vkv 24

vkv 24

வண்ணம் கொண்ட வெண்ணிலவே 24

வீடு அமைதியாக இருந்தது. அப்போதுதான் சுதாகரன் கிளம்பி மில்லுக்குப் போயிருந்தான். காலையில் அவன் பண்ணும் அட்டகாசங்களுக்குப் பதில் கொடுக்கவே உமாவுக்கு நேரம் சரியாக இருக்கும்.

எதையும் எடுத்த இடத்தில் வைக்காமல், அதைக் காணவில்லை இதைக் காணவில்லை என்பதே அவன் வழக்கமாகிப் போயிருந்தது. ஒவ்வொன்றிற்கும் அவளை அழைத்து ஒரு வழி பண்ணிவிடுவான்.

அவன் மில்லுக்கு கிளம்பிய பின்னால் உமாஅப்பாடாஎன்று கொஞ்ச நேரம் உட்கார்ந்து விடுவாள். அன்றும் அப்படித்தான், கொண்டு வந்த ஃபைலைக் காணவில்லை என்று ஒரு நாட்டியம் ஆடிவிட்டுத்தான் கிளம்பி இருந்தான். கடைசியில் பார்த்தால் ஃபைல் காருக்குள் இருந்தது.

சோஃபாவில் உட்கார்ந்து இருந்தவளை பார்த்த பார்வதி அம்மாவுக்கு என்ன தோன்றியதோ,

ஒரு காஃபி குடுக்கட்டுமா கண்ணு?” என்றார்.

ம்குடுங்கம்மா. நான் கொஞ்ச நேரம் லைப்ரரியில உக்காந்து ஏதாவது படிக்கிறேன்.” சொல்லிவிட்டு தாத்தாவின் அந்த அறைக்குள் புகுந்து கொண்டாள் உமா.

சாண்டில்யனின்கன்னிமாடம்இரண்டொரு நாட்களுக்கு முன் கிடைத்திருந்தது. இன்னும் படிக்கவில்லை. இன்று அதை ஆரம்பிக்கலாம் என்று உட்கார்ந்து கொண்டாள். சூடாக தொண்டைக்குள் காஃபியும் இறங்க உற்சாகம் தொற்றிக் கொண்டது உமாவை.

இப்படி நிதானமாக கதைகள் படித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்று எண்ணியபடி கதைக்குள் தொலைந்து போனாள் உமா. தன்னை மறந்து புத்தகத்திற்குள் புதைந்திருந்தவளைக் கலைத்தது அழைப்பு மணி. கவனங் கலைந்தவள்யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்தோடே கதவைத் திறந்தாள்.

காந்திமதி பாட்டி.’

ஒரு கணம் உமாவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. இத்தனை நாளும் இந்த வீட்டின் பக்கம் எட்டியும் பார்க்காதவர், இன்று என்ன திடீரென்று இங்கே வந்திருக்கிறார்? அதுவும் சுதாகரன் இல்லாத வேளை!

எண்ணங்கள் பல மாதிரி சஞ்சரித்தாலும், நாகரிகம் தலை தூக்க வழி விட்டு நின்றவள்,

வாங்க பாட்டி.” என்றாள். எதுவும் பேசாமல் உள்ளே வந்து உட்கார்ந்தவர் பார்வை உமாவைத் துளைத்தது.

சுதாகர் எங்க?” அதிகாரமாக வந்தது கேள்வி. சாதாரணமாக நின்ற உமாவை அவர் கேட்ட தோரணை வீம்பிற்கு இழுத்துச் சென்றது.

அத்தான் மில்லுக்கு கிளம்பி போய்ட்டாங்க.” அந்த அத்தானில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்தவள், சலிக்காமல் அவரைப் பதில் பார்வை பார்த்தாள்.

பேரன் கிளம்பிப் போனதுக்கு அப்புறமா ப்ளான் பண்ணி வந்திட்டு இந்தம்மா போடுற ட்ராமாவைப் பாரு!’ உமாவின் உள் மனது எள்ளி நகையாடியது.

இன்னும் எத்தனை நாளைக்கு என் பேரனை இப்பிடி மயக்கி வச்சுக்கலாம்னு நினைக்கிறே?” வயதின் தரத்தை விட்டிறங்கி வந்தது கேள்வி. ஒரு கணம் கண்களை அழுந்த மூடித் திறந்தவள்

பாட்டி, பேச்சு ரொம்பவே அசிங்கமா இருக்கு. நீங்க பேசிக்கிட்டு இருக்கிறது உங்க பேரனோட பொண்டாட்டிக்கிட்ட. அதை மனசுல வச்சுக்கோங்க.”

யாரு? நீ, சுதாகரனோட பொண்டாட்டியா? உன்னைப் பெத்ததும், அவனைப் பெத்ததும் கூட நின்னு ஒரு மஞ்சக் கயித்தைக் கட்டிட்டா அதுக்குப் பேரு கல்யாணமா?” அவர் குரலில் அத்தனை கேலி இருந்தது.

ஸ்தம்பித்துப் போனாள் உமா. இந்த அம்மா என்ன பேசுகிறார்? தெரிந்துதான் பேசுகிறாரா, இல்லை என்னைப் பலவீனப் படுத்த நினைக்கிறாரா?

சாமி சன்னிதியில், ஊர் பார்க்க, பெற்றவர்கள் ஆசிர்வதிக்க, அக்கினி வளர்த்து கட்டிய தாலி செல்லுபடி இல்லையென்றால் வேறு எதுதான் செல்லுபடி? உமாவுக்கு எங்கோ வலித்தது.

அது சரி. உன் பரம்பரைக்கே இதுதானே பழக்கம். உங்கப்பன், ஆத்தாவோட கல்யாணமும் இந்த லட்சணத்தில தானே நடந்துது. அதால உனக்கு இதெல்லாம் தப்பா தோணாது.” வார்த்தைகள் உமாவைப் பதம் பார்த்தது.

பாட்டி, இப்போ பேச்சு உங்க பேரன் கல்யாணத்தைப் பத்தித் தான். அதோட நிறுத்திக்கனும். தேவையில்லாம எங்க அம்மா, அப்பாவை எல்லாம் இழுக்காதீங்க.” உமாவின் குரலும் கறாராக வந்தது

உன்னைப் பெத்தவங்களைப் பேசினா உனக்குக் கோபம் வருதோ? உங்கப்பன் தாண்டி அந்த ஒன்னுக்குமத்தவளை எம் பையன் தலையில கட்டி, எங் கனவு அத்தனையையும் நாசம் பண்ணினான். போதாக்குறைக்கு இப்போ நீ வந்திருக்கியா?” மூச்சு வாங்க உச்சஸ்தாயியில் பேசினார் காந்திமதி

உமாவிற்குத் தலை சுற்றியது. என்ன இந்தப் பாட்டி இத்தனை தரம் இறங்கிப் பேசுகிறார். குந்தவியை வேறு அவர் அப்படிப் பேசியது அவளை மிகவும் பாதித்தது.

பாத்துக்கிட்டே இரு. உங்கழுத்துல எம் பேரன் கட்டின தாலியை தூக்கித் தூரப் போட்டுட்டு, அவனுக்கு ஜாம் ஜாம்முன்னு நான் கல்யாணம் பண்ணி வெக்குறேன்.”

விக்கித்துப் போனாள் உமா. இவர் என்ன பேசுகிறார். எத்தனை தூரம் பணிந்து வந்தாலும், தான் இன்றுவரை கண்டுகொள்ளாத அத்தான் எனக்கு இல்லையா

அவன் செய்த காரியங்களால் அவனைப் புறக்கணித்து இருக்கிறாள்தான். அதற்காக, சுதாகரனை இன்னொரு பெண்ணிற்கு விட்டுக் கொடுக்க முடியுமா? அது தன்னால் முடியுமா? பாட்டி பேசியதன் வீரியம் புரிய, உமாவின் கண்கள் குளமானது. கழுத்தில் இருந்த தாலியை இறுக்கிப் பிடித்தவள்,

இல்லை, அது ஒரு நாளும் நடக்காது. அத்தான் என்னைத் தவிர யாரையும் ஏறெடுத்தும் பாக்க மாட்டாங்க.” அவள் சொல்லி முடிக்க வாய் விட்டுச் சிரித்தார் காந்திமதி.

அந்தக் கிறுக்கனை எப்பிடி மாத்தனும்னு எனக்குத் தெரியும். இன்னைக்கு வரைக்கும் என்னை எதிர்த்து அவன் பேசினதே கிடையாது. அது உனக்கும் தெரிஞ்சிருக்குமே?” அவர் கேள்வியில் ஆடிப் போனாள் உமா.

அவர் சொல்வது சரிதானே. அத்தான் எப்போது தனது பாட்டியை எதிர்த்துப் பேசி இருக்கிறார்? இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமே அவரின் அந்த இயல்பு தானே. இப்போதும் பாட்டி இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் அத்தான் அவர் இழுப்புக்கு இசைந்து கொடுப்பாரா? ‘மதுமது…’ என்று உருகுவதெல்லாம் சும்மா தானா

ஆயிரம் கேள்விகள் மனதில் ஓட, கண்களில் கலக்கத்தோடு நின்றவளைக் கலைத்தது அந்த black Audi இன் சத்தம். செவிகளுக்கு மிகவும் பரிட்சயமான அந்த ஒலியில் தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தாள் உமா

வந்த வேகத்தில் காரை நிறுத்திய சுதாகரன், அதை ஒழுங்காகக் கூட பார்க் பண்ணாமல் வீட்டிற்குள் ஓடி வந்தான். பாட்டி வந்த உடனேயே அவரின் குணாதிசயங்களை தன் சகோதரி வாயிலாக அறிந்திருந்த பார்வதி அம்மா சுதாகரனை தொடர்பு கொண்டிருந்தார்.

தம்பி, பாட்டி வீட்டுக்கு வந்திருக்காங்க. பேச்சு கொஞ்சம் கார சாரமாத்தான் போகுது. நீங்க சீக்கிரமா வந்திர்றது நல்லதுப்பா.” பார்வதி அம்மாள் ஃபோனை வைத்த அடுத்த நிமிடம் காரை ஸ்டார்ட் பண்ணி இருந்தான் சுதாகரன். எப்படி வந்து சேர்ந்தான் என்று அவனுக்கே தெரியாது. அத்தனை வேகத்தில் வந்திருந்தான்.

வீட்டிற்குள் வந்த சுதாகரன் முதலில் பார்த்தது கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த உமாவைத்தான். சட்டென அவள் அருகில் போனவன், அவளைத் தோளோடு அணைக்க முற்பட இடையில் புகுந்தது பாட்டியின் குரல்.

சுதாகரா..!” வீட்டிற்குள் வந்த பேரன் தனக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவன் மனைவியை அணுகியது காந்திமதியை மிகவும் பாதித்தது. தான் நிறையவே மெனக்கெட வேண்டி இருக்கும் என்று புரிந்தவர் உருக்கமாகவே சுதாகரனை அழைத்தார்.

வாங்க பாட்டி, எங்க வீட்டுக்கு முதல் முதலா வந்திருக்கீங்க. என்ன சாப்பிடுறீங்க?” என்றான்.

நீ கேக்குறே, உம் பொண்டாட்டிக்கு இவ்வளவு நேரம் இதை கேக்கத் தோணிச்சா பாரேன்.” பாட்டி வேண்டுமென்றே போட்டுக் குடுக்கவும் திகைத்துப் போனாள் உமா. இத்தனை நேரமும்நீ அவன் பொண்டாட்டியே இல்லைன்னு பேசினதென்ன, இப்போ பேசுறது என்ன?’ 

அவள் அதிர்ச்சியை அவள் முகமே காட்டிக் கொடுக்க, அவளைத் தோளோடு அணைத்த சுதாகரன், சோஃபாவில் அவளை உட்கார வைத்து, தானும் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். கையை எடுக்கவே இல்லை. காந்திமதியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

எல்லாவற்றையும் மௌனமாகக் கண்காணித்துக் கொண்டிருந்த சுதாகரன், கிச்சனை நோக்கிக் குரல் கொடுத்தான்.

பார்வதி அம்மா, எல்லாருக்கும் காஃபி கொண்டு வாங்க. பாட்டிக்கு சக்கரை கம்மியாப் போடுங்க.” சொல்லிவிட்டு, பாட்டியைத் திரும்பிப் பார்த்தான் சுதாகரன்.

ம்பாட்டி, அப்புறம் சொல்லுங்க. யார் கூட வந்தீங்க? சொல்லியிருந்தா நானே கிளம்பி வந்திருப்பேன்ல. எதுக்கு தனியா வந்தீங்க?” ஒரு பேரனாக அவன் குரலில் அக்கறை இருந்தது.

நான் எப்பிடிப்பா உன்னைக் கூப்பிட முடியும்? நீதான் இப்போ பெரிய மனுஷன் ஆகிட்டயே. பாட்டிக்குக் கூட சொல்லாம பெரிய வேலையெல்லாம் பண்ணுற. அதோட நான் உன்னைக் கூப்பிட்டா உம் பொண்டாட்டிக்கு பிடிக்குமோ என்னவோ?” வேண்டுமென்றே உமாவைச் சீண்டினார் காந்திமதி.

அப்பிடியொரு நிலைமையை உருவாக்கினதே நீங்க தானே பாட்டி. என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கிட்டீங்க. எனக்கு மட்டும் ஆசையா என்ன? இப்பிடியெல்லாம் நடந்துக்கனும்னு?” சுதாகரனின் பதிலில் காந்திமதி கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார். இது வரைக்கும் தன் பேச்சுக்கு எதிர்ப் பேச்சு பேசாத பேரன், இன்று இப்படியெல்லாம் பேசுவது விரும்பத் தகாததாக இருந்தது.

பாட்டி என்னதான் தப்பு பண்ணினாலும் நீ என்னை உதாசீனம் பண்ணலாமா சுதாகரா? உன்னை விட்டா எனக்கு வேற யாரு இருக்கா?” பாட்டி லேசாகத் துளிர்த்த கண்ணீரைத் துடைக்கவும், காஃபி வரவும் சரியாக இருந்தது

அதுவரை அமைதியாக இருந்த உமாவைப் பார்த்த சுதாகரன், காஃபியைக் கொடுக்குமாறு சைகை காட்டவும், பார்வதி அம்மா கையிலிருந்த ட்ரேயை வாங்கிக் கொண்டாள் உமா

காந்திமதிக்கு காஃபியை நீட்டவும், ஒரு முறைப்புடனேயே அதை வாங்கிக் கொண்டார். ஒரு சின்னச் சிரிப்புடன் காஃபியை எடுத்த சுதாகரன்,

நீயும் உக்காரு மது.” என்றான். பழையபடி அவன் பக்கத்தில் அவள் உட்கார எல்லோரும் அமைதியாக காஃபியை குடித்து முடித்தார்கள்.

பாட்டி, நான் மில்லுக்கு அவசரமா திரும்பப் போகணும். நான் உங்களை வீட்டுல ட்ராப் பண்ணிட்டுக் கிளம்பிப் போறேன், சரியா?”

தேவையில்லை சுதாகரா, நான் கொஞ்ச நேரம் இருந்துட்டுக் கிளம்பிடுவேன். நீ அவசரம்னா கிளம்புப்பா.”

பாட்டியை ட்ராப் பண்ணுறதை விட என்ன பெரிய வேலை. ம்சொல்லனும்னு நினைச்சேன். இனி இங்க வரனும்னு தோணிச்சுன்னா எனக்கு கால் பண்ணுங்க பாட்டி. நான் வந்து கூட்டிட்டு வந்திர்றேன். தனியா இப்பிடியெல்லாம் கிளம்பி வராதீங்க என்ன?” சொன்னவன் கையோடு பாட்டியையும் அழைத்துக் கொண்டு தான் போனான்

மது, கதவைப் பூட்டிக்கோ.” சொன்னவன் அவள் அருகில் வந்து அவள் கன்னத்தை மிருதுவாக தடவிக் கொடுத்தான். பாட்டியின் முகம் கோபத்தில் சிவந்து போனது.

இருவரும் கிளம்பிப் போகவும் அந்த இடமே புயல் அடித்து ஓய்ந்ததைப் போல இருந்தது. கொஞ்ச நேரம் சோஃபாவில் அப்படியே அமர்ந்திருந்தாள் உமா. காந்திமதியின் வார்த்தைகள் மனதை அரித்துக் கொண்டிருந்தன.

எப்படி இவரால் இப்படி எல்லாம் பேச முடிகிறது? தனக்குப் பிடிக்காத பெண் என்றாலும், நடந்து முடிந்த ஒரு கல்யாணத்தை தகர்த்து விடுவேன் என்பது எவ்வளவு பெரிய வார்த்தை. நினைக்கவே கஷ்டமாக இருந்தது

இவள் அமர்ந்திருந்த கோலத்தைப் பார்த்த பார்வதி அம்மா, அவள் பக்கத்தில் வந்து நின்றார். அவள் தலையை மெதுவாகத் தடவியவர்,

உமாக் கண்ணு, அந்தம்மா பேசின வார்த்தைகளை நினைச்சு வேதனைப் படுறீங்களாம்மா? நானும் ஒரு காதை இங்க வச்சுக்கிட்டு தான் வேலை பாத்துக்கிட்டு இருந்தேன். பெரிய மனுஷி பேசுற மாதிரியா அது பேசுது! விட்டுத் தள்ளுங்கம்மா. சுதாத் தம்பி அந்த மாதிரி ஆள் கிடையாது. நம்ம தம்பிக்கு உங்க மேல எவ்வளவு ஆசை இருக்குன்னு இந்தக் கொஞ்ச நாள்லயே நான் புரிஞ்சுக்கிட்டேன். அது இந்தக் கிழவிக்கு இன்னும் புரியலை.” சொன்னவரைப் பார்த்து லேசாகச் சிரித்தாள் உமா

பார்வதி அம்மா, நான் கொஞ்சம் எங்க வீடு வரைக்கும் போய்ட்டு வந்திர்றேன். நீங்க சமையலை முடிச்சுட்டீங்கன்னா கிளம்புங்கம்மா. மத்த வேலையை சாயங்காலம் பாத்துக்கலாம்.” சொன்னவளைக் கவலையாகப் பார்த்தார் பார்வதி. வாழ்ந்து முடித்திருந்தவருக்கு இது அத்தனை சரியாகத் தோணவில்லை

தம்பிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புங்க கண்ணு.” வாஞ்சையாகச் சொன்னவரைப் பார்த்து புன்னகைத்தாள் உமா. அந்தச் சிரிப்பே சொன்னது, அவள் நிச்சயம் சுதாகரனைத் தொடர்பு கொள்ளப் போவதில்லை என்று.

                      ————————–

பாட்டியை வீட்டில் விட்டு விட்டு மில்லுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் சுதாகரன். மனம் முழுவதும் உமாவிடமே இருந்தது. பார்வதி அம்மா கால் பண்ணி விஷயத்தைச் சொன்னதும் ஆடிப் போய் விட்டான்

வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தான் என்பதே தெரியாத அளவுக்கு அவன் ட்ரைவிங் இருந்தது. எத்தனை அவசரமாக வந்த போதும் உமாவின் கலங்கிய முகத்தைப் பார்த்த போது, தான் காலதாமதம் தான் என்று தெளிவாகத் தெரிந்தது.

அதனால்தான் பாட்டியைக் கையோடு அழைத்துச் சென்று விட்டான். மூச்சு முட்டியது சுதாகரனுக்கு. ‘அவனவன் எப்பிடித்தான் ரெண்டு, மூனுன்னு சமாளிக்கிறானோ?’ தலையை ஒரு முறை உலுக்கிக் கொண்டவனைக் கலைத்தது ஃபோன். காரை ஒரு ஓரமாக நிறுத்தியவன்,

சொல்லுங்க பார்வதி அம்மா.” என்றான்.

தம்பி, உமாக்கண்ணு அவங்க வீட்டுக்கு கிளம்பிப் போகுதுப்பா. முகம் அவ்வளவு நல்லா இல்லை தம்பி. கொஞ்சம் ஒரு எட்டு போய்ப் பாத்திடுப்பா.”

பாட்டி ஏதாவது ஏடாகூடமாக பேசினாங்களாம்மா?”

பாட்டி பேசினது எல்லாமே ஏடாகூடம் தான் தம்பி.”

சரிம்மா, நான் பாத்துக்கிறேன். நானும், மதுவும் நைட்டுக்கு வெளியே போறோம். அதனால நீங்க நாளைக்கு வந்தாப் போதும்மா.” சொல்லி விட்டு அவசரமாக ஃபோனை வைத்தவன் காரை நேராக தமிழ்ச்செல்வன் வீட்டிற்கு விட்டான்.

ஹாலிலேயே ஆராதனா கையைப் பிசைந்து கொண்டு நின்றார். வீட்டில் வேறு யாரும் இருக்கும் அரவம் தெரியவில்லை. இவன் தலையைக் கண்டதும்,

சுதா, என்னாச்சுப்பா? ஏன் உமா ஒரு மாதிரியா இருக்கா? முகமெல்லாம் அழுத மாதிரி இருக்கு?” கேள்விகளை அடுக்கிய படி வந்து நின்றார் ஆராதனா.

ஒன்னுமில்லை அத்தை. இப்போ மது எங்க?”

அவ ரூம்ல இருக்கா. வந்ததும் வராததுமா ரூமுக்குள்ள போய் உக்காந்துக்கிட்டா. கேட்டா எதுவும் வாயைத் தொறந்து பதில் சொல்லவும் மாட்டேங்கிறா.” சொல்லிக் கொண்டிருக்கும்போதே தமிழ்ச்செல்வனின் கார் வந்து நின்றது. அவரும் கலவரமாக வந்து நிற்க,

எதுக்கு அத்தை இப்போ மாமாக்கெல்லாம் கால் பண்ணினீங்க?” என்றான் சுதாகரன்.

உனக்கு என்னப்பா, நீ ஈஸியா சொல்லிட்ட. உமாவை அப்பிடிப் பாத்ததும் எனக்குக் கையும், ஓடலை காலும் ஓடலை.” கலங்கிய குரலில் சொன்னார் ஆராதனா.

எங்கயும் எதுவும் ஓட வேணாம். நான் தெரியாமத்தான் கேக்குறேன், நீங்களும், மாமாவும் சண்டை போட்டுக்கிட்டதே இல்லையா அத்தை?” 

அதுஅது…” ஆராதனா இழுக்க, அதுவரை மௌனமாக இருந்த தமிழ்ச்செல்வன்,

அதெல்லாம் சூப்பராப் போடுவோம் சுதா.” என்றார். அவர் பதிலில் வாய்விட்டுச் சிரித்த சுதாகரன்

நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் எதையும் கண்டுக்காதீங்க. எம் பொண்டாட்டி செம கோபத்துல வந்திருக்கா. அனேகமா நான் அவ கால்ல விழ வேண்டி வந்தாலும் வரும்.” சொல்லிவிட்டு நகரப் போனவனை தடுத்த ஆராதனா,

சுதா, கல்யாணத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் ரெண்டு பேரும் சேந்து வீட்டுக்கு வந்திருக்கீங்க. மத்தியானம் சாப்பிட்டுட்டு போங்க, சரியா?” என்றார்.

ஆஹா, மில்லுல முதலாளி கிட்ட இன்னைக்கு லீவ் கிடைக்குமான்னு தெரியலையே அத்தை.” வேண்டுமென்றே அவன் தலையை தட்டி யோசிக்க,

இன்னைக்கு முதலாளியே லீவு தான் சுதாகரா. பொண்ணும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு வந்திருக்காங்களாம்.” என்றார் தமிழ்ச்செல்வன். சிரித்தபடியே உமாவின் ரூம் கதவைத் திறந்தான் சுதாகரன்.

அம்மா, ஒரு பிரச்சினையும் இல்லைன்னு எத்தனை தட…” பாதியிலேயே நின்றது உமாவின் குரல். ஆராதனா தான் வருகிறார் என்று எண்ணியிருந்தவள், சுதாவைக் காணவும் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

கட்டிலில் அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன், அவளை பிடித்து எழுப்பி தன்னருகே நிறுத்திக் கொண்டான். அந்த அருகாமை அவளை ஏதோ செய்ய,

விடுங்க என்னை.” என்றாள்.

முடியாது, இப்போ எதுக்கு இங்க வந்து உக்காந்திருக்கே? நமக்கு வீடில்லையா என்ன?” அவன் சொன்னதும் அவள் கண்களில் கர கரவென நீர் கோர்த்துக் கொண்டது.

மதுஏய்என்னடா நீ? சின்னப் பிள்ளை மாதிரி எல்லாத்துக்கும் அழுதுக்கிட்டு?” அவள் கண்களைத் துடைத்து விட்டவன், அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்.

நான் உங்களை மயக்கி வச்சிருக்கேனாம், உங்க பாட்டி சொல்லுறாங்க.” அவள் முறைப்பாடாகக் கூறவும்,

சரியாத்தானேடி சொல்லி இருக்காங்க. இதுக்கா உனக்குக் கோபம் வந்துது?” என்றான் சுதாகரன்.

இந்தக் கல்யாணமே செல்லுபடி ஆகாதாம். இந்தத் தாலியைத் தூக்கித் தூரப் போட்டுட்டு, உங்களுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கப் போறாங்களாம்.”

அதுதான் வர்றவளுக்கு இடத்தைக் கொடுத்துட்டு நீ இங்க வந்துட்டியா?” சொன்னவனை சரமாரியாக அடித்தாள் உமா.

நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். என்னோட வேதனை உங்களுக்கு கேலியா இருக்கா?” ஒவ்வொரு வார்த்தைக்கும் சுதாகரனுக்கு அடி விழுந்தது.

ஏய்வலிக்குதுடி.” சிரித்த படி சொன்னவன், அவளைத் தன்னோடு சேரத்து அணைத்துக் கொண்டான்

பேபியாடி நீ? அவங்க என்ன சொன்னாலும் கண்ணைக் கசக்கிட்டு நிப்பியா?”

நான் விடலை. என்னோட அத்தான் அப்பிடியெல்லாம் பண்ணமாட்டாங்கன்னு நல்லா உறைக்கிற மாதிரி சொல்லிட்டேன்வாகாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு வியாக்கியானம் பேசினாள் உமா.

சொல்லிட்டியா? அதானே பாத்தேன். எம் மதுவா? கொக்காகோபம் வந்தா வார்த்தை அம்பு மாதிரி வரும், இல்லைன்னா ஒரு பார்வை வெச்சிருக்கியேஎங்கப்பா! நானே அந்தப் பார்வைக்கு முன்னாடி நின்னு பிடிக்க மாட்டேன். பாவம், எங்க பாட்டி வயசானவங்க.” அவன் சொல்லி முடிக்கும் முன்னர்,

அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?” குறுக்கிட்டாள் உமா. வில்லங்கம் இப்போதுதான் வருகிறது என்று நன்றாகப் புரிந்தது சுதாகரனுக்கு.

நான் என்ன சொன்னாலும் எம் பேரன் கேப்பான், எம் பேச்சைத் தட்ட மாட்டான்னு சொன்னாங்க. இதுவும் உண்மைதான் இல்லையா அத்தான்?” கலங்கிய குரலில் உமா கேட்டபோது, அத்தனை நேரமும் அங்கே தவழ்ந்திருந்த குறும்பும், கேலியும் காணாமல் போனது. ஒரு பெருமூச்சை இழுத்து விட்ட சுதாகரன்,

மது, உனக்கு இன்னும் என்னைப் புரியலையா மது? உம் மேல நான் பைத்தியமா இருக்கேனே அதை உன்னால உணர முடியல்லையா? பாட்டி சொல்லுறதைத் தான் கேப்பேன்னா, எங்க அத்தை பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்கலாமே. பெங்களூர்ல இல்லாத பொண்ணுங்களா? அதுல ஒன்னைப் பாத்திருக்கலாமே. எதுக்கு பைத்தியம் மாதிரி அலைஞ்சு திரிஞ்சு உன்னைக் கண்டு பிடிச்சு கல்யாணம் பண்ணனும்? இதுதான் சாக்குன்னு பாட்டி சொல்லுறதுக்கு பேசாம தலை ஆட்டி இருக்கலாமே.”

அவன் விளக்கத்தில் மௌனமாகிப் போனாள் உமா. அவன் சொல்வதில் இருந்த நியாயம் அவளுக்கும் புரிந்தது. ஆனால், அந்தப் பாட்டி என்று வந்துவிட்டால் தான் நிலை தடுமாறிப் போவது ஏனென்று அவளுக்குமே புரியவில்லை.

தப்பு எம் மேலதான். நீ என்னோட அன்பை உணரலைங்கிறதை விட நான் உணர்த்தலைங்கிறதுதான் உண்மை.” லேசாகச் சிரித்தவன்,

கல்யாணத்துக்கு அப்புறம் முதல் தடவையா மாமனார் வீட்டுக்கு வந்திருக்கேன். அத்தை சமையல் கட்டுல விருந்தே வெக்கிறாங்க. அத்தை பொண்ணு எப்போ விருந்து வெப்பீங்க?” என்றான் கண்ணடித்தபடி. கடந்து போன கனமான சில நிமிடங்களை அவன் பேச்சால் சாமர்த்தியத்தியமாக கடந்து வந்தான் சுதாகரன். அவள் லேசாக அவனை விட்டு விலகவும்,

கொஞ்சம் கருணை காட்டினா தப்பில்லை அம்மணி.” விலகப் போனவளை இன்னும் சேர்த்து அணைத்தான்.

நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

முத்தமிழ்

நீ வெட்கப்பட்டு சிரித்தாள்

செந்தமிழ்

அவள் காதோரம் பாடியவனைத் தள்ளி விட்டு ரூமை விட்டு வெளியேறினாள் உமா. அவனும் சிரித்த படியே பின் தொடர்ந்தான்

தமிழ்செல்வனின் வீடு சந்தோஷக் கூத்தாடியது. வெளியே சென்றிருந்த சிதம்பரம் ஐயாவும், தமிழரசியும் திரும்பிவிட இன்னும் அந்த இடம் களை கட்டியது

மனதில் சிறு கலக்கத்தோடே சமையலில் இறங்கி இருந்த ஆராதனாவிற்கு, உமாவின் மலர்ந்த முகத்தைப் பார்த்த பிறகுதான் நிம்மதியாக இருந்தது. விருந்தை அமர்க்களப் படுத்தி இருந்தார்.

எல்லோரும் உண்டு முடித்த பின் ஹாலில் உட்கார்ந்து அரட்டையடிக்க, சமையலறையில் ஏதோ பண்ணிக்கொண்டிருந்த ஆராதனாவை தேடி வந்தான் சுதாகரன். அவனைப் பார்த்த ஆராதனா,

என்ன சுதா, ஏதாவது வேணுமா?” என்றார்.

அத்தை ஈவ்னிங் ஒரு இடத்துக்குப் போகணும். எங்கேன்னு இப்போவே மதுக்கிட்ட சொல்லாதீங்க.” என்றவன், போக இருக்கும் இடத்தைச் சொல்ல, கொஞ்சம் திணறினார் ஆராதனா.

சுதாஎதுக்கு இப்போ…” அவர் இழுக்கவும் அவரைப் பார்த்து புன்னகைத்தவன்

பட்டுப் புடவை கட்டி, நல்லா அலங்காரம் பண்ணிவிடுங்க அத்தை எம் பொண்டாட்டிக்கு.” என்றான். அவன் சொன்ன பாவனையில் சிரித்தே விட்டார் ஆராதனா

மனம் நிறைந்து போயிருந்தது. இந்த சந்தோஷம் என்றும் நிலைக்க வேண்டும் ஆண்டவா என்று அவசரமாக விண்ணப்பம் வைத்தது அந்தத் தாய் மனது.

ரூமிற்குள் போன சுதாகரன், சோஃபாவில் உட்கார்ந்து பாட்டியோடு அரட்டைக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த உமாவை வேண்டுமென்றே சத்தமாக அழைத்தான். பேசிக் கொண்டிருந்த பாட்டி,

உமா, சுதாத்தம்பி கூப்பிடுது. என்னன்னு போய்ப் பாரும்மா.” சிரத்தையாக பேத்தியை அங்கிருந்து கிளப்பி விட்டிருந்தார் தமிழரசி. பல்லைக் கடித்துக் கொண்டு ரூமிற்கு வந்திருந்தாள் உமா. சாவதானமாக கட்டிலில் கால் நீட்டிப் படுத்திருந்தான் சுதாகரன்.

அத்தான், இன்னைக்கு ரொம்பவே ஓவராப் பண்ணுறீங்க.” சொன்னவளை அண்ணார்ந்து பார்த்தவன்,

கூப்பிடு உங்க பாட்டியை, அப்பிடி நான் என்னத்தை ஓவராப் பண்ணிட்டேன்னு கேப்போம். பாட்….” அவள் கைகளால் அவன் வாயை இறுக்கி மூடியவள்

எதுக்கு இப்போ அவங்களை கூப்பிடுறீங்க? இன்னைக்கு முழுக்க காதுல ரத்தம் வர்ற அளவுக்கு எனக்கு அட்வைஸ் பண்ணவா?” என்றாள்

அந்தப் பயம் இருக்கில்லையா? பேசாம இங்க தூங்கி ரெஸ்ட் எடு.”

நான் என்ன வெட்டி முறிச்சதுக்கு இப்போ ரெஸ்ட் எடுக்கனும்?”

ஒரு வேளை இனித்தான் வெட்டி முறிக்கப் போறியோ என்னவோ?”

என்ன சொல்லுறீங்க நீங்க? ஒன்னும் புரியல.”

உனக்கு ஒன்னும் புரிய வேணாம். ஈவ்னிங் ஒரு இடத்துக்குப் போகணும். டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்காங்க. அதணுக்குத் தான் சொல்லுறேன், ரெஸ்ட் எடு.” சொன்னவன் அவள் கையைப் பிடித்திழுத்து அருகில் தூங்க வைத்தான்

தூங்கு மது.” சொன்னவன், கொஞ்ச நேரத்திலேயே தூங்கிவிட, ‘இப்பிடி ஒட்டிக்கிட்டே தூங்கினா எப்பிடித் தூக்கம் வருமாம்?’ மனதுக்குள் நினைத்துக் கொண்டவளுக்குத் தெரியாது, சற்று நேரத்திலேயே அவளும் உறங்கிப் போனது.

 

 

error: Content is protected !!