VNE42(1) CV

VNE42(1) CV

“என்னடி இன்னும் கிளம்பாம உட்கார்ந்து இருக்க?” டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மஹாவை பார்த்து பைரவி கேட்க, அவள் ஏதும் பதில் கூறாமல் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
மூஹூர்த்த புடவை எடுப்பதை ஒரு தனி வைபவமாக கொண்டாடுவது அவர்களது குடும்பங்களில் உள்ள வழக்கம். நெருங்கிய சொந்தங்களை அழைத்துக் கொண்டு போவது நடைமுறை என்றாலும் இரண்டு குடும்பத்தோடு பிருந்தா மட்டும் போதும் என்று முடித்து விட்டிருந்தான் ஷ்யாம்.
அவன் சொல்வதை மீறி மற்றவர்களை அழைக்க முருகானந்தம் தயங்கினார்.
அவரது சிறிய தங்கை, “அண்ணா… பெரிய இடத்து சம்பந்தம்ன்னு எங்களை ஒதுக்கற…” என்று குறைபட,
“அதெல்லாம் இல்லம்மா… மாப்பிள்ளைக்கு தோதான டைம்ல வர்றாரு… சட்டுன்னு முடிச்சுட்டு கிளம்பனும்ன்னு நினைக்கராரு… நாமளும் இப்ப கொஞ்சம் அனுசரிச்சுட்டு போய்ட்டா நாளைக்கு நம்ம கைல வந்துடுவார்… உனக்கும் அப்படித்தானே ம்மா… அவங்க சொல்றதை கேட்டுக்கிட்டோம்ல…” என்று முடித்து விட, அந்த பதிலெல்லாம் அவருக்கு திருப்தியாக இல்லை.
“ரொம்ப தகைஞ்சு போறீங்கண்ணா… இது நல்லாவும் இல்ல…”
“அப்படியெல்லாம் இல்ல ஆத்தா… அவங்களும் அதே அளவுக்கு நம்ம கூட அனுசரணையா இருக்காங்க…” என்றாலும் அவரது தங்கைக்கு மகாவை தன் மகனுக்கு என நினைத்திருந்தார். 
ஆனால் முன்னர் கன்னாபின்னாவென செய்தி பரவிய போது, “அவன் ரொம்ப மோசமாமே. இனிமே யாருன்னா புள்ளைய கட்டுவா?” என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய தங்கையோ, “அண்ணா… எந்த விஷயத்துக்கும் எங்ககிட்ட கலந்துக்கவே இல்ல… எப்படிண்ணா இவங்க முறைக்கு வருவாங்க? அதுவுமில்லாம நமக்கும் வசதி இருக்குன்னாலும் அவங்க ரொம்ப மீறின வசதிக்காரங்க… இந்த சம்பந்தமே எனக்கு பிடிக்கல…” என்று நேரடியாக எதிர்ப்பை தெரிவிக்க,
“இரண்டு பேருக்கும் இஷ்டமாகிடுச்சு பெரியவளே… அப்புறம் நாம என்ன சொல்றது? நம்ம மச்சான் தானே? என்ன பெரிய வசதி? அவங்க அப்படியெல்லாம் நினைக்கல ஆத்தா…” என்றாலும் அவர் சமாதானமாகவில்லை.
“எப்படியோ மகாவை வெளியக் கொடுத்து சொந்தமே வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க…” என்று முடித்துவிட, இதற்கும் மேல் பேசுவதில் பயனில்லை என்று முடித்திருந்தார்.
இத்தனைக்கும் இதுவரை பொங்கலுக்கும் தீபாவளிக்கும் இரண்டு தங்கைகளுக்கும் குறையாமல் சீர் செய்து கொண்டிருப்பவர் இவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் தமையனாக முன் நின்றவர். ஆனால் தன்னுடைய மகளுக்காக இவர்கள் நிற்காதது மனதுக்குள் முள்ளை தைத்த உணர்வு.
இவர்களது எண்ணம் இவ்வளவுதான் என்று எண்ணிக்கொண்டு, இவர்களுக்காகவேனும் மகாவின் திருமணத்தை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.
அதை பைரவியிடம் கூறவும் செய்திருந்தார்.
இலக்கின பத்திரிக்கை எழுதும் போதே பெண்ணின் அழகையும் ஷ்யாமோடு அவளுக்கிருந்த பொருத்தத்தையும் விழி நிறைய பார்த்து தனக்குள் வெகுவாக நிரப்பிக் கொண்டிருந்தார்.
நிற்காமல் ஓடிகொண்டிருந்த மனைவியை தன்னருகே நிறுத்தி, ஷ்யாம் மகாவுக்கு மோதிரத்தை அணிவிப்பதை காட்டி,
“என்ன பொருத்தம் பாரேன் பைரவி? நாம தேடிப் பிடிச்சாலும் இப்படியொரு மாப்பிள்ளை வாச்சு இருக்குமா? நம்ம மகா ரொம்ப குடுத்து வெச்சவ…” என்று ஆசையாக பார்த்துக் கூற, பைரவி சிரித்துக் கொண்டார்.
“விட்டா நீங்களே கண்ணு வெச்சுடுவீங்க மாமா… இரண்டு பேரையும் உத்து பார்க்காதீங்க சொல்லிட்டேன்…” என்று வார,
“போடீ… நான் கண்ணு போட்டுத்தான் என் பொண்ணு கெட்டுட போறாளா? என் பொண்னையும் மாப்பிள்ளையையும் பார்த்துட்டு இருந்தாலே போதும்டீ… எனக்கு சாப்பாடு கூட வேண்டாம்…” என்று உண்மையைக் கூற,
“அடடா பைத்தியம் முத்தித்தான் போச்சு…” என்று சிரித்தார்.
“ஆமா பைரவி… இப்பதான் மஹா பொறந்த மாதிரி இருக்கு… அதுக்குள்ள பாரேன்… அவளுக்கு கல்யாணமே பண்றோம்… நாளும் பொழுதும் ஓடுது பைரவி…” பெண்ணை பார்த்தபடியே ஆதூரமாக கண்கள் பணிக்க கூறினார்.
“இப்பவே கண் கலங்காதீங்க மாமா… இன்னும் உங்க புத்திரியை புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்… அதுவரைக்கும் ஸ்டாக் வெச்சுக்கங்க…” என்று கிண்டலடிக்க, பெற்ற தகப்பனாக சற்று கலங்கித்தான் போனார்.
என்னதான் திருமணம் செய்வித்து புகுந்த வீட்டுக்கு அனுப்பித்தான் ஆக வேண்டும் என்றாலும், பெண்ணை பிரிவதை நினைத்தால் அவருக்கு வலிக்கத்தான் செய்தது.
ஆனாலும் பெண்ணை அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்ள முடியுமா என்ன? அவளை சீரும் சிறப்புமாக திருமணம் செய்து கொடுத்து, அவள் அங்கு சந்தோஷமாக வாழ்ந்து குடும்பம் பெருகினால் தானே பெற்றவருக்கு மகிழ்ச்சி.
அதை நினைத்துக் கொண்டார்.
மஹாவுக்காக அத்தனை தூரம் நின்றவன் ஷ்யாம். அவன் கைகளில் தானே பெண்ணை ஒப்படைக்க போகிறோம் என்பதே மனதுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது. மகிழ்ச்சியில் விகசித்தது அவரது முகம்.
அவர்களின் அத்தனை மகிழ்ச்சியையும் தான் ஒரே நொடியில் நாசம் செய்ய போகிறோம் என்ற வேதனையில் வெறித்துக் கொண்டிருந்தாள் மஹா.
“மஹா… எல்லாரும் காஞ்சீவரத்துக்கு கிளம்பிட்டாங்க… நீ என்ன இப்படியே உட்கார்ந்துட்டு இருக்க?” என்று பைரவி திரும்பவும் கேட்க, டைனிங் ஹாலுக்கு வந்த கார்த்திக், தங்கையின் கோலத்தை பார்த்து மனம் துணுக்குற்றான்.
ஆத்மநாதனும் ஜோதியும் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது. ஷ்யாம் இன்னும் சில நிமிடங்களில் வந்து விடுவான். ஆனால் இந்த பெண் என்ன இப்படி அமர்ந்திருக்கிறாள்?
சற்று முன் தான் அவனுக்கு வாட்ஸ்அப் செய்திருந்தாள்.
‘ப்ளீஸ் ஸ்டாப் தி மேரேஜ்…’ என்று!
அதை அவன் பார்த்து விட்டதாக டபுள் டிக் காட்டினாலும், அழைக்கவில்லை.
“ஏய் எருமை… மாப்பிள்ளை வந்துட்டாங்க… எந்திருச்சு போய் ட்ரஸ் மாத்திட்டு வா…” எப்போதும் போல அர்ச்சனையை ஆரம்பிக்க, நேராக டைனிங் டேபிளுக்கு வந்தான் ஷ்யாம்.
வந்தவனை நிமிர்ந்து பார்த்தவள், தலை குனிந்து கொண்டாள்.
“ஏய் என்னடி… காலைல சாப்பிட்டது பத்தலையா? அத்தை டிபன்ல கை வெச்சுட்டீங்களா?” அவளை கிண்டலடித்தவன், பைரவியிடம் திரும்பி அவரையும் கேலி பேச,
“ஆமா… கை வெச்சாலும் சும்மா விட்ற போறா?” என்று நொடித்தவர், “ஆனா ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னைக்கு இன்னும் சாப்பிடவே இல்ல…” என்று கூற,
“எங்க இருந்து மழை கொட்டப் போகுதுன்னு தெரியல… ஒரு நேரம் உங்க மக சாப்பிடாம இருக்கா…” என்றவன், “சரி எனக்கு டிபன் கொடுங்க…” எனவும், கிச்சனுக்குள் விரைந்தார்.
அவள் அருகில் அமர்ந்தவன், “குல்பிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்று சிறுபிள்ளையை கேட்பது போல கேட்க,
கார்த்திக் தலையிலடித்துக் கொண்டான்.
“யோவ்… அது மொதல்லையே ரொம்ப பண்ணிட்டு இருக்கு… ஏன்டி இப்படி இருக்கன்னு கேளுன்னு சொன்னா… தடவிக் கொடுத்துட்டு இருக்கியே மச்சான்…” என்று கார்த்திக் சிரிக்க,
“மச்சான்… என் பொழப்புல மண்ணள்ளி போட்டுடாத… ஏதோ அப்படி இப்படி பேசி உன் தங்கச்சிய கரெக்ட் பண்ணிட்டு போயிட்டு இருக்கேன்…” என்று வேண்டுமென்றே கிண்டலாக கூறவும்,
“இதெல்லாம் ஒரு பொழப்பா மச்சான்?” சிரித்தான்.
“யோவ்… நானும் தான பார்க்க போறேன்… நீ தோப்புக்கரணம் போடப் போறியா இல்ல மொத்தமாவே படுத்தற போறியான்னு…” என்றவனை வெட்கமாக பார்த்தான் கார்த்திக்.
“இப்ப நீ தான் மச்சான் எங்களுக்கு எக்ஸ்பெரிமெண்டல் ரேட்… நம்மளை அப்புறமா தான் கவனிக்கணும்…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பைரவி டிபனை எடுத்து வந்துவிட,
அவள் புறம் திரும்பியவன், தோசையை பியைத்து சாம்பாரில் குழைத்து, “சாப்பிடு மஹா…” என்றான்.
அவனுக்கு புரிந்திருந்தது, அவளது மனது.
ஏதோ பிரச்சனை, ஏதோ தவிப்பு என்று!
அதை தன்னிடமும் கூறாமல் தவிர்க்கிறாள் என்று புரிந்து கொண்டான்.
இரண்டு நாட்களாக அவள் அழைக்காமல் அவனை தவிர்த்ததே அதற்கு சாட்சி!
அதோடு இன்று அவனுக்கு வாட்ஸ்அப்பில் திருமணத்தை நிறுத்து என்று மெசேஜை அனுப்பிய போது அவனுக்கு அவளது சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி சிரிப்பு தான் வந்தது.
கார்த்திக்கும் அவ்வப்போது அழைத்து இவளது நிலையை கூறிக்கொண்டிருந்தான்.
“சாப்பிடு மஹா… அப்புறமா பேசலாம்…” என்று மீண்டும் அழுத்திக் கூறி ஊட்ட, பதில் பேசாமல் அவள் வாங்கிக் கொண்டாள்.
உள்ளுக்குள் கலக்கமாக இருந்தது. ஷ்யாமை விட்டுக் கொடுப்பதை நினைக்கவும் முடியவில்லை. அவன் நேர்மையாக அனைத்தையும் ஒப்புக்கொண்டு இருக்கிறான். ஆனால் அத்தனை படங்களையும், கடைசியாக விஜய் அனுப்பிய வீடியோவையும் பார்த்த பிறகு, அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.
கண்கள் கலங்கியது.
“என்னடி ரொம்ப காரமா?” என்று கேட்க, அவள் மெளனமாக தலையாட்டி மறுத்தாள்.
“இந்தம்மா காரத்தை விட்டு வெளாசுவா… அவ கிட்ட போய் காரமான்னு குப்புற விழுந்து கேக்கறியே மச்சான்?” அருகில் அமர்ந்திருந்த கார்த்திக், இருவரையும் ரசித்தபடி கலாய்த்தான்.
“ஆந்திராக்காரனை கட்டிக்க போறா… அப்புறம் காரத்தை வெளாசாம எப்படியாம் மச்சான்… இன்னும் நாங்க மிளகாய அப்படியே கடிக்கற ஆளுங்க… அங்க வந்தா இன்னும் தேறிடுவா பாரு…” என்று ஷ்யாம் சிரிக்க,
அவள் கண்களில் சிரிப்பே எட்டவில்லை.
ஷ்யாம் அவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டே கார்த்திக்கிடம் வம்படித்துக் கொண்டிருந்தான்.
பெரியவர்கள் அனைவருக்குமே அந்த காட்சி அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது. ஒருத்தியை தவிர!
மஹா!
உள்ளுக்குள் வெதும்பினாள்… வேதனையில் முத்துக் குளித்துக் கொண்டிருந்தாள்… ஆனால் அமைதியாக, அவன் ஊட்ட இவள் உண்டு கொண்டிருந்தாள்.
ஒரு தோசையை முடிக்கும் போதே அவள் போதுமென தலையை இடம் வலமாக ஆட்ட, கையை கழுவிய ஷ்யாம், அவளருகில் அமர்ந்து கொண்டு,
“இப்ப சொல்லு குல்பி… என்ன விஷயம்?” என்று கேட்க, அவள் பதில் கூறாமல் மெளனமாக இருந்தாள்.
“என்ன ஷ்யாம்? என்ன விஷயம்?” என்று கார்த்திக் கேட்டான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஷ்யாமின் நிதானம் அவனை துணுக்குற செய்தது.
“ஒண்ணுமில்ல கார்த்திக்…” என்றவனை கார்த்திக் நம்பாத பார்வை பார்த்தான். அதை பார்த்து மெலிதாக புன்னகைத்த ஷ்யாம்,
“மேரேஜை நிறுத்தறதாம்… எனக்கு மெசேஜ் பண்ணிருக்கா…” என்று இயல்பாக கூற, பைரவி திடுக்கிட்டார். கார்த்திக்கும் அப்படியே! மற்றவர்கள் அனைவரும் வெளி ஹாலில் அமர்ந்து இருந்ததால் இவர்களை பார்க்க முடியுமே தவிர என்ன பேசுகிறார்கள் என்பது தெரியாது.
“ஏய் என்னடி? என்ன காரியம் பண்ற?” என்று பைரவி பதற,
“இருங்க அத்தை… என்னனு நான் கேட்கறேன்… டென்ஷன் ஆகாதீங்க…” என்றவன், மகாவை பார்த்து,
“சொல்லுடா… பயமா இருக்கா?” என்று கேட்க, அதற்கும் பதிலில்லை.
“படிக்கற வரைக்கும் மேரேஜ் வேண்டாம்ன்னு நினைக்கிறியா?” அதற்கும் பதிலில்லை.
“வேறன்ன தான் பிரச்சனை? சொன்னாதானே தெரியும்?” என்று அவளது தாடையை பிடித்து அவளை நிமிர்த்தினான். அவனை நேராக பார்க்க முடியாதவள், மௌனமாகவே இருந்தாள்.
அவளது மௌனம், பிரச்சனை பெரிதென கூறியது.
அவளது கண்கள் மட்டும் கலங்கி கீழ் நோக்கியபடியே இருக்க, அவனுக்கு புரியவில்லை.
விஜய், அவனது எண்களில் அழைத்திருந்தால் சிவச்சந்திரனின் வலையில் விழுந்திருப்பான். ஆனால் ஷ்யாமை பற்றி முற்றிலுமாக அறிந்த விஜய் இப்போது சுதாரித்து இருந்தான். புது நம்பரை வாங்கியவன், புது மொபைலில் அதுவும் ஸ்மார்ட்போன் அல்லாமல் பேசிக் மாடல் போனில் தான் அவளை தொடர்பு கொண்டான்.
ஸ்மார்ட் போனை ஸ்பை செய்வது மிகவும் சுலபம். ஆனால் பேசிக் மாடலில் அது முடியாது. அதிலும் நாம் இருக்கும் இடங்களில் என்னென்ன எண்கள் செயல்படுகின்றன என்பதை வேண்டுமானாலும் கண்காணிக்க முடியும் ஆனால் அதுவே அந்த சர்கிளை தாண்டி அந்த எண்னை ஆக்டிவேட் செய்தால் அது இவர்கள் தான் என கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் இல்லை.
விஜய், போனை வெளியே வாங்கியவன், வெளியே இருந்தவாறே பேசிவிட்டு வெளியே ஓரிடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டான். வாட்ஸ் அப் அனுப்புவதும் அப்படியே. வெளியிலிருந்து தான். அதற்கு தனி போன்.
இத்தனை திட்டமிட்டுத்தான் இந்த பிளானை அவன் செயல்படுத்தியதும்.
அது சரியான விதத்தில், அதாவது ஷ்யாமின் கண் பார்வையை வெற்றிகரமாக மறைத்திருந்தது.
இல்லையென அவள் தலையாட்டினாலும் அவள் இன்னமும் உண்மையை கூறவில்லை என்று தோன்றியது.
“சரி… கிளம்பு… காஞ்சீவரம் போய் வந்துட்டு எதுவானாலும் பேசிக்கலாம்…” என்று அவளை எழுப்ப, அவள் பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.
கண்களில் வெறுமை!
அந்த வெறுமை ஷ்யாமை வெகுவாக தாக்கியது.
“நான் வரலை…” மெதுவாக வாய் திறந்தாள்.
“அப்படீன்னா நாங்களே போயிட்டு வந்துடறதா? உனக்கு பிடிச்ச மாதிரி சாரி வேண்டாமா?” என்று ஷ்யாம் கேட்க,
“எனக்கு இந்த கல்யாணமே வேண்டாம்…” என்று தலை குனிந்து கொண்டே கூற, சிரித்தான் ஷ்யாம்.
பைரவிக்கும் கார்த்திக்கும் டென்ஷன் ஏறியது.
சிறுபிள்ளையா இவள்?
“மஹா… ரொம்ப பண்ற! மச்சான் உனக்கு ரொம்ப இடம் கொடுக்கறார்…” கண்டித்தான் கார்த்திக்.
“கார்த்திக்… நான் பேசிக்கறேன்…” என்றவன், “ஏன்? என்ன? வாட் இஸ் ஈட்டிங் யூ… அதை சொல்லு… அதுக்கு சொல்யுஷன் நான் சொல்றேன் குல்பி…” என்று நிதானமாக கூற, அவளுக்கு தான் தொண்டையை அடைத்தது.
“எனக்கு எந்த சொல்யுஷனும் வேண்டாம்…” என்று பிடிவாதமாக சிறு குரலில் கூற,
அவனது முகம் சுருங்கியது.
“கல்யாணமே வேண்டாமா இல்ல என்னோட கல்யாணம் வேண்டாமா?” என்று கேட்க,
அவள் மெளனமாக இருக்க, “சொல்லு மஹா…” என்றான்.
“எனக்கு எந்த கல்யாணமும் வேண்டாம்…” அவளது கோபம் எவரெஸ்ட் ஏறிக்கொண்டிருந்தது.
“என்ன ரீசன்?” அவனது பொறுமை பறந்து கொண்டிருந்தது.
“ரீசன் சொல்லித்தான் ஆகணுமா?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
“எஸ்…”
“சொல்ல முடியாது…” அழுத்தமான குரலில் கூற, அவளது தீவிரம் புரிந்தது. கார்த்திக் ஒருபுறம் பதற, பைரவி இன்னொரு பக்கம் பதறினார். ஹாலில் அமர்ந்திருந்த தந்தையை காட்டி,
“மஹா… லூசுத்தனமா பேசாத… அப்பாவுக்கு டென்ஷன் கொடுத்துடாத ராஜாத்தி… தயவு செஞ்சு கிளம்பு.. அப்புறமா பேசிக்கலாம்…” என்று முடித்து வைக்க பார்க்க,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!