2

போயஸ் கார்டனில் இருந்த அந்தப் பழைய பாணி வீட்டில் தான் ஷ்யாமின் அலுவலகம் அமைந்திருந்தது. அலுவலகம் என்றால் கார்ப்பரேட் அலுவலகம் போலெல்லாம் இல்லை. அந்தக் காலத்தில் அவனது முப்பாட்டனார் காலத்தில் அந்த வீட்டில் தான் ஜாகையாம். அந்த வீட்டின் ராசியால் தான் அவர்கள் தொட்டது எல்லாம் துலங்கியது என்பது ஷ்யாமின் பூட்டனாரின் நம்பிக்கை.

அதை அவனது பாட்டனாரும் நம்பினார். பஞ்சாரா ஹில்ஸில் அவர்கள் குடி புகுந்து இருந்தாலும், இதை விட்டுவிட மனமில்லை. எந்த வேலையை ஆரம்பிப்பதாக இருந்தாலும் அந்த வீட்டில் வைத்து ஆரம்பிப்பதுதான் அவர்களது வழக்கமாக இருந்தது.

ஷ்யாமின் பூட்டனார் ஒரு வினோத பேர்வழி. ஒரு விஷயம் அமைந்து விட்டது என்றால் அவர் அந்த விஷயத்தில் நிலையாக நின்று விடுவார். பேனாவை ஒரு இடத்தில் வைத்து, அப்போது பெரிய லாபம் வந்திருந்தால், அந்தப் பேனாவை கூட இடம் மாற்ற விட மாட்டார்.

அது போலவே தான் அவனது பாட்டனாரும். தனது தந்தையை அடி பிறழாமல் கடைபிடித்தார். அவனது தந்தை சற்று மாறுபடுவார் என்றாலும் தந்தையின் சொற்களை மாற்ற மாட்டார்.

இந்த வரிசையில் ஷ்யாம் மட்டும் சற்றுப் புதுமை விரும்பி. ஆனாலும் அவனது தந்தையின் முடிவுகளை என்றுமே எதிர்த்துக் கொண்டு போனதில்லை. பிடிக்கவில்லை என்றாலும் அதை வெளிப்படையாக எதிர்க்க மாட்டான்.

‘ஓகே… நல்லா போகுதுல்ல… சரி… அப்படியே விட்டுடு… ஆனா அடுத்த முறை இப்படி ட்ரை பண்ணிப் பார்க்கலாமே’ என்பது மாதிரித்தான் இருக்கும் அவனது செய்கை!

எப்படியும் சமாளித்து விடுவான் என்பதனால் அவனது தந்தையின் தலையீடு பெரிதாக இருக்காது. அவனை முழுவதுமாக நம்பி சுதந்திரம் கொடுத்து இருந்தார் ஆத்மநாதன்.

ஆத்மநாதன் அவனது தந்தை. ஒரு நல்ல தந்தையாக ஆத்மநாதனும், நல்ல தாயாக ஜோதியும் இருக்கத்தான் நினைத்தார்கள். ஆனால் எப்படியோ ஷ்யாமின் வழி மாறிவிட்டிருந்தது. ஆத்மநாதன் திரைப்படத் துறையில் இருந்தாலும், அவர் கழுவும் நீரில் நழுவும் மீனாக இருக்கத் தெரிந்தவர். அவரது சிறு வயதில் எப்படியோ, நாளாக அவர் முதிர்ச்சியடைந்து வெகு தெளிவாக இருந்தார்.

தன் மகனும் அப்படியே சுற்றுமிடமெல்லாம் சுற்றட்டும், கடைசியில் பட்டியை தேடி ஆடு வந்துதானாக வேண்டும் என்ற தெளிவில் இருந்தார். அதனால் எங்கு வேண்டுமானாலும் போ, என்ன வேண்டுமானாலும் செய்துகொள் என்பது அவர் அவனுக்குக் கொடுத்த சுதந்திரம்.

அவர் நினைத்தது போல, அவன் மாறுவான் என்றெண்ணிக் கொண்டிருந்தார் அவர். ஆனால் அவருடைய மகன் அவரையும் விற்று, ஊரையும் விற்று உலையில் போடுபவன் என்பதை அவர் அறியவில்லை.

காலைப் பதினோரு மணிக்கு அவனது அலுவலகத்திற்கு வந்து, அவனது இருக்கையில் அமர்ந்தபோது தலைவலி மண்டையைப் பிளந்தது. முன்தினம் இரவு சற்று அதிகமாகி விட்டது போல என்று நினைத்துக் கொண்டான்.

தற்போது அவனிடம் பைனான்ஸ் வேண்டி வந்த ஒரு தயாரிப்பாளர், அந்தப் படத்தின் ஹீரோயினை அனுப்பி இருந்தார். அவள் என்னவோ நல்ல கம்பெனி தான். ஆனால் முன்தினம் மாலையில் சந்தித்த அந்தப் பெண் அவனது முகத்திற்கு முன் வந்து நின்று ‘போடாப் பொறுக்கி’ என்று சொல்வது போல மீண்டும் மீண்டும் தோன்றியது.

எரிச்சலாக இருந்தது.

அவளொன்றும் அவனை ஈர்க்கவில்லை. சொல்லப் போனால் யாரிடமும் அப்படியொன்றும் ஈர்ப்பு வந்துவிடுமென்றும் அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய மேக் அப்படி என்பதை விட, ‘அனைத்தையும் பார்த்தாயிற்று… இனியென்ன புதிதாகப் பார்க்க இருக்கிறது?’ என்ற எண்ணம் அவ்வப்போது தலைதூக்கிக் கொண்டிருந்தது.

கேட்பதற்கு முன்பே கிடைக்கும் வசதிகள்!

சொல்வதற்கு முன்பே மடியில் வந்து விழும் பெண்கள்!

சமயத்தில் ஷ்யாமுக்குச் சலித்துப் போனது.

இன்னும் புதிதாக என்ன இருக்கிறது என்று தேடிப்பார்க்க சொன்னது.

துபாயில் ஸ்கை டைவிங் பரிட்சித்துப் பார்க்கும்போது இருந்த ஆர்வம், அதைப் பார்த்தபிறகு போய்விட்டது.

‘ச்சே இவ்வளவுதானா?!’ என்று தோன்றியது. அது போலத்தான் ஒவ்வொரு பெண்ணுமே அவனுக்கு!

மாது மட்டுமல்ல… மது… சூது… அத்தனையும்!

அப்படியென்றால் எல்லைதான் என்ன?

அந்த நடிகையுடன் இருக்கும்போது அந்த மிரப்பக்காய் நினைவுக்கு வந்தாள். எவ்வளவு திமிர் அவளுக்கு? ஒரு பெண்ணுக்கு இவ்வளவு திமிரும் வாயும் தேவையா என்று எண்ணியது அவனது ஆண் மனம்.

அதே எரிச்சலில், அந்த நடிகை புகைத்ததையும் வாங்கிப் புகைத்தான் ஷ்யாம். அது எப்போதும் போன்ற சிகரெட் இல்லை என்பது போலத் தோன்ற,

“ஹேய்… இதென்ன? ஸ்டஃப்பா?” என்று ஆர்வமாக அவன் கேட்டான். வேறெதுவோ ஒரு போதைப் பொருள் என்பது மட்டும் உரைத்தது. அதை அதுவரையில் அவன் பயன்படுத்தவில்லை. இனி பார்க்கலாமே என்ற பேரவா அவனுக்குள்!

அதைக் கேட்டுக் கண்கள் சொருகச் சிரித்தாள் அவள்.

“இது ஜஸ்ட் லோக்கல் கஞ்சா ஷ்யாம்…” என்றவள், அவன் மேலேயே சாய்ந்தாள்.

“வாவ்… நான் இதுவரைக்கும் ட்ரை பண்ணதில்லை… கிவ் மீ ஒன்…” என்று அவன் கேட்டுப் பெற்றுக்கொண்டு, அதைப் புகைக்கவும் செய்தான்.

முதல் பத்து நிமிடம் வரைக்குமே கூட அவனுக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சாதாரணச் சிகரெட் போலத்தான் இருந்தது. அதற்குப் பின் தான் அதன் ஆட்டமே துவங்கியது. கண்கள் கலங்கலாகத் தெரிய ஆரம்பிக்க, உடலில் ஒரு விதமான குளிர்ச்சி.

அந்தக் குளிர்ச்சி எங்கிருந்து எங்குப் பரவுகிறது என்பதை அவனால் உணர முடியவில்லை. உடல் லேசாக நடுங்கத் துவங்க, அவனையும் அறியாமல் சிரித்தான்.

டோப்பமைன் மூளையில் ஓவராகச் சுரந்துவிட்டது போல!

கைக்கால்களில் எல்லாம் அந்தக் குளிர்ச்சி பரவி ஒரு விதமாகத் தள்ளியது.

இந்தப் போதை வேறு விதமானது என்று அவனது மனம் உணர்ந்தது. உடலைவிட்டுத் தான் வெளியே வந்து மிதப்பதைப் போல உணர்ந்தான். அதே உடலுக்குள் இன்னொரு உடலாகத் தான் மிதப்பதையும் உணர்ந்தான்.

இதை ‘ராஜபோதை’ என்று அழைப்பது வெகுபொருத்தம் என்று தோன்றியது.

சுற்றுப்புறம் அனைத்தும் மறந்தது. ஒவ்வொரு அணுவிலும் பேரின்பம் பெருகி வழிந்தது!

அதன்பின் அந்த நடிகை எப்போது போனாள் என்பதைக் கூட அவனால் அறிய முடியவில்லை. எப்படி என்றாலும் அந்தப் பார்ம் ஹவுஸ் வாட்ச்மேனை தாண்டித்தான் சென்றிருக்க வேண்டும். அதனால் பயமில்லை என்று அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு நினைத்துக் கொண்டான்.

அந்தப் போதை இப்போது வரைக்குமே நீடித்ததுதான் சற்று இடைஞ்சலாக இருந்தது. வேலைகள் காத்திருக்கிறதே!

செல்பேசி இசைத்தது!

எடுத்துப் பார்த்தான். எதுவோ தெரியாத எண்! தெரியாத எண்களை எல்லாம் எடுப்பதில்லை அவன். அது தலைவலி பிடித்த வேலை!

வெளியிலிருந்து கதவைத் திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டிய விஜய்,

“பாஸ்… போனை எடுங்க… சௌஜன்யா ஆன் லைன்…” என்று கூற, அவன் குழம்பினான்.

“யார் சௌஜன்யா??!” என்று அவனிடமே கேட்க, விஜய் சற்று அதிர்ந்துதான் போனான்.

“பாஸ்… நேத்து உங்களுக்குக் கம்பெனி கொடுத்தவங்க… பேர் கூடவா கேட்க மாட்டீங்க?” என்று சிரித்து வைக்க, ‘ஸ்ஸ்ஸ்… ஓஓ…’ என்று தலையைத் தட்டிக்கொண்டான் ஷ்யாம்.

“அவ எதுக்காக எனக்குப் போன் பண்றா?” என்று கேட்க,

“நான் என்ன பாஸ் கண்டேன்? அது உங்களுக்குத்தான் தெரியும்… நமக்குக் கொடுக்கல் வாங்கல் இல்ல பாஸ்…” என்று கிண்டலடித்து விட்டுத் தலையை வெளியே எடுத்துக் கொள்ள, ஷ்யாமும் சிரித்தவன், செல்பேசியை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான்.

“இயாஹ்… ஷ்யாம் ஹியர்…”

“ஹாய்… நான் சௌஜன்யா…”

“ம்ம்ம்… சொல்லுங்க..”

“நான் சௌஜன்யா…” அவனிடம் எதிர்பார்த்த ரியாக்ஷன் கிடைக்காததால் நம்ப முடியாத பாவனையோடு திரும்பவும் தன் பெயரைச் சொன்னாள் சௌஜன்யா. அவளுடைய ரசிகர் படையைப் பற்றி அறியாத முட்டாளா இவன் என்று கேட்கத் தோன்றியது.

“சோ வாட்? சொல்ல வந்ததைச் சொல்லுங்க சௌஜன்யா!”

முந்தைய இரவின் தாக்கம் சற்று இல்லாமல் இவன் எப்படி இப்படிப் பேசுகிறான் என்பது புரியாமல் விழித்தாள் அவள். அவளுடன் இரவைக் கழித்தவர்கள் அவளை என்றுமே மறக்க முடியாது என்பதில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தாள். ஆனால் இவனோ அவளைச் சற்றும் கண்டுகொள்ளாமல் எப்படி இப்படி?

ஆனால் அவன் தான் அப்படி இருக்கிறான் என்றால் அவளாலும் அப்படி இருக்க முடியாது. அவளை அந்தளவு வசீகரித்து இருந்தான் அவன். மறக்க இயலாமல் தவித்தது இப்போது அவள்தான்!

சௌஜன்யாவை பொறுத்தமட்டில் பணம் ஒரு பொருட்டல்ல… அவளது சம்பாத்தியம் மிக அதிகம்! தென்னிந்தியாவில் அதிகபட்ச சம்பளம் பெரும் நடிகைகளில் அவளும் ஒருத்தி. அதுபோல, க்ரே மார்க்கெட்டிலும் அவளுக்கான டிமான்ட் மிக அதிகம்.

அப்படிப்பட்ட சௌஜன்யாவே தானாக வந்து பேச, அவன் தன் காலைச் சுற்றாமல் இருப்பதா? அவளது ஈகோ வெகுவாக அடிபட்டது!

ஆனாலும் அவன் வேண்டுமெனத் தோன்றியது!

“ஷால் வி ஹேவ் எ டேட் ஷ்யாம்?” பளிச்சென்று அவள் கேட்டுவிட, அவன் தான் சற்று நேரம் யோசித்தான்.

“சாரி… ஐம் பிசி…” அவனுக்கு விருப்பம் இல்லை, அவளோடு நேரம் செலவழிக்க அவனுக்குப் பிடிக்கவில்லை. அவள் அப்படியொன்றும் அவனை வசீகரிக்கவில்லை என்று தோன்றியது.

‘நீ எங்குதான் நிற்பாய் ஷ்யாம்?’ என்று அவனது மனசாட்சி கேள்வி கேட்க, “தெரியவில்லையே…’ என்று பதில் கூறினான் அவனுக்குள்ளே!

“ஓகே… எப்ப நீங்க ஃப்ரீ ஆவீங்க?” அவளாக முதல் முறையாக ஒருவனைக் கேட்கிறாள், அதுவும் அவளது ஈகோவை மறந்து!

“ஃப்ரீ ஆனா கால் பண்றேன்… இது உங்க நம்பரா?” என்று சாதாரணம் போல அவன் கேட்க, அவள் முழுவதுமாக அடிபட்டுப் போனாள்.

“எஸ்…” என்றபோது அவளுக்குத் தொண்டையில் ஏதோ உருண்டது. வலித்தது!

“ஓகே… பை…” என்று அவன் வைத்து விட்டான். ஆனால் அவள் தான் வைக்கவும் தோன்றாமல், தொடரவும் முடியாமல் செல்பேசியையே வெறித்தபடி தவித்து அமர்ந்திருந்தாள்.

இங்குப் பேசியை வைத்தவனுக்குத் தலைவலி மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது.

“விஜய்…” உச்சஸ்தாயில் கத்தினான் ஷ்யாம்.

“பாஸ்…” அவசரமாக ஓடி வந்தான் விஜய்.

“பாரசிட்டமால் இருக்கா? ரொம்பத் தலை வலிக்குது…” என்று அவன் தலையைப் பிடித்துக் கொள்ள,

“பாஸ்… நேத்துக் கொஞ்சம் அதிகமா போய்டுச்சோ?” சற்றுத் தயங்கியபடி அவன் கேட்க,

“அவ எதுவோ கஞ்சான்னு கொடுத்தா… ஓவரா போய்டுச்சுன்னு நினைக்கிறேன்…” தலையைப் பிடித்தபடியே அவன் கூற, விஜய் லேசாகப் புன்னகைத்தான்.

“பாஸ்… இருங்க லெமன் ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன்…” என்றவன், இண்டர்காமை எடுத்துத் தன்னுடைய அசிஸ்டன்ட்டை அழைத்து, “கொஞ்சம் லெமன் ஜூஸ் எடுத்துட்டு வாங்க…” என்று பணித்தான்.

“ஏன் விஜய்? கஞ்சா தப்பில்லையா?”

“உங்களுக்குத் தெரியாததா எனக்குத் தெரியப் போகுது பாஸ்?” என்றவன், “நம்மளை அடிமைப்படுத்தாத எந்தப் பழக்கமும் தப்பில்லைன்னு நீங்க தான் எனக்குச் சொல்லித் தந்தீங்க…” என்று அவன் புன்னகைக்க,

“ஓ நீ அப்படி வர்றியா?” விஜயின் அசிஸ்டன்ட் கொண்டு வந்து கொடுத்த லெமன் ஜூஸை குடித்துக் கொண்டே சிரித்தான். கப்பை அவனிடம் கொடுத்தவன்,

“லக்ஷ்மி பிலிம்ஸ் கிட்ட இருந்து அசலும் வட்டியும் வந்துச்சா விஜய்? இன்னும் நாலு நாள்ல அவங்க படம் ரிலீஸ் இல்லையா?” என்று கேட்டான்.

அவன் குறிப்பிட்ட அத லக்ஷ்மி பிலிம்ஸின் மொத்த வரவு செலவும் எப்போதுமே இவர்களிடம் தான். பழம் பெருமை வாய்ந்த தயாரிப்பு நிறுவனம்.

மூன்று தலைமுறையாகப் படத் தயாரிப்பில் இருப்பவர்கள். எப்போதுமே வாக்கு மாறியதில்லை. பைனான்ஸ் ஆட்களுக்குப் பணத்தைக் கொடுத்து முடித்து விட்டுத்தான் அவர்கள் படத்தையே ரிலீஸ் செய்வார்கள். அதே பழக்கத்தில் இவன் கேட்க,

“இல்ல பாஸ்… இன்னும் வரலை… நேத்துதான் நான் அவங்களுக்கு போன் பண்ணேன்… என்னன்னும் தெரியல… ஆனா ரிலீஸ் தள்ளிப் போகும் போல இருக்கு…” என்று கூற,

எத்தனை நாட்கள் தொடர்பில் இருப்பவர்களாக இருந்தாலும், பண விஷயமென்று வரும்போது யாரையும் வைத்துப் பார்க்கமாட்டான் ஷ்யாம்.

“இன்னும் ரெண்டு தடவை போன் பண்ணிப் பார் விஜய்… அப்படியும் ரியாக்ஷன் இல்லைன்னா என்னன்னு பார்த்துக்கலாம்…” என்று முடித்தான்.

அவன் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுவது எத்தகைய விளைவைத் தரக் கூடியது என்பதை விஜய் மட்டுமே அறிவான்.