‘ஐ லவ் யூ வீரமாக்காளி’ இந்த வார்த்தைகளை கேட்ட போது முகமெல்லாம் சிவந்து உக்கிர கோலத்தில் நின்றார் சொர்ணம்!
காதல் என்பது கெட்ட வார்த்தையோ கெட்ட செயலோ இல்லையெனினும் அது சொர்ணம் மாதிரி பெண் பிள்ளைகளை பெற்ற ஓர் ஏழை தாயின் இடத்திலிருந்து பார்க்கும் போது அது ஏற்க கூடிய விஷயம் அல்ல!
அக்கம்பக்கத்தில் காதலால் நடந்த மோசமான விஷயங்களும் அவல நிலைகளும் அவர் எண்ணங்களில் மளமளவென அணிவகுக்க, அப்போது அவர் தன் மகளின் மூலமாய் பெரிது பெரிதாய் கண்ட கனவுகள் எல்லாம் சீட்டுக்கட்டு கோபுரம் போல் சரிந்து விழ்ந்திருந்தன.
“ம்மா… நான் சொல்றது ஒரு நிமிஷம்” என்று வீரா தன் அம்மாவின் கோபத்தை பார்த்து மிரண்டபடி பேச யத்தனிக்க,
சொர்ணம் பளாரென்று அவள் கன்னத்தில் அறைந்தார்.
“ம்ம்ம்ம்மா” என்று மற்ற இரு சகோதிரிகளும் அந்த இடத்தின் நிச்பதத்தை உடைக்க,
சீற்றமாய் அவர்கள் புறம் திரும்பிய சொர்ணம், “கொன்னுடுவேன்… பொய்யாடி சொல்றீங்க… உங்க இரண்டு பேரையும் அப்புறம் வைச்சுக்கிறேன்” என்று மிரட்டிவிட்டு
வீராவின் புறம் திரும்பியவர்,
“பாவி! பாவி உனக்கு படிச்சி படிச்சி சொன்னேனேடி இப்படி பண்ணிட்டியேடி… பாவி” என்று கத்தி கொண்டே விளக்குமாறை தூக்கினார்.
“ம்மா ம்மா ம்மா பீளீஸ் ம்மா நான் எதுவும் பண்ணலம்மா” என்று தன் தாயிடம் இருந்து வீரா கெஞ்சி கொண்டே தப்பிக்க முற்பட,
அந்த சிறுவீட்டில் அவள் எங்கே ஓடி தப்பிப்பது.
சொர்ணம் அவளை வெலுத்து வாங்க இடையில் தன் அக்காவை காக்க வந்த நதியாவும் அமலாவும் கூட பயங்கரமாய் அடி வாங்கினர்.
“ம்மா ம்மா நான் சொல்றதை கேளு” என்று வீரா மீண்டும் மீண்டும் தன் பக்கமிருக்கும் நியாயத்தை சொல்ல யத்தனிக்க,
எந்த விளக்கங்களையும் அவர் கேட்க தயாராகயில்லை.
“நாய குளிப்பாட்டி நடுவூட்ல வைச்சாலும் அது வாலை தூக்கிட்டு போவோமா?!… அப்படி என்னடி படிக்கிற வயசில உனக்கு அந்த எழவெல்லாம்…” என்று உரைத்த சொர்ணத்தின் வார்த்தைகள் அடுத்து அடுத்து தன் எல்லைகளை மீறியது. கேட்க கூடாத சொல்ல கூடாத சில வார்த்தைகள்!
வீரா அதற்கு மேல் தாங்க முடியாமல், “நீ எவ்வளவுவேன்னா என்னை அடி… ஆனா இப்படி எல்லாம் பேசாதே… சொல்லிட்டேன்” என்று கோபமாய் முறைக்க,
“நீ செஞ்ச வேலைக்கு வேற என்னடி பேசுவாங்க” என்றார்.
“அய்ய்ய்ய்ய்யோ… நான் எந்த தப்பும் செய்யல… செய்யல… செய்யல…. அந்த புறம்போக்கு யாருன்னு கூட எனக்கு தெரியாது” என்று வீரா உணர்ச்சி பொங்க கத்த,
சொர்ணம் பதிலின்றி அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.
“நீ என்னை எவ்வளவு அடிச்சாலும் நான் தாங்கின்னிருப்பேன்… ஆனா சந்தேகப்படும் போதுதான் தாங்கவே முடியல… அதெப்படிம்மா அப்படி எவன் பின்னாடியாவது நான் போயிடுவேன்… நீ என்னை அப்படியாம்மா வளர்த்த” என்ற போதுதான் சொர்ணத்திற்கு சுருக்கென்றது.
“வீரா” என்று குற்றவுணர்வோடு தன் கையிலிருந்த விளக்குமாறை அவர் நழுவவிட,
“போம்மா… அக்கா எந்த தப்பும் செய்யல… அந்த ஆள்தான் அக்காகிட்ட ரொம்ப ரப்சர் பண்ணிட்டிருந்தான்” என்று நதியாவும் அமலாவும் தன் தமக்கைக்காக பரிந்து கொண்டு வந்து முன் நிற்க,
சொர்ணம் அதிர்ந்தார்.
“வீரா” என்று சொர்ணம் குற்றவுணர்வோடு அழைக்க,
“போம்மா” என்றாள் வீரா தன் தலையை கவிழ்ந்து அழுது கொண்டே உரைத்தாள்.
சொர்ணம் தன் மகள் அருகில் அமர்ந்து கொண்டு,
வீராவின் முகத்தை நிமிர்த்தி பிடிக்க அவள் உதடு கிழிந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
அப்போதுதான் அவர் செய்த தவறை உணர்ந்து மனம் வருந்தி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தார்.
“நீ அந்த பையனை பத்தி என்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம்ல?” என்றவர் பொறுமையாய் கேட்க,
“அவனையெல்லாம் நான் ஒர் ஆளா கூட மதிச்சதில்லம்மா… அதான் நான் சொல்லல” என்றவள் விசும்பி கொண்டே சொல்ல,
சொர்ணம் மகளின் தலையை தடவி, “நீ என்கிட்ட சொல்லாம விட்டதாலதான் அவன் கொழுப்பெடுத்து போய் இப்ப நம்ம வீட்டுக்கே வந்து நின்னுக்கிறான்” என்று சொல்லியபடி அவள் உதட்டின் குருதியை தன் புடவை முந்தானையால் துடைத்துவிட்டவர் கோபம் அடங்காமல்,
“இருக்கட்டும் அவனை நாளைக்கு உன் காலேசூக்கே வந்து ஒரு வழி பன்னிடுறேன்” என்றார்.
“இதுக்குதான்… உன்கிட்ட சொல்லல… நீ பாட்டுக்கு விளக்குமாத்தை தூக்கிட்டு என் காலேஜ் வாசலில் நின்னு என் மானத்தை வாங்காதாம்மா” என்றாள்.
“என்னடி பேசிற… அந்த சோமாரி இவ்வளவு தூரம் வந்துக்கிறான்” என்றவர் சீற்றமாய் எழுந்து கொள்ள,
“அய்யோ விடும்மா… அந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்” என்றாள் வீரா!
“என்னத்த பார்த்துப்ப… அவன் ஏதாச்சும் ஏடாகூடாம பண்ணிவைச்சிட்டா?!”
“யாரு என்கிட்டயாவா ? அவன் தோலுரிச்சி தொங்க விட்டிர மாட்டேன்” என்று வீரா சொல்ல,
மகளை பெருமிதமாய் பார்த்தார் சொர்ணம்!
தன் மகளின் தைரியத்தில் அவருக்கு எந்தவித சந்தேகமும் இல்லைதான். அதே நேரம் அந்த துடுக்கு தைரியமே அவளுக்கு பிரச்சனையாய் மாறிவிடுமோ என்ற அச்சமும் அவர் மனதில் இருந்தது.
சொர்ணம் பெருமெச்செறிந்து கொண்டே, “ரொம்ப வலிக்குதா ?” என்று மகளின் களைந்து மூடியெல்லாம் சரி செய்துவிட,
“வலிக்காதே பின்ன” என்று கோபமாய் முகத்தை தூக்கி வைத்து கொண்டாள் வீரா!
“மூணு பேரும் சேர்ந்துக்கிட்டு என்கிட்ட பொய் சொன்னா?” சொர்ணம் மீண்டும் கோபம் கொள்ள,
“நாங்க உண்மையா சொன்னா மட்டும் நீ அடிக்க மாட்டியா?” வீரா இப்படி கேட்டு தன் அம்மாவின் முகத்தை பார்க்க,
“அதெல்லாம் கண்டிப்பா அடிச்சிருப்பாங்க” என்று அமலாவும் நதியாவும் தன் தமக்கையோடு சேர்ந்து கொண்டனர்.
“உங்களை எல்லாம் அடிக்கனும்னு எனக்கு மட்டும் என்னடி ஆசையா? என் ஆசையெல்லாம் நீங்க மூணு பேரும் தலை நிமிர்ந்து பார்க்கிற மாறி ஒரு இடத்தில இருக்கனும்” என்றவர் எதிர்பார்ப்போடு சொல்ல,
“எப்படி? லைஐசி பில்டிங் மேல ஏறி நிக்கனுமா?” என்று நதி சொல்ல வீராவும் அமலாவும் சிரிக்கவும்,
“அடிங்க” என்று கை ஓங்கி கொண்டு வந்த சொர்ணத்திற்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அதன் பிறகு சொர்ணம் தன் மகளின் உதட்டில் மஞ்சளை இழைத்து தடவிவிட வீரா,
“வலிக்குதும்மா” என்று அலற அந்த வலியில் அவளை விடவும் அதிகமாய் துடித்தது சொர்ணம்தான்! அவர் கண்ணீரை துடைத்து கொண்டே மருந்து வைக்க,
“அழாதா ம்மா… எனக்கு ஒண்ணும் வலிக்கல” என்று வீரா சொல்ல மகளை பார்த்து நெகிழ்ந்து உச்சிமுகர்ந்தார்.
சொர்ணம் பின்னர் வீராவிற்கு உணவை தன் கரத்தாலேயே ஊட்டிவிட அப்போது நதியாவும் அமலாவும், “எங்களுக்கு” என்று தன் அம்மாவின் முன்னே வந்து அமர்ந்து கொள்ள,
சொர்ணமும் மனமகிழ்ந்து மூவருக்கும் ஊட்டிவிட்டாள்.
அந்த தருணம் உண்மையிலேயே அவர்கள் எல்லோருக்கும் அத்தனை நெகிழ்ச்சிக்குறியதாய் மாறியிருந்தது.
*****
அடுத்த நாள்…
வீராவின் கல்லூரி வாசலில் எதிர்பார்ப்போடு காத்திருந்தான் அரவிந்த்!
வீராவும் எப்போதும் போல் பேருந்தில் வந்திறங்க அவளை நோக்கி வந்தவன்,
வீராவோடு வந்த அவளின் ஆண் நண்பர்கள் பார்த்து தயங்கி நின்றான்.
அவர்கள் எல்லோரும் அவன் முன் வந்து நிற்க அவர்களில் ஒருவன்,
“ஆமா யார் நீ? எதுக்கு நீ வீரா பின்னடி சுத்திட்டிருக்க” என்று கேட்க அரவிந்த் பார்வை வீராவை பார்த்தது. ஆனால் அவளோ அவன் முகத்தை கூட பார்க்காமல் நின்றிருந்தாள்.
“இனிமே வீரா பின்னாடி சுத்திற வேலை வைச்சுக்காதே… அப்படி சுத்திறதை பார்த்தோம்… அடிச்சி டாராக்கிடுவோம் பார்த்துக்கோ?!” என்றவன் மிரட்ட,
அரவிந்த் கோபம் பொங்க, “இது எனக்கும் வீராக்குமான பிரச்சனை… அவ என்கிட்ட பேசட்டும்… நடுவில நீங்கெல்லாம் யாரு?” என்று அவள் நண்பர்களையெல்லாம் மொத்தமாய் முறைத்தான்.
அங்கிருந்தவர்கள் அவனை அடிக்க முன்னேறி கொண்டு வர வீரா அவர்களை தடுத்துவிட்டு அரவிந்தை பார்த்து,
“நான் உன் மேட்டர்ல ரொம்ப பொறுமையா இருக்கேன்… ஆனா நீ என்னை கடுப்பேத்திட்டே இருக்கு… வேண்டாம்… இதோட நிறுத்திக்கோ” என்றாள்.
“அப்போ உனக்கு என் மேல கொஞ்சங் கூட லவ் இல்லையா?!” என்றவன் கேட்க,
வீராவின் முகம் சோர்ந்த நிலையில் மாற சுற்றி இருப்பவர்கள் எல்லாம், “இப்பவே சொல்லு வீரா… இவனை ஒரு வழி பண்ணிடலாம்” என்று ஒருவன் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம்” என்றாள்.
“நான் உனக்கு பொருத்தமானவன் இல்லயா?!” அடுத்த கேள்வியை அரவிந்த் கேட்க,
“பொருத்தமா… அதுவும் வீராவுக்கு… எங்க? வீரா மாதிரி ஒரு விசிலடிறா பார்ப்போம்” என்றதும் அரவிந்த் தயங்கியபடி,
“எனக்கு விசலடிக்கெல்லாம் தெரியாது” என்றான்.
“உம்ஹும்… நீ வீராவுக்கு கொஞ்சங் கூட பொருத்தமானவனே இல்ல” என்ற நொடி,
“அப்போ விசீலடிச்சா வீராவுக்கு நான் பொருத்தமானவன்னு ஒத்துக்கிறீங்களா?!” என்று அரவிந்த் உணர்ச்சி வசமாய் கேட்டான்.
“முதல்ல அடி தம்பி… பார்க்கலாம்” என்க,
“ஏ இன்னாங்கடா… விளையாடிறீங்களா?!” என்று முறைத்தாள் வீரா!
“இரு வீரா… சார் உன்னளவுக்கு விசிலடிக்கிறாரான்னு பார்க்கலாம்” என்றவள் நண்பர்கள் சொல்லிவிட்டு,
“அடிங்க சார்” என்று அரவிந்தை எள்ளலாய் கேட்க,
“அதெல்லாம் வேணாம் கர்ணா” என்றாள் வீரா!
“இரு வீரா” என்று சொல்லிவிட்டு எல்லோரும் அரவிந்தை நோக்கி,
“விசிலடிச்சா வீரா” என்றனர்.
“இந்த விளையாட்டுக்கு நான் வரல” என்றவள் சொல்ல,
“நான் அடிக்கிறேன்” என்று சொல்லி அரவிந்த் தன் விரல்களை வாயில் வைத்து விசிலடிக்க முற்பட,
வீராவின் முகத்தில் டென்ஷன்!
ஆனால் அரவிந்த் வாயிலிருந்து காற்றுதான் வந்தது. அந்த நொடி சுற்றி இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர் வீரா முற்பட!
அரவிந்த் முகம் சுருங்கி போக வீராவின் நண்பர்கள் அனைவரும், “போ தம்பி… போய் முதல விசிலடிக்க கத்துக்கிட்டு வா” என்க,
அரவிந்த் அங்கே நிற்க முடியாமல் அவமானத்தோடும் கோபத்தோடும் முகம் சிவக்க விறுவிறுவென நடக்க எல்லோரின் சிரிப்பொலியும் அவனை பின்தொடர்ந்தது.
“ஒரு நிமிஷம்” என்று வீரா குரல் கொடுக்க அவள் முகத்தை ஆவேசமாய் திரும்பி பார்த்தவன்,
“என்ன அவமானபடுத்திட்ட இல்ல… மறக்க மாட்டேன்டி… இதை நான் எப்பவும் மறக்க மாட்டேன்… இந்த நாளுக்காக நீ ஒருநாள் வருத்தப்படுவ… ரொம்ப வருத்தப்படுவ வீரா… எழுதி வைச்சுக்கோ” என்று உணர்ச்சி பொங்க சொல்லியவன் மேலே அவள் சொல்வதை கேட்க கூட பொறுமையில்லாமல் அகன்றுவிட்டான்.
வீரா தன் நண்பர்கள் புறம் கோபமாய் திரும்பிவந்து, “ஏன்டா இப்படி எல்லாம் பண்ணீங்க?” என்று தவிப்பாய் கேட்க,
“நீ விடு மச்சி… அவன் எல்லாம் ஒரு ஆளா… சரியான காமெடி பீஸ்” என்று சொல்லிவிட்டு அவர்கள் கல்லூரியை நோக்கி முன்னேறி நடக்க,
வீராவிற்கு அரவிந்த் கோபமாய் பேசிவிட்டு போனதை அத்தனை சுலபமாய் எடுத்து கொள்ள முடியவில்லை. மனதில் ஆழமாய் ஓர் நெருடல்!
வாழ்க்கையில் நாம் செய்யும் சிறு தவறுகள்தான் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
திரௌபதி செய்த சின்ன சின்ன அவமானங்களுக்காக துரயோதனன் அவள் மீது குரோதம் கொண்டு அதே அவமானங்களை அவளுக்கு பன்மடங்காய் திருப்பி கொடுத்தான்.
அவள் பெண்ணாய் பிறந்ததினால் உண்டான சாபகேடு அது!
வீராவும் அதில் விதிவிலக்கல்லவே!
**********
சாரதி அலுவலகம்
சாரதி தன் அறையில் அமர்ந்து கொண்டு, “என்ன சைமன் ? அந்த அரவிந்தை பாஃலோ பண்ணியா?!” தீவிரமான முகபாவத்தோடு கேட்க,
“அவனெல்லாம் வெத்து பீஸு சார்… அவன் போய் உங்களுக்கு எதிரால்லாம்” என்று அலட்சியமாய் உரைத்தான்.
“அப்படியெல்லாம் யாரையும் அசால்ட்டா நினைக்க கூடாது” சாரதி சாய்வாய் அமர்ந்து கொண்டு செல்ல,
“இல்ல சார்… அவன் ஏதோ ஒரு பொண்ணு பின்னாடி லவ் பண்ணி சுத்திட்டிருக்கான்… அந்த பொண்ணு இவனை திரும்பி கூட பார்க்க மாட்டிறா” என்றான்.
“அப்படியா? இவனை திரும்பி கூட பார்க்க மாட்டிறாளா?! என்ன பெரிய லண்டன் மகாராணியா?!”
“அது ஒரு லோ க்ளாஸ் பொண்ணு சார்…”
“ஆச்சர்யமா இருக்கு… அவ இவனை திரும்பி பார்க்க மாட்டிறாளா?” பணம் மட்டுமே எல்லாவற்றிற்கும் பிரதானம் என நினைக்கும் சாரதிக்கு இது வியப்பான விஷயம்தான்.
சாரதி ஆழமான யோசனையில் மூழ்கிட சைமன் அப்போது, “ஆமா சார்… அவ இவனை கண்டுக்கல… அதனால் பார்ட்டி இரண்டு நாளா பார்ல குடிச்சிட்டு மட்டையாய் கிடக்கிறான்… அவனை பாஃலோ பண்ணதே கிட்டதட்ட வேஸ்டு” என்றான்.
“உம்ஹும் எதுவும் வேஸ்டு இல்ல… எல்லா மேட்டரையும் நமக்கு லாபம் வர மாதிரி மாத்திக்கனும்”
“எப்படி சார்?”
“பையன் மேட்டரை அப்பாகிட்ட வத்தி வைச்சிருவோம்… “
“அதனால நமக்கென்ன சார் லாபம்” சைமன் குழப்பமாய் கேட்க,
“நாராயணசுவாமி ரொம்ப ஸ்டேட்டஸ் பார்க்கிற ஆளு சைமன்… பையன் ஒரு லோ க்ளாஸ் பொண்ணு பின்னாடி சுத்றான்னு தெரிஞ்சா மனிஷன் காண்டாயிடுவாரு… அப்புறம் அப்பனுக்கும் பிள்ளைகிடையில பத்திக்கும்… நாம அந்த நெருப்பில குளிர்
காய்வோம்… ஆல்ரெடி அவங்க பக்கம் பிஸினஸ் டல்லா இருக்கு…. இந்த பிரச்சனையில நாராயணசுவாமிக்கு பிஸ்னஸை கவனிக்க முடியுமா என்ன?” என்று சாரதி கேட்டு சூட்சமமாய் நகைக்க,
எல்லாவற்றிலும் லாப கணக்கிடும் தன் முதலாளியை சற்றே வியப்பாய் பார்த்தான் சைமன்!
********
சாரதியின் திட்டம் சரியாகவே வேலை செய்தது.
இந்த விஷயம் நாராயணசுவாமிக்கு தெரிந்த மறுகணம் அரவிந்தின் வீட்டில் பெரும் போர்களமே வெடிக்க,
மகனிடம் ரொம்பவும் கண்டிப்பாகவும் கோபமாகவும் பேசினார்.
இதனால் மகனுக்கும் தந்தைக்கும் இடையில் வாக்குவாதம் முற்ற, சாரதாதான் அவர்கள் இருவரையும் சமாதான நிலைக்கு கொண்டுவந்தார்.
“சொல் பேச்சு கேளு கண்ணா… அப்பா இப்ப இருக்கிற நிலைமையில நீ அவர்கிட்ட இப்படி வாக்குவாதம் பன்றது சரியில்ல” என்று பொறுமையாக எடுத்துரைக்க,
“இப்ப நான் என்னதான் பண்ணனும்” கோபம் குறையாமல் கேட்டான் அரவிந்த்!
“உனக்கு எக்ஸேம்ஸ்தான் முடிஞ்சிடுச்சு இல்ல… கொஞ்ச நாளைக்கு நீ போய் உங்க அக்கா வீட்டுக்கு போய் இருந்துட்டு வாயேன்! அதுக்குள்ள நான் உங்க அப்பாவை சமாதானப்படுத்திடுறேன்” என்க,
“என்னம்மா” என்று சலித்து கொண்டான் அரவிந்த்!
“ப்ளீஸ் டா கண்ணா! அம்மாவுக்காக” என்று சூட்சமமாய் பேசி சாரதா மகனை ஒருவாறு பணிய வைத்துவிட்டார்.
அவனும் தன் அம்மாவின் வார்த்தைக்காக வெளிநாட்டில் உள்ள தன் தமக்கையின் வீட்டுக்கு செல்ல சம்மதித்துவிட்டான்.
இதன் காரணத்தினால் வீரா அரவிந்தின் தொல்லையில் அப்போதைக்கு விடுதலை பெற்றிருந்தாள்.
இப்படியே சில மாதங்கள் கடந்துவிட, அவள் வாழ்வில் அதுவரை எல்லாமே சுமுகமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
அந்த மோசமான நாள் அவள் வாழ்வில் வரும் வரை…