VNE42(2) CV

“ம்மா… என்னால இவரை கட்டிக்க முடியாது…” வெகு அழுத்தமாக கூற,
“லூசா மஹா நீ? ஊருக்கெல்லாம் சொல்லியாச்சு… பத்திரிக்கை அடிக்க கொடுத்தாச்சு… இன்னும் எண்ணி முப்பதாவது நாள் கல்யாணம்… இந்த டைம்ல ஏன்டி இப்படி பிடிவாதம் பிடிக்கற? என்ன ஆச்சுன்னு சொல்லி தொலைஞ்சா தானே தெரியும்…” என்று கோபமாக கேட்க, ஹாலில் இருந்தவர்கள் அதிர்ந்து திரும்பி பார்த்தனர்.
“இல்ல… எனக்கு கல்யாணம் வேண்டாம்…” வெகு பிடிவாதமாக வெளிவந்த வார்த்தைகளில் கோபம் எகிற, சேரை தள்ளி விட்டு எழுந்தான் ஷ்யாம்.
சேர் இரண்டடி தள்ளிப் போய் விழுந்தது.
அவனது பொறுமை சுத்தமாக காணாமல் போய்விட்டு இருந்தது.
“என்னை கோபப்படுத்தி பார்க்காத மஹா…” ஷர்ட்டை முழங்கை வரை இழுத்துவிட்டுக் கொண்டவன், இறுகிய குரலில் கூற, உனது கோபம் என்னை என்ன செய்துவிடும் என்பது போல பார்த்தாள்.
“நான் உன்னை கோபப்படுத்தலை… என்னால…” என்றவளுக்கு தொண்டை அடைத்தது. “முடியாது…” என்று முடித்தாள்.
“அதான் ஏன்னு கேட்கறேன்?” அவனுக்கு புரியவில்லை. இப்போது பொறுமையும் இல்லை.
“வேண்டாம்… நான் சொல்ல விரும்பலை…”
“நான் ஒன்னும் இளிச்சவாயன் இல்ல… லவ் பண்ணுவாளாம்… கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு சொன்னா முடியாதுன்னு சொல்லுவாளாம்… என்னடி என்னைய பார்த்தா எப்படி தெரியுது?” படு காரமாக இவன் கேட்க, அவசரமாக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தனர் மற்ற மூவரும்.
“என்னாச்சு மாப்பிள்ளை?” என்று முருகானந்தம் கேட்க, 
“என்னாச்சுடா தம்பி? ஏன் இவ்வளவு கோபமா பேசற?” நாதன் கேட்க, ஜோதி மஹாவை ஆழ்ந்து பார்த்தார். அவளது கண்களில் தெரிந்த நிராசையும், வெறுமையும் அவரை தாக்கியது.
“கொஞ்சம் பொறுமையா பேசு ஷ்யாம்…” என்று அவனை அடக்க பார்க்க,
“எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் ஆண்ட்டி… இந்த  ரிலேஷன்ஷிப் எனக்கு வேண்டாம்…” ஜோதியிடம் மிகுந்த வலியோடு கூற, அவளை தன் புறம் திருப்பினான் ஷ்யாம்.
“லூசாடி நீ? நீயா பேசற? எனக்கு புரியல மஹா… விளையாடாத…” என்று ஷ்யாம் தீவிரமான குரலில் கேட்க,
“இல்ல… எனக்கு கல்யாணம் வேண்டாம்…” ஒரே வார்த்தையில் பிடிவாதமாக இருந்தாள். கண்களில் கண்ணீர்!
“மஹா… கோபத்தை கிளறாதே… அடிச்சு பல்லைக் கழட்டிடுவேன்… என்னோட இன்னொரு முகத்தை காட்ட வெச்சுடாத…” என்று கையை ஒங்க வந்தவன், அடக்கிக் கொண்டு பல்லைக் கடிக்க,
“அடிச்சுக்க… எவ்வளவு வேணும்னாலும்… ஆனா..” என்றவளின் குரல் அவ்வளவு கடினப்பட்டு இருந்தது.
“என்னடி ஆனா ஆவன்னா? இந்த மாதிரி அல்வா கொடுக்கறதுக்கு வேற எவனாவது நெத்தில எழுதி வெச்சுட்டு உக்காந்திருப்பான்… அவனுக்கு கொடு… என்கிட்ட இந்த வேலைய காட்டாத… பொறுமையா பேசற வரைக்கும் தான் நல்லவன்… இன்னொரு பக்கத்தை பார்க்கனும்ன்னு நினைக்கத மஹா…” பொறுமை சுத்தமாக பறந்து போக, வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தது.
“எல்லா பக்கத்தையும் நான் பார்த்துட்டேன் ஷ்யாம்… இன்னும் பார்க்க ஒண்ணுமே இல்ல…” என்றவள் இடைவெளி விட்டு, “வேண்டாம்… என்னை பேச வைக்காத… பெரியவங்க எல்லாரும் இருக்காங்க… அவங்களுக்கு நான் மரியாதையை கொடுக்கணும்ன்னு நினைக்கறேன்…” வெகு நிதானமாக அவள் கூறிய வார்த்தைகளில் அவனது மனம் துணுக்குற்றது. எதுவோ பெரிதாக நடந்திருக்க வேண்டும் என்று தோன்றிக் கொண்டே இருந்தது.
அதிலும் இவளது இந்த நிதானமும், வெறுமையும், கடினமும், தலகுப்பாவில் அவள் காட்டியவை. இந்த பிடிவாதம் தான் மஹா. நடுவில் சில நாட்களாக வேண்டுமானால் தன் இயல்பை தொலைத்து இருக்கலாம். ஆனால் இப்போது மீண்டு விட்டிருக்கிறாள். மனம் வலித்தது அவனுக்கு. அவளுக்காக எத்தனையோ விஷயங்களில் தன்னை முழுமையாக மாற்றிக் கொண்டவன் அவன். அவள் வேண்டும் என்பதற்காக இயல்பையே தொலைத்து அவளுக்குள் தொலைந்து விட்டவனுக்கு அவளது அந்த பிடிவாதம் வருத்தத்தையும் கோபத்தையுமே கொடுத்தது.
“நீ கொடுத்த மரியாதை எல்லாம் போதும்…” என்றவன் இன்னமுமே வார்த்தைகளை விட முயல,
“ஷ்யாம்… பொறுமையா இரு… நான் மஹாகிட்ட பேசறேன்…” என்று கார்த்திக் வந்தான். இருவருக்குள்ளும் தடித்துக் கொண்டிருக்கும் வாக்குவாதம் சுற்றியிருந்தவர்களுக்கு அத்தனை பயத்தை ஏற்படுத்தியது. பெரியவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. என்ன விஷயம் என்பதையே அறியாமல் என்ன பேசுவது என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“இன்னும் என்ன பொறுமையா பேசறது?” ஷ்யாம் கொதித்தான்.
“இரு மச்சான்… சொன்னா புரிஞ்சுக்குவா… அவகிட்டயும் ஏதாவது ரீசன் இருக்கும் தானே… என்னன்னு கேட்டு அதை சரி பண்ணா ஒத்துக்க போறா…” என்ற கார்த்திக்கை பார்த்து,
“அண்ணா, நீ எவ்வளவு சொன்னாலும் என்னால இந்த மேரேஜை அக்செப்ட் பண்ணிக்க முடியாது….” பிடிவாதமாக மஹா கூற, அவளது கையை இறுக்கமாகப் பிடித்தான். வலித்தது. பொறுத்துக் கொண்டாள். ஆனாலும் பிடிவாதத்தை விட்டு விட முடியவில்லை அவளால்!
“என்னன்னு சொல்லி தொலையேன்… சொல்லாம ஏன்டி இப்படி கழுத்தறுக்கற?” பொறுமை அவனுக்கு பறந்து கொண்டிருந்தது.
“முடியாது…” கறாராக இடம் வலமாக தலையசைத்தவளை அத்தனை கோபமாக பார்த்தான் ஷ்யாம்.
“என்னடி நினைச்சுட்டு இருக்க? உனக்கு இந்த ஷ்யாம் என்ன கிள்ளு கீரையா தெரியறேனா?” என்று பேசிக்கொண்டிருந்தவன், சட்டென அவளது குரல் வளையை பிடித்து விட, ‘ஹக்’ என்ற ஒலியோடு பின்னடைந்தாள். அவனது இந்த முகம் அவளுக்கு புதிதல்ல… தலகுப்பாவில் ஆரம்ப நாட்களில் கண்ட முகம் தான். அதன் பின் வெளியே காட்டாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது போல… திரும்பவும் அதே முகத்தை கண்டதில் ஆச்சரியமல்ல… அவன் ஏதாவது ஒன்றை சொல்லி, அது நடக்கவில்லை என்றால் இந்த முகத்தை காட்டுவது தானே அவனது வழமை! நடுவில் அது காணாமல் போயிருந்தது. இப்போது மீண்டும்!
“ஷ்யாம்… என்ன பண்ற நீ?” ஜோதி பதற, நாதன் அதற்கும் மேல் பதட்டமானார். இந்த பக்கம் கேட்கவே தேவையில்லை. அதிர்ச்சியின் விளிம்புக்கு சென்றிருந்தனர். அனைவருமாக பேச ஆரம்பிக்க,
“தயவு செஞ்சு கொஞ்சம் எல்லாரும் ஹாலுக்கு போங்க… ப்ளீஸ்…” என்று கத்தினான. அவளானால் கொஞ்சம் கூட அசையவில்லை. அத்தனை கடினமாக நின்றிருந்தாள், செய்வதை செய்து கொள் என்பது போல!
கார்த்திக், “முதல்ல மஹாவை விடு ஷ்யாம்…” என்று வலுகட்டாயமாக விடுவிக்க முயன்றான். முடியவில்லை. அவ்வளவு அழுத்தமாக பற்றியிருந்தான். அவள் திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்ததில் அவனுக்கு வெறியே பிடித்து விடும் போல இருந்தது. அவனது அந்த கோபத்தை கண்ட கார்த்திக்கு பதட்டமாகி விட்டிருந்தது.
“கார்த்திக்… இதுல தலையிடாத…” பல்லைக் கடித்துக் கொண்டு ஷ்யாம் கூற,
“நீ முதல்ல விடு…” என்றவன், அவனது கையை வெகுவாக சிரமப்பட்டு பிரித்து விட்டான். சற்று ஆசுவாசமாக மூச்சை விட்டவள், ஒற்றை கையால் தொண்டையை பிடித்துக் கொண்டு இருமினாள்.
“என்னை ஏமாத்தலாம்ன்னு மட்டும் நினைக்காத மஹா… கொன்னுடுவேன்…” அத்தனை ரவுத்தரமாகி இருந்தான்.
“கொன்னுக்க…” ஹீனமான குரலில் கூற, ஷ்யாமுக்கு உள்ளத்தளவில் மிகுந்த அதிர்ச்சி. அவள் இல்லையென்றால் தனக்கு மட்டும் வாழ்வேது?
“கொன்னுட்டு?” என்றான், குரலில் அத்தனை நிராசை!
அவள் மெளனமாக அவனைப் பார்த்தாள். கண்களில் கண்ணீர். அவளுக்கும் வலிக்கிறது, அவளது வார்த்தைகள். அது தெரிந்தே தான் அவனை காயப்படுத்துகிறாள். அதை உணர்ந்து தான் இருந்தான். ஆனால் அவளில்லாத அவனது உலகத்தை அவனால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. திருமணம் நிச்சயமானதிலிருந்து அத்தனை கனவுகள்… குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் வரைக்குமான கனவு!
அத்தனை கனவுகளையும் எப்படி ஒற்றை நொடியில் அழிப்பது?
அவனால் அதை செய்யவே முடியாதே!
“செத்துடுவேன் மஹா…” என்றவனது கண்கள் அவனையும் அறியாமல் கலங்கின. கோபத்தில், அவனது நிராசையின் உச்சத்தில் அவனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை.
“நான் செத்துப் போய் ரெண்டு நாளாகுதுடா…” என்றவள், முகத்தை மூடிக் கொண்டு கதற ஆரம்பித்தாள். அவள் அழுவதை அவனால் தாங்க முடியவில்லை. அத்தனை நேரமும் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தான், கிட்டத்தட்ட குரல் வளையை நெரித்தும் விட்டான். ஆனால் ஆனால் அவளது கண்ணீர் அவனை உலுக்கியது. அவள் கண்ணில் கண்ணீரைக் கண்டால் உலகையே அழித்து விடுவான் தான். ஆனால் காரணமே அவனாயிற்றே!
பைரவியும் ஜோதியும் பதறிப் போய் அவளருகே வர, அவளது கையை முகத்திலிருந்து விடுவித்து, தன்னோடு அணைத்துக் கொண்டான் அவன்.
அவனைக் கட்டிக் கொண்டு, நெஞ்சில் முகத்தை பதித்து கதறி தீர்த்தாள் மஹா. பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன பிரச்சனை என்பது புரியவில்லை. ஆனால் கார்த்திக்கு ஏதோ புரிவது போலிருந்தது.
அவளது கண்ணீரால் இவன் உடைந்து விடுவான் போல தோன்றியது. உதட்டை இறுக்கமாக மடித்தபடி அவளது முதுகை வருடிக் கொடுக்க, அவளது அழுகை நிற்கவே இல்லை.
“மகா… என்னம்மா…” என்றபடி வந்த பைரவியை,
“அத்தை ப்ளீஸ்… கொஞ்சம் எல்லாரும் வெளிய இருங்க… என்னன்னு கேக்கறேன்…” சற்று தகைந்து போய் கூறினான்.
“கேக்கறேன்னு சொல்லிட்டு கோபப்படாத ஷ்யாம்…” என்ற கார்த்திக்கை,
“தயவு செய்து…. ப்ளீஸ்…” வெளியே போ என்பதை வார்த்தையால் சொல்லாமல் அந்த டைனிங் ஹாலின் கதவை நோக்கி காட்டினான். இந்த நிலையில் இதற்கும் மேல் இவனுடன் தர்க்கம் செய்வது சரியல்ல என்று எண்ணிக் கொண்டு மெளனமாக சென்றான் கார்த்திக்.
ஆத்மநாதன் மெல்லமாக அவனது முதுகை தட்டிக் கொடுத்து,
“பொறுமையா என்னன்னு கேளு ஷ்யாம்… உன்னோட முரட்டுத்தனத்தை பிள்ளை கிட்ட காட்டாத…” என்று கூறிவிட்டு வெளியே சென்றார்.
முருகானந்தம் பதட்டமாக பார்த்தபடி இருந்தாலும் எதுவும் பேசவில்லை. ஷ்யாம் பற்றி அவரும் அறிவார் என்றாலும் பெண்ணுக்கு பிடித்தபின் வேறு கருத்தே இல்லையென்று இருந்தவர். இப்போது ஊருக்கே தெரிந்த பின், திருமணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கும் பெண்ணை பார்ப்பதா? கௌரவத்தை காப்பாற்ற அவளது எதிர்ப்பையும் மீறுவதா? ஷ்யாமை விட்டுவிட அவருக்கு மனம் இல்லை. பெண்ணின் மனமும் அவருக்கு முக்கியமானதாக பட்டது. குழப்பத்தில் ஆத்மநாதனை தொடர்ந்தார் அவர்.
இருவருமாக பேசிக் கொள்வதுதான் சரி என்று அனைவரும் ஹாலுக்கு சென்று விட, அவளது முகத்தை நிமிர்த்தினான்!
“சொல்லுடா… ஏன் வேண்டாம்?” கோபத்தை கைவிட்டு சற்று நிதானமாகியவன், அவளது கண்களை பார்த்தபடி கேட்க, அதற்கும் மேல் அவனிடம் மறைத்து வைத்து ஒன்றுமாக போவதில்லை என்று முடிவு செய்து கொண்டவள், தள்ளி நின்று கொண்டு, அவளது செல்பேசியை எடுத்து டிவிட்டரை ஓபன் செய்து,
“இது யார் ஷ்யாம்?” என்று அவனது முகத்துக்கு நேராக காட்டினாள்.
அவளது முகத்தில் அத்தனை ரவுத்திரம்!
ஒரு செக்கன்ட் அந்த படத்தை உற்று பார்த்தவனுக்கு உண்மையில் தலை சுற்றியது.
அது அவன் தானே?
அவன் சௌஜன்யாவுடன் இருக்கும் படமா?
ஏதோ அசிங்கத்தை மிதித்து விட்ட உணர்வு!
அவமானமாக இருக்க, “கடவுளே!” என்று தலையை பிடித்துக் கொண்டான்!
தான் இப்படி படம்பிடிக்க பட்டோமா?
எதுவுமே புரியாமல் தலை சுற்ற, தொப்பென்று டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து கொண்டு தலையை பிடித்துக் கொண்டான்.
“யார் ஷ்யாம் இது?” அவள் கண்களில் நீர் வழிய, வார்த்தைகள் வலியோடு தெறித்து விழ, துக்கம் தாள முடியாமல், அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் ஆனால் பார்த்தபடி,கேட்டாள்.
அவன் மெளனமாக அந்த பேசியை பார்த்தபடி இருந்தான்.
“சொல்லுடா… யார் இது?” குரலில் வெப்பம் கூடிக்கொண்டிருந்தது.
கண்களில் கண்ணீர்!
அவனால் பதில் கூற முடியவில்லை. இப்படி ஒரு புகைப்படத்தை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஷ்யாம் மஹாவை காதலிப்பது உண்மை… மனமார அவளுடன் கடைசி வரை பயணத்தை தொடர வேண்டும் என்று நினைப்பதும் உண்மை. ஆனால் பொய்யான தன்னுடைய கடந்தகாலம் இப்படி வெட்ட வெளிச்சமாக்கப்படும் என்று அவன் சற்றும் நினைக்கவில்லையே. எப்படி இதை முதலில் ஜீரணிக்க?
காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாசத்தை அவன் அறிவான். அவள் அறிவாளா?
அந்த காதல் அவனை அந்த நேரத்தில் கூனிக் குறுக செய்தது. அத்தனையும் அவளிடம் கூறியிருக்கிறான் தான், ஆனால் ஆதாரங்கள் அவனுக்கு அவமானமாக இருந்தது.
“சொல்லு ஷ்யாம்…” அவனது சட்டையை பிடித்து உலுக்க, அவன் அதையும் தடுக்காமல் வெறித்துப் பார்த்தபடி இருந்தான். 
“சொல்ல மாட்டல்ல?” என்றவள் அவனை இன்னமும் உலுக்க, அவனது கண்கள் கலங்கியது.
“சொல்லுடா…” என்றவளுக்கு விழிகளில் கண்ணீர் வெள்ளம். அவளால் சகிக்க முடியவில்லை அந்த படங்களையும் அவனது மௌனத்தையும். அவன் மௌனியானது அவளிடம் சொல்லக் கூடாது என்பதற்காக இல்லை. அவளிடம் சொல்ல முடியாததால்! அத்தனை அவமானமாக இருந்தது அவனுக்கு.
‘அட்லீஸ்ட் கிராபிக்ஸ்ன்னு பொய்யாவது சொல்லேன்டா…’ என்று யாசித்தது அவளது விழிகள். 
இரண்டு நாட்களும் கனவாகவே போய்விட கூடாதா? இந்த இரண்டு நாள் சம்பவங்களையும், இந்த நொடிப் பொழுதுகளையும் நினைவலையிலிருந்து அழித்து விட முடியாதா?
‘எல்லாமே பொய்ன்னு சொல்லிடு ஷ்யாம்…’ கண்களில் கண்ணீர் வழிய அவனைப் பார்த்திருந்தாள்.
அவளது நேர் பார்வையை தவிர்த்தவன், முகத்தை அழுந்த துடைத்தபடி நிமிர்ந்தான். மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு,
“நான் தான் மஹா…” உணர்வில்லாமல் ஷ்யாம் கூற, முழுவதுமாக இடிந்து போனாள் மஹா.
அவன் வாயாலேயே அவன் ஒப்புக்கொண்ட உண்மை அவளை புரட்டிப் போட்டது.
இரண்டு நாட்களாக ஜீரணிக்க முடியாமல் தவித்தவொன்று இப்போது விஷமாகவே மாறியிருந்தது.
உண்மைகள் மிக கசப்பானவை!
ஆனால் எதிர்கொண்டு தானே தீர வேண்டும்?!
அடியற்ற மரமாக சரிந்து தரையில் அமர்ந்தாள், வாயை மூடியபடி!