VNE 53(2)

அதை அவள் முழுவதுமாக உணர்ந்து இருக்கிறாள். சொல்லப் போனால் ஆண்களில் முக்கால்வாசி பேருக்கு கண்டிப்பாக கடந்தகாலம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது என்பதை அவளும் அறிவாள். ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் அவளே பார்த்து விட்ட அவனது படங்கள்.

ஜீரணிக்க முடியாத அவற்றை அவளால் மறக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. அந்த கோபம் அவ்வப்போது வெளிப்படுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த ஜீரணமாகாத கோபத்தினால் இப்போது மட்டுமல்ல… எப்போதுமே அவளால் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டால்?

“நீதானே என்னுடைய பொண்டாட்டி… உன்கிட்ட தான் நான் கேப்பேன்…” என்றவனை உறுத்து முறைத்தவள்,

“தயவு செஞ்சு என்னை இப்படி தொடாத ஷ்யாம்…” என்றவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்,

“ஏன்?” என்று கேட்க,

“ரொம்ப அருவருப்பா இருக்கு…” தன் மேல் படுத்திருந்த அவனை சுட்டிக் காட்டி அவள் கூற, அவனது கோபம் இன்னமும் உச்சிக்கு பறந்தது.

“என்னடி ரொம்ப பேசற? பிடிக்காம இருக்க உன்னை தொடனும்ன்னு எனக்கு எந்த கம்பல்ஷனும் இல்ல… நினைச்சா திரும்பவும் பழைய லைப்பை ரீஸ்டார்ட் பண்ண எவ்வளவு நேரமாகிடும் எனக்கு?” உக்ரமாக அவன் கேட்க,

“ஏன் ரீஸ்டார்ட் பண்ணேன்… யார் உன்னை கண்ட்ரோல் பண்ணா? கண்ட்ரோல் பண்ண நான் யார் உனக்கு?” எங்கோ பார்த்தபடி சொன்னவளின் கண்களில் லேசான பளபளப்பு. ‘செய்யேன்’ என்ற அவளது வார்த்தைகள் அவனை இன்னமும் உக்கிரப்படுத்த,

“நானாத்தான் கண்ட்ரோல்ல இருக்கேன்…யாரும் என்னை கண்ட்ரோல் பண்ணலை… பண்ணவும் முடியாது மஹா…ஆனா இப்படியெல்லாம் நீ சொல்லும் போது மீறி உன்னை தொட்டுப் பார்த்தா என்னன்னு என்னை நினைக்க வெச்சுடாத… ஓரளவு தான் எலாஸ்டிக்கை கூட இழுக்க முடியும்… ரொம்ப இழுத்து பிடிக்க நீ நினைச்சா…” என்றவன் அவளை தள்ளி விட்டு, “நீ என்னடி சொல்றது என்னை தொடாதன்னு… நானே சொல்றேன்… என்னை நீ தொடாத…” என்று அதீத கோபத்தில் கூற, அவனது கோப முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், பக்கென்று சிரித்து விட, அவளை முறைத்தான்.

“இப்ப எதுக்குடி சிரிக்கற?” எரிச்சலாக கேட்க,

“ஓவர் வாய்டா உனக்கு…” என்று மீண்டும் சிரிக்க,

“பின்ன? நீ அருவருப்பா இருக்குன்னு சொன்னா, பின்னாடி ஒரு இளையராஜா பிஜிஎம் ஓட விட்டுட்டு மௌனராகம் மோகன் மாதிரி சோக கீதம் வாசிக்க சொல்றியா? பிச்சு போடுவேனாக்கும்…” என்றவனை பார்த்து முறைத்தவள்,

“கல்யாணத்துக்கு முன்னாடி ப்ராமிஸ் பண்ணியே ஷ்யாம்…” என்று கேட்க,

“உனக்கு மைன்ட் ஸ்டடியாகட்டும்ன்னு சொன்னேன்… அதுக்காக உன்னை வெச்சுக்கிட்டு காலம் முழுக்க ஊறுகாய் போட்டுட்டு இருப்பேன்னு நினைச்சியா?” என்று கடுப்பாக கேட்டவனை பார்த்து இன்னமும் முறைத்தவள்,

“என்னடா நீ இப்படியெல்லாம் பேசற?” அவனது தோரணையை கண்டவளுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட பத்து நாட்களாக தள்ளியே தான் இருந்தான். இப்போதும் இப்படியெல்லாம் பேசவும் நடந்து கொள்ளவும் எந்த எண்ணமும் இல்லை அவனுக்கு. மஹாவாகத்தான் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்.

அவளது மனவோட்டம் புரிந்து இருந்தது அவனுக்கு. சட்டென தனக்குள்ளாக இறுகி விடும் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் செய்து தானாக வேண்டும்.

என்ன பிரச்சனை என்று வாய்விட்டு சொன்னால் அதை களையலாம். எதையும் சொல்லாமல் தனக்குள்ளே வைத்தபடி மறுகுபவளை எங்கனம் சமாதானம் செய்வது?

இவையெல்லாம் அவனுக்கு புரியாமல் தான் அவளிடம் கொதித்தான்.

முடிந்தவரை இயல்பாக இருப்பதை போல இருந்தாலும், தனக்கு உரிமையான மனைவியிடம் அத்தனை எதிர்பார்ப்பும் உண்டு அவனுக்கு. அவளுக்கும் தன் மேல் காதலுண்டு, ஆசையும் உண்டென தெரியும். ஆனாலும் அவளால் ஒட்டமுடியவில்லை என்பதையும் அறிவான்.

இவனுக்குமே ஒட்ட முடியாத நிலை என்று ஒன்று உண்டு. அதை கடந்து வர கண்டிப்பாக அவனால் தனிப்பட்டு முடியாது… முடியவே முடியாது… அவளாக அவனை ஏற்றுக் கொண்டாலே அன்றி அவனால் அந்த நிலையை கடக்க முடியாது. அந்த எல்லைக் கோட்டை  இருவர் மட்டுமே அறிந்து இருந்தனர்.

அந்த எல்லைக் கோட்டை அவள் கடந்து தன்னையும் கடக்க செய்ய வேண்டும் என்ற அவனது உள்மன விருப்பம் நிறைவேறாத போது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

எதுவும் பேசாமல் எழுந்து கொண்டவன், பால்கனியில் நின்று கொண்டு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

அவனது மனது ஒருவிதமான உணர்வில் ஆட்பட்டிருந்தது.

அது அவனது தொடுகையை அருவருப்பு என்று அவனது மனைவி கூறியதினால் ஏற்பட்ட அவமானமா? இயலாமையா? கோபமா? ஆத்திரமா?

ஒற்றை வார்த்தைகளில் உயிர் கொன்று விடுகிறாளே இவள் என்று நினைத்தான்.

மெளனமாக அவனருகில் வந்து நின்றாள் மஹா. சிகரெட்டை அவனது வாயிலிருந்து எடுத்து கீழே போட, மீண்டும் இன்னொன்றை பற்ற வைக்க வாயில் வைத்தவன், அதை கைவிட்டான்.

“சாரி ஷ்யாம்… ஐ டிட்ன்ட் மீன் இட்…” என்றவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. எங்கோ அவனது பார்வை இருந்தது.

அவளே தொடர்ந்தாள்.

“உன்னை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு தான் நினைக்கறேன்… ஆனா என்ன பண்றது, பேசறதுன்னு தெரியாமத்தான் ஏதாவது பேசிடறேன்…” என்று உணர்ந்து கூற,

“ம்ம்ம்… சரி விடு…” என்று கூறி விட்டானே தவிர, அவனால் சமாதானமாக முடியவில்லை. அவளும் அதற்கும் மேல் சமாதானம் செய்ய முயலவில்லை.

****

அடுத்த நாள் காலையிலேயே சமையலறை இரண்டு பட்டது. மகேந்திரனை தள்ளி நிறுத்திவிட்டு, தான் களத்தில் குதித்து இருந்தாள் மஹா.

“ஏய் மஹா…. மகேந்திரன் பார்த்துக்குவான்… ஒழுங்கா நீ வந்து கிளம்பு…” என்று மாடியிலிருந்து ஷ்யாம் கத்த,

“வந்துட்டேன்… இன்னொரு பைவ் மினிட்ஸ்…” பதிலுக்கு கத்தினாள் மஹா.

“என்னமோ செய்… சொன்னா எதையுமே கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணி வெச்சுட்டு இரு…” என்றவன், அவசரமாக அலுவலக அறையை நோக்கிப் போனான். கொழுகட்டையை பிடித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் இது பட, தோளைக் குலுக்கிக் கொண்டு அவள் தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.

அவளுக்கு சமையலில் எப்போதுமே ஆர்வமுண்டு. பைரவியும் பெண்ணுக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று சமையல் பழக்கி இருந்தார்.

முந்தைய தினம் அவனை ரொம்பவுமே கோபப்படுத்தியாகி விட்டதே என்ற சிறு குற்ற உணர்வு. அப்போது வரைக்குமே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதானிருந்தான்.

ஆனால் அதற்காக அவனோடு இழைய முடியாது. ஆனால் அவனை அப்படியே பார்க்கவும் பிடிக்கவில்லை. அவன் வீட்டில் இருந்தால் அவள் சிரித்துக் கொண்டுதானிருப்பாள் என்ற அளவில் அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவனை இப்படி பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை.

எப்போதும் போல பேச வேண்டும் என்று ஆசைப்பட்டவள், அவனுக்காக சமைக்க முடிவு செய்திருந்தாள்.

காபியை கலந்தவள், எடுத்துக் கொண்டு அவனது அலுவலக அறையை நோக்கிப் போனாள்.

அடுக்கி வைத்திருந்த கோப்புகளில் ஏதோவொன்றை அவசரமாக தேடிக் கொண்டிருந்தான்.

காபியோடு வந்தவளை பார்த்தவன், “டேபிள்ல வெச்சுட்டு போ மஹா…” என்று கூற, வைத்தவளுக்கு அவன் குடிக்க மாட்டானா என்ற ஆசையிருந்தது.

முதன் முறையாக அவனுக்காக காபி போட்டவள், இருவருமாக அமர்ந்து குடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இரண்டு கோப்பைகளையும் எடுத்து வந்திருந்தாள். அவன் குடித்து விட்டு கூறும் ஒரு வார்தைக்காகத்தான் வந்தாள். ஆனால் அவனோ அதை சற்றும் கண்டுகொள்ளாமல் வைத்து விட்டு போ என்றதும் அவளுக்குள் இருந்த ஆசை அத்தனையும் வடிந்தது.

தன்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், சோபாவில் விஸ்ராந்தையாக அமர்ந்து கொண்டு கையில் பேப்பரையும் எடுத்துக் கொண்டாள். காபி வித் எக்ஸ்ப்ரெஸ் என்று முன்னெல்லாம் கிண்டல் செய்வாள். இப்போது காபி வித் பிசினஸ் லைன் என்று தான் கூற வேண்டும்.

ஆம்! ஷ்யாம் முதலில் கண் விழிப்பது, அதில் மட்டும் தான். ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து விடுபவனை ஏலியனை போலத்தான் பார்த்தாள். ஆனால் இப்போது அந்த பெண் புலியே பிசினஸ் லைனை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டதே! என்ன சோகம்!

அவள் காபி குடித்து முடிக்கும் வரை அவன் வரவே இல்லை. அடுப்பில் வைத்த கொழுக்கட்டை நினைவுக்கு வர, சமையலறைக்கு சென்று அடுப்பை சிம்மில் வைத்தவள், மகேந்த்ரனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, ஷ்யாமை நோக்கி போனாள்.

அலுவலக அறையிலேயே அமர்ந்தபடி, செல்பேசியில் யாரிடமோ ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது.

அவளை ஷ்யாம் கண்டாலும், எந்த பிரதிபலிப்பும் இல்லை.

சற்று நேரம் பேசிவிட்டு வைத்தவன், நெற்றியை சுருக்கிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

“என்ன ஷ்யாம் பிரச்சனையா?” என்று இவள் கேட்க,

“ம்ம்ம்… என்ன கேட்ட?” என்று தடுமாறியவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

அவனுக்கு இது போன்ற தடுமாற்றங்கள் குறைவு. எதுவாக இருந்தாலும் தெளிவாக இருப்பான். ஆனால் அவனே ஒரு மாதிரியாக இருக்கிறான் என்றால்?

“பிரச்சனையான்னு கேட்டேன்…” என்றவளிடம்,

“ம்ம்ம்ம்… அப்படியொண்ணும் இல்ல… சின்ன விஷயம் தான்… ஆனா என்ன பண்றதுன்னு தெரியல…” என்றவனை வியப்பாக பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லையா?

“என்னன்னு சொல்லேன்… என்னால எதாவது சொல்யுஷன் சொல்ல முடியுமான்னு பார்க்கறேன்…” என்று கேட்க, அவன் சிரித்தான்.

“ஏய் நீயெல்லாம் இன்னும் குழந்தை… போய் செரிலாக் சாப்பிடு செல்லம்…” என்று சிரித்தாலும் அந்த சிரிப்பு அவனது கண்ணை எட்டவில்லை.

“ரொம்ப பண்ணாத… சொல்லு…” என்று கேட்க,

“இன்னைக்கு சென்ட்ரல் மினிஸ்டர் விட்டல் ராவ் சென்னை வர்றார்…” என்று கூற,

“சரி… அதனால?”

“அவர் கிட்ட கணக்கு காட்டனும்…”

“ஓ… அந்த ஆளையும் வளைச்சு போட்டு வெச்சுருக்கன்னு சொல்லு…” என்று கிண்டலாக கூற,

“ம்ம்ம்… இன்னைக்கு மொத்தமாக கணக்கை முடிக்கணும் மஹா. அடுத்த செட் ப்ரெஷா ஆரம்பிப்போம், இதுதான் வழக்கம்… ஆனா போன செட்டோட கணக்கு இருந்த பைல் எங்கன்னு தெரியல…” என்று கூற, உள்ளுக்குள் அதிர்ந்தாள்.

இது சிங்கத்தின் வாயில் தலையை கொடுத்த கதை ஆயிற்றே!

“என்ன சொல்ற ஷ்யாம்?” என்று அதிர்ந்து கேட்க,

“ம்ம்ம்… அதை விஜி தான் பார்த்துட்டு இருந்தான்…” என்று கூற, அவனை வெறித்துப் பார்த்தாள் மஹா.

“சாப்ட் காபி இல்லையா? வேற பேக் அப் எதுவும்?”

“சிஸ்டம்ல எப்படி இவன் போட்டு வெச்சு இருக்கான்னே தெரியல… ஆனா கண்டிப்பா அதுல பேக் அப் இருக்கும்… எங்க இருக்குன்னு தான் சொல்ல முடியல…” என்று கூற,

என்ன பதில் பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை .

“விஜிக்கு நினைவு திரும்பிடுச்சு….” மெல்லிய குரலில் கூறியவளை எந்த பதிலும் கூறாமல் பார்த்தான்.

“ம்ம்ம்… தெரியும்…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!