VNE 57(1)

57

நீண்ட இடைவெளிக்குப் பின் சுஷ்ருதாவிற்கு வந்திருந்தாள் மஹா. ஷ்யாம் எப்போதும் வருவதுதான். தினம் ரவுண்ட்ஸ் போகும் போதெல்லாம் ஒரு நிமிடம் விஜியையும் பார்த்துவிட்டுத்தான் போவதும். அப்போது உடனிருக்கும் மருத்துவரிடம் அவனைப் பற்றிக் கேட்டுக் கொள்வானேயன்றி அவனிடம் பேச மாட்டான்.

விஜியும் அவனது முகத்தை ஏறிட்டும் பார்க்க மாட்டான். விஜிக்கு துணையாக அப்போதிருந்து விஜியின் தாய் மரகதமும் அவ்வப்போது அவனது சகோதரனும் இருந்தனர். எதுவாக இருந்தாலும் மரகதத்திடம் பேசிக் கொள்வது வழக்கமாக இருந்தது.

விஜியின் முகத்தை ஆழமாக பார்க்க முயல்வான் ஷ்யாம். அதில் என்ன இருக்கிறது என்று படிக்க… ஆனால் அதில் அவனது வெறுப்பும், ஆற்றாமையும், கோபமும் மட்டும் தான் தெரியும். இத்தனை வருடங்களாக பார்த்து பழகிய அவனை இந்த சூழ்நிலையில் ஏற்பது சற்று கடினமாகத்தான் இருந்தது.

அவனிடம் பேச பிடிக்கவில்லை தான். அவன் செய்தது அப்படியான துரோகம், ஆனால் அதற்கான தன்னுடைய எதிர்வினையும் ரொம்பவே அதிகம் எனும் போது என்ன செய்வது?

“எப்படி இருக்கீங்க விஜி?” பெரிய புன்னகையோடு வந்த மஹாவை பார்த்து லேசாக புன்னகைத்தான்.

கழுத்தில் பொன் தாலி. எப்போதும் போல எளிமையான காட்டன் புடவை. இடது கையில் ஸ்ட்ராப் வாட்ச். வலது கையில் மெல்லிய வளையல். உடன் அவளது கணவனாக ஷ்யாம். உரிமையாக அவனது மனைவியை பார்த்த பார்வையிலிருந்த காதல்.

விஜியின் உணர்வுகளை வார்த்தையால் வடிக்க முடியவில்லை. என்னதான் தன்னைத் தானே அவன் சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் அவன் முழுமையாக மஹாவை இழந்து விட்டான் என்பதை தலையிலடித்து புரிய வைத்தது விதி!

ஷ்யாமோடு மஹாவை சேர்த்து வாய்த்த விதி, அவளை தன் முன்னேயே கொண்டு வந்து நிறுத்துவது எத்தனை பெரிய கொடூரம்?

அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தான் விஜி.

ஷ்யாம் அவனது முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். வலுக்கட்டாயமாக விஜி மகாவை நோக்கி புன்னகைக்கிறான் என்பது புரிந்தது. அந்த புன்னகையில் கண்டிப்பாக ஜீவன் இல்லை. கண்களில் ஒளி இல்லை.

அவனை விரட்டி விரட்டி அடிக்க சொன்னவனே அவன் தான். ஆனால் இப்போது அவனது கோபம் நீர்த்து போயிருந்தது.

“வாங்க மேம்… எப்படி இருக்கீங்க?” என்று கேட்ட விஜியை சிரித்தபடி பார்த்தாள் மஹா.

“இதை நாங்க கேக்கணும்… நீங்க கேக்கறீங்களா?” விளையாட்டாக கூற, சிறு முறுவல் விஜியின் முகத்தில்.

“புது பொண்ணு, கல்யாணமாகி வந்து இருக்கீங்க… அப்ப நான் தான் கேக்கணும்…” சந்தோஷமாக சொல்வதை போல காட்டிக் கொண்டாலும் அவனுக்குள்ள ஏமாற்றத்தை உணர்ந்தாள். மெளனமாக ஷ்யாமை ஏறிட, அவன் கையை கட்டிக் கொண்டு எந்த உணர்வையும் வெளிக்காட்டிடாமல் நின்றிருந்தான். அவன் எதுவும் விஜியிடம் பேசுவான் என்பது உறுதியில்லை. மஹாவுக்காக வந்திருக்கிறான், அவ்வளவே!

“நல்லா இருக்கோம்… உங்களுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் போலவே…” என்று விஜியையும் மரகதத்தையும் ஒரு சேர பார்க்க,

“ம்ம்ம்… ஆமா…” என்று மேலும் கீழுமாக தலையசைத்தான் விஜி.

“ஆல் தி பெஸ்ட் விஜி…” என்று உளப்பூர்வமாக கூறிய மஹாவை ஆழ்ந்து பார்த்தவன்,

“தேங்க்ஸ்…” என்றான்.

“இன்னும் ஒரு டூ மந்த்ஸ் ஜாக்கிரதையா தான் இருக்கணும் விஜி… வெய்ட் தூக்காதீங்க… ரொம்ப கஷ்டப்பட்டு நடக்காதீங்க… வாக்கர் யூஸ் பண்ணுங்க… அப்பப்ப ரிவியு வந்து பாருங்க…” என்று வரிசையாக அவன் செய்ய வேண்டியதை மஹா கூற,

“சியூர் மேம்…” என்று அவன் முடித்து விட, என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரின் முகத்தையும் பார்த்தாள்.

சற்று நேரம் மௌனத்தில் கழிய, மஹா சங்கடமாக ஷ்யாமை பார்த்தாள்.

இவன் ஒரு வார்த்தையாவது அவனிடம் பேசலாமே என்ற எண்ணம் தான். மருத்துவமனையில் அட்மிட் செய்தது முதலே அவனிடம் எந்தவிதமாகவும் பேசவில்லை அவன். மனநிலை சரியில்லாத போது பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின், சற்றும் இறங்கி வந்து அவனிடம் பேசவே இல்லை.

அவன் என்ன நினைக்கிறான் என்பதும் மஹாவுக்கு புரியவில்லை.

விஜி செய்தது தவறு தான். அதை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வேண்டும் என்று தான் ஆசைப்படவில்லையே… ஒரு வார்த்தை… ஒரே வார்த்தை, ‘நல்லா இருக்கியா விஜி?’ என்று கேட்டால் எதுவுமாகி விட போவதில்லை. அப்படிப் பார்த்தால், விஜி செய்தது ஒரு பங்கு என்றால், அதற்கு ஷ்யாம் ஆற்றிய எதிர்வினை யாருமே எதிர்பாராதது, காலத்துக்கும் மறக்க முடியாதது. விஜியை அடித்து துவைத்து மழுங்கடித்து படுக்கப் போட்டவனை யார் கேள்வி கேட்பது? மருத்துவம் பார்த்து விட்டால் சரியாகி விடுமா?

இந்த விஜியாவது ஏதாவது பேசுவானா என்று பார்த்தாள். அவனும் கொஞ்சமும் அசையாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இருந்தது விஐபி சூட். ராஜ மரியாதையோடும் முழு கவனிப்போடும் தான் அது வரை இருந்தும் வந்தான். ஆனாலும் இருவருக்குமிடையில் உடைந்த உறவு உடைந்தது தானே!

இருவரையும் ஒட்ட வைக்க முடியாது… அப்படி ஒட்ட வைப்பதும் அவளது எண்ணமுமல்ல. ஷ்யாமின் உணர்வுகளுக்கும் தான் மரியாதை கொடுக்க வேண்டும். அவனுடைய அந்தரங்கத்தை விஜி அரங்கத்தில் ஏற்றியிருக்கிறான். அந்த ஒரு காரணத்திற்காக தான் ஷ்யாம் அந்தளவு இறங்கி இவனை அடித்தது என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள். அப்படியிருக்கும் போது அவனை இன்னும் இன்னும் நெருக்கவும் சங்கடமாக இருந்தது.

சரி… இதற்கு மேலும் யாரையும் சங்கடபடுத்த வேண்டாம் என்று முடிவு செய்து, எழுந்து கொள்ள நினைக்கும் போது, தொண்டையை கனைத்த ஷ்யாம்,

“ம்ம்ம்ம்… எப்படி இருக்க விஜி?” என்று கேட்க, விஜியின் கண்களில் சிறு ஆச்சரியம். அவனறிந்த ஷ்யாமுக்கு மன்னிக்கவே தெரியாது.

அவனது அணுகுமுறை என்பது மீனுக்கு வாலைக் காட்டு, பாம்புக்கு தலையை காட்டு என்பதாக மட்டும் தான் இருக்கும். யார் யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதையும், எப்படிப் போனால், எதை தட்ட முடியும் என்பதையும் முழுவதுமாக அறிந்தவன். அதனால் எப்போதும், மிஸ்டர் கூல் தான், தொழிலை பொறுத்தவரை.

அவ்வளவு எளிதில் கோபம் வந்து விடாது அவனுக்கு. ஆனால் கோபம் வந்து விட்டால், அவ்வளவுதான். வேண்டாமென்று முடிவெடுத்து விட்டால், அது வேண்டாம் தான். அதற்கு வேறெந்த அர்த்தமும் கிடையாது.

ஆனால் இப்போது தன்னிடம் பேசிய ஷ்யாமை, உண்மையிலேயே சற்று ஆச்சரியமாகத்தான் பார்த்தான் விஜி .

“நல்லா இல்ல பாஸ்…” இறுக்கமாகி விட்ட முகத்தோடு கூறினான். உண்மையில் அவன் நன்றாக இல்லை தான். யாரை ஜென்ம விரோதியாக நினைக்கிறானோ, அவன் முன்னே அமர்ந்திருப்பது அத்தனை எரிச்சலாக இருந்தது.அதிலும் அவனது மருத்துவமனையிலே இருப்பது ஒவ்வொரு நிமிடமும் அவனது கோபத்தை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தது. அவனால் அதை தாள முடியவில்லை. அதிலும் கண்ணை மூடினால் அவன் தன்னை மவுன்ட் ரோடில் நிர்வாணமாக ஓடவிட்டு அடித்த காட்சி மட்டும் தான் நினைவிலாடியது.

அதை நினைக்கும் போதெல்லாம் அத்தனை கோபம் வந்தது.

ஷ்யாமை கொன்று விடும் ஆத்திரம்… ஆனால் இன்னொரு மனம், அவன் புறம் இருந்த தவறையும் சொன்னது. ஆனால் வென்றதென்னவோ ஷ்யாம் மீதான கொலைவெறி தான்.

அவனது பதிலை எந்தவிதமான உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் கேட்டுக் கொண்டவன், வெளியே நின்றிருந்த இளங்கவியை கண்ணைக் காட்டி வர சொன்னான்.

வெளியே சென்றிருந்த அவனது சகோதரன் பத்ரியும் உள்ளே வந்தான். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சகோதரனுக்கு விபத்து என்பது மட்டும் தான். பரவிய வாட்ஸ்அப் வீடியோக்களில் கூட அவனது முகம் தெளிவாக இல்லாததால் அது விஜி தான் என்பதை அவர்கள் யாருமே அறியவில்லை.

அவனது குடும்பத்தை பொறுத்தமட்டில், விஜி ஷ்யாமிடம் வேலை பார்க்கிறான். தங்களது குடும்பத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவன். ஷ்யாமிடம் வேலை பார்த்ததால் அவர்களது மருத்துவமனையிலேயே வைத்து ராஜ வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் என்பது வரை தான் அவர்களது புரிதல்.

அத்தனையும் ஷ்யாம் கண்ட்ரோல் என்பதால் அவனைத் தாண்டி இவர்களிடம் யாரும் பேசுவதும் இல்லை. அதனால் விஜியின் குடும்பத்தை பொறுத்தவரை ஷ்யாம் நல்லவன்… மிக மிக நல்லவன்.

“ண்ணா… எப்ப வந்தீங்க?” பாசமாக கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த பத்ரியை பார்த்து சிரித்தான் ஷ்யாம்.

“இப்பதான் ஒரு டென் மினிட்ஸ் ஆச்சு பத்ரி…” என்று கைகடிகாரத்தை பார்த்தான்.

“ஜூஸ் குடிக்கறீங்களா ண்ணா? நான் வாங்கிட்டு வரேன்..” என்று அவசரமாக பறக்க பார்த்தவனை,

“ஒரு நிமிஷம் இரு பத்ரி… அதெல்லாம் வேண்டாம்…” என்று இழுத்துப் பிடித்து நிறுத்தினான்.

இருவரையும் பார்த்த விஜி, “பத்ரி… என்னடா கிளியர் பண்ணிட்டு வந்துட்டியா?” என்று கேட்க,

“ம்ம்ம்… முடிச்சுட்டேன் ண்ணா…” என்றபடி அவன் கையிலிருந்த ரசீதுகளை விஜியிடம் கொடுக்க, கேள்வியாய் பார்த்தான் ஷ்யாம்.

“என்ன விஜி? என்னாச்சு?” என்று மஹா கேட்க,

“பில்ல செட்டில் பண்ணிட்டானான்னு கேட்டேன் மேம்… அவ்வளவுதான்…” என்று விஜி கூற,

“ஏன்? எதுக்காக நீங்க பில்லை செட்டில் பண்ணனும்?” என்று கேட்டாள் மஹா.

“என்னோட பில்லை நான் தான மேம் செட்டில் பண்ணனும்?” என்று விஜி கூற,

“உங்களுக்காக நாங்க பண்ண மாட்டோமா?” என்று கேட்ட மஹாவின் கேள்வியில் முகம் கசங்கியது அவனுக்கு. ஆனால் கண்கள் மின்ன பார்த்தான் ஷ்யாம், சிறு புன்னகையோடு.

“வேணாம்… ப்ளீஸ்… இதுவரைக்கும் பாஸ் எனக்கு நிறைய பண்ணிருக்கார்… அதுவே போதும்மா… இந்த பில்லை நான் தான் செட்டில் பண்ணனும்…” வாதிட்டவனை பார்த்த ஷ்யாம்,

“மஹா… அவனை விடு… அவன் இஷ்டம்…” என்றவனை, பாவமாக பார்த்தாள் மஹா.

“இல்லைங்க… நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று ஆரம்பிக்க,

“மஹா… ஸ்டாப் இட்… கொஞ்ச நேரம் பேசாத…” என்று இறுக்கமான முகத்தோடு கிளியர் கட்டாக முடிக்க, அதற்கும் மேல் அவளால் பேச முடியவில்லை. பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு, உள்ளுக்குள் வலித்தது. மஹாவேங்கடலக்ஷ்மி விஜய் என்ற அவனது கனவு, கனவாகவே போய்விட்டதில் வந்த வலி. மனதை மாற்றிக் கொண்டதாக நினைத்தாலும், நிதர்சனத்தை எதிர்கொள்ளும் போது வேதனையாக இருந்தது.

மகாவை அடக்கிய ஷ்யாம், விஜி புறம் திரும்பி,

“அடுத்தது என்ன பண்ணலாம்ன்னு நினைக்கற விஜி?” நேராக அவனை நோக்கி கேள்வி வீசியவனை என்னவென்று புரியாமல் பார்த்தான் விஜி.

“என்ன சொல்றீங்கன்னு புரியல பாஸ்…” பல்லைக் கடித்துக் கொண்டு இறுக்கமாக கேட்டான். அவனால் இப்போது ஷ்யாமை எதிர்த்து நிற்க முடியாது, உடல்நிலை அப்படி! இந்த நிலையில் தன்னை அமர வைத்துவிட்டு ஷ்யாம் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? அவனது முகத்தைக் கூட பார்க்கக் கூடாது என்று தான் ஆத்திரங்கள் கிளம்புகின்றது. ஆனால் என்ன செய்வது?

ஆனால் அவனது கோபத்தை சற்றும் கண்டுக் கொள்ளாமல்,

“ஏதாவது பிசினஸ் மாதிரி செய்யறதா இருந்தா சொல்லுடா…” என்று கேட்க, விஜி மெளனமாக அவனை பார்த்தான். ஒருவகையில் அவனுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

“இங்கயே பைனான்ஸ்ல லைன் போடலாம்ன்னு நினைக்கறேன் பாஸ்…” என்று அவனது முகத்தை பார்க்காமல் கூறினான். இதை ஷ்யாம் எந்தளவு வரவேற்பான் என்று தெரியவில்லை. தன்னிடம் வேலை பார்த்தவன் தனக்கு எதிராக இறங்குவதா என்று எதிர்க்கலாம். ஆனால் அவன் எதிர்த்தாலும் இதுதான் என்று எண்ணிக் கொண்டான். இனி மோதல் என்பது அவனது வியாபார சாம்ராஜ்யத்துடன் தான் என்பது அவனது தீர்மானமான முடிவு.

அதை கேட்டவுடன் ஷ்யாமின் முகம் அத்தனை பிரகாசமானது!

“சூப்பர்டா… பண்ணு… ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு…” வெகு எதார்த்தமாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தாள் மஹா.

அதே ஆச்சரியம் விஜிக்கு இருந்தாலும், “ஒரு எதிரியை நீங்க உருவாக்கிக்கிட்டீங்க பாஸ்… அதுவும் உங்க பாசிடிவ் நெகடிவ்ன்னு எல்லாமே தெரிஞ்ச எதிரி… எனக்கே ஹெல்ப் பண்றேன்னு வேற சொல்றீங்க?” அத்தனை இறுக்கமாக, முறுக்கிக் கொண்டு கூற,

“நீ எதிரின்னா எனக்கு சந்தோஷம் தான்டா… நான் இப்படிதான்னு சொல்லிட்டு எனக்கு எதிரா என்ன வேண்ணா பண்ணு விஜி… ஆனா முதுகுல மட்டும் நீ குத்தி இருக்கக் கூடாது…” என்றவனை விஜியால் நேராக இப்போது பார்க்க முடியவில்லை.

உள்ளுக்குள் முள் குத்தியதை போல இருந்தது.

“இனிமே எல்லாம் ஸ்ட்ரைட் டீலிங் தான் பாஸ்… அவ்வளவு வெறில இருக்கேன்… ஒரு நாள் இல்ல ஒரு நாள், நீங்க எனக்கு பண்ணதை நான் உங்களுக்கு பண்ணுவேன்…” கிட்டத்தட்ட சபதமிடுவதை போல கூறியவனை பார்த்து புன்னகைத்த ஷ்யாம்,

“விஜி… நீ என்கிட்ட தொழில் கத்துகிட்டவன்… உனக்கு என்னோட ப்ரோஸ் அன்ட் கான்ஸ் அத்தனையும் தெரியும்ன்னு எனக்கும் தெரியும்… அப்படி ஒருத்தன் எனக்கு எதிர்ல நிப்பேன்னு சொல்றது தான் ஆம்பிளைத்தனம்… என்ன வேண்ணா பண்ணு… பார்த்துக்கறேன்… விஷ் யூ ஆல் தி பெஸ்ட் டா…” என்று நிறுத்தியவன்,  “பணம் எவ்வளவு வேணும்ன்னு சொல்லு…” என்று கேட்க, சத்தியமாக அந்த கேள்வியை மஹாவால் நம்பவே முடியவில்லை.