VNE49(2)

VNE49(2)

“அதே தான் நானும் சொல்றேன்… வார்த்தையால சொன்னாத்தான் ஆச்சா? நமக்குள்ள இருக்கற பாண்டிங் வெறும் வார்த்தைகளால கட்டமைக்கப் படறது இல்லடா… சம்திங் மோர்…” என்றவன், அவளது கையை பிடித்து, “என்னால ஐ லவ் யூ தினமும் சொல்ல முடியாது… ரோஸ் கொடுத்து உன்னை ப்ரொபோஸ் செய்ய தெரியாது… அசர வைக்கற மாதிரி பேச தெரியாது… ஆனா இப்ப பிடிக்கற கையை வாழ்நாள் முழுக்க விட்டுட மாட்டேன்னு உனக்கு உறுதியை கொடுக்க முடியும்… என்னோட பட்டர் ஹாஃப்பை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்க தெரியும் பிருந்தா…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

ஒன்றும் தெரியாது என்று கூறியே இப்படி வசியப்படுத்துவான் என்று நினைக்கவில்லையே!

“வாட் எ மெடிக்கல் மிராக்கில்… மொத்தமா இத்தனை வார்த்தை பேசிட்டீங்க…” என்று சிரிக்க,

“மஹா கல்யாணம் முடியட்டும்… அப்புறம் பாரு..” என்றவனை ரசித்துப் பார்த்தவள்,

“ப்ரோ உங்களை பாசமலர்ன்னு கிண்டல் பண்றதுல தப்பே இல்ல… ஓவர் சீன்…” என்று சிரித்தாள்.

“வாலு…” என்றவன், அவளது கையை பிடித்தபடியே ஹோட்டலுக்குள் அழைத்து சென்றான். யாரும் எதுவும் சொல்லிவிட மாட்டார்கள் தான். ஆனால் அவனுக்காய் இருந்த தயக்கம். பிருந்தாவின் கோபம் அவனை சற்று தயக்கத்திலிருந்து மீட்டது.

இருவருமாய் கையைப் பிடித்தபடி வந்ததை ஷ்யாம் கவனித்துவிட்டு மகாவிடம் கண்களால் காட்டினான். விஜியின் நிலையை நினைத்தபடி ஷ்யாமிடம் முகம் கொடுக்காமல் இருந்த மஹாவே சட்டென பிருந்தாவை பார்த்து புன்னகைத்தாள்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…

அதற்கு பின் மதிய உணவு முழுக்கவே கார்த்திக்கும் பிருந்தாவும் அருகே அமர்ந்து கிசுகிசுவென பேசியபடியே உணவை உண்ண, இவர்கள் இருவரும் மெளனமாக உண்டனர்.

இப்போது சற்று இறங்கினாலும், அவள் மீண்டும் உச்சியில் அமர்ந்து கொண்டு விஜியை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாள் என்பதால் பேசுவதையே தவிர்த்தான் ஷ்யாம்.

அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் உணவை உள்ளே தள்ளினாள் மஹா.

பெரியவர்கள் அவர்களது பேச்சில் மூழ்கியிருக்க, கார்த்திக் பிருந்தாவிடம் பேச்சில் ஒன்றியிருக்க, இந்த இரண்டு பேரின் கோல்ட் வார் யார் கண்களிலும் படாமல் போனது.

உண்டு முடிக்கும் போதே மீண்டும் அவளது செல்பேசி அழைத்தது.

தெரியாத எண்!

யோசனையாக காதுக்குக் கொடுத்தாள்.

“சாமீ தங்கம்… மகாலக்ஷ்மியாம்மா பேசறது?” வெகுவான தவிப்போடு யாரோ ஒரு பெண் கேட்க, அந்த தொனி அவளை ஏதோ செய்தது. விளிம்பு நிலை மக்களின் கடைசி குரல் அது!

“ஆமாங்க… நீங்க யார் பேசறது?” என்று கேட்க,

“நான் விஜியோட அம்மா பேசறேன் தங்கம்…” என்று வாயை மூடிக்கொண்டு அழுதபடி அவர் கூற, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.

“சொல்லுங்கம்மா…” என்று அவள் கூற,

“தயவு செஞ்சு என் பையனை காப்பாத்தி கொடும்மா… யார் யாரோ என்ன்னவோ சொல்றாங்க… எதுவும் உண்மையா இருக்க கூடாதுன்னு மனசு கிடந்து பதறுது… உன் பேர மட்டும் தான் அவன் சொல்றானாம்… தயவு செஞ்சு காப்பாத்து தெய்வமே….” என்றவர் வெடித்து அழுதார். முந்தைய தினம் தான் அவர்களுக்கு தகவல் கொடுக்கபட்டிருந்தது. அன்று காலை முதலே மருத்துமனையில் தான் இருந்தார் அவர்.

கணவருக்கு முழு ஓய்வில் இருந்தாக வேண்டிய கட்டாயம். மகனை அவரது துணைக்கு வைத்து விட்டு தான் மட்டும் கிளம்பி வந்திருந்தார். கிராமத்து பெண்மணி.

பிரச்சனைகளை மேலோட்டமாக கூறியிருந்தனர். எதனால் இப்படியாகி இருக்கக் கூடும் என்று கேட்கும் போது பதில் சொல்லித்தானே தீர வேண்டும்?

“ம்மா… அப்படியெல்லாம் நான் வர முடியாது… தயவு பண்ணி புரிஞ்சுக்கங்க…” என்று மறுத்தும் பார்க்க,

“அப்படி சொல்லாத சாமீ… இவன் தான் என் மூத்த பையன்… என் குலத்துக்கே விளக்கம் இவனால தான்… இப்ப இவனே இப்படி கெடக்கறதை பார்த்தா நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கே தாயீ… தயவு காட்டும்மா…” என்று அவர் கெஞ்ச, அவள் சங்கடமாக ஷ்யாமை பார்த்தாள்.

அவன் எதையும் கண்டுக்கொள்ளாமல் உண்பதில் மட்டும் கவனத்தை செலுத்துவது போல காட்டிக் கொண்டிருந்தான். மகாவுக்கு கோபம் பற்றியது!

“ஷ்யாம்ம்ம்ம்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அழைத்தாள்.

“ம்ம்ம்…” எதிரே அமர்ந்திருந்த பெரியவர்களை எல்லாம் பார்த்தவள்,

“அந்த விஜியோட அம்மா கெஞ்சறாங்க…” என்று இவள் கெஞ்ச,

“சோ வாட்?” என்றான் வெகு இயல்பாக!

“ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.

“யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்ல…”

“மினிமம் மனுஷத்தன்மையாவது வேணும் ஷ்யாம்…”

“சாரி…. ஸ்டாக் இல்ல…” என்றவன் உணவை உள்ளே தள்ளினான்.

“சரி… நீ இப்படியே இரு… நான் போய் பார்க்கணும்…” என்று எழுந்து கைகழுவ போக, அவள் போன திசையை வெறித்தான்.

***

ப்ரைவேட் ஐசியுவுக்குள் நுழையும் போதே விஜியின் கத்தல் கேட்க, மஹா அவசரமாக நுழைந்தாள். ஷ்யாம் பின்னால் வர, அழுது கொண்டிருந்த விஜியின் தாயை பார்த்து கை காட்டி அமர சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைய, காளிக்கு பெண்பாலாக உக்கிரமாக அமர்ந்திருந்தான் விஜி!

“யாரையும் பக்கத்துல போக விட மாட்டேங்கறார்… ட்ரசிங் பண்ண விடலை… சாப்பிடலை… நைட் முழுக்க தூங்கலை… ஹெவிலி டிஸ்ஓரியன்ட்டட் …” என்று ஷ்யாமிடம் மருத்துவர் கூற, தைரியமாக அவனுக்கு அருகில் சென்றாள் மஹா.

அவனுக்கு முன்னால் சென்று அவனைப் பார்க்க, கீழே எதுவோ விழுந்து விட்டதை போல கோபமாக தேடிக்கொண்டு இருந்தான்.

“விஜி…” என்று மஹா அழைக்க, தேடுவதை நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.

கண்களில் கருவளையம் விழுந்து கறுத்திருந்தான். முன்தினம் முதல் உண்ணவில்லை, உறங்கவில்லை என்பது அவனது கண்களில் தெரிந்தது.

“கொஞ்ச நேரம் கூடவா தூங்கலை?” சற்று அதிர்ச்சியாக கேட்டான் ஷ்யாம்.

“ஆமா பாஸ்… டிஸ்ஒரியன்டேஷன்… ஹெவி ஸ்ட்ரெஸ்… ஆல்கஹால் அப்யுஸ்… ஆக்சிடென்ட்… இன்னும் நிறைய பேக்டர்ஸ்… இப்ப அவருக்கு தெரிஞ்ச ஒரே பிம்பம் மஹா மேம் மட்டும் தான்… சாப்பிட சொன்னா எனக்கு மஹா சாப்பாடு கொண்டு வருவாங்கன்னு சொல்லி சாப்பிடலை… ட்ரிப்ஸ் போட்டுக்கலை… நாங்களும் எவ்வளவோ ஃபோர்ஸ் பண்ணி பார்த்தோம்… ஒன்னும் முடியல பாஸ்…”

“அம்னீசியான்னு மட்டும் தானே சொன்னீங்க?” அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை, விஜியின் நிலையை பார்த்து!

நிமிர்ந்து மகாவை பார்த்த விஜியின் கண்கள் கலங்கியது. கண்ணிமைகள் ஒரு இடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது. கைகள் இரண்டு புறமும் கட்டப்பட்டு இருக்க, கால்களும் கட்டப்பட்டு இருந்தது. படுக்கையிலேயே மலம் கழித்து இருந்தான்.

“ஏன் கிளீன் பண்ணலை டாக்டர்?” ஷ்யாமே தாள முடியாமல் கேட்டு விட,

“பக்கத்துல யாரையும் விட மாட்டேங்கறார் பாஸ்… ரொம்ப அடிக்கறார்… வயலண்டா பிஹேவ் பண்றார்… பயப்படறாங்க எல்லாரும்…” என்று கூற, ஷ்யாம் தலையில் கைவைத்துக் கொண்டான்.

விஜியின் கண்களில் கண்ணீர் ஊற்று பெருகியது…

“மஹா…” என்று ஹீனமாக அழைத்தவன், “என்னை அடிக்க வேண்டாம்ன்னு சொல்லு மஹா… வலிக்குது… ஊசி போட்டு என்னை கொல்ல பாக்கறாங்க… பயமா இருக்கு மஹா… கட்டை கழட்ட சொல்லு மஹா…” வார்த்தைகள் குழறியபடி தான் வந்தது. பாதி புரிந்தும் புரியாத நிலை. சொல்லிவிட்டு அவன், வெடித்து அழ… பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமின் கண்களில் கண்ணீர்.

அவனது அருகில் சென்ற மஹா, “உங்க கைகட்டை கழட்டினா நர்ஸ் உங்களை கிளீன் பண்ண ஒத்துக்கணும்…” என்று கூற, மெளனமாக தலையாட்டினான்.

மகா கைகாட்ட, அங்கிருந்த ஆண் நர்ஸ் வந்து கை கட்டுக்களை அவிழ்த்து விட்டான். அதுவரை பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தவன் மகாவின் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்படுவதை அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர்.

இன்னும் இரண்டு ஆண் நர்ஸ்கள் வந்து, ஸ்க்ரீனை இழுத்து விட்டு, அவனை கிளீன் செய்து மாற்று உடையை அணிவித்து விட, சற்று தள்ளி நின்று கொண்டிருந்த ஷ்யாம் எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்.

விஜி செய்ததெல்லாம் தவறுதான்… ஆனால் நிதானம் தவறிய தன்னுடைய பதிலடி இப்படியொரு விளைவை கொடுத்திருக்கிறது என்பதை  அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை.

“டாக்டர்… சாப்பாட்டை கொண்டு வர சொல்லுங்க…” என்று மஹா கேட்க, தயாராக இருந்த சூப்பையும் கஞ்சியையும் கொண்டு வந்தார்கள்.

“இல்ல… இங்க சாப்பிட மாட்டேன்…” விஜி மறுக்க,

“ஏன்?” என்று கேட்டாள் மஹா.

“இதுல விஷம் வெச்சு இருக்காங்க மஹா… உனக்கு தெரியாது…” என்றவன், அவளை அருகில் அழைத்தான். அவன் புறம் குனிந்த மகாவிடம்,

“நைட்டெல்லாம் என்னை எப்படி கொல்றதுன்னு ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க மஹா… எனக்கு இங்க பயமா இருக்கு… நான் பேசறதை கூட அவன் ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்கான் பாரு…” என்று அருகில் நின்றுகொண்டு அவனை பாவமாக பார்த்தபடி இருந்த ஆண் நர்சை காட்டிக் கூற,

“அப்படியா?” என்று கேட்டவள், “நான் இருக்கேன்ல… யாரும் உங்களை எதுவும் பண்ண முடியாது… நான் பார்த்துக்கறேன்… இந்த சாப்பாடு நான் கொண்டு வந்தது… நீங்க சாப்பிடுங்க விஜி…” என்று பரிவாக கூற, ஷ்யாம் கண்ணை சிமிட்டியபடி கண்ணீரை கட்டுப்படுத்தினான்.

விஜய்யின் மனதில் பதிந்த அப்ஷஷன்… வார்த்தைகளாக வெளிவருகிறது!

“அப்படியா? நீ தான் கொண்டு வந்தியா? அப்படீன்னா சாப்பிடறேன்…” என்றவன் ஆர்வமாக சூப் பவுலை வாங்கினான். அவனது செயலிலேயே அவனது பசி தெரிந்தது.

அதே ஆர்வத்தோடு ஸ்பூனை எடுத்தவனால் பிடிக்க முடியவில்லை. இடது கையில் கட்டு இருக்க, வலது கை கட்டப்பட்டு இருந்ததால் ரத்தம் கட்டி, சிவந்து வீங்கியிருந்தது.

அதை பார்த்தவள், அவனிடம் ஸ்பூனை வாங்கி, தானே ஊட்டி விட்டாள்.

ஷ்யாம் கண்களில் நீர் திரள பார்த்திருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!