10
தன் முன் இருந்த தட்டிட்லியை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மஹா. அன்று முழுவதும் உணவும் உண்ணவில்லை… நீரும் கூட அருந்தவில்லை…
அத்தனை வைராக்கியம்… அவ்வளவு உறுதி!
காலையில் கண்ட அந்தப் பெண் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் அவளைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை.
இவ்வளவுக்கும் பசி தாங்காதவள் தான்… சிறுபசிக்காக உள்ளே தள்ளும் சிறுதீனி வகையறாவுக்காகப் பைரவியிடம் சரமாரியாகத் திட்டு வாங்குவாள் தான்!
எது இருந்தாலும் இல்லையென்றாலும் வயிற்றுக்கு ஈய வேண்டும் அவளைப் பொறுத்தவரையில்.
“ஏண்டி… இப்பதானே மானம் கெட திட்டு வாங்கின… உடனே சான்ட்விச் ஆர்டர் பண்ற? உனக்கெல்லாம் இந்த வெட்கம் வேலாயுதம் சொக்கம் சூலாயுதமெல்லாம் இல்லையா?” ஆன்லைனில் ஸ்விகியில் சான்ட்விச் ஆர்டர் செய்து கொண்டிருந்தவளை பார்த்து இரண்டு நாட்களுக்கு முன்னர்த் தான் அவ்வளவு அழகாகப் பாராட்டினார் பைரவி.
அதைச் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்திக். தாய்க்கும் மகளுக்கும் நடக்கும் இது போன்ற சண்டைகள் வெகுசுவாரசியமானவை, அவனைப் பொறுத்தவரை!
“ம்ம்மா… அதெல்லாம் எதுக்கும்மா வேஸ்ட் லக்கேஜ்… தனியொரு மனுஷிக்கு உணவில்லைன்னா ஜகத்தினை அழித்திடுவோம்ன்னு பாரதியார் சொல்லியிருக்கார்…” என்றவள்,
“அதெல்லாம் மனுஷிக்கு… நீ தான் வாலில்லாத குரங்காச்சே…” பைரவியும் விடுவேனா என்றார்.
“ம்ம்மா… வருங்கால டாக்டரை பார்த்து என்ன பேச்சு பேசற? நாளைக்கு நாடே புகழும்போது, எல்லாப் புகழும் என் அம்மாவுக்கேன்னு சொல்லலாம்ன்னு இருந்தேன்… நோ… அது கேன்சல்ட்…” என்று அவள் முகத்தைக் குறும்பாகத் திருப்ப,
“அட அப்படியா ராசாத்தி… திங்கறதுல மட்டும் தானே நீ சாதனை பண்ணுவ?”
“பாட்டி… அம்மாவை பாருங்க…”
மூவரையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த கிருஷ்ணம்மாளை இவள் இழுத்துவிட, அவர் உண்மையிலேயே சற்று பயத்தோடு பைரவியை பார்த்தார். தான் தனது பேத்தியைக் காப்பாற்ற சென்றால் மருமகள் தன்னைக் கிழித்துத் தொங்கவிடும் வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக இருந்ததால் அவர் ஹிஹி என்று மட்டும் சிரித்தபடி,
“பைரவி… குட்டி பாவம்… விட்டுடேன்… ஒரு சான்ட்விச் தானே ஆர்டர் பண்ணா…” என்று தயக்கத்தோடு கூற,
“அத்தை… இதுல நீங்கத் தலையிடாதீங்க… உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு… அது தெரியாதா? இவ கண்டபடிக்கு தின்னுட்டே இருந்தா வர்றவன் பயந்து ஓடிட மாட்டானா? இப்பவே ரெண்டு சைஸ் எக்ஸ்ட்ரா இருக்கா…”
பைரவி நேராகத் தாக்கவும், மஹா என்ற இந்தப் பெண் புலிக்குத் தன்மானம் சுறுசுறுவென எகிறியது. ஆனாலும் சான்ட்விச், அந்தத் தன்மானத்தை அடங்கு அடங்கு என அடங்கச் செய்தது.
“ம்ம்ம்மா… என்னோட ஹெல்த்க்காகச் சொல்லு அது ஓகே… அதென்ன ஒருத்தனுக்காகச் சொல்றது? நானென்ன ஆப்ஜக்ட்டா? அவனுக்கு ஏத்த மாதிரி இருக்க? டெயிலர் மேட் பீசாக்கி, ஒருத்தன் கிட்ட தள்ளி விடறது மட்டும் தான் உன்னோட வாழ்நாள் லட்சியம் இல்லையா?”
“இந்தப் பேச்சுக்கொன்னும் குறைச்சல் இல்ல… தீனிய குறை தீனிய குறைன்னு சொன்னா, பெரிய மேடை பேச்சாளர் மாதிரி… இப்ப ஒழுங்கா எந்திருச்சுப் போய்ச் சப்பாத்திக்கு குருமாவை நீ வைக்கற… இல்லைன்னா இன்னும் ரெண்டு நாளைக்கு உனக்கு நொறுக்கு தீனி கட்… என்ன சொல்ற நீ?” என்று அவளது வீக் பாயிண்டில் அடித்த பைரவியை பார்த்து,
“ம்மா… தக்காளி குருமா வேணுமா? வெஜ் குருமா வேணுமா?” என்று கேட்ட மஹாவை பார்த்து வாய்விட்டுச் சிரித்தான் கார்த்திக். பேசிய பேச்சென்ன? இப்போது வழிக்கு வந்ததென்ன?!
ஆனாலும், “ச்சே ஒரு டாக்டரை இப்படியெல்லாம் அசிங்கப்படுத்திப் பார்க்கக் கூடாது இந்தச் சமூகம்…” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்ற மஹாவை பார்த்து,
“அங்கென்னடி சத்தம்?” என்று பைரவி கேட்க,
“ஒண்ணுமில்ல மாதாஜி… சும்மா பேசிட்டு இருந்தேன்…” என்று அங்கிருந்தே குரல் கொடுத்து எஸ்கேப் ஆனவளை நினைத்து நினைத்துச் சிரித்துக் கொண்டே இருப்பான் கார்த்திக்.
இந்தச் சம்பவங்களை நினைத்து உண்ணாமலிருந்த மஹாவை போல, அங்கும் கார்த்திக் தலைமேல் கைவைத்தபடி யாருமற்ற அந்த வீட்டில் ஒற்றை ஆளாய் கலங்கியபடி அமர்ந்திருந்தான். யாரிடமும் எதுவும் கூறவில்லை. கூற முடியவில்லை. எதையும் கூறவும் முடியாது.
தந்தை உடல்நிலை சரியில்லாதவர். தாயோ சிறு விஷயத்தை எல்லாம் பூதாகரமாக யோசித்துப் பயந்து போய்விடுவார். பாட்டியின் நிலையோ சொல்லக்கூட முடியாது.
ஆனால் அவனது தங்கை அவனுடைய உயிர்! மஹா அவனது குட்டித் தங்கை. அவள் வளர்ந்தாலும், மருத்துவப் படிப்பை முடிக்கும் நிலையிலிருந்தாலும் கார்த்தியை பொறுத்தமட்டில் அவள் இன்னும் சிறு குழந்தை தான்.
நல்லது கெட்டது எதுவும் தெரியாத குழந்தை. குருட்டுத் தைரியம் மட்டுமே இருக்கும் குழந்தை. இன்னமும் தாயின் சிறகின் அடியிலும் தந்தையின் அரவணைப்பிலும், தமையனின் தோளிலும் நிழல் தேடும் சிறு குழந்தை.
அவ்வாறுதான் அவனால் பார்க்க முடிந்தது. அதுபோலத் தனது தங்கையைக் கொண்டே மற்ற பெண்களையும் அவனால் பார்க்க முடிந்திருக்கிறது.
பிருந்தாவின் ஆர்வப் பார்வையை அவன் அறியாதவன் அல்ல… ஆனால் தனக்கொரு தங்கை இருக்கிறாள், அவளை யாரவது தவறாகப் பார்த்தால் தனக்கு ரத்தம் கொதிக்காதா என்ற எண்ணமே அவளிடமிருந்து கார்த்தியை தள்ளி நிறுத்தியிருக்கிறது.
எப்போதும் கிண்டலடித்துச் சிரித்தபடி இருக்கும் பூப்போன்றவளை அவர்கள் என்ன செய்வார்களோ என்ற பயம் இப்போது அடி வயிற்றைப் பிசைந்தது. அவன் முன்னர் அமர்ந்திருந்த விஜய் உள்ளுக்குள் உடைந்து போயிருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
காட்டிக்கொள்ளவும் முடியாது.
கார்த்திக்கை பொறுத்தவரை மஹாவை கஸ்டடி எடுத்தது விஜய்.
வெளியில் உள்ள பிம்பம் அதுவே தான்!
தன்னிடம் தன்மையாகப் பேசிக்கொண்டே இப்படிச் செய்துவிட்டானே என்று அவனை வெறுப்பாகப் பார்த்தான் கார்த்திக்.
கார்த்திக்கின் வெறுப்பை விஜய் உணர்ந்திருந்தான். ஆனால் அவனால் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது. எந்தவிதமான உபகாரமும் செய்யவும் முடியாது.
கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தான்.
உள்ளுக்குள் ஷ்யாம் மேல் அவ்வளவு கோபம் அவனுக்கு!
தான் அவ்வளவு சொல்லியும், அவள்மேல் தனக்கு ஆர்வம் இருப்பதை உணர்ந்தும் இப்படிச் செய்து விட்டானே என்கிற ஆத்திரம் அவனுக்குள் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதை வெளியில் சற்றும் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.
“ஏன் இப்படிச் செஞ்சீங்க விஜய்… நான் அவ்வளவு சொன்னேனே… எப்படியாவது பணத்தைத் திருப்பிடறேன்னு…” என்று கார்த்திக் கேட்க, விஜய் மெளனமாக அவனைப் பார்த்தான்.
என்ன சொல்வான்? தானும் எவ்வளவோ முயன்று பார்த்ததை இவன் அறிவானா?
“என்னோட உயிரைக் கேட்டிருந்தா கூடக் கொடுத்து இருப்பேனே… ஆனா என்னோட தங்கச்சியை…” என்று சொல்லும் போதே அவனது குரல் உடையப் பார்த்தது.
“கார்த்திக்…” அதற்கும் மேல் அவனால் மெளனமாக இருக்க முடியவில்லை.
“ப்ளீஸ் விஜய்… மஹா என்னோட உயிர்… எனக்கு மட்டுமில்ல… என் குடும்பத்தோட உயிர்… மகாலட்சுமி… அவளுக்கு ஒண்ணுன்னா எல்லாருமே உயிரை விட்டுடுவோம்…” கைகளைக் கோர்த்துக்கொண்டு முகத்தைத் தாங்கியவாறு அவன் கலங்கிய குரலில் கூற, அதைக் கேட்டவனுக்கும் அவள் உயிராகி இருக்கும் விஷயத்தை கார்த்திக் அறிவானா?
ஆனால் சூழ்நிலை கைதியாக அவனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
எப்போது வேண்டுமானாலும் உடையக் காத்திருந்தது அவனது கண் அணை.
ஒரு நீண்ட பெருமூச்சு எடுத்துக் கொண்டு, தன்னை நிலைப்படுத்திக் கொண்டான் விஜய்.
“கார்த்திக்… இப்ப ஒண்ணுமே கெட்டு போகலை… எவ்வளவு சீக்கிரம் பணத்தைத் திருப்ப முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதைப் பண்ணுங்க… மற்ற விஷயத்தை நான் பார்த்துக்கறேன்…” என்று அவன் கூற, அவனைச் சீற்றமாகப் பார்த்தான் கார்த்திக்.
“எப்படியும் நான் பணத்தைத் திருப்பிடுவேன்… ஆனா மகாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீங்கத் திருப்பிக் கொடுப்பீங்களா? அவளோட வாழ்க்கையை? என் தங்கச்சியோட பேர் கெட்டுப் போச்சுன்னா, அவ லைப் என்னாகும்ன்னு யோசிச்சீங்களா விஜய்?”
கோபத்தில் கொதித்தவனை என்ன சொல்லிச் சமாளிப்பது? அவனுடைய கொதிப்பும் இதுவே தானென இவன் அறிவானா?
கார்த்திக்கின் கோபத்தைப் பார்க்கும்போது ஷ்யாம் மேல் இன்னும் கோபம் அதிகமாகியது.
குழப்பத்தை எல்லாம் ஒதுக்கி வைத்தவன், முடிவாக கார்த்திக்கை நோக்கி,
“நீங்கப் பணத்துக்கு ரெடி பண்ணுங்க கார்த்திக்… உங்க தங்கை, உங்க தங்கையா திரும்பி வர்றதுக்கு நான் பொறுப்பு… எங்களுக்கும் நியாயம் தர்மம் எல்லாம் தெரியும்…” என்று கூறியவனைக் கோபமும் ஆற்றாமையும் கலந்து கேலியாகப் பார்த்தான்.
அந்தப் பார்வைக்கான அர்த்தம் விஜய்க்கு தெரியும். ‘நீ தான் நியாயவாதியா?’ என்று கேட்டது அந்தப் பார்வை.
“நீங்க என்ன நினைச்சாலும், எனக்கும் வேற வழி கிடையாது கார்த்திக்… புரிஞ்சுகோங்க…” என்று அவன் எழுந்து கொள்ள,
“அட்லீஸ்ட் மஹாவோட பேசணும் விஜய்…” சற்று தயவாக அவன் கேட்க,
“…” அவனுக்கு என்ன கூறுவதென்று புரியவில்லை.
“நான் அவளோட போனை ரீச் பண்ண ட்ரை பண்ணேன் விஜய்… முடியல…” குரல் கிட்டத்தட்ட உடைந்து விட்டது. ஆனாலும் அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்.
மகா அவனது கட்டுப்பாட்டில் இருந்தால் அவனால் அந்த உதவியைச் செய்ய முடியும். கண்டிப்பாக! ஆனால் அவளிருப்பது ஷ்யாமின் கட்டுப்பாட்டில் அல்லவா!
முதன்முறையாக அவனல்லவா இந்தச் செயலில் இறங்கியிருக்கிறான்.
“பாஸ் கிட்ட கேட்டுட்டு சொல்றேன் கார்த்திக்…” என்றவன், தனது செல்பேசியை எடுத்து ஷ்யாமின் எண்ணை அழுத்தினான்.
ஒரு முறை ரிங் முழுவதுமாகப் போய்க் கட்டானது.
விஜயின் புருவம் யோசனையில் சுருங்கியது. இப்போது எந்தச் சமயத்தில் என்ன நேரும் என்பதை முழுவதுமாக அறிந்தவன் ஷ்யாம் ஒருவன் மட்டுமே! அவனது அடுத்த மூவ் என்ன என்பதைக் கூட இவனால் கணிக்க முடியாத சூழ்நிலையில், பேசியையும் அவன் எடுக்காதது இவனுக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.
இதுபோல அவன் என்றுமே செய்ததில்லை என்பது இன்னொரு கொசுறு!
உள்ளுக்குள் பரவிய நடுக்கத்தை மறைத்தபடி இன்னொரு முறை ஷ்யாமை அழைத்தபடி இவன் காத்திருந்தான்.
*****
உணவு எதையும் உண்ண முடியாது என்று மாலைவரை பிடிவாதமாக இருந்து விட்டாள் மஹா.
அவளது பிடிவாதத்தையும் உறுதியையும் பார்த்த அந்தப் பெண்ணால் அவளோடு ஈடு கொடுக்க முடியவில்லை. மொழியும் புரியாமல், அவளை வழிக்குக் கொண்டு வரவும் தெரியாமல், அந்தப் பெண் விட்டால் போதுமென்று பறக்கத் தயாராக இருந்தாள். காலையில் அவளுடன் அத்தனை வாக்குவாதம் செய்தவன், மாலைவரைக்கும் அவள் புறம் திரும்பக் கூட இல்லை.
அவன் அந்த வீட்டில் தான் இருந்தானா என்பதைக் கூட மகாலக்ஷ்மி அறிய முற்படவில்லை.
ஏழு மணியளவில் அந்தப் பெண் கையில் தட்டிட்லியோடு வந்தாள். அப்போதும் உண்ணாமல் அவளிருக்க, “மிர்ச்சி… இப்ப நீயா சாப்பிடறயா இல்ல… யாராவது வந்து ஊட்டி விடனும்ன்னு நினைக்கறியா?”
அழுத்தமாக ஒலித்த அவனது குரலில், சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.
ஷ்யாம் தான் நின்றிருந்தான்!
எப்போதும் போல இறுக்கமாக, கைகளைக் கட்டிக் கொண்டு, கதவுக்கு அடுத்து நின்றுகொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவளையுமறியாமல் வெறுப்பு மேலெழுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
புருவத்தைச் சுளித்தபடி அவள் வெறுப்பாக முகத்தைத் திருப்ப,
“கம் அவுட்சைட்…” என்று அவன் கூறிவிட்டு திரும்ப,
“நீங்கச் சொன்னவுடனே வர்றதுக்கு நான் ஒன்னும் நீங்க வெச்ச ஆள் இல்ல…” கோபமாக அவள் கூற, அவனுக்குள் சிறு புன்னகை மலர்ந்தது.
ஒவ்வொரு நேரத்தில் மிகவும் முதிர்ந்த கருத்துக்களைக் கொண்ட பெண்ணாகத் தோற்றம் கொண்டாலும், அவ்வபோது அவள் சிறு பிள்ளைபோலச் சண்டித்தனம் செய்வதுதான் அவனுக்குள் சுவாரசியத்தை விதைத்தது.
“ம்ம்ம்… நீ வர மாட்டவில்லையா? ரைட்… சரி நான் வர்றேன்…” என்று கூறியவாறு அறைக்குள் நுழைய வந்தவனைப் பார்த்து, சட்டென எழுந்து நின்றாள் மஹா.
அவன் உள்ளே வருவதை அவள் விரும்பவில்லை. அதை அறிந்தவனுக்கு அந்த விளையாட்டு ஒரு விதமான போதையைக் கொடுத்தது. மீண்டும் மீண்டும் அவளைச் சீண்டிப் பார்க்கச் சொன்னது.
“ஏன் தன்மான சிங்கம் எழுந்து நின்னுட்டீங்க?” மெல்லிய புன்னகையோடு அவன் கேட்க,
அவள் எதுவும் பேசாமல் மெளனமாக நிற்கவும்,
“சரி… வெளிய வா… ஒரு முக்கியமான விஷயம் பேசணும்…” என்று கூறிவிட்டு அவன் ஹாலை நோக்கித் திரும்பி நடக்க, ஒரு நிமிடம் நகராமல் நின்றவள், ‘இவன் சொன்னா உடனே பின்னாடியே போய்டனுமா?’ எரிச்சலாக நினைத்தாலும், வேறு வழி இல்லாமல் அவனைத் தொடர்ந்தாள்.
அவன் நிதானமாக நடந்து சென்று சோபாவில் அமர்ந்து கொண்டு மொபைலை நோண்டிக் கொண்டிருக்க, அவன் முன் நின்று கொண்டிருந்தவளுக்கு எரிச்சலாக இருந்தது.
இவனென்ன பெரிய ராஜாவா? இவன் முன் நின்று கைக்கட்டி நிற்க வேண்டுமா? என்ன தேவைக்கு இப்படி நிற்க வேண்டும் என்று எரிச்சலில் புழுக்கமாக இருந்தது அவளுக்கு.
அவளது பார்வை நிதானமாகச் சுற்றி இருந்தவற்றை அளவெடுத்தது.
சுற்றிலும் இருள் சூழ பார்க்கும் பகலும் இரவும் சேரும் நேரம். தங்க மஞ்சள் வெயில் படர்ந்து பரவி அந்த இடத்தை ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தது. அந்த இடமே அத்தனை அழகாக இருந்தது. அவளது ரசிக மனம் அதில் ஆழ்ந்து போகச் சொன்னது.
தான் மட்டும் இப்படிப்பட்ட இக்கட்டில் இங்கு வராமல், சாதாரணமாக வந்திருந்தால் பட்டாம்பூச்சியாகப் பறந்து திரிந்திருக்கலாம். முதலில் இது என்ன இடமென்று தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர் நிதானமாக வந்து பார்த்து ரசிக்க வேண்டும்.
விதம் விதமாக ஓடும் எண்ணவோட்டத்தை மூன்றாம் மனுஷியாகக் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு முதுகைத் துளைப்பது போன்ற உணர்வு.
கண்டிப்பாக ஷ்யாம் தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டு சட்டெனத் திரும்ப, அவனே தான் பார்த்துக்கொண்டிருந்தான், ஆழ்ந்து! அதிலும் எழுந்து வந்து அவளருகில் நின்று கொண்டு!
ஒரு விதத்தில் ரசித்துக்கொண்டிருந்தான் என்பதை அவனே அறியவில்லை.
“சொல்லு ஷ்யாம்… என்ன பேசணும் உனக்கு?” நேராக அவனைப் பார்த்து அவள் கேட்க, அவனது புருவம் உயர்ந்தது. அவனிடம் இதுபோலக் கண்களைப் பார்த்து, அதுவும் ஒருமையில் கேள்விகள் கேட்ட பெண்கள் மிகக் குறைவு. சொல்லப் போனால் இல்லை என்பதுதான் பதில். அவளது இந்தத் தைரியமும் துணிச்சலும் அவனது புருவத்தை உயரச் செய்தது.
“ம்ம்ம்… இந்த இடம் எப்படி இருக்கு?”
“ம்ம்ம்… அழகா இருக்கு…”
“வீடு…”
“அதுவும் அழகா இருக்கு…”
“அப்புறம் என்ன ப்ராப்ளம் உனக்கு?”
“நீ தான் ப்ராப்ளம்…”
“அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது… வேற வழியில்லை… என்னை நீ சகிச்சுத்தான் ஆகணும்… இல்லைன்னா என்னோட குறிக்கோளை எப்படி அடையறது?” என்று அவன் சிரிக்க,
“என்ன குறிக்கோள்?” அவளுக்கு உடனே புரியவில்லை.
“உன்னோட கண்லருந்து கண்ணீரை வர வெச்சு பார்க்கணும் இல்லையா?!” அவனது குரலில் கேலியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. அவளை இப்படிச் சீண்டி பார்ப்பது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
“அது தான் நடக்கவே போறதில்லையே ஷ்யாம்…”
“பார்க்கலாம்…” என்றவன், “ஆனா உனக்குப் பயம் மிர்ச்சி…” என்று சிரித்தவாறே அவன் கூற,
“எதுக்குப் பயம்… என்ன பயம்?” அவள் புரியாமல் கேட்க,
“ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்…” என்று அவன் சிரிக்க,
எரிச்சலாக அவனைப் பார்த்தவள், “உனக்கு ரொம்பவே கான்பிடன்ஸ் அதிகம் தான்… ஆனா என்னைப் பற்றி ரொம்பக் குறைவா எடை போடற… தட் கேன் நெவர் ஹேப்பன்…”
“அப்படீனா ரூம்ல மறைஞ்சுகிட்டு இல்லாம, நேருக்கு நேரா என்னை ஃபேஸ் பண்ணு… ஒளிஞ்சு விளையாடிகிட்டு இதை நீ சொல்லக் கூடாது…”
“நான் ஒன்னும் ஒளிஞ்சு விளையாடலை…”
“அப்படீன்னா என் கூட உட்கார்ந்து சாப்பிடு…” என்று விஷயத்துக்கு வர,
“உன் கூடச் சாப்பிட்டு தான் நான் ப்ரூவ் பண்ணனும்ன்னு அவசியம் கிடையாது ஷ்யாம்… எனக்கு வேண்டாம்ன்னா வேண்டாம் தான்…” என்று அவள் முடித்தாள்.
“ஓகே… தட்ஸ் ஃபைன்… ஆனா ஏன் சாப்பிட மாட்டேன்னு அடமன்ட்டா இருக்க?”
“ஏன்னா இங்க எனக்குச் சாப்பிட பிடிக்கல… உன்னைப் பார்க்கப் பிடிக்கல… இங்க இருக்கப் பிடிக்கல… இது என்னோட குறைந்தபட்ச எதிர்ப்பு… அவ்வளவுதான்… ஒருநாள் சாப்பிடாம இருந்தா நானென்ன செத்து போய்ட போறேனா?”
“கார்த்திக் பணத்தைத் திருப்ப ஒன் வீக் டைம் கொடுத்து இருக்கேன்… அப்படீன்னா ஒன் வீக் நீ பட்டினி கிடக்கப் போறியா என்ன?”
நிதானமாக அவன் கேட்ட கேள்வியில் மௌனமானாள் மகா.
“நீ அனாவசியமா சீன போட்டா இங்க வேலைக்காகாது மிர்ச்சி… கார்த்திக் பணத்தைத் திருப்பற வரைக்கும் நீ இங்க தான் இருந்தாகணும்…” என்று அவன் இடைவெளி விட,
“கண்டிப்பா எங்கண்ணா திருப்பிடுவான்…”
“அவ்வளவு உறுதியா சொல்றல்ல… அப்படீன்னா சாப்பிட வா…”
“எனக்கு வேண்டாம்…”
“இங்க போர்டிங் அண்ட் லாட்ஜிங் ப்ரீ தான் டார்லிங்…” என்று கேலியாக அவன் கூறிவிட்டு, “அப்படி இல்லைன்னா ஒன்னு பண்ணலாம்… உன் அண்ணன் கிட்ட, அத்தனைக்கும் வசூல் பண்ணிடறேன்… சரியா?” என்று கேட்க, அவனை முறைத்தாள்.
“நான் சாப்பிடலைன்னா உங்களுக்கு என்ன வந்துச்சு? ஏன் கம்பெல் பண்றீங்க?” எரிச்சலாக அவள் கேட்க,
“ஹே மிர்ச்சி… சப்போஸ் உனக்கு என்னைப் பிடிச்சு போய், ஷ்யாம் ஐ நீட் யுன்னு சொன்னன்னு வை… அப்ப உனக்குக் கண்டிப்பா ஸ்ட்ரெந்த் வேணும்… அதான் சொல்றேன்… இப்பவே நல்லா சாப்பிடுன்னு…” வேண்டுமென்றே இதழ்கடையோரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கலாய்ப்பது புரிந்தது. ஆனாலும் ச்சே என்ன மாதிரியான கிண்டல் இது என்று எண்ணிக்கொண்டு,
“இந்த உலகமே அழிஞ்சு போய் நீ மட்டும் தான் ஆம்பிளைன்னு இருந்தா கூட உன்னை மாதிரி ஒரு ஆளை நான் யோசிக்கக் கூட மாட்டேன் ஷ்யாம்…” என்று வெறுப்பாகக் கூற,
“அஹான்… அப்படியா? இதுக்காக நான் உன்னைச் சொல்ல வைக்கறேன் பார்ன்னு எல்லாம் சொல்லி என் தலைல நானே மண்ணை வாரிப் போட்டுக்க மாட்டேன் மிர்ச்சி…” என்று சிரித்தவன், “எனக்குத் தனியா சாப்பிட போரடிக்குது… அவ்வளவு தான்…”
“உனக்குப் போரடிச்சா, நான் தான் கிடைச்சேனா?” கடுகடுத்த முகத்தோடு அவள் கூற,
“இப்போதைக்கு எனக்கும் வேற வழியில்லை…” என்றவன், “என்னோட சாப்பிடற போட்டில வின் பண்ணா உனக்கு இந்தப் போனை கொஞ்ச நேரம் கொடுக்கலாம்ன்னு பார்த்தேன்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் அந்தப் பேசியைக் காட்ட, அவளது முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பை போல ஒளிர்ந்தது.
Leave a Reply