VNE30

VNE30

30

கைகளை கட்டிக் கொண்டு அந்த மேஜையின் மேல் சாய்ந்தபடி, மருத்துவமனையிலிருந்த தனது அறையில், தன் முன் நின்றிருந்தவர்களை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்.

அவர்கள் ஒருவன் ஒரு தினசரியின், அதாவது ‘புரட்சி நாளிதழ்’ன்  சினிமா நிருபர், நாகராஜ். இன்னொருவன் சினிமா பிஆர்ஓ, ஸ்டில்ஸ் சதீஷ்.

இருவருமே நடிகைகளுக்கு தரகு வேலை பார்ப்பவர்கள் என்பது அனைவருமே அறிந்த விஷயம். இவர்கள் தான் என்று தெரிந்தபோது, கண்டிப்பாக ஏவியவன் வேறு யாரோ என்று முடிவு செய்து கொண்டான் ஷ்யாம். இவர்களை போன்றவர்களை இதுவரை அருகில் கூட விட்டதில்லை அவன். அப்படியிருக்கும் போது தனக்கும் அவர்களுக்கும் எந்த விதமான முன்பகையும் இருக்க வாய்ப்பில்லையே!

விஷ்ணு, விஜி, கவி என்று மூவருமே சுற்றி நின்று கொண்டிருந்தனர். சிவச்சந்திரன் கதவிற்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

இதில் விஷ்ணு கையை முறுக்கிக் கொண்டபடி எப்போது வேண்டுமானாலும் அடிக்கத் தயார் என்றபடி நின்றுக் கொண்டிருக்க, இளங்கவி ஷ்யாமின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தான், அவனது கண் அசைவிற்காக!

சிவச்சந்திரன் இந்த இருவரையும் ட்ராக் செய்து கூற, இளங்கவி ஆட்களை விட்டனுப்பி உடனடியாக அழைத்து வந்திருந்தான்.

“யார் சொல்லி இந்த நியுஸை எல்லாருக்கும் கொடுத்த சதீஷ்?” ஷ்யாம் அமைதியாக கேட்க, சதீஷ் பதட்டமாக,

“எனக்கு எதுவுமே தெரியாது சர்… நாகராஜ் தான் சொன்னான்… அதை தான் நியுஸ் சேனல்ஸ்க்கு கன்வே பண்ணேன்… செஞ்சது தப்புதான்… மன்னிச்சுருங்க சர்…” என்றபடி அவனது காலில் விழ பார்த்தவனை தடுத்தவன்,

“யார் சொல்லியிருந்தாலும் அதை என் கிட்ட கொண்டு வந்து இருக்கனுமா இல்லையா?”

“ஆமா சர்… புத்தி இல்லாம செஞ்சுட்டேன்…” என்று உடனடியாக தலைகீழாக மடிந்தவனை என்ன சொல்ல? எதிர்த்தால் அடக்கலாம், அடங்கியவனை என்ன செய்ய?

இளங்கவிக்கு கண்ணை காட்ட, அவன் நாகராஜிடம், “உனக்கு யார் சொன்னது?” என்று கேட்க,

“என்ன சர்? எதை சொல்றீங்க?” என்று ஒன்றுமறியாதவனை போல கேட்டவனை,

“டேய்… என்னடா விளையாட்டு காட்டலாம்ன்னு நினைக்கறியா?” என்றபடி விஷ்ணு அடிக்கப் பாய்ந்தான்.

நாகராஜ் சற்று பின்னடைய, ஷ்யாம், “விஷ்ணு….” என்றழைத்து அவனை அடக்கியவன்,

“எதை கேக்கறாங்கன்னு உனக்கு தெரியாதா?” ரொம்பவும் நிதானமாக ஷ்யாம் நாகராஜிடம் கேட்கும் போதே அந்த பிஆர்ஓ சதீஷுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

ஷ்யாமை பற்றி அவனுக்கு தெரியாதது அல்ல… ஆனாலும் பிரச்சனை ஆகாமல் தான் பார்த்துக் கொள்வதாக கூறிய விஜியின் உத்தரவாதத்தினால் மட்டுமே அவன் இதை செய்தது. ஆனால் அன்றைக்கே இந்த ராட்சசனின் முன் இப்படி நிற்க நேரும் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எதிர்ப்பார்த்திருந்தால் ஊரை விட்டு தலைமறைவாகி இருப்பானே! ஆனால் இனி எந்த வியூகமும் செல்லுபடியாகாது. வேறு வழியும் இல்லை. முடிந்தவரை சமாளிக்க வேண்டியதுதான்.

அதிலும் விஜிக்கு எதிராக கூறிவிட்டால் அவன் கண்டிப்பாக தன்னை உயிரோடு விட்டு வைக்கப் போவதில்லை. அருகிலேயே நின்றுக் கொண்டு இறுக்கமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த விஜி இன்னும் அதிகமாக பயம் காட்டினான்.

“சர்… அனாவசியமா ப்ரெஸ்ஸ பயமுறுத்தறீங்க… ஒரு வார்த்தை நான் இதை வெளிய சொன்னா போதும்… மொத்த மீடியாவும் உங்களை நார் நாரா கிழிச்சுடும்…” என்ற அந்த நிருபருக்கு அருகில் வந்த கவி,

“சொல்லித்தான் பாரேன்… முடிஞ்சா செய்டா…” என்று சவால் விட,

“சர்… மிரட்டிப் பார்க்கலாம்ன்னு நினைக்கறீங்க… அத்தனைக்கும் துணிஞ்சு தான் பத்திரிக்கைல வேலை பார்க்கறேன்…” என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவன் கூற,

“என்ன பத்திரிக்கைல வேலை பார்க்கற? மஞ்ச பத்திரிக்கையா?” விஷ்ணு நக்கலாக கேட்க, அவன் கோபமாக திரும்பினான்.

“சர்… ரொம்ப வரம்பு மீறி பேசறீங்க…” என்று ஒற்றைக் கையை காட்டி எச்சரித்தவனின் கையை பிடித்து முறுக்கிய விஷ்ணு,

“நீ வரம்பு மீறி எழுதி இருக்க… அப்படீன்னா வரம்பு மீறி நாங்களும் பேசத்தானே செய்வோம்…” என்று இன்னுமாக முறுக்க,

“சர்… கொலை வெறித் தாக்குதல் நடத்தறீங்கன்னு கண்டிப்பா நியுஸ்ல போடுவேன்…” என்றவன் வலி தாங்காமல் ‘ஆஆஆ’ வென கத்த,

“அதுக்கு நீ உயிரோட இருக்கணும்…” என்றான் இளங்கவி.

அவர்களது பேச்சில் தான் தலையிடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம். அவனது இயல்பு அதுதான். இதுபோன்ற விஷயங்களில் தான் முதலில் பேசவே மாட்டான். விஜியோ, கவியோ, விஷ்ணுவோ இப்படி யாராவது ஒருவர் தான் மிரட்டுவார்கள். எதற்கும் பணிந்து வராத போதுதான் அவன் தலையிடுவான். ஆனால் பார்வையே எதிராளியை பயமுறுத்திவிடும்.

அவசரமாக உள்ளே நுழைந்தார் ‘புரட்சி நாளிதழ்’ஆசிரியர், மணிவண்ணன்.

“வாங்க மிஸ்டர் மணிவண்ணன்… எத்தனை நாளா நம்மளை முறைச்சுக்கனும்ன்னு வெய்ட் பண்ணிட்டு இருந்தீங்க?” என்று ஷ்யாம் கேட்க, அவர் பதறினார்.

“ஷ்யாம் சர்… அப்படியெல்லாம் கண்டிப்பா இல்ல… உங்க ஹெல்ப் இல்லாம நாம பத்திரிக்கை நடத்த முடியுமா? நேற்றைக்கு என்னோட பார்வைக்கே வராம இந்த நியுஸ் பிரிண்ட்க்கு போயிருக்கு… காலைல கேட்டதுக்கு, எல்லாரும் ப்ளாஷ் பண்ணிட்டாங்க, நாம பண்ணலைன்னா நல்லா இருக்காதுன்னு தகவல் சொன்னாங்க… உங்களைப் போய் நான் பகைச்சுக்க நினைப்பேனா?” என்று எட்டாக மடிந்து அவர் கெஞ்ச, பார்த்துக் கொண்டிருந்த நாகராஜுக்கு இவர் ஏன் இந்தளவு கெஞ்ச வேண்டும் என்று தோன்றியது.

“உங்க பார்வைக்கே வராம போயிருக்குன்னு நீங்க சொன்னா நான் நம்பனுமா மணிவண்ணன்?” சற்று உணர்வுகளை காட்டிக் கொள்ளாமல் ஷ்யாம் கேட்க,

“சத்தியமா ஷ்யாம் சர்… நான் பொய் சொல்லலை… உங்க விளம்பரங்களை நம்பித்தான் இந்த பத்திரிக்கைய நடத்திட்டு வரேன்… உங்களை பகைச்சுகிட்டா உங்களோட சேர்ந்து எத்தனை பேரோட விளம்பரம் போகும்ன்னு எனக்கு தெரியாதா? நான் எதுக்கு இந்த வேலைய செய்யப் போறேன்? நீங்க கூப்பிட்டு அனுப்பலைன்னா கூட இன்னைக்கு உங்களை வந்து பார்த்திருப்பேன் ஷ்யாம் சர்…” என்ற அவரின் கெஞ்சல் அவனையும் சற்று இளக்கியது. ஆனால் காட்டிக் கொள்ளவில்லை.

இன்றைய நிலையில் பத்திரிக்கைகள் இயங்குவது விளம்பரதாரர்களை நம்பி மட்டுமே என்பதால் அவனை சற்றும் பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருந்தார் மணிவண்ணன். அவன் வேண்டாம் என்று கைகாட்டி விட்டால் சினிமா கம்பெனிகள் கண்டிப்பாக இவர்களுக்கு விளம்பரங்களை கொடுக்காது. அது அந்த பத்திரிக்கைகளுக்கு மிகப் பெரிய நஷ்டம். அந்த நஷ்டத்தை தாங்கிக் கொண்டு பத்திரிக்கைகளை நடத்துவதும் இயலாது.

ஏனென்றால் இன்றைய நிலையில் பத்திரிக்கைகளை வாங்கிப் படிப்பவர்கள் மிகவும் குறைவு. என்பதுகளிலோ தொண்ணூறுகளிலோ இருந்ததை போன்ற நிலை இப்போது கண்டிப்பாக இல்லை. அனைத்தும் மின்னணு மயமாகி விட்டப் பின் முழுவதுமாக அடிவாங்கியது இந்த பத்திரிக்கைத் துறை தான். அனைத்தும் அந்த சிறிய செல்பேசியில் வந்துவிடும் போது பத்திரிக்கை வாங்குவது அவசியமா என்ற மக்களின் மனநிலை மாறிவிட்ட பின் பத்திரிக்கைகள் பிழைப்பது இந்த விளம்பரங்களில் மட்டுமே!

அநியாயங்களை எதிர்த்து ஏன் பத்திரிக்கைகளால் நிற்க முடியவில்லை என்ற மக்களின் கேள்விக்கு பதிலும் அவர்களே! மக்கள் ஆதரவில்லாமல் பண முதலைகளின் ஆதரவோடு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கநிலை அவர்களை பகைத்துக் கொள்ள விரும்புமா என்ன? பெரிய பத்திரிக்கைகள் கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது என்பதுதான் நிதர்சனம்.

“ஆனா உங்க பத்திரிக்கைல தான் முதல்ல நியுஸ் வந்துருக்கு… அதுக்கப்புறமா அத்தனை பத்திரிக்கைக்கும், சேனல்க்கும் இந்த ரெண்டு பேரும் நியுஸ் ஸ்ப்ரெட் பண்ணிருக்காங்க… இதுக்கு என்ன சொல்ல போறீங்க?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு,

“சர்… தப்புதான்…ஆனா கஷ்டப்படற குடும்பம்… விட்டுடுங்க…” நாகராஜுக்காக தயவாக கேட்டார் மணிவண்ணன்.

“சரி… விட்டுடறேன்… அவனுக்கும் எனக்கும் எந்தவிதமான பகையும் இல்ல… ஆனா பர்பஸ்ஸா இதுல பொண்ணு பேரை இழுக்கறதுக்கு என்ன ரீசன்? அதை சொல்ல சொல்லுங்க…” என்ற அவனது கிடுக்கிப் பிடி கேள்விக்கு நாகராஜ் விழித்தான். அருகில் நின்றிருந்த விஜி அவனை முறைத்தான். ‘எதையாவது சொன்ன… கொன்றுவேன்…’ என்ற மிரட்டல் அதில் ஒளிந்திருந்தது.

“சொல்லேன் நாகராஜ்… சர் இந்தளவு இறங்கி வந்து கேட்கறார்ல…” என்ற ஆசிரியரை முறைத்தவன்,

“சர்… நீங்க விலை போகலாம்… நான் போக மாட்டேன்…” என்று கெத்தாக கூற,

“ஓஹோ… அப்படீங்கற…” என்று இழுத்தவன், “அப்படீன்னா அந்த பொண்ணை பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு தான் இந்த நியூசை ஸ்ப்ரெட் பண்ண… இல்லையா?” என்று கேட்க,

“ஆமா சர்… நல்லா தெரியும்…” என்று அடித்து விட்டான்.

இளங்கவியை அழைத்தவன், “மகாவை நான் கூப்பிட்டேன்ன்னு கூட்டிட்டு வா கவி…” என்று கிசுகிசுப்பாக கூற, “ஓகே பாஸ்…” என்று தலையாட்டியவன், அதை விஐபி வார்டில் தந்தையை ஷிப்ட் செய்துவிட்டு, அங்கிருந்த டாக்டர் கொடுத்த ஃபார்மை நிரப்பிக் கொண்டிருந்தவளின் முன் சென்று நின்றான்.

அவளுடன் கார்த்திக் மற்றும் பைரவி.

கார்த்திக்கின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. இருவருக்குமிடையில் இந்தளவு நெருக்கத்தை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. குழந்தைக்கு நெருப்பு சுடும் என்று தெரியாமல் அது அதனிடம் விளையாடலாம். ஆனால் பெரியவர்களுக்கு தெரியுமல்லவா. அது சுடுமென்று!

சுட்டது போதாதா இவளுக்கு?

ஷ்யாம் அந்த நெருப்பை போன்றவன் என்று தெரியாமல் தங்கை இருக்கிறாளே என்ற கோபத்தில் அந்த மருத்துவர் கேட்ட கேள்விகளுக்கு முழு மனதோடு விடை கூறவில்லை. கூற முடியவில்லை. அவனது கவனம் அங்கில்லாததை உணர்ந்த மகா தான் அவனை தடுத்துவிட்டு தானே அத்தனையையும் பார்த்துக் கொண்டாள்.

அட்மிஷனுக்கு பணத்தை கட்டப் போனபோதும் காஷியர் பணத்தை வாங்க மறுத்துவிட்டு,

“நீங்க சேர்மனோட ரிலேடிவ்ஸ்ன்னு சொன்னாங்க சர்… உங்க கிட்ட அமௌன்ட் வாங்க வேண்டாம்ன்னு சொல்லியிருக்காங்க…” என்று கூறிவிட, அந்த பதில் கார்த்திக்கின் எரிச்சலை அதிகப்படுத்தியது.

ஷ்யாம் தான் சேர்மேனா?

கையிலிருந்த செல்பேசியை தூக்கியடிக்க வேண்டும் போல ஆத்திரம் வந்தது. ஆனால் தந்தையின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவனது பொறுமையை இழுத்துப் பிடித்தான்.

இந்த நிலையில் ரோஷம் பார்த்துக் கொண்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது ஆபத்தாக முடியலாம். இங்கு உள்ள அதி நவீன வசதிகள் வேறு எங்கும் கிடையாது என்பதும் அவனுக்கு தெரியும். பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்தால் மட்டுமே இங்கு மருத்துவம் பார்க்க முடியும் என்பதும் தெரியும். ஆனால் அவர்களே பணம் வேண்டாம் என்று சொல்லும் அதிசயமும் நடந்து கொண்டிருந்தது.

ஃபார்மை நிரப்பிக் கொண்டிருந்த தங்கையை பார்த்தான்.

முகம் நிர்மலமாக இருந்தது. தந்தையை அட்மிட் செய்யும் போது குழப்பத்தில் அவளது முகம் கசங்கியிருந்தது. ஷ்யாமை பார்த்தபின் முற்றிலுமாக மாறிவிட்ட தங்கையை பார்த்தான்.

அவ்வளவு தெளிவாக இருந்தாள்.

கார்த்திக்கே பொறாமையாகக் கூட இருந்தது.

தங்கைக்காக என்று பார்த்து பார்த்து செய்து வருபவன் அவன். அவளுக்கும் அவனுக்கும் கிட்டத்தட்ட ஆறு வருட வித்தியாசம். அவளை போட்டியாக என்றுமே அவன் நினைத்ததில்லை. குட்டித் தங்கை, அவனது செல்ல தங்கை.

அவளுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து விடுவான். என்றுமே அவள் அவனுக்கு லட்டுக் குட்டியாகத் தான் இருந்தாள். அவன் எதை சொன்னாலும் கவுன்ட்டர் கொடுத்தாலும் அவள் எதிர்த்து எதையும் இதுவரை செய்ததில்லை. ஷ்யாம் மட்டுமே விதிவிலக்கு. அதிலும் பிருந்தாவை பிடித்ததும் கூட தங்கையின் உயிர்த்தோழி என்பதும் ஒரு காரணம். பின்னாளில் இருவருக்குமான உறவு சுமுகமாக இருக்கும். அண்ணனாக தான் எப்போதுமே தங்கைக்கு அத்தனையும் செய்யலாம் என்ற எண்ணம் அவனையும் அறியாமல் மனதின் ஒரு மூலையில் இருந்தது.

அத்தனையையும் இப்போது கெடுத்து, தன் செல்ல தங்கையை தன்னிடமிருந்து அவன் பறித்துக் கொண்டதாகவே தோன்றியிருந்த எண்ணத்தை தான் அவனால் என்ன செய்தும் மாற்ற முடியவில்லை.

அது ஒரு விதமான பொசெசிவ்னஸ். தங்கையிடம் தனக்கிருக்கும் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்ற பொசெசிவ்னஸ். அவளை தான் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற எண்ணம்! அவள் இன்னமும் சிறு குழந்தை என்ற தவிப்பு!

அத்தனையும் மனதுக்குள் வைத்துக் கொண்டு வெதும்பிக் கொண்டிருந்தான் கார்த்திக்.

பைரவிக்கு இந்த குழப்பம் ஏதுமில்லை. கணவர் உயிர் பிழைத்து வந்தால் போதும் என்ற ஜெபம் மட்டுமே!

மற்றவற்றை கவனிக்கக் கூட அவருக்கு புத்தி செல்லவில்லை.

மகாவை நோக்கி வந்த இளங்கவி, “மேடம்… பாஸ் உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க…” என்று அழைக்க,

“உங்க பாஸ் சொன்னா வந்துடனுமா? அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாரு…” என்று சூடாக கார்த்திக் கூற, மஹா ஐயோவென பார்த்தாள்.

“சர்… பிரச்சனையை பேசிட்டு இருக்காங்க… மேடமும் இருக்கனும்ன்னு பாஸ் நினைக்கறாங்க…” பவ்யமாக பதில் கூறியவனை முறைத்தவன்,

“அதுக்காகவெல்லாம் அனுப்ப முடியாது…” என்று கறாராக மறுத்தவனை மீறி போக விரும்பவில்லை மஹா. கார்த்திக் சொன்னால் மட்டும் தான் போவது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். இன்னமும் தமையனின் மனதை காயப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டுமா என்கிற எண்ணம்.

“சர்… முக்கியமான பிரச்சனை… எல்லாரும் வெய்ட் பண்ணிட்டு இருக்காங்க… மேடம் வந்தா சீக்கிரம் முடிஞ்சுடும்…” என்று பொறுமையை இழுத்துப் பிடித்துவைத்துக் கொண்டு அவன் கூற,

“ம்ம்ம்… கட்டப்பஞ்சாயத்துக்கு கூப்பிடறான்…” என்று மஹாவிடம் கடுப்பைக் காட்டியவன்,

“தனியால்லாம் அனுப்ப முடியாது…” என்று விட்டு, “ம்மா நீயும் வா…” என்று பைரவியை அழைக்க,

“இங்க ஒரு ஆள் இருக்கணும்டா…” என்று அவர் மறுக்க,

“பொண்ணை தனியா அங்க கூட்டிகிட்டு போகனுமா? பத்து நிமிஷத்துல வந்துடலாம்… வா…” என்று அவரையும் இழுத்துக் கொண்டு போனான்.

நால்வருமாக சேர்மன் என்று பெயரிட்டிருந்த ஷ்யாமின் அறைக்குள் நுழைய, அங்கு இருந்தவர்களை பார்த்து புருவத்தை உயர்த்தினாள் மஹா. கார்த்திக்கும் கேள்வியாய் பார்த்தான். பைரவிக்கு உள்ளுக்குள் நடுங்கியது. பிரச்சனை பெரிதாகிறதோ என்ற பயம் அவருக்கு! தாயாக அவரது பெண்ணின் வாழ்க்கையை பற்றிய பயம் அது!

“மஹா… இங்க வா…” என்று மஹாவை அழைத்த ஷ்யாம், அவளது கையை பிடித்து தன்னருகே நிறுத்தி வைத்துக் கொண்டு, நாகராஜிடம்,

“இது யாருன்னு தெரியுதா?” என்று கேட்க, அவன் உண்மையிலேயே விழித்தான். மஹாவை பற்றி கூறிய பிரகஸ்பதி அவளது புகைப்படத்தை காட்டவில்லையே!

அவன் விழித்த விழிப்பிலேயே அவனது திருட்டுத்தனம் வெளிப்பட்டுவிட, அதுவரை பொறுமையாக பேசிக் கொண்டிருந்த ஷ்யாமுக்கு இப்போது பொறுமை போய்க் கொண்டிருந்தது.

“தெரியாதுல்லையா?” என்று அழுத்தமாக கேட்டவனுக்கு என்ன பதில் கூறுவது என்பது தெரியாமல் விழித்தான்.

மறுத்து மெதுவாக தலையாட்டினான்.

“நீ எழுதின மகாவேங்கடலக்ஷ்மி இவங்க தான்…” என்றவன், “உனக்கு இவங்களை தெரியலைங்கற… அப்புறம் எப்படி அத்தனை சேனலுக்கும் சொன்ன நாகராஜ்? உன் வீட்டு பொண்ணுங்களை பத்தியும் இப்படிதான் சொல்வியா?” அழுத்தமாக பார்த்தபடி அவன் கேட்ட கேள்வியில் உண்மையில் உள்ளுக்குள் நடுக்கமாக இருந்தது அவனுக்கு. ஆனால் அதையெல்லாம் காட்டிக் கொண்டு விட்டால் விஜியிடம் அடிவாங்க வேண்டுமே என்ற எண்ணத்தில்,

“இவங்கள நான் பார்த்ததில்லை… ஆனா செய்தி உண்மைதானே?” என்று குறுக்காக கேட்கவும்,

“அது உண்மையா இருந்தா என்ன? பொய்யா இருந்தா உனக்கென்ன? நீ எதுக்கு இவங்க பேரை இதுல இழுத்த?”

“சர்… ஏன் இழுத்தன்னு கேட்டா என்ன பதில் சொல்றது? நியுஸ்ஸ எழுதறதுதானே என்னோட வேலை…”

“அந்த வேலைய மட்டும் பார்க்க வேண்டியதுதானே? ஊர்ல இருக்கவங்க வீட்ல எல்லாம் என்ன நடக்குதுன்னு யார் உன்னை பார்க்க சொன்னா?”

“சர்… நடந்ததை எழுதினது ஒரு தப்பா?”

“தப்பு தான்… எழுதக் கூடாதுன்னா எழுத கூடாதுதான்… பேசக்கூடாதுன்னா பேசக்கூடாதுதான்… கை வைக்க கூடாத இடத்துல நீ கை வெச்சது தப்புதான்… யார்ன்னு நினைச்சு கை வெச்ச?” வெகு கூர்மையாக பார்த்தபடி அவன் கேட்க,

“சர்… விதண்டாவாதம் பண்றீங்க!” மெதுவாக பின்னடைந்தான்.

“யார்ன்னு நினைச்சு நீ கை வெச்ச? அதுக்கு முதல்ல பதிலை சொல்லு…” சட்டையை மேலே இழுத்து விட்டபடி அவன் நாகராஜை நோக்கி முன்னேறிக் கொண்டு கேட்க,

“மிரட்டாதீங்க சர்…”

“யார்ன்னு நினைச்சு நீ கை வச்ச?”

“தெரியாது சர்… சொன்னாங்க எழுதினேன்…” பின்னடைந்து கொண்டே அவன் கூற,

“யார் சொன்னது?” அவனை நோக்கி மெதுவாக முன்னேறியபடியே அவன் கேட்க,

“எனக்கு ஒரு சோர்ஸ் மூலமா வந்தது… அதை தான் எழுதினேன்… சேனல்க்கும் சொன்னேன்…” என்று வாயை விட்டுவிட, தீக்கங்கைப் போல பார்த்தான் விஜி.

இவனை பக்கத்தில் வைத்துக் கொண்டு விசாரணை செய்யும் ஷ்யாமை நினைத்தால் உண்மையில் கவலையாக இருந்தது நாகராஜுக்கு. குழிப்பறிக்க பார்ப்பவனை அருகில் வைத்திருப்பது என்பது பெரும் சாபம்!

“ம்ம்… அந்த சோர்ஸ் யாரு?” வலது கையில் அணிந்திருந்த காப்பர் வளையத்தை முழங்கையை நோக்கி முறுக்கி விட்ட ஷ்யாம், அவனை நோக்கி முன்னேறியபடி கேட்க, அவனது பார்வையை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் தடதடத்தது.

“தெரியாது சர்…”

“இப்ப சொல்ல போறியா? இல்லையா?” கைகளை முறுக்கிக் கொண்டான்.

“தெரியாது சர்…” என்று பிடிவாதமாக கூறியவனை பளாரென அறைந்தான் ஷ்யாம். அந்த நடராஜ் சுழற்றியடித்தபடி கீழே விழ, அவனை எழுப்பிய விஷ்ணுவும் இளங்கவியும் அவனை அடிக்க தயாரானார்கள். கார்த்திக்கு திக்கென்று இருந்தது. விஜி உறுத்து விழித்தபடி இருந்தான்.

அருகிலிருந்த மணிவண்ணன்,

“சர்… வேண்டாம்… பையனை விட்டுடுங்க… நான் நல்ல மாதிரியா கேட்டு சொல்றேன்…” என்று கெஞ்ச,

“என்னை பற்றி என்ன வந்திருந்தாலும் பிரச்சனை இல்ல மணிவண்ணன்… இதுலையே புழங்கறோம்… நமக்கு இது சாக்கடைன்னு தெரியும்… வேற வழி இல்லாம ஏத்துக்கிட்டு போகலாம்… ஆனா நம்ம வீட்டு லேடீசை இழுக்கக் கூடாதுல்ல…” என்று கூற,

“கண்டிப்பா சர்… நான் பகிரங்கமா மன்னிப்பு கேட்டுடறேன்… எல்லா சேனல்க்கும் நானே சொல்றேன்… இந்த விஷயத்தை விட்டுடுங்க…” கைக் கூப்பியபடி கேட்டவரை பார்த்து,

“விட்டுடறேன்… ஆனா சொன்ன ஆள் யாருன்னு சொல்ல சொல்லுங்க… இவன் எனக்கு முக்கியமில்ல… அந்த ஆள் தான் வேணும்… சொல்லலைன்னா நாளைக்கு காலைல ஏதோ ஒரு ரயில்வே ட்ராக்ல இவன் பொணம் கிடக்கும்… தலை வேற முண்டம் வேறயா…” வெகு அழுத்தமாக அமைதியாக கூறியவனை சற்று பயத்தோடு தான் பார்த்தார்.

இவனது கட்டபஞ்சாயத்துகளை அவரும் கேள்விப்பட்டிருந்தார். அரசியல் பின்புலமும் ஆள் பலமும் இருக்கும் இவனை எதிர்த்துக் கொண்டு தொழில் செய்வது என்பது முடியாத காரியம். ஹைதராபாத்தில் இருந்தே ஆட்டி வைப்பவன், நேரடியாக இங்கு இருந்தால் சும்மா இருப்பானா? தேவையில்லாத பிரச்னையை இழுத்து விட்ட நாகராஜை எரிச்சலாக பார்த்தார்.

“சொல்லித் தொலையேன்டா… சார் கேக்கறதை சொல்லிட்டு கிளம்பற வழிய பாரு… இனிமே என் மூஞ்சில முழிச்சுறாத…” என்றவரை பரிதாபமாக பார்த்தான். உடன் இருந்த பிஆர்ஓ வாயே திறக்காமல் இருந்தான். அவனுக்கு உறுதி. இனி அவனது தொழில் அவ்வளவு தான் என்று. ஆனால் நடராஜை போல வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ள அவன் விரும்பவில்லை.

ஆனால் விஜியை அங்கேயே வைத்துக் கொண்டு எப்படி பேச முடியும்?

“ஷ்யாம்… பிரச்சனை வேண்டாம்… விட்டுடேன்…” அவனது கையை பிடித்து தன்னை நோக்கி வர செய்து அவனது காதில் உரைத்த மஹாவை பார்த்து முறைத்தான். அப்போதுதான் அவளை திருப்பி அனுப்பாததையும் உணர்ந்தான்.

“போதும் நீ கிளம்பு… இனிமே இங்கிருக்க வேண்டாம்…” என்றவன், பைரவியிடம் திரும்பி, “மகாவை கூட்டிட்டு கிளம்புங்க… கார்த்திக் மட்டும் இருக்கட்டும்…” என்று கூற,

“பிரச்சனை வேண்டாமே… விட்டுடேன்…” என்று பரிதாபமாக கூறினாள். உண்மையில் அவனது அந்த முகத்தை பார்த்து உறைந்து போயிருந்தாள்.

அவளுக்கு இவையெல்லாம் புதிது.

கொலை மிரட்டல்கள்… கட்டபஞ்சாயத்துகள்… என அனைத்தும் புதிது.

அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளது படிப்பு, வீடு, ஹாஸ்பிடல், காலேஜ்.

அதுவரை ஷ்யாம் அவளிடம் காட்டிய முகம் வேறு… இப்போது இவள் பார்க்கும் முகம் வேறு… இப்படிக் கூட நடப்பானா என்று தோன்றியது. அதிலும் அவன் அந்த நடராஜை அறைந்ததில் அவளது மனம் பகீரென்றது.

“இந்த ஆணிய நான் புடிங்கிக்கறேன்… நீ கிளம்பு…” கொஞ்சமும் இரக்கமில்லாத குரலில் அவன் கூறியதிலிருந்தே கண்டிப்பாக அந்த நடராஜை வெளுக்க போகிறார்கள் என்பது புரிந்தது. அவனுக்கு எதாவது ஆகிவிட்டால் ஷ்யாமுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என்று சிறுபிள்ளையாக பயந்தாள். கார்த்திக்கு, ‘இவனென்ன இப்படி சொல்கிறானே’ என்றிருந்தது.

“ஷ்யாம்ம்ம்ம்…” பரிதாப குரலில் அழைக்க,

“கிளம்புன்னு சொல்றேன் மஹா…” அழுத்தமாக கூறியவனை இனி என்ன சொல்லியும் மாற்ற முடியாது என்று புரிந்தது.

பதில் பேசாமல் தாயை அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!