vkv 16

vkv 16

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 16

தமிழ்ச்செல்வன் அமைதியாக ஆற்றங்கரை ஓரம் அமர்ந்திருந்தார். நீர் சல சலவென ஓடிக் கொண்டிருந்தது. மாறன் ஏதோ பேசவேண்டும் என்று வரச்சொல்லி இருந்தார். தமிழுக்கு ஆச்சரியம் பிடிபடவில்லை. அப்படி என்ன தனிமையில் பேச அழைக்கின்றான்? மில்லில் வைத்துப் பேசுவதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை. புதிராக இருந்தது மாறனின் நடவடிக்கை. அவர் சிந்தனையைக் கலைத்தது ஃபோன்.

ஹலோ

மிஸ்டர் தமிழ்ச்செல்வன், நான் விசாலாட்சி பேசுறேன்.”

சொல்லுங்க மேடம்.”

மாறன் உங்க பக்கத்துல இருக்காரா மிஸ்டர் தமிழ்ச்செல்வன்?”

இல்லை மேடம், ஏதாவது மாறன் கிட்ட பேசுனுமா?”

இல்லையில்லை, அவர் சட்டுனு கோபப் படுவார். இதை உங்ககிட்ட சொல்லத்தான் கூப்பிட்டேன்.” தமிழ் சத்தம் வராத படி புன்னகைத்துக் கொண்டார். மாறனைப் பற்றி அவ்வளவு தூரம் மேடத்திற்கு தெரிந்திருக்கிறதா?

சொல்லுங்க மேடம்.”

மிஸ்டர் தமிழ்ச்செல்வன், டை ஃபாக்டரி மிஸ்டர் அபிமன்யூக்கு சாதகமாத்தான் முடிவாகி இருக்கு.”

…!”

என்னால முடிஞ்ச அளவு போராடிப் பாத்தேன், முடியலை. நீங்க எடுத்த முயற்சிகள் எந்தளவுல இருக்கு?”

ஊர்ப் பெரியவர்களுக்கு விளக்கமா இதனால ஏற்படப் போற சாதக, பாதகங்களை சொல்லியிருக்கோம். இளவட்டங்களுக்கு ஒரு சின்ன ஸ்கிரீன் ஏற்பாடு பண்ணி விஷுவலாவே காட்டினோம். இப்போ எல்லாருக்கும் இது சம்பந்தமான ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு மேடம்.”

வெரி குட். இப்போ என்ன செய்யுறதா உத்தேசம்?”

அப்ரூவல் கிடைச்ச விஷயம் இன்னும் யாருக்கும் அஃபிஷியலா தெரியாது. தெரிய வரும்போது அமைதியான முறையில, கலெக்டரோட சம்மதத்தின் பேர்ல நல்லூர் மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் போவாங்க.”

குட், எந்தவிதமான கலாட்டாவும் வராம பாத்துக்கோங்க. எல்லாம் அமைதியான முறையில, பப்ளிக்கை பாதிக்காத வகையில நடக்கனும்.”

கண்டிப்பா மேடம், எல்லா நடவடிக்கைகளும் என்னோட கண்காணிப்பில தான் நடக்கும். எந்த கலாட்டாவும் இருக்காது.”

தான்க் யூ மிஸ்டர் தமிழ்ச்செல்வன். இதை சொல்றதுக்கு தான் கூப்பிட்டேன். வச்சிடட்டுமா?”

கே மேடம். ரொம்ப நன்றி.” ஃபோனை அணைத்து விட்டு அமைதியாக இருந்தார் தமிழ். அபிமன்யு அத்தனை சீக்கிரத்தில் பின் வாங்க மாட்டான் என்று தான் தோன்றியது. இத்தனை தூரம் அலைந்து திரிந்து வேலை பார்த்தவன், அத்தனை சீக்கிரத்தில் விட்டுக் கொடுப்பானா என்ன?

என்ன தமிழ், அவ்வளவு பெரிய சிந்தனை?” இளமாறனின் குரல் தமிழைக் கலைத்தது.

நீ என்னப்பா இவ்வளவு சாவகாசமா வர்றே? நான் எவ்வளவு நேரமா இங்க உக்காந்துக்கிட்டு இருக்கிறது?”

சரி விடு, அதான் வந்துட்டேன் இல்லை.”

இதென்ன புதுசா இருக்கு, பேச இங்க கூப்பிட்டு இருக்கே, ம்…?”

தமிழ்உங்கிட்ட எப்பிடி சொல்றதுன்னு தெரியலை, ஆனாசொல்லாம இருக்கவும் முடியலை.”

என்னாச்சு மாறா, காலேஜ் நாட்கள்ல கூட நீ இப்பிடி பம்மினது இல்லையே?”

காலேஜ்ல சைட் மட்டும் தானே அடிச்சேன். இப்போ அதையும் தாண்டி புனிதமால்ல போகுது.” கைகள் இரண்டையும் தலைக்கு அணைவாக கொடுத்து படிக்கட்டில் சரிந்து அமர்ந்தார் இளமாறன்.

யோவ்! என்னய்யா சொல்லுற?” தமிழ்ச்செல்வன் அதிர்ச்சியின் உச்சத்தில் கத்தினார்.

ஏன் தமிழ் இப்பிடி சத்தம் போர்றே?”

நீ என்ன சொல்ல வர்றே இப்போ? தெளிவா சொல்லப் போறேயா இல்லையா?”

நீதானேப்பா எப்பப்பாரு கல்யாணம் பண்ணலை, உனக்குன்னு ஒரு துணை வேணும்னு ஏகத்துக்கு கவலைப் படுவே?”

யாரு மாறா?”

யாரா இருக்கும்னு நீ நினைக்கிறே?”

கலெக்டரா?” தமிழ் கேட்டதுதான் தாமதம், அவரைத் திரும்பிப் பார்த்த இளமாறன், லேசாகக் கண்ணடித்தார்.

அப்பிடிப் போடு அருவாளை, அடேங்கப்பா! புடிச்சாலும் புடிச்ச, ஐயா பெரிய இடமால்ல புடிச்சிருக்க. கொஞ்சம் இரு.” மாறனோடு பேசியபடி ஃபோனை எடுத்தவர், குந்தவியை அழைத்தார். இது எதையும் கவனத்தில் கொள்ளாமல் தனியொரு உலகத்தில் சஞ்சரித்தார் இளமாறன்.

குந்தவி கேட்டயா சங்கதியை?” தமிழின் குரலில் அத்தனை துள்ளல் இருந்தது

என்னாச்சு தமிழ்?” குந்தவியின் குரல் இளமாறனுக்கு தெளிவாகக் கேட்டது.

நம்ம பய செமையா மாட்டிக்கிட்டாப் போல. இப்போ மல்லாக்க படுத்துக்கிட்டு கலெக்டர் அம்மாவோட டூயட் பாடுறாரு?”

தமிழ், என்ன சொல்லுறே நீ?” ஆனந்தத்தில் குந்தவி போட்ட கூச்சல் தமிழின் காதைக் கிழித்தது.

பாரு, நாம இவ்வளவு பேசுறோம் ஐயா திரும்பியே பாக்கலை, அவரோட உலகத்துல இருக்கார். கண்ணுல காதல் வழியுது. ஹீ இஸ் ரொமாண்டிக் குந்தவி.”

ஹாஹாவிடு தமிழ், பாவம். ஏற்கனவே பய ரொம்பவே லேட். இனியும் நம்ம டிஸ்டேர்ப் பண்ணுறது நியாயம் இல்லை.”

அப்பிடீங்கிறே! சரி, அப்போ விட்டுறலாம். ஏம்பா மாறா, நான் கிளம்புறேன். நீ வர்றியா, இல்லை இப்பிடியே கனவு காணப்போறயா?” நண்பர்களின் கேலியை எதுவும் பேசாமல் அனுபவித்தார் இளமாறன்.

                                  ————————————————————

நாராயணன் அந்த வீட்டின் ஹாலில் குறுக்கும், நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். முகம் சிந்தனை வசப்பட்டிருந்தது. அருகே இருந்த சோஃபாவில் ரஞ்சனி அமர்ந்திருந்தாள். மகளின் அழைப்பின் பேரில் உடனடியாக கிளம்பி வந்திருந்தார்.

என்னம்மா பண்ணுறான் இந்த அபி? ஊர் மக்கள் எல்லாரும் சேந்து நம்ம தொழிலுக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுறாங்கன்னா, அப்பிடி என்ன கருமத்தை இவன் தொடங்கி இருக்கான்?”

நான் தான் சொன்னனேப்பா, அண்ணா என்ன பண்ணுதுன்னு எனக்கும் தெரியாது. ஆனா, அது இந்த ஊர் மக்களுக்கு பிடிக்கலை. அது சம்பந்தமாத்தான் அன்னைக்கு உமாக்காவோட அப்பா வந்து பேசினாங்க.”

ம்…” 

எல்லாத்தையும் நிறுத்துங்க தம்பின்னு சொன்னாங்கப்பா.” இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அபிமன்யுவின் கார் வந்து நின்றது. ஏதோ யோசனையாக இறங்கி வந்தவன், அப்பாவைக் காணவும்,

அப்பா, நீங்க எப்போ வந்தீங்க?” என்றான் ஆச்சரியமாக.

நான் வர்றது இருக்கட்டும், இங்க என்ன நடக்குது அபி?” அப்பா கேட்கவும் ரஞ்சனியை முறைத்துப் பார்த்தான் அபி.

அங்க என்ன முறைப்பு, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு?”

கிராமத்து ஃபூல்ஸ்பா, இடியட்ஸ் மாதிரி பிஹேவ் பண்ணுறாங்க.”

உங்கப்பனும் ஒரு கிராமத்தான் தான். பாத்துப் பேசு அபி.”

ஐயோ! நான் உங்களை அப்பிடிச் சொல்லுவேனாப்பா?”

உங்கப்பனை சொன்னதும் உனக்கு வலிக்குதில்லை. எனக்கும் அப்பிடித்தான் வலிக்கும். கிராமத்தானுங்க எல்லாம் உங்களுக்கு முட்டாளா தெரியுதா? தங்களுக்கு வரப் போற வேலைவாய்ப்பு அத்தனையையும் தூக்கி தூரப் போட்டுட்டு, எதுத்து நிக்கிறானுங்கன்னா சும்மாவா செய்றானுங்க?” 

எல்லாருமே தப்பான கண்ணோட்டத்துலேயே பாத்தா எப்பிடிப்பா? ஏன், நான் நல்ல முறையில எதையும் பண்ணக் கூடாதா?”

பண்ணுறதுக்கு வாய்ப்புகள் இருந்தா எதிர்ப்பு வராது அபி. யாரோட வயித்துலையும் அடிச்சுத்தான் சம்பாதிக்கனும்கிற நிலையில உன்னை நான் வெக்கலை. எந்த ஊரோட சாபமும் என் சந்ததிக்கு வேணாம். அதை நான் மட்டுமில்லை, உங்கம்மாவும் விரும்ப மாட்டா.”

அபி சோஃபாவில் அமைதியாக அமர்ந்து விட்டான். தமிழ்ச்செல்வன் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது. அப்ரூவல் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தவன், இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கிராமத்து மக்கள், இரண்டு முறை கத்திவிட்டு ஓய்ந்து விடுவார்கள் என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் அதை ரஞ்சனி வேறு அப்பா வரை கொண்டு போயிருக்கிறாளே.

அப்பா, இதுக்காக நிறையவே செலவு பண்ணி இருக்கேன்பா.”

என்ன? நிலம் வாங்கிப் போட்டிருக்கே, அது என்ன அழுகியா போகப் போகுது. இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சு நல்ல விலைக்கு லாபத்தோட வித்திடலாம்.”

அது மட்டும் இல்லைப்பா. கொஞ்சம் மெஷினரீஸும் வாங்கி இருக்கேன்.” மகனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார் நாராயணன். ‘இது எல்லாம் நமக்கு ஒரு காசா?’ என்ற எள்ளல் அதில் இருந்தது.

ஈகோ பாக்காதே அபி. நீ ஒரு விஷயத்தை ஆரம்பிச்சே. அதுல பின் வாங்குறது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும். ஏன்னா அதுக்காக நீ பாடுபட்டிருக்கே. ஆனா, அதோட பின் விளைவுகளை கொஞ்சம் யோசிக்கனும்பா.” நிதானமாக மகனுக்குச் சொன்னவர், அவனருகில் சென்று தலையை வருடிக் கொடுத்தார்.

எவ்வளவு சம்பாதிச்சோம் எங்கிறது முக்கியம் இல்லை அபி. எப்பிடிச் சம்பாதிச்சோம் எங்கிறதுதான் முக்கியம். இன்னைக்கு உங்கப்பா சம்பாதிச்சு வெச்சிருக்கிற அவ்வளவும் நியாயமா சம்பாதிச்சது. எம்புள்ளையும் அப்பிடித்தான் இருக்கனும். அதுதான் உடம்புல ஒட்டும்பா.” அமைதியாக சொல்லி முடித்தவர்,

ரஞ்சனி, சாப்பாடை எடுத்து வை. அபி, ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா, சாப்பிடலாம்.” சொல்லி விட்டு நகர்ந்து போனார்.

                                      —————————————————————

எல்லோரும் கிளம்பி நிச்சயதார்த்தத்திற்கு ஜவுளி எடுக்க கோயம்புத்தூர் வந்திருந்தார்கள். கடை ரெண்டு பட்டுக் கொண்டிருந்தது.

என்ன மாறா, கலெக்டருக்கும் ஒரு புடவை எடுத்திரலாமா?” குந்தவி மாறனின் காதைக் கடிக்க,

எம்பொண்டாட்டிக்கு நான் புடவை எடுத்துக்குறேன், நீ உன் வேலையைப் பாரு.” என்றார் மாறன் கடுப்பாக. வாய்விட்டுச் சிரித்தார் குந்தவி.

என்ன குந்தவி? எதுக்கு இந்த சிரிப்பு? சொன்னா நாங்களும் சேந்து சிரிப்போம் இல்லை.” ஆராதனா கேட்க,

ஐயோ! ஆராதனா, நீ உம்புருஷன் கிட்டயே கேட்டுக்கோ, வண்டி வண்டியா சொல்லுவான். என்னை வம்புல மாட்டி விடாதே.” ஜகா வாங்கினார் குந்தவி.

என்ன உமா, சீக்கிரம் செலக்ட் பண்ணு. எவ்வளவு நேரமாத்தான் புடவையையே பாத்துக்கிட்டு இருப்பே.” மகேஷ் சொன்னதும், கையிலிருந்த புடவையை பார்த்தவள், சுதாகரனைத் திரும்பிப் பார்த்தாள். வேண்டுமென்று பக்கத்திலேயே இடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இப்போதெல்லாம் அடாவடி கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.

அங்க என்ன பார்வை, நீதானே கட்டப்போறே. உனக்கு பிடிச்சிருந்தா எடுத்துக்கோ.” உமாவை அதட்டிக் கொண்டிருந்தான் மகேஷ்.

கட்டப் போறது நீதான், ஆனா ரசிக்கப் போறது நானில்லையா? இந்த மடப்பயலுக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது.” புடவையைப் பற்றி ஏதோ பேசுவது போல உமாவின் காதில் முணுமுணுத்தான் சுதாகர்.

அண்ணா, அவளைக் கொஞ்சம் ஃப்ரீயா விடேன். அவ செலெக்ட் பண்ணட்டும்.”

டேய், நான் மதுக்கு ஹெல்ப் தான் பண்ணுறேன்டா.” மகேஷை நோக்கி சொன்னவனை யாரும் கண்டு கொள்ளவில்லை. அவரவர் போக்கில் தேவையானவற்றை செலெக்ட் செய்து கொண்டிருந்தார்கள். காலையிலிருந்து அவளை உரசிக் கொண்டு அவன் அடிக்கும் கூத்தை கண்டும் காணாமல் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் குந்தவியே,

உங்க பையன் உங்களையே மிஞ்சிடுவான் போல இருக்கே.” என்றார் பிரபாகரன் காதில்.

சேச்சே, என்ன டாலி? இந்தப் பொடிப் பயலை எங்கூட ஒப்பிடுற, என்னோட பவர் தெரிஞ்ச நீயே இப்படிப் பேசலாமா? இது நியாயமா?” என்றவரை முறைத்து விட்டு, ஆராதனாவோடு போய் நின்று கொண்டார் குந்தவி.

ஒருவாறாக தேவையானவற்றை எல்லாம் தெரிவு செய்து கொண்டு ஊருக்குத் திரும்பி இருந்தார்கள். வீடு வந்த தமிழுக்கு வந்ததும் வராததுமாக விருந்தினர் காத்திருந்தார்

வணக்கம், நான் நாராயணன். நீங்கதானே தமிழ்ச்செல்வன்?”

ஆமாங்கய்யா, என்ன விஷயமா என்னை பாக்க வந்திருக்கீங்க?”

நேரா நான் விஷயத்துக்கு வந்திர்றேன். நான் அபிமன்யூவோட அப்பா.”

…!” தமிழின் முகத்திலிருந்த மகிழ்ச்சி மாறி யோசனை வந்தது.

உங்களை மாதிரி ஒரு பெரிய மனுஷனை இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பத்துல சந்திக்கிற பாக்கியத்தை ஆண்டவன் எனக்குக் கொடுக்கலை.”

ஐய்யைய்யோ! இது பெரிய வார்த்தைங்க ஐயா. தொழில் பண்ணுறவங்க நாம, கிடைச்ச வாய்ப்பை நல்லதா மாத்திக்கிறதுதான் சாமர்த்தியம்.”

உண்மையான வார்த்தை. விஷயம் கொஞ்சம் விபரீதமா போறதை கேள்விப்பட்டுத்தான் நானே கிளம்பி வந்திருக்கேன். எனக்கு பூர்வீகம் கோயம்புத்தூர் தான்.”

அப்படீங்களா! நம்ம ஊர்க்காரரா நீங்க? இது எனக்குத் தெரியாதே.”

வியாபாரத்தோட, வாழ்க்கையும் ஆளத்தூர்ல அமைஞ்சு போச்சு. அதுக்காக மண்வாசனையை மறக்கலாமா?”

அதைச்சொல்லுங்க. வீட்டுக்கு அன்னைக்கு போயிருந்தேன். பொண்ணு ரொம்ப அருமையா பேசிச்சு.”

பையனும் அருமையானவன் தாங்க. என்ன, தொழில் பண்ணுற ஆர்வத்துல அதுல இருக்குற சாதக, பாதகங்களை ஆராயுற அளவு பக்குவம் இல்லை.”

நானும் சுமுகமா பிரச்சினையை தீர்த்துக்கத்தான் முயற்சி பண்ணினேன். ஆனா, தம்பி ஒத்து வரலைங்கைய்யா.”

அது அந்த வயசுக்குரிய பிடிவாதம். ஆனா என் வார்த்தையை மீறி எதுவும் பண்ண மாட்டான். இந்த விஷயம் என் காதுக்கு ஏற்கனவே வந்திருந்தா, ஆர்ப்பாட்டம் பண்ணுற அளவுக்கெல்லாம் போயிருக்காது.”

ஐயா, மன்னிக்கனும். தம்பியை காயப்படுத்துறது என் நோக்கம் இல்லை. ஊருக்கு ஒரு கெடுதல் வந்திரக்கூடாது. பேப்பர்லயும், டீ வீ யிலயும் போடுறதைப் பாக்கிறப்போ பயமா இருக்குதுங்க. கலெக்டரும் தம்பியோட கொஞ்சம் போராடிப் பாத்தாங்க. ஆனா, தம்பி பெரிய இடத்திலிருந்து பிரஷர் குடுத்துட்டாரு.”

அப்பிடியா! நான் என்னன்னு பாக்கிறேன். நீங்க கவலைப் படாதீங்க. நம்ம ஊருக்கு ஒரு கெடுதல் வர நான் அனுமதிக்க மாட்டேன். என்னை நீங்க நம்பலாம்.” சொன்ன வரின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் தமிழ்.

மலை போல இருந்த பிரச்சினையை பனிபோல தீர்த்து வெச்சிருக்கீங்க ஐயா. இந்த உதவியை அவ்வளவு சீக்கிரம் இந்த நல்லூர் கிராமம் மறந்திடாது.” உணர்ச்சி மிகுதியில் தமிழின் கைகள் நடுங்கியது. அவரது கைகளை லேசாகத் தட்டிக் கொடுத்த நாராயணன், புன்னகையோடு விடைபெற்றுக் கொண்டார்.

                                    —————————————————————–

விசாலாட்சியின் வருகைக்காக காத்திருந்தார் இளமாறன். அந்த நட்சத்திர ஹோட்டலில் ஒரு டேபிளை புக் பண்ணி இருந்தார். ஜவுளி எடுத்தவர்கள் ஊருக்குக் கிளம்பிவிட, இவர் மட்டும் விசாலாட்சியை பார்த்து விட்டு போக தங்கிவிட்டார். கையோடு கொண்டு வந்திருந்த ஃபைலில் மூழ்கிப் போனார் இளமாறன்.

வந்து ரொம்ப நேரமாச்சா மாறன்?” கேட்டபடி எதிரில் அமர்ந்தார் விசாலாட்சி.

ஒரு காஃபி ஆச்சு. இன்னொன்னு ஆர்டர் பண்ணப் போறேன்.”

சாரிப்பா, நான் என்ன பண்ணட்டும். என் வேலை அப்பிடி. என்னால என் தொழிலை எப்பவுமே விட்டுக் கொடுக்க முடியாது மாறன், நீங்க கொஞ்சம் புரிஞ்சுக்கனும்.”

அடடா, இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு ஃபீலிங்ஸ். சரி, இனிமே எதுவும் சொல்லலை சரியா?”

என்ன, திடீர்னு கிளம்பி வந்திருக்கீங்க?” கேட்டவரிடம் அந்தப் பையை நீட்டினார் இளமாறன்.

என்ன மாறன் இது?” கேட்டுக் கொண்டிருக்கும் போதே வந்த வெயிட்டரிடம், இரண்டு வெஜிடபிள் சூப் ஆர்டர் பண்ணியவர், பையைப் பிரித்துப் பார்த்தார். புடவை. ஆச்சரியமாக மாறனை நிமிர்ந்து பார்க்க,

பிரிச்சுப் பாத்து பிடிச்சிருக்கான்னு சொல்லும்மா.” என்றார்.

அடர் பிங்கில் இருந்தது சேலை. கெட்டியான ஒரு ஜான் தங்க ஜரிகை பார்டர், அதற்கு மேல் மெல்லிய இழையாக தங்க நிறத்தில் ஒரு ஜானிற்கு பூ வேலைப்பாடு. அடுத்தாற்போல சின்னதாக ஒரு பார்டர். உடம்பு முழுவதும் பெரியதும், சிறியதுமாக பூ வேலைப்பாடுகள். இலைப் பச்சையில் ப்ளவுஸ். சேலையை மென்மையாகத் தடவிக் கொடுத்தார் விசாலாட்சி.

பிடிச்சிருக்கா விசாலி? சும்மா இப்பிடியே தடவிக்கிட்டு இருந்தா நான் என்னன்னு எடுத்துக்க?”

என்ன மாறன், திடீர்னு புடவை?”

அதுவா, உமாக்கு நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிச்சாச்சு இல்லையா? எல்லாரும் ஜவுளி எடுக்க இன்னைக்கு வந்திருந்தோம். அப்போ எடுத்தது. ஃபங்ஷனுக்கு நீ இதைக் கட்டிக்கிட்டு வாடா.”

ம்யாருக்குன்னு ஒருத்தருமே கேக்கலையா?”

கேட்டாங்க, எம்பொண்டாட்டிக்குன்னு சொன்னேன்.” அசால்ட்டாக சொன்னார் இளமாறன்.

ஐய்யைய்யோ…!”

ஏன், சொன்னா என்ன விசாலி. இதுக்கப்புறமும் காலம் கடத்தனுமா? நீ சொல்லு, எப்போ உங்க அப்பா அம்மா கிட்ட பேசட்டும்?” மாறனின் கேள்வியில் முகம் இறுகியவர்,

எனக்கு அப்பிடி யாருமே இல்லையே மாறன்.” என்றார்.

ம்ச்இப்பிடியெல்லாம் பேசக்கூடாது. நீரடிச்சு நீர் விலகாது. ஏதோ கோபத்துல சொல்லுற வார்த்தைகளை பிடிச்சிக்கிட்டு தொங்கப்படாது விசாலி. நான் பேசுறேன், நீ பர்மிஷன் மட்டும் குடு அது போதும்.” 

எனக்கு நீங்க மட்டும் போதும் மாறன். சிம்பிளா கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்.”

சொன்னா கேக்கணும் விசாலி. சின்ன பிள்ளை மாதிரி பிடிவாதம் பிடிக்கக் கூடாது.”

இது பிடிவாதம் இல்லை மாறன். சுயகவுரவம். நான் யாரையாவது காதலிச்சு ஓடிப் போயிருந்தா, அவங்க என்னை ஒதுக்கி வெக்குறதுல நியாயம் இருக்கு. நான் அவங்க பூரிச்சுப் போற மாதிரித்தான் நடந்திருக்கேன். அப்பவும் என்னை புறக்கணிச்சா, அந்த உறவுகள் எனக்கு வேணாம் மாறன்.” பிடிவாதமாக சொன்னார் விசாலாட்சி.

சரி, அதை விடு. என் செலெக்ஷ்ன் எப்பிடி இருக்கு? அதைச் சொல்லு முதல்ல.”

ரொம்பவே அருமையா இருக்கு.” மேஜை மேலிருந்த மாறனின் கையைப் பிடித்து தன் புறமாக இழுத்தவர், அதில் லேசாக இதழ் பதித்தார்

தான்க் யூ வெரி மச். ரொம்ப நாளைக்கப்புறம் உரிமையாக கிடைச்ச பரிசு. அதுவும் என் மனசுக்கு பிடிச்சவர் கிட்ட இருந்து.” லேசாக விசாலாட்சியின் குரல் பிசிறடித்தது.

என்ன பொண்ணே, இப்பிடியெல்லாம் போட்டுத் தாக்குற. மாறா, உம்பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான் போல தெரியுதே.” உணர்ச்சி வசப்பட்டிருந்த விசாலாட்சியை நார்மலாக்க கேலியில் இறங்கினார் இளமாறன்.

பேசிக்கொண்டிருக்கும் போதே சூப் வந்து சேர, விசாலாட்சியின் பிடியில் இருந்த கையை உருவிக் கொள்ள முயன்றார் மாறன். கலெக்டர் அத்தனை சீக்கிரத்தில் தன் பிடியை விடவில்லை.

error: Content is protected !!