Veenaiyadi nee enakku 17 (1)

17

இறுக்கமான முகத்தோடு அந்த ஒற்றையடிப் பாதையைக் கடந்து கொண்டிருந்தான் ஷ்யாம்… அவனுக்குப் பின்னே குழப்பமான முகத்தோடு மஹா. குறிக்கிட்ட சிறு சிறு நீரோடைகளை அனாயாசமாகத் தாண்டியவனை அவளால் அதே வேகத்தோடு தொடர முடியவில்லை. அவ்வப்போது தண்ணீர் மற்றும் ஆங்காங்கே கிடைக்கும் பழங்கள் மட்டுமே! உணவு உண்டால் நடக்க முடியாது என்ற அவனது காரணம் வேறு அவளைக் கடுப்பில் ஆழ்த்தியிருந்தது.

‘இந்த வழியில் இரண்டு பேராகப் போவதற்கே இப்படிக் கிடுகிடுன்னு நடுங்குதே, இந்த லூசு எப்படித்தான் தனியாகப் போகுமாம்? பைத்தியமா பிடிச்சுருக்கு?’ என்று எண்ணிக் கொண்டவள் அதை வெளியே கூறவில்லை.

அவன் தான் இவள் புறம் திரும்பக் கூட இல்லையே! வார்த்தைக்கு வார்த்தை இவளிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தவன், இப்போது எதுவுமே பேசாமல் வருவது அவளுக்கு என்னவோ போலிருந்தது.

காரணம் தான் அவளறிவாளே!

தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொள்ளும் சாகசத்தை!

தன் வாய் அடங்கவே அடங்காது என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். அதுவரை எல்லாமே சரியாகத்தானே போய்க் கொண்டிருந்தது. எதற்காக அதிகமாக வாயைவிட வேண்டும் என்று மனசாட்சி ஒரு பக்கம் திட்ட, அவனை எதிர்த்துக் கேள்வி கேட்க ஆளே இருக்கக் கூடாதா? என்று இவள் அதனிடம் கேள்வி கேட்டாள்.

எதுவும் பேசாமல் சண்டை போடாமல் தான் வருவேன் என்று அவளிடம் உறுதி கொடுத்துவிட்டு தானே வந்தாய்? என்று மீண்டும் மனசாட்சி கேட்க, அதற்காக நான் அடங்கியே போக வேண்டுமா? என்று இவள் கேட்க… மாற்றி மாற்றி அவளுக்குள்ளாகத் தர்க்கம் நடந்து கொண்டிருந்தது.

இவள் இந்தக் குழப்பத்திலேயே சற்று வேகம் குறைவாகப் பின்னால் தொடர, அவனோ வேகமாக ஒரு ஓடையைத் தாண்டினான். சலசலவெனச் சப்தத்தோடு நீர் சங்கீதம் பாட, ஈரக்காற்று முகத்தைத் தீண்ட, அந்த அடர்த்தியான மூங்கில் காடு ஒரு வகையில் திக் திக் தான், அவளைப் பொறுத்தவரை! ஆனால் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அவன் முன்னேறிக்கொண்டிருந்தான்.

அவன் தாண்டினான் என்றால் அவன் ஷூ அணிந்திருக்க, அவனுக்கு வசதியாக இருந்தது. இவளது தட்டையான சாண்டல்ஸ் வகையான செருப்பு. சற்று வசதி குறைவாக இருந்தது அவளுக்கு.

‘ச்சே எதையுமே ப்ரிபேர் பண்ணாம அவன் பின்னாடி வந்துடு மஹா… உனக்குக் கொஞ்சம் கூட அறிவில்ல… இந்த அழகுல கஸ்டடில இருக்கவ மாதிரியா இருக்க? கொஞ்சம் கூடப் பயமில்லாம அவனோட கிளம்பி வந்துட்டு, அவன் கிட்டவே வாயையும் விடற… உனக்கு முழுசா ஊர் போய்ச் சேர்ற ஐடியா எதுவும் இல்லையா?’ பைரவியை போல மனசாட்சி தாக்கு தாக்கென்று தாக்கியது.

‘அவனும் கஸ்டடில இருக்க மாதிரி காட்டிக்கல… நானும் ஃபீல் பண்ணலை… அன்ட் ரியலி ஐ வான்ட் டூ என்ஜாய் திஸ் ட்ரிப்… இந்த மாதிரி டென்ஷனோட எப்ப அட்வெஞ்சர் பண்றது? இதெல்லாம் செம சான்ஸ்… இதைப் போய் மிஸ் பண்ணுவாங்களா செல்லக் குட்டி?’ என்று மனசாட்சிக்கு ஐஸ் வைக்க முயன்றாள்.

‘அவன் அப்படி ஃபீல் பண்ண வைக்கலன்னு சொல்ற! ஆனா அவனைத் தேவையில்லாம பேசிக் கோபத்தைத் தூண்டி விடற… உன்னோட ஐடியா தான் என்ன?’ என்று மனசாட்சி கேட்கவும், அவள் யோசனையில் ஆழ்ந்தாள்.

ஆமாம், மனசாட்சி கேட்பது உண்மைதானே? தன்னுடைய நோக்கம் தான் என்ன? அவன் தன்னிடம் கௌரவக் குறைவாக நடக்கவில்லை. தவறான பார்வையும் கூடப் பார்க்கவில்லை. பணத்திற்காக கஸ்டடி எடுத்து இருக்கிறான். அது தன்னுடைய தொழில் என்பதில் அவன் தெளிவாகத்தான் இருக்கிறான்.

தன்னை எத்தகைய நிலையில் நிறுத்தியிருக்கிறான் இந்த ஷ்யாம் என்ற கோபம் மனதுக்குள் நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இப்படியெல்லாம் பேச வைக்கிறதோ என்று எண்ணினாள்.

ஆனால் ஏன் அவன்மேல் இந்தளவு கோபம் தனக்கு வர வேண்டும்?

எதை எதிர்பார்க்கிறது இந்த மனம்?

விடாமல் அவள் யோசித்ததில் தலை வலித்தது.

அப்போதுதான் மனம் அந்தக் கேள்வியைக் கேட்டது.

‘ஷ்யாம் சற்று நல்ல முறையில் அறிமுகமாகி இருக்கக் கூடாதா?’ என்று!

திடுக்கிட்டு முன்னே சென்று கொண்டிருந்தவனைப் பார்த்தாள்.

ஏன் அவன் நல்ல முறையில் அறிமுகமாகி இருக்க வேண்டும் என்று யோசிக்க, அவனது தோழமை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது புரிந்தது.

யாரிடமும் இந்தளவு சுதந்திரமாகப் பேசியதில்லை. பிருந்தா மற்றும் இன்னும் சில பேர். அவ்வளவுதான் அவளுடைய வட்டம். அதிலும் பிருந்தா மட்டுமே மிக நெருக்கம். எத்தனை பேர் இருந்தாலும் தடையற்ற தோழமையை அவளிடம் மட்டுமே இதுவரை உணர்ந்திருக்கிறாள் மஹா.

அதே தோழமையை இன்று ஷ்யாமிடம் உணர்ந்தாள். நேரான பார்வை, தான் இப்படித்தான் என்று வெளிப்படையாக்கும் துணிச்சல், எத்தகைய சூழலிலும் தெளிவாக நிற்கும் தைரியம் என்று பல குணங்கள் அவனிடம்!

அவனிடம் பிடிக்காதவையும் எக்கச்சக்கம் தான். ஆனால் பிடித்த குணமென்றும் பிடிக்காத குணமென்றும் வகைப்படுத்த வேண்டிய தேவையென்ன? அப்படி வகைப்படுத்த இவள் யார்?

இந்த எபிசொட் முடிந்தால் அவன் யாரோ தான் யாரோதானே? அப்படி இருக்கும்போது எதற்காக அவனிடம் கோபப்பட வேண்டும்?

அவனது மிக இயல்பான, எந்த வித அலங்கார பூச்சும் இல்லாத தோழமையை விரும்பத் தொடங்கியிருந்த மனதுக்கு அவனது சில செய்கைகள் பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாகக் கூறாமல் இப்படிக் கோபத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது என்பது புரிந்தது.

அவனுக்கு அவளை இம்ப்ரெஸ் செய்ய வேண்டுமென்ற தேவை இருக்கவில்லை. ஈர்த்துத் தன்னைப் பிடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தன்னை நல்ல முறையில் காட்டிக் கொள்ள வேண்டும் என்று கூட முனையவில்லை.

இந்த வகையான தோழமை அவளுக்குப் பிடித்திருந்தது தான் உண்மை. அதுவே அவளைத் தடையற்று பேச வைத்தது. நல்ல முறையில் அறிமுகமாகி இருந்துதிருந்தால் நல்ல நண்பர்களாக இருந்திருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறதே!

“ஷ்யாம்… கொஞ்சம் ஸ்லோவா போயேன்…” அவளாக அவனிடம் பேச முயல, திரும்பிப் பார்த்தவன் பதிலேதும் கூறாமல் அதே வேகத்திலேயே சென்றுகொண்டிருந்தான். அதுவும் அது புற்கள் பரவியிருந்த செங்குத்தான மேடு என்பதால் அவளால் அதற்கும் மேல் முன்னேற முடியவில்லை.

“ஷ்யாம்ம்ம்ம்ம்… ப்ளீஸ்ஸ்ஸ்… கால் வலிக்குது…” காலைப் பிடித்துக் கொண்டு நின்றவள், முட்டியை பிடித்துக் கொண்டு இடை வரை குனிந்து கொண்டாள்.

நடைப் பயிற்சியைக் கூட ஒழுங்காகச் செய்யாத தனது பிட்னெஸ்சை அவன் கிண்டலடிப்பதில் கொஞ்சமும் தவறில்லை என்று எண்ணினாள்.

முன்னே சென்றவன், சற்று திரும்பி நின்று பார்த்தான். முகத்தில் எரிச்சல் அப்பட்டமாகத் தெரிந்தது. நேரம் வேறு கடந்து கொண்டிருந்ததில் அவன் பதட்டமாக இருந்தான். இருள் சூழ்வதற்குள் இந்தப் பகுதியைத் தாண்டிவிட வேண்டும்.

அந்தப் பகுதியைத் தாண்டினால் மலைஜாதியினர் வசிக்கும் சிறு கிராமத்தை அடைந்து விட முடியும் என்பதோடு, மனித நடமாட்டம் இருக்கும் பகுதியில் இரவைக் கழித்து விடலாம் என்பதுதான் எண்ணம்.

என்னதான் அட்வெஞ்சர் என்றாலும் பாதுகாப்பு விஷயத்தை விட்டுக் கொடுத்துவிட மாட்டான். தைரியம் என்பது ஆண்மை! ஆனால் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் குருட்டுத் தைரியம் என்பது பைத்தியக்காரத் தன்மை என்பது அவனது எண்ணம். அதிலும் இந்த மழை நேரத்தில், டென்ட் அமைக்கக் கூட நல்ல இடமாக அமைய வேண்டும் என்ற அழுத்தம் அவனுக்கு.

இவள் என்னவென்றால் இத்தனை மெதுவாக வந்ததோடு மட்டுமில்லாமல், தன்னையும் கீழே இறக்குகிறாளே என்ற கோபம்.

‘வாய் மட்டும் நீளமோ நீளம்… ஆனா சரியான லூசு…” என்று மனதுக்குள் திட்டியவன், அவளருகில் வந்து,

“இங்க பார்… மணி இப்பவே அஞ்சாகுது… இருட்டிட்டு வந்துடும்… ஏழு மணிக்கெல்லாம் இந்த இடம் கும்மிருட்டாகிடும்… போக முடியாது… இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு ட்ரைபல் வில்லேஜ் இருக்கு… அங்க டென்ட் போட்டுக்கலாம்… நைட் தனியா இங்க இருக்கறது கொஞ்சமும் அட்வைசபில் இல்ல… புரிஞ்சுக்க… ஃபாஸ்ட்டா நட…” என்று பொறுமையாகச் சொல்ல முயன்றாலும் குரலில் அந்த எரிச்சலும், கோபமும் இருக்கத்தான் செய்தது.

நிதானமாக அவனைப் பார்த்தவள்,

“இன்னைக்குப் பௌர்ணமி ஷ்யாம்… நல்லாவே வெளிச்சம் இருக்கும்…” என்றவளை தலையிலடித்துக் கொண்டு பார்த்தான்.

“லூசா நீ? இருட்டறதுக்குள்ள மனுஷ நடமாட்டம் இருக்க இடத்துக்குப் போகணும்ன்னு சொல்றேன்… நீ என்னடான்னா…” என்று வசைமாரி பொழிய வந்தவன், பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு, “சீக்கிரம் நட…” என்று விட்டு, “இதுக்குதான் ஆரம்பத்திலேயே சொன்னேன்… ஒழுங்கா அங்கேயே இருன்னு…” என்றும் கடித்து வைத்தான்.

அவளது தன்மானம் வெகுவாகச் சீண்டப் பட, அவனை முறைத்தவள், அவனைவிட வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

தஸ்புஸ்ஸ் என்று மூச்சு வாங்கிக் கொண்டு அவள் வேண்டுமென்றே வேகமாக முன்னேறுவதைக் கண்டவனுக்கு அவனையும் அறியாமல் மென்னகை படர்ந்தது.

படர்ந்த வேகத்திலேயே மறையவும் செய்தது. எப்போது சிறு பிள்ளைபோல இருப்பாள் என்பதோ, எந்த நேரத்தில் தேள் கொடுக்காக மாறுவாள் என்பதோ அவனால் கணிக்க முடியாதது என்று எண்ணிக் கொண்டவனுக்கு உள்ளுக்குள் கோபம் கொதித்தது.

வேகமாகச் சென்றவள், பிரேக்கடித்து நிற்க, என்னவென்று பார்த்தான் ஷ்யாம்.

சற்று பெரிய ஓடை!

கொஞ்சம் ஆழமும் இருக்கும் போல… சுழித்துக் கொண்டு கல் பாலங்களைத் தாண்டிக் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. நடுநடுவே பெரிய கற்கள். அந்தக் கற்களின் மேல் கால் வைத்துத்தான் தாண்ட வேண்டியிருக்கும்.

பார்க்கும் போதே தெரிந்தது. கொஞ்சம் ஆபத்தான முயற்சி தான் என்பது!

அவன் தாண்டுவதற்குத் தயாராக, இவளுக்குத் தான் வெடவெட!

திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு விரியப் பார்த்தது. ஆனாலும் அடக்கிக் கொண்டான்.

அவன் கைக் கொடுத்தால் மட்டுமே அவளால் தாண்ட முடியும் என்பதைப் புரிந்து கொண்டு தான் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறாள் என்பதில் தான் அவனுக்குச் சிரிப்பே! ஆனாலும் அதைக் காட்டிக் கொண்டால் என்னாவது…

‘அவளாக வரட்டும்… பிசாசு… கொள்ளிவாய் பிசாசு… கொஞ்சமும் யோசிக்காமல் பேசும் கொள்ளிவாய் பிசாசு…’ பலவாறு திட்டியவன், அவளைப் பார்க்காமல் ஓடையைத் தாண்டக் கல்லின் மேல் காலை வைத்தான். அதாவது போக்குக் காட்டினான்.

“ஷ்யாம்…” அவசரமாக அழைத்தவளை உடனே திரும்பிப் பார்க்கவில்லை. ‘இன்னும் கொஞ்சம் கெஞ்சட்டும் அந்தப் பிசாசு…’

“ஷ்யாம்ம்ம்ம்…” இழுத்தவளைத் திரும்பிப் பார்க்காமல், “என்ன?” என்று அவன் கேட்க,

இடுப்பில் கைவைத்துக் கொண்டு அவனைப் பார்த்தவள், அவனை நோக்கிக் கையை நீட்ட, முறைத்துக் கொண்டே கையைப் பற்றியவன், “இப்ப காரியமாகனும்…ம்ம்ம்…” என்று அதற்கும் ஒரு கொட்டு வைத்துவிட்டுத்தான் அந்த ஓடையை அவள் தாண்ட உதவி செய்தான்.

அவனது கையைப் பற்றியபடி வந்தவள், “நான் அப்படி நினைக்கல…” என்று ப்ளைனாகக் கூற முயன்றவள், ஓடையின் நடுவில் தடுமாறினாள்.

“ஆடாம வா… விழுந்து சில்லறைய அள்ளிட்டு இருக்காதே…”

“விட்டா நீயே என்னைத் தள்ளி விட்டுடுவ போல இருக்கே…” என்று அவள் சிரிக்க முயன்றாள். அவளை முறைத்தவன்,

“நான் உன்னை மாதிரி கிடையாது மஹா… என்னை நம்பி வந்தாங்கன்னா கடைசி வரை அவங்களுக்கு நான் பொறுப்பு… அதை என்னைக்கும் நான் மறந்தது இல்ல…” என்று குத்தலாகக் கூறியவனை அமர்த்தலான பார்வை பார்த்தாள்.

“ஆமா… எனக்குத் தான் அந்தப் பொறுப்பு இல்ல… ஒத்துக்கறேன்… சாரி ஷ்யாம்… அந்த மாதிரி நான் சொல்லிருக்கக் கூடாது…” என்று தடாலெனப் பல்டி அடித்தவளை ஆச்சரியப் பார்வை பார்த்தான்.

“என்ன இப்படி உட்டாலக்கடியாகிட்ட?” இவளாவது சரண்டராவது! இதில் ஏதாவது உள்குத்து கண்டிப்பாக இருக்கும் என்று உறுதியாக நினைத்துக் கொண்டான்.

“ஏன்?”

“இல்ல… சாரியெல்லாம் சொல்ற? நம்பவே முடியல…”

“எனக்குத் தப்புன்னு பட்டா கண்டிப்பா சாரி கேட்டுடுவேன்… உன்னை மாதிரி இஞ்சி தின்னக் குரங்கு மாதிரி இருக்க மாட்டேன்…”

“நான் இஞ்சி தின்னக் குரங்கா?” முறைத்துக் கொண்டு அவன் கேட்க,

“இல்லையா பின்ன? அதுவும் இஞ்சி தின்னச் செங்கொரங்கு…” என்று பழிப்பம் காட்டியவளது தலையில் ஒன்று போட வேண்டும் போல இருந்தது. ஓடையைக் கவனமாகக் கடக்க வேண்டியிருப்பதன் அவசியத்தால் அவன் சற்று அடக்கி வாசித்தான்.

“இரு இரு… உனக்கு இருக்கு…” என்று அவன் எச்சரிக்க,

“என்ன இருக்கு?”

“ம்ம்ம்… அவியலும் பொரியலும்… உன் வாயாவது, அடங்கறதாவது?”

“ஆமா… அடங்காது… அதுக்கு என்னங்கற?

“ஷப்பா… வாயை மூடேன்…” என்று சற்று சிடுசிடுத்தவனைப் பார்த்தவள்,

“இருக்கறதே ரெண்டு பேர்… இதுல நீ முகத்தைத் தூக்கி வெச்சுக்கிட்டு இப்படி வந்தா? போரடிக்குது ஷ்யாம்…” பாவமாக அவள் கூற,

“தனியா இருக்க… அதனால உன்னோட கொழுப்பைப் பொறுத்துட்டு போறேன்… என்ன பண்ண? அங்க வீட்ல இருந்திருந்தா கூட என்கிட்டே நீ வாங்கிக் கட்டிருப்ப…” என்று கடுப்பாகக் கூறியவனை உதட்டைச் சுளித்துக் கொண்டு பார்த்தவள்,

“நீ கொடுத்தா எனக்குத் திருப்பிக் கொடுக்கத் தெரியாதா?” என்னதான் வாயை அடக்க வேண்டும் என்று நினைத்தாலும், பை டிஃபால்ட் தன்னால் அது முடியாத காரியம் என்று தனக்குத் தானே உறுதி படுத்தினாள் மஹா.

“கொடுப்ப… கொடுப்ப… ரெண்டு நாள் உன்னைப் பூட்டி வெச்சு தீனிய கட் பண்ணாத் தெரியும்…” கூறிக்கொண்டே ஓடைக் கரையில் இறங்கியவன், வேண்டுமென்றே மஹாவின் இடைபற்றி அப்படியே தூக்கி கரையில் விட்டான். அவள் ‘செங்குரங்கு’ என்று பழித்ததற்கு டிட் ஃபார் டேட்!

அவன் தூக்கியதில் அரண்டு போன மஹா, அவனைத் திட்டுவதற்காக வாயெடுக்க, அவளை முந்திக் கொண்டவன்,

“ஷப்பா… ஓவர் வெய்ட்… என் கையே போச்சு…” என்று கையை உதறியவனைக் கோபமாகப் பார்த்தவள், அதே கோபத்தோடு கையை நீட்டிப் பேச முயல, அவளை மீண்டுமாக முந்திக் கொண்டான் ஷ்யாம்.

“கொஞ்சமாவது சாப்பாட்டைக் குறை மிர்ச்சி… இல்லைன்னா ஐஸ்க்ரீமையாவது குறை… அநியாய வெய்ட்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு அவளை வார, அவனிடம் சண்டை போட வேண்டாம் என்று அவளெடுத்த முடிவு தற்காலிகமாக மறந்து போனது.

“டேய் எருமை…” என்று அன்பாக அவள் அழைக்க, ஜெர்க்கானான் ஷ்யாம். ‘என்னாதுதுதுஉஉஉ’ என்ற லுக்கோடு!

“என்னடி காட்டெருமை…” ஜெர்க்கை மறைத்துக் கொண்டு அவன் அதே தொனியில் கேட்க, இவள், ‘வாட் காட்டெருமையா?’ என்ற ஜெர்க்கோடு,

“நான் என்ன சாப்ட்டா உனக்கென்னடா எருமை? எப்படிச் சாப்ட்டா உனக்கென்ன? கல்யாண சமையல் சாதம்ன்னு நான் வளைச்சு தான் கட்டுவேன்… அது என் இஷ்டம்… அதைப் பத்தி இன்னொரு தடவை பேசின…” என்று இடைவெளி விட்டவள், “கல்லைத் தூக்கி மண்ட மேல போட்டுக் கொன்னுடுவேன்… பார்த்துக்க…” கோபத்தில் மூச்சு வாங்கியபடி மிரட்டியவளை கேலியாகப் பார்த்தவன்,

“பேச்சுக்கொன்னும் குறைச்சலில்லை… உன்னைக் கட்றவன் தான் பாவம்…” பாவமாக முகத்தை வைத்துக்கொள்வது போலக் கூறியவனை எரிச்சலாகப் பார்த்தாள்.