VNE50(1)
VNE50(1)
50
அன்று முதல் மஹா தினம் வந்தாள். ஷ்யாம் தான் அழைத்துக் கொண்டு வருவான். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு கிளம்பும் போதும் பைரவி முணுமுணுப்பார்.
“எதுக்கு ஷ்யாம் தம்பி இந்த வேண்டாத வேலை? அவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன? நம்ம வேலைய பார்க்கலாமே… உங்க கிட்ட நிறைய கையாடி இருக்கான்னு வேற கார்த்தி சொன்னான்…” என்று கூறியவரை அவன் தான் சமாதானம் செய்ய முயன்றான்.
அவருக்கு அந்த அளவுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற விஷயங்களை கேட்குமளவு பரந்த மனப்பான்மை அவருக்கு கிடையாது என்பது கார்த்தியின் வாதம். தெரிந்து விட்டாலோ கண்டிப்பாக திருமணம் என்பது கனவு தான். முந்தைய வாழ்க்கையை கொண்டு இருவரின் காதலை பணயம் வைக்க வேண்டாம் என்று கண்டிப்பாக தெரிவித்து இருந்தான்.
“இருக்கட்டும் த்தை… பரவால்ல… எனக்கும் கோபம் இருந்துது… ரொம்பவே இருந்துது… ஆனா இப்ப அவன் இருக்க நிலைமையை பார்த்தா மனசு கேக்கலை… கூடவே இருந்தவன்… அவனை எப்படி நான் அப்படியே விட்டுட முடியும்?” என்று இவன் கேட்க,
“அப்படீன்னா நீங்க மட்டும் பாருங்க… இவ எதுக்கு? இது முதல்லையே ஒரு ஆர்வ கோளாறு… உங்களுக்கு தெரியாது…” என்றவரை சிரித்தபடி பார்த்தான்.
“நல்லாவே தெரியும்ன்னு சொன்னா உங்க மக என்னை ஒரு வழி பண்ணிடுவா…” என்றவனை, பார்த்து சிரித்தவர்,
“இல்ல தம்பி… கல்யாண நேரத்துல அங்கயும் இங்கயும் உங்களை யாராவது பார்த்தா சரி வராது… இன்னும் மூணு வாரம் கூட இல்ல… அதான் சொன்னேன்…” என்று அவர் கூற, புன்னகைத்துக் கொண்டானே தவிர, அவளை அழைத்து போவதை மாற்றவில்லை.
காலையில் விஜியை பார்த்துவிட்டு, அவனுக்கு தேவையானவற்றை கவனித்துவிட்டு, அதன் பின் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். உடன் ஷ்யாம் எப்போதும் இருந்தான். அவளை தனியாக விஜியை பார்க்க எப்போதும் அனுமதிக்கவில்லை. என்ன செய்வதானாலும் நான் உன்னுடனே தான் இருப்பேன் என்பது போல தான் இருந்தான்.
அவனது வேலைகளை ஒதுக்கி வைத்துக் கொண்டான். முடிந்த போதெல்லாம் விஜய்யோடு இருக்க முயன்றான். அவன் என்ன மனநிலையில் இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவனை வேறு எப்படி வேண்டுமானாலும் அடித்து இருக்கலாம். மஹா சொன்னது போல கொன்று இருந்தால் கூட அது அதோடு முடிந்து இருக்கும் என்ற குற்ற உணர்வு அவனை வாட்டியது.
ஆனால் அதை அவன் வெளிகாட்டிக் கொள்ளவே இல்லை.
ஷ்யாமின் பண பலமும் படை பலமும் போலீஸ் கேசை ஒன்றுமில்லாமல் செய்திருந்தது. மீடியாவையும் மொத்தமாக மௌனமாக்கியிருந்தான். யாரும் இந்த சம்பவத்தை பற்றி பேசாதவாறு செய்திருந்தான். ஆனால் விஜியின் மனநிலையை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை. நடுவில் இருந்த விஜய்யை தவிர்த்து பார்த்தால் எட்டு வருடமாக தனக்காக உழைத்தவனை நினைத்து அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. விஜி ஷ்யாமை மிரட்ட வீடியோ எடுத்து வைத்ததெல்லாம் நினைவிருந்தாலும், அவனது இப்போதைய நிலை மட்டும் தான் அவனை வெகுவாக உறுத்திக் கொண்டிருந்தது.
விஜி இந்தளவு பலகீனமான மனதை கொண்டிருப்பான் என்று ஷ்யாம் கனவிலும் நினைக்கவில்லை.
ஆனால் எவ்வளவுதான் அவனுக்கு விஜி மேல் பரிதாபம் எழுந்தாலும் மஹா அவனை பார்ப்பதில் பெரிதாக உடன்பாடில்லை. சொல்லப் போனால் எரிச்சலாகக் கூட இருந்தது.
அவனை சோதித்த மருத்துவர் கூறியது நினைவுக்கு வந்தது.
“நீங்க ப்ராபர்டீசை எழுதி வாங்கினதுல மனசளவுல ரொம்ப பெரிய அடி வாங்கி இருக்கணும் பாஸ்… ரொம்ப பயந்து, ரொம்ப ஸ்ட்ரெஸ் அதிகமாகி இருக்கணும்… அதோட வெளிப்பாடு தான் உங்களை மிரட்ட அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கார். ஆனா இது ஒரு நாள்ல எடுத்த முடிவா இருக்காது… ஏன்னா அந்த பிக் எடுக்கப்பட்ட காலத்தை வெச்சு பார்க்கும் போது ரொம்பவுமே ப்ளான் பண்ணி இருக்காருன்னு தெரியுது…
அதோட உங்களை ஏமாத்தறோம்னு குற்ற உணர்வும் வேற ரொம்ப நாளா இருந்து இருக்கணும்… தன்னோட இடத்தை தக்க வைக்க முடியலையேன்னு ஒரு ஸ்ட்ரெஸ். அவர் ஆசைப்பட்ட பொண்ணை அடைய முடியலைங்கற தவிப்பு வேற… தப்பு தப்பா யோசிக்க வெச்சுருக்கு…
எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி அன்னைக்கு நடந்த விஷயம்… எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ்ல முதல் கட்டமா மூளை செலெக்ட்டிவா உங்களை மறந்துச்சு… தனக்கு எதுவுமே நியாபகம் இல்லைன்னு இன்னொரு ஸ்ட்ரெஸ்… எல்லாமா சேர்ந்து மொத்தமா டிஸ்ஓரியன்ட் ஆகிட்டார்…”
மெளனமாக அவர் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவன்,
“இனிமே விஜி இப்படிதானா சாரதி?” என்று கேட்க,
“இது ரொம்ப ஷார்ட் லிவ்ட் தான் பாஸ்… அந்தளவுக்கு அவரோட மனசு வீக் கிடையாது… எப்ப வேணும்னாலும் சரியாக சான்ஸ் இருக்கு… ஆனா மனசு அமைதியா இருக்கணும்… நல்ல தூக்கம் வேணும்… அதை நாங்க பார்த்துக்கறோம் பாஸ்…” எனவும், மெளனமாக எழுந்து கொண்டான்.
இப்போதைக்கு அவனது மனதுக்கு அமைதியை தருவது மஹாவின் அருகாமையா? அதை ஷ்யாமால் ஏற்க முடியுமா? ரொம்பவுமே முரண்டியது. அவனிடம் பேசும் போதும், உணவு மருந்து கொடுக்கும் போதும், சிறு சிறு உதவிகள் செய்யும் போதும், ஷ்யாம் தடுக்கவில்லை என்றாலும் உள்ளுக்குள் காயப்பட்டுப் போனான்.
அவனது இந்த காயமெல்லாம் மஹா அவனுடன் இணக்கமாக இருந்து இருந்தால் கண்டிப்பாக தோன்றியிருக்காது. ஆனால் அவனை வருத்தி விட்டு, விஜிக்கு ஆறுதலாக இருக்கிறேன் பேர்வழி என்று ஷ்யாமை முற்றிலும் தவிர்த்தது தான் அவனது இந்த எரிச்சலுக்கு காரணமாகி இருந்தது.
ஆனால் மஹா மேல் எரிச்சல் வந்தாலும் விஜியை நினைத்து பரிதாபம் தான் பட முடிந்தது.
அவன் தான் அடித்ததும்… அவனே தான் இப்போது வருந்துவதும். அடித்த அடியில் இறந்து போயிருந்தால் கூட இத்தனை வருத்தம் இவனுக்கு இருந்திருக்காது. ஆனால் யார் முன் கம்பீரமாக இருக்க ஆசைப்பட்டானோ அந்த மஹாவின் முன் படுக்கையில் மலம் கழித்த நிலையில் இருந்தவனை பார்க்க ஷ்யாமால் முடியவில்லை.
அவன் எந்தளவு தனக்கு துரோகம் புரிந்தான் என்பது தெரிந்தது தான். தனக்கு போதை மருந்தை சௌஜன்யாவை வைத்து அவனுக்கு கொடுக்க வைத்தானா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. இருவரும் எப்படி கூட்டு சேர்ந்தனர் என்பதும் இன்று வரை ஷ்யாமுக்கு புரியவில்லை. ஆனாலும் அவனது நிலையை நினைத்து வருந்தினான்.
விஜி சரியாக வேண்டும் என்று உண்மையாக நினைத்தான். அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தான்.
இன்டர்ன்ஷிப்பில் அதிகம் விடுமுறை அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மஹா விடுமுறை எடுக்கவெல்லாம் முனையவில்லை. திருமணத்துக்காக வேறு விடுமுறை எடுக்க வேண்டுமே… அவனுக்காக நேரம் ஒதுக்கினாள். அவ்வளவே! ஆனால் உண்மையாக ஒதுக்கினாள். பரிதாபத்தை காட்டாமல் பரிவை காட்டினாள்.
கடைசி மூன்று மாத இன்டர்ன்ஷிப்புக்கு ஏதேனும் கிராமம் செல்ல வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது. ஆனால் இனி முடியுமா என்பது தெரியவில்லை. கல்லூரியில் எப்படி ஒதுக்குகிறார்களோ அப்படி செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.
டிஸ்ஓரியன்ட்டேஷன் படிப்படியாக சரியாகிக் கொண்டிருந்தது. அவனது மனநிலையில் மெதுவான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. மனநல மருத்துவர்கள் முழுமையாக அவனது பொறுப்பை எடுத்துக் கொண்டனர். அனைத்துக்கும் வைத்தியம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவனது தாய் அங்கேயே தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருந்தான் ஷ்யாம். நீலாங்கரை வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையும் நடந்து கொண்டிருந்தது.
பத்து நாட்கள் போன நிலையில், அன்று காலை வந்த போதே விழித்திருந்தான் விஜய். இப்போதெல்லாம் குளறல் குறைந்து இருந்தது. கண்கள் ரொம்பவும் அலைபாய வில்லை. ஆனால் ஐ டூ ஐ காண்டாக்ட் என்பது இன்னமும் வரவில்லை. பேசும் போது அங்கும் இங்கும் பார்த்தபடியே இருப்பது இப்போதைய வழக்கமாகி இருந்தது.
ஆனால் யாரோ தனது செயல்களையெல்லாம் ரெக்கார்ட் செய்கிறார்கள் என்ற பிதற்றல் குறைந்து இருந்தது. மெல்ல குணமாகிக் கொண்டிருந்தான்.
மெளனமாக அமர்ந்திருந்தவன், அருகே இருந்த நாற்காலியில் அமைதியாக வந்தமர்ந்த ஷ்யாமை திரும்பிப் பார்க்கவில்லை. சற்று நிலைக்கு வந்தபோதிலிருந்தே பார்ப்பதில்லை. ஷ்யாமை பார்க்கும் போது அவனையும் அறியாமல் மனதுக்குள் ஒரு அச்சம் கவ்விக் கொண்டிருந்தது. அந்த உணர்வு அவனுக்கு பிடிக்காமல் இருந்தது. அதனால் அவனை பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தான்.
“ஹாய்… குட் மார்னிங்…” என்றபடி அருகே வந்த மஹாவை பார்த்துக் கொண்டே இருந்தான், மெல்ல தலையாட்டியபடி!
தினம் வருவான் என்றாலும், விஜியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோபம் என்ற உணர்வு வேறு. இது ஏமாற்றம், ஆற்றாமை அதனோடு சேர்ந்த குற்ற உணர்வு.
விஜி ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த போதெல்லாம் ஷ்யாம் ரொம்பவுமே கலங்கி அமர்ந்திருக்கிறான். அவனது அந்த கலக்கத்தை கண்கூடாக கண்டிருந்தாள். வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டானே தவிர, அவனது இறுக்கமும் கலக்கமும் அவளுக்கு புரிந்து இருந்தது.
இவனால் நம்பிக்கை துரோகத்தை சகிக்க முடிவதில்லை. ஆனால் அப்படி நம்பிக்கை துரோகம் செய்தவனுக்காக கூட வருந்துகின்ற மனம் இருக்கிறது. அந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் தைர்யம் இருக்கிறது. உண்மையாக இருக்கும் பட்சத்தில் உயிரையும் கூட தரும் மனம் எத்தனை பேருக்கு வாய்த்து விடும்?
இவனது இது போன்ற குணங்களால் தான் இவனை விட்டுக் கொடுக்க முடியாமல் மனம் தவிக்கிறதே. அவனது அத்தனை தவறுகள் தெரிந்தாலும் விடவும் முடியாமல், ஒட்டவும் முடியாமல் தவிப்பதும் இதனால் தான்.
மஹாவும் ஷ்யாமுக்கு நம்பிக்கையை தர முயன்று இருக்கிறாள். ஆனால் அவளால் அந்த படங்களையும் வீடியோக்களையும் பார்த்த பிறகு அவளால் அதை அவளுக்கே கொடுத்துக் கொள்ள முடியவில்லை. இதில் எங்கே அவனுக்கு கொடுப்பது? இப்போது வரை அவளால் திருமண ஏற்பாடுகளில் சகஜமாக பங்குக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் ஏக ஆர்பாட்டமாக குடும்பமே இவர்களது திருமணத்தை கொண்டாடி ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்க, இருவருமாக மருத்துவமனையில்!
அதே உணர்வோடு அவனை அடிக்கடி பார்த்தபடியே, விஜியின் வைட்டல்சை செக் செய்து கொண்டிருந்தாள்.
அவளது எண்ணப் போக்கை அறியாதவன், விஜியை பார்த்தபடியே அவனது மனதுக்குள் போராடியபடி இருந்தான்.
விரைவாக அவன் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே அவனது மனதுக்குள்!
துபாயில் திருமணத்திற்கு நகை எடுத்து, ஹைதராபாத்தில் வெட்டிங் கார்ட் செலெக்ட் செய்து, மும்பையில் சிறந்த டிசைனர்களை கொண்டு திருமணத்துக்கான துணிகளை டிசைன் செய்து என்று ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்ய வேண்டும், சிறப்பானதாக கொடுக்க வேண்டும் என்று இரு வீட்டாரும் நினைத்து செய்ய, அதன் ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சியோடு பங்கு கொண்டான் என்றாலும், ஓரத்தில் விஜி உறுத்திக் கொண்டே இருந்தான், மகாவின் செயல்களால் காயப்பட்டுக் கொண்டு தான் இருந்தான்.
அதே உணர்வோடு தான் அங்கும் அமர்ந்திருந்தான். அவனது இயல்பே இந்த பத்து நாட்களில் முற்றிலுமாக தொலைந்து போயிருந்தது. பேச்சு வெகுவாக குறைந்து விட்டிருந்தது.
“என்ன ஷ்யாம்… ஏதோ திங்க் பண்ணிட்டே இருக்க?”
“ம்ம்ம்…” என்று மட்டும் ம்ம்ம் கொட்டியவனை ஆழ்ந்து பார்த்தாள். இப்போதெல்லாம் அவளிடமும் பேச்சை வெகுவாக குறைத்து விட்டிருந்தான். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே எழுந்தவன், அறைக்கு வெளியே போக, அவனை பின்தொடர்ந்தாள், தவிப்பாக! அவளது தவிப்பை பார்த்துக் கொண்டிருந்தான் விஜி.
“ரொம்ப டிஸ்டர்ப்ட்டா தெரியறியே…” மெதுவாக நடந்தவனிடம் பேச்சுக் கொடுத்தாள் மஹா.
“ஹும்ம்ம்…” என்று கசப்பாக புன்னகைத்தவன், “நான் யாரையெல்லாம் ரொம்ப நம்பறேனோ, அவங்கதான் அந்த நம்பிக்கைக்கே அர்த்தமில்லாம பண்ணிடறாங்க…” வார்த்தைகளில் அதே கசப்பு.
“நீ யாரை சொல்ற ஷ்யாம்?” யோசனையாக அவள் கேட்க,
“நீ யாரை நினைக்கற?” என்று கேட்க அவள் மௌனமானாள். அவன் குற்றம் சாட்டுவது அவளைத்தான் என்பதை உணர்ந்து கொண்டாள். அவனது நம்பிக்கையை குலைக்கும் வகையில் என்ன செய்து விட்டோம் என்று யோசித்துப் பார்த்தாள். புரியவில்லை. வேதனையாக இருந்தது.
அவளது மௌனம் அவனை கொதிக்க செய்தது. அதே கொதிப்போடு வார்த்தைகளை விட முடியாது. இருப்பது மருத்துவமனை.
“எதுவா இருந்தாலும் நேரடியா பேசு ஷ்யாம்…”
“உன்னை பொறுத்தவரைக்கும் விஜி நல்லவன்… நான் தான் கெட்டவன் இல்லையா? என்னோட நம்பிக்கையை பாழ் பண்ணி, உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைச்சு, என்னோட மரியாதையை காத்துல பறக்க விட்டு, மிரட்டி உன்னை என்கிட்டே இருந்து பறிக்க நினைச்ச அவன் உத்தமன்… நான் ஆம்பிளை இல்ல, கோழை, முட்டாள்… வரே வாஹ்… எப்படி இப்படி நியாயம் பேசற மஹா?”
“இவன் நல்லவன்னு உன்கிட்ட என்னைக்காவது வாதாடி இருக்கேனா?” விஜி இருந்த திசையை காட்டி அவள் கேட்க, அவன் இப்போது மௌனமாகினான்.
“அப்புறம் ஏன் இந்தளவு அவனை கேர் எடுக்கற? நான் இல்லையா? நான் பார்த்துக்க மாட்டேனா?”
‘வெஜிடேபிள் ஆக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கறேன்’ என்று ஷ்யாம் கூறியது அகஸ்மாத்தாக நினைவுக்கு வந்து தொலைத்தது. அதை ரப்பர் வைத்து அழிக்க முயன்றாள்.
“உன்னையும் என்னையும் நான் பிரிச்சு பார்க்கலை… உன்னோட பாவக்கணக்கு ஏற நான் பார்த்துட்டு இருக்க முடியுமா?”
“எதை நான் மறைச்சு வெச்சேன்? எல்லாமே உனக்கும் தெரியும் தானே மஹா? இப்ப என்ன புதுசா தூங்கி எழுந்தும் நான் பாவம் பண்றேன்னு உனக்கு தெரிஞ்சு போச்சா?”
“எல்லாம் தெரிஞ்சு தான் நானும் உன்னை லவ் பண்ணேன்… ஆனா அதுக்காக எல்லாத்தையும் ஒத்துக்கனுமா? நீ ப்ரூட்டலா பிஹேவ் பண்ணும் போதும் உனக்கு நான் சப்போர்ட் பண்ண முடியுமா ஷ்யாம்?”
“சப்போர்ட் பண்ண வேண்டாம் மகா…” என்றவன், அருகிலிருந்த ஜன்னலோரமாக நின்றான். வெளியே நகரும் குப்பைகளாய் தெரிந்த வாகனங்களின் மேல் கண்களை பதித்தவன்,
“எனக்கு வேற யாரும் வேண்டாம்… ஆனா நான் தப்பே பண்ணாலும் நீ என் கூட இருந்து இருக்கணும்… என் கூட நின்னு நீ பண்ணது தப்புன்னு சொன்னா நான் கேக்காமையா போய்ட போறேன்?”
“இப்பவும் நான் உன் கூடத்தானே இருக்கேன்…” தவிப்பாக அவள் கூற,
“என்னால பீல் பண்ண முடியலையே மஹா…” என்றவனின் குரலில் அத்தனை வலியிருந்தது. “என்னை விட்டுட்டு ரொம்ப தூரமா போன மாதிரி இருக்கு…”
அவனது முகத்தையே பார்த்தபடி நின்று விட்டாள்.
அவளும் அதைதான் நினைத்து இருந்தாள்.
ஆனால் காரணம் என்ன? அந்த படங்கள்… வீடியோ!
அவன் பக்கத்தில் வந்தால், அந்த காட்சிகள் மட்டுமே அவளது கண்களின் முன் தெரிவதை அவனுக்கு எங்கனம் உரைப்பது? அவனது அருகாமை ஒரு வித வெறுப்பை தருவதை அவளால் தவிர்க்கவே முடியவில்லையே.
அவளது காதல் பொய்யில்லை… அவனது காதலும் பொய்யில்லை… காதல் என்பது உடல் கடந்து, உயிர் கடந்த ஆன்ம பந்தம் என்று அவளும் தான் கூறியிருந்தாள்.
ஆனால் அவளால் அந்த உடலையே கடக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை எங்கனம் உரைக்க?
‘கற்புங்கறதும் பியுரிட்டிங்கறதும் உடம்பு சம்பந்தப்பட்டதோ மனசு சம்பந்தப்பட்டதோ கிடையாது… அது ஆன்ம சுத்தி… உன் ஆன்மாவை சுத்தப்படுத்து ஷ்யாம்…’ என்றோ ஒரு நாள் ஷ்யாமிடம் தான் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன…
இது யாருக்கான வார்த்தைகள்?!