங்க என்ன பிரான்ட் யூஸ் பண்ணுறீங்கன்னு எனக்குத் தெரியாது. அதெல்லாம் இல்லாத மாதிரிப் பார்த்துக்கோங்க.” சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பிப் போனாள் இளையவள்.

“மித்ரா!” அவன் குரல் கொஞ்சம் ஓங்கி ஒலிக்கத் திரும்பிப் பார்த்தாள் பெண். அவன் முகத்தில் கோபம் ஜொலிக்கும் என்று அவள் எதிர்பார்த்திருக்க அழகானதொரு புன்னகையோடு நின்றிருந்தான் கார்த்திக்.

டெனிம் பாக்கெட்டில் கைகளை விட்டபடி தலையைக் கொஞ்சம் சரித்துக்கொண்டு அவன் நின்றிருந்த தோற்றம் மித்ரமதியை லேசாக அசைத்தது. அந்தப் புன்னகையில் அத்தனை கவர்ச்சி.

“ஐ லைக் இட்!” அவன் குறும்பாகச் சொல்லவும் தோளைக் குலுக்கியபடி போய்விட்டாள் மனைவி.

‘இவள் லேசுப்பட்ட பெண்ணில்லை.’ கார்த்திக்கின் உள்மனது அடித்துச் சொன்னது. கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணுவது ஒரு ரகம் என்றால்… இது இன்னொரு ரகம்.
சத்தமின்றி, ரத்தமின்றி காரியம் சாதிக்கும் ரகம். மனைவியின் காரியங்களில் ஒரு சுவாரஸ்யம் பிறக்க வாய்விட்டுச் சிரித்தான் கார்த்திக்.

***

அன்று முழுவதும் வேலை சரியாக இருந்தது மித்ரமதிக்கு. காலையில் மீட்டிங்கை முடித்தவள் அதன் பிறகு ஒரு கொட்டேஷனுக்காக அமர்ந்து விட்டாள்.

ஆஃபீஸுக்கு அன்றே வந்தவளை ஆச்சரியமாகப் பார்த்தவர்களை அவள் அலட்சியமாகப் பார்க்க, வேலை தொடர்ந்தது.
எல்லோருடனும் கலந்தாலோசித்து விட்டு ஃபைனல் அமௌன்ட்டை உறுதிப் படுத்தியவள் அந்தத் தொகையை கார்த்திக்கிற்கும் அனுப்பி வைத்தாள்.

ஆறு மணியோடு அத்தனை பேரும் கிளம்பி இருக்க ஏழு மணி வரை அமைதியாக உட்கார்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.

“மேடம்! ஏதாவது ப்ராப்ளமா?” இது ரிச்சர்ட். தயக்கத்தோடே கேட்டான்.

“என்ன ப்ராப்ளம் ரிச்சர்ட்? ஏன் அப்படிக் கேக்கிற?”

“ஒன்னுமில்லை மேடம்.” இப்படிப் பேசுபவளிடம் என்ன கேட்பது என்று புரியாமல் அவன் காபினுக்குப் போனான் ரிச்சர்ட். ஃபோன் சிணுங்கியது. கார்த்திக் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“ஹலோ சார்.”

“ரிச்சர்ட், மித்ரா கிளம்பியாச்சா?”

“இன்னும் இல்லை சார்.”

“ஓ… நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன் ரிச்சர்ட். என்னால இப்போ அங்க வரமுடியாது. மித்ராவைத் தனியா அனுப்ப வேணாம். நீயும் கூட வா. நான் உனக்கு இங்க இருந்து டாக்சி அரேன்ஞ் பண்ணுறேன்.”

“ஓகே சார்.” லைனைத் துண்டித்த ரிச்சர்ட் குழம்பிப் போனான். என்னதான் நடக்கிறது இங்கே!

கல்யாணமான மறுநாளே பெண் வேலைக்கு வருகிறது. போதாததற்கு அந்த மனிதர் வேறு பிஸியாக இருக்கிறாராம்! தலை சுற்றியது இவனுக்கு.

ஏதேதோ காரணங்கள் சொல்லி அப்போதே மித்ராவைப் பாக் பண்ணியவன் தானே காரை ட்ரைவ் பண்ணினான். மித்ரா மறுத்த போது இது கார்த்திக்கின் உத்தரவு என்று கூறி அவளைச் சமாளித்து விட்டான்.

***
கார்த்திக் டீவி யின் முன் அமர்ந்து ஃபுட்பால் மாட்ச் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அப்போது பிஸியாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலை அதுதான்.

பின்னே… ரிச்சர்ட்டிடம், கல்யாணமான மறுநாளே எனக்கும் என் மனைவிக்கும் மனக்கசப்பு. அதற்கு முழுமுதற் காரணம் நான்தான் என்று சொல்லவா முடியும்?
ஆனால் அவன் கண்கள் முழுவதும் அந்த ஆடியின் வரவிற்காக வாசலையே பார்த்திருந்தன.

“என்ன பத்மா இது? கல்யாணமான மறுநாளே மித்ரா வேலைக்குப் போறா. இவ்வளவு டைம் ஆகியும் இன்னும் வீட்டுக்கு வரலை. என்னதான் நடக்குது இந்த வீட்டுல?” இது கார்த்திக்கின் அப்பா.

“ஏன் தேவ்? உங்க பையன் சில நேரங்கள்ல வீட்டுக்கே வராம காணாமப் போவானே! அப்போ எல்லாம் இந்த வாயை ஒளிச்சு வச்சிருந்தீங்களா?” பத்மா சூடாகக் கேட்கவும் அப்பாவும் மகனும் அமைதியாகிவிட்டார்கள்.

“மித்ரா எனக்கு ஃபோன் பண்ணி ‘வரக் கொஞ்சம் லேட்டாகும் ஆன்ட்டி’ ன்னு சொல்லிட்டா.” சொன்ன அம்மாவை நிமிர்ந்து பார்த்தான் மகன். அந்த வார்த்தைகளில் உண்மை இல்லாததால் சட்டென்று உள்ளே போய்விட்டார் பத்மா.

சற்று நேரத்திலெல்லாம் வீடு வந்துவிட்டாள் மித்ரா. கார்த்திக் தான் வாசல் வரை போய் ரிச்சர்ட் திரும்பப் போவதற்காக டாக்சி ஏற்பாடு பண்ணினான். மறந்தும் ரிச்சர்ட்டை உள்ளே அழைக்கவில்லை.

“மித்ரா! சீக்கிரமா குளிச்சிட்டு வாம்மா. எல்லாரும் சாப்பிடாம உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்காங்க.”

“இதோ… பத்து நிமிஷம் ஆன்ட்டி.” சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் காலையில் அவள் கார்த்திக்கிடம் சொன்ன அவளது ரூமிற்குள் போனாள்.

ஆச்சரியமாக இருந்தது! அவள் பொருட்கள் அனைத்தும் நேர்த்தியாக அங்கே அடுக்கப்பட்டிருந்தன. கப்போர்ட்டைத் திறந்தாள். ஆடைகளும் இடம் மாறி இருந்தன.

‘ஓ… இன்று முழுவதும் ஐயா இந்த வேலைதான் பார்த்தாரா!’
துரித கதியில் குளியலை முடித்தவள் கீழே போனாள். சாப்பாடு ரெடியாக இருந்தது.

இவள் ஆஃபீஸ் விஜயத்தைத் தவிர்த்து எல்லோரும் பொதுவாகவே பேசிக்கொண்டு உண்டு முடித்தார்கள்.

பத்மா கிச்சனைக் க்ளீன் பண்ண மித்ராவும் கூட மாட ஒத்தாசை புரிந்தாள்.

“மித்ரா…” தயக்கமாக வந்தது பத்மாவின் குரல்.

“சொல்லுங்க ஆன்ட்டி.”

“ஆன்ட்டி என்னடா இப்படிப் பேசுறாங்களேன்னு நீ தப்பா எடுத்துக்கக் கூடாது…” பத்மா தயக்கமாக இழுக்கவும் சங்கடமாகப் புன்னகைத்தாள் இளையவள்.

“நீ ஆஃபீஸுக்குப் போனதை நான் தப்பா சொல்லலைம்மா. ஆனா… என்ன முக்கியமான வேலை இருந்தாலும் ஆறு மணியோட வீட்டுக்கு வந்திடும்மா.”

“சரி ஆன்ட்டி.”

“முன்னாடியெல்லாம் ஊர்ல பொண்ணுங்க வெளில போனா ‘வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கோம்’ னு சொல்லுவாங்க. அதோட அர்த்தம் என்னன்னு இன்னிக்கு நல்லா எனக்குப் புரிஞ்சுது.” பத்மா சொல்லவும் மித்ரமதி புன்னகைத்தாள்.

“நாளைக்கு உனக்கும் ஒரு பொண்ணு பொறக்கும் இல்லை. அப்போ ஆன்ட்டி சொல்றதோட அர்த்தம் புரியும் உனக்கு.” பத்மா இப்போது கேலியாக அவள் முதுகில் தட்டினார்.

“போதும்மா, நீ போய் ரெஸ்ட் எடு. மீதி வேலையை நான் முடிக்கிறேன்.”

“சரி ஆன்ட்டி.”

படபடக்கும் இதயத்தோடு மேலே வந்தாள் மித்ரமதி. கணவனை நேருக்கு நேராகச் சந்திக்கும் தைரியம் இப்போது அவளுக்கு இருக்கவில்லை.

அதையும் தாண்டி தான் காதல் வைத்த மனிதன் தன் விருப்பு வெறுப்புகளுக்கு மரியாதை கொடுக்காதது இன்னும் வலித்தது.

தனது ரூம் கதவைத் திறந்தவள் லைட்டைக் கூட ஆன் பண்ணாமல் அங்கிருந்த ஜன்னலின் அருகில் போய் நின்று கொண்டாள்.

நிர்மலமான வானம். அழகாக பவனி வரும் சுந்தர நிலவு. அந்த ஏகாந்தத்தில் துணையாக அவனும் இருந்தால்… எத்தனை அழகாக இருக்கும்!

எண்ணத்தின் நாயகனே அவள் விரும்பியது போல பின்னோடிருந்து இடை அணைத்தான். அவன் காலடி ஓசை அவள் காதிலும் வீழ்ந்திருந்ததால் அமைதியாகவே நின்றாள் மனைவி.

“மேடம் ரொம்பக் கோபமா இருக்கீங்களோ?” சரசமாக வந்தது அவன் குரல்.

“இது கோபம் இல்லை கார்த்திக். செல்ஃப் ரெஸ்பெக்ட். அதை எங்கேயும், யாருக்காகவும் விட்டுக்குடுக்க முடியாது. அது நீங்களாகவே இருந்தாலும் சரி.” சிரித்தபடியே சொன்னவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீங்க எதைக் குடுக்குறீங்களோ அதுதான் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.”

“அடடே! இந்த டீல் ரொம்ப நல்லா இருக்கே! அப்போ… இப்போ நான் குடுக்கிறதெல்லாம் எனக்குத் திரும்பக் கிடைக்குமா?” கேலியாகக் கேட்டபடி அவன் நெருங்க அந்தக் கண்களை ஆழமாகப் பார்த்தாள் மித்ரமதி.

புத்தம் புதிதாக அவர்களுக்கிடையே முளைத்திருந்த காதலைத் தவிர அங்கு வேறொன்றும் இல்லை. இனிக்க இனிக்க அந்தக் காதலை முதன் முறையாக அவளுக்குக் காட்டினான் கார்த்திக்.

தாமரை இலைமேல் நீர்த்துளியா காதல்? இல்லையே… அது செம்புலம் சேர்ந்த நீர்த்துளி அல்லவா? அங்கு செம்புலமும் நீர்த்துளியும் இரண்டறக் கலந்தன.

***

இன்றைக்கு மித்ரமதிக்கு முன்னதாகவே கண்விழித்து விட்டான் கார்த்திக். ஆழ்ந்து உறங்கும் மனைவியைத் திரும்பிப் பார்த்தவன் புன்னகைத்துக் கொண்டான்.

இவள் தனக்குச் சளைத்தவள் இல்லை என்று நன்றாகவே தெரிந்தது. சொல்லப் போனால் அது அவனுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருந்தது.

கார்த்திக்கிற்கு எப்போதும் சவால்களைச் சந்திப்பதே பிடிக்கும். எத்தனை லாவகமாக நேற்று என்னை உதாசீனப் படுத்தி விட்டாள். அந்த நிமிர்வு அவனுக்குப் பிடித்திருந்தது.

அவ்வப்போது காதல் வந்து கண்ணை மறைத்தாலும் இந்தக் கல்யாணத்தின் நோக்கம் நடந்தே தீரும் என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.

“மித்ரா!” மனைவியை மெதுவாக அசைத்தான் கார்த்திக்.

“ம்…”

“சன் ரைஸ் இங்க ரொம்ப அழகா இருக்கும். போய் பார்க்கலாமா?”

“ம்… கார்த்திக். என்ன சொன்னீங்க?” தூக்கக் கலக்கத்தில் அவள் கேட்க அலாக்காக அவளைத் தூக்கியவன் பாத்ரூமிற்குள் கொண்டு விட்டான்.

“டென் மினிட்ஸ் ல ரெடியாகணும். நானும் குளிச்சுட்டு வந்திடுறேன். சரியா?” அவன் கேட்க, குழப்பத்தோடே தலையாட்டினாள் மனைவி. அவள் தலையோடு தன் தலையை மெதுவாக மோதியவன் போய்விட்டான்.

குளித்து முடித்து கார்த்திக் கிச்சனில் எதையோ உருட்டிக் கொண்டிருக்க ஜீன்ஸ் ஷர்ட்டில் மித்ராவும் வந்து நின்றாள்.

“ம்… கிளம்பலாமா மித்ரா?”

“எங்க கார்த்திக்?”

“நீ வா… நான் சொல்றேன்.” அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனவன் அவளை அமரச் செய்துவிட்டு காரை ஸ்டார்ட் பண்ணினான்.

எங்கே போகிறோம் என்று திரும்பவும் கேட்க ஒரு மாதிரியாக இருந்ததால் அமைதியாக இருந்தாள் மித்ரமதி. ஐந்து நிமிடப் பயணத்திற்குப் பின் ஒரு பரந்த வெளியில் கார் போய் நின்றது.

இன்னும் இரண்டு மூன்று கார்களும் அங்கே வரிசையாக நிற்கத் திரும்பிப் பார்த்தாள் மித்ரா. இவர்களுக்குப் பக்கத்தில் நின்றிருந்த காரில் இருந்த மனிதர் இழுத்துப் போர்த்திக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார். தொலைதூரப் பிரயாணியாக இருக்க வேண்டும். களைத்த உடம்பிற்குக் கொஞ்சம் ஆறுதல் தேடிக் கொண்டிருந்தார்.

“இறங்கு மித்ரா.” கணவனின் குரலில் காரை விட்டிறங்கினாள் மித்ரமதி. இவர்கள் நின்றிருந்த பகுதி கொஞ்சம் மலைப்பாங்காக இருந்ததால் லண்டன் நகரையே இங்கிருந்து முழுமையாகப் பார்க்க முடிந்தது.

அந்த அரை இருட்டில் புள்ளிப் புள்ளியாகத் தெரிந்த மின் விளக்குகளின் ஒளியில் ஜகஜ்ஜோதியாகக் காட்சியளித்தது லண்டன்.

அந்த அதிகாலைக் குளிரில் உடம்பு லேசாகச் சிலிர்க்க மார்புக்குக் குறுக்கே கைகளை இறுக்கிக் கட்டியபடி அந்தக் கணத்தை ரசித்தாள் பெண்.

இன்னும் சூரியன் தன் செங்கதிர்களை உலகின் மீது பரப்பவில்லை. கிழக்கு வானின் அடியில் யாரோ நெருப்பை மூட்டியது போல ஒரு ஒளிப்பிழம்பு கிளம்பிக் கொண்டிருந்தது.

மித்ரமதி மெய்மறந்து பார்த்திருக்க அவள் கையில் டீ கப்பைத் திணித்தான் கார்த்திக்.
‘கிச்சனில் நின்று கொண்டு இதைத்தான் உருட்டினானா?’ கைகளுக்கு மட்டுமல்லாமல் உள்ளே இறங்கிய டீ அந்தக் குளிருக்கும் அத்தனை இதமாக இருந்தது.

தன்னையே பார்த்திருந்த மனைவியின் முகத்தைச் சூரியனுக்காகத் திருப்பியவன் தானும் திரும்பிக் கொண்டான்.

தகதகவென மின்னியபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே இருள் வானை நிறம்மாற்றிக் கொண்டு கிளம்பியிருந்தான் சூரியன்.

மித்ரமதி இமைக்க மறந்து போனாள். இதுவரை அவள் இப்படியெல்லாம் பார்த்ததில்லை.
மேடாக இருந்த ஓரிடத்தில், தோளை உரசும் அவன் ஸ்பரிசத்துடன், கையில் சூடான பானத்தோடு… அந்தக் கணம் அவள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.
சூரியன் மேலே ஏற ஏற, இதுவரை அங்கே நடந்து கொண்டிருந்த வர்ண ஜாலம் காணாமற் போய் கண்ணைக் கூச வைக்கும் ஒளிப்பிழம்பு மாத்திரமே மிச்சமிருந்தது.
கண்களை மூடிக்கொண்ட மித்ரமதி கணவன் தோள் சாய்ந்து கொண்டாள். அவன் கையும் ஆதரவாக அவள் இடை அணைக்க அவனுக்குள் முழுதாகப் புகுந்து கொண்டாள் பெண்.

error: Content is protected !!