VNE 57 (2)

VNE 57 (2)

அவளது கண்கள் வெளியே தெறித்துவிடும் போல இருந்தது. தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அத்தனையும் உண்மைதான். ஆனால் ஏன்? எப்படி?

“வேணா பாஸ்… உங்க கிட்ட இருந்து எனக்கு எதுவும் வேணாம்…” வீம்பாக கூறியவனை புன்னகையோடு பார்த்தவன்,

“ஓகே… பணம் அக்செப்ட் பண்ண மாட்ட… ஆனா இதையெல்லாம் உனக்கே திருப்பி எழுதி கொடுத்துட்டேன்…” என்று இளங்கவிக்கு கண்ணைக் காட்ட, அவன் அவனிடமிருந்த பைல்களை விஜி அமர்ந்திருந்த படுக்கையின் மேல் வைத்தான்.

அத்தனையும் விஜியிடமிருந்து எழுதி வாங்கப்பட்ட சொத்து பத்திரங்கள்.

மஹாவுக்கு உண்மையிலேயே இதயம் வெளியே எம்பி குதித்து விடும் போல இருந்தது.

இவன் என்ன செய்கிறான்? என்ன விஷயம் நடக்கிறது? இதையெல்லாம் முடிவு செய்து கொண்டுதான் இங்கு வந்தானா? ஆனாலும் கடைசி வரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே!

இளங்கவி கொடுத்த பத்திரங்களை வெறித்துப் பார்த்தான்.

“இது உனக்கு நான் கொடுக்கற காம்பன்சேஷன் இல்ல… ஆனா இதையெல்லாம் நீ தான் ஆசைப்பட்ட… நீயே வெச்சுக்க…” என்று கூற, விஜி மௌனமாகவே தான் இருந்தான். என்ன சொல்வது? என்ன செய்வது? புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவழியாக அதிர்விலிருந்து மீண்டவன்,

“வேண்டாம் பாஸ்…” அழுத்தமாக கூறினான்.

“டேய்… இதுக்காகத்தான் என் முதுகுல குத்தின… இந்த சொத்துக்காகத்தான் அவ்வளவு வருஷமா நான் உன் மேல வெச்ச நம்பிக்கைய உடைச்ச… இந்த சொத்துக்காகத்தான் என்னை நீ கேவலப்படுத்துன… ஆஃப்டர்ஆல் இதெல்லாம் வெறும் கல்லும் மண்ணும் டா… இன்னும் நூறு வருஷம் கழிச்சு யார் கிட்ட இருக்குமோ? ஆனா உன் மேல நான் வெச்ச நம்பிக்கையை மொத்தமா அழிச்ச பார்… ச்சே… எனக்கு இதெல்லாம் வேண்டவே வேண்டாம் விஜி… எதுக்காக ஆசப்பட்டியோ அதை நீயே வெச்சுக்க…” என்று பேசி முடித்தவன், எழுந்து கொண்டான்.

மருத்துவர், அந்த சொத்துக்களை எழுதி வாங்கியதில் தான் அவன் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று கருத்து சொன்னதிலிருந்து மனதுக்குள் இதே யோசனைதான். கூடவே இன்னும் பல யோசனைகள்.

உண்மையில் அத்தனை மனவேதனையாக இருந்தது ஷ்யாமுக்கு. என்னதான் விஜி துரோகம் செய்திருந்தாலும் ஒரு காலத்தில் மிக நெருக்கமானவன் அவன்! உள்ளும் புறமும் அறிந்த ஒரே பிறவி. அவனது துரோகத்தை கண்டிப்பாக இறுதி மூச்சு இருக்கும் வரை மறக்கவே முடியாது.

வெகு நேரம் அந்த பத்திரங்களையே வெறித்து பார்த்தபடி இருந்த விஜி, “வேண்டாம் பாஸ்…” என்று அழுத்தமாக கூறினான்.

“வேணும் வேண்டாம்ன்னு நீ முடிவு பண்ண முடியாது… எல்லாத்தையும் உன் பேருக்கு தான செட்டில்மென்ட் பண்ணிட்டேன்…”

“இதை நீங்க திருப்பிக் கொடுக்கலாம்… ஆனா…” என்று நிறுத்தியவனை, ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம். ரொம்பவுமே கசப்பாக புன்னகைத்தான்.

“உன்னை கடைசி வரை என்னோட விஜின்னு ரொம்ப நம்பிட்டு இருந்தேன்டா…” அத்தனை இறுக்கமாக வார்த்தைகளை கூறியவனை ஆழ்ந்து பார்த்த விஜி,

“ம்ம்ம்… எஸ் பாஸ்… நான் போன பாதை சரியா இல்ல… ஒத்துக்கறேன்… ஆனா இனிமே நான் டார்கட் பண்ண போறது உங்க பிசினஸ்… அதுக்காக எந்த சீப் டெக்னிக்கையும் யூஸ் பண்ண மாட்டேன்… இன்பாக்ட் என்கிட்ட இருக்க டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்துடறேன்… வீடியோஸ் உட்பட… இனிமே நேருக்கு நேரா உங்களை பேஸ் பண்ணுவேன்… வின் பண்ணி காட்டத்தான் போறேன்…” உறுதியாக கூறியவனின் தோளை தட்டிக் கொடுத்தான் ஷ்யாம்.

“இதுதான்டா ஆம்பிளைத்தனம். இவன் தான் என்கிட்ட தொழில் கத்துகிட்ட விஜி. இனிமே நீயும் ஒரு பாஸ் டா… என்னை என்ன பாஸ்ன்னு சொல்ற?” என்று கிண்டலடித்தவன், அவனது தோளில் கை போட்டுக் கொண்டு, “நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு எந்திருச்சு வா… எனக்கும் போட்டி இல்லாம போரடிக்குது… விளையாடலாம்…” என்று சிரித்தவன், அதுவரை மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த மரகதத்தையும் பத்ரியையும் பார்த்து,

“ம்மா… இதெல்லாம் ஜாலியா நாங்க பேசிக்கறது… தப்பா நினைச்சுட்டு பயப்படாதீங்க… நல்லா பார்த்துக்கங்க… சீக்கிரம் தேறி வரட்டும்… ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா பையன் அடங்கிடுவான், என்னை மாதிரி…” என்று சிரிக்க, மரகதமும் சிரித்தார்.

“அண்ணா… நீங்களே சொல்லிக்கறீங்க…” என்று பத்ரி சிரிக்க,

“வேற வழி? இல்லைன்னா சோறு கிடைக்காது தம்பி…” என்று சிரித்தவன், அவனது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, கிளம்பத் தயாரானான்.

அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் மெல்லிய முறுவல்.

ஷ்யாமின் இந்த முகம் மகாவுக்கு புதிது. மிகவும் புதிது! இன்னும் எத்தனை முகங்கள் தான் இவனுக்கு? இன்னும் எத்தனை எத்தனை ஆச்சரியங்களை தரப் போகிறான் இவன்? வியப்பாக நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களிடம் கூறிக் கொண்டு அவளது கையை பிடித்தபடி கிளம்பியிருந்தான்.

எதுவும் பேசாமல் அவனை தொடர்ந்தாள், அவன் இழுத்த இழுப்பிற்கு தகுந்தவாறு! அவன் மேல் காதல் வழிந்து கொண்டிருந்தது. அவனை அவ்வப்போது கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

வீடு போய் சேரும் வரை இருவருக்குமே பேச்சு என்பது சிறிதும் இல்லை. அவன் ஏன் இதை செய்தான் என்று மஹா கேட்கவில்லை. எதற்காக கொடுத்தான் என்றும் கேட்கவில்லை. ஒருவிதமான மோன நிலையில் வீட்டுக்கு வந்தவள், யோசனையாகவே இருந்தாள். அன்று அவளுக்கு விடுமுறை. அதனால் தான் காலையிலேயே விஜியை பார்க்க வேண்டும் என்று கூற, அவளை தனியாக அங்கு விட மனம் வராததால் தானும் உடன் சென்றான் ஷ்யாம்.

“என்ன? ஒரே யோசனையா இருக்கீங்க ஹெர் ஹைனஸ்?” என்று கேட்டு,  மெளனமாக மதிய உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்தான், அவ்வப்போது செல்பேசியை பார்த்தபடி!

‘பார்வையே சரியில்லையே… ஏடுகொண்ட்லவாடா நீ என்னதான் ப்ளான் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணு… பிரிப்பர் பண்ணவே விடாம அடிக்கறது ரொம்ப தப்பு…’

“எப்படி அவனுக்கு அத்தனையும் திருப்பிக் கொடுத்த ஷ்யாம்?” அமைதியை உடைத்துக் கொண்டு அவள் கேட்க,

“ப்ச்… அதுக்காக தான மஹா அவன் அத்தனையும் பண்ணினான்… அதான் நீயே வெச்சுக்கடான்னு சொல்லிட்டேன்…” டைனிங் டேபிளில் அமர்ந்தபடி வெகு சாதாரணமாக கூறவும்,

“ரொம்ப பெரிய விஷயம் பண்ணிருக்க ஷ்யாம்… இதான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்…” அவனுக்கு உணவை பரிமாறியபடியே உள்ளுர உணர்ந்தவாறு கூறினாள்.

“ரொம்ப பெரிய கனவெல்லாம் வெச்சுக்காதடி. எந்த விஷயத்தையும் கால்குலேஷன் இல்லாம செய்ய மாட்டேன். இப்ப இதை திருப்பிக் கொடுத்ததன் மூலமா அவனுக்குள்ள ஒரு குற்ற உணர்வை தூண்டி விட்டேன். அவன் தானா டாக்குமெண்ட்ஸ கொடுக்க ஒத்துகிட்டான். அவ்வளவுதான்…” என்று சிரிக்க,

“அவன் கிட்ட அவ்வளவு நல்லதனமா பேசினியேடா…” நிச்சயமாக மஹா அதிர்ந்திருந்தாள். கரண்டியிலிருந்த சாப்பாட்டை தட்டில் வைக்க மறந்து கைகள் அந்தரத்தில் நின்றன. அவளது கையை பிடித்து உணவை தனது தட்டுக்கு இடம் மாற்றியவன், அவளுக்கு முன்பிருந்த தட்டிலும் உணவை பரிமாறிக் கொண்டே, அவளை நேராக பார்த்தவன்,

“ஆமா பேசினேன் மஹா. இப்பவும் நான் சொன்னதுல எல்லாம் எந்தவிதமான மாறுதலும் இல்ல. அதெல்லாம் நான் உணர்ந்து உண்மையா சொன்னதுதான். ஆனா அந்த டாக்குமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப முக்கியம். அதெல்லாம் இல்லாம தான் ராவ் க்கு என்பது லட்சம் அழுதேன். இன்னும் என்னவெல்லாம் பண்ணி வெச்சு இருக்கான்னு எவ்வளவு அகழ்வாராய்ச்சி பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா? கண்டிப்பா இன்னும் நிறைய கொடுக்கல் வாங்கல்ல அவனோட வேலைய காட்டியிருப்பான்.

அவன் கூட பேச்சுவார்த்தை இல்லைன்னா எப்படி அவனை ரீச் பண்றது? என்னென்ன கோல்மால் பண்ணிருக்கான்னு எப்படி தெரிஞ்சுக்கறது? இந்த சொத்தெல்லாம் ஒரு பெரிய விஷயமில்ல… சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிச்சு இருக்கேன்… அவ்வளவுதான்… ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, இளங்கவி கூடத்தான் வீட்டுக்கு போனான். டாக்குமெண்ட்ஸ ஹேன்ட் ஓவர் பண்ணிட்டான். இப்ப தான் கவி மெசேஜ் பண்ணிருக்கான்.” என்று முடித்த ஷ்யாமை விழி விரிய பார்த்தாள்.

சத்தியமாக அவனை புரிந்து கொள்ள இன்னொரு ஜென்மம் தேவைப்படும் என்று தான் தோன்றியது. தனக்கு முன்பிருந்த உணவையே வெறித்துப் பார்க்க தோன்றியது. அவன் கவலை இல்லாமல் சாதத்தோடு குழம்பையும் பிசையத் துவங்கினான்.

“இப்படிக் கூட கீழ இறங்கியும் போவியா?” ஏதோவொரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

“இது கீழ இறங்கறது இல்ல டார்லிங்… தந்திரம். அவனை மிரட்டி பார்த்தாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு, படுக்கவும் வெச்சாச்சு. ஆனா அந்த டாக்குமெண்ட்ஸ அவன்கிட்டருந்து வாங்க முடியல. உன்கிட்ட ஏதாவது சொல்வானான்னு கண்காணிச்சோம். எதுவுமே நடக்கல. ஒரு சில விஷயம் மட்டும் தான் உன்கிட்ட பேசினான், நம்ம மேரேஜுக்கு முன்னாடி நீ தனியா பார்த்தப்ப. அப்புறம் எப்படித்தான் அந்த டாக்குமெண்ட்ஸ வாங்கறது? பென் டிரைவ்ஸ் அவன் கிட்ட இருக்கற வரைக்கும் எனக்கு டேஞ்சர் தான். அவனை அடிக்கறதுக்கு முன்னாடியே பணம் எவ்வளவு வேணும்ன்னு கேட்டேன். அவன் ஒத்துக்கல. உன்னைத்தான் கேட்டான். அதான் அடிச்சு படுக்க வெச்சேன்.” என்று நிறுத்தியவன், சாப்பிட்டபடியே, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“இன்னமும் அவனை பக்கத்துல இருந்து பார்த்துதான் செயல்பட விடனும் மஹா. என்னிக்கிருந்தாலும் என் வீக்னஸ் எல்லாம் தெரிஞ்ச அவன் டேஞ்சரான ஆள் தான். அவனோட ரொம்பவும் பர்சனலா ஒட்டாத… பக்கத்துல இருக்கற மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு விலகல் இருக்கணும். இல்லைன்னா இவனை மாதிரி ஆளுங்களை ஹேண்டில் பண்ண முடியாது…” என்று முடிக்க, சோர்வாக அவனைப் பார்த்தாள். இடது கையால் அவளுடைய தட்டில் குழம்பை ஊற்றியவன், சாப்பிடு என்று சைகை செய்ய, அந்த உணவு உள்ளே இறங்கும் என்று தோன்றவில்லை.

இதுபோன்ற தந்திரங்கள் எல்லாம் அவள் அறியாதவை. தெரியாதவை. ஒரு வார்த்தையை பேசினால் கூட அதற்கான உள்ளர்த்தமும் ஒன்றாகத்தான் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாத மஹாவுக்கு அவனது செய்கை வெகு உறுத்தலாக இருந்தது.

ஷ்யாமை பொறுத்தவரை, அவனது மனதை உரைத்தான். இதை வேறு யாரிடமும் கூறிவிட மாட்டான். ஆனால் தன்னுடைய மனைவி தன்னைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டிலும், அது போன்ற நிகழ்வுகளில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று அவளுக்கு கற்றுத்தர வேண்டும் என்று நினைத்தான், அவனுக்கு ஏற்றார் போல!

காரணம் மெடிக்கல் காலேஜ் என்பதை டீம்ட் யுனிவர்சிட்டியாக்க வேண்டும். எதிர்காலத்தில் அதன் சட்டபூர்வமான பொறுப்பு அவனது மனைவியிடம் என்று  தீர்மானித்து இருக்கும் போது, அவள் பேசும் நியாயங்களை எல்லாம் ஏற்க முடியாது, அவனை பொறுத்தமட்டில்!

“அப்படீனா ஒரு மனுஷனோட குற்ற உணர்வை தூண்டி விட்டா நாம எதை வேண்ணா சாதிச்சுக்கலாம். இல்லையா?” என்று கேட்க, சிங்கம் வான்ட்டடாக வண்டியில் ஏறியது, அதுவே அறியாமல்!

“ம்ம்ம்… கண்டிப்பா…” என்றான் மெல்லிய புன்னகையோடு!

அவனை அமைதியாக பார்த்தவள், “அப்படிதான் எனக்கும் குற்ற உணர்வை தூண்டி விட்டுட்டு இருக்கியா ஷ்யாம்?”

அவனிடம் குரலை உயர்த்தாமல், கோபப்படாமல், சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அவள் கேட்ட கேள்வி நிச்சயம் ஒரு கண்ணி வெடி என்பதை அவன் அறிவான்.

இதற்கு பதில் கூறினால் அந்த கண்ணி வெடியில் தானே காலை வைத்தது போல ஆகிவிடும். கூறாவிட்டாலோ அந்த கண்ணி வெடியிலிருந்து காலை எடுத்ததாகி விடும். இரண்டுமே ஆபத்தானது அல்லவா!

‘அந்த ஆபத்தான மிருகம் நம்மளை நோக்கித் தான் வருது கேப்டன்’ மனம் அலறியது. புரையேறியது. கண்ணாடி டம்ப்ளரிலிருந்த நீரை அருந்தினான்.

எதையும் காட்டிக் கொள்ளாமல் மஹாவை பார்த்தவன், “உனக்கெதுக்கு குற்ற உணர்வு வரணும் மஹா? தப்பு பண்ணதெல்லாம் நான் தானே?” என்று கேட்க,

“ஆமா. அதான் எனக்கும் புரியல. தப்பு உன் பக்கமிருக்கு. ஆனா எனக்குள்ள ஒரு வகையான குற்ற உணர்வை தூண்டி விட்டு இருக்க. அதான் எப்படின்னு புரியாம இருந்தேன். இப்ப தான் புரியுது ஷ்யாம். மனுஷங்க மனசோட விளையாடறது உனக்கு புதுசு இல்லைன்னு நல்லாவே புரியுது.”

அமைதியாக அவள் கேட்ட தொனியில் நிச்சயம் அவனுக்குள் ஏதோவொன்று அசைந்தது.

“உனக்குள்ள இருக்கறது குற்ற உணர்ச்சி கிடையாது மஹா. அது லவ். அன்கண்டிஷனல் லவ். அந்த லவ்க்கும், நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாத உன்னோட இயல்புக்குமான ஒரு க்ளாஷ் தான் இப்ப நீ கடந்துட்டு இருக்க உன்னோட மனநிலை. அது எனக்கு நல்லா புரிஞ்சதுனால தான், நீயா வெளிவரனும்ன்னு வெய்ட் பண்றேன் மஹா. நான் உன்னோட குற்ற உணர்ச்சியை எந்த விதத்திலும் தூண்டி விடலை.”

சாப்பாட்டை தயிரோடு நாசூக்காக பிசைந்து கொண்டே, ரொம்பவும் தெளிவாக கூறியவனை வெறித்துப் பார்த்தவள்,

“எந்தவொரு சிச்சுவேஷனையும், விஷயத்தையும் நமக்கேத்த மாதிரி மாத்திக்கறது ஒரு கலைன்னா, நீ அதுல பிக்காஸோ டா. ஆனா அதை என்கிட்டவும் ட்ரை பண்ற… ரொம்ப குழப்ப பார்க்கற…” என்றவளை உணர்வில்லாமல் பார்த்தான்.

“எந்தவிதமான தந்திரத்தையும் கையாளாம, நான் நானா இருக்கறது உன்கிட்ட மட்டும் தான் மஹா. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி ட்ரான்ஸ்பரன்ட் வித் யூ. நான் பண்றது தப்பாவே இருந்தாலும், நான் என்ன நினைக்கறேன்னு உனக்கு தெரிஞ்சு இருக்கனும்ன்னு நினைக்கறேன். உன்கிட்ட இருந்து மறைக்க எனக்கு எதுவுமே இல்ல. நான் எந்த முகமூடியும் போடலை. ஆனா என்ன? கொஞ்சம் இமோஷனல் இடியட் ஆகிட்டு வரனோன்னு மட்டும் தோணுது…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!