vkv 15
vkv 15
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 15
வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த சுதாகரன் தமிழ்ச்செல்வனின் எண்ணை தொலைபேசியில் அழைத்து விட்டுக் காத்திருந்தான்.
“சொல்லுப்பா சுதா, என்ன விஷயம்?” உடனேயே லைனுக்கு வந்தார் தமிழ்ச்செல்வன்.
“மாமா, நான் ஒன்னு சொல்லுவேன், நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது.” தயக்கத்துடன் வந்தது சுதாகரனின் குரல்.
“நான் எதுக்குப்பா உன்னை தப்பா எடுக்கப்போறேன். எது வேணாலும் மாமா கிட்ட சுதா தயங்காம பேசலாம்.”
“மாமா… கல்யாணத்தை கொஞ்சம் சீக்கிரமா பண்ணிடலாமா?”
“பண்ணிடலாமேப்பா, இதை சொல்லத்தான் இவ்வளவு தயக்கமா?”
“இல்லை மாமா, பெரியவங்க உங்களுக்கு எப்ப பண்ணனும்னு தெரியும், இருந்தாலும் என் மனசுக்கு கொஞ்சம் சீக்கிரமா பண்ணுறது நல்லதுன்னு தோணுது.”
“ஏம்பா ஏதாவது பிரச்சனையா?”
“இல்லையில்லை, பிரச்சினை ஒன்னும் இல்லை. ஆனாலும் தாமதமாக ஆக பிரச்சினை வந்திடுமோன்னு பயமா இருக்கு மாமா.”
“என் தரப்புல எந்தப் பிரச்சினையும் இல்லை சுதா. எம் பொண்ணு கல்யாணத்தைப் பாக்க நான் ரொம்பவே ஆவலா இருக்கேன். ஆனா, நம்ம வழமைப் படி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தான் பொண்ணு கேட்டு வரனும்.”
“கட்டாயம் மாமா, நான் இன்னைக்கே வீட்டுல பேசுறேன்.”
“பாத்து சுதா, யாரு மனசும் காயப்பட்டிரக் கூடாது. உங்க கல்யாணம் எல்லாரோட ஆசிர்வாதத்தோடயும் தான் நடக்கனும். புரியுதாப்பா?”
“சரி மாமா.” பேச்சை அத்தோடு முடித்த சுதாகரன் வீட்டிற்குள் போய் ஒரு நோட்டம் விட்டான். அம்மாவும், அப்பாவும் டீ வி பார்த்துக் கொண்டிருந்தார்கள். மகேஷ் லாப்டாப்பில் மூழ்கி இருந்தான்.
“பாட்டி, கொஞ்சம் வெளியே வர்றீங்களா, நான் எல்லார் கூடவும் கொஞ்சம் பேசணும்.” பாட்டியின் ரூம் நோக்கி குரல் கொடுத்தான் சுதாகரன். எல்லோர் பார்வையும் சுதாகரனை நோக்கித் திரும்ப,
“அம்மா, டீ வி யைக் கொஞ்சம் ஆஃப் பண்ணுங்க, மகேஷ் நீயும் தான்.”
“என்னண்ணா, என்ன பேசப்போற?”
“இரு மகேஷ், பாட்டியும் வரட்டும்.” அனைவரும் பொறுமையாக காத்திருக்க, சோஃபாவில் வந்து அமர்ந்தார் காந்திமதி.
“என்ன சுதா, பீடிகை பலமா இருக்கு. அப்பிடியென்ன பேசப்போறப்பா?” பிரபாகரன் புன்னகையோடு கேட்க,
“பெரியவங்க யாரும் பேசுற மாதிரி தெரியலைப்பா, அதனால நானே என் கல்யாண விஷயத்தைப் பத்தி பேசலாம்னு முடிவெடுத்துட்டேன்.” சுதாகரன் சொன்னதும் காந்திமதியின் முகத்தில் ஒரு எச்சரிக்கை உணர்வு வந்தது.
“சொல்லுறதைப் பாத்தா பொண்ணு ரெடி போல தெரியுதே சுதாகரா.” சொன்ன பாட்டியை தீர்மானமாகப் பார்த்தான் சுதாகரன்.
“ஆமா பாட்டி, தமிழ் மாமா பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.” மின்னாமல், முழங்காமல் காந்திமதியின் தலையில் இடி இறங்கியது. முகம் இறுக சற்று நேரம் அமர்ந்திருந்தவர்,
“முடிவே பண்ணிட்டயா சுதாகரா?” என்றார்.
“ஆமா பாட்டி, அதுல எந்த மாற்றமும் இல்லை.” உறுதியாக வந்தது சுதாகரனின் பதில். யாரும் எதுவும் பேசவில்லை. மகேஷ் கூட வாயைத் திறக்காமல் அமைதியாகப் பார்த்திருந்தான். பாறை போல உட்கார்ந்திருந்த காந்திமதி சற்று நேரத்தில் தன்னை திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார்.
“உன் கல்யாணம் உன் இஷ்டப்படி தான் நடக்கனும் சுதாகரா, அதை நான் மறுக்கலை. ஏன்னா இதுக்கு முன்னாடியும் நான் சொன்னதை யாரும் கேக்கலை. அதுக்காக என்னால கண்டவங்க வாசப்படியை எல்லாம் மிதிக்க முடியாது. மண்டபத்துக்கு உன் கல்யாணத்தைப் பாக்க வர்றேன். வேற எதுக்கும் என்னை எதிர்பாக்க வேணாம்.” நிதானமாக சொல்லி முடித்தவர், தன் ரூமுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.
“என்னண்ணா, இப்பிடி சொல்லிட்டு போறாங்க?”
“அவங்களுக்கு மதுவைப் பிடிக்காதில்லையா? அதனால இப்பிடிப் பேசுறாங்க. விடு, விட்டுப் பிடிக்கலாம். அப்பா நீங்க என்ன சொல்லுறீங்க?”
“நான் என்னத்தை தனியா சொல்லிரப் போறேன். உங்கம்மா என்ன சொல்லுறாளோ அப்பிடியே செஞ்சிரலாம்.” சுதாகரன் குந்தவியை நிமிர்ந்து பார்க்க,
“என்னதான் அவங்க ஒதுங்கிப் போனாலும் நம்ம அப்பிடியே விட்டுரக் கூடாது சுதா. பெரியவங்க ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கனும். இப்போ பேசினா சரியா வராது, இருந்தாலும் அவங்களை நீ சமாதானப் படுத்து சுதா.”
“ம்… சரிம்மா.” சுதாகரன் போவதையே பார்த்திருந்த குந்தவி, ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்தார். கை தானாக இளமாறனின் நம்பரை அழுத்தியது.
“சொல்லு குந்தவி.”
“மாறா, சுதா இன்னைக்கு சட்டுன்னு கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டான்.”
“அப்பிடியா? உங்க மாமியார் இருந்தாங்களா?”
“ம்… எல்லாரும் இருக்கும் போதுதான் பேசினான். ஆனா அந்தம்மா ஆச்சர்யமா இன்னைக்கு அமைதியாக இருந்தாங்க மாறா.”
“அப்பிடியா? நம்ப முடியலையே. தமிழோட பொண்ணைத் தான் சுதா கட்டிக்கப் போறான்னு தெரிஞ்சும் அந்தம்மா அமைதியா இருக்குன்னா கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.”
“எனக்கும் அது தான் பயமா இருக்கு மாறா. இந்தம்மா எதுக்கு பதுங்குதுன்னு தெரியலையே.”
“பரவாயில்லை விடு பாத்துக்கலாம். அப்பிடி என்னத்தைப் பண்ணிடப் போறாங்க? சுதா மேல தன்னோட கோபத்தை காட்ட முடியாது இல்லையா, அது அத்தனையையும் சேத்து வெச்சு உமா மேல கொட்டுவாங்க.”
“எனக்கும் அதுதான் பயமா இருக்கு மாறா. அந்தப் பொண்ணை இவங்க நோகடிச்சிருவாங்களோன்னு கஷ்டமா இருக்கு. அப்பிடி ஏதாவது நடந்தா ஆராதனா முகத்துல நான் எப்பிடி முழிப்பேன்?”
“இங்கப் பாரு குந்தவி. நீ எதுக்கு நெகடிவ்வா நினைக்குறே? நீயும் அந்த வீட்டுல தானே இருக்க? உமாவை இந்தம்மா அண்டாம நீ பாத்துக்கோ. நீ அந்த வீட்டுக்கு போகும்போது உன்னோட நிலமை வேறே. உனக்காகப் பேச அங்க யாரும் இல்லை. இப்போ உமாக்கு ஒன்னுன்னா தட்டிக் கேக்க நீ இருக்க, கவலைப்படாதே. உமாக்கு நீதான் மாமியார், இந்தம்மா இல்லை புரியுதா?”
“நீ சொல்றதும் சரிதான் மாறா. இத்தனை வயசுக்கு மேலேயும் இந்தம்மாவை பாத்து பயப்பட வேண்டி இருக்கு.”
“சரி விடு, சண்டை போடாம என்னமாவோ ஒத்துக்கிட்டாங்களே, அதுவே பெரிய விஷயம்.”
“அதைச் சொல்லு, சரிப்பா நீ தூங்கு. நான் ஆராதனாகிட்ட இது சம்பந்தமா நாளைக்கு பேசுறேன்.” காலம் வைத்திருக்கும் விந்தைகளை அறியாமல் அழைப்பை துண்டித்தார் குந்தவி.
——————————————————————-
குந்தவியும், பிரபாகரனும் தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு வந்திருந்தார்கள். சிதம்பரம் ஐயாவும் வீட்டில் இருக்கும் நேரமாகப் பார்த்து வந்திருந்தார்கள். எல்லோரும் வீட்டின் வரவேற்பறையில் கூடி இருக்க,
“ஐயா, வீட்டுக்கு நீங்க பெரியவங்க என்ற முறையில உங்ககிட்ட பேசத்தான் நாங்க வந்திருக்கோம்.” பவ்வியமாகப் பேசினார் பிரபாகரன்.
“அப்பிடியாப்பா, தாராளமா பேசுங்க. என்ன விஷயம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
“ஐயா, நம்ம குடும்பங்களுக்கு இடையில இருக்கிற நட்பு இன்னைக்கு நேத்து வந்தது இல்லை. அது நட்போட மட்டும் போயிராம உறவா மாறனும்கிறது எங்களோட ஆசை ஐயா.” பிரபாகரன் சொல்லி முடிக்கவும், தமிழரசியை திரும்பிப் பார்த்தார் சிதம்பரம். அவர் முகத்திலும் சின்னதொரு அதிர்ச்சி தெரிந்தது.
“ம்…”
“ஐயா, இது எங்க தகுதிக்கு மீறின ஆசையா இருக்கலாம்…” சிதம்பரம் ஐயாவின் பாரம்பரியப் பின்புலம் தெரிந்த பிரபாகரன், தனது தொழில் தனக்குக் கொடுத்த அந்தஸ்தை விட்டிறங்கி மிகவும் மரியாதையாகப் பேசினார்.
“இல்லை தம்பி, நீங்க எவ்வளவு பெரிய டாக்டர். நீங்க இப்பிடிக் கேக்குறது சந்தோஷமாகத்தான் இருக்கு. இருந்தாலும் சட்டுன்னு நான் எப்பிடி முடிவு சொல்லுறது. பொண்ணைப் பெத்தவங்களையும் ஒரு வார்த்தை கேக்கணும் இல்லையா?” சிதம்பரம் தமிழ்ச்செல்வனின் முகம் பார்க்க,
“அப்பா, உங்களுக்கும் அம்மாவுக்கும் பிடிச்சிருந்தா நீங்க சம்மதம் சொல்லிருங்க.” தமிழின் குரலில் எங்களுக்கு இதில் சம்மதமே என்ற அறிவிப்பு இருந்தது. சிதம்பரம் தன் மனைவியின் முகத்தைப் பார்க்க அதிலும் சம்மதத்தின் சாயலே தெரிந்தது. கொஞ்சம் நிதானமாக சிந்தித்தவர்,
“சரிப்பா பிரபாகரா, எங்களுக்கு இதுல முழு சம்மதம். எங்க பேத்தி சந்தோஷமா இருக்கனும், அதை விட வேற என்ன வேணும் எங்களுக்கு?” சொல்லி முடித்த சிதம்பரத்தின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் பிரபாகரன்.
“ரொம்ப நன்றி ஐயா, சிதம்பரம் ஐயா வீட்டுல பொண்ணு எடுக்க நாங்க குடுத்து வெச்சிருக்கனும்.” உணர்ச்சி மேலிடப் பேசினார் பிரபாகரன்.
“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதப்பா. நல்ல விஷயத்தை தாமதிக்காம, சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து நிச்சயதார்த்தத்தை நடத்திரலாம். என்ன நான் சொல்லுறது?”
“கண்டிப்பா பண்ணிடலாம் ஐயா, இன்னும் ஒரு பத்து நாள் கழிச்சு நல்லதா ஒரு தேதி குறிச்சு குடுத்திருக்காங்க. உங்களுக்கு சம்மதம்னா அதிலேயே நிச்சயதார்த்தம் பண்ணிடலாம்.”
“அப்பிடியா, எல்லா வேலைகளையும் முடிக்க பத்து நாள் போதுமா தமிழ்?”
“தாராளமா போதும்பா, நம்ம மண்டபம் அன்னைக்கு ஃப்ரீயாத்தான் இருக்கு. அதனால பிரச்சினை இல்லை.”
“அப்போ சரிப்பா, ஆக வேண்டியதைப் பாருங்க.” புன்னகை முகமாகச் சொல்லி விட்டு சிதம்பரம் உள்ளே போக, அந்த இடமே கலகலப்பானது.
—————————————————————————
சிறுவாணி அணைக்கட்டுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள் இளமாறனும், விசலாட்சியும். நீர் ‘ஹோ‘ வென பேரிரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்தது. நான்கு மதகுகளும் முழுவதுமாக திறந்திருக்க நீர்த்திவலைகள் சிந்திச் சிதறியது. சுற்றிவர கண்ணுக்கெட்டிய தூரம் வரை இருந்த பச்சைப் பசேலும், உடலை சிலிர்க்கச் செய்த நீரின் ஸ்பரிசமும் விசாலாட்சியை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது.
சற்றுத் தள்ளி நின்றிருந்த மாறனைப் பார்த்து புன்னகைக்கவே, அவரிடமும் இருந்து அதே ரியாக்ஷ்ன். மன அமைதிக்காக இருவருமே அங்கு கிளம்பி வந்திருந்தார்கள். விசாலாட்சியின் பதவியின் காரணமாக அவரால் எங்கும் சட்டென்று போக முடியவில்லை. இளமாறனும் விசாலாட்சியின் வீட்டிற்கு போவதை அத்தனை தூரம் விரும்பவில்லை. அதனால் இருவருமாக கிளம்பி வெளியே வந்திருந்தார்கள்.
“விசாலாட்சி, அந்த அபிமன்யு…” ஆரம்பித்தவரை முடிக்க விடாமல் இடையில் குறுக்கிட்டார் விசாலாட்சி.
“மாறன் ப்ளீஸ், ரொம்ப நாளைக்கப்புறம் என் வேர்களை தேடி வந்திருக்கேன். இந்த இடங்களை எல்லாம் வாழ்க்கையில இன்னொரு முறை பாக்க மாட்டோமான்னு ஏங்கின காலங்களும் உண்டு. நான் ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். இப்ப போய் எதுக்கு அபிமன்யு பத்தின பேச்சு? ம்…” விசாலாட்சியின் குரலே சொன்னது அவர் எத்தனை தூரம் நெகிழ்ந்து போயிருக்கிறார் என்று.
“சரிம்மா, வேற எதுவும் நான் பேசல்லை. உனக்கு என்னெல்லாம் தோணுதோ அதையெல்லாம் பேசு, நான் இன்னைக்கு முழுதும் கேக்குறேன், சரியா?” சிரித்தபடி சொன்னார் இளமாறன்.
“எனக்கு அது பத்தாதே மாறன்?”
“சரி, அப்போ இன்னொரு நாளைக்கு இதே போல வேறொரு இடத்துக்கு போவோம். அப்போவும் நீயே பேசு, நான் கேக்குறேன்.” இலகுவாக வழி சொன்னார் மாறன்.
“ஏன் மாறன், எங் கூடவே இருக்கனுமுன்னு உங்களுக்கு தோணலையா?” எந்தவித பிசிறும் இல்லாமல் வந்தது விசாலாட்சியின் கேள்வி.
“விசாலி…!” வாயடைத்துப் போனார் இளமாறன்.
“என் மனசுல தோணினதை சட்டுன்னு கேட்டுட்டேன் மாறன். தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப நாளைக்கு மனசுக்குள்ள பூட்டி வச்சிருக்க முடியலை.” குற்ற உணர்வோடு அவர் சொல்ல,
“இல்லையில்லை, தப்பா எல்லாம் எடுத்துக்கலை.” என்றார் மாறன்.
“அப்போ சரின்னு ஏத்துக்கிறீங்களா?” விசாலாட்சியின் அணுகுமுறையில் சட்டென்று சிரித்தார் இளமாறன்.
“எதுக்கு இந்த அவசரம் விசாலி?”
“ஆமா, உங்களுக்கு முப்பது, எனக்கு இருபத்தைஞ்சு பாருங்க, நிறுத்தி நிதானமா எல்லாம் பண்ண?” சிரித்தபடி சொன்னார் விசாலாட்சி.
“அதுதான், அதேதான் என்னைக் குழப்புது விசாலி. இத்தனை வயசுக்கு மேல இதெல்லாம் சரி வருமா?”
“சோ, வயசுதான் உங்க பிரச்சினை நானில்லை, அப்பிடித்தானே மாறன்?” கண்களில் ஆசையைத் தேக்கி, அந்தக் கலெக்டர் தனக்காக ஏங்குவது இளமாறனை ஏதோ பண்ணியது. மெதுவாக நடந்து அவர் பக்கத்தில் போனவர், அந்தக் கண்களையே பார்த்து நின்றார். பார்வைகள் கலந்து நின்றன.
வில்லோடு அம்பு ரெண்டு
கொல்லாமல் கொல்லுதே…
பெண் பாவைக் கண்கள் என்று
பொய் சொல்லுதே…
காரின் கீயை விசாலாட்சியின் கையில் கொடுத்தவர்,
“என்னால இப்போ ட்ரைவ் பண்ண முடியாது விசாலி. ஊர்ல எங்க வீடு உனக்குத் தெரியுமா?” என்று கேட்க, இல்லையெனத் தலையாட்டினார் விசாலாட்சி.
“பரவாயில்லை, ஊர் வந்ததும் நான் வழி காட்டுறேன். இப்போ போகலாம்.” சொன்னவர் மடமடவென காரை நோக்கிச் சென்று அமர்ந்து கொண்டார். குழப்பத்துடன் அவரைப் பின் தொடர்ந்தார் விசாலாட்சி.
அதேநேரம்… அந்த black Audi இல்…
சுதாகரனின் அணைப்பில் இருந்தாள் உமா. திடீரென கால் பண்ணிய அத்தான், ‘ஹாஸ்டலுக்கு வெளியே நிற்கிறேன், சீக்கிரமாகக் கிளம்பி வா‘ என்றதும் ஆச்சரியப் பட்டுப்போனாள் உமா. இரண்டு நாட்களுக்கு முன்பும் இதுபோல கிளம்பி வா என்றார். இன்றும் அதே போல கிளம்பி வந்திருக்கிறார். இந்த அத்தானுக்கு என்ன ஆனது? அத்துமீறிய சுதாகரனின் கரங்கள் அவளை நிஜத்துக்கு கொண்டு வர, அதைத் தடுத்து நிறுத்தியவள்,
“அத்தான்…!” என்றாள் எச்சரிக்கும் தொனியில். சற்றே முகம் சிவந்து போக அவள் கன்னத்தில் கன்னம் வைத்து உரசியவன்,
“இன்னும் பத்து நாளைக்கப்புறம் இந்த அதட்டலெல்லாம் சரி வராது மது.” என்றான் சரசமாக.
“ஏன், பத்து நாளைக்கு அப்புறம் என்னவாம்?” என்றாள் உமா அலட்சியமாக. உமாவிற்கு தகவல் சொல்ல விடாமல் அனைவரையும் தடுத்து விட்டு, தானே கிளம்பி வந்திருந்தான் சுதாகரன். அவள் முகத்தை தன் இரு கைகளிலும் ஏந்தி அவள் கண்களுக்குள் பார்த்தவன்,
“இன்னும் பத்து நாள்ல நமக்கு நிச்சயதார்த்தம் வெச்சிருக்காங்க மது.” என்றான். உமாவிற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை.
“அத்தான்!” என்றாள் அதிர்ச்சியாக.
“எ… என்ன… சொல்லு… றீங்க?” வார்த்தைகள் தந்தி அடித்தது.
“எதுக்கு இத்தனை ஆச்சரியம் மது? என்னைக்கு இருந்தாலும் இது நடக்க வேண்டியதுதானே?” அதற்குள் தன்னை சுதாகரித்துக் கொண்டவள்,
“இத்தனை சுலபமா நடக்கும்னு எதிர்பார்க்கலை அத்தான்.” என்றாள்.
“ஏன் அப்படி?” சுலபமாக சுதா கேட்க, இதற்கு என்ன பதில் சொல்லுவது என்று தடுமாறினாள் உமா. அவளின் பதட்டத்தை உணர்ந்தவன்,
“மது… நம்ம வாழ்க்கையில மறக்க முடியாத சந்தோஷமான நேரம் இது. இப்போ எதுக்கு கண்டதையும் நினைச்சு குழப்பிக்கிறே? நம்ம உலகத்துல இப்போ நீயும், நானும் மட்டும் தான், புரியுதா?” அவள் முகத்தை இன்னும் தன்னை நோக்கி இழுத்தவன், கரகரப்பாக பேச, பேச்சற்று அமர்ந்திருந்தாள் உமா.
“அன்னைக்கு என்ன சொன்னே?”
“எப்போ? என்ன சொன்னேன் அத்தான்?”
“அம்மணி இப்போ என் பக்கத்துல இருந்து கருணை காட்டினா எப்பிடி இருங்கும்னு நான் கேட்டதுக்கு நீ என்ன சொன்ன மது?” ஞாபகம் வந்தவள், அவனை விட்டு விலகப் பார்க்க, அவளை விலக விடாமல் அழுத்திப் பிடித்தவன்,
“எங்க ஓடப் பாக்குறே? சொல்லு, அன்னைக்கு என்ன சொன்னே?”
“ஐயோ, அத்தான் நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை…”
“ஆ… இந்த மழுப்புற வேலையெல்லாம் இங்க வேணாம். நீ அன்னைக்கு சொன்னதை திருப்பிச் சொல்லு.” விடாப்பிடியாக நின்றான் சுதாகரன.
“அப்பிடிச் சொன்னா எப்பிடி இருக்கும் அத்தான்னு சொன்னேன்.”
“ம்… இது, இதுக்குத்தான் அத்தான் வெயிட்டிங் மது. சொல்லு, இப்போ காட்டட்டுமா எப்பிடி இருக்கும்னு?”
“ம்ஹூம்… இல்லையில்லை… வேணாம் அத்தான்.” விட்டால் அழுது விடுவாள் போல் இருந்தது உமாவின் குரல்.
“ஆமா, நீங்க வேணாம்னு சொன்னா தள்ளிப் போகத்தான் நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் பாரு.” அவளை முழு வேகத்தில் சுதாகரன் தாக்க, அவன் இதழ்கள் சொன்ன புதுக் கதைகளில் கொஞ்சம் மருண்டு போனாள் உமா.
அதேநேரம்… நல்லூரில்…
அவ்வளவு நேரமும் அமைதியாக காரை ட்ரைவ் பண்ணிக் கொண்டிருந்த விசாலாட்சி, ஊர் நெருங்கவும் ஒரு ஓரமாக காரை நிறுத்தினார்.
“என்னாச்சு விசாலி?”
“மாறன், இதுக்கு மேல என்னால ட்ரைவ் பண்ண முடியாது. ஊரைப் பாக்குறப்போ என்னென்னவோ ஞாபகங்கள் முட்டி மோதுது.” கண்கலங்கச் சொன்னவர், ஸ்டியரிங்கில் முகம் புதைத்துக் கொண்டார். மாறனின் கை அவர் தலையை மெதுவாக வருடிக் கொடுத்தது. இருவரும் இடம் மாறி அமர, இப்போது இளமாறன் காரை ஓட்டினார்.
இளமாறனின் வீடு அன்று பார்த்தது போல் அப்படியே இருந்தது. புதிதாக அடிக்கப் பட்டிருந்த பெயிண்டும், அவரது தேவைக்கென வாங்கப் பட்டிருந்த ஒன்றிரண்டு புதிய பொருட்களையும் தவிர அதே ஓட்டு வீடு. மாறனின் அம்மா முன்பு நடத்திய கடையைக் கூட உடைக்காமல் அப்படியே வைத்திருந்தார் இளமாறன்.
“வா விசாலி, இதுதான் மாறனோட பங்களா. வெல்கம்.” என்றார் கேலியாக. புன்னகைத்த படி உள்ளே நுழைந்தார் விசாலாட்சி. பூஜை அறையின் கதவைத் திறந்தவர், உள்ளே மாட்டியிருந்த தன் பெற்றோரின் புகைப் படங்களைக் காட்டி,
“இது என்னோட அப்பா, அம்மா” என்றார். அந்த அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே போன விசாலாட்சி, அந்த ஃபோட்டோக்களை ஆழ்ந்து பார்த்தார். மாறனின் அப்பாவை அவர் பார்த்ததில்லை. ஆனால் அம்மாவின் முகம் கொஞ்சம் பரிட்சயமானது போல் தெரிந்தது.
“வீட்டுல ரெண்டு ரூம்தான் விசாலி. ஒன்னு அம்மா, அப்பாவோடது. இன்னொன்னு என்னோடது. அவங்க ரெண்டு பேரும் போனதுக்கு அப்புறம் நான் அதிகமா இந்த ரூமுக்குள்ள வரமாட்டேன். சமையலுக்கு வர்ற அம்மாதான் இந்த சாமிப் படங்களையெல்லாம் இங்க மாட்டி சிலநேரம் விளக்கேத்துவாங்க.” கலங்கிய குரலில் மாறன் சொல்லி முடிக்க, அவரைத் திரும்பிப் பார்த்தார் விசாலாட்சி. அந்தக் கண்களில் நிராசை வழிந்தது.
படங்களில் மாட்டியிருந்த காய்ந்த மலர்ச்சரங்களை மடமடவென அகற்றியவர், அந்த ரூமின் மூலையில் இருந்த பழைய கட்டிலில் கிடந்த துண்டை எடுத்தார். புடவைத் தலைப்பால் மூக்கை மூடிக்கொண்டு அங்கிருந்த படங்கள் அத்தனையையும் அழுந்தத் துடைத்தார். தூசும், தும்பும் பறக்க மாறனுக்கு நிஜமாகவே தும்மல் வந்தது. திரும்பி அவரை ஒரு முறை முறைத்தவர், தன் வேலையைத் தொடர்ந்து செய்ய,
“சாரிம்மா.” என்றார் இளமாறன், ஒரு அசட்டுச் சிரிப்புடன். க்ளீன் பண்ணி முடித்தவர் அங்கிருந்த எண்ணெயை விளக்கில் ஊற்றி அதைப் பற்ற வைத்தார்.
“தினமும் காலையில கொஞ்சம் பூ வாங்கி இந்தப் படத்துக்கெல்லாம் மாட்டனும், புரியுதா?” அதிகாரமாக வந்தது விசாலாட்சியின் குரல்.
“ம்… சரி விசாலி.” பவ்வியமாகச் சொன்னவரை முறைத்துக் கொண்டே வெளியே வந்தார்.
“ஏங்க, மிஸ்டர் தமிழ்ச்செல்வன் உங்களுக்கு சம்பளம் குடுக்க மாட்டாரா?”
“என்னம்மா இப்பிடிக் கேட்டுட்டே! அவன் மில்லுல எனக்கு பார்ட்னஷிப்பே குடுத்திருக்கான்மா.”
“மாசா மாசம் எடுக்கிற சம்பளத்தை என்ன பண்ணுவீங்க?”
“பாதியை அப்பிடியே ஆசிரமத்துக்கு குடுத்திருவேன். என் தேவை போக மிச்சத்தை பேங்குல போட்டிருவேன்.”
“அது எதுக்கு பேங்குல? அதையும் யாருக்காவது குடுக்க வேண்டியதுதானே?” அவரின் கிண்டல் புரியாமல் பதில் சொல்ல ஆரம்பித்தார் இளமாறன்.
“அதெப்பிடி விசாலி, எனக்கு வயசு போன காலத்துல கொஞ்சம் சேமிப்பு வேணாமா?”
“அட பரவாயில்லையே, அந்த நினைப்பெல்லாம் இருக்கா உங்களுக்கு? நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?”
“இல்லையில்லை, நீ தாராளமா சொல்லலாம்.”
“நான் நினைக்கிறேன், அநேகமா இந்த வீட்டைப் பாத்து பயந்துதான் ஒரு பொண்ணும் உங்களைக் கட்டிக்க சம்மதிச்சிருக்க மாட்டாங்க.” சீரியஸாகச் சொன்ன விசாலாட்சியைப் பார்த்து வாய் விட்டுச் சிரித்தார் இளமாறன். அங்கிருந்த பழைய அலமாரியைத் திறந்தவர், அதிலிருந்த தனது பேங்க் புக்கை எடுத்து விசாலாட்சியிடம் நீட்டினார்.
“என்னோட இத்தனை வருஷ சேமிப்பு, நீ என்ன வேணும்னாலும் பண்ணு. இந்த வீட்டைத் திருத்து, திருத்தாத, அது உன்னோட இஷ்டம். ஆனா எப்போ இங்க வந்து இருக்கப் போறே அதை மட்டும் சொல்லு.” மாறனின் வார்த்தையில் ரொம்பவே ஆச்சரியப் பட்டவர்,
“அடடா, ஐயாவுக்கு இப்போதாவது இதைக் கேக்கத் தோணிச்சே, அந்த மட்டுக்கு நான் தப்பிச்சேன். இன்னும் கொஞ்ச நேரம் போயிருந்தா இதை நானே கேட்டிருப்பேன்.” விசாலாட்சி நொடித்துக் கொள்ள,
“என்ன கலெக்டரம்மா, வாய் ரொம்பவே நீளுது. மாறனைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. காலேஜ்ல ஐயாவுக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் தெரியுமா?”
“ம்… நம்ப முடியலையே!”
“வேணும்னா தமிழ்கிட்ட இல்லாட்டி குந்தவிகிட்ட கேட்டுப் பாருங்க, அப்பத் தெரியும் நம்ம வீரதீரமெல்லாம்.”
“நம்பிட்டேன். அது சரி… இப்போ பசிக்குதே, அதுக்காவது ஏதாவது குடுப்பீங்களா? இல்லை அதுவும்…”
“ஐயையோ, சமையலுக்கு வர்ற அம்மாக்கு ரெண்டு நாளா உடம்பு சரியில்லை விசாலி. நானே ரெண்டு நாளா கடைல தான் சாப்பிடுறேன்.” சொன்னவரை முறைத்துக் கொண்டே சமையல் கட்டுக்குள் நுழைந்தவர், அங்கிருந்த பொருட்களைக் கிண்டி ரவையைக் கண்டு பிடித்தார். சமையலறை சுத்தமாக இருந்தது.
“ஊறுகாய் இருக்கா என்ன?” இங்கிருந்தே சத்தமாகக் குரல் கொடுக்க, அவரைப் பார்த்து அசடு வழிந்தார் இளமாறன்.
“இங்கதான் எங்கேயாவது இருக்கும் விசாலி, நான் இந்தப் பக்கமே வர்றது இல்லைடா.”
“ம்… இந்த ஏரியா க்ளீனா இருக்கும் போதே அது புரிஞ்சுது.” சட்டென்று அவர் சொல்ல, புன்னகைத்தவர், தயக்கத்துடன் விசாலாட்சியின் அருகில் வந்து, அவரை நெருங்கி நின்றார்.
“என்ன பண்ணுறீங்க?”
“விசாலி, எங்கம்மா சமையல் பண்ணும் போது நான் இப்பிடித்தான் எங்கம்மா கூடவே ஒட்டிக்கிட்டு அவங்க புடவை முந்தானையை புடிச்சிக்கிட்டு அவங்க நகர்ற பக்கமெல்லாம் நானும் நகர்வேன். எங்கப்பா கூட என்னைப் பாத்து கேலி பண்ணுவாங்க.” பழைய ஞாபகத்தில் இளமாறன் கண்கலங்க, அவரைத் திரும்பிப் பார்த்த விசாலாட்சி, தன் புடவை முந்தானையை மாறனிடம் நீட்டினார். சிரித்துக் கொண்டே அதைப் பிடித்தவர், தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“அவசரத்துக்கு உப்புமா தான். தொட்டுக்க கூட ஒன்னும் இல்லை. இந்தாங்க, போய் உக்காந்து சாப்பிடுங்க.”
“அம்மா மாதிரி முந்தானையை மட்டும் குடுத்தா சரியா, எங்கம்மா எனக்கு ஊட்டி விடுவாங்க.” பிடித்த முந்தானையை விடாமல் வக்கணையாகப் பேசினார் இளமாறன்.
“ஆமா, இவரு பாப்பா பாருங்க ஊட்டி விர்றதுக்கு, மனுஷனுக்கு பசியில காது அடைக்குது.” இளமாறனின் கன்னத்தில் வேண்டுமென்றே நிமிண்டியவர், அவர் சொன்னதைச் செய்ய மறுக்கவில்லை. இருவரும் உண்டு முடிக்க, பாத்திரங்களை அள்ளி சிங்கில் போட்டவர்,
“மாறன், ஐ ஆம் டயர்ட். என்னால இதையெல்லாம் உடனே வாஷ் பண்ண…” பேசிக் கொண்டிருந்தவரை இழுத்து அணைத்தார் இளமாறன். விசாலாட்சி அதிர்ச்சியாக நிற்க, அவர் கழுத்தில் முகம் பதித்தவர் விக்கி விக்கி அழுதார்.
“மாறன்… என்னாச்சு மாறன்? ஐயையோ ஏன் அழுறீங்க? நான் சும்மாதான் உங்களை அப்பிடியெல்லாம் பேசினேன். தப்புத் தான். விளையாட்டுக்கு பண்ணினேன் மாறன்.” விசாலாட்சி பதற,
“இல்லை விசாலி, அதெல்லாம் ஒன்னும் இல்லை.” என்றார்.
“மாறன் இங்கப் பாருங்க. எதுக்கு இப்போ இந்த அழுகை?” வலுக்கட்டாயமாக அவரைத் தன்னிலிருந்து பிரித்தவர், அங்கிருந்த சோஃபாவில் அவரை அமர்த்தி தானும் அமர்ந்தார். அப்போதும் தான் பற்றியிருந்த விசாலாட்சியின் முந்தானையால் முகம் துடைத்தவர்,
“அம்மா இப்பிடித்தான், நான் என்ன சொன்னாலும் சட்டுன்னு பண்ண மாட்டாங்க. சலிச்சுக்கிட்டே தான் பண்ணுவாங்க. ஆனா அந்த சலிப்புலயும் ஒரு அன்பு தான் தெரியும். கோபம் இருக்காது.” சொன்னவர் விசாலாட்சியின் மடியில் தலை வைத்துக் கொண்டு கால் நீட்டிப் படுத்தார்.
“சரியாப் போச்சு, இப்ப தாலாட்டு பாடனுமா என்ன?”
“தெரிஞ்சாப் பாடு விசாலி, முன்னைப் பின்னே இருந்தாலும் பரவாயில்லை நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.” சட்டென்று மாறனின் வாயில் ஒரு அடி வைத்தவர்,
“பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நான் போகனும் மாறன், வந்து ரொம்ப நேரமாச்சு.” என்றார்.
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ விசாலி. அங்க போய் நீயும் தனியே தானே உக்காந்திருக்க போறே.” சொல்லிவிட்டு மெதுவாக கண்ணயர்ந்தார் இளமாறன். கலெக்டரின் புடவை முந்தானையை அப்போதும் விடவில்லை அவர்.