‘கேர் ஃபார் லைப்’ மருத்துவமனையின் கார் பார்கிங் பகுதியில்… காரை நிறுத்தி… சுற்றிவந்து… லட்சுமியை கை பிடித்து இறக்குவதற்காகக் குனிந்தான் ஆதி…
அவருக்கு மூட்டு வலி அதிகமாகி… நடக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். அவரை மருத்துவரிடம் காண்பிப்பதற்காக அங்கே அழைத்துவந்திருந்தான் அவன்.
அந்த நேரம் அவனது காரின் மற்றொரு புறமாக வந்து நின்றனர், மல்லியும்… பரிமளாவும்…
அந்தப் பகுதியே, ஆளரவமின்றி அமைதியாய் இருந்தது… ஆதி… குனிந்த நிலையில் இருந்ததால்… அவர்கள் அங்கே இருந்ததையே கவனிக்கவில்லை… மல்லி… பரிமளா இருவரும்…
அங்கு வந்த நொடியே “நாம… இப்ப இருக்கற நிலைமையில்… நீ செய்வது சரியா மல்லி? அவங்க பாவம்தான்… இல்லன்னு சொல்லல… ஆனால் நம்ம கைல இருப்பதை கொடுத்துவிட்டு… அவசரம்னா நாம என்ன செய்வது…”
“நம்மளை உள்ளேயே நுழையக்கூட விடமாட்டேங்கறாங்க பாரு… திருட்டுத்தனமா எப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கு?” எனப் பொரிய ஆரம்பித்தார் பரிமளா!!
என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் எனப் புரியாமல்… சத்தம் செய்யாமல் நிமிர்ந்து நின்றான் ஆதி… அவர்கள் எதிர் புறம் நோக்கி நின்றிருந்ததால்… இருவரது முகமும் தெரியவில்லை அவனுக்கு… அவர்களும் அவனைப் பார்க்கவில்லை…
“அம்மா! நீங்க ஏன் மா கவலை படறீங்க… எனக்குத்தான்… ‘ஆதி டெக்ஸ்டைல்ஸ்’ ல வேலை கிடைச்சிருக்கே… அதுவும் பெர்மெனென்ட் ஆகிவிட்டால்… நல்ல சம்பளம் கிடைக்கும்… இது போல நகைகளைக் கூடிய சீக்கிரமே வாங்கிடலாம்…மா” என்றாள் மல்லி… அன்னையைச் சமாதானப்படுத்தும் விதமாக…
அவர்களுடைய பேச்சில்… தன்னுடைய நிறுவனத்தில் அந்தப் பெண் வேலையில் நியமிக்கப்பட்டிருக்கிறாள் என அறியவும்… ஆராய்ச்சியுடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தான் ஆதி… எதோ பேச வந்த லட்சுமியை… கைகாட்டித் தடுத்தவன்… அவர்களிடம் கவனத்தைச் செலுத்தினான்…
அதற்குள் மல்லி… தன் கைப்பேசியில் யாரையோ அழைத்து… “அத்தை… நானும் அம்மாவும்… இந்த ஆஸ்பத்திரில… காரெல்லாம் நிறுத்துவங்க இல்ல… அங்க இருக்கோம்… நீங்க உடனே இங்க வாங்க…” எனச்சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்…
நேரம் ஆகிறது என்பது போல் மகனிடம் கைகாட்டி லட்சுமி…ஜாடை காண்பிக்கவும்… மிகவும் மெல்லிய குரலில்… “அம்மா! ஒரு அஞ்சு நிமிஷம்!” என்றவன்… அங்கே யாரோ வரும் அரவம் கேட்கவும்…தன்னை மறைத்துக் கொண்டான்…
நடுத்தர வயதில் ஒரு பெண்மணி… அங்கே வந்து… அந்த இருவரையும் பார்த்தவாறு நின்றார்…
அவரை மட்டுமே பார்க்க முடிந்தது ஆதியால்…
அவர் அங்கே வந்த நொடியே… “அத்தை! கிட்டு மாமாவுக்கு டெஸ்ட் எல்லாம் எடுத்து முடிச்சுட்டாங்களா?” என்று மல்லி கேட்க…
“இன்னும் இல்லைம்மா… எதோ டெஸ்ட், இன்னும் பாக்கி இருக்காம் …” என்று மல்லியால் ‘அத்தை’ என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண் சொல்லவும்…
“அப்பா! நல்லவேளை” என்ற ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன்… “அப்படினா… எந்தப் பேப்பரிலும் மாமா கையெழுத்து போடவில்லைதானே?” என்று கேட்டாள் மல்லி…
“இல்லை மல்லி!” என்றார் அந்தப் பெண்மணி…
“தேவிகா! எந்தக் கையெழுத்தும் போடலேன்னு உனக்கு நன்றாகத் தெரியுமா?” எனக் கேட்டார்… பரிமளா…
“இல்லை… பரிமளா! அவரு எந்த கையெழுத்தும் போடல! எனக்கு நன்றாகத் தெரியும்” என்றார் அந்த தேவிகா…
உடனே “அம்மா!” என்றவாறு மல்லி பரிமளாவைப் பார்க்க…
தனது கைப் பையிலிருந்து, சிறிய பெட்டி ஒன்றை எடுத்து… அதை தேவிகாவிடம் கொடுத்தார் அவர்…
அத்தை வாங்கிப் பார்த்த தேவிகா… இது என்ன பரி… என்றவாறே அதைத் திறக்க… அதைப் பார்த்து, தீயைத் தீண்டியது போல் பதறியவர்… “பரி! என்ன இது?!!!” என்க…
“நேற்று நீ எங்க வீட்டுக்கு வந்து போனதிலிருந்து… நாம கண்டிப்பா எதாவது செய்யணும்னு மல்லி ஒரே பிடிவாதம்! உங்க அண்ணனும் அவளுக்கு சப்போர்ட்டு… இதுல ஒரு பதினோரு பவுன் நகை இருக்கு தேவி… இதை உன் பெண்ணோட கல்யாணத்துக்கு… வச்சிக்கோ… உன்னால எப்போ முடியுமோ… அப்பொழுது திருப்பிக் கொடு…” என்று பரிமளா முடிக்க…
மல்லியை நோக்கிய தேவிகா… “வேண்டாம் மல்லி! திடீர்னு உனக்குக் கல்யாணம்… கூடி வந்தால்… தேவைப் படும்… நடப்பது நடக்கட்டும்… நாங்க அனுபவிச்சுகிறோம் மல்லி… எங்களோட சேர்ந்து… நீங்களும் துன்பப்பட வேண்டாம்” என்க…
“அத்தை… எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போன சமயம்… நாங்க பட்ட பாடு அந்த கடவுளுக்குத்தான் தெரியும்…எதோ எங்களுக்காவது… கொஞ்சம் நிலபுலன்கள் இருந்தது… வித்து சமாளிச்சோம்… ஆனால்… நீங்க என்ன செய்விங்க? எப்படி சமாளிப்பிங்க? இன்றைக்கு… உங்க மகளோட கல்யாணத்தை நடத்த… மாமாவின் கிட்னியை விப்பீங்க… நாளைக்கே… மாமாவுக்கு… எதாவது உடல்நிலை சரியில்லாமல் போனால்… உங்க கிட்னியை விப்பீங்களா? “
“யாருக்காவது… இந்த மாதிரி… உறுப்புகள் தேவைப்பட்டால்… ரத்த சம்பந்தம் இருக்கறவங்க… அதை மனம் உவந்துக் கொடுக்கணும்… பணம் இருக்கும் காரணத்தால்… சாகும் வயதில் இருப்பவர்களுக்குக் கூட… இப்படி விலை கொடுத்து வாங்க நினைப்பது… மிகப்பெரிய கொடுமை அத்தை! அதுவும் உங்களைப் போன்று… உழைத்து வாழ்க்கையை ஓட்டும் நிலையில் இருப்பவர்கள்… இப்படி விற்கத் துணிவது… கொடுமையிலும் கொடுமை… அதைப் பார்த்துக்கொண்டு… நாங்க எப்படி அத்தை…சும்மா இருக்க முடியும்?”
“முதலில் போய்… கிட்னியையெல்லாம் விற்க முடியாதுன்னு சொல்லிட்டு… வீட்டுக்குக் கிளம்புங்க… வேறு பேச்சே வேண்டாம்” என்று மல்லி முடிவாய்ச் சொல்ல…
நெகிழ்ச்சியில் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறே… தேவிகா… “மல்லிமா… அத்தை சொன்ன கேளு! எங்களால… இந்த நகையை இப்போதைக்கு வாங்கிக் கொடுக்க முடியாது… உனக்குக் கல்யாணம்… நிச்சயம் ஆனால்… அம்மா… அப்பா ரொம்ப கஷ்ட படுவாங்க…” நிலைமையை அவர் எடுத்துச் சொல்ல…
“மல்லியை… மல்லிக்காக மட்டுமே கல்யாணம் செஞ்சுக்கறவனாக இருந்தால் மட்டுமே… நான் கல்யாணம் பண்ணிப்பேன் அத்தை! நகைக்காகன்னா எனக்குக் கல்யாணமே வேண்டாம்! அதுவும்… கொஞ்ச நாள் வேலை பார்த்துவிட்டுத்தான்… நான் கல்யாணமே பண்ணிப்பேன்… நீங்க கவலையே படவேண்டாம்!” என… தேவிக்காவிற்கும்…
அவர்கள் பேசுவதையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்த பரிமளவிற்குமாகச் சேர்த்து பதில் சொன்னாள் மல்லி…
என்ன செய்வது என்பதுபோல் தேவிகா பரிமளாவைப் பார்க்க…
“எடுத்துக்கோ… தேவிகா… முதலில் இப்போதைய பிரச்சினையை தீர்ப்போம்… மற்ற விஷயங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்… உங்கள் பெயரைச் சொல்லி… பார்க்க வேண்டும் என்று… ஆஸ்பத்திரி… ரிசப்ஷனில் கேட்டோம்… எங்களை உள்ளே போக அனுமதிக்கவில்லை… அங்கேயே வைத்துப் பேசினால் எதாவது… பிரச்சனை ஆகுமோ என்று பயந்துதான் உன்னை… இங்கே வரச்சொன்னாள் மல்லி… நேரம் ஆக ஆக… எதாவது டாக்குமென்டில் கையெழுத்துப் போட்டு விட்டால்… சிக்கல் ஆகிவிடும்… அதனால்தான் இங்கேயே வந்துட்டோம்!” என்று முடித்தார் பரிமளா…
தேவிகாவின் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி வந்துசேர்ந்திருந்தது!!!
“அத்தை! சீக்கிரமாகப் போங்க… மாமா ஏதாவது சைன் பண்ணிடப் போறாங்க” என மல்லி தேவிகாவை அவசரப்படுத்தவே…
“ரொம்ப நன்றி பரிமளா! நன்றி மல்லி!” என்றவாறு மல்லியைக் கட்டி அணைத்துக்கொண்ட தேவிகா… பிறகு வேக நடையுடன் அங்கிருந்து சென்று மறைத்தார்…
பிறகு பரிமளா… “நல்ல செயல்தான் செஞ்சிருக்கோம்… ஆனால்… தம்பியை வேறு மேல் படிப்பு படிக்க வைக்கணும்… உங்க ரெண்டு போரையும் நினைச்சாதான் எனக்குக் கவலையா இருக்கு மல்லி!” என்க…
“தம்பிக்கு என்ன… அவன் நல்லாத்தானே படிக்கிறான்… அவன் மெரிட்லயே வருவான்! நல்லதே நடக்கும்… கவலையே படாதீங்கம்மா!” என்றவாறே அவரது கையைப் பிடித்து அங்கிருந்து இழுத்துச்சென்றாள் மல்லி…
அப்பொழுது… அங்கே ஒரு கார் நுழையவும்… அந்த ஓசையில்… அதிர்ந்து… திரும்பிப் பார்த்தாள் மல்லி… அப்பொழுதுதான் அவளது முகத்தைப் பார்த்தான் ஆதி…
தானே அறியாமல் அவனது இதயத்தை… கொள்ளை அடித்துவிட்டு… அங்கிருந்து சென்று கொண்டிருந்தாள் மல்லி…
அதற்கு முன்பே, அவளை ஒரு முறை பார்த்திருப்பது.. நினைவில் வரவும்… சில்லென்ற இனிமை மனதில் பரவ… அவள் சென்ற திசையையே வெறித்துக் கொண்டு, கற்சிலையென நின்றிருந்த ஆதியை, அவனது அன்னையின் குரல் கலைத்தது… அவருமே… அங்கே நடந்ததைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்…
“என்னப்பா… நீ சொல்லுவியே… பணத்தை நேசிக்காமல்… மனிதர்களை நேசிக்கும் பெண்தான் உனக்கு மனைவியாக வர முடியும்னு… அந்தப் பெண் இவள்தானா?” என லட்சுமி கேட்கவும்…
இதழில் வழிந்த புன்னகையுடனே… “இருந்தாலும், இருக்கலாம்… யார் கண்டது!” என்று தனது மனதை மறைக்காமல் சொன்னான் ஆதி…
ஒரே நொடியில்…அவன் குடும்பத்தில்… சுற்றத்தில் என்று சில பெண்கள் அவன் மனதில் இறக்கிச் சென்றிருந்த கசப்பு…
எல்லாவற்றிற்கும் மேலாக… இளவரசியைப்போலப் பொத்தி வைத்திருந்த அம்மு… சுயநலமாகத் தன்னை அழித்துக் கொண்டது என… பெண்களைப் பொறுத்தவரை… இரும்பாக இறுக்கிப்போயிருந்த அவனது இதயத்தை… அவள் செய்த ஒரே ஒரு செயலால்… முழுவதுமாக தன்வசமாக ஆக்கியிருந்தாள் மல்லி!!!
********************************
அனைத்தையும்… வியப்புடனேயே… கேட்டுக்கொண்டிருந்தாள் மல்லி…
“ஓ! ஆனால் அன்று நீங்கள் அங்கே இருந்ததை… நான் கவனிக்கவே இல்லை பாருங்களேன்!” என்றவள்… “இவ்வளவு விஷயங்களைத் தெரிந்துகொண்ட பிறகும்… அந்த வினோத்திடம்… இதுபற்றி நீங்கள் ஒன்றுமே கேட்கவில்லையா மாம்ஸ்?!” என முடித்தாள் மல்லி…
“அன்றைக்கே… அம்மாவின் செக் அப்… முடித்து… அவர்களை பிஸியோதெரப்பிக்காக விட்டுவிட்டு… அவனைச் சந்தித்து… இதுபற்றி கேட்டேன் மல்லி…”
“அந்த மருத்துவமனையில்… அதுபோன்ற செயல்களை அவன் அனுமதிப்பதில்லை என்றும்… தனிப்பட்ட முறையில்… அந்த நோயாளியே… அவர்களை அழைத்துவந்திருக்கலாம்… என்று சொன்னான்… வினோத்…”
“என்னாலும் அவனைச் சந்தேகிக்க முடியல… அதனால அவனை… கொஞ்சம் கவனமாக இருக்கும்படி சொல்லிவிட்டு வந்தேன்” என்றான் ஆதி…
“இல்லை மாம்ஸ்! நான் அங்கே வந்த அன்றைக்கு முந்தய தினம்… தேவிகா அத்தை… கிட்டு மாமாவிற்குத் தெரியாமல் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாங்க… அவரது கிட்னியை தனமாகக் கொடுப்பதற்குச் சம்மதிப்பதாக… தயார் செய்யப்பட்டிருந்த அக்ரீமெண்ட் காபி ஒன்றைக் காண்பித்து… அதில் எழுதப்பட்டிருக்கும் விவரத்தைக் கேட்டாங்க… அது இங்லிஷில் இருந்ததால்… அம்மாவிடம் கேட்கலாம் என்றுதான் எங்களைத்தேடி வந்திருந்தாங்க…”
“தேவிகா அத்தை… எங்க சொந்தக்காரங்க இல்லை… அவங்க எங்க பேமிலி ஃப்ரண்ட்… தேவைப்படும்பொழுது, எங்க கழனில வேலை செய்ய வருவாங்க…
“இப்பல்லாம்… விவசாய வேலை செய்ய முடியாமல்… ரெண்டு பேரும் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில…தினக் கூலியா வேலை செய்யறாங்க…”
“அந்தச் சமயம்தான் அவர்களது மகளின் கல்யாணம் முடிவாகி இருந்தது… ஓரளவிற்கு… செலவுகள் செய்து முடிச்சிருந்தாங்க… நகை வாங்க மட்டும் பணம் தேவையாக இருந்ததால்… கடனுக்காக அலைந்துகொண்டிருந்த சமயம்… ப்ரோக்கர் ஒருவன்… இவர்களுடைய நிலையைத் தெரிந்துகொண்டு… உதவி செய்வதுபோல்… பேசியே மாமாவைக் கரைத்திருக்கிறான்… அத்தைக்கு அதில் கொஞ்சமும் விருப்பமில்லை… அன்றைக்கு…அழுது புலம்பித் தீர்த்துட்டாங்க… மறுநாள், மாமாவை அந்த ஹாஸ்பிடலில் அனுமதிக்க இருப்பதாகச் சொன்னாங்க தேவிகா அத்தை…”
“அவங்க கிளம்பிப் போனதுக்குப் பிறகு… எங்க எல்லாருக்குமே… மிகவும் அதிர்ச்சியாக இருந்தது… எனக்கு… அதை எப்படியாவது தடுக்கணும்னு மட்டும்தான் தோன்றியது… அதனாலதான் என் நகைகளை கொடுக்க முடிவு செய்தேன்… அப்பா உடனே சம்மதிச்சாங்க… அம்மாவுக்கு அரை மனசுதான்… ஆனாலும் வேண்டாம்னு சொல்லல… ஏன்னா! அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது… நாங்க பட்ட துன்பம் அந்த மாதிரி…
“பணம் இருந்தால்… உயிரைக் கூட இவர்களால் விலை கொடுத்து வாங்கிட முடியும்… ஆனால் எங்களைப் போன்ற நடுத்தர வர்க்க மக்களால்… சாதாரணமாகப் பார்க்கப்படும் மருத்துவத்தைக் கூட பார்த்துக்கொள்ள முடியாது… அதுதான் உண்மை” சொல்லும்போதே துக்கத்தில்… தொண்டைக்குழி அடைத்தது மல்லிக்கு…
தி கிரேட் தேவாதிராஜனின் மனைவி… தன்னை ஒரு சாதாரண மிடில் கிளாஸ் என்று சொல்லிக்கொள்கிறாள்…
இதுதான் மல்லி!
அவள் இப்படிச் சொன்னது… நியாயத்திற்கு ஆதிக்குக் கோபத்தை வரவழைத்திருக்க வேண்டும்… மாறாக, அவன் மனதில் மகிழ்ச்சிதான் பெருகியது!
அவளது இந்தக் குணம்தான் அவனைக் கவர்ந்தது!
அவளை, நிர்பந்தப்படுத்தி… தன்னை மணக்க வைத்து!
மேலும்… மேலும்… காதலில் மூழ்க வைக்கிறது!
“ஐ லவ் யூ!! மல்லி!!” என மெல்லிய குரலில்… சொன்னான் ஆதி… அவன் சொன்னது புரியாமல்…”என்ன மாம்ஸ்… சொன்னிங்க” என மல்லி கேட்க…
“”மல்லியை… மல்லிக்காக மட்டுமே கல்யாணம் செஞ்சுக்கறவனாக இருந்தால் மட்டுமே… நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்ன இல்ல…”
“உண்மையாகவே… மல்லியை… மல்லிக்காகவேதான்… நான் கல்யாணம் செய்துகொண்டிருக்கேன்… உனக்கு புரியுதா மல்லி?!!!” என அவன் கேட்க…
வெட்கப் பூக்கள் முகத்தில் பூக்க… “ம்!!” என்று தலை ஆட்டினாள் மல்லி… அதை ரசனையுடன் பார்த்திருந்த ஆதி…
பேச்சு திசைமாறுவதை உணர்ந்து… “சரி சரி… நீ மேலே சொல்லு!” என்க… …
“ஆனால் மாம்ஸ்! அங்கே நடப்பது அத்தனையும்… அந்தப் பெரிய டாக்டருக்கு தெரியும் என்பது போலத்தான் தேவிகா அத்தை அன்றைக்கு சொன்னாங்க…”
“பெரிய டாக்டர்னா… யாரோ வயசானவங்களா இருப்பாங்கன்னுதான் நான் நினைத்தேன்… ஆனால் நேற்று… தாமரை அண்ணியிடம் பேசிவிட்டு வந்த பிறகுதான்… அங்கே பெரிய டாக்டர்னா அது அந்த வினோத் என்பது புரிந்தது…”
“நிச்சயமா… அங்கே எதோ தப்பு இருக்கு மாம்ஸ்!” என்றாள் மல்லி…
உடனே எதோ யோசனை தோன்றவும்… “மாம்ஸ்! அம்மு இறந்த சமயம்… நீங்க…ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருந்ததாகச் சொன்னீங்க இல்ல! அப்பொழுது கேர் ஃபார் லைப்… லயா இருந்தீங்க?” என்று கேட்க…
“ஆமாம்!” என்ற ஆதி… “அப்ப வினோத்துக்கு கல்யாணம் ஆகல… அந்த ஹாஸ்பிடலை… அப்பொழுதுதான் தங்கவேலு… தாமரைக்காகவென வாங்கியிருந்தார்…”
“அங்கே வினோத் வேலை செய்துகொண்டிருந்தான்… அதனால்தான் அந்த மருத்துவமனைக்கு… போகவே ஆரம்பித்தோம்…” என்றான் ஆதி…
அந்தச் சமயம் நடந்த விஷயங்களைக் கோர்வையாக… நினைவுபடுத்திப் பார்க்க… அந்தக்கணம்… அவனுக்குமே அங்கே எதோ தவறாக நடப்பதுபோல்… மனதில் தோன்றியது…
“மாம்ஸ்! தாமரை அண்ணி சொன்னாங்களே… அந்தப் பெண்ணுக்கு எதாவது உதவி செய்யணுமே என்றாள் மல்லி!” “பொறுத்தார் பூமி ஆளுவார்! மல்லி!” என்று அவளை நோக்கி… அர்த்தமான புன்னகை ஒன்றைச் செலுத்தினான் தேவாதிராஜன்…
அந்தப் புன்னகைக்கான பதில்… அடுத்த நாளின் ‘முக்கியச் செய்தியாக’ தொலைக்காட்சியில் அனைத்துச் செய்தி சேனல்களிலும் கதறிக்கொண்டிருந்தது…