3

ராஜா அண்ணாமலை புறத்தில் அமைந்திருந்த அந்த ஹைடெக்கான அலுவலகத்தினுள் தன்னுடைய உதவியாளரோடு நுழைந்தான் விஜய்.

வந்த காருக்கு பின்னால் ஒரு வண்டி… அதில் ஐந்து பேர், ஆஜானுபாகுவாய்! எந்த நிலையையும் சமாளிக்கவென இருப்பவர்கள்!

அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு இன்சிலும் ஆடம்பரம், பணச் செழுமை வழிந்து கொண்டிருந்தது. கருப்புக் கிரானைட்டில் முகம் தெரிந்தது. ரவி வர்மாவின் ஓவியங்கள் சுவரை அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவருடைய பிரபலமான மேலாடை நெகிழ்ந்த பெண்ணின் ஓவியம் ஒரு புறமும், தமயந்தி அன்னத்தைத் தூது விடும் ஓவியம் மறுபுறமும் இருந்தன.

எப்படிப்பட்ட முரண் இது?

இந்த இரண்டு ஓவியத்திலும் அவர் மாடலாக உபயோகப்படுத்தியவர்கள் விலைமாதுகள் என்பது தான் மிகப்பெரிய முரண்! அதைக் காட்டிலும் மக்கள் வைத்து வணங்கும் அவரது சரஸ்வதியாகட்டும் லக்ஷ்மியாகட்டும், அவற்றைச் சுகந்தா பாயாகத் தான் பார்க்க முடிகிறது என்று ஒரு முறை ஷ்யாம் வேடிக்கையாகக் குறிப்பிட்டான்.

அதுவும் கூட உண்மைதானே!

சமூகம் புறக்கணித்த ஒரு விலைமாதுவை, அதே மக்கள் வணங்கும் தெய்வமாக மாற்றிய ஒரு புரட்சியாளன் என்று ரவிவர்மாவை பார்ப்பதா? அல்லது அந்த விலைமாதுவை உபயோகித்து, மக்களின் நம்பிக்கையில் விளையாடிய வேடிக்கையாளராக அவரைப் பார்ப்பதா?

ஆனால் ரவிவர்மாவுக்காகச் சுகந்தா கொடுத்த விலை அதிகம் என்று ஷ்யாம் கூறியது இப்போது நினைவில் வந்தது.

ஷ்யாமை பற்றி நினைக்கும்போது, விஜய்யால் அவனை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. அவ்வளவு புத்திசாலி அவன்! ஒருவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவரது அடுத்த மூவ்’வை கணித்து விடக்கூடிய கணிதன்! அவனது பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது.

அத்தனை வசதிகள் இருந்தாலும், வாய்ப்புகள் இருந்தாலும் அவனுள்ளே ஏதோ ஒரு தேடல் இருந்து கொண்டே இருப்பதாகத் தோன்றியிருக்கின்றது அவனுக்கு!

அவன் நினைத்தால் எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் பின்னால் வர வைக்கலாம். அதைச் செய்து கொண்டும் இருக்கிறான். எந்த வசதிகளும் அவனுக்குக் கிடைக்காதவை அல்ல! அதை அவனது தந்தை கூடப்பெற்று தரத் தேவையில்லை. அவனே போதும்!

ஆனால் அந்தப் பரிவர்த்தனைகளில் எல்லாம் அவன் மனம் லயித்து இருக்கிறானா என்பதை விஜய்யால் கணிக்க முடியவில்லை.

அவன் கேசனோவாவா? அதுவும் அல்ல!

எதுவோ ஒன்று… அவன் தேடும் ஒன்று… அவனுக்குக் கிடைக்கவே இல்லையென்றுதான் தோன்றியது அவனுக்கு!

அது எதுவென்று விஜய்க்கும் தெரியவில்லை.

ஆனால் அதைப் பற்றிய அடிப்படை புரிதலே இந்த இருவருக்குமே இல்லை என்பதைக் காலம் எப்படி உணர்த்தும்?

இந்த எண்ணவோட்டம் எல்லாம் ஒரு சில நொடிகள் தான், விஜய் உள்ளே நுழைந்தவுடன், ரிசப்ஷனில் அமர்ந்திருந்த அந்த அழகுப் பெண் இவனைக் கண்டவுடன் அவசரமாக எழுந்து வணக்கம் தெரிவித்து விட்டு,

“சர்… ஒரே நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சர்… சாருக்கு இன்பார்ம் பண்ணிடறேன் சர்…” என்று இரண்டு வாக்கியத்துக்கு இருபது சார் போட்டவள், அவசரமாக இருவரை அழைத்து விஜய்யை கவனிக்கக் கூறினாள்.

அங்கு மட்டுமில்லை… அவன் செல்லுமிடமெல்லாம் இந்த மரியாதை கண்டிப்பாக உண்டு. ஷ்யாமள பிரசாத்தின் பெயருக்கும் ஆத்மநாதனின் பெயருக்கும் கிடைக்கும் மரியாதை அது!

“சர்… ஷ்யாம் சர் ஆபீஸ்லருந்து விஜய் சர் வந்திருக்காங்க…” என்று இன்டர்காமில் கூற, அந்தப் பக்கம் என்ன பதில் வந்ததோ, சில நொடிகள் மௌனமாகக் கேட்டுக் கொண்டு,

“உள்ளே வாங்க விஜய் சர்…” என்று அவளே அவனை எம்டி அறைக்குக் கூட்டிச் சென்றாள்.

அந்த அலுவலகத்துக்கு அவன் அடிக்கடி வந்திருக்கிறான். அவையெல்லாம் சாதாரணமாக வந்தவை. பைனான்ஸ் பற்றிப் பேசி முடிக்கவென வருபவை. எதற்கும் ஷ்யாம் நேரில் வந்ததே கிடையாது. ஒன்றிரண்டு முறை, ஏதாவது முக்கியமான விஷயமாக இருந்தால் மட்டும் தான் அவன் தலை காட்டுவது.

அவன் வராமலே அவனது இருப்பை அங்கு உறுதி செய்து விடுவான். அவனது பெயர் மட்டுமே அங்கிருக்கும். இருந்த இடத்திலிருந்தே மந்திரக்கோலை சுழற்றுவதில் மன்னன். அவன் இல்லையென்று யாரும் குறைவாக நினைத்து விடவும் முடியாது. தும்மினால் கூட அவனுக்கு அந்தச் செய்தி போய்ச் சேர்ந்து விடும். ஆனால் எப்படி என்று விஜய்க்கு கூடத் தெரியாது. அவனும் தெரிந்து கொள்ளவும் மாட்டான். தெரிந்து கொள்ளத் தேவையும் இல்லை. இவ்வளவு பணம் விளையாடும் இடத்தில் உரிமைப் பட்டவர் இதைக் கூடச் செய்யவில்லை என்றால் என்னாவது என்று அவனே கேட்டு விடுவான்!

அனைத்துக்கும் பொறுப்பு இங்கு விஜய் மட்டுமே. அந்தப் பொறுப்பு இருப்பதனால் அவனுக்கு எப்போதும் சற்று அதிகமான விழிப்புணர்வு உண்டு. பண விஷயத்தில் சிறிது கூடத் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதிலும், பணத்தை வசூலிப்பதில் அதிகபட்ச கடுமை காட்டுவதும் உண்டு, அட்லீஸ்ட் காட்டுவது போலக் காட்டிக் கொள்வதாவதுண்டு!

அது அவனது எச்சரிக்கை உணர்வின் காரணமாகத்தான்! அதே உணர்வோடு அந்த அறைக்குள் நுழைந்தான்.

அது லக்ஷ்மி பிலிம்ஸின் கார்ப்பரேட் அலுவலகம்!

பழமையும் புதுமையும் கைகோர்த்துக் கொண்ட இடம்!

அவர்களும் மூன்று தலைமுறையாக இந்தத் துறையில் இருப்பவர்கள் என்பதால் இதுவரை எந்த விதமான பிரச்சனையும் வந்ததில்லை. ஆனால் கடந்த சில வருடங்களாகத் திரைப்படத் துறையை விட்டுச் சற்று ஒதுங்கியிருந்தனர். அவ்வப்போது, அதிலும் எப்போதாவது மட்டும் தான் அவர்கள் திரைப்படம் தயாரிப்பது.

முன் போல லாபம் இல்லையென்று சொல்லபட்டாலும், அந்தக் குடும்பத்தின் இளைய வாரிசுகளுக்கு இந்தத் துறையில் ஆர்வம் இல்லையென்ற செய்தியும் கசிந்தது. அவர்களது தந்தையின் காலத்தில் வெகுபிரபலமான நிறுவனமாக இருந்தது. அப்போதெல்லாம் அவர்களது மொத்த வரவுசெலவும் ஷ்யாமின் ‘பாக்கியவதி பைனான்ஸ்’ சுடன் தான். ‘பாக்கியவதி’ அவனது எள்ளுப் பாட்டி!

அப்போதெல்லாம் அவ்வளவு ஆர்வமாகப் படமெடுக்க வருவார்களாம், புதியவர்களும் கூட! பொதுவான பைனான்ஸாக இருந்தது, திரைப்படத்துக்கென முக்கியமாகச் செயல்பட ஆரம்பித்தது ஷ்யாமின் தாத்தாவினது காலத்தில் தான். அதற்கு முன்னர் சினிமாவுக்கெனப் பிரத்யோகமான பைனான்சியர்கள் குறைவு. அதுவும் இல்லாமல், அப்போதுதான் ஹீரோக்களின் சம்பளம் அதிகமாகி, தயாரிப்புச் செலவுகள் கூடியதும் கூட!

ஷ்யாமின் தாத்தா காலத்தில் இந்தத் துறையில் கால்பதித்தது! அப்பாவின் காலத்தில் கொடிகட்டிப் பறந்தனர் பாக்கியவதி பைனான்சியர்ஸ். இப்போது அதற்கும் மேலே!

ஷ்யாமின் தந்தை ஆத்மநாதன் அவ்வளவு கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர் அல்ல. அதனால் எவ்வளவுதான் அதிகமாக வியாபாரம் நடந்தாலும், அதற்கு ஈடாகப் பணத்தைத் தராமல் ஏமாற்றுவதும் நடந்து கொண்டிருந்தது.

ஷ்யாம் மேற்படிப்பை முடித்துவிட்டு உள்ளே நுழைந்தபோது, மிகப்பெரிய தொகையை இழந்திருந்தார் ஆத்மநாதன்.

அதை எப்படியாவது வசூல் செய்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆனால் நஷ்டப்பட்ட நிலையிலிருந்த அந்தத் தயாரிப்பாளரால் அப்போது அந்தத் தொகையைத் திருப்ப முடியவில்லை.

ஆத்மநாதனாக இருந்திருந்தால், பாவம் பார்த்து, அவர்கள் எப்போது கொடுக்கிறார்களோ அப்போது கொடுக்கட்டும் என்று முடித்துவிட்டிருப்பார். அது அவரது குணம். ஆனால் ஷ்யாமால் அப்படி விட முடியாது.

பாவம் பார்ப்பவன் அல்ல அவன். அவற்றை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தவன். பிறந்தபோதிலிருந்தே பணத்தை மட்டுமே பார்த்து வந்ததால், மனதில் ஈரம் சற்றுக் குறைவு!

அந்தத் தயாரிப்பாளரிடம் போய் உட்கார்ந்தான், நான்கு அடியாட்களுடன்! உடன் அப்போதுதான் சேர்ந்திருந்த விஜய் வேறு! விஜய் அவனது ஜூனியர், கல்லூரியில்!

விஜய்யை அப்போதிருந்தே பிடிக்கும் என்பதால் உடனே தன்னுடன் அழைத்துக்கொண்டான்.

அந்தத் தயாரிப்பாளரால் தொகையைத் திருப்ப முடியவில்லை. லிக்விட் கேஷ் இல்லையென்று சத்தியமே செய்தார். ஷ்யாமின் பொறுமை அடுத்த இரண்டு நாட்கள் தான். மூன்றாவது நாள், அந்தத் தயாரிப்பாளரின் மகனை கஸ்டடியில் எடுத்திருந்தான்.

ஒரு வாரம்! ஒரே வாரம்! மொத்த பணமும் கைக்கு வந்து சேர்ந்தது!

இப்படி யாரை எப்படி அடிக்க வேண்டுமென்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவன் ஷ்யாம்.

அவனது செய்கைக்குக் கோபப்பட்ட ஆத்மநாதனும் கூட, பணம் கைக்கு வந்தபோது ஆச்சரியப்பட்டார். அவர் அறிந்த வரையில் அந்தத் தயாரிப்பாளர் மிகவும் நொடிந்து போயிருந்தார். பின் எப்படி இத்தனை பெரிய தொகை சாத்தியம் என்பது அவருக்கு அப்போது புரியவில்லை.

“நானா… உங்களை மட்டும் தான் ஏமாற்ற முடியும்… என்கிட்ட அந்த வேலை நடக்காது…” என்று அவன் முடிக்க, சந்தோஷமாகத்தான் இருந்தது.

ஆனால் சிறிது நாட்கள் கழித்து, அந்தத் தயாரிப்பாளர் மொத்தமாக ஊரைக் காலி செய்து கொண்டு போனபோது தான் தெரிந்தது, பணத்தைத் தருவதற்காக அவரது வீட்டை வந்த விலைக்கு விற்று இருக்கிறார் என்பது!

அது அவசரத்திற்கு விற்கப்பட்டதால் கால் விலை கூடப் போகவில்லை என்பதை அறிந்த ஆத்மநாதனுக்கு ஆறவே இல்லை. தவிப்பாக இருந்தது. ஒரு குடும்பமே நொடிந்து விட்டதே என்ற ஆற்றாமையில்,

“இவனால ஒரு குடும்பமே வீதிக்கு வந்திருக்கு… இந்தப் பாவம் நமக்குத் தேவையா?” என்று வீட்டில் அவர் தந்து மனைவியை நடுவராக வைத்துக்கொண்டு புலம்பியபோது,

“நாம அவரைப் படம் எடுக்கச் சொல்லலையே நானா… வாங்கினவங்க கடனை எல்லாம் நாம வசூல் பண்ணாம விட்டா நாமளும் அப்படி நடுத்தெருவுக்குத் தான் வரணும்… படம் ஓடலைன்னா அதுக்கு நாம எப்படிப் பொறுப்பாக முடியும்? கடனைத் திருப்பித் தர வேண்டியது அவர்… வீட்டை வித்துக் கடனை அடைச்சு இருக்கார்… அவ்வளவுதான்… நமக்கு வேண்டியது நம்ம பணம்… இதிலெல்லாம் பாவம் பார்த்தீங்கன்னா நாம தான் துண்டு போட்டுட்டு போகணும்…” என்று முடித்து விட்டவனை என்ன சொல்வது என்று தெரியாமல் வியாபாரத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்து விட்டார் ஆத்மநாதன்.

அவரால் பாவ புண்ணியம் பார்க்காமல் தொழில் செய்ய முடியாது. நண்பராகப் பழகியவரிடத்தில் ஈட்டிக்காரனைப் போல வசூல் செய்ய முடியாது. நியாயத்திற்கு மாறாக ஷ்யாம் கடைப்பிடிக்கும் வழிமுறைகளுக்கு எல்லாம் அவரால் ஒத்து ஊதவும் முடியாது. இத்தனை ‘முடியாது’ களை வைத்துக் கொண்டு, தொழிலில் அவனை அவரால் வழி நடத்தவே முடியாது.

அவனுக்கென்று ஒரு வழிமுறை, அதில் அவனால் கோலோச்ச முடிகிறது எனும்போது தான் எதற்கு என்ற எண்ணம் தான். இப்போது முழுவதுமாக விலகி விட்டார்.

தெலுங்கு, தமிழ் என்று இரண்டு பக்கமும் ஷ்யாம் மட்டுமே!

இரண்டு பக்கமும் அவனால் சமாளிக்க முடிகிறது என்றால், தயாரிப்பாளர்களுக்கு அவன்மேல் இருக்கும் அந்தப் பயம் மட்டுமே காரணம்!

“எவ்வளவு வேண்ணா கிடைக்கும்… ஆனா ஒத்தை ரூபாயை குடுக்காம போனாலும் அதுக்கும் மேல பத்து ருபாய் நமக்குச் செலவு வெச்சுடுவான் அந்த ராட்சசன்…” விளையாட்டாகவோ, உண்மையாகவோ, அவனைப் பற்றிய பேச்சு இதுதான்!

அவனிடம் தொழில் கற்றவன் விஜய்!

அவனுடைய அந்தப் பெயரைக் காப்பாற்றுவதற்காக, அவனுக்கும் மேலே நடந்து கொள்வான். வேறுவழி இல்லை! நாய் வேடம் போட்டால் குலைத்துத் தானாக வேண்டும்.

லக்ஷ்மி பிலிம்ஸின் எம்டி, கார்த்திக்கின் அறைக்குள் நுழைந்தான் விஜய்.

“வாங்க விஜய்…” முகத்தில் புன்னகை இருந்தாலும், கறுத்திருந்தது. என்ன செய்வது? அவன் எதற்காக வந்திருக்கிறான் என்பதை அறிந்திருந்தான் கார்த்திக்.

இறுக்கமான முகத்தோடு அமர்ந்தான் விஜய். சற்றும் இளக்கம் காட்டிவிடக் கூடாதே!

“உங்களுக்குக் கொடுத்த டைம் முடிஞ்சு டூ வீக்ஸ் ஆகிடுச்சி கார்த்திக் சர். அதுவும் இல்லாம வட்டியும் இன்னும் வரலை…” கடுமை சற்றும் குறையாமல் அவன் கூற, தவிப்பாகப் பார்த்தான் அந்த கார்த்திக்.

“இன்னும் ஒன் மன்த் டைம் கொடுங்க விஜய்… பட ரிலீஸ் வேற தள்ளிப் போயிட்டே இருக்கு… இன்னும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை பாக்கி இருக்கு… ஹீரோ வேற இன்னும் டப்பிங் முடிச்சு கொடுக்கலை… கொஞ்சம் அன்டர்ஸ்டேன்ட் பண்ணிக்கங்க…” தயவாகத்தான் கேட்டான் கார்த்திக்.

கிட்டத்தட்ட தன்னுடைய வயதினனாகத்தான் இருக்கக்கூடும் என்று கணித்தான் விஜய். தந்தையோடு சேர்ந்து வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவன், இப்போதெல்லாம் தனியாகத்தான் பார்ப்பதாகக் கேள்விப்பட்டிருந்தான். அவனுடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லையென்ற செய்தியும் அவர்களை எட்டியிருந்தது.

“நீங்கச் சொல்ற காரணமெல்லாம் உங்களைச் சேர்ந்தது கார்த்திக் சர். அதுக்கு நாங்க எப்படிப் பொறுப்பாக முடியும்? அக்ரீமென்ட் சைன் பண்ணப்போ என்ன சொல்லி சைன் பண்ணீங்க?”

“நீங்கச் சொல்றது புரியுது விஜய்… ஆனா சிச்சுவேஷன் கொஞ்சம் சரியில்லாம போய்டுச்சு… இல்லைன்னா இப்படிப் பண்ற ஆளுங்களே இல்லையே நாங்க… நீங்கக் கேட்கறதுக்கு முன்னாடியே பணத்தைக் கொடுத்துடுவோமே… இன்னைக்கு நேத்தா வந்தது, உங்க பைனான்ஸ் கூட இருக்க ரிலேஷன்ஷிப்?”

“அதனால தான் பாஸ் இவ்வளவு பொறுமையா இருக்கார் கார்த்திக் சர்… அந்த ரிலேஷன்ஷிப் பாதிக்கக் கூடாதில்லையா?”

“கண்டிப்பா பாதிக்காது… அப்படி விட்டுட மாட்டேன்… என்னை நீங்க நம்பலாம்…” கார்த்திக்கின் குரலில் உறுதி தெறித்தது.

நேர்மையாகப் படமெடுக்கும் ஒரு சிலரில் இவர்களுடையதும் ஒன்று! பைனான்சுக்காகச் சிலர் எப்படிப்பட்ட வழிமுறையையும் உபயோகிப்பார்கள். படத்தின் ஹீரோயின்களை அனுப்புவதும் அப்படிப்பட்ட ஒன்றுதான். அது போன்றவற்றை இவனும் தடுத்ததில்லை, ஷ்யாமும் தடுத்ததில்லை.

ஆனால் கார்த்திக்கின் தகப்பனார் முருகானந்தம் இதில் சற்று மாறுபட்டவர்.

“பணம் எவ்வளவு வேண்ணா வாங்கிக்க… ஆனா அந்த வேலைக்கெல்லாம் இங்க யாரும் ஆளில்லை… படமெடுக்கிறதுதான் தான் என்னோட தொழில்… அதுல நடிக்க வர்ற பொண்ணுங்களை வெச்சு இல்ல…” என்று இன்னொரு பைனான்சியருக்கு நேரடியாகவே பதில் கொடுத்தவர்.

அதனாலேயே அவர் பெயரில் மிகுந்த மரியாதையுண்டு ஷ்யாமுக்கு!

அதனால் இவர்களிடம் அவனது அணுகுமுறையும் மிகவும் மரியாதையாகவே இருக்கும். ஆனால் அந்த மரியாதை தவறும் கணமும் வந்தால்?

கார்த்திக் கூறியதை போனில் ஷ்யாமிடம் தெரிவித்தவன்,

“சரி கார்த்திக் சர்… இன்னும் பிப்டீன் டேஸ் டைம் தரச் சொன்னார் பாஸ்… அசல் வட்டி எல்லாம் சேர்த்து கொடுத்துட்டு நீங்கப் படத்தை ரிலீஸ் பண்ணிக்கலாம்… ஆனா அப்பவும் லேட் ஆச்சுன்னா கண்டிப்பா படத்தை நீங்க ரிலீஸ் பண்ண முடியாதுன்னு சொல்லச் சொன்னார்…”

“சியூர் விஜய் சர். கண்டிப்பா… ஆனா இன்னொரு டென் டேஸ் எக்ஸ்டென்ட் பண்ணி தாங்களேன். ப்ளீஸ்… போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலை கண்டிப்பா இழுக்கும்… ரிலீஸுக்கு முன்னாடி நாள் கண்டிப்பா உங்களுக்குச் செட்டில் பண்ணிடறேன்…”

“சாரி கார்த்திக் சர்… பிஃப்டீன் டேஸ்குள்ள உங்க வேலையெல்லாம் முடிக்க ட்ரை பண்ணுங்க… அதுக்கு மேல ஒரு நாள் போச்சுன்னாலும் என்னை நீங்கச் சொல்லக் கூடாது… எதுக்குமே நான் பொறுப்புக் கிடையாது… பாஸ்க்கு நான் பதில் சொல்லணும்…”

“நீங்கக் கொஞ்சம் ஷ்யாம் சர் கிட்ட சொல்லலாமே…” எப்படியாவது இன்னொரு பத்து நாட்கள் சேர்த்து டைம் வாங்கி விட்டால் போதுமென்று இருந்தது அவனுக்கு. பதினைந்து நாட்களில் முடிப்பதென்பது ஆகாத காரியம். முடியாது என்று தெரிந்தே ஒப்புக்கொண்டால் என்னாவது?

இப்போதே தந்தை காப்பாற்றி வந்த பெயரைத் தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற குற்ற உணர்வு வாட்டுகிறது. இதற்கு மேலும் ஏதாவது என்றால்? அதிலும் ஷ்யாம் சற்றும் இரங்கமாட்டான்.

‘ராட்சசன்’ என்பது அவர்களது வட்டத்தில் அவனுக்குள்ள பெயர். அதற்குத் தகுந்தார் போலத்தான் அவனது செய்கையும் இருக்கும்! அவனது நடவடிக்கையைத் தாங்கத் தன்னால் முடியுமா? உள்ளுக்குள் பயம் கவ்வியது கார்த்திக்கு!

அவனிடம் எப்போதும் நேரடியாகப் பேச முடிந்ததில்லை! அனைத்துமே விஜய் மூலமாக மட்டும் தான். எப்படியாவது அவனை நேராகப் பிடிக்க முடியுமா என்று தனது நண்பனைக் கேட்டபோது, “நீ நடிகையா இருந்தா அவனை நேர்ல பார்க்கலாம்…” என்று வேடிக்கையாகச் சிரித்துவிட்டுப் போனான். அது அவனது தனிப்பட்ட விஷயம் என்று இவன் அப்போது தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“என்னால ஆனமட்டும் உங்களுக்கு டைம் வாங்கிக் கொடுத்துட்டேன் கார்த்திக் சர்… இன்னமும் என்னைச் சங்கடப்படுத்தாதீங்க…” என்று கூறிவிட்டு எழ முயல, சட்டென அறைக் கதவு திறந்தது!

“ஹாய் அண்ணா…” என்றபடியே நுழைந்தது, கார்த்திக்கின் தங்கை!

நிமிர்ந்து பார்த்த விஜய், ஜெர்க்கானான்!

இரண்டு வாரங்கள் முன்பு விமானநிலையத்தில் ஷ்யாமிடம் சண்டை போட்ட அந்த மிரப்பக்காய்!

அவனிடமும் ஷ்யாம் மிரப்பக்காய் அதாவது மிளகாய் என்றே விளித்திருந்தான்!

அத்தனை நாட்கள் கழித்தும் அவளை அவனால் அடையாளம் காண முடிந்தது. ஆனால் அவளுக்குத் தெரியவில்லை போல! கண்டுபிடிக்கவில்லை! ஊன்றிக் கவனித்திருக்க மாட்டாளாக இருக்கும். எங்கே கவனிப்பது? ஷ்யாம் தான் அவளைக் கன்னாபின்னாவென்று கலாய்த்து இருந்தானே!

இவனது பார்வை தன்னுடைய தங்கையைப் பார்க்கிறது என்றுணர்ந்த கார்த்திக்கின் முகத்தில் சற்று எரிச்சல் பரவியது. அந்த எரிச்சலைப் பார்த்தவள், இன்னொருவர் இருக்கும்போது நுழைந்து விட்டோமே என்றும் நினைத்துக் கொண்டு, “சாரி அண்ணா…” என்று மன்னிப்பு கேட்க, “வெளிய வெய்ட் பண்ணு மஹா… ஒரு டூ மினிட்ஸ்…” என்று அவளை வெளியே அனுப்ப முயன்றான்.

ஆனால் அந்த மிரப்பக்காயின் அருகிலிருந்தவளோ, “ஹேய்… அந்த ஆசாமியையும் விட்டுடாதே… ரெண்டு டிக்கட்டை தலையில கட்டுடி…” என்று முணுமுணுக்க,

“இருடி… அண்ணா முறைக்கிறான்…” என்று கிசுகிசுத்தாள்.

“உன் அண்ணா எவ்வளவு வேண்ணா முறைச்சுக்கட்டும்… நாம டிக்கட் புக்கை முடிக்க வேண்டாமா?” என்று எடுத்துக் கொடுக்க,

அவளும் தலையாட்டியபடி, “அண்ணா… ஒன் மினிட்… ப்ளீஸ்… இந்த டிக்கட்ஸ் எனக்கு வித்துக் கொடேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று அவனிடம் தள்ளிவிடப் பார்க்க,

“மஹா… இதை ஒரு டூ மினிட்ஸ் வெய்ட் பண்ணி பண்ணிக்கக் கூடாதா?” கடுப்படித்தான் கார்த்திக்.

இவன் முன்பு பெண்களுக்கான மரியாதை எப்படி என்று கார்த்திக்கு தெரியும். அதுவும் இவன் எப்படிப்பட்டவன் என்றும் தெரியும்! இவன் முன்பு போய் இவள் இப்படி வந்து நிற்க வேண்டுமா என்ற கோபம் அவனுக்கு!

“இருக்கட்டும் கார்த்திக் சர்… என்ன டிக்கட்ஸ்மா அது?” என்று விஜய் ஆர்வமாகக் கேட்க, அவனது ஆர்வப் பார்வையைப் பார்த்தவன், இன்னமும் எரிச்சலடைந்தான். சில நிமிடங்களுக்கு முன் இவன் பேசிய பேச்சென்ன? இப்போது பேசுவதென்ன? இதைத் தானே ஊக்குவிக்க வேண்டுமா?

‘பிரச்சனைகளின் நேரம் காலம் புரியாமல் இந்த மஹா வேறு இப்படிச் செய்கிறாளே?!’

“கேன்சர் பேஷண்ட்ஸ்காக பண்ட்ஸ் கலெக்ட் பண்றோம் சர்… ஒரு லைட் மியுசிக் ப்ரோக்ராம்… வர்ற பணத்தை எல்லாம் அப்படியே தேவை இருக்கக் பேஷண்ட்ஸுக்கு டொனேட் பண்ண போறோம்… ஜஸ்ட் பார் குட் காஸ்… நீங்க டிக்கட்ஸ் வாங்கிக்கிட்டா சந்தோஷம்…” என்று ஒரே மூச்சாகக் கூறிமுடிக்க, படபடவெனப் பேசியவளை ரசித்துப் பார்த்தான் விஜய்.

அன்று ஏர்போர்டில் அவ்வளவு சரியாகப் பார்க்க முடியவில்லை. ஷ்யாம் வம்பை வளர்த்ததில் அவனைத் தான் கவனிக்க முடிந்தது.

இப்போது ஊன்றிப் பார்த்தான்.

படபடவென அடித்துக் கொள்ளும் பட்டாம்பூச்சி கண்கள். அந்தக் கண்களில் நீந்தலாம் போல, அவ்வளவு பெரியதாய்! கூர்மையான மூக்கு… ஆரஞ்சு சுளை இதழ்கள்… ஆப்பிள் கன்னங்கள்… வெண்சங்குக் கழுத்து! தேன் குரல்! என்ன கொஞ்சம் பூசிய உடல்வாகு! ஏன் ஜோதிகா, ஹன்சிகா எல்லாம் அழகில்லையா?

அவனது பார்வை கார்த்திக்கை கொதிக்கச் செய்தது. ஆணின் மனதை ஆண் மட்டுமே அறிய முடியும்! விஜய்யின் பார்வை மொழிபெயர்த்த அர்த்தம் அவனுகொன்றும் உவப்பாக இல்லை! அதுவும் பிரச்சனை தலைவிரித்தாடும்போது தானே தலையைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டுமா? ஷ்யாமும் சரி, விஜய்யும் சரி இருவருமே சரியில்லாதவர்கள்! தான் எதை வேண்டுமானாலும் எதிர்கொண்டு விடலாம். ஆனால் தங்கை? அவள் பூவிலும் மெல்லியவள்!

“மஹாஆஆ…” கடுப்பில் பெயரை இழுத்து பல்லைக் கடித்துக் கொண்டு முடிக்க,

“கார்த்திக் சர்… இருங்க…” என்று அவனைக் கையமர்த்தியவன், “ஒரு டிக்கட் எவ்வளவுங்க?” என்று அந்த மிரப்பகாய்யை கேட்டான்.

“ஜஸ்ட் தவுசன்ட் ருப்பீஸ் சர்…” என்று புன்னகையோடு அவள் கூற,

“எனக்கு டுவன்டி டிக்கட்ஸ் கொடுங்க…” என்று முடித்த விஜய்யை கார்த்திக் உறுத்து விழித்தான்!

‘இவன் போகும் பாதை சரியில்லையே!’