VNE46(1)

VNE46(1)

46
கண்களில் கலக்கத்தோடு ஆபரேஷன் தியேட்டர் முன்பு காத்திருந்தாள் மஹா. உடன் ஷ்யாம். காலில் இரண்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு இருக்க, அதை சரி செய்யும் பொருட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
விஜய் அட்மிட் செய்யப்பட்டது முதலே மயக்கத்தில் தான் இருந்தான். சிகிச்சை ஒரு பக்கம் போய் கொண்டிருந்தது. இரவு பத்து மணி வாக்கில் அவனுக்கு லேசாக நினைவு திரும்ப, இவனது அறைக்கு அழைத்தார் சீப் டாக்டர்.
“பாஸ்… அவருக்கு லேசா கான்ஷியஸ் திரும்புது…” எனவும், தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மகாவை பார்த்தான் ஷ்யாம்.
“அப்படியா? அந்த டாக்குமெண்ட்ஸ் எங்க இருக்குன்னு கேட்க முடியுமா டாக்டர்?” என்று இவன் கேட்க, நிமிர்ந்து பார்த்த மஹா,
“ஸ்டாப் இட் ஷ்யாம்…” என்று கிட்டத்தட்ட கத்தினாள். அவளது கோபத்தை அவன் சற்று எதிர்பார்க்கவில்லை. அவனை வெஜிடபிள் ஆக்குவதா பைத்தியம் ஆக்குவதா என்ற யோசனையை அவள் முன்னிலையில் வைத்ததிலிருந்து மூட் அவுட் ஆகி அமர்ந்தவள் தான், என்னவென்று நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அத்தனை கோபத்தில் இருக்கிறாள் என்பது புரிந்தது. ஆனால் அவனது கோபத்தை எப்படி வெளிப்படுத்த என்று புரியாமல் இருந்தான்.
அவனுக்கு அந்த டாக்குமெண்ட்ஸ் மிகவும் முக்கியம்… அது அவனது மரியாதை… அவனது வாழ்க்கை… அவனது எல்லாமும் அதுதான்… ஒன்றுக்கே புயலடித்து ஓய்ந்து இருப்பதை போல உணர்ந்தான். எத்தனை அவனிடம் இருக்கிறதே என்பது புரியாத நிலையில் என்னவென்று நினைப்பது?
அதனால் தான் அந்த மருத்துவரிடம் அவன் அப்படி கேட்டதும்!
ரௌத்திரமாக அவன் முன்னே எழுந்து நின்றவளை கேள்வியாக பார்த்தான்.
“போனை கொடு…” இறுக்கமான முகத்தோடு, பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள் மஹா.
“என்ன மஹா?”
“நீ கொடுன்னு சொல்றேன்… ஒரு டாக்டரா உன்னோட பைத்தியகாரத்தனத்தை ஏத்துக்க முடியாது ஷ்யாம்… நீ நிதானமா இல்ல…” என்று கோபத்தில் கொதித்தவளிடம் இன்டர்காமை கொடுக்க, அதை வாங்கியவள்,
“பேஷன்ட் எப்படி இருக்கார் டாக்டர்?” என்று கேட்டாள்.
“ஃபைன் மேடம்… ப்ளட் லாஸ் கொஞ்சம் இருக்கு… கால் கைல கொஞ்சம் ப்ராக்ச்சர் ஆகியிருக்கு… டிவைடர் மோதி கீழ விழுந்ததில கொஞ்சம் ஹெட் இஞ்சுரி இருக்கு…” என்று அவர் பட்டியலிட,
“அவரோட மெண்டல் ஹெல்த் எப்படி இருக்கு டாக்டர்?” இறுகிய முகத்தோடு அவள் கேட்க,
“இன்னும் செக் பண்ணி முடிக்கல… முழுசா கான்ஷியஸ் ரீகைன் பண்ணாத்தான் அதை பற்றி சொல்ல முடியும்…” என்றவரிடம்,
“அப்புறம் எப்படி அந்த பேஷன்ட் மெண்டலி இன்ஸ்டேபிள்ன்னு போலீஸ்க்கு ரிப்போட் கொடுத்தீங்க டாக்டர்?” கோபமாக கேட்க, அந்த பக்கத்தில் அந்த மருத்துவர் மௌனமாகினார்.
“சொல்லுங்க டாக்டர்…” அதீத கோபம் இருந்தாலும், நிதானமாக கேட்டாள் மஹா.
“இல்ல… பாஸ் தான் கொடுக்க சொன்னார்ன்னு இளங்கவி…” என்று இழுக்க,
“இளங்கவி சொன்னா கொடுத்துடுவீங்களா? இல்ல பாஸ் சொன்னா உங்க மனசாட்சியை கழட்டி வெச்சுடுவீங்களா?” வார்த்தையால் விளாசிக் கொண்டிருந்தவளை தன்னையும் அறியாமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.
“பாஸ் கொடுக்க சொல்லும் போது எப்படி அதை மறுக்க முடியும் மேடம்?” சங்கடமாக அவர் கேட்க,
“சர்… நீங்க டாக்டரா இல்ல அடியாளா? இவர் கொடுக்க சொன்னா, ஒரு டாக்டரா நான் அப்படி செய்ய முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?” அவரை பிரித்து மேய்ந்து கொண்டிருந்தாள் மஹா.
“புரியுது மேடம்… ஆனா அவர் சொல்லி…” என்று இழுக்க,
“அவர் சொன்னாலும் நமக்குன்னு மனசாட்சி வேணும் டாக்டர்… பேஷன்ட் யாரா வேண்ணா இருக்கட்டுமே… அவர்க்கும் உங்களுக்கும் எந்தவிதமான பகையும் கிடையாது. அப்படி இருக்கும் போது உங்களை நம்பி தானே இருக்காங்க… உங்களை தான் தெய்வம்ன்னு நம்பி அவங்க உடம்பை உங்க கிட்ட ஒப்படைக்கறாங்க… அப்படி இருக்கும் போது அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கன்னு சொல்லாதீங்க டாக்டர்… நமக்கு நம்ம மனசாட்சி தான் முக்கியம்…” என்றவளை மிகவும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஓகே மேடம்…” என்று சுரத்தே இல்லாமல் அவர் கூற,
“அந்த பேஷன்ட்டுக்கு இவர் வேற ஏதாவது இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தாரா?” என்று கேட்க,
“டாக்குமெண்ட்ஸ் பத்தி மட்டும் கேக்க சொன்னார் மேடம்…” என்று சட்டென சரணடைந்து விட,
“வேண்டாம் டாக்டர்… போஸ்ட் ட்ராமாட்டிக் ஸ்ட்ரெஸ்ல இருப்பாங்க… தயவு செய்து இப்ப எதுவும் கேக்க வேண்டாம்…” என்று கறாராக கூற, அவர் விழித்தார்.
“என்ன டாக்டர்?” என்று இவள் கேட்க,
“பாஸ் கேட்க சொல்லிருக்காறே…” என்று அவர் தயங்க,
“நோ வே… பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ண கூடாது… முதல்ல குணமாகட்டும், அப்புறமா பேசிக்கலாம்…” என்று முடிக்க,
“அவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமா மேடம்?” என்று தயங்கினார் அந்த மருத்துவர். இண்டர்காமை அவனிடம் கொடுத்தாள் மஹா.
மெலிதான புன்னகையோடு வாங்கினான் ஷ்யாம். மஹா அந்த மருத்துவரிடம் பேசிய தொனியையும் அவளது ஆட்டிடியுடை கண்டதால் மட்டுமே வந்த புன்னகை அது. ஆனால் உள்ளுக்குள் இவளென்ன அவனுக்காக பேசுகிறாள் என்ற எரிச்சல் மண்டிக் கொண்டிருந்தது.
“சொல்லுங்க டாக்டர்…” என்றவனை,
“பாஸ்… இப்ப நான் என்ன செய்றது?” சங்கடமாக கேட்க,
“மேடம் என்ன சொல்றாங்களோ அதை செய்ங்க டாக்டர்… அவங்க சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்…” என்று முடித்து விட, அந்த மருத்துவர், ‘உப்ப்ப்’ என்று பெருமூச்சை வெளியேற்றி விட்டு வைத்தார்.
இன்டெர்காமையே வெறித்துப் பார்த்தவனை முறைத்தவள், வெளியே கிளம்ப முயல,
“இப்ப எதுக்காக அவனுக்கு சப்போர்ட் பண்ற மஹா?” அவனது குரலில் எரிச்சல்.
அவனை முறைத்துப் பார்த்தவள், பதில் கூறாமல் வெளியே போக முயல,
“பதில் சொல்லிட்டு போ…” என்றான் அதே எரிச்சலோடு.
“நான் என்ன பேசணும், பேசக்கூடாதுன்னு லிஸ்ட் போட்டு கொடுத்துடு ஷ்யாம்… அதை பாலோ பண்ணிக்கறேன்… ஏன்னா நீயும் அதை தான் பண்ற இல்லையா?” பதிலுக்கு கத்தியை போல கிழித்தவள், வெளியே போக முயல,
“மஹா…” பல்லைக் கடித்தான்.
“ஷ்யாம்… ஒரு விஷயத்தை புரிஞ்சுக்க… நம்ம ரிலேசன்ஷிப், கல்யாணம் எல்லாத்தையும் தள்ளி வெச்சுட்டு ஒரு ப்ரெண்டா இந்த நேரத்துல உன்னை கன்சோல் பண்ணனும்ன்னு நினைச்சுதான் வந்தேன்… இல்லைன்னா நீ காலைல பேசின பேச்சுக்கு உன் முகத்துலையே முழிக்கக் கூடாது… ஏன் உன்னை பற்றி மட்டும் தான் நினைப்பியா? மத்தவங்க எல்லாம் உனக்கொரு பொருட்டாகக் கூட தெரிய மாட்டேங்கறாங்க இல்ல?”
“நீ அப்படி குத்தலா பேசும் போது என்னால அதை டாலரேட் பண்ண முடியலடி…” என்றவனின் குரல் சற்று தேய்ந்து தான் ஒலித்தது.
“ஏன்? நான் எப்பவும் போல தான் இருக்கேன்… உனக்கு கில்டி கான்ஷியஸ்… அதான் உன்னோட இவ்வளவு மோசமான பிஹெவியருக்கும் காரணம்…” கொஞ்சமும் இரக்கமில்லாத தொனியில் அவள் பியைத்து எடுத்தாள்.
“கில்டி கான்ஷியஸ்… எனக்கெதுக்கு?” நிமிர்ந்து நின்று அவன் கேட்க, அவனுக்கு முன்பாக அவனது ஆண் என்ற ஈகோ எழுந்து நின்று கொண்டது.
அவனை உறுத்துப் பார்த்தவள், “அதெல்லாம் உனக்கெதுக்கு ஷ்யாம்? அது மனுஷங்களுக்கு இருக்க ஒரு விஷயம்…” என்று கூறியவள், “என்னால அவன் கிட்ட நீ நடந்துகிட்ட முறையை ஜீரணம் பண்ணவே முடியல… இன்னும் என்னவெல்லாம் பேசற… ரொம்ப பயமா இருக்குடா… உன்னை பார்க்கவே ரொம்ப பயமா இருக்கு… நாளைக்கு இதே ஆட்டிடியுட் தானே உன் பையனுக்கும் வரும்? ஒரு நல்ல மனுஷனா நீ ஒரு உதாரணமா இருக்க வேண்டாம்… அது முடியாது… ஒரு நல்ல புருஷனா இருப்பியான்னு எனக்கு தெரியாது… ஆனா ஒரு நல்ல அப்பாவா நீ இல்லைன்னா அடுத்த தலைமுறையே நாசமாகிடும்… உன்னை மாதிரியே உன் மகனும் வந்து நின்னு, அவன் எத்தனை பேரோட லைப்பை வீண் பண்ணுவானோன்னு எனக்கு பயமா இருக்கு…”
அவளது பேச்சை கேட்டபடி நின்றிருந்தவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. மனதுக்குள் ஏதோவொரு ஓலம். ‘என் பையனை நான் அப்படி விட்டுட மாட்டேன்டி…’ என்று கத்த வேண்டும் போல இருந்தது.
ஆனால் அவன் செய்யவில்லை. அவன் எப்போதும் அவன் தான். தன்னுடைய செயல்களை எப்போதும் நியாயப்படுத்தவும் முயல மாட்டான், அதே சமயத்தில் குற்ற உணர்வும் கொண்டதில்லை. தொழிலில், வாழ்க்கையில், உறவு வகைகளில் அவன் எடுக்கும் முடிவுகளுக்கும், அவனது செயல்பாடுகளுக்கும் அவனே பொறுப்பு என்பது போலத்தான் அவனது செய்கை இருக்கும்.
மகாவுடைய விஷயத்தில் கூட அவனது செயல்பாடு மாறியதில்லை. நான் உன்னை காதலிக்கிறேன்… என்று மட்டுமே தெரிவித்தான். அவளை காதலி என்று வற்புறுத்தவில்லை. ஆனால் அனைத்தும் தானாக நடந்தது. சூழ்நிலைகளை அவனுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டான்.
அவன் நிதானம் தவறிவிட்ட ஒன்று உண்டென்றால் அது விஜியின் விஷயம் மட்டும் தான்.
“சரி… இப்ப என்ன சொல்ல வர்ற?”
“விஜய்ய போய் பார்க்கணும்… அவன் கிட்ட சாரி கேக்கணும்…” வெகு சாதாரணமாக கூறியவளை வெறித்துப் பார்த்தான்.
“எதுக்கு சாரி கேக்கணும் மஹா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க,
“உனக்கும் அவனுக்கு என்ன சண்டைன்னு எனக்கு முன்னாடி தெரியாது… ஆனா காரணம் நான் தான்னு நினைக்கும் போது என்னால அதை தாங்க முடியல… வேதனையா இருக்கு…”
“அவன் உன்னோட பேரை யூஸ் பண்றான்னு நான் சொல்லியும் என்னை நீ பைபாஸ் பண்றல்ல…”
“உன்னை நான் பைபாஸ் பண்ணலை… எனக்குன்னு தனிப்பட்ட கருத்து இருக்கு… சுயம் இருக்கு… எனக்கு அவனை போய் பார்க்கனும்ன்னு மனசுக்கு படுது… ஆனா நீ வேண்டாம்னு சொல்ற… உனக்காக பேசி, உனக்காக வாழ்ந்து, உனக்காக சாப்ட்டு, உன்னோட வார்த்தைகளை நான் பேச எனக்கெதுக்கு தனியா ஒரு முகம்? என்னோட சுயம் எங்க?”
கைகளை கட்டிக் கொண்டு அவள் கேட்க, ஷ்யாமுக்கு மனதுக்குள் ஏதோவொரு வலி.
காதலென்றால் சுயம் தொலைவது தான். இருவரும் ஒரு புள்ளியில் கரைந்து போவதுதான். ஆனால் அது மனமுவந்து, ஆத்மார்த்தமாக அல்லவா இருக்க வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!