VNE44(1)

44
அத்தனை வேகமாக காரைக் கொண்டு வந்து பெசன்ட் நகர் வீட்டின் முன் நிறுத்தி மஹாவை இறக்கி விட்டவன், அவளை திரும்பியும் பாராமல் அதை விட வேகமாக கிளப்பிக் கொண்டு போனான்.
நின்று கொண்டிருந்தவளின் முகத்தில் புகை படிந்தது.
“உள்ள வந்துட்டு போ ஷ்யாம்…” என்று கூறும் போதே அவன் கிளப்பிக் கொண்டு போன வேகத்தைப் பார்த்து முகத்தில் அறைந்ததை போல உணர்ந்தாள்.
மருத்துவமனையிலிருந்து கிளம்பிய போதிலிருந்தே அவன் அத்தனை கோபமாகத்தான் இருந்தான். அவனது கோபத்தை அவள் முன்னமே கண்டிருக்கிறாள். ஆனால் இது வேறு மாதிரி. அப்போதெல்லாம் அவனது கோபத்திலும் ஒரு வித தாளம் தப்பாத நிதானமிருக்கும். கோபத்தில் எடுத்து வைக்கும் அடியைக் கூட அளந்து வைத்துத்தான் பார்த்திருக்கிறாள்.
ஆனால் இன்று, இது முற்றிலும் நிதானம் தவறிய ஆக்ரோஷம்.
அவனை சொல்லியும் குற்றமில்லை.
முதுகில் குத்தப்பட்ட வலி!
அந்த தீவிரம் இருக்கும் தான். ஆனால் இத்தனை கோபம்… ஏன் என்று தான் கேட்க தோன்றியது. ஆனால் அவன் ஓட்டிய ஓட்டலை பார்த்து வாயை மூடிக் கொண்டாள்.
பேய் வேகம்… சாலைகளில் ட்ராபிக்கில் காத்திருந்த போது காட்டிய உச்சபட்ச எரிச்சல்… வாகனங்களை மோதிவிடுவது போன்று அவன் காட்டிய வன்மை… அத்தனையும் அவளுக்கு புதிது தான்.
அதிர்ந்து போனாலும் கைகளை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்தாள்.
“அவன் கிடைச்சுட்டானா சந்த்ரா?” வந்த அழைப்பை அட்டென்ட் செய்தவன், நேரடியாக கேட்க,
“இன்னும் இல்ல பாஸ்…” என்று அவன் சற்று சுனங்கியதை ப்ளூடூத்தின் வழியாக இவளும் கேட்டாள்.
“இல்லைன்னு சொல்லவா கால் பண்ண?” சீற்றமாக இவன் கேட்க,
“விஜியோட லைனை இன்னும் டேப் பண்ண முடியல பாஸ்… அவரோட போனை ஆப் பண்ணி வெச்சு இருக்கார்…”
“வேற எந்த மெத்தட்சும் யூஸ் பண்ண முடியலையா?”
“இல்ல பாஸ்…” என்றவனின் குரலில் சுருதி குறைந்து இருந்தது.
“ஓகே… உன்னோட ஆளுங்க எத்தனை பேரை வேண்ணா அனுப்பிக்க… என்ன வேண்ணா பண்ணிக்க… ஆனா அவன் கிட்ட இருக்க ப்ரூப் அன்ட் டாக்குமெண்ட்ஸ் அத்தனையும் என் கைக்கு வந்தாகனும்…” என்று கடுமையான குரலில் கூற, மறுப்பக்கத்தில் அதனை கேட்டுக் கொண்டிருந்த சிவச்சந்திரன் உண்மையில் பீதியடைந்தான்.
ஷ்யாமின் இந்த கோபம் அவனுக்கே புதிது.
அவனுடைய பாஸ் எப்போதுமே நிதானம் தவறியதில்லை.
கோபம் இருந்தாலும் அதை பெரிதாக காட்டிக் கொண்டதில்லை. அத்தனை கோபத்தையும் இவர்களிடம் விட்டுட்டு அவன் ரிலாக்ஸ்டாக அதை வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவனது வேலையாக இருக்கும்.
அவனது கோபத்தின் அளவை அவனை சார்ந்தவர்கள் அனைவருமே நன்கு புரிந்து வைத்திருந்தனர். அந்த அளவை அவனும் கோடிட்டு காட்டியும் விடுவான். விஷ்ணுவிடம் ஒரு காரியத்தை ஒப்புவித்தால் அவர்களுக்கு அடி நிச்சயம், இளங்கவி என்றால் சற்று மென்மையாக கையாள வேண்டியவர்கள், சிவச்சந்திரன் என்றால் கண்டிப்பாக கடுமையோ கடுமைதான். சிவச்சந்திரன் ஷ்யாமின் கீழ் வேலை பார்ப்பவன் இல்லை. அவனது தொழில் தனியார் துப்பறியும் நிறுவனம் தான். ஆனால் முற்றிலுமாக வேலை பார்ப்பதென்னவோ ஷ்யாமுக்காக மட்டும் தான்.
வேலையை கூறிவிட்டு, பவுன்சர்களையும் உடன் அனுப்பி வைப்பான்.
யாரை வெளுக்க வேண்டுமோ, வெளுத்து வாங்கி விடுவார்கள்.
அது போன்ற வேலைகளுக்கு விஷ்ணுவையோ, இளங்கவியையோ உபயோகிக்க மாட்டான்.
முன்னர் என்றால் இவை அத்தனையும் விஜியின் மேற்பார்வையில் இருந்தது. ஆனால் எப்போது விஜி ஒதுக்கப்பட ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே ஷ்யாமின் நேரடி கண்காணிப்பில் வந்துவிட்டது இவர்களின் செயல்பாடுகள்!
அப்படியிருக்கும் போது ‘என்ன வேண்ணா பண்ணிக்க’ என்ற அவனது வார்த்தை சிவச்சந்திரனுக்கே சற்று பதற்றத்தை உண்டு செய்து விட்டது.
“பாஸ்… இன்னும் அரை மணி நேரத்துக்குள்ள, அவர் எங்கன்னு ட்ராக் பண்ணிடறேன்… ரொம்ப டென்ஷனாகாதீங்க…” எனவும்,
“ஓகே சந்திரா…” என்று பேசியை அணைத்தான்.
ஏன் இத்தனை கோபம். சற்று நிதானமாக செயல்பட கூடாதா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, உச்ச வேகத்தில் சென்று கொண்டிருந்தவன், கிட்டத்தட்ட ஒரு இரு சக்கர வாகனத்தை தூக்கியிருப்பான்.
கடைசி நிமிடத்தில் ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பினான் ஷ்யாம்.
“பார்த்து ஓட்டு ஷ்யாம்…” என்று கூறிக்கொண்டே அவனது முகத்தைப் பார்க்க, அவன் இன்னமும் சாதாரண நிலைக்கு வரவில்லை.
முகத்தின் இறுக்கமும் குறைந்தபாடில்லை.
“கொஞ்சம் ரிலாக்ஸாகு ஷ்யா…” என்று கூறும் போதே, அவன் திரும்பி அவளை முறைத்த முறைப்பில், அவளுடைய தேகம் நடுங்கியது. எத்தகைய பார்வை அது?
லாவாவின் சூட்டோடும் கொதிப்போடும்… கோபாக்னி கொழுந்து விட்டெறிய, அவன் பார்த்த பார்வையை ஆயுளுக்கும் மறக்க முடியுமோ? உள்ளே தடதடத்தது.
“நான் டிரைவ் பண்றேன்… யூ ஆர் நாட் நார்மல்…” என்று மெல்ல தயங்கியபடி அவள் கூற,
“அந்த ஆணிய நான் புடுங்கிக்கறேன்… நீ வாயை மூடிட்டு இரு…” என்றவனின் வார்த்தைகளில் மனம் இன்னுமே அச்சமடைந்தது.
கார் ஏறும் வரை கூட இவன் நன்றாகத்தானே இருந்தான்? கோபம் இருந்தாலும் இந்த ஆக்ரோஷம் இல்லையே! நிருபர்களை சரியாக ஹேண்டில் செய்தாய் என்று கூட அவனாகவே கூறினானே என்ற குழப்பத்தில் அவனை பார்க்கும் போது தான் சற்று முன் அவன் கேட்ட கேள்விக்கு தான் கூறிய பதில் நினைவுக்கு வந்தது.
“ஏன்டி அவ கிட்ட இந்தளவு கொஞ்சற? கொஞ்சம் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ண மாட்டியா?” என்று அவன் சாதாரணமாகத்தான் கேட்டான். இவளுக்குத்தான் எந்த நேரத்தில், நாக்கில் சனீச்வர பகவான் அமர்ந்தாரோ,
“உன்னை விடவா நான் கொஞ்சிட்டேன்?” என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு, சட்டென்று நாக்கையும் கடித்துக் கொள்ள, அவனுக்கு அத்தனை அவமானமாக இருந்தது.
குத்திக் காட்டுகிறாள்!
எத்தனை தான் புரிதல் இருக்கும் தம்பதியராக இருந்தாலும் கூட சமயத்தில் இது போன்ற குத்தல் வார்த்தைகளை எதிர்கொண்டே தான் தீர வேண்டும் என்பது இவனுக்கும் புரியவில்லை.
இது போல குத்திப் பேசி தன்னுடைய கோபத்தை ஆற்றிக் கொள்வது தவறு என்பதையும், ஒரு வழி பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிட்ட பிறகு, அதை மீண்டும் தணிக்கை செய்ய முற்படுவது முட்டாள்தனம் என்பது அவளுக்கும் புரியவில்லை.
வெளியே அவனை கிஞ்சிற்றும் விட்டுக் கொடுத்துவிட மாட்டாள். ஆனால் வெடிப்பதெல்லாம் அவனிடம் மட்டும் தான் என்ற நிலையில், அதுவும் அவன் இப்போதுள்ள மனநிலையில், ஷ்யாமால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“நீ என்ன சொல்ல வர்ற?” அவள் சுதாரிப்பதற்குள் அவன் கேட்டு விட்டான்.
“இல்ல…” என்று அவள் தயங்கினாள்.
“குத்தி காட்ற மஹா… நான் கொடுத்த அத்தனை விளக்கத்துக்கு அப்புறமும் குத்தி காட்ற…” என்று அவன் சீற, அவளுக்கும் எரிச்சலாக இருந்தது.
“நான் எதுக்கு குத்திக் காட்டனும்? இருக்கறதை தானே சொன்னேன்? உனக்கு ஏன் இவ்வளவு கோபம் வரணும்?” அவசர கதியில் இவளும் வாயி விட,
“இது தேவையில்லாத பேச்சு… எதுவா இருந்தாலும் நேரா பேசு… குத்திக் காட்டாத…” கடும் கோபத்தோடு கூற, என்ன தவறாக பேசி விட்டோம் என்று யோசித்தாள்.
“எதையுமே நான் மறைச்சு வெச்சு பேசனும்ன்னு அவசியமில்ல…” எங்கோ பார்த்துக் கொண்டு இவள் கூற,
“அப்படீன்னா என்ன சொல்ல வர்ற?” கோபத்தையும் தாண்டி அவன் இறுக்கமாக கேட்கவும் தான், பேச்சு திசை மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். மனதுக்குள் ‘ஐயோவென்று’ இருந்தது.
“ப்ளீஸ் ஷ்யாம்… நான் எதையும் எந்த இன்டென்ஷனோடவும் சொல்லலை… டக்குன்னு வந்துடுச்சு…” சட்டென சரணடைந்து விட்டாலும், அவனது கோபம் தீர்கிற ஒன்றாக இல்லை.
“உனக்கு எந்த இன்டென்ஷனும் இருக்காது மஹா. ஏன்னா உன்னை பைத்தியம் மாதிரி லவ் பண்ணிட்டு இருக்கற நான் உனக்கு பெருசா தெரியல… அவன் சொன்னான்னு கல்யாணத்தை நிறுத்த சொல்ற… அவன் பேசினதையும் என்கிட்டே சொல்லலை… இப்ப இப்படி குத்திக் காட்ற…” கோபத்தை எல்லாம் ஆக்சிலரேட்டரில் காட்டிக் கொண்டிருந்தான்.
“அவன் சொன்னான்னு நான் கல்யாணத்தை நிறுத்த சொன்னேனா?” அதிர்ந்தாள். அவள் செய்ததற்கு அதுதான் அர்த்தம் என்றாலும், அவளது கவனம் முழுக்க இவன் மேலல்லவா இருந்தது. அதுவும் இல்லாமல் அவள் திருமணத்தை நிறுத்த முயன்ற காரணமே வேறல்லவா… அந்த படங்கள்… வீடியோ… என்று மனதுக்குள் ஓட,
“ஆமா… அவன் தான் கேட்டானே… கல்யாணத்தை நிறுத்திட்டியா மஹான்னு… அந்தளவு தான் என்னை நீ வெச்சு இருக்க… இல்லையா?”
“அவன் சொன்னதை எல்லாம் நான் கன்சிடர் பண்ணவே இல்லடா… என்னால அந்த விஷயத்தை ஜீரணம் பண்ண முடியல… இப்பக் கூட அதை என்னால மறக்க முடியுமான்னு தெரியல…” வேதனையை மனதில் வைத்துக் கொண்டு அவள் கூற, நடந்தவொன்றை மாற்ற முடியாத இயலாமையும், தான் ஏமாற்றப்பட்ட, முதுகில் குத்தப்பட்ட, தன்னோடு இருந்தவனே இந்தளவு குழி பறித்து இருக்கிறானே என்ற ஆத்திரத்தையும், இந்த சூழ்நிலையில் யாரை நம்புவது என்ற அவனது கோபத்தையும், மகாவிடம் காட்ட முடியாமல், ஆக்சிலரேட்டரில் காட்ட, கார் தாறுமாறாக பறந்தது.
அதே சீற்றத்தோடு தான் சிவச்சந்திரனிடமும் அவன் பேசினான்.
சிவச்சந்திரனிடம் பேசிய உடனே விஷ்ணுவை அழைத்தவன்,
“விஷ்ணு… ஒரு பத்து பேரை கூட்டிட்டு விஜி வீட்டுக்கு போ… அங்க அவன்கிட்ட இருக்க டாக்குமெண்ட்ஸ், பென் டிரைவ்ஸ், சிடி, லேப்டாப், ஹார்ட் டிஸ்க்ன்னு எது இருந்தாலும் அள்ளிப் போட்டுட்டு வா… ஒரு இடத்தையும் பாக்கி வைக்காத…” என்று அவனை ஏவ,
“அவர் தடுத்தா என்ன பாஸ் பண்ண?” என்றதும்,
“அவன் இருந்தான்னா அவனை அப்படியே தூக்கிட்டு போயஸ் கார்டன் ஆஃபீஸுக்கு வந்துடு… அவனை அங்க வெச்சு…” என்று பல்லைக் கடித்தவன், “பார்த்துக்கலாம்…” என்று முடிக்க,
“பாஸ், டாகுமென்ட்ஸ் முக்கியமா அவர் முக்கியமா? பிக்ஸ் த ப்ரையாரிட்டி…” என்றவனின் குரலில் அத்தனை தீவிரம் சேர்ந்து இருந்தது.
“ரெண்டுமே… நாம பேசற நேரத்துல கூட எதையாவது அவன் அப்லோட் பண்ணிட சான்ஸ் இருக்கு விஷ்ணு… சோ அவனும் முக்கியம், அவன் கிட்ட இருக்க விஷயமும் முக்கியம்…” எனவும்,
“ஓகே பாஸ்… அப்படீன்னா அவரோட வீட்டை மட்டும் டார்கெட் பண்ணா அவரை பிடிக்க முடியாது… மோஸ்ட்லி அவர் போற ப்ளேசஸ் அத்தனையும் எனக்கு தெரியும்… எல்லா இடத்துக்கும் ஆளை அனுப்பிடறேன்… கூடவே அவரோட வீட்டையும் செர்ச் பண்ணிடலாம்…” என்று அவன் யோசனை கூற,
“ஓகே… முடிச்சுட்டு எனக்கு கால் பண்ணு…” என்று முடிக்கும் போதே, இளங்கவி ஷ்யாமை அழைத்தான்.
“சொல்லு இளங்கவி…”
“பாஸ்… டெலிகம்யுனிகேஷன் டிபார்ட்மெண்ட்ல பேசிட்டேன்… ட்விட்டர் மேனேஜ்மெண்ட்டுக்கு அவங்க வழியா ப்ரெஷர் போட்டுட்டே இருக்கு… கூகுள் அண்ட் அதர் செர்ச் இஞ்சின் மேனேஜ்மெண்ட்ஸ்க்கும் பிரஷர் பண்ணிட்டு இருக்காங்க… இன்னும் ஒரு ஒன் ஹவர்ல அந்த பிக்ஸ் எல்லாம் டெலீட் பண்ண வெச்சுடலாம்… பியுச்சர்ல அந்த பிக்ஸ் எங்கயுமே இல்லாம பண்ணிடலாம் பாஸ்…” என்று கூற,
“அந்த ஐடிய ஹேக் பண்ண சொன்னேனே கவி…”
“ப்ராசஸ் போயிட்டே இருக்கு பாஸ்… இன்னொரு அரை மணி நேரத்துல அதுவும் முடிஞ்சுடும்…” என்று கூற,
“அந்த ஐடி எந்த ஐபில இருந்து ஆக்டிவேட் ஆகிருக்கு… என்ன கோ ஆர்டினேட்ஸ்ல இருக்குன்னு முதல்ல பார்க்க சொல்லு கவி…”
“ஒரே ஐபில லாக் இன் ஆகி இருந்தா ப்ராப்ளம் இல்ல பாஸ்… வேணும்னே வோர்ல்ட்வைட் அங்கங்க லாக் இன் பண்ணி இருந்தா தான் ப்ராப்ளம்… ஆத்தண்டிகேடட் ஐபிய கண்டுபிடிக்கறது கஷ்டம்…” எனவும்,
“மத்த ஐபி எல்லாத்தையும் விட்டுடு கவி… சென்னை ஐபி மட்டும் தான் நமக்கு முக்கியம்… ரைட்?” என்று முடிக்க,
“ஓகே பாஸ்…” என்று வைக்க, அவனது முகம் யோசனையாகவே இருந்தது.
இந்த பிரச்சனைகளுக்கு நடுவே தான் வேறு அவனை டென்ஷன் செய்ய வேண்டுமா என்ற எண்ணமே அப்போதுதான் மகாவுக்கு வந்தது. அவனது செயல்பாடுகளை முன்னமே கண்டிருக்கிறாள் தான். ஆனால் இந்த அவதாரம் அவளுக்கு மிகவும் புதிது.
அத்தனை பேரையும் வைத்து, அத்தனை நுட்பத்தையும் பயன்படுத்தி, ஒரே இடத்தில் குவிய செய்து கொண்டிருந்தவனை சற்று பயத்தோடு தான் பார்த்தாள்.
இத்தனை விஷயங்களுக்கு இடையில் அவன் கையில் கார் கன்னாபின்னாவென பறந்து கொண்டிருக்கவும் தான் அவளே ஓட்டுவதாக கூறியது.
அவளை முறைத்து கடித்து குதற, கியரிலிருந்த அவனது இடது கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள். அவனது விரல்களோடு அவளுடையதையும் கோர்த்துக் கொள்ள, அவனையும் அறியாமல் மெல்ல ஆசுவாசமானான்.
கோபம் மெல்ல குறைவது போல இருந்தாலும், பழி உணர்ச்சி அவனை பந்தாடிக் கொண்டிருந்தது.
“சாரி ஷ்யாம்… ஐ டிட்டின் மீன் இட்… ஜஸ்ட் டக்குன்னு வந்துடுச்சு…” என்றவளை அவன் திரும்பிப் பார்க்கவில்லை. தனது உணர்ச்சிகளை பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறான் என்பதை அவனது தோற்றத்தைக் கொண்டு ஊகிக்க முடிந்தது.
அவள் எத்தனை கோபத்தில் இருந்தாலும், அவனது அணுகுமுறை இதுவரை நிதானமாகத்தான் இருந்திருக்கிறது. கோபமாகவே இருந்தாலும் கூட அதையும் நிதானமாக காட்டிய ஷ்யாமைத்தான் அவள் அதுவரை அறிந்திருந்தாள்.
ஆனால் அவனது நிதானத்தை செயலிழக்க செய்யும் சக்தி அவளது ஒற்றை சொல்லுக்கும் பார்வைக்கும் உண்டு என்பதை அவளே உணரவில்லை.
“ஷ்யாம்…” என்று மீண்டும் அவனது விரல்களை அழுத்தியபடி அவனை அழைக்க,
 “நீ சொன்ன நரகத்துக்கு டீசர் காட்ற மஹா…” கோபத்தை கைவிட்டாலும், அவனது குரல் அத்தனை வேதனையாக ஒலித்தது.
“ஷ்யாம்…” மறுத்து கூற வந்தவளை,
“நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்ன்னு என்னை நானே தயார் பண்ணிட்டு இருக்கேன்… வேண்டாம்… எந்த எக்ஸ்ப்ளனேஷனும் வேண்டாம்…” என்று புருவம் நெறிபட, இறுக்கமாக கையை காட்டி அவளை நிறுத்தினான்.
அவனது கையை விட்டவள், தலை குனிந்து கொண்டு கைகளை கோர்த்தபடி அமர்ந்து கொண்டாள். அவளையும் அறியாமல் கண்கள் கலங்கும் போல இருந்தது. அவனது கோபத்தை தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால் வேதனையை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அவனது செல்பேசி அழைத்தது. சிவச்சந்திரன் தான் அழைத்தான்.
“சொல்லு சந்த்ரா…” என்றான் அதே இறுக்கத்தோடு!
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!