VNE 22

அத்தியாயம் 22

ஒரு அவஸ்தையான மௌனம் சூழ்ந்திருந்தது அந்த வீட்டில்.

பைரவியும் முருகானந்தமும் வீட்டிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாகியிருந்தது. வீட்டிற்கு வரும் வரை கிருஷ்ணம்மாளிடம் எதையும் கூறாமல் தான் அழைத்து வந்தார் பைரவி. பேத்தியிடம் அவருக்குள்ள பாசம் இவர் அறிந்தது தான். முருகானந்தத்திடம் பக்குவமாக விஷயத்தை கூறியிருந்தார்.

முதலிலேயே அவருக்கு சற்று சந்தேகம் இருந்து வந்தது. ஷ்யாமை பற்றி ஓரளவு கேள்விப்பட்டதன் காரணம் ஒரு பக்கம், தங்களையே சுற்றி வரும் பெண்ணை நான்கு நாட்களாக காணவில்லையே என்ற கலக்கம் இன்னொரு பக்கம் அவரை சூழ்ந்திருந்தது.

என்னதான் மகன் சென்னையில் அவளிருப்பதாக காட்டிக் கொண்டிருந்தாலும், பெற்றவரால் உணர முடியாதா என்ன?

பைரவி மகள் கஸ்டடி எடுக்கப்பட்ட விவரத்தை கூறிய போது அவரது மனநிலையை விளக்க வார்த்தைகள் இல்லை.

காரணம் அவராக இருக்கிறாரே! படத் தயாரிப்பே வேண்டாம் என்று அந்த பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்ற சொன்ன பிள்ளையை அவரல்லவா சமாதானப்படுத்தி படத் தயாரிப்பில் இறங்க வைத்தார்.

அதிலும் அகலக் கால் வைக்க மாட்டேன் என்றும் கூறிய கார்த்திக்கை, கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து, அது தனது கனவு தயாரிப்பு என்றெல்லாம் கூறி அவனை படமெடுக்க செய்ததும் இவர் தானே!

அதுவரை கூட சிறிய பட்ஜெக்டில் அளவான இன்வெஸ்ட்மென்ட், அளவான லாபம் என்று தானே இருந்தார்.

ஏன் அவருக்கு இப்படியொரு ஆசை வர வேண்டும்?

அவரது இந்த ஆசையால் தானே கார்த்திக் இந்த தயாரிப்பில் இறங்கினான். ஷ்யாமின் குணம் தெரிந்தும் அவனிடம் பணம் வாங்கினான். எப்படியும் எப்போதும் போல முடித்து விடலாம் என்ற நம்பிக்கை!

ஆனால் அந்த நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவரால் எப்படி உணர முடியாமல் போனது?

முன்னம் இருந்தது போலவே சினிமா தயாரிப்பு இப்போது இருக்கவில்லை. நான்கு பக்கமிருந்தும் ப்ரெஷர் அதிகம் என்பதும் அவருக்கு புரிந்தும், அனுபவம் இல்லாத பிள்ளையை அதில் இறக்கி விட்டது தவறோ?

ஷ்யாமின் தந்தையை போலவே அவனும் இருப்பான் என்று எப்படி தப்பு கணக்கு போட முடிந்தது?

ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு இருந்தவருக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. அவசரமாக மாத்திரையை எடுத்து அடிநாக்கில் வைத்துக் கொண்டார். மாத்திரை கரைந்து கலக்க, ஆசுவாசமாக சோபாவின் பின்னே சாய்ந்து கொண்டார்.

அவராவது இந்த அளவு தேறுதலாக இருக்கிறார். கிருஷ்ணம்மாள் விஷயத்தை கேட்டது முதல் நினைவில்லாமல் அல்லவா இருக்கிறார்.

கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மனைவியை ஏறிட்டு பார்த்தார். குற்ற உணர்வு நெஞ்சை மீண்டும் அழுத்தியது.

பிருந்தா தான் அனைவரையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்துக் கொண்டிருந்தாள். அவளும் அழுதிருப்பாள் போல… முகம் வீங்கியிருந்தது. அவ்வப்போது கார்த்திக்கிடம் என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதை உணர்ந்தார் பைரவி. ஆனால் அது அவரது கவனத்தில் பதியவில்லை.

அவருக்கு கார்த்திக்கை பற்றிய கவலை இப்போது இல்லை. அவரது கவலையெல்லாம் தன்னுடைய சிறிய பெண்ணை பற்றி மட்டும் தான். வேறெந்த நினைவையும் அவர் அப்போது சுமக்கவில்லை.

தினம் தினம் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் அவள் தானே அவரது உயிர்!

எதற்கெடுத்தாலும் தன்னிடம் வம்புக்கு நிற்பவளை திட்டுவது போல் காட்டிக் கொண்டாலும், தனிமையில் கணவரிடம் பெருமை பேசுவதை மறந்து விட முடியுமா? மறுத்துவிட முடியுமா?

இப்போது என்ன செய்து கொண்டிருப்பாளோ என்ற தவிப்பு அவருக்கு. உணவை பொறுத்தமட்டில் இன்னமுமே அவளுக்கு ஊட்டி விட வேண்டும். அப்போதுதான் இறங்கும்.

இல்லையென்றால் கையில் ஒரு புத்தகத்தோடு கோழி கொறிப்பது போல, கொறித்துக் கொண்டிருப்பாள்.

ஒவ்வொன்றையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் வழிந்து அவரது நெஞ்சை நனைத்தது.

தான் எத்தனை கவலைப்பட்டாலும், சூழ்நிலைக்கேற்ப தன்னை பொருத்தி கொண்டு, விடுபட்டு விடுவாள் என்பதையும் அவரது உள்மனம் உணர்த்திக் கொண்டுதான் இருந்தது. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மையாலும், இடியே விழுந்தாலும் என்னோட ஸ்நாக்ஸ் பத்திரமா என்று மட்டும் கவலைப்படும் மகளால் அவ்வளவு சீக்கிரத்தில் உடைய முடியாது என்பதது தான் உண்மை.

நெஞ்சை நீவி விட்டுக்கொண்ட முருகானந்தம், செல்பேசியில் தொடர்ந்து பேசியவாறு இருந்த கார்த்திக்கை பார்த்து விட்டு, அவரது பேசியை எடுத்து ஆத்மநாதனுக்கு அழைத்தார்.

“நான் முருகானந்தம் பேசறேன்…” என்று இவர் ஆரம்பிக்க, மறுபுறத்தில் மௌனம் மட்டுமே! இவருக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் போனது.

ஆத்மநாதனுக்கு அவரது உணர்வு புரிந்தாலும் என்ன சொல்ல? அதிலும் முருகானந்தம் இப்படி ஆரம்பிக்கக் கூடிய ஆளா என்ன? அவரது ஆர்ப்பாட்டமான அழைப்புகளை கேட்டு பழகியவருக்கு இந்த அழைப்பு மிகவும் சங்கடத்தை கொடுத்தது.

அவரும் தலைகீழாக நிற்கிறார். மகன் எங்கே என்பது தெரியவில்லையே. மகன் எங்கே என்று கண்டுபிடித்தால் தானே மஹா எங்கே என்று அவனிடம் கேட்க முடியும்!

ஆனால் அந்த பெண்ணுடன் இருப்பான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாதே.

மஹாவே தன்னுடன் ஒரு பெண் இருப்பதாக தெரிவித்தாள் என கார்த்திக் கூறியதை நினைத்துக் கொண்டவர், மகனை எப்படியாவது ட்ரேஸ் அவுட் பண்ணிவிட வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்.

தனிப்பட்ட முறையில் தலைமை காவல் அதிகாரியை அழைத்து, ஷ்யாமின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்தபோது, அந்த அதிகாரியே சற்று தயங்கினார்.

“எனக்கு எதுவும் ரிஸ்க் ஆகக்கூடாது நாதன் சர்… ஷ்யாம் சர் கிட்ட எனக்கு தேவையில்லாத கெட்ட பேரை வாங்கிக்க மாட்டேன்…” என்று அவ்வளவு பெரிய அதிகாரியே சொல்லும் போது என்ன செய்ய?

ஷ்யாமின் செயல்பாடுகள் அப்படி! தன்னை ஒருவர் ட்ரேஸ் செய்வதா என்று ஈகோ பிரச்சனையாக எடுத்துக் கொண்டால் என்னாவது என்ற கவலை அவருக்கு.

அவரை சமாதானம் செய்து, மகனை பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்ற உண்மையை பலவாறு உரைத்து அவரை சம்மதிக்க செய்திருந்த போது தான் முருகானந்தம் அழைத்தது.

“என்ன மாப்ள… ரொம்ப வருஷம் கழிச்சு பேசினா, மூணாவது மனுஷன் கிட்ட பேசற மாதிரி பேசிடுவியா?” ஆத்மநாதனின் குரல் பிசிறு தட்டியது. கண்களில் நீர் சூழ்ந்து பேச முடியாமல் குரல் தொண்டையிலேயே நின்று விட்ட உணர்வு!

முருகானந்தம் நெகிழ்ந்து போனார்.

“மச்சான்…” என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. வாயை மூடிக்கொண்டு வெடித்து அழுதார். அவர் அறிவார், ஆத்மநாதனின் தலையீடு இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படியொரு விஷயம் நடக்கவே வாய்ப்பில்லை என்று! அதிர்ந்து பார்த்த கார்த்திக் அவரை சமாதானப்படுத்த முயல, அவனை தடுத்து மனம் விட்டு அழுதார் முருகானந்தம்.

ஆத்மநாதனால் அவரது நண்பரின் அழுகையை தாங்க முடியவில்லை. எதற்காகவும் அவர் இப்படி உடைந்து பார்த்தவரல்ல.

“நான் இருக்கேன் முருகு… அந்த பயலை வழிக்கு கொண்டு வர்றதுக்கு… எங்க யார்கிட்ட எப்படி நடந்துக்கறதுன்னு அந்த பயலுக்கு இன்னும் தெரியல மாப்ள… ரொம்ப காலமா இங்கயே இருந்துட்டம்ல… நம்ம பழக்கவழக்கமும் தெரியல… சொந்தபந்தமும் தெரியல… என்னை இப்படியொரு சங்கடத்துல இழுத்து விட்ருக்கான்…”

“நீங்க இருக்க தெம்புல தான் நம்ம கார்த்தியை இறக்கி விட்டேன் மச்சான்… நீங்க பார்த்துக்குவீங்கன்னு நம்புனேன்… ஆனா நம்ம மஹாவ…” என்று முடிக்கக் கூட அவரால் முடியவில்லை. அவர்களை பொறுத்தவரை மகாலக்ஷ்மி அவர்களது பொக்கிஷம்.

“டேய் மாப்ள… உன்னை விட்ருவேனா… நம்ம புள்ளையையும் விட்ருவேனா? இன்னும் என் கைல சிக்க மாட்டேங்கறான் மாப்ள… எங்க இருக்கான்னு தெரியல… உங்கக்காவும் ரொம்ப அழறா… உனக்காவது எல்லாரும் கூட இருக்காங்க… நான் இங்க ஒத்தையா சமாளிக்கறேன்… இவனை என்ன சொல்லி வழிக்கு கொண்டு வர்றதுன்னே தெரியல மாப்ள…” பல வருட நண்பரிடம் மனம் விட்டு புலம்ப துவங்கியிருந்தார் நாதன்.

“என்ன பண்ண மச்சான்? நாம தொடர்புல இருந்திருந்தா இப்படியாகியிருக்குமா? ஆனா மஹா சின்ன பொண்ணு… படிச்சுட்டு இருக்கு… கல்யாணமாக வேண்டிய பொண்ணு…”

“எனக்கு தெரியாதா? கார்த்தி கிட்ட நானும் சொல்லிருக்கேன்… நீங்க எல்லாம் எங்க பசங்கடா… நான் பார்த்துக்கறேன்னு… கார்த்தியும் கோபப்பட்டான்… ஆனா என்ன பண்ண இந்த பயல?” தன்னுடைய மகனை நினைத்து நொந்து கொண்டிருந்தார் அந்த தகப்பன்.

“ஆமா மச்சான்… தம்பி இன்னைக்கு தான் சொன்னான்… இத்தனை நாளா தானே சமாளிச்சுடலாம்ன்னு இருந்துருக்கான்… பாவம்… என்ன பண்ண? உங்க தங்கச்சியை தான் என்னால சமாளிக்க முடியல… அழுது கரையரா… கேட்டதுலருந்து ஆத்தா மயங்கி விழுது… இந்த வயசான காலத்துல நமக்கு இதெல்லாம் தேவையான்னு நினைக்க தோணுது மச்சான்…”

“அப்படியெல்லாம் நினைக்காத மாப்ள… இந்த ஷ்யாம் பயலை ரெண்டு அடி போட்டாவது புள்ளைய கொண்டு வர்றது என் பொறுப்பு… நீ கவலைப்படாத…” என்று அவரைத்தான் சமாதானப்படுத்த முடிந்தது ஆத்மநாதனால். தன்னை என்ன சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை.

“இப்படி பண்ணிட்டானே இந்த பய… ஊர் சிரிக்க வெச்சுட்டானே… யார் கிட்டவும் கையேந்தாம வாழ்ந்த மனுஷங்களையெல்லாம் இப்படி சிரிக்கடிச்சு என்ன பண்ண போறான்?” முருகானந்தத்திடம் பேசி முடித்தவர், ஜோதியிடம் வெடித்தார்.

“போச்சு… எல்லாம் போச்சு… ஊர்ல சேர்த்து வெச்ச மானம், மருவாதை, கௌரவம் எல்லாம் போச்சு… இனிமே எப்படி நான் மாப்ள மூஞ்சில முழிப்பேன்? அவனுக்கு என்ன பதிலை சொல்லுவேன்? இந்த மாதிரி கேக்காதவனாச்சே முருகு… அவனே வாயை திறந்து இப்படி கேட்டுட்டானே… நான் எங்க கொண்டு போய் மூஞ்சியை வெச்சுக்குவேன்?”

ஜோதியும் அவர் வெடித்த வெடிப்பை எல்லாம் அமைதியாக கண்ணில் நீருடன் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பையனா இவன்? வரட்டும்… இவனுக்கு எனக்கும் ஒட்டுமில்ல… உறவுமில்ல… ரெண்டுல ஒன்னை பேசிட வேண்டியதுதான்…” ஆயிரம் வாலா பட்டாசை போல விடாமல் பொரிந்துக் கொண்டிருந்தார் ஆத்மநாதன்.

“ஆமா அவனுக்கு எதை பத்திதான் கவலை இருந்துருக்கு? எவன் எந்த முச்சந்தில நின்னா என்ன? முட்டு சந்துல முட்டுனா என்ன? தனக்கு தன்னோட காரியமானா போதும்…” என்றவர் சற்று நிறுத்திவிட்டு, “அவன் பணத்தை சம்பாதிக்கலை… பாவத்தை சம்பாதிக்கறான்டி… பாவத்தை சம்பாதிச்சுட்டு இருக்கான்…” என்று உச்சஸ்தாயில் தமிழில் கத்த, பாதி புரிந்தும் புரியாத நிலை ஜோதிக்கு. தமிழ் பேச வருமென்றாலும் அவ்வளவு சிறப்பாகவெல்லாம் சொல்ல முடியாது.

“கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கங்க… ப்ளீஸ்… உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிட போகுது…” கண்ணீருடன் தெலுங்கில் சொல்ல,

“இனிமே தான் வரணுமா? நான் தான் பெத்து வெச்சுருக்கேனே… ஒரு வெளங்காத பயலை… எப்ப எந்த குடியை கெடுக்கறதுன்னு திட்டம் போட்டுட்டு அலையறான்… அவன் தான் எனக்கு எமனே…” வாயில் வந்ததை எல்லாம் கத்திக் கொண்டிருந்தவர், ஆயிரமாவது முறையாக ஷ்யாமுடைய செல்பேசிக்கு அழைப்பு விடுத்தார்.

“இந்த பய ஊர்பக்கம் வந்ததில்லை… சாதிசனம் சேர்ந்தா மென்னிய முறுச்சுடுவாக… பொண்ணை தூக்கினான்னு தெரிஞ்சா… என்னமோ இளவட்ட ரத்தம்… சூடா அலையுது… ரெண்டு போட்டா தான் வழிக்கு வருவான் பயபுள்ள…” என்ன பேசினாலும், ஏற்காத செல்பேசி அழைப்பை என்ன செய்வது?

கோபத்தில் செல்பேசியை விட்டெறிந்தார் ஆத்மநாதன்.

அது சுவரில் பட்டு தெறித்தது.

ஆனாலும் கோபம் அடங்கவில்லை அவருக்கு.

******


 

அவர் இங்கே கோபத்தில் கொதித்து கொண்டிருந்த வேளையில் ஷ்யாம் நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தான். கண்களை மூடிக்கொண்டு உடலை பேலன்ஸ் செய்தபடி நீரில் மிதப்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. உச்சந்தலையில் புல்லரிக்கும் உணர்வு!

இவன் அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்க, மஹா நீந்த முடியாமல் பயந்து, நீரில் மூழ்க துவங்கியிருந்தாள்.

அவளது இதயம் பயத்தில் படபடத்தது. மூச்சடைத்தது. நீரின் உள்ளேயும் வெளியேயுமாக போராடியவள், கைகளை மேலே தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல துவங்கினாள்.

எதோ ஒரு உள்ளுணர்வு!

மூச்சை பிடித்தபடியே திரும்பி பார்த்தான்.

அவளது கைகள் மட்டும் வெளியே தெரிந்தது.

இவள் கையை வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே என்ன செய்கிறாள் என்று தான் அவனுக்கு எண்ண தோன்றியது!

நீச்சல் தெரிந்த அவள் மூழ்க கூடும் என்று கிஞ்சிற்றும் அவன் நினைக்கவில்லை. இவன் மூச்சை பிடித்து பழகும் போது இப்படித்தான் கையை வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே மூச்சை பிடித்தபடி இருந்து பழகி இருக்கிறான்.

அது போல இவள் ஏதும் முயற்சிக்கிறாளா என்ன என்று யோசித்தவனுக்கு எதுவோ தவறு நேர்கிறது என்ற எண்ணம் அப்போதுதான் தோன்றியது.

அவசரமாக நீரில் புரண்டவன், அவளை நோக்கி சென்று, அவளது கையை பற்ற, சோர்வாக பிடித்துக் கொண்டாள்.

மனம் திக்கென்றது. அவசரமாக கையை விலக்கி விட்டவன், அவளது தலைமுடியை கொத்தாக பற்றி, ஒற்றை கையால் நீந்தியபடி கரைக்கு வந்தான்.

இருமியபடி அவளை கரைக்கு இழுக்க, அவளது உடல் கனத்தது. அதிர்ந்து அவளை பார்த்தான்.

“லூசே… ஸ்விம் பண்றதுக்கு பயமா இருக்குன்னு சொல்லிருக்கலாம்ல… நல்லா பண்ணுவன்னு நினைச்சு தான் உன்னை டீப்க்கு இழுத்துட்டு போனேன்…” அவள் விழித்து தான் இருக்கிறாள் என்ற நினைவில் அவளை திட்ட, அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

மயக்கத்தில் இருந்தாள் மஹா.

கரையில் அவளை சாய்த்தவன், அவளுக்கு எதிரில் முட்டியிட்டு கொண்டு கை கால்களை சூடு பரக்க தேய்த்து விட்டான்.

உள்ளுக்குள் சந்திரலேகா ட்ரம் அடிக்க அடிக்க துவங்கினார்.

‘தொம்… தொம்…தொம்’

பயம் அவனது நெஞ்சை கவ்வியது. அவளது உடல் சில்லிட்டிருந்தது. ‘நார்மலா இந்த தண்ணிக்கு எந்த உடம்பா இருந்தாலும் இப்படிதான் ஆகும்…’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.

“ஏய் மஹா…” அவளது கன்னத்தை தட்டியவன், மீண்டும் மீண்டும் அழைத்தான்.

சிறிது நேரம் மூழ்கினால் மயக்கம் வருமா? ஆச்சரியத்தோடு அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. அதுவும் நீச்சல் தெரிந்தவள் எப்படி நீரில் மூழ்க முடியும் என்ற எண்ணம் வேறு!

ஆனால் இவளோ மயங்கி இருக்கிறாளே!

“ஏய் மஹா… எருமை… எழுந்திரிடி…” அவனது பயமும் பதட்டமும் கோபமாக மாற, பட்டென அடித்தான் அவளது கன்னத்தில்.

அவளோ சற்றும் ஸ்மரணை இல்லாமல் படுத்திருந்தாள்.

“ஏய் எருமை மாடே… பயமுறுத்தாத… எந்திரிடி…” பட் பட்டென அவளது கன்னத்தில் அடிக்க, அப்போதும் விழிக்கவில்லை. அவனது வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது.

அவனையும் அறியாமல் கண்கள் கலங்க, “மஹா… செல்லம்ல… பயம் காட்டாதம்மா… ப்ளீஸ் எழுந்துக்க…” என்று மென்மையாக அழைக்க, அதற்கும் எந்த பிரதிபலிப்பும் இல்லாமலிருக்க, அவன் மொத்தமாக பயந்து தான் போனான்.

உலகம் தட்டாமாலை சுற்றியது!

கலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டே, கன்னத்தை தட்டியபடி, உடைந்த குரலில்,

“மஹா… எழுந்துக்கடா… ப்ளீஸ்… எனக்கு பயமா இருக்கு… நீ இல்லாம…” என்று கூறும் போதே குரல் தேய்ந்து தொண்டையை விட்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்து தேங்கி நின்றது.

இது போன்றதொரு உணர்வை அவன் அனுபவித்ததே இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வெற்றிடத்தில் வசிக்கும் உணர்வை அவன் பெற்றதுமில்லை. அது போன்றதொரு உணர்வில் அவன் அப்போது காய்ந்து கொண்டிருந்தான்.

“மஹா…” என்றபடி அவளது வயிற்றை அழுத்த, அவளது வாய் வழியாகவெல்லாம் நீர் வரவில்லை.

நீரும் வரவில்லை, மயக்கமும் தெளியவில்லை என்று யோசித்தபோது தான் இவள் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. சில நிமிடங்கள் அவளது முகத்தை பார்த்தவனுக்கு, கண்மணிகள் நகர்வது தெரிய, ‘அடப்பாவி’ என்று சொல்லிக் கொண்டான்.

“இன்னும் மயக்கம் தெளியலையே… என்ன பண்ணலாம்?” என்று சப்தமாக யோசிப்பது போல பாவனை செய்தவன், “சினிமால எல்லாம் லிப் டூ லிப் வெச்சு ஊதுவாங்களே, அதை ட்ரை பண்ணிப் பார்க்கலாம்…” என்று கூறியபடி அவளை நோக்கி குனிய,

“ஐயோ முருகா…” என்றபடி அவள் அரண்டு அவனது முகத்தை கையால் தள்ளி விட்டாள்.

அவளது குட்டு உடைந்ததில் அவள் எரிச்சலாக பார்க்க, அவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.

“இன்னும் ஒரு செக்கன்ட் லேட் பண்ணிருக்கலாமே குல்பி… ஒரு செம லிப் கிஸ் அடிச்சுருப்பேன்…” அருகில் தொம்மென்று அமர்ந்தவன், கிண்டலாக கூற, அவனை பார்த்து பார்வையால் எரித்தாள்.

“டேய் வேணா…”

“ச்சே மிஸ் பண்ணிட்டேனே… என்ன பண்ண?” கண்ணை சிமிட்டி அவளைப் பார்த்தவன், நம்பியாரை போல கையை தேய்த்துக் கொண்டு, “மிஸ் பண்ணதை ஏன் விடுவானேன்? இப்ப கொடுத்தா ஓகே தானே…” என்று அவளது முகத்தை பற்றுவது போல பாவனை செய்ய, அவள் அவனது கையை தட்டி விட்டாள்.

“டேய் வேண்டாம்… போய்டு… ஸ்ஸாவடிச்சுருவேன் பாத்துக்க…” முழு சென்னைக்காரியாக சென்னை பாஷையில் திட்ட ஆரம்பிக்க, அவன் இன்னமும் வாய்விட்டு சிரித்தான்.

“நடிக்க தெரியாட்டி சும்மா கம்முன்னு இருக்கணும்… இப்படி அரைகுறையா செஞ்சு மாட்டிக்க கூடாது…” என்று மீண்டும் அவளை வம்பிழுக்க,

“நான் நல்லாத்தான் நடிச்சேன்… அது எப்படி?! மஹா எழுந்துக்கடா ப்ளீஸ் எனக்கு பயமாருக்கு… நீ இல்லாம நான் எப்படி சாப்பிடுவேன்… நீ இல்லாம நான் எப்படி தூங்குவேன்… விட்டா எப்படி பல்லு வெளக்குவேன்னு கேட்டிருப்ப போல…” என்று சிரிக்க, இப்போது முறைப்பது அவனது முறையாயிற்று.

“ஹலோ… எதோ கூட வந்த பொண்ணு… இப்படி பேக்கு மாதிரி நீந்தறேன்னு சொல்லிட்டு இப்படி கெடக்குதேன்னு ஃபீலான மாதிரி இருந்தா… ரொம்ப பண்ணாதடி…”

“ச்சே இன்னும் கொஞ்ச நேரம் அந்த சீனை பார்க்கணும்ன்னு தான் பல்லைக் கடிச்சுட்டு உன்னோட அடியெல்லாம் பொறுத்துட்டு இருந்தேன்… கடைசில கவுத்து விட்டிட்டியே…” தங்கபதக்கம் சிவாஜி ரேஞ்சுக்கு இவள் ஃபீல் செய்ய ஆரம்பிக்க,

“சீனா… இருடி உனக்கு இப்ப காட்றேன் சீனு…” என்று அவளை தள்ளிவிட்டு எழுந்தவன், ஒரு நொடி யோசித்து, அவளது இடையில் கைவிட்டு இரு கையால் தூக்கினான்.

“ஏய் என்னடா பண்ற?” அவனது கையிலிருந்து துள்ளி இறங்க அவள் முயல, அவனாவது விடுவதாவது?!

“உனக்கு பனிஷ்மெண்ட் கொடுக்க வேண்டாம்? சீன் வேணுமா சீன்… இப்ப பாரு… தண்ணிக்குள்ள போய் மறுபடியும் முங்கி எந்திருச்சு வா…” என்றவனை அரண்டு போய் பார்த்தாள். அவன் தூக்கி போட போகிறான் என்பதை கண்டுகொண்டவள் நடுங்கினாள்.

“ஏய் பேயே… விடுடா என்னை…” மிகவும் துள்ளிப் பார்த்தாள். ஆனாலும் ஒன்றும் செய்யவே முடியவில்லை. ஒரு இன்ச் கூட இறங்க முடியவில்லை.

“கொஞ்சம் கூட அசைய முடியாது… ஐயாவ பத்தி என்ன நினைச்ச? இத்துனூண்டு இருந்துகிட்டு எப்படி நடிக்கற?!”

“ப்ளீஸ்… ப்ளீஸ்… விட்ருடா… இனிமே இப்படி பண்ணவே மாட்டேன்…” கண்ணை மூடிக்கொண்டு அவள் கெஞ்ச ஆரம்பித்து இருந்தாள்.

“முடியாது… உன்னை தண்ணிக்குள்ள தூக்கி போடறேன்… போ எஞ்சாய் பண்ணு…” என்று தூக்கிப் போடுவதை போல பாவனை செய்ய,

“ஐயோ… வேண்டாம்… எனக்கு ஜம்பிங்னா பயம்…” அவனது கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் மகா.

“ஒழுங்கா கழுத்தை விடு… நான் உன்னை தூக்கி போடணும்…” மிரட்டலாக இவன் கூற,

“டேய் ப்ளீஸ்… வேணாம்… எனக்கு பயமா இருக்கு…” அவனது கழுத்தை இன்னமுமாக கட்டிக் கொண்டாள்.

“முடியவே முடியாது…”

“நீ எத்தனை தடவை என்னை கடுப்பேத்தற… ஒரு தடவை தானடா உன்னை ஏமாத்தினேன்… ப்ளீஸ் ஷ்யாம்… வேணாம்…”

“இதுக்காகவே உன்னை தூக்கி போடணும்டி… ஒரு செக்கன்ட்ல என்னை அழ வெச்சுட்டல்ல…” என்றவனின் அழுத்தமான குரல் மடங்கி கரகரக்க, அவள் துள்ளுவதை நிறுத்தினாள்.

அமைதியாக இறங்கியவளை, ஷ்யாமும் கீழே விட, கலங்கிய அவனது முகத்தை அதிர்ந்து பார்த்தாள். கண்கள் கலங்கியிருக்க, முகம் சிவந்திருந்தது.

“ஷ்யாம்… என்ன இது?” தான் பார்த்த அழுத்தமான, அடங்காப்பிடாரி ஷ்யாமா இது? சிறு குழந்தையை போல் கண் கலங்குபவன் அவனா? நம்ப முடியாமல் அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.

வேறு புறம் திரும்பி கொண்டான். அவனது அந்த முகத்தை காட்ட அவனுக்கு விருப்பமில்லை. அவள் முன்னிலையில் கீழிறங்கவும் அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை. அழுத்தமாக நிற்க முயன்றான். ஆனால் முடியவில்லை.

அவனது முகத்தை மஹா திருப்ப, “ப்ச்…” என்று முகத்தை சுருக்கியபடி அவளது கையை எடுத்து விட்டான். முகம் இன்னமும் சிவந்திருந்தது. தன்னைத் தானே மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு என்னவென புரியவில்லை.

“ஷ்யாம்…” என்று மென்மையாக ஆச்சரியமாக அழைத்தவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான், அதற்கும் மேல் தாங்கவியலாமல் உடைந்து!

“ஒரு செக்கன்ட்ல என்னை அழ வெச்சுட்டல்ல…”

comments