VNE33

VNE33

33

வருமான வரி துறையின் ரெய்டு நடவடிக்கைகள் முடிந்து முழுதாக பத்து மணிநேரமாகி இருந்தது. நான்கு நாட்களாக தொடர்ந்து நடந்த பரிசோதனைகளில் பணமாக இருபது கோடி பிடிபட்ட விவகாரத்தை தொலைக் காட்சிகள் பேசித் தீர்த்தன. இன்னும் பல நூறு கோடிகள் பிடிபட்டு இருப்பதாகவும் கிலோ கிலோவாக தங்கமும் வைரமும் பிடிபட்டு இருப்பதாகவும் செய்திகள் பரப்பப்பட்டு கொண்டிருக்க, சிறு செய்திகள் அனைத்தும் கண் காது மூக்கு என்று அனைத்தும் வைக்கப்பட்டு சிலிர்த்துக் கொள்ளப்பட்டன.

சோஷியல் மீடியாக்களில் நான்கு நாட்களும் மீம்ஸ் பறந்தது.

ஷ்யாம்… ஷ்யாம்… ஷ்யாம்… பார்க்குமிடமெல்லாம் ஷ்யாம் மட்டுமே!

அத்தனையையும் மெளனமாக பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

ஹைதராபாத்தில் ஒரு சிறு டாக்குமென்ட் கூட சிக்கவில்லை. ரெய்டு என்றதும் கிளம்பிவிட்ட ஆத்மநாதன், அத்தனையும் முழுவதுமாக கிளியர் செய்துவிட்டார்.

லாக்கரை திறந்து வருமானவரித் துறை கைப்பற்றிய நகைகளுக்கும் பணத்திற்கும் பத்திரங்களுக்கும் முழுக்க முழுக்க அக்கௌண்ட்ஸ் இருந்தது.

அக்கௌன்ட்டில் வராதவற்றையெல்லாம் வேறு இடங்களில் ஆட்களை வைத்து இடம் பெயர்த்து இருந்தார்.

பெங்களூர் ஆஃபீசிலும் மும்பை ஆஃபீசிலும் அக்கௌண்ட்டில் வரும் டாக்குமென்ட்ஸ் மட்டுமே கைப்பற்றப்பட, சென்னையில் மட்டுமே கணக்கில் இன்னமும் கொண்டு வரப்படாத அந்த இருபது கோடியை கைப்பற்றி இருந்தனர்.

வருமான வரித்துறை பரிசோதனையில் கிடைக்கும் அத்தனை டாக்குமென்ட்களையும், நகைகளையும், பணத்தையும் எடுத்து சென்று விடுவது எப்போதும் நடப்பதுதான். அதற்குரிய கணக்கு சரியாக இருக்கும் போது அது திரும்ப ஒப்படைக்கப் பட்டு விடும். அப்படி இல்லாதபட்சத்தில் அதற்குரிய அபராதத்தையும் வரியையும் கட்டி திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

அதுபோல ரெய்டு நடவடிக்கைளின் போது சம்பந்தப்பட்டவர்கள் யாரும் வெளியேற முடியாது. யாரிடமும் பேசவும் முடியாது என்பதால் முழுவதுமாக வெளியுலக வாழ்க்கை துண்டிக்கப்பட்டிருந்தது.

ஷ்யாம், ரெய்டு என்றதும் கார்த்திக் சந்தோஷப்பட்டு எழுந்து கொள்ள, பைரவியும் மஹாவும் மிகவும் சங்கடமாக உணர்ந்தனர்.

ஐந்து நாட்களாக முழுக்க முழுக்க தங்களோடு நின்று தோள்  கொடுத்த குடும்பத்தை இப்படியுமா பழி தீர்க்க நினைக்க வேண்டும் என்ற வேதனையோடு மகன் சென்ற திசையை பார்த்தார் பைரவி.

கசப்புகளை மனதில் வைத்துக் கொண்டு தோள் கொடுக்க வேண்டிய சமயத்தில் தோள் கொடுக்காமல் தள்ளி விடுவது போன்ற அவனது நடவடிக்கையை அவர் ரசிக்கவில்லை. ஷ்யாமுக்காக இல்லையென்றாலும், மகனையே எதிர்த்து தங்களுக்காக நின்ற நாதனுக்காக பார்க்க வேண்டாமா என்றது மனம்!

என்ன செய்வது என்று புரியாமல் மகாவை பார்க்க, அவள் யோசனையாக ஷ்யாமை பார்த்தபடி இருந்தாள்.

அவன் எதையும் கண்டுகொள்ளாதவனாக, ஆத்மநாதனை அழைத்துக் கொண்டு சற்று தூரம் தள்ளி நின்று கொண்டு,

“நானா… யூ டேக் சார்ஜ் ஃபார் ஹைதராபாத்… முடியும் தானே?” என்று கேட்க,

“டேய்… நான் உனக்கு அப்பன் டா…” என்றவரை,

“ஓகே…” என்று கூறிவிட்டு, இளங்கவியை அழைத்தவன், செய்தியை சுருக்கமாக கூறிவிட்டு,

“கவி, போயஸ் கார்டன் ஆஃபீஸ் முழுக்க நீ டேக் ஓவர் பண்ணிக்க… எந்த டாக்குமெண்ட்ஸும் ஐடிக்கு கிடைக்கக் கூடாது…” என்று கூறிவிட்டு, மும்பை, பெங்களூர் அலுவலகங்களையும் உஷார்ப்படுத்தியிருந்தான்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           

மேலும் ஒவ்வொருவரையும் அழைத்து செய்ய வேண்டியவற்றை கூறி, அதை விரைந்து முடிக்கக் கூறிவிட்டு வைத்தபோது ஒரு மணி நேரத்தை கடந்திருந்தது.

அதிர்ஷ்டவசமாக லிமிடட் கம்பெனி ஆக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆரம்பித்து இருந்ததால் பெரிய அளவில் பிரச்சனை இல்லாமல் போயிருந்தது. முதலிலேயே கணக்கு வழக்குகளை தெளிவாக்க துவங்கி இருந்தனர் தணிக்கையாளர்கள்.

ஆனாலும் தொழில் நடப்பது தொண்ணூறு சதவிதம் கறுப்புப் பணம் என்பதோடு, அத்தனை பெரிய அரசியல்வாதிகளின் பணத்திற்கும் பினாமி இவன்! இவன் சிக்கினால் அத்தனை அரசியல்வாதிகளும் சிக்குவார்கள் என்பதால் தான் அந்த தவான் அவ்வளவு அவசரமாக அழைத்திருந்தார்.

தவான் ஒரு அரசியல் புரோக்கர். அவருக்கு அத்தனை அரசியல்வாதிகளிடமும் பழக்கமுண்டு. அவர்களது சொத்துக்களையும் கறுப்பு பணத்தையும் வெள்ளையாக்கி தருவதில் அவருக்கு மிக முக்கியமான இடமுண்டு.

ஷ்யாமுக்கும் அந்த அரசியல்வாதிகளுக்கும் இவர் பாலம்! அவர்களிடமுள்ள பணம் இவனிடம் வந்து, அது சினிமா தயாரிப்பில் முதலீடு செய்யப்பட்டு, மாத மாதம் வட்டியாக அவர்களுக்கு சென்று விடும். இதில் தவான் போன்றவர்களுக்கு கமிஷன் உண்டு. அந்த கமிஷனே கோடிக்கணக்கில் புரள்வதும் உண்டு.

யாருடைய பணம், எவ்வளவு, எந்த இடத்தில் முதலீடு செய்யப்படுகின்றது என்பதை தனியாக டைரியில் குறித்து வைத்திருப்பான். அந்த குறிப்புகள் மிக மிக முக்கியமானவவை. யாருமே அறியாதவை. டைரி குறிப்புகளும் அதற்கான டாக்குமெண்ட்ஸ் போன்றவை வெளியே வந்தால் இந்திய அரசியல் கூட கலங்கி விடுமளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

அந்த டைரியை மிக மிக ரகசியமாகத்தான் அவன் வைத்திருப்பது.

ஆனால் இந்த ரெய்டில் அந்த டைரி எப்படியோ சோதனை செய்ய வந்த அதிகாரிகளிடம் சிக்கியிருந்தது.

அது உண்மையிலேயே அதிர்ச்சிக்குரியது. அவன் சற்றும் எதிர்பாராதது.

இவ்வளவிற்கும் போயஸ் கார்டன் வீட்டில் அந்த டைரி இருக்காது. உத்தண்டி ஃபார்ம் ஹவுஸில் மிகவும் ரகசியமான இடத்தில் வைக்கப்பட்டு இருந்ததை யார் சொல்லியிருக்கக் கூடும்?

வருமான வரி சோதனை என்றதும் அவன் கிளம்பிய போதே அவனோடு கிளம்பியவள் தான். அவன் எத்தனை கூறியும் எதற்கும் மசியவில்லை.

“ம்மா… ராத்திரிக்குள்ள வந்துடுறேன்ம்மா… இப்போதைக்கு அப்பாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… ஏதாவதுன்னா ஷ்யாமுக்கு போன் பண்ணு…” என்று கிளம்பவும்,

“இங்க பார் மஹா… நீ இங்க இருந்து சாரை பாரு… அங்க இருக்க டாக்குமெண்ட்ஸ கிளியர் பண்ணனும்… அவ்வளவுதான்… நான் பார்த்துக்கறேன்…” என்று கூறவும்,

“சரி… நானும் ஹெல்ப் பண்றேன்…” என்று பிடிவாதமாக இருந்தாள். கார்த்திக் தான் கடும் கோபத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான். பைரவியே ஒன்றும் கூறாமல் மஹாவுக்கு ஆதரவு கொடுக்கிறார் எனும் போது அவனால் மேலும் பேசமுடியவில்லை. அன்னையை கோபத்தில் குதறி வைத்துக் கொண்டிருந்தான்.

அவராலும் எதையும் பேச முடியவில்லை. ஷ்யாமை பற்றியும் அவர் புரிந்து வைத்திருந்தார். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராக நேர்மையாக பேசிவிடும் குணம் பைரவியை வசீகரித்து இருந்தது. அதோடு மகாவோடு பேசுவதையோ மஹா அவனுடன் பேசுவதையோ மறைத்து வைக்கவோ, ரகசியமாக செய்யவோ முயலவில்லை. அதோடு மஹா பெயரை இழுத்தார்கள் என்றதும் அவன் காட்டிய ருத்ர முகமும் சரி, அதன் பின் கணவருக்காக அவன் செயல்பட்ட விதமும் சரி, அவரை முழுவதுமாக சாய்த்து விட்டிருந்தது.  ஷ்யாம் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு ஒப்புக்கொண்டு விடுமளவு இருந்தார் பைரவி. இவ்வளவையும் அவன் இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதற்காக செய்யவில்லை என்பதுதான் அடிக்கோடிட வேண்டிய விஷயம்.

அப்படியிருக்கும் போது கார்த்திக் காட்டிய எதிர்ப்புக்கு எல்லாம் பைரவி பணியவில்லை.

“விடு கார்த்திக்… நாதன் அண்ணன் குடும்பம் நமக்கு தூண் மாதிரி இருக்காங்க… இப்ப அணில் பிள்ளையாட்டம் தான் ஹெல்ப் பண்ண போறேங்கறா… உன்னை மாதிரி உதவி பண்ணவங்களுக்கே உலை வைக்கல…” என்று நறுக்கென்று கூறவும், கார்த்திக்,

“என்னம்மா சொல்ற? நான் உலை வெச்சேன்னா? அப்பாவுக்கு இப்படியானதுக்கு காரணமே அவன் தானே…” என்று கொதிக்கவும்,

“சும்மா பேசினதையே பேசாத கார்த்திக்… அப்பாவுக்கு இப்படியானதுக்கு காரணம் உன்னோட அவசரக்குடுக்கைத் தனம் தான்… எவ்வளவு சொல்லியும் நீ பொறுமையா இல்ல… ஷ்யாம் மேல கேஸ் கொடுக்கணும்… அது ஒன்னு தான் உன்னோட ஒரே நோக்கமா இருந்தது… அப்பாவுக்கு மகாவை இன்னும் இந்த விஷயத்துல கொண்டு வர இஷ்டம் இல்ல… நீ ஆடிட்டே இருந்த…

அந்த விஷயம் லீக் ஆனதுக்கு காரணம் என்னன்னு கண்டுபிடிச்சியா? ஷ்யாம் தான் பண்ணிருக்கனும்ன்னு முடிவு பண்ணிகிட்ட… ஆனா அவர் என்ன பண்ணார்? ஆதியோட அந்தமா நியுஸ் கொடுத்த பையன்ல இருந்து அத்தனை பேரையும் மன்னிப்பு கேக்க வெச்சாரா இல்லையா? ஒரு அண்ணனா என்ன பண்ணிருக்கணும் நீ? சொல்லு கார்த்திக்? ஆனா இப்பவும் ஷ்யாம் மேல இருக்க கோபத்துல அவரை ஐடில மாட்டி விட்ருக்க…” என்று பதிலுக்கு அவனை வறுத்தெடுக்கவும்,

“பணத்தை பார்த்து மஹா மாறின மாதிரி நீயும் மாறிட்டியா?” கார்த்திக் கசப்பாக கேட்க,

“பணத்தை பார்த்து மாறலைடா… அப்பாவோட ட்ரீட்மெண்ட்டுக்கு எவ்வளவு தூரம் கை கொடுத்தவங்க கார்த்திக்… என்னதான் நீ சொல்ற மாதிரி அவங்களால தான் ஆச்சுன்னாலும் இவ்வளவு தூரம் நமக்காக நிக்கணும்ன்னு அவசியம் இல்லையே… கைகாட்டி விட்டுட்டு போயிருக்கலாமே… அப்படி இல்லாம கூடவே இருந்து குடும்பமே பாக்கறாங்க பார்… அது பெரிய விஷயம்டா…” எனவும்,

“அவன் வேற என்னமோ ப்ளான்ல இருக்கான்… செட்டி ஆத்தோட போனாலும் காரணமில்லாம போக மாட்டானாம்… அதை ஞாபகத்துல வெச்சுக்க…” என்று கடுகடுவென்று கார்த்திக் கூறிக் கொண்டிருக்க, மறுபுறத்தில் ஷ்யாமுக்கும் மஹாவுக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.

“நீ அங்க என்ன ஹெல்ப் பண்ணுவ? உன்னை கூட்டிட்டு போனா எனக்கு தான் அடிஷனல் வேலை…” என்று அவளை எப்படியாவது தவிர்க்க ஷ்யாம் நினைத்தாலும்,

“ம்ம்ம்… எந்த அடிஷனல் வேலை இருந்தாலும் செய்யேன்…” என்று அவள் சற்றும் இளகாமல் கிளம்பினாள்.

ஹைதராபாத் கிளம்பிக் கொண்டிருந்த நாதனும் கூட, “விடேன் ராசாத்தி… அதெல்லாம் ஆம்பிளைங்க சமாசாரம்… அவன் போகட்டும்…” என்று கூற,

“அப்படி இல்ல மாமா… என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன்… அவனை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்…” எனவும்,

“ஷ்யாம்… பிள்ளை தான் அவ்வளவு சொல்லுதுல்ல…” என்று கூறிய நாதனை பார்த்து பல்லைக் கடித்தான். எதற்கு தான் ‘பிள்ளையை’ கூட்டிக் கொண்டு போவது என்றில்லையா?

“இங்க உன் அப்பா கண் முழிச்சுட்டா என்ன பண்ணுவ?” பல்லைக் கடித்துக் கொண்டே கேட்க,

“உனக்கு போன் பண்ண சொல்லியிருக்கன்ல…” எனவும், அப்போதுதான், அவளது பேசியை கார்த்திக் உடைத்தது நினைவுக்கு வந்தது. இப்போதாவது தன்னிடம் செல்பேசி கேட்பாளா என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தது மனம். ஆனால் அவள் அசைவாளா?

“சரி லூசு, சப்போஸ் சீக்கிரம் வந்துட்டாங்கன்னா அவங்க போற வரைக்கும் நீ வெளிய வரவே முடியாது… அது தெரியுமா?” என்று பயமுறுத்த, அதற்கும் பலன் பூஜ்யம் தான்.

“இட்ஸ் ஓகே…” என்று தோளைக் குலுக்கவும், அவனுக்கு அவளைப் பார்த்து கோபம் வந்தது. எல்லோரிடமும் கூறிவிட்டு கார்த்திக்கின் முறைப்பை சிறு புன்னகையோடு தாங்கிக் கொண்டு, மகாவை அழைத்துக் கொண்டு காரை ஸ்ட்ராட் செய்தவன்,

“பேயே… நீ இப்படி பேக்கு மாதிரி பிஹேவ் பண்றதால தான் சமூகம் என்னை திட்டுது…” என்று கடித்து வைக்கவும்,

“வாங்கிக்க…” என்று கூலாக சொல்லிவிட்டு, “இதை கூட வாங்காம நீயெல்லாம் என்னடா ஹீரோ? ஹீரோவாகனும்னா சாணில முக்கியடிச்சாலும் வலிக்காத மாதிரியே போஸ் கொடுக்கணும்… பேசாம உன்னை வில்லனா டீப்ரொமோட் பண்ணிடலாம்… நான் வேண்ணா ரைட்டர் கிட்ட சொல்றேன்… இவன் தேற மாட்டான்னு…”

“சொல்லுவடி சொல்லுவ… வா வா… உன்னை அங்க வெச்சு செய்யறேன்… பசிக்குதுன்னு சொல்லுவல்ல… அப்ப இருக்கு உனக்கு…” என்றவனை,

“அப்படீங்கற…” என்று அவள் சிரிக்க,  

“அப்படிதாங்கறேன்…” என்று கிண்டலாக கூறியவன், அடுத்து நிற்க நேரமில்லாமல், பறந்தான்.

மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி, போயஸ் கார்டன் அலுவலகம் என்று ஒரே நாளில் சுற்றியடித்து எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு உத்தண்டிக்கு வந்த போது மாலையாகி விட்டிருந்தது.

உண்மையில் உத்தண்டி வீட்டிற்கு அவளை அழைத்துக் கொண்டு போக உள்ளுக்குள் வெகு தயக்கமாக இருந்தது. காலை முதல் சுற்றிய இடங்கள் எல்லாம் பொதுவான இடங்கள், வெறும் அலுவலக ரீதியான இடங்கள் மட்டுமே. அங்கு அவனைத் தேடி பெண்கள் வந்ததில்லை. வரவும் வைத்ததில்லை.

ஆனால் உத்தண்டி ஃபார்ம் ஹவுஸ் அப்படியல்ல. ஷ்யாமின் அத்தனை கருப்பு பக்கத்தையும் பார்த்த இடமது. அவனது அத்தனை களியாட்டங்களும் நிகழ்ந்த இடம். இப்போது மகாவுக்கு நேர்மையாக இருக்கிறான், இனியும் நேர்மையாகத்தான் இருப்பான் என்றாலும் கடந்தகாலம் என்பது உண்டு தானே? கடந்த காலத்தின் நினைவுகளின் மிச்சம் இல்லாமலா போய்விடும்?

ஆனால் உத்தண்டியில் பாதுகாக்க வேண்டியவை மிக அதிகம். அவனது ரகசிய பணபரிமாற்றம் அனைத்தும் நடக்கும் இடமென்பதால், வேறு வழியில்லாமல் அழைத்துக் கொண்டு போனான்.

உள்ளே நுழையும் போதே, “ரைட் லெக்க எடுத்து வெச்சு வா மஹா…” என்று சிரித்தபடி ஷ்யாம் கூற,

“ம்ம்ம்… ச்சீ பே…” என்று உதட்டை சுளித்தாள்.

என்னதான் மகாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவனது நினைவுகள் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு என்று சுற்றிக் கொண்டிருந்தது. அத்தனை இடங்களிலும் ஒரே நேரத்தில் நடக்கும் சோதனை என்பதல் உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ள வில்லை.

அவ்வப்போது சிலருக்கு அழைத்து முடிந்தளவு ரெய்டை நீர்த்து போக செய்யும் நடவடிக்கைளையும் எடுத்துக் கொண்டிருந்தான். சிலரிடம் தன்மையாக, சிலரிடம் அடாவடியாக, சிலரிடம் மிரட்டலாக…

அவனிடம் பணப் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த பெரும் தலைகளும் அவ்வப்போது அழைத்துக் கொண்டிருந்தனர். தங்களது நிலை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதில் அவர்களுக்குள்ள பயம்.

அவர்களுக்கு ஷ்யாம் எப்படியும் பாதுகாப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. அவர்களின் அந்த நம்பிக்கையை வைத்தே சோதனையை இல்லாமலாக்க முடியுமா என்று வியூகம் வகுத்தாலும், அதை மீறி சோதனை செய்ய அதிகாரிகள் வந்து விட்டால் என்ன செய்வது என்ற வியூகத்தையும் வகுத்து அத்தனை அலுவலகங்களுக்கும், தான் சம்பந்தப்பட்ட இடங்களுக்கும் கூறிக் கொண்டே தான் இருந்தான். 

அவனது அறைக்குள் இருந்த சிறிய அறையில் பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமை, “இதென்ன வீட்ல இத்தனையை வெச்சு இருக்க?” என்று கேட்க, அவசரமாக சென்று வாசல் கதவை மூடினான்.

மகாவை அழைத்துக் கொண்டு வந்தபோது வாட்ச்மேனிடத்தில் மகாவுக்கு மரியாதை எல்லாம் இல்லை. முன்னர் சென்ற இடங்களில் எல்லாம், இவனோடு வந்ததாலேயே அத்தனை மரியாதை இருந்தது. அப்போது ஷ்யாம் அவளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வைத்தே, அனைவரும் அவளுக்கும் வெகுவாக மரியாதை கொடுத்தனர்.

ஆனால் உத்தண்டி வீடு அப்படிப்பட்டதல்ல. அவனோடு வந்ததால் தான் வெகு அலட்சியமான மனோபாவத்தை காட்டியிருந்தான் அந்த வாட்ச்மென்.

அவனை பொறுத்தமட்டில் பத்தோடு பதினொன்று.

அதை அவனது உடல்மொழியில் புரிந்து கொண்ட ஷ்யாம், மகாவை உள்ளே போக சொல்லிவிட்டு, அவனை அழைத்து,

“மகேந்திரன் இன்னைக்கு வரல தானே?” என்று கேட்க,

“ஆமாங்க…” என்று அவசரமாகக் கூறினான். யோசனையாக நெற்றியை சுருக்கியவன்,

“சரி… நல்ல ஹோட்டலா பார்த்து மேடமுக்கு டிபன் வாங்கிட்டு வந்துடு…” என்றவன், அவனது கையில் பணத்தை திணித்து, “அவங்கதான் உன்னோட வருங்கால மேடம் சுப்பு…” எனவும், சட்டென்று அந்த வாட்ச்மேனின் உடல் விறைத்தது.

“சரிங்கய்யா…” என்று ஓடியவனை வெறித்துப் பார்த்தான் ஷ்யாம்.

மஹாவுக்கான மரியாதையை தான் பெற்று தருவதற்கு நிறைய போராட வேண்டுமென புரிந்தது. தனது கடந்த காலத்தின் மீதங்கள் அவளை தாக்காமலிருக்க வேண்டுமே என்று எண்ணியவனின் மனம் கசங்கியது.

அதே நினைவோடு கதவை மூடாமல் அறைக்குள் நுழைந்தவன், பைல்களை சரிபார்த்து, கிழித்துப் போட வேண்டியவைகளை கிழித்துக் கொண்டிருந்தான்.

வெகு தீவிர முகபாவத்தோடு அவன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அத்தனை பைல்களை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை. அவளுடைய தந்தையும் சரி தமையனும் சரி, வியாபாரத்தை வீட்டுக்குள் கொண்டு வந்ததே இல்லை. ஆனால் இவன் அப்படியல்லவே. ரகசியங்கள் பல புதைந்துள்ள இடம்.

அதனால் தான் அவன் வாசல் கதவை மூடியதும்.

“என்னடா ஒரு கேள்விக்கு இப்படி டென்ஷனாகி வாசல் கதவை மூட ஓடற?” என்று குறுஞ்சிரிப்போடு கேட்க,

“ப்ச்… இதெல்லாம் ரொம்ப சீக்ரட் மஹா… சீரியஸா இரு…” என்று தீவிரமான முகத்தோடு கூற,

“ஓகே…” என்றவள், அங்கிருந்த மது பாட்டில்களையும், கோப்பைகளையும் குவிந்திருந்த சிகரெட் துண்டுகளையும் கண்டவள், முகம் சுளித்தாள்.

“கர்மம்… ரூமா இது?” என்று மது பாட்டில்களை காட்டிக் கேட்டவளுக்கு என்ன பதில் கூறுவது?

“வேற எங்க வைக்கறதாம்?” அவன் கேட்க,

“என்ன்ன்னத்தையோ பண்ணித் தொலை…” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு, அவன் கிழிக்க எடுத்து வைத்ததெல்லாம் தனியாக வைத்து விட்டு அவன் அப்புறப்படுத்த கூறிய பைல்களை எல்லாம் தனியாக அடுக்கி வைக்க துவங்கினாள்.

“ரூமை கிளீன் பண்ண கூடவா விட மாட்ட?” கடுப்பாக கேட்டாள் மஹா.

“இந்த ரூமுக்குள்ள வேற யாரும் வர மாட்டாங்கடி…” எனவும்,

“ரொம்ப சீன் காட்டாத பக்கி…”

அவன் தனியாக எடுத்து வைத்த பைல்களை எல்லாம் காட்டி, “இதுல ஒன்னு வெளிய போச்சுன்னாலும், நாளைக்கே தெலுங்கும் தமிழும் அலறும்… பொலிட்டிக்ஸ் வைஸ்… என்னையே இல்லாம கூட பண்ணிடுவாங்க…” எனவும், அதுவரை விளையாட்டான மனநிலையில் இருந்தவள், தீவிர முகபாவத்துக்கு மாறினாள்.

“ஷ்யாம்…” என்றவளுக்கு குரல் வெளிவரவில்லை.

“அதுதான் புலிவாலை பிடிச்ச கதை மஹா… நானும் விட முடியாது… அதுவும் என்னை விடாது… விட்டா நான் காலி…” என்று சிரித்தவனைப் பார்த்து,

“இவ்வளவு ரிஸ்க் தேவையாடா?” சற்று கலக்கமாக மஹா கேட்க,

“எனக்கு பிடிச்சுருக்கே… இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சுருக்கு… ரிஸ்க் எடுக்க பிடிச்சுருக்கு…” வெகு இயல்பாக கூறியவனை சஞ்சலத்தோடு பார்த்தாள். எதுவரை இவன் போக முடியும்? இறுதி என்பது உண்டு தானே?!

“ம்ம்ம்…” என்றவளுக்கு குரல் எழும்பவில்லை. அவளது குரலில் இருந்த அபஸ்வரத்தை உணர்ந்து கொண்டவன்,

“என்னடா?” தாங்கிய குரலில் கேட்டவனை, பார்த்து,

“இவ்வளவு டென்ஷனை பார்த்தா பயமா இருக்கு… இந்த விஷயம் பிடிக்காமத் தான் அப்பாவோட பிசினஸ்ல கூட நானோ அண்ணாவோ தலையிடவே இல்ல… இப்பக் கூட அப்பாவோட வற்புறுத்தலால தான் அண்ணா மறுபடியும் ப்ரொடக்ஷன் பக்கம் போனான்…” எனவும்,

“ம்ம்ம்…”

“அதுவும் எனக்கு பீஸ்ஃபுல்லான லைஃப்ஸ்டைல் தான் வேணும்ன்னு நினைப்பேன்… டென்ஷனாக பிடிக்காது, சீரியஸா எடுத்துக்க பிடிக்காது, கோபம் வரும் ஆனா பத்தாவது நிமிஷம் காணாம போய்டும், ஜாலியா அலட்டிக்காம இருந்துட்டு திடீர்ன்னு எல்லாமே மாறும் போது ரொம்ப பதட்டமா இருக்கு ஷ்யாம்…” என்று மனதை மறைக்காமல் கூறியவளை புன்சிரிப்போடு பார்த்தவன்,

“நான் இப்படி இருந்தா, நீ அப்படி இருக்கறதுல தப்பில்ல மஹா… புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி இருந்தா போரடிக்கும்…” என்று கூறிவிட்டு கண்ணை சிமிட்ட, பல்லை நறநறவென கடித்தாள்.

“ஒழுங்கா இருந்தா இருப்பேன்… இல்லைன்னா கிளம்பி போயிட்டே இருப்பேன்…” ஒற்றை விரலை அவனது முகத்துக்கு முன் நீட்டி மிரட்டியவளை பார்த்து சிரித்தவன்,

“ஓகே ஓகே… இப்ப இந்த வேலைய முடிச்சுட்டு நம்ம பஞ்சாயத்தை வெச்சுக்கலாம்…” உடனடியாக சரணடைந்து விட்டான். பின்… பேச ஆரம்பித்தால் விடிந்தாலும் அவளது பேச்சை நிறுத்த முடியாதே… இடைவெளி இல்லாமல் திட்டிக் கொண்டே இருப்பாளே!

மனதுக்குள் ஒரு அழுத்தம் இருக்கத்தான் செய்தது. வெகு அரிதான காம்பினேஷன் அவனது மகாவேங்கட லக்ஷ்மி!

தன்னால் அவளது இயல்பு மாறுவதையோ, அந்த இயல்பு தொலைந்து போவதையோ அவன் விரும்பவில்லை. மாறாக அவள் அவளாகவே இருக்க வேண்டும்… சற்றும் மாற்றமில்லாமல்! அதை தன்னால் சாதிக்க முடியுமா என்று எண்ணிக் கொண்டவனுக்கு அது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரியவில்லை.

****

இத்தனை ரெய்டு களேபரத்திலும் அவ்வப்போது கார்த்திக்கும் விஜய்யும் அவனது மனதுக்குள் வந்து போனார்கள்.

கார்த்திக்கும் விஜய்க்கு இடையே உள்ள திடீர் நட்பை பற்றி சிவச்சந்தரன் ரிப்போர்ட் கொடுத்து இருந்தான். விஜியின் தூண்டுதலால் தான் கார்த்திக் செயல்படுகிறான் என்பதையும் முன்பே தெரிவித்து இருந்தான். தெரிந்து கொண்டானே தவிர, இந்த விஷயத்தை யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.

கார்த்திக்கை பகைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவன் மகாவின் அண்ணன். அவன் எப்படிப்பட்ட பறக்கோடியான நிலைக்கு போனாலும் அந்த உச்சமுனையிலிருந்து அவனை மீட்டு தன் வழிக்கு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் விஜி? அவனது நடவடிக்கைகளை ஷ்யாமால் ஜீரணிக்க முடியவில்லை. அதை ஜீரணிக்க நேரம் தேவைப்பட்டது. சட்டென நம்ப முடியவில்லை. காரணம் என்ன? மஹாவா?

அவள் மேல் அவன் கொண்ட காதலை தான் அலட்சியப்படுத்தியதால் வந்த வினையா இது?

ஷ்யாமின் மனம் ஆமென்றது!

ஆனால் இத்தனை நாட்கள் அவனிடம் உழைத்திருக்கிறானே… கட்டிக் கொண்டு வாவென்றால் வெட்டிக் கொண்டல்லவா வந்திருக்கிறான். தொழிலாளிக்கு மட்டும் நன்றி இருக்க வேண்டும் என்பதில்லை. அது முதலாளிக்கும் இருக்க வேண்டிய ஒன்று. அந்த நன்றி தான் அவனை விஜிக்கு எதிராக செயல்பட விடாமல் தடுத்தது.

தன்னுடைய விஜி என்ற அந்த எண்ணம்!

ஆனால் மஹாவை எதற்காக அந்த விஷயத்தில் இழுத்தான்? அவளை காதலிப்பதாக கூறிக் கொள்பவன் செய்யும் வேலையா அது? தன்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைப்பவன், அவளை அசிங்கப்படுத்தி பார்க்கலாமா?

ஒரு புறம் அவனை கொன்று விடும் ஆத்திரம் வந்தாலும், அவனது கடந்தகால நட்பு ஷ்யாமை தடுத்தது. அதோடு அவனிடம் சிக்கியிருக்கும் பல்வேறு தொழில் ரகசியங்கள்… அவன் மேல் நடவடிக்கை எடுத்தால் கண்டிப்பாக அதன் ரகசியத் தன்மை நீடிக்காது. அதோடு சென்னையில் யார் யாரிடம் எவ்வளவு பண பரிவர்த்தனை நடந்து கொண்டிருக்கிறது என்பதை தன்னை காட்டிலும் அதிகமாக அறிந்தவன் அவன் தான் என்பதால் சிவச் சந்திரன் கொடுத்த ரிப்போர்ட்டை தெரிந்து கொண்டாலும், ஒன்றும் அறியாதது போல இருந்து கொண்டான்.

ஆனால் இனி அப்படி இருக்க முடியாது. சோதனையிட வந்த அதிகாரிகளுக்கு அந்த டைரி எப்படி சிக்கியிருக்க முடியும்? விஜியை தவிர வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது. நான்கு நாட்களுக்கு முன் வந்த மஹாவை அன்று முன் இரவிலேயே அவளது வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டுமாகி விட்டது. அவளிடம் கூட அந்த டைரியை பற்றி கூறவில்லை. டைரி பற்றி தெரிந்தவர்கள் தந்தை, தான் மற்றும் அடுத்த ஒரே நபர் விஜி மட்டுமே!

எப்படியோ பணத்தைக் கொடுத்து அந்த டைரியை அப்போதே மீட்டாகி விட்டது. வேறு எந்த டாக்குமெண்டும் சிக்கவில்லை. சிக்கிய ஒன்று என்றால் அது அந்த இருபது கோடி மட்டுமே… அதையும் கூட ஒன்றுமில்லாமல் செய்து விடலாம்.

ஆனால் நம்பிக்கை துரோகத்தை என்ன செய்வது?

கூட இருந்தே குழி பறித்தவனை விட்டு விட முடியுமா?

முடியாது என்று கர்ஜித்தது அவனது மனம்!

அவனை ஒன்றுமில்லாமல் செய்துவிடலாம் தான்… ஆனாலும் அவன் வெளியே போய் பேசுவது ஆபத்து!

என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசிக்க துவங்கினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!