vkv 10

vkv 10

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 10

லைப்ரரிக்கு வந்திருந்தாள் உமா. மருத்துவம் சம்பந்தப்பட்ட நூல்களை மாத்திரம் படித்துப் படித்து மூளை சூடாகி இருந்தது. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண நல்ல கதைப் புத்தகங்களை தேர்ந்தெடுத்தாள்.

லைப்ரரிக்கு வெளியே சீராகப் பேணப்பட்டு வருகின்ற பச்சைப் புல்லில் நிதானமாக அமர்ந்தாள் உமா. சுதாகரனைப் பார்த்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. கொஞ்சம் பிஸியாக இருந்ததால் இவளும் தொல்லை பண்ணவில்லை. ‘இன்று லைப்ரரிக்கு போகிறேன்‘,என்று சொல்லவும்

நீ போ மது நான் உன்னை அங்கே பிக் அப் பண்ணுகிறேன்“, என்று சொல்லி இருந்தான். சுதாகரன் நினைவு வந்தவுடன் உமாவின் இதழ்களில் ஒரு புன்னகை அமர்ந்து கொண்டது. அம்மாடியோவ்! இப்போதே ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போடுகிறாரே இந்த அத்தான். சத்தமா சிரிக்காதே, அதை உடுத்தாத, தனியா போகாதேஅப்பப்பா, விட்டால் தன்னை அவன் பாக்கெட்டில் வைத்துக் கொள்வானோ? அவன் அத்தனை செய்கைகளிலும் கண்டிப்பையும் தாண்டி, தன்மேல் இருந்த வெறித்தனமான அன்பே அவளுக்குத் தெரிந்தது. அவனை விடுத்து தன்னை யாரும் ரசனையாகப் பார்ப்பதைக் கூட அவன் விரும்பவில்லை என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ரவீனாவைப் பற்றி கேள்விப்பட்ட போது தனக்கும் இப்படித்தானே இருந்தது, என்று நினைத்துக் கொண்டாள். தன் அத்தானைப் பற்றி நினைத்த மாத்திரத்தில் உமாவின் முகம் பூவாக மலர்ந்திருந்தது.

ஹேய் ப்ரிட்டி வுமன், வாட் சர்ப்ரைஸ்!” அபி வந்து கொண்டிருந்தான், கூடவே ஒரு பெண். பார்க்கும் போதே புரிந்தது, கேரளா மேட் என்று. நீண்ட கூந்தலும், வட்ட முகமும், அடேங்கப்பா, என்ன கலர்! அந்தப் பெண்ணின் அழகில் ஒரு கணம் மயங்கிப் போனாள் உமா.

மீட் மை சிஸ்டர் ரஞ்சனி. ரஞ்சனி, திஸ் இஸ் உமா, மை ஃப்ரெண்ட்.” அறிமுகப் படுத்தினான் அபி.

எதுக்கு இவ்வளவு பெரிய பொய் சொல்லுற அண்ணா? ரெண்டு வாட்டி மீட் பண்ணி இருக்க, அதுல ஒரு தரம் காரால இடிக்கப் பாத்த, இன்னொரு தரம் எம்பேரைச் சொல்லி கொஞ்ச நேரம் பேசின. இதுக்கு இவ்வளவு பில்டப்பா?” 

கள்ளங் கபடம் இல்லாமல் அந்தப் பெண் சொல்லிமுடிக்க, பக்கென்று சிரித்தாள் உமா. அந்தக் கணத்திலேயே ரஞ்சனியைப் பற்றி நல்லதொரு எண்ணம் உமாவிற்கு உண்டானது. உமாவின் கையை பற்றிக் கொண்டவள்,

ஹாய் உமா, எப்படி இருக்கீங்க?” என்றாள். பேச்சு, செய்கை அனைத்திலும் அழகானதொரு குழந்தைத் தனம் தெரிந்தது.

நல்லா இருக்கேன் ரஞ்சனி. நீங்க எப்போ வந்தீங்க?”

இன்னைக்கு காலைல தான் வந்தோம்.”

வந்தோம்னா…?”

நான், அம்மா, அப்பா எல்லாரும் வந்தோம். ஊரைச் சுத்திப் பாக்கலாம்னு அண்ணா கூட வந்தேன்.” இவர்கள் பேசுவதை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு, ஒரு கால் வரவும்,

பேசிக்கிட்டு இருங்க, இதோ வந்திடுறேன்.” என்று சொல்லி விட்டு ஃபோனை காதுக்கு கொடுத்த படி நகர்ந்து விட்டான்.

சொல்லுங்க உமா, நீங்க டாக்டராமே! அண்ணா சொன்னாங்க.”

ம்…”

எங்க வீட்டுல நான் ஒரு டிகிரி முடிக்கப் பட்ட பாடு, அப்பப்பா!”

ஏன், என்னாச்சு ரஞ்சனி?”

அம்மாக்கு இதுலெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை உமா, யாருக்காவது கட்டிக் குடுத்துடனும். அப்பாவும், அண்ணாவும் கொஞ்சம் சப்போர்ட் பண்ணினதால தான் டிகிரியே முடிச்சேன். இதுக்கு மேல படிக்கணும்னு சொன்னா, அம்மா பூரிக்கட்டையை தூக்குவாங்க.” 

ஐயையோ!”

ம்ஆமாஇப்பவே மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சாச்சுஎந்தக் கல்மிஷமும் இல்லாமல் அனைத்தையும் பகிர்ந்து கொண்ட அந்தப் பெண்ணை உமாவிற்கு நிரம்பவே பிடித்தது

மது.” பேச்சு சுவாரஸ்யத்தில் சுதாகரன் வந்ததை உமா கவனிக்கவில்லை. இவர்கள் அருகில் வந்தவனைப் பார்த்துச் சிரித்தவள்,

அத்தான், இது ரஞ்சனி. என்னோட ப்ரெண்ட்.” என்று அறிமுகப் படுத்தினாள். உமா தன்னை ப்ரெண்ட் என்று சொன்னதில் மகிழ்ந்து போன அந்தப்பெண்,

வணக்கம் அண்ணாஎன்றது. அழகாக கை கூப்பி தனக்கு வணக்கம் வைத்த, அதுவும்அண்ணாஎன்று அழைத்த அந்தப் பெண்ணை சுதாகரன் வாஞ்சையாகப் பார்த்தான்

வணக்கம்மா, ஊருக்கு புதுசா நீங்க? முன்னாடி பாத்த மாதிரி இல்லையே.”

ஆமாண்ணா, அப்பாக்கு சொந்த ஊர் கோயமுத்தூர் தான். தொழில் விஷயமா இப்போ இங்க வந்திருக்கோம்.”

அப்படியா, நல்லது.” அந்தப் பெண்ணிற்கு பதில் சொன்னவன்,

கிளம்பலாமா மது?” என்றான்.

நாங்க கிளம்பறோம் ரஞ்சனி, கண்டிப்பா ஒரு நாளைக்கு எங்க வீட்டுக்கு வாங்க என்ன?”

கண்டிப்பா வர்றேன் உமா, நீங்க கிளம்புங்க.” 

இவர்கள் இரண்டு பேரும் கிளம்பிப் போக கையசைத்து விடை கொடுத்தாள் ரஞ்சனி. ஃபோன் பேசி முடித்து விட்டு அபி வந்த போது ரஞ்சனி மட்டுமே நின்றிருந்தாள்.

உமா எங்க ரஞ்சனி?”

அவங்க கிளம்பி போய்ட்டாங்க அண்ணா. யாரோ அவங்க சொந்தக் காரங்க போல, வந்து கூட்டிட்டு போனாங்க.”

ஒரு black Audi வந்தாங்களா?”

ம்உங்களுக்கு எப்படித் தெரியும்?” தங்கை தலையில் செல்லமாகத் தட்டியவன்,

இதெல்லாம் தெரிஞ்சதால தான் நீ கேட்ட உடனேயே வைர நெக்லஸ் என்னால வாங்க முடியுது.” என்றான். அவள் விளங்காத பார்வை பார்க்க,

கிளம்பலாம் ரஞ்சனி.” என்று கூறி காரை நோக்கி நடந்தான்.

                                              ————————————————-

வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்தான் சுதாகரன். முழு நிலா பால் போல பொழிந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த பிரம்பு நாற்காலியில் கால் நீட்டி, சுகமாக அந்த இரவுப் பொழுதை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

சொல்லாமல் கொள்ளாமல் உமாவின் முகம் அவன் மனதில் வந்தது. இப்போது அவள் பக்கத்தில் இருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும் என்று அவன் வயது கணக்கெடுப்பு நடத்தியது. ஏதேதோ ஆசைகள் அடிமனதில் ஆட்டம் போட்டது. தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். பாங்களூரில் இருந்து கிளம்பும் போது இந்தப் பெண் தன்னை இத்தனை தூரம் ஆக்கிரமிப்பாள் என்று கொஞ்சமும் அவன் நினைத்துப் பார்க்கவில்லை.

எத்தனை வருட புறக்கணிப்பு. அவன் மட்டுமல்ல, அவளும் தான். கோபம் வந்துவிட்டால் இருவரும் சளைத்தவர்கள் அல்ல. முற்றாகப் பேச்சை நிறுத்தி, தூரத்தே அவள் முகம் பார்த்த ஞாபகம் மட்டுமே இருந்தது. ஆனால் நேற்று ஆனைமலையில், அவளோடு ஜலக்கிரீடை நடத்தியதை நினைத்த போது சிரிப்பு வந்தது.

இந்தப் பெண் என்னை தலை கீழாக மாற்றிவிட்டாள்‘, என்று நினைக்கும் போதே சுதாகரனுக்கு இனித்தது. பாட்டியை நினைத்து அவள் அச்சப்படும் போது, சமாதானம் பண்ணும் சாக்கில் அவளை உரசும் ரகசியம் அவனுக்குத் தானே தெரியும். அசட்டு தைரியமும், வாய் துடுக்குமாக இருந்தவள் இன்று முற்றாக மாறிவிட்டாள்.

அந்த நாள் இன்னும் சுதாகரன் மனதில் பசுமையாக இருந்தது. கோடை விடுமுறை என்பதால் சுதாகரனும், மகேஷும் வீட்டில் இருந்தார்கள். குந்தவியும், பிரபாகரனும் ஹாஸ்பிடல் போயிருக்க, காந்திமதி மட்டும் வீட்டில் இருந்தார்.

விடுமுறை நாட்களில் அத்தை வீட்டில் உமாவின் வரவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அத்தான், அத்தான் என்று இவன் பின்னோடு அலைந்தாலும், மகேஷோடுதான் அதிக நட்பு உமாவிற்கு. சின்னப் பெண் என்பதால் அடக்க ஒடுக்கம் எதுவும் கிடையாது. அவள் சிரித்தால் பக்கத்து வீட்டிற்கு கேட்கும். அவளின் செய்கைகளைப் பார்த்து அஷ்ட கோணலாகும் பாட்டியின் முகத்தை இன்று நினைத்தாலும் சிரிப்பு வந்தது சுதாகரனுக்கு.

அன்றும் அப்படித்தான், மகேஷோடு ஏதோ அடித்துப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். காந்திமதி என்ன மூடில் இருந்தாரோ,

ஏய் பொண்ணே! என்ன ரொம்ப ஆட்டம் போடுறே? ஒரு இடத்துல அடங்கி உக்கார மாட்டியா?” என்றார்.

சட்டென அவர் திட்டியதில் அதிர்ச்சி அடைந்தாலும், தன்னை சுதாகரித்துக் கொண்டவள் வேண்டுமென்றே அவரை முறைத்துப் பார்த்தாள். தன் தோழியை திட்டியதில் கோபம் கொண்ட மகேஷ்,

எதுக்கு பாட்டி இப்போ அவளைத் திட்டுறீங்க?” என்றான்.

நீ வாயை மூடு பொடிப் பயலே, அவளுக்கு வக்காலத்தா நீ? இவ எதுக்கு ன்னா இங்க ஓடி வர்றா? பசங்க இருக்கிற வீட்டுல இவளுக்கு என்ன வேலை?”

நான் உங்க வீட்டுக்கு வரலை, எங்க அத்தை வீட்டுக்கு வந்திருக்கேன்.” இது உமா.

ஆமா, உங்க அத்தை. உங்கப்பாவோட பொறந்தா பாரு, நீ அத்தைங்கிறதுக்கு.”

ஆமா, எங்கப்பாவோட தான் பொறந்தாங்க. எங்கப்பாவோடதான் வளந்தாங்க. உங்களுக்கு இப்போ என்ன அதுக்கு.” உமா வாயடிக்க,

மது…!” அதட்டலாக வந்தது சுதாகரனின் குரல். சுதாகரனை திரும்பிப் பார்த்து உமா முறைக்க

எதுக்கு எம் பேரனை முறைக்குற? உங்கப்பனுக்கும், அம்மாக்கும் விவஸ்தையே கிடையாதா? வீட்டோடை உன்னை வச்சிருக்காம எதுக்கு இங்க அனுப்புறாங்க?” என்றார் காட்டமாக. அப்போதும் தன்னை அதட்டி அடக்கிய சுதாகரனையே வெறித்துப் பார்த்தாள் உமா. தன் ஆசைப் பேரனை உமா முறைக்க முறைக்க, கோபம் ஏறியது காந்திமதிக்கு. உமாவின் கையைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தவர்,

எதுக்குடி அவனை முறைக்குற? லேசா மாப்பிள்ளை பிடிக்கிறது உங்கப்பனுக்கு கைவந்த கலை தானே? அதைச் சொன்னா உனக்கெதுக்கு கோபம் வருது.” காந்திமதி உச்சஸ்தாயியில் கத்தினார். ‘நீ கத்துவதைக் கத்து, எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை‘, என்பது போல அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் சுதாகரனையே முறைத்துப் பார்த்தாள் உமா. காந்திமதிக்கு எங்கிருந்துதான் அத்தனை கோபம் வந்ததோ, பளாரென்று உமாக்கு ஒரு அறை வைத்தார்.

பாட்டி! என்ன பண்ணுறீங்க?” அதிர்ச்சியில் மகேஷ் கத்ததனக்காக எதுவும் பேசாத சுதாகரனையே மறுபடியும் முறைத்துப் பார்த்தாள் உமா.

நான் சொல்லச் சொல்ல கேக்காம எதுக்குடி மறுபடி மறுபடி அங்கயே முறைக்குற?” மீண்டும் அடிக்க கை ஓங்கியவரை இப்போது உமாவின் கை பாதியிலேயே தடுத்து நிறுத்தியது. பாட்டியின் கையை பிடித்தவள், அதை லேசாக அழுத்திப் பிடிக்க, பாட்டி வலியில் அலற ஆரம்பித்தார்.

சுதா, இவ எங்கையை ஏதோ பண்ணுறாப்பா!” பாட்டி அலற, அவர்களை நோக்கி வந்த சுதாகரன் பாட்டியை அவளிடமிருந்து பிரித்து எடுத்து விட்டு, அவள் கையை தர தரவென இழுத்துச் சென்று வீட்டுக்கு வெளியே விட்டான். பதறிப் போன மகேஷ்,

அண்ணா! என்ன பண்ணுற? உமா என்ன பண்ணினா? தப்பு பண்ணினது பாட்டி, அவங்களை ஒன்னும் சொல்லாம எதுக்கு உமாவை வெளியே அனுப்புற?” ஆக்ரோஷமாக வந்தது மகேஷின் கேள்வி.

இத்தனை கலவரத்திலும் பாட்டி ஒரு பக்கம் உட்கார்ந்து அழ, அப்போதும் உமா சுதாகரனையே முறைத்த படி இருந்தாள். ‘எனக்காக நீ ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லைஎன்ற குற்றச்சாட்டு அதில் அப்பட்டமாக தெரிந்தது. மகேஷ் அவளை தோளோடு அணைத்து சமாதானம் செய்தபடி கூட்டிக்கொண்டு போக, அந்தக் கண்கள் இரண்டும் சுதாகரனை வெறித்த படியே போனது

இன்று நினைத்தாலும் அந்தப் பார்வை சுதாகரனை ஏதோ செய்யும். பாட்டியை எதிர்த்தது தவிர, அவள் மேல் எந்தத் தவறும் இல்லை என்று சுதாகரனுக்கு இப்போது புரிந்தாலும், அரும்பு மீசையோடு அன்றிருந்த சுதாகரனுக்கு அவள் ஏதோ தன் பாட்டிக்கு அநியாயம் செய்தது போல தான் தோன்றியது

அன்றோடு இருவரும் பேச்சை நிறுத்திக் கொண்டனர். இருவருக்கும் இயற்கையாகவே இருந்த பிடிவாதமும், கோபமும் இத்தனை வருடங்களாக அவர்களை பிரித்து வைத்திருந்தது. ஆனால் உள்ளுக்குள் இருந்த அன்பு மட்டும் உயிர்ப்போடு தான் இருந்திருக்கிறது என்று நினைக்கும் போது, உதடுகளில் இளநகை பூத்தது சுதாகரனுக்கு.

என்ன சுதாகரா! உனக்கு நீயே சிரிச்சுக்கிற?” பக்கத்தில் வந்தமர்ந்தார் பாட்டி. வயது எழுபதைத் தாண்டி இருந்தது. பழைய திடம் உடம்பில் இல்லாவிட்டாலும் அந்தக் கண்களில் இருந்த கூர்மைநான் மாறவில்லைஎன்று சொல்லாமல் சொன்னது. பாட்டியின் உள்வயனங்களை நன்கு அறிந்தவன் என்பதால், மௌனமாகச் சிரித்தான் சுதாகரன்.

சொல்லச் சொல்ல கேக்காம அந்த விளங்காத பய மில்லுல போய் சேந்துக்கிட்ட. அடுத்ததா எதுக்கு அடிப்போடுற சுதாகரா?”

பாட்டி, விளங்காத பயன்னா உருப்படாததுன்னுதானே அர்த்தம்?”

ம்வேறென்ன?” காந்திமதி குரலில் அத்தனை வெறுப்பிருந்தது.

ஐயோ பாட்டி! தமிழ் மாமா மில்லோட ஒரு வருஷ லாபம் என்னன்னு உங்களுக்கு தெரியுமா? நான் கூட நல்லா போற மில்லுன்னு தான் இத்தனை நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன். உள்ள போய் பாத்தாதான் தெரியுது, தமிழ் மாமா லேசுப்பட்ட ஆளில்லைன்னு.” முகம் அசிரத்தையாக கேட்பது போல் பாவனை செய்தாலும், பாட்டியின் காதுகள் தகவல்களை கச்சிதமாக சேகரித்தது.

ஹாஸ்பிடல் சேவை அடிப்படையில தான் நடக்குதுன்னாலும், அங்க இருக்கிற நவீன உபகரணங்களோட சேத்து அதோட மதிப்பே தனி பாட்டி. போதாக்குறைக்கு மில்லுல வர்ற லாபத்தை வேற வேற தொழில்ல முதலீடு பண்ணி இருக்காரு. சும்மா சொல்லப்படாது, மனுஷன் விவரமான ஆள்தான்.” பாட்டியின் மனதறிந்த பேரனாக எல்லாவற்றையும் கொட்டினான் சுதாகரன்.

அதுக்காக, பாட்டிக்கு புடிக்காத எதையாவது செய்ய யோசனை பண்ணுறயா சுதாகரா?”

எனக்கு புடிக்கிறதெல்லாம் என்னோட பாட்டிக்கும் புடிக்கும்.” என்றான் பிடிவாதமான குரலில் ஆணித்தரமாக. முகத்தில் புன்னகை மட்டும் அப்படியே இருந்தது. பாட்டி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. மௌனமாக எழுந்து சென்றுவிட்டார்.

                                         ———————————————————

தமிழ்ச்செல்வன் வந்ததும் வராததுமாக கலெக்டர் ஆஃபிஸில் நடந்ததைச் சொல்லி இருந்தார் இளமாறன். அந்த அறையில் சற்று நேரம் அமைதி நிலவியது.

என்னால நம்பவே முடியல்ல தமிழ், பெயர் மறந்து போச்சு. ஆனா முகத்தைப் பாத்தப்போ இந்த முகத்தை எங்கயோ பாத்திருக்கோமேன்னு என் மனசுல ஓடிக்கிட்டே இருந்துது.”

ம்…”

அதுக்கப்புறம் அந்த நினைப்பை தூக்கிப் போட்டுட்டு, நம்மை பிரச்சனையை பேச ஆரம்பிச்சிட்டேன். எல்லாம் பேசி முடிச்சிட்டு கிளம்பலாம்னு பாத்தா, அந்த அம்மாவே தமிழ்ச்செல்வன் எப்படி இருக்காருன்னு கேக்குது!”

ம்…!”

எனக்கும், ஏதோ தொழில் முறையில உனக்கு அறிமுகமானவங்களா இருக்கும்னு தான் தோணுச்சு. அப்புறம் பாத்தா பொண்ணு நம்மை எல்லாரையும் பத்தி பேசுது.”

ம்…”

எனக்கு என்ன சொல்லுறதுன்னே புரியல்லை. ஆனா, உன்னை சந்திக்க ரொம்பவே முயற்சி பண்ணி இருந்திருக்காங்க. தம்பியை கூட வீட்டை விட்டு வெளியே விடலையாம்.”

என்னோட தப்புதான் மாறா. நான் அந்தப் பொண்ணு கூட பேசி இருக்கனும். அம்மா எல்லாம் சரியாத்தான் பண்ணுவாங்கன்னுட்டு சும்மா இருந்துட்டேன்.”

ஆமாப்பா.”

சரி விடு, நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான். அந்த கல்யாணம் நடந்திருந்தா ஒரு கெட்டிக்கார கலெக்டரை நம்ம நாடு இழந்திருக்கும்.”

ஏம்பா அப்பிடிச் சொல்லுற, ஆராதனாவும் உங்கிட்ட வரும்போது காலேஜ் முடிக்காமத்தானே இருந்துது. நீ மேலே படிக்க வெச்சு இன்னைக்கு இந்த மில்லோட பார்ட்னர் ஆக்கலையா?” 

இவர்கள் பேச்சை கலைத்தது கதவைத் தட்டும் ஓசை. பேச்சை நிறுத்தி விட்டு நண்பர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, கதவைத் திறந்து கொண்டு ஆராதனா வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் தமிழின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியை ஆச்சரியமாக பார்த்தார் இளமாறன்.

இத்தனை நேரமும் தமிழின் வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத ஒரு சம்பவத்தைப் பற்றி, அதுவும் ஒரு பெண் சம்பந்தப் பட்டிருக்கும் விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். அது அத்தனையையும் தன் மனைவியைப் பார்த்த மாத்திரத்தில் தொலைந்து போகிறது என்றால், இந்தப் பெண்ணை தமிழ் எத்தனை தூரம் நேசிக்க வேண்டும்

என்ன அண்ணா, என்னை இவ்வளவு ஆச்சரியமா பாக்குறீங்க?” 

ஒன்னுமில்லை ஆராதனா, இப்போதுதான் தமிழ் உன்னைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தான். அதுக்குள்ள நீயே வந்து நிக்குறே.”

ஆமா, இவங்களுக்கு வேற என்ன வேலை. என்னைப் பத்தியே ஏதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க.” ஏதோ அங்கலாய்ப்பது போல் இருந்தாலும், அந்தக் குரலில் மகிழ்ச்சியே நிறைந்திருந்தது.

என்னம்மா இப்படி சொல்லிட்டே! பொண்ணுங்க என்னடான்னா புருஷன்மார் தங்களை கண்டுக்கிறதே இல்லைன்னு நொந்துக்கிறாங்க, நீ என்னடான்னா இப்பிடி சலிச்சுக்கிறே.” இவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த தமிழ் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

அது சரி, இப்பிடி பேசிப் பேசியே நீங்க உங்க காலத்தை கடத்திட்டீங்க. காலா காலத்தில நீங்களும் கல்யாணம் பண்ணி இருந்தா, இப்போ நாங்களும் உங்க வீட்டு அம்மா என்ன சொல்லுறாங்கன்னு கேலி பண்ணி இருப்போம் இல்லை.”

அட ஆண்டவா! நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்ணினேன். எனக்கு யாரைப் பாத்தும் அப்பிடி ஒரு ஆசை வரல்லையேம்மா.”

இதையே திரும்ப திரும்ப சொல்லுங்கண்ணா. என்னைக் கேட்டா, உங்களுக்கு சேர்க்கை சரியில்லைன்னு தான் சொல்லுவேன்.”

ஐயையோ, என்னம்மா இப்பிடி சொல்லிட்டே!”

பின்ன என்ன அண்ணா, நீங்க வேணாம்னா உங்களை அப்பிடியே விட்டுர்றதா? அவங்க எல்லாம் கல்யாணம், குழந்தை, குட்டின்னு செட்ல் ஆகிட்டாங்க இல்லை?” கடைக் கண்ணால் தமிழைப் பார்த்தபடி ஆராதனா சொல்லி முடிக்க, தமிழ்ச்செல்வனின் கண்கள் மனைவியையே வட்டமிட்டது. இந்த நாடகத்தைப் பார்த்த இளமாறன்

அம்மாடி, இந்த விளையாட்டுக்கு நான் வரலை. ஆளை விடும்மா.” என்று சொல்லி விட்டு மெதுவாக ரூமை விட்டு நகர்ந்து போனார். அவர் செல்லும் வரை பொறுத்திருந்த தமிழ்ச்செல்வன் தன் மனைவியின் கையைப் பிடித்து தன்னருகே இழுத்தவர்,

அவன் சேர்க்கை சரியில்லைன்னா, உன்னோட சேர்க்கை மட்டும் சரியா ஆரா?” அவர் கைகள் வில்லங்கம் பண்ண, நெழிந்த ஆராதனா,

ஐயோ! என்ன பண்ணுறீங்க நீங்க? யாராவது வந்திடப் போறாங்க.” என்றார் பதறியபடி.

நீதானே சேர்க்கை சரியில்லைன்னு சொன்ன ஆரா, சரியில்லாத சேர்க்கை இப்படித்தான் இருக்கும்.” வாய்விட்டு சிரித்தார் தமிழ்ச்செல்வன்.

 

 

 

error: Content is protected !!