VNE47(2) CV
VNE47(2) CV
“கொஞ்சம் வெய்ட் பண்ணேன் ஷ்யாம்… இந்த கைன்ட் ஆப் மெமரி லாஸ் கொஞ்ச நேரத்துக்கு தான் இருக்கும்ன்னு படிச்சு இருக்கேன்… அதை நேரடியா ட்ரீட் பண்றதை பார்க்க எனக்கொரு சான்ஸ் கிடைச்சு இருக்கு… கொஞ்சம் பொறுத்துக்க, ப்ளீஸ்…” எனவும், முகத்தை கல்லைப் போல வைத்துக் கொண்டு,
“சரி இரு…” என்றவன், செல்பேசியில் கார்த்திக்கை அழைத்தபடி வெளியே சென்றான். அவளது படிப்பை காரணம் காட்டும் போது அவனால் மறுத்துப் பேச முடியவில்லை. ஆனால் இது எங்கு சென்று முடியுமென்று தெரியவில்லை. அவன் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் பிரச்சனை. அந்த டாக்குமெண்ட்ஸ் இருக்குமிடத்தை அறியாமல், அதை தான் கைபற்றாமல் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது. அவன் நடிக்கிறான் என்றாலும் பிரச்சனை. மகாவுக்கு அவன் மேல் ஒரு சாப்ட் கார்னர் வந்தாகிவிட்டது. தன்னால் தான் இந்த பிரச்சனை என்று நினைக்குமளவு ஆகி விட்டது. அந்த சாப்ட் கார்னரை அவன் எப்படி வேண்டுமானாலும் உபயோகப்படுத்துவான்.
என்ன செய்வது என்று குழப்பமாக இருக்க, அவனது அழுத்தங்களையும் கொதித்துக் கொண்டிருந்த மன வெப்பத்தையும் வெளிவிட அவனுக்கு ஒரு துளை தேவைப்பட்டது. அதனால் தான் வெளியேறினான்.
அவன் வெளியே செல்ல, விஜி, அவனையும் அறியாமல் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டான். அவனிருந்த வரை இனம் புரியாத இறுக்கம் சூழ்ந்து இருந்தது போல இருந்தது. ஆனால் அவனால் அதை என்னவென்று வரையறுத்து கூற முடியவில்லை. பிடித்ததற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்… பிடிக்காமல் போவதற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? பிடிக்கவில்லை… அவ்வளவு மட்டுமே!
ஷ்யாம் இருந்தவரை இயல்பாக இருந்தவள், அவன் வெளியேறிய பின் இறுக்கமான முகபாவத்திற்கு மாறினாள்.
“நிஜமாவே உங்களுக்கு எதுவும் ஞாபகம் இல்லையா?” என்று அழுத்தமாக கேட்க, அவன் மெளனமாக அவளை பார்த்திருந்தான்.
“மெமரி லாஸாக சான்ஸ் இருக்கு மேம்…” என்றார் ஆர்த்தோ ஐசியூ சீப். அவள் அவரை விட மிக மிக குறைவான வயது என்றாலும், அவள் இப்போதுதான் மருத்துவம் பயிலும் மாணவி என்றாலும் அவர்கள் அனைவருக்குமே மரியாதைக்குரிய மேம் ஆகியிருந்தாள். ஷ்யாமின் பியான்சே. வருங்கால சேர்மன். அவள் எவ்வளவு இளையவளாக இருந்தாலும் மரியாதை கொடுக்கப்பட வேண்டிய இடத்தில் இருக்கிறாள். ஆனால் அவள் அதை உபயோகப்படுத்த எண்ணுவதுமில்லை என்பதும் அவர்களுக்கு தெரியும். யாரிடம் பேசினாலும் அவள் ஜூனியர் என்பதையும் ஹவுஸ் சர்ஜன் செய்து கொண்டிருப்பவள் என்பதையும் மறப்பதுமில்லை.
அவள் தான் எதிர்காலத்தில் மருத்துவமனைக்கு பொறுப்பு என்று ஷ்யாம் கோடிட்டு காட்டி இருந்தான். அதோடு முக்கிய முடிவுகள் ஒவ்வொன்றிலும், அவள் யோசனை சொல்கிறாளோ இல்லையோ, அவளை அமர வைத்தான்.
பயிற்சியை ஆரம்பித்து விட்டிருந்தான். மிசஸ் ஷ்யாமுக்கு அனைத்தையும் சமாளிக்கும் திறன் வேண்டுமே. அந்த அனுபவத்தில் மருத்துவமனையோ, மருத்துவ கல்லூரியோ, அத்தனை பேருக்கும் பரிச்சயமாகி விட்டிருந்தாள் மஹா.
“இருக்கலாம் டாக்டர்… ஆனா இவர் கேஸ்ல எல்லாத்தையுமே டவுட்டாவே பார்க்க வேண்டியிருக்கு…” என்று கூற,
“ம்ம்ம்… ஓகே மேம்… ஏ டூ இசட் எல்லா டெஸ்டும் முடிச்சிடலாம்… எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது…” என்று முடிக்க,
“ஓகே…” என்றவள், விஜியை கேள்வியாய் பார்க்க,
“என்னை உங்களுக்கு பிடிக்காதோ?” வீங்கியிருந்த முகத்தோடு, கை கால்களில் ஆபரேஷன் செய்த கட்டுக்களோடு ஐசியு படுக்கையில் படுத்திருந்த விஜி, மகாவிடம் கேள்வி எழுப்ப,
மெளனமாக அவனை பார்த்தாள். பேசியில் அவளை மிரட்டிய விஜியை மட்டுமே அவள் அறிவாள். ஷ்யாமுடன் இருந்த விஜி அவளது நினைவு பெட்டகத்தில் மெல்லிய புகைப்படலமாய் மாத்திரமே! அப்படி இருக்கும் போது எந்த தைரியத்தில் தன்னை காதலித்ததாக கூறி இவ்வளவு பெரிய வேலைகளை எல்லாம் செய்திருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. மலைப்பாக இருந்தது.
ஷ்யாம் தன்னை சென்னைக்கு அழைத்து வந்தபோது கூட இவனுடனும் இளங்கவியுடனும் தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். அப்போதும் கூட ஒரு வார்த்தை பேசவில்லையே!
இவன் தன்னை காதலித்தான் என்று கூறுவது எப்படி என்றே அவளுக்கு புரியவில்லை.
ஆனால் கார்த்திக் கூறியிருந்தான். ஷ்யாம் தன்னை கஸ்டடி எடுத்தபோது, ரொம்பவுமே தவித்து எப்படியாவது மீட்க வேண்டும் என்று துடித்தது விஜி தான் என்று! அப்படி துடித்தவன், பின் ஏன் தன்னிடம் பேசவே இல்லை?
அத்தனை வருடமாக வேலை செய்த முதலாளிக்கு எதிராக திரும்பி, நெஞ்சை பதற வைக்கும் செயல்களை எல்லாம் செய்து பழி தீர்க்க வேண்டும் என்ற நினைப்பு எதனால் வந்தது?
தான் காதலித்தவளை அவன் எடுத்துக் கொண்டானே என்ற நிலை இப்படி மிருகத்தனமாக செயல்பட வைக்குமா என்ன?
அவளுக்கு என்னவோ அது மட்டும் காரணமில்லை என்று தோன்றியது. இவனுக்கு ஷ்யாமிடம் மிகப்பெரிய வஞ்சமோ, கோபமோ எந்த வகையிலாவது தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் அவனை பழி தீர்க்க முயன்று இருக்க வேண்டும்.
மனம் என்னன்னெவோ எண்ணிக் கொண்டிருக்க, “சொல்லுங்க மஹா…” என்றான் விஜி. அவன் அப்போது அறிந்திருந்த ஒரே பெண் அவள் தான் என்ற நிலையில், அவளது இந்த தவிர்ப்பு அவனை தவிக்க செய்தது. அவள் தன்னை தவிர்க்கக் கூடாது என்று பரிதவிக்க தோன்றியது. சூனியமாக தோன்றிய தோன்றிய உலகத்தை நினைத்தால் அவனுக்கு பயமாக இருந்தது. தனக்கு எந்த நினைவும் வராமல் போய்விடுமோ என்று மனதுக்குள் ஒரு திண்டாட்டம். அப்படி வராமல் போய்விட்டால் தன் நிலை என்ன என்பதை குறித்த திடுக்கிடல். தெரிந்த ஒரே பெண்ணை பற்றுக் கோடாக பற்றிக் கொண்டு அவனது கடந்த காலத்தை அறிந்து கொள்வதை தவிர அவனுக்கு வேறு வழி இல்லையே!
“நான் உங்க கிட்ட நேர்ல பேசினதே இல்லையே…” என்றவளை, புருவத்தை நெரித்துப் பார்த்தான். நேரில் பேசியே இல்லாத பெண் மேல் தனக்கு ஏன் இந்த பிடித்தம் இருக்க வேண்டும்? என்ன வகையான பந்தம் இது?
“நேர்ல பேசினதே இல்லையா?” என்று யோசித்தான். ஆனால் அவளுடைய முகம் அவனது மனது வெகு பிரியமாக இருந்திருக்க வேண்டும். அவளது கவி பேசும் கண்களை அவ்வளவு பிடித்தது.
“ம்ம்ம்… போன்ல மட்டும் தான் பேசி இருக்கீங்க…” என்றவள், அவனுக்கு இஞ்சக்ஷன் கொடுக்க வந்த நர்சிடமிருந்து மருந்தை வாங்கி, அவனது தோளில் வலிக்காமல் போட்டாள்.
“நீங்க டாக்டரா?” என்று அவன் கேட்க,
“ம்ம்ம்… ஹவுஸ் சர்ஜன் பண்ணிட்டு இருக்கேன்…” என்றவள், அவனது வைட்டல்களை செக் செய்தாள்.
“எப்படி எனக்கு உங்களை தெரியும்?” என்று கேட்டான், காலில் இருந்த வலியை சகித்தபடி! சுரீர் சுரீர் என்று வலித்தது. எலும்பு முறிவல்லவா!
“ஷ்யாம் கிட்ட நீங்க வேலை பார்த்தீங்க…” என்று வெகு இயல்பாக கூறிவிட்டு, அவனது ப்ரெஷரை செக் செய்தாள்.
அவளருகில் வந்த ஆர்த்தோ ஐசியு மருத்துவர், “மேம்… டெஸ்ட்க்கு எழுதிட்டேன்… ரேடியேஷன் டிப்பார்மென்ட்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்க சொல்லி இருந்தேன்… இன்னும் பத்து நிமிஷத்துல அங்க ஷிப்ட் பண்ணனும்… ஈஈஜி, சிடி, எம்ஆர்ஐ. பிரைன் ஆக்டிவிட்டியை டெஸ்ட் பண்ணிடலாம்… அப்புறம் நம்ம சைக்கியாட்ரிஸ்ட் மோகன் சார் அப்பாயின்மென்ட் கேட்க சொல்லிருக்கேன்… அவரும் ஒரு ஒபினியன் கொடுக்கட்டும்… தென் ஆஸ் யூஸ்வல் ஆர்த்தோ சீப் ஷிக்கர் பாண்டே டேக் ஓவர் பண்ணிக்கறேன்னு சொல்லிருக்கார்….” என்று ஒப்பித்தார்.
“ஓகே டாக்டர்…” என்றவளுக்கு சற்று சங்கடமாக இருந்தது. என்ன இருந்தாலும் அவள் இன்னமும் பட்டம் பெறவில்லை. ஜூனியர் எனும் போது, அத்தனை பெரிய மருத்துவர் தன்னிடம் ரிப்போர்ட் செய்வது போல சொல்வதை நெளிந்து கொண்டே கேட்டுக் கொண்டாள். ஆனால் வேறு வழியில்லை. பழகித்தானாக வேண்டும்.
அந்த மருத்துவர் சென்று விட, “என்னவா வேலை பார்த்தேங்க?” என்று கேட்டான் விஜி. மஹா நிமிர்ந்து பார்த்தாள்.
“அவருக்கு எல்லாமே நீங்களாத்தான் இருந்தீங்க… சென்னைல அவரோட ரெப்ரசெண்டேடிவ் நீங்க தான்…” எனவும்,
“ஓஓ…” என்று கேட்டுக் கொண்டான். அவனுக்கு எதுவுமே நினைவுக்கு வரவில்லை. “அப்படீன்னா அவர் இப்ப வருத்தப்படறதுல அர்த்தம் இருக்கு…” என்றவனை விசித்திரமாக பார்த்தாள். அவன் வருத்தப்படுகிறான் தான், இவனை விட்டு வைத்ததற்கு என்று நினைத்துக் கொண்டாள்.
“ஓகே… நீங்க ரெஸ்ட் எடுங்க… டெஸ்ட் எடுக்க ஷிப்ட் பண்ணுவாங்க… கண்டிப்பா உங்களுக்கு குணமாகிடும்…” என்று லேசாக புன்னகைத்தவளை ஆழமாக பார்த்தான்.
அவளது புன்னகை புதிதாக பூத்த மலரை போல இருந்தது, அத்தனை மலர்ச்சியாக, குளிர்ச்சியாக இருந்தது. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல!
“மறுபடியும் எப்ப வருவீங்க?” என்று கேட்ட விஜியை பார்க்க தயக்கமாக இருந்தது.