Veenaiyadi nee enakku 6
Veenaiyadi nee enakku 6
6
கண்களை மூடி அமர்ந்திருந்தான் ஷ்யாம். அவளது குரல் தான் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. அந்தத் தேன் குரலுக்கு அவனது மனதை அமைதிப்படுத்தும் ஆற்றலிருந்தது. அவனது உயிரை உருக்கித் தன்னுள்ளே ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தது. ஏனென்றே தெரியாமல் அதனுள் கரைந்து போகச் செய்தது.
ஒரு குரல்… ஒரு பாடல்… ஒரு ஐந்து நிமிடம்…
இது சாத்தியமா?
பதினைந்து நாட்களாகியிருந்தது. ஆனாலும் அந்தப் பாதிப்பு அவனை விட்டுப் போகவில்லை. அவளது குரல் மட்டுமே அவனது காதில்!
அந்த நிகழ்ச்சியை யூடியுபில் வேறு பதிவேற்றி இருந்தனர். ஹைதராபாத் வந்தும் கூட அந்த வீடியோவை எத்தனை முறை ப்ளே செய்தான் என்பது கணக்கில்லை. கண்களை மூடி அமர்ந்து கொண்டு அவளது குரலைக் கேட்டுக் கொண்டே இருந்தான்.
அன்று அவள் பாடி முடித்ததும் அவளை ஆழ்ந்து பார்த்தபடி வெளியேறியவன் தான், அவளிடம் பேசக் கூட முனையவில்லை.
அவளது தோற்றம் எந்தவிதத்திலும் அவனை ஈர்க்கவில்லை. அவனைப் பொறுத்தமட்டில் அவள் அழகியுமல்ல! அவளைக் காட்டிலும் ஆயிரம் பங்கு அழகிகளை, ஏன் உலக அழகிகளைக் கூடக் கண்டு விட்டான். அவனோடு உறவாடியவர்களின் எண்ணிக்கையை அவனே கூட வைத்துக் கொள்ளவில்லை. அவர்களை எல்லாம் பார்த்து விட்டபின்பு, இவள் ஒன்றுமே இல்லை.
ஆனால் அந்தக் குரல்!
அந்தக் குரல் அவனை வசீகரிக்கவில்லை… ஆழ்ந்து போகச் சொன்னது! எதிலுமே திருப்தியடையாத அவனது மனதைப் பிழிந்து எடுத்தது.
மனம் ஆழ்ந்த அமைதியின் பால் வசப்பட்டது!
பதினைந்து நாளாக ஒரு மார்க்கமாகவே, மெளனமாகவே சுற்றிக் கொண்டிருந்த மகனை ஜோதியும் கவனித்துக் கொண்டுதானிருந்தார். என்னவெனக் கேட்டால் எதுவும் அவன் சொல்லப்போவதில்லை என்பது அவருக்குத் தெரியும்.
அவன் செய்யும் செயல்களுக்கு அவன் மட்டுமே பொறுப்பாளி என்பதில் தெளிவானவன். எந்தப் பிரச்சனை என்றாலும் வீட்டுக்கு வெளியே செருப்பைக் கழட்டி விடுவதைப் போலக் கழட்டி விட்டுத்தான் வருவான். அதுவும் இல்லாமல் பிரச்சனை என்று அவன் இதுவரை ஆத்மனாதனிடம் கூட வந்து நின்றதில்லை.
மற்ற தாயை போலச் செல்லம் கொஞ்சி, கெஞ்சி எல்லாம் அவனை ஜோதி வளர்த்ததில்லை.
ஒற்றைப் பிள்ளை!
முதல் வகுப்பிலிருந்தே ஹாஸ்டல் வாசம் தான். ஜோதியால் வளர்க்க முடியாமல் அவனை ஹாஸ்டலில் விடவில்லை. நல்ல கல்வியை மகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது ஆசை. அதனால் முசெளரியில் இருந்த அந்தப் பிரபலமான இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்த்து விட்டனர்.
அதனால் தானோ என்னவோ, அவரிடமே அவன் தள்ளி நின்றான். ஆத்மநாதன் இரக்கத்தைப் பற்றி வகுப்பெடுத்தாலும் அது அவனுக்கு ஒத்து வராதது ஆயிற்று.
என்னதான் இருந்தாலும் தாய் உடனிருந்து தரும் கல்வியை எந்த இன்டர்நேஷனல் பள்ளியும் தர முடியாது என்பதை வெகுகாலம் கழித்துத் தான் அவனது பெற்றோர் இருவருமே உணர்ந்தனர்.
ஆனால் அப்போது காலம் கடந்திருந்தது. பள்ளியில் அவன் முதலிடம். கல்லூரியில் அவன் முதலிடம். தொழிலில் அவன் முதலிடம்.
அதுபோல, அத்தனை கெட்ட பழக்கங்களிலும் அவன் முதலிடத்தில் இருந்தது தான் அவர்கள் இருவரையும் நிலைகுலையச் செய்தது. பெண்கள் பழக்கத்திலும் அவன் முதலிடத்தில் இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டபோது ஜோதியால் தாள முடியவில்லை.
ஆனால் அவர்கள் கேள்விப்பட்ட வரை, விரும்பி வரும் பெண்கள், சினிமா ஆசையில் எதற்கும் தயாரென்று வரும் பெண்கள் மட்டுமே அவனது இலக்கு. அந்த வகையில் சற்று ஆறுதலாக இருந்தது. எதாவது பெண் வந்து, இவன் என்னை ஏமாற்றிவிட்டான் என்று அழாமலிருந்தால் போதும் என்று நினைத்துக் கொள்வார்.
அவர் அறியவில்லை. அதை அவன் தான் செய்யப் போகிறான் என்று!
ஒரு பெண்ணுக்காக ஏங்கிப் புலம்பும் நாளும் வரும், அதுவும் விரைவிலேயே வரும் என்பதையும் அவர் அறியவே இல்லை. அவள் அவனைக் கைக்குள் வைத்துப் பந்தாடுவாள் என்றோ, அவனது திமிர், கர்வம், ஆணவம், அகங்காரம் என மொத்தத்தையும் இல்லாமலாக்குவாள் என்பதை அவர் இப்போது அறியவே இல்லை. அறியவும் மாட்டார். அறியவும் வேண்டாம்!
மகன் பிச்சைக்காரனைப் போலச் சுற்றப் போகிறான் என்பதை எந்தத் தாயால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதற்கும் கீழாகப் போகவும் கூட அவன் அப்போது தயாராகி விடுவான் என்பதை அறிந்தால் அவரால் இப்போது நிம்மதியாக இருக்க முடியுமா?
வாழ்க்கை சில நேரங்களில் முரண்களை முடிச்சிட வைத்து அழகு பார்த்து விடுகின்றது.
முரண்கள் மொழிக்கழகு! ஆனால் வாழ்க்கைக்கு?
“மீ… என்ன டிபன் இன்னைக்கு?” அன்று காலை உணவுக்கு எப்போதும் போலக் கேட்டுக்கொண்டே வந்தானென்றாலும், அவனது முகம் யோசனையிலேயே இருந்தது.
ஜோதிக்கும் ஷ்யாமுக்குமான உரையாடல்கள் எப்போதும் தெலுங்கில் மட்டுமே இருக்கும். அவர் அதைத் தான் ஊக்கப்படுத்துவார். ஆனால் ஆத்மநாதனுக்கும் இவனுக்குமான உரையாடல்கள் அத்தனையும் தமிழில் இருக்கத் தான் விருப்படுவார். முடிந்தவரையில் அவரது ஆசையையும் நிறைவேற்றுவான் என்றாலும் அவனைப் பொறுத்தமட்டில் தெலுங்குக்குத் தான் அவன் முதலிடம் கொடுப்பது.
இப்போது அதனை மறந்து தமிழிலேயே ஜோதியிடம் கேட்கவும் அவர் அவனை விசித்திரமாகப் பார்த்தார்.
“நானா… என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று அவர் தெலுங்கில் கேட்க, அவனது தலையை உலுக்கிக் கொண்டான்.
“நத்திங் மீ… நீ சீக்கிரம் டிபன் வை… சென்னைக்கு கிளம்பிட்டு இருக்கேன்…” என்று அவன் சற்று பரபரப்பாகக் கூற, அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தார்.
தாய் அறியாத மகன் உண்டா? ஆனால் இருக்கிறானே! அவனது மனதில் என்ன இருக்கிறது, என்ன நினைக்கிறான் என்பதைக் கூட அவரால் அறியமுடியவில்லை. இளம் வயதில் அவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வயதாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், மகனது ஆதரவை அவர் மனம் எதிர்பார்த்தது.
அவன் பேசுவான். ஆனால் மனம் விட்டுப் பேசியதே இல்லை. இது எனக்கு வேண்டும், பிடித்திருக்கிறது என்றோ, எனக்கு வாங்கிக்கொடு மீ என்றோ எதையும் கேட்டதில்லை. அவனாக வாங்கிக் கொள்வான். அவனது தாத்தாமார்கள் அவனது பெயரிலேயே பணத்தைப் போட்டு வைத்திருந்தனர், அவர்களது பாசத்தைக் காட்ட! சிறு வயதிலேயே, அவனுக்கென்று சிலவற்றையும் எழுதி வைத்துவிட்டதால், அதன் மூலம் அப்போதே வருமானம் வந்தது அவனுக்கு! அதனால் எதற்காகவும் பெற்றோரிடம் வந்து நிற்க வேண்டிய தேவை ஷ்யாமுக்கு இருந்ததில்லை.
ஆத்மநாதனும் மகனின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என்று ஒதுங்க, அவனது பழக்கங்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
‘களவும் கற்று மற’ என்பதுதான் அவனது குறிக்கோள். அது தவறல்ல. ஆனால் அத்தனையையும் பழகிப் பார்க்கிறேன் என்று ஒன்று விடாமல் பார்த்து விடுவான்.
ஒரு கட்டத்தில் அதுவே அவனுக்குக் கண்டிப்பாக அலுத்துவிடும். அதோடு அதை அவன் கைக்கழுவி விடுவான். அது அவளாவதும் உண்டு!
அவனது இப்போதைய ஆர்வம், மிரப்பக்காயின் குரல்.
எந்த வகையில் தன்னை அந்தக் குரல் ஆள்கிறது என்பதே அறியாமல் அதன்வசம் இருந்தவனுக்கு ஒரு எண்ணம்,
‘இதுவும் ஒருநாள் உனக்குச் சலித்து விடலாம் ஷ்யாம்’ என்றது.
அது நியாயம் தானோ என்று எண்ணிக்கொண்டிருந்தவன் தான் அவனையும் அறியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தான், டைனிங் டேபிளில்!
அதோடு லக்ஷ்மி பிலிம்ஸ் கடனைத் திருப்ப வேண்டிய காலக்கெடுவும் முடிந்து விட்டது. ஆனால் அவர்கள் தரும் வழியே தெரியவில்லை.
அதனால் ஏதாவது நடவடிக்கை எடுத்தேயாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் ஷ்யாம். மிட்டல் வேறு பைனான்சுக்காக நெருக்கடி கொடுத்துக்கொண்டிருந்தார்.
இதைத் திருப்பி வாங்கவில்லை என்றால், சாலிட்டாக இருப்பது எதையாவதை தான் லிக்விட் செய்ய வேண்டும். அது தனக்கு மிகப்பெரிய ரிஸ்க்காக முடியலாம். மிட்டலை ஒதுக்கவும் முடியாது. தெலுங்கில் அவர் தயாரிக்கும் அந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
தான் அவரைப் பிடித்து வைக்கவில்லை என்றால் கண்டிப்பாக வேறு யாராக இருந்தாலும் அந்தப் படத்துக்குப் பைனான்ஸ் செய்யத்தான் போகின்றனர். ஆனால் ஒரு பெரிய படம் தன்னுடைய பைனான்ஸ் அல்லாமல் வேறொருவர் மூலம் வெளியாவதா? அது சரியாகாது என்பது அவனது தீர்க்கமான எண்ணம்.
எந்தவொரு முக்கியமான படமும் தன்னைத் தாண்டித்தான் வர வேண்டும். தன்னுடைய பிடி தமிழ், தெலுங்கு என இரண்டு பக்கமும் இருக்க வேண்டுமென்றால், இதுதான் வழி என்று முடிவு செய்து கொண்டவன், டிபனை உண்டு விட்டு, அவசரமாகக் கிளம்பினான்.
“பார்த்துப் போயிட்டு வா ஷ்யாம்…” என்று என்றும் இல்லாத திருநாளாக ஜோதி வாழ்த்த, தாயை ஆச்சரியப் பார்வை பார்த்தான்.
“என்னம்மா? புதுசா? விஷ் பண்றீங்க?” என்று கேட்டவனைப் பார்த்துச் சிரித்தார்.
“நீயும் ரொம்பப் புதுசா தெரியற ஷ்யாம்…” என்று அவர் கூற, அவன் சிரித்துக் கொண்டான்.
பல நாட்களாக, இரவு வீட்டில் தான் உறக்கம்! அதுவே ஜோதிக்கு அதிசயம். இருக்காதா பின்னே? மாதத்தில் பாதி நாட்கள், கெஸ்ட் ஹவுஸ் வாசத்தில் இருப்பவன், அதிசயமாக வீட்டிலேயே இருப்பது அவருக்கு ஆச்சரியம் தான். அதோடு அவனது அந்த யோசனையோடு கூடிய மௌனமும்!
கெஸ்ட் ஹவுசில் இருப்பவனை வெளிப்படையாக ஜோதியால் கண்டிக்க முடியவில்லை என்றாலும், மனதில் அவ்வளவு வேதனை!
இந்த ஷ்யாமை மிகவும் பிடித்தது… இப்படியே இருந்து விட்டால் போதுமென்று தோன்றியது! அதோடு ஒரு திருமணத்தையும் செய்து கொள்ள ஒப்புக்கொண்டான் என்றால் போதுமே!
பரம நிம்மதி!
“ஆஹான்… அப்படியா?!” என்றவன் சிரித்தபடி விடை பெற, ஜோதிக்குள் ஒரு பெருமூச்சு எழுந்தது!
இளமையில் முன்னே பின்னே இருந்த கணவரைக் கூட வழிக்குக் கொண்டு வந்து விட்டார். ஆனால் மகன் மிரட்டிக் கொண்டிருக்கிறானே!
எந்தப் பெண் இவனை அடக்கப் போகிறாளோ?
இல்லை அவள் அடங்கிப் போய் விடுவாளா?
****
பாக்கியவதி பைனான்ஸ்தாரர்கள் லக்ஷ்மி பிலிம்ஸுக்கு கொடுத்த கெடு முடிந்து அன்றோடு இருபது நாட்கள் ஆகியிருந்தது. கார்த்திக் உச்சபட்ச பதட்டத்தில் இருந்தான்.
இன்னமும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்தபாடில்லை. ஹீரோ செய்து கொடுக்க வேண்டிய வேலைகளை அவன் முழுவதுமாகச் செய்து முடிக்கவில்லை. சம்பள பாக்கி வந்தால் தான் செய்ய முடியும் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தான். அவனது பிஏ இல்லாத கண்டிஷன் எல்லாம் போட்டுக்கொண்டிருந்தான்.
முருகானந்தமே சற்று எரிச்சலாகி இருந்தார், அவன் செய்த அலப்பறையில்.
“இவனெல்லாம் மொத படத்துக்கு என் முன்னாடி எட்டா வளைஞ்ச பய… இவனுக்கு இப்ப வந்த வாழ்வப் பாரு…” என்று ஆரம்பித்து ஊரில் இருக்கும் அத்தனை திட்டு வார்த்தைகளையும் சொல்லித் திட்டித் தீர்த்தார்.
ஒரு படத்தை எடுப்பதற்குள் கார்த்திக்கு பிராணன் போய்ப் பிராணன் வந்தது. ஒரு பக்கம் இயக்குனர் தேவையில்லாத செலவை இழுத்து விட, ஒரு பக்கம் ஹீரோவோ ஹீரோயினோ கால்ஷீட் சொதப்ப, இன்னொரு பக்கம் பைனான்சியர் நெருக்கடி கொடுக்க, அவனால் மூச்சு விட முடியவில்லை.
அப்பாவின் ஆசைக்காக என்று திரும்பவும் இங்கு வந்தது மிகப்பெரிய தவறு என்று வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து இருந்தான்.
அதிலும் கிட்டத்தட்ட பத்தாயிரம் அடி பிலிம் செலவு செய்து எடுத்த ஒரு காட்சியை அசால்ட்டாக இயக்குனர் வேண்டாமென்று வெட்டித் தூக்கி எறிய, அவனுக்கு நெஞ்சு வலி காணும் போல இருந்தது.
“ஏன் சார்… வேண்டாம்னா ஏன் அத்தனை செலவு பண்ணி எடுத்தீங்க? அந்த சீனுக்கு மட்டும் என்பது லட்சம் செலவு பண்ணோம்… ஞாபகம் இருக்கா? இல்லையா?” சற்று எரிச்சலாக அவன் கேட்டு விட, அவர் தாம்தூம் என்று குதித்தார்.
“என்னோட கற்பனைல ஏன் தம்பி தலையிடறீங்க? இப்படி எல்லாம் ப்ரொடியுசர் சொன்னா எப்படித் தம்பி படத்தை குவாலிட்டியா கொடுக்க முடியும்? சின்னப் பையன்னு நிருபிக்காதீங்க தம்பி…” என்று குதிக்க, இவனுமே,
“சர்… ப்ளான் பண்ணியிருந்தா இந்த அனாவசிய செலவு ஆகியிருக்காதே… எங்க கஷ்டத்தையும் புரிஞ்சு நடந்துக்கங்க…” என்று நறுக்கென்று கூறிவிட, அவரோ முறைத்துக் கொண்டே,
“செலவு செய்ய முடியாதவன் எல்லாம் படத்தைத் தயாரிக்கறேன்னு சொல்லிட்டு வந்துட வேண்டியது… இவனெல்லாம் தயாரிக்கலைன்னு யார் அழுதா?” என்று முணுமுணுத்துக் கொண்டே சென்றார்.
ஒரு பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனம். நேற்று முளைத்த காளான்கள் அந்த இயக்குநரும், நடிகரும்! இரண்டையும் ஒப்பிட்ட கார்த்திக்கு கசப்பான முறுவல் மலர்ந்தது.
அதன் பின் ஒரு வாரம் படப்பிடிப்பை ரத்து செய்து, அவர் பங்குக்கு நஷ்டத்தை ஏற்படுத்த, கார்த்திக்கு தலை சுற்றியது.
இதெல்லாம் தேவையா என்று தந்தையிடம் பாயத் தோன்றும்!
ஆனால் அவரது உடல்நிலையை எண்ணி மௌனமாகி விடுவான்.
நிலைமையோ அவனால் தனியாகச் சமாளிக்க முடியுமென்று தோன்ற முடியாத அளவு போய்க் கொண்டிருந்தது.
தாயிடமும் பாட்டியிடமும் அவனால் எதுவும் கூற முடியாது. தந்தை சான்ஸே இல்லை.
தலையில் கைவைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான்.
அன்றைக்கென்று விஜய் வேறு அழைத்திருந்தான். அவன் சொன்னதைக் கேட்டபோது நெஞ்சு திக்கென்று இருந்தது. பணம் தரவில்லை என்றால் ஷ்யாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை அவன் பட்டியலிட்டான்.
“என்னால முடிஞ்ச அளவுக்குப் பாஸ கண்ட்ரோல் பண்ணிட்டேன் கார்த்திக்… கெடு முடிஞ்சு இத்தனை நாள் அவர் சும்மா இருக்கிறதே ரொம்பப் பெரிய விஷயம்…” என்று அவன் இடைவெளி விட, அதை கார்த்திக் உணர்ந்து தான் இருந்தான்.
பணம் தராத பட்சத்தில் ஷ்யாம் ஒரு ‘ராட்சசன்’ என்பது பீல்டில் உள்ள அனைவரும் அறிந்தது தானே!
எந்த எல்லைக்கும் செல்பவன் அவன்.
உலகத்தில் எந்த மூலையில் அமர்ந்திருந்தாலும் இந்தத் திரையுலகை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது எப்படி என்று அவனுக்குத் தெரியுமாயிற்றே!
அவனைப் பகைத்துக் கொண்டு தொழில் செய்யவும் முடியாது. அவன் இருந்தாலோ தொழில் செய்யவே முடியாது.
பேசாமல் யாரையாவது விட்டு அவனை மிரட்டிப் பார்க்கலாமா என்று தோன்றியது. ஆனால் அதற்கும் அவன் பணிய வேண்டுமே!
அதற்கெல்லாம் பயந்து விடுபவனா அவன்?
அவனிடமே ஒரு அடியாள் கூட்டம் இருப்பதாக அவன் கேள்விப்பட்டிருந்தான். இதுவரை ஷ்யாமை அவன் பார்க்கவும் கூட இல்லை… வெறும் பேசி மூலமான பேச்சு மட்டுமே. அதுவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில். ஆனால் அந்த ஷ்யாமை விடுத்து இப்போது வேறு எந்தச் சிந்தனையும் இல்லை கார்த்திக்கு!
“கொஞ்சம் நீங்க எடுத்துச் சொல்லுங்க விஜய்… இன்னும் ஒரு டென் டேஸ்… அதுக்குள்ள சுதாரிச்சுடுவேன்… கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க விஜய்…” என்று அவன் கெஞ்ச, அந்தப் பக்கம் இருந்த விஜய்க்கு மனம் கனமாக இருந்தது.
மஹாவின் அண்ணனை இந்த அளவுக்குக் கெஞ்ச விட அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஷ்யாமிடம் இந்த அளவுச் சலுகை வாங்கியதே மிக அதிகம். தான் சொல்வதால் மட்டுமே அவன் இந்தளவு பொறுமையாகப் போய்க் கொண்டிருக்கிறான் என்பது அவனுக்குத் தெரியும். இதற்கு மேலும் பொறுமையாக அவனை இருக்க வைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதை கார்த்திக் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே!
விஜய் மேல் மட்டும் அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டால் மொத்தமும் பாழ்!
அவனுக்கு ஒற்றும், அந்த ஒற்றுக்கு ஒற்றும் இருப்பதெல்லாம் விஜய்க்கு தெரியும். அதனாலேயே மிக மிக எச்சரிக்கை உணர்வோடுதான் இருப்பான்.
இந்த நேரத்தில் அதற்கும் கெடுதல் வந்துவிட்டால் கார்த்திக்கை யாராலும் காப்பாற்ற முடியாது என்று நினைத்துக் கொண்டான்.
“சாரி கார்த்திக்… இதுக்கும் மேல என்னால ஒண்ணுமே பண்ண முடியாது… அதுதான் உண்மை… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க… வேண்ணா ஒன்னு பண்ணலாம்… எதாவது இம்மூவபில் ப்ராபர்ட்டியை டிசால்வ் பண்ணி லிக்விஃபை பண்ணுங்க… ஆளை நான் அரேஞ்ச் பண்ணித் தரேன்… உங்களுக்கு உடனே பேமென்ட் பண்ணிடுவாங்க…” என்று கூறிவிட்டு, “ஐ ஆம் சாரி கார்த்திக்…” என்று கூறினான், வலித்த குரலோடு!
இங்கே கார்த்திக் தலையில் கைவைத்துக் கொண்டு வேதனையாகத் தங்கையிடம் பிரச்சனையைச் சொல்லிக் கொண்டிருக்க, அங்கே ஷ்யாம் என்ன செய்வது என்று ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“விஜய்… என்ன சொல்றாங்க லக்ஷ்மில?”
“இன்னொரு டென் டேஸ் டைம் கேட்கறாங்க பாஸ்…”
“நீ என்ன நினைக்கற?”
மிகவும் சாதாரணமாக அவன் கேட்க, விஜய் சற்று உஷாரானான்!
“நீங்களே சொல்லுங்க பாஸ்…” என்று அவன் பக்கமே சாட்டி விட்டான்.
“நான் உன்னோட ஐடியாவை கேட்கறேன் விஜி…” கூர்மையாக அவன் கேட்க,
“அவங்க எப்படியும் திருப்பிடுவாங்கன்னு நினைக்கறேன் பாஸ்… ஏதோ ப்ராபர்ட்டி சேல் பண்ண போறதா கார்த்திக் சொல்லிட்டு இருந்தாங்க…” என்று கூற,
“அவங்க சொன்னாங்களா? இல்ல நீ ஐடியா கொடுத்தியா?” அவனது முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி அவன் கேட்க, விஜய்க்கு தூக்கி வாரிப் போட்டது.
“பாஸ்ஸ்ஸ்…”
“என்ன கார்த்திக் மேல இவ்வளவு கரிசனம் விஜி? புதுசா?ம்ம்ம்?” புருவத்தைத் தூக்கியபடி அவன் கேட்க, “இல்ல பாஸ்… அது வந்து…” என்று திக்கினான்.
“நீ என்கிட்டே வேலை பார்க்கறியா? இல்ல அங்கவா?” சற்றும் யோசிக்காமல் அவன் கேட்ட கேள்வி அவனை உலுக்கியது.
“பாஸ்… அவங்க திருப்ப யோசனை தான் சொன்னேன்… நான் உங்க கிட்ட எப்பவுமே லாயலா இருப்பேன்…”
“அதை நம்ப முடியல விஜய்…”
“எப்படி உங்களை நம்ப வைக்கறதுன்னு எனக்குத் தெரியல பாஸ்…” பரிதாபப் பார்வையோடு அவன் கேட்க,
“கார்த்திக்கு ஒரு சிஸ்டர் இருக்காளாமே? உண்மையா விஜி?” கத்தி முனையில் கீறியது போலிருந்தது, அவனுக்கு! வார்த்தை வெளிவரவில்லை!
மெளனமாக ஷ்யாமை பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “அவ மேல உனக்கு ஒரு கண்ணுன்னு எனக்கு ஒரு பட்சி சொல்லுச்சு…” என்று லேசாகப் புன்னகைக்க, அந்தப் புன்னகையின் விஷத்தன்மை விஜிக்கு புரியும். அவனால் பதிலுக்குப் புன்னகைக்க முடியாது! வேறு வழியில்லை… மறுத்துத்தான் ஆக வேண்டும்.
அவனது வாழ்க்கையா? இல்லை மஹாவா? என்ற கேள்வி வந்தால், அவனுக்கு அவனுடைய அந்த வாழ்க்கை தான் முக்கியமெனப் பட்டது. இதற்கு மட்டும் ஆமென்று ஒப்புக்கொண்டு, தான் கார்த்திக்கு உதவியது தெரிந்தது என்றால் அதோடு அவனை ஷ்யாம் தூக்கி எறிந்து விடுவான்.
அதோடு அவனது அந்தஸ்தும் அதிகாரமும் காணாமல் போய்விடும்!
ஷ்யாமுக்கு அவன் எதிரியாகி விடுவான். ஷ்யாமின் எதிரிகளுக்கு வாழ்வென்பது கிடையாது! மொத்தமும் முடிந்தது கதை!
“நிச்சயமா இல்ல பாஸ்…” சிறு பிசிறு கூட இல்லாமல் அவன் மறுதலிக்க, திருப்தியாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தான் ஷ்யாம்.
“குட்… அப்படீன்னா அந்தப் பொண்ணை கஸ்டடில எடு… கார்த்திக்கு இன்பார்ம் பண்ணு…” என்று முடித்துவிட, விஜய் அதிர்ந்து பார்த்தான்.
“பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…” அவனது அதிர்ச்சிக்கு அளவு கூற முடியவில்லை.
“அந்த… பொண்ணை… கஸ்டடிக்கு… எடு…” என்று ஒற்றை வார்த்தையாகக் கூறியவன், “புரியுதா?” என்று கேட்டான்.
“பாஸ்… அது…” என்று அவன் தயங்க,
“என்ன?”
“இதுவரைக்கும் நாம பொண்ணுங்களை கஸ்டடில எடுத்ததில்ல பாஸ்…”
“எதுக்கும் ஆரம்பம் வேண்டாமா விஜி?”
“வேண்டாம் பாஸ்… அது தப்பு… குடும்பப் பொண்ணு… அதோட லைஃப் போய்டும்…”
“அதைப் பத்தி கவலைப்பட வேண்டியவன் அவளோட அண்ணன்… நீயென்ன இப்படிக் கவலைப்படற?”
“இல்ல பாஸ்… இதுவரைக்கும் என் மனசறிஞ்சு எந்தக் குடும்பப் பொண்ணோட வாழ்க்கையையும் நாம ஸ்பாயில் பண்ணதில்லை… இதோட அவுட்கம் ரொம்ப மோசமா போய்டலாம்…” அவன் எடுத்துக் கூற,
“இப்ப எனக்கு முக்கியம் பணம் மட்டும் தான் விஜி…” என்று பிடிவாதமாக அவன் கூற,
“பாஸ்… அது மஹா… மகாவேங்கடலக்ஷ்மி… அன்னைக்கு ஏர்போர்ட்ல…” என்று இழுக்கும் போதே, “தெரியும் விஜி… நீ சொல்லலைன்னா எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?” என்று சற்றுக் கேலியாகக் கேட்டவன்,
“கஸ்டடில எடு… எடுத்துட்டு உத்தண்டி கெஸ்ட் ஹவுசுக்கு கூட்டிட்டு வா…” என்றவன், “அவளுக்கும் எனக்கும் கணக்கு பாக்கி இருக்கு…” என்று கூறிவிட்டு வெளியேறினான்.
விஜய் என்ன செய்வது என்று புரியாமல் அவன் போன திசையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.