VKV 25
VKV 25
வண்ணம் கொண்ட வெண்ணிலவே 25
ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன்னால் மௌனமாக அமர்ந்திருந்தாள் உமா. அரக்கு நிறப் பட்டுப் புடவையில் பெரிய அகலக் கரை தங்க போர்டர். உடல் முழுவதும் தங்கப் பூக்கள் பூத்திருக்க புடவை தக தகத்தது.
போதாததற்கு பெரிய ஆரம், வைர அட்டியல், காதில் பெரிய குடை ஜிமிக்கி என அத்தனையும் பூட்டி இருந்தார் ஆராதனா. தலை நிறைய மல்லிகைப் பூ வேறு.
எத்தனை சொல்லியும் கேட்காமல், லேசாக மேக் அப் வேறு போட்டு விட்டார். ஒரு எல்லைக்கு மேல் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்து கொண்டாள் உமா.
“சுதா தான் இப்பிடி எல்லாம் அலங்காரம் பண்ணச் சொல்லிச்சு உமா. அதனால நீ என்னைக் கோபிச்சு எதுவும் ஆகப் போறதில்லை.”
“சரி, எங்கதான் போகப் போறோம்னாவது ஏதாவது சொன்னாங்களா?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ சுதாக்கிட்டயே கேட்டுக்கோ.” சொல்லி விட்டு நகரந்து விட்டார் ஆராதனா. இத்தனையும் ஆராதனாவின் ரூமிலேயே நடந்து கொண்டிருந்தது.
அலங்காரம் முடியவும் எழுந்து தங்கள் ரூமிற்கு வந்தாள் உமா. அப்போதுதான் சுதாகரன் ரெடியாகி முடித்திருந்தான். பட்டு வேட்டி, சட்டையில் ஜம்மென்று இருந்தான். அவனை ஒரு நிமிடம் அளந்தவள்,
“அத்தான் எங்க போகப் போறோம்? கோயிலுக்கா?” என்றாள்.
“ஆமா மது.” சொல்லிய படி திரும்பியவன், அவளைப் பார்த்ததும் லேசாக விசிலடித்தான். அவளைச் சுற்றி ஒரு நடை நடந்தவன்,
“செமையா இருக்க மது.” என்றான். அவள் கூந்தல் மல்லிகையின் வாசம் பிடித்தவன்,
“எங்கப்பா சாமி! செத்தான்டா சுதாகர்.” என்றான். அவன் செய்கைகளில் கிறங்கிய மனதை மறைத்து அவனைத் தள்ளி விட்டவள்,
“எத்தனை மணிக்கு கிளம்பனும் அத்தான்.” என்றாள்.
“இப்போவே போகலாம் மது.” சொல்லிவிட்டு, அவள் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டு ஹாலுக்கு வந்தான். தாத்தா, பாட்டி, தமிழ்ச்செல்வன், ஆராதனா எல்லோரும் சோஃபாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். தாத்தா பாட்டியிடம் வந்தவன்,
“எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க தாத்தா.” என்றான். சிதம்பரம் ஐயா தமிழரசியின் முகத்தை ஆச்சரியமாகப் பார்த்தாலும், தம்பதி சகிதம் ஆசிர்வதித்தார்.
அடுத்து தமிழ்ச்செல்வன், ஆராதனா விடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு இருவரும் அந்த black Audi இல் புறப்பட்டார்கள். குழப்பத்தில் உமாவின் முகமிருக்க, மனைவியின் அழகை கண்களால் பருகியதற்கே சொக்கிப் போயிருந்தது சுதாகரனின் முகம்.
———————————————————
கார் போகும் திசையைப் பார்த்த போது உமாவிற்குப் புரிந்தது தாங்கள் கோவிலுக்குப் போகவில்லை என்று. எத்தனை முறை கேட்டாலும் மர்மமான சிரிப்பே பதிலாக வர இப்போது அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
அவளின் அமைதியான முகத்தைப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டான் சுதாகரன். ‘இன்னும் கொஞ்ச நேரத்தில் மதுவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?’ என்று அவனால் கற்பனை பண்ண முடிந்தது. காரை அந்த வளைவில் அவன் ஒடித்துத் திருப்பவும் உமா உஷாராகி விட்டாள்.
“அ… அத்தான், எங்… எங்க போறோம்?” என்றாள் திக்கித் திணறியபடி. அப்போதும் சிரிப்பையே பதிலாகத் தந்தவன், குந்தவியின் வீட்டிற்கு முன்னால் காரை நிறுத்தி பலமாக ஹார்னை அடித்தான்.
சத்தம் கேட்ட அடுத்த நிமிடம், தன் வயதையும் மறந்து குமரி போல ஓடி வந்தார் குந்தவி. காரை நிறுத்திய சுதாகரன்,
“ஐயோ! அம்மா, பாத்து வாங்க. எதுக்கு இப்போ இந்த அவசரம்?” என்றான். தன் மகனைக் கணக்கில் கொள்ளாமல், உமா அமர்ந்திருந்த பக்கம் வந்தவர்,
“உமா, என் ராஜாத்தி.” என்றுவிட்டு, கார்க் கதவைத் திறந்து விட்டார். அப்போதும் இறங்காமல் மலங்க மலங்க முழித்தவளைப் பார்த்து,
“இறங்கும்மா.” என்றார்.
“அத்தை… அது வந்து…”
“மது…! அது தான் அம்மா சொல்றாங்க இல்லை. இறங்கி வா. சுதாகர் சொல்லவும், மெதுவாக இறங்கினாள் உமா. ஆனால் நடையில் தயக்கம் இருந்தது.
“வாங்க வாங்க.” என்று இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போனவர்,
“மகேஷ்.” என்று குரல் கொடுக்க, ஆரத்தித் தட்டோடு வந்தான் மகேஷ்.
“அண்ணா! என்னோட நிலைமையை பாத்தியா? இதுக்குத் தான் அக்கா, தங்கைங்களோட பொறக்கனும்னு சொல்லுறது.” மகேஷ் அங்கலாய்க்க, வாய் விட்டுச் சிரித்தான் சுதாகரன். குந்தவி ஆசையாக ஆரத்தி எடுக்க, அக்கம் பக்கம் ஒரு சில தலைகள் எட்டிப் பார்த்தன.
“அப்பா எங்கேம்மா?” கண்கள் வீட்டை ஒரு அலசு அலச, குந்தவியைப் பார்த்துக் கேட்டான் சுதாகரன்.
“ஹாஸ்பிடல் வரைக்கும் போயிருக்காங்கப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க. குந்தவி சொல்லி முடிக்கவும், மகேஷைப் பார்த்த சுதாகரன் கண்களாலேயே ‘ பாட்டி எங்கே?’ என்றான். பதிலுக்கு மகேஷும் அவரின் ரூமைச் சுட்டிக் காட்ட, எல்லோரும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.
சுதாகரன் ஏற்கனவே குந்தவிக்குத் தங்கள் வருகை பற்றி அறிவித்திருக்க, வீட்டை ஒரு வழி பண்ணிவிட்டார் குந்தவி. விருந்து ஒரு பக்கம் தயாராக, சுதாகரனின் ரூமையும் க்ளீன் பண்ணியிருந்தார்.
வந்ததும் வராததுமாக பாட்டி ரூமிற்குள் நுழைந்த சுதாகரன், அவரைக் கையோடு வெளியே அழைத்து வந்தான்.
“என்ன பாட்டி, முதல் முறையா உங்க பேரன், பொண்டாட்டியையும் கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்திருக்கான். நீங்க என்னடான்னா ரூமுக்குள்ள உக்காந்து இருக்கீங்க. வீட்டுக்கு மூத்தவங்களா நீங்க வந்து இல்ல எங்களை வரவேத்திருக்கனும்.”
சுதாகரனின் செய்கையில் பாட்டி மட்டுமல்ல, அங்கிருந்த அத்தனை பேரும் மலைத்துப் போனார்கள். இவன் எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்குறான் என்ற கேள்வி குந்தவியின் முகத்தில் தெரிய, மகேஷ் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“அது ஒன்னுமில்லை சுதாகரா, இன்னைக்கு காலையில ஒரு நடை உங்க வீட்டுக்கு வந்தனா? அது கொஞ்சம் டயர்டா இருந்துதுப்பா.”
“என்னது? பாட்டி உங்க வீட்டுக்கு வந்தாங்களா? இது எப்போ?” பாட்டி சொல்லி முடிக்கவும் அலறினான் மகேஷ்.
“எதுக்குடா நீ அதுக்கு இந்தக் கத்து கத்துறே? நான் எம் பேரன் வீட்டுக்குப் போனேன்.” கடைக் கண்ணால் உமாவைப் பார்த்தபடி, அந்தப் பேரனில் ஒரு அழுத்தம் கொடுத்தார் காந்திமதி.
“அது சரி, நீங்க உங்க பேரனுக்கு வாங்கிக் குடுத்த வீடு பாருங்க. அதுதான் அத்தனை உரிமையா போயிருக்கீங்க. ஆமா, நீங்க போனப்போ அண்ணா இருந்திருக்க மாட்டானே?” இப்போது சிரிப்பை மறைக்க உமா தலையைத் திருப்பிக் கொண்டாள்.
“சுதா வீட்டுல இருப்பான்னு நினைச்சுத்தான் நான் போனேன். உனக்கென்னடா வந்துது? நான் உன் வீட்டுக்கா வந்தேன்?”
“ஆ… இந்த விளையாட்டெல்லாம் மகேஷ்கிட்ட செல்லுபடியாகாது பாட்டி. நீங்க அண்ணாவோட நின்னுக்கங்க.” சொன்னவனை முறைத்தவர்,
“சுதா, பாட்டி கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்பா.” சொல்லி விட்டு ரூமிற்குள் போய்விட்டார். உமாவை கையோடு குந்தவி அழைத்துச் செல்ல,
“மகேஷ், கொஞ்சம் வெளியே வா.” சொன்ன சுதாகர் எழுந்து வெளியே போனவன், கேட்டுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான். பின்னோடு வந்த மகேஷ்,
“என்னண்ணா நடக்குது? இந்தப் பாட்டி அங்க வந்து சண்டை போட்டாங்களா?” என்றான் காட்டமாக.
“அதுவும் நான் இல்லாத நேரம் பாத்து வந்திருக்காங்க மகேஷ்.”
“நினைச்சேன், இந்தப் பாட்டி இப்பிடித்தான் ஏதாவது வில்லங்கம் பண்ணி இருக்கும்னு.”
“அப்போதான் மில்லுக்கு போயிருக்கேன், கால் வருது. யாருன்னு பாத்தா, பார்வதி அம்மா.”
“யாரு? சமையலுக்குன்னு அம்மா அனுப்பினாங்களே, அவங்களா?”
“ம்… ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு மகேஷ். இது கல்யாணமே இல்லை, நான் சுதாக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வெக்கப் போறேன்னு சொல்லி இருக்காங்க.”
“ஐயையோ! இந்தக் கிழவியெல்லாம் ஒரு பெரிய மனுஷியா? என்ன பேசியிருக்கு பாத்தியாண்ணா?”
“உமா சொல்லி அழுதா மகேஷ். பெரியவங்க மனசு நோக பேசிடக் கூடாதுன்னு பாத்தா, இன்னைக்கு கொஞ்சம் ஓவரா பண்ணிட்டாங்க.”
“இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் எதுக்குண்ணா இங்க உமாவைக் கூட்டிக்கிட்டு வந்தே?”
“இல்லை மகேஷ், நாம ஒதுங்கி இருந்தாலாவது பாட்டி புரிஞ்சுக்குவாங்கன்னு நினைச்சேன். ஆனா அவங்க தேடி வந்து சண்டை போடுறாங்க. இனி ஒதுங்கி இருக்கிறதுல அர்த்தம் இல்லை.”
“அப்போ இங்கேயே தங்கப் போறீங்களா?”
“இல்லையில்லை. இங்க வந்தா மதுவை ஒரு வழி பண்ணிடுவாங்க. அதை என்னால அனுமதிக்க முடியாது. ஆனா அவங்களுக்குப் புரிய வெக்கனும். மது எனக்கு எவ்வளவு முக்கியம்னு அவங்களுக்கு புரிய வெக்கனும்.” தீர்மானமாக இருந்தது சுதாகரனின் குரல்.
“புரிஞ்சுக்குவாங்களா?”
“அது தெரியல்லை. ஆனா ஒதுங்கி ஒதுங்கிப் போனா கடைசியில அம்மா நிலைமைதான் மதுவுக்கும் வரும். அதை என்னால பொறுத்துக்க முடியாது மகேஷ்.”
“எதுக்கு பொறுத்துக்கனும்? அப்பாவும் ஆரம்பத்துலேயே எல்லாத்தையும் தட்டி வெச்சிருந்தா அம்மாக்கு இந்த நிலைமை வந்திருக்காது.”
“ம்… அம்மாக்காவது மாமியார், அனுசரிச்சுப் போகனும்கிற தேவை இருந்துது. மதுக்கு அது கூட இல்லையே மகேஷ். அப்போ எதுக்கு அவ இப்படியெல்லாம் கதை கேக்கனும்?” இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பிரபாகரனின் கார் வந்து நின்றது. இறங்கி வந்தவர், சுதாகரனை அணைத்துக் கொண்டார்.
“எப்பிடி இருக்கே சுதாகரா? உமா எப்பிடி இருக்கா?”
“நல்லா இருக்கோம்பா.” பேசிக் கொண்டே மூன்று பேரும் உள்ளே வந்தார்கள். சாப்பாடும் தயாராகி இருக்க, குந்தவி சாப்பிட ஆயத்தங்கள் பண்ணிக் கொண்டிருந்தார்.
“ப்ரபா, வந்துட்டீங்களா? சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க, சாப்பிடலாம். உமாக்கு பசிக்கும்.” குந்தவியின் குரல் ஆர்ப்பரித்தது. மனைவியை ஒரு கணம் உற்று நோக்கியவர், கண் ஜாடை காட்டி விட்டு ரூமிற்குள் போனார். பின்னோடு போனவர்,
“என்ன ப்ரபா? ஏதாவது வேணுமா?” என்றார்.
“டாலி, சுதாவும், உமாவும் வந்திருக்கிறது சந்தோஷமான விஷயம் தான். அதுக்காக இப்படியா டென்ஷனாகிறது? இப்போ தான் கன்டிஷன் நோர்மல் ஆகியிருக்கு. கொஞ்சம் பாத்துக்கோம்மா.”
“அதெல்லாம் ஒன்னும் இல்லை ப்ரபா. நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? என்னோட எத்தனையோ வருஷக் கனவு ப்ரபா. இன்னைக்கு நனவாகி இருக்கு.”
“ம்… புரியுதுடா. அதுக்காக ரொம்ப அலட்டிக்கக் கூடாதும்மா.”
“சரி ப்ரபா, நான் பாத்துக்கிறேன். நீங்க சீக்கிரமா குளிச்சிட்டு வாங்க.”
“டாலி, அம்மா ஏதாவது பிரச்சினை பண்ணினாங்களா?”
“இல்லையில்லை, அதெல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்ச நேரம் வந்து பேசிட்டுத்தான் போனாங்க.”
“ஓ… நம்ப முடியல்லையே, ஆச்சரியமா இருக்கு!”
“பேசிக்கிட்டே நிக்காம சீக்கிரம் வாங்க ப்ரபா.”
“சரிடா சரிடா. ஃபைவ் மினிட்ஸ், இதோ ஓடி வந்தர்றேன்.” சொல்லிக்கொண்டே டவலோடு பாத்ரூமிற்கு ஓடினார் பிரபாகரன்.
அதன் பிறகு வந்த ஒவ்வொரு மணித்துளியும் அந்த வீட்டில் ஆனந்த மயமாக இருந்தது. குடும்பமே கூடியிருந்து கும்மாளம் போட்டனர். ஒதுங்கிப் போன பாட்டியையும் விடவில்லை சுதாகரன்.
வேண்டுமென்றே தன்னோடு அவர் இருக்குமாறு பார்த்துக் கொண்டான். அவருக்கு முன்னாலேயே உமாவை பார்த்துப் பார்த்து கவனித்துக் கொண்டான். அவரின் முகச் சுளிப்பை அங்கு யாரும் கண்டு கொள்ளவே இல்லை.
“சுதா, இன்னைக்கு நைட் இங்கேயே தங்குங்களேன்.” அம்மா சொல்லவும், சுதாகரன் கண்களில் மின்னல் வந்து போனது. சட்டென்று உமாவைப் பார்த்தவன்,
“மதுக்கிட்ட கேளுங்கம்மா. அவளுக்கு ஓ கேன்னா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” முடிவு எடுக்கும் பொறுப்பை சாமர்த்தியமாக உமா தலையில் வைத்து விட்டு, உண்பதில் கவனமானான் சுதாகரன்.
இப்போது குந்தவியின் பார்வை உமாவிடம் இருந்தது. தர்ம சங்கடப் பட்டுப் போனாள் உமா. ஆசையாகக் கேட்பவரிடம் முடியாது என்றும் சொல்ல முடியவில்லை. ஆனால்…
“சரி அத்தை.” உமா ஒருவாறாக சொல்லவும், சுதாகரன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“என்ன மருமகளே, உன் மருமகள் ஒரு பொழுது உன் வீட்டுல தங்க இவ்வளவு யோசிக்குறா?” காந்திமதியின் குரலில் அப்பட்டமான கேலி இருந்தது.
“ஆ… நீங்களும் இங்க தான் இருக்கீங்க இல்லையா பாட்டி. அதான் ஒன்னுக்கு நாலு தடவை யோசிக்குறாங்க.” மகேஷின் குரலில் அவரை மிஞ்சிய கேலி இருந்தது.
சாப்பிட்டு முடித்த பின்பும் அரட்டைக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. ஒரு எல்லைக்கு மேல் ‘எனக்குத் தூக்கம் வருகிறது.’ என்று பாட்டி நகர்ந்து விட,
“ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னைக்குத் தான் வீடு கல கலன்னு இருக்கு. இல்லையா ப்ரபா?” என்றார் குந்தவி.
“ம்… பேசினது போதும், எல்லாரும் போய்த் தூங்குங்க. சுதா, அம்மா கண் முழிக்கிறது அவ்வளவு நல்லதில்லைப்பா.” பிரபாகரன் சொல்லவும், அம்மாவின் அருகில் வந்த சுதாகரன், அவர் கை பிடித்து எழுப்பினான். அவர் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்தவன்,
“போய்த் தூங்குங்கம்மா.” என்றான். குந்தவியின் கண்கள் கலங்கி விட்டது.
“சுதா…!”
“என்னால இங்க ரொம்ப நாளைக்கு இருக்க முடியாதும்மா. ஆனா, நீங்க வாங்கம்மா. நம்ம வீட்டுக்கு நீங்க வாங்க.”
“கண்டிப்பா வருவேன் சுதா. ‘இந்த அத்தை தொல்லை தாங்கல்லைன்னு’ உமா நினைக்கிற அளவுக்கு வருவேன் சுதா.” சொல்லி விட்டு குந்தவி சிரித்தார்.
“ஐயோ அத்தை! நான் எதுக்கு உங்களை அப்பிடி நினைக்கப் போறேன். நீங்க எங்க கூடவே வந்து இருங்க.”
“அம்மாடி உமா, நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்? எதுக்கு இந்த வயசு போன காலத்துல என் பொண்டாட்டியை எங்கிட்ட இருந்து பிரிக்கிறே?” பிரபாகரன் அப்பாவியாகச் சொல்லவும், சிரித்த படியே கலைந்து போனார்கள் எல்லோரும்.
உமாவின் கை பிடித்து அந்த ரூமிற்கு அழைத்து வந்தான் சுதாகரன். உமாவிற்கு அறிமுகமான இடம்தான். சிறு வயதில் இரண்டொரு முறை அந்த ரூமிற்கு மகேஷோடு வந்து விளையாடி இருக்கிறாள். அதற்காக பாட்டி வாயால் திட்டும் வாங்கி இருக்கிறாள்.
ஆனால் இன்று எல்லாம் முற்றாக வேறுபாடாக இருந்தது. தன் ரசனைக்கேற்ப சுதாகரன் அந்த இடத்தை நவீனப்படுத்தி இருந்தான். பின்னால் தாள் போடும் சத்தம் கேட்கவும், திரும்பிப் பார்த்தாள் உமா.
ஒரு வசீகரமான புன்னகையோடு அவளருகில் வந்தவன், அந்த மருண்ட விழிகளை தன் விரல்களால் அளந்தான். அவள் லேசாக விலகவும், அவள் இடை வளைத்து அணைத்தவன்,
“மதுவை உருகி உருகிக் காதலிச்ச இதே ரூம்லதான் மதுவோட சேரனும்னு இத்தனை நாள் காத்திருந்தேன் பேபி.” மயக்கமும், கிறக்கமுமாக வந்த அவன் குரலில் விக்கித்த உமா,
“அ…த்…தான்” என்று ஏதோ சொல்ல வர, தலையை இடம் வலமாக ஆட்டினான் சுதாகரன்.
“ம்ஹூம்… வாழ்க்கையை வாழ்ந்து பாக்கலாம் மது.” என்றவன், இத்தனை நாளும் அந்த மது தன்னை எத்தனை தூரம் போதையேற்றி இருக்கிறாள் என்று காட்ட ஆரம்பித்தான். மயங்கிப் போனாள் மாதுமையாள்.
————————————————————-
லேசாக உமாவிடம் அசைவு தெரியவும் அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் சுதாகரன்.
“அத்தான்.”
“ம்…” கண்களைத் திறவாமலேயே பதில் வந்தது.
“விடிஞ்சிருச்சு.”
“அதுக்குள்ளேவா?” நிச்சயமாக அந்தக் குரலில் ஏமாற்றம் இருந்தது
“ம்…” அவள் பதிலில் கண்விழித்துப் பார்த்தான் சுதாகரன். அழகாகக் கலைந்திருந்தாள் உமா. தன் முகம் பார்க்க மறுத்தவளைத் தன் புறமாகத் திருப்பி அவள் கண்களுக்குள் ஆழ்ந்து பார்த்தான்.
ஏறி இறங்கிய அவன் ஒற்றைப் புருவத்தில் லேசாக வெட்கப் பட்டவள், அவனிடமிருந்து விலகி அலமாரியை நோக்கிப் போனாள்.
“ரைட் சைட்ல உன்னோட திங்க்ஸ் எல்லாம் இருக்கு மது. இன்னைக்கு நான் கட்டாயம் மில்லுக்குப் போகணும். கோயம்புத்தூர் வரைக்கும் நானும், மாறன் மாமாவும் போறதா ஏற்கனவே ப்ளான் பண்ணினது. என்னை ஒரு எட்டு மணி போல எழுப்பி விடு மது.” சொல்லிவிட்டு மீண்டும் தூங்கிப் போனான் சுதாகரன்.
குளித்து முடித்து ஒரு சாதாரண பட்டுப் புடவையில் வெளியே வந்தவள், நேராக கிச்சனை நோக்கிப் போனாள். அங்கிருந்த சின்ன வட்ட மேசையில் குந்தவியும், பிரபாகரனும் அமர்ந்து காஃபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.
இவளைப் பார்த்ததும், ஒன்றாக ‘குட்மார்னிங்‘ சொன்னார்கள். பதிலுக்கு புன்னகையோடு ‘குட்மார்னிங்‘ சொன்னவளைத் தன்னருகே அமர்த்திக் கொண்டார் குந்தவி.
“நல்லாத் தூங்கினயா உமா?”
“ம்…” லேசாக முகம் சிவக்க தலையாட்டியவளைப் பார்த்து குந்தவியும், பிரபாகரனும் புன்னகைத்துக் கொண்டார்கள். அவள் கன்னத்தில் எட்டி முத்தம் வைத்த குந்தவி,
“என் உமாக்குட்டி இத்தனை அழகா என்ன?” என்றார். தனது கை நீட்டி உமாவின் தலையை பிரபாகரன் செல்லமாகக் கலைக்க,
“ஐயோ ப்ரபா! என்ன பண்ணுறீங்க நீங்க? உங்க தடிப்பசங்களுக்குப் பண்ணுற மாதிரி பொண்ணுங்களுக்குப் பண்ணக் கூடாது. பாருங்க உமா தலை கலைஞ்சிருச்சு.” சொல்லிய படியே அவள் தலையைக் கோதிவிட,
“சாரி உமா, மாமாக்கு இதெல்லாம் தெரியாதுடா. நான் என்னத்தைக் கண்டேன். உங்கத்தைக்கிட்ட பையன் ஒன்னும், பொண்ணு ஒன்னும் பெத்துக் குடுன்னா, அதுக்கு அவ ரெண்டையும் பையனாப் பெத்துட்டு என்னைக் குத்தம் சொல்லுறா.” என்றார் பிரபாகரன்.
“ஐயே! மருமகள் கிட்ட பேசுற பேச்சைப் பாரு.” குந்தவி உதடு சுளிக்கவும்,
“உனக்குத்தான் மருமகள், எனக்கு அவ பொண்ணு டாலி.” என்றவர், உமாவை தோளோடு அணைத்துக் கொண்டார். மாமன் தோளில் வாகாய்த் தலை சாய்த்து, குந்தவியைப் பார்த்துச் சிரித்தாள் உமா.
அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த அழகில் கண்கள் பனித்தது குந்தவிக்கு. தன் இரு கைகளாலும் அவர்கள் முகத்தைத் தடவி, தன் நெற்றியில் சொடக்கு முறித்து திருஷ்டி கழித்தார் அந்தப் புகழ்பெற்ற டாக்டர்.