அத்தனை இறுக்கமாக அவன் கூறியதை கேட்டவளுக்கு வேதனையாக இருந்தது. ஒரு நாள் முழுக்க பைத்தியம் போல சுற்றியது அவனை அசிங்கப்படுத்துவதாமா? அவன் மேல் பைத்தியமாக இருப்பது அவனுக்கு அசிங்கமாமா? தான் அரைவேக்காடா?
“பேசனும்ன்னு பேசாத ஷ்யாம்…” என்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“என்ன பேச வேண்டாம்ன்னு சொல்ற? என் பொண்டாட்டி என்னை நம்பாம வேவு பாக்க வந்தான்னு பெருமையா சொல்ல சொல்றியா?”
“நீ பொய் சொல்லவும் தான எனக்கு சந்தேகம் வந்துது? நீ ஏன் பொய் சொன்ன?”
மஹாவின் இந்த கேள்வியை கண்டிப்பாக எதிர்பார்த்தான். தான் செய்த தவறு இது. வேண்டுமென்றே செய்யவில்லை என்றாலும் தவறு தவறுதானே? அதிலும், எந்த மாதிரியான நேரத்தில், யாருடன் இருக்கும் போது இப்படியான பொய்யை சொல்லி… தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.
“அப்படியே சொல்லியிருந்தாத்தான் என்ன? என் மேல உனக்கு நம்பிக்கை இருந்திருந்தா இப்படி பண்ணி இருக்க மாட்ட மஹா…” புருவத்தை சுருக்கிக் கொண்டு, அத்தனை இறுக்கமாக அவன் கூறிய போது உள்ளுக்குள் மனதை பிசைந்தது. ஏதோ விரும்பத்தகாதது நடக்கவிருப்பதை போன்ற பிரம்மை!
மெளனமாக அவனை பார்க்க, “உன்னை மாதிரிதான். நூறாவது நாள்… ரப்பிஷ்… அந்த கர்மம் புடிச்ச நாளுக்கு உனக்கு சர்ப்ரைஸ் தர்றதுக்காக ப்ளான் பண்ணிட்டு இருந்தேன். நான் வெளிய இருக்கேன்னு சொன்னா நீ ஸ்மெல் பண்ணிடுவன்னு தப்பு கணக்கு தான் போட்டேன். ஆனா நீ என்னனவோ கணக்கு போட்டுட்ட… தப்புதான்… பொய் சொல்லிட்டேன்… ஆனா தட் வாஸ் ஹார்ம்லெஸ்… ஆனா நீ பண்ண பாரு… அதுவும் மூணாம் மனுஷங்க முன்னாடி என்னை விட்டுக்கொடுத்து…” என்று அவன் முகத்தை அழுந்த துடைத்துக் கொள்ள, எச்சிலை கூட்டி விழுங்கியபடி அவனைப் பார்த்தாள் மஹா.
இந்த இறுக்கம் அவள் என்றுமே பார்க்காதது. என்ன செய்தாலும் அடுத்த நிமிடம் அவனும் சிரித்து, தன்னையும் சிரிக்க வைத்த ஷ்யாமை மட்டுமே அவளுக்கு பரிட்சயம்! ஆனால் இவன் வேறு…
“கர்மமா?” என்று ஒரு மாதிரியான குரலில் இவள் கேட்க,
“ஆமா… இந்த நாள் போன லட்சணத்துக்கு அது ஒன்னு தான் குறைச்சல்…” என்றவன், “உன்ன மாதிரி, எதை பார்த்து உன்னை இப்படி லவ் பண்ணி தொலைச்சேன்னு தெரியலன்னு சொல்ல சொல்றியா? இல்ல இவ கிட்ட ஏன் தான் மாட்டினேனோன்னு புலம்ப சொல்றியா? இப்படித்தான் இருப்பன்னு தெரிஞ்சுதான் கட்டிக்கிட்டேன்… ஆனா இப்ப என்னோட பொறுமை எல்லாம் பறந்து போய்டும் போல இருக்கு… முடியல மஹா…” என்றவன், மீண்டும் முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டான். பெரிய மூச்சை இழுத்து விட்டாலும் அவனது பதட்டம் குறைவதாய் இல்லை!
“நான் பொய் சொல்றேன்னு தெரிஞ்சு இருந்தா அப்பவே கேள்வி கேட்டு இருக்கணும்… ஏன்டா பொய் சொல்றன்னு? ஆனா உனக்குத்தான் எப்பவும் சந்தேகம் பிடிச்சு ஆட்டுதே… அதான் கிளம்பி வந்துட்ட…” என்று உணர்வில்லாமல் கூற,
“பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாத…” சற்று சுருதி குறைந்து விட்டது அவளது குரலில்!
“உண்மைய தான் சொல்றேன் மகாவேங்கடலக்ஷ்மி…” அழுத்தமாக கூறியவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது தொனியில் போன கோபம் திரும்ப வந்தது.
“சரி எனக்குத்தான் சந்தேகம்… நீ ரொம்ப நல்லவன் தான… அந்த சௌஜன்யா கூட அவ்வளவு பிரச்சனைக்கப்புறமும் என்ன உனக்கு பேச்சு வேண்டியிருக்கு?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க, கார்த்திக் முந்திக்கொண்டான்.
“பாப்பா… சுஷ்ருதாவுக்கு ஒரு விளம்பரப் படம். ஆக்சுவலி ஒரு சோசியல் காஸ்காக எடுக்கறோம். மதிதான் டைரக்ட் பண்றார். அதை பத்தி எல்லாருமா டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம்…” என்று கூற,
“ஏன் அவ தான் கிடைச்சாளா? வேற எவளுமே இல்லையா? அவ நடிச்சாத்தான் அந்த சோசியல் காஸ் மோட்சமடையுமா?” மஹா கிடுக்கிப் பிடி போட, கோபமாக முன்னே வந்த ஷ்யாம், அவளை கையை காட்டி நிறுத்தினான்.
“உன் தங்கச்சி ஒன்னும் நம்ப வேண்டாம் கார்த்திக்… ஒவ்வொன்னுக்கும் ப்ரூப் கொடுத்துட்டே இருந்தா அது வாழ்க்கையில்ல… வழக்கு… யாரோ ஒருத்தன் சொல்றதை நம்புவாளாம்… ஆனா என்னை அவளால நம்ப முடியல… இப்படி ஒரு ரிலேஷன்ஷிப்ப இழுத்து பிடிக்கனும்ன்னு என்ன இருக்கு?” வேதனையாக ஷ்யாம் கூற, எதுவும் பேசாமல் பார்த்தாள் மஹா!
“என்ன நீ பெரிய இவ மாதிரி நோண்டிகிட்டு இருக்க? எந்த இடத்துல யாரை எப்படி வைக்கணும்ன்னு எனக்கு தெரியாதா? உன்கிட்ட கேட்டுத்தான் நான் நடக்கணும், ஆடனும், மூச்சே விடனும் இல்லையா?” என்றவன், “மூச்சு முட்ட வைக்காத மஹா…” என்று கசப்பாக முடிக்க,
புரிந்தது… அவனை ரொம்பவுமே காயப்படுத்தி விட்டோம் என்று!
“மாப்பிள்ளை…” என்று பைரவி தன்மையாக ஆரம்பித்தார்.
“சாரி அத்தை… இது எனக்கும் இவளுக்கும் இருக்கற விஷயம். நீங்க தலையிட வேண்டாம்…” கத்தியை போன்ற பதில். அவர் அதற்கு பின் பேசவில்லை. அவளை பார்த்தும் பாராமல்,
“உனக்காக என்னை எவ்வளவு வேண்ணா மாத்திக்க மஹா. நீ எனக்கு வேணும். கடைசி வரைக்கும் வேணும். என்னோட உயிரே நீதான். உனக்காக எதை வேண்ணா விட்டுக் கொடுப்பேன். ஆனா என்னோட வேலை எனக்கு ரொம்பவே முக்கியம். தயவு செஞ்சு அதுல தலையிடாத. ஏன் அவ கிட்ட பேசின, ஏன் இவ கிட்ட பேசினன்னு கேட்டா என்ன பதில் சொல்றது? இது தொழில். என்ன செய்றதுன்னு எனக்குத்தான் தெரியும்…” என்றவனின் குரலில் இருந்தது கோபமா ஆற்றாமையா? தெரியவில்லை அவளுக்கு!
“ஆனா நீ என்னை ரொம்பவே விட்டுக் கொடுத்துட்ட… உனக்காக ஸ்பேஸ் கொடுக்கணும்ன்னு எவ்வளவோ பொறுமையா இருந்ததுக்கு நல்லா வெச்சு செஞ்சுட்ட… கார்த்திக்கிட்ட சொன்னேன், எங்க அம்மாவுக்கு அப்புறம் என்னை எந்த நிலைலையும் நம்பற ஒரே ஆத்மா மஹா தான்னு. தப்பே பண்ணாலும் என்னை ரெண்டு அடி அடிச்சுட்டுக் கூட, என் மஹா என் பக்கம் நிப்பான்னு சொன்னேன். ஆனா அந்த என்னோட நம்பிக்கை இன்னைக்கு மொத்தமா முடிஞ்சு போச்சு…”
வேதனை தோய்ந்த குரலில் அவன் கூறியதை கேட்டவளுகக்கும் அதே வேதனை தான்!
“நீ பொய் சொன்னப்ப, என்னோட நம்பிக்கையும் மொத்தமா தகர்ந்து போனப்ப எனக்கும் உயிரே போன மாதிரி தான் இருந்துது. ஏன் இந்த உலகத்துல இருக்கோம்ன்னு தோனுச்சு… அதுக்கப்புறம் என்னால எதுவும் சிந்திக்க முடியல. நல்லது எது கேட்டது எதுன்னு தெரியல. அவ்வளவு விரக்தி… வேதனை… நீ எல்லா விஷயத்தையும் கார்த்திக் கிட்ட சொல்ற… ஷேர் பண்ணிக்கற. ஆனா நான் யார்கிட்டயும் ஷேர் கூட பண்றதில்ல. அத்தனை மன கஷ்டத்தையும் நான் ஒருத்தியா தான் அனுபவிக்கறேன்…” என்றவளுக்கு கண்களில் கண்ணீர்!
தன்னுடைய உயிரானவள் தனியாக அத்தனை துன்பத்தையும் அனுபவித்து இருக்கிறாள் என்றவுடன், அவனது அத்தனை காயங்களும் அவனுக்கு மறந்து போனது. அவள் கோபத்தை காட்டும் வரை அவனது கோபத்தை இழுத்துப் பிடித்து வைத்திருந்தவனுக்கு அவளது கண்ணீர் அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட செய்தது.
அவள் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்து கொண்டு, அவளது கையை பற்றிக் கொண்டான். சுற்றிலும் அவளது பெற்றோர் இருப்பதும் அவனது பெற்றோர் இருப்பதும் அவனுக்கு மறந்து போனது!
“ஏன்டி அப்படி நினைக்கற? நான் இல்லையா உனக்கு? அப்படி பீல் பண்ணா என்கிட்ட சொல்ல வேண்டியதுதான?” என்று ஆற்றாமையோடு கேட்க, கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக்குத்தான் தலையிலடித்துக் கொள்ளலாம் போல இருந்தது. ‘அந்நியன் ரெமோவாகிட்டான்டா… விக்கெட் பொண்டாட்டி கால்ல விழுந்துடுச்சு’
“உனக்குத்தான் நான் ரொம்ப மூச்சு முட்ட வைக்கறேன்ல… ஸ்வீட் மொமன்ட்ஸ் கூட உனக்கு கர்மமா தெரியுது… நான் அரவேக்காடு வேற…”
“அதெல்லாம் கோபத்துல சொல்றதுடி… அதுக்கெல்லாம் அர்த்தம் எடுத்துப்பியா?” என்றவன், “எவ்வளவு கோபம் இருந்தாலும் கூட இருந்து சண்டை போடு மஹா. விட்டுட்டு போனா…” என்று நிறுத்தியவன், “எனக்கும் லைப்பே வெறுத்து போய்டுச்சு…” என்று கூற, முருகானந்தமும் அவனது ஆதரவுக்கு வந்தார்.
“பாப்பா… மாப்ள சொல்றது ரொம்ப கரெக்ட் தான். எதுவா இருந்தாலும் கூட இருந்து சண்டை போடு பாப்பா. உன்னை கண்டுபிடிக்கறதுக்குள்ள அவரை எங்களால பாக்க முடியல…” என்று கூறவும் அவளுக்குள் இன்னுமே குற்ற உணர்ச்சி!
எல்லாம் தெரிந்து தான் திருமணம் நடந்தது. ஒருவேளை அந்த புகைப்படங்கள் தன்னுடைய கண்ணில் படவில்லைஎன்றால் தங்களது வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. அவற்றை மறக்க முடியாத மனது அவனை விதவிதமாக சந்தேகப்பட்டு தானும் காயப்பட்டு அவனையும் காயப்படுத்துகிறது என்று புரிகிறது.
அவன் தவறி இருந்தால், அவனால் தன்னை எதிர்நோக்க முடியாது.
ஹோட்டலில் பார்த்தபோது அவனுக்கு தான் சற்றும் அவகாசம் தரவில்லையே!
அப்போது தன்னுடைய நிலையிலிருந்து பார்த்தபோது மேலும் ஒரு நொடி கூட நிற்க முடியாது என்று கூறிய மனம், இப்போது இரண்டு நிமிடங்கள் நின்று அவனிடம் விசாரித்து இருக்கலாமே என்று கேட்டது.
அதிலும் மூன்றாம் மனிதர்கள் முன் அவனை விட்டுக் கொடுத்தது தான் அவனை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. எங்குமே அவன் தன்னை விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் தான் செய்தது பெரிய தவறு. புரிந்தபோது உள்ளுக்குள் நடுங்கியது.
இந்த தவறை எதை கொண்டு ஓட்ட வைக்க?
அதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், “மஹா… நான் மச்சானுக்கு சப்போர்ட் பண்றதா நீ நினைக்கலாம். ஆனா நான் உண்மையை பேசறேன். இத்தனை நாளா அவர் கூடத்தான் இருக்கேன். தப்பு பண்றவங்க கண்ணை பார்த்தே சொல்லிட முடியும் பாப்பா. அவர் உனக்கு எந்தளவு உண்மையா இருக்கார்ன்னு எனக்கு தெரியும்…” என்று நிறுத்தியவன்,
“உன்னை கஸ்டடி எடுத்தப்ப நான் கொடுத்த பணம் யாருதுன்னு நினைச்ச?” என்று கேட்க, ஷ்யாம் எழுந்து நின்று அவனை முறைத்தான். அதை கண்டுகொள்ளாமல், மஹாவை பார்க்க, அவள் குழப்பமாக கார்த்திக்கை பார்த்தாள். முருகானந்தத்துக்கும் பைரவிக்குமே இது புதிய விஷயம்!
“மச்சானே தியேட்டர விலைக்கு வாங்கற மாதிரி பணத்தை கொடுத்து, அதை தான் வாங்கினார் மஹா. ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டதுக்கு, மஹாவுக்கு இல்லாதது என்கிட்ட எதுவுமில்லன்னு சொன்னவரை எப்படியெல்லாம் போட்டு வாட்டற…” என்று விஷயத்தை போட்டு உடைக்க, ஷ்யாம் மகாவை பார்த்து கையெடுத்து கும்பிட்டு வணங்கினான்.
“தாயே… இப்படி சொல்லுன்னு நான் உன் உடன்பிறப்புக்கு ட்ரைனிங் கொடுக்கல… உனக்கு தான் விதவிதமா டவுட் வருமே… அதுவும் எப்படி எப்படில்லாம் வரும்ன்னும் தெரியாது, விவஸ்தை இல்லாம எந்த நேரத்துல வரும்ன்னும் கிடையாது. தயவு செஞ்சு இதுக்கொரு சீனை போடாத… ஆல்ரெடி ரீடர்ஸ் காண்டுல இருக்காங்க…” என்றவன்,
“ஆனா இங்க இருந்தே விழுப்புரத்துக்கு பொட்டிய கட்டிக்க… இன்னொரு மூணு மாசத்துக்கு நான் ஷப்பாடான்னு இருந்துக்கறேன். தயவு செஞ்சு போன் பண்ணிடாத… நானும் பண்ண மாட்டேன்… உனக்கு அந்த செட் அப் பிடிச்சு இருந்தா, அப்படியே கண்டினியு பண்ணிக்க… உன்னை என்னன்னு கேக்கவே மாட்டேன். போதும் சாமி…” என்று பெருமூச்சு விட்டவனை, முறைத்துப் பார்த்தாள். மூன்று மாத இன்டர்ன்ஷிப்பை விழுப்பரம் அருகிலிருக்கும் கண்டமங்கலத்தில் செய்ய அலாட் ஆகியிருந்தது.
Leave a Reply