50
அன்று முதல் மஹா தினம் வந்தாள். ஷ்யாம் தான் அழைத்துக் கொண்டு வருவான். ஒவ்வொரு நாளும் மருத்துவமனைக்கு கிளம்பும் போதும் பைரவி முணுமுணுப்பார்.
“எதுக்கு ஷ்யாம் தம்பி இந்த வேண்டாத வேலை? அவன் எக்கேடு கெட்டா நமக்கு என்ன? நம்ம வேலைய பார்க்கலாமே… உங்க கிட்ட நிறைய கையாடி இருக்கான்னு வேற கார்த்தி சொன்னான்…” என்று கூறியவரை அவன் தான் சமாதானம் செய்ய முயன்றான்.
அவருக்கு அந்த அளவுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்ற விஷயங்களை கேட்குமளவு பரந்த மனப்பான்மை அவருக்கு கிடையாது என்பது கார்த்தியின் வாதம். தெரிந்து விட்டாலோ கண்டிப்பாக திருமணம் என்பது கனவு தான். முந்தைய வாழ்க்கையை கொண்டு இருவரின் காதலை பணயம் வைக்க வேண்டாம் என்று கண்டிப்பாக தெரிவித்து இருந்தான்.
“இருக்கட்டும் த்தை… பரவால்ல… எனக்கும் கோபம் இருந்துது… ரொம்பவே இருந்துது… ஆனா இப்ப அவன் இருக்க நிலைமையை பார்த்தா மனசு கேக்கலை… கூடவே இருந்தவன்… அவனை எப்படி நான் அப்படியே விட்டுட முடியும்?” என்று இவன் கேட்க,
“அப்படீன்னா நீங்க மட்டும் பாருங்க… இவ எதுக்கு? இது முதல்லையே ஒரு ஆர்வ கோளாறு… உங்களுக்கு தெரியாது…” என்றவரை சிரித்தபடி பார்த்தான்.
“நல்லாவே தெரியும்ன்னு சொன்னா உங்க மக என்னை ஒரு வழி பண்ணிடுவா…” என்றவனை, பார்த்து சிரித்தவர்,
“இல்ல தம்பி… கல்யாண நேரத்துல அங்கயும் இங்கயும் உங்களை யாராவது பார்த்தா சரி வராது… இன்னும் மூணு வாரம் கூட இல்ல… அதான் சொன்னேன்…” என்று அவர் கூற, புன்னகைத்துக் கொண்டானே தவிர, அவளை அழைத்து போவதை மாற்றவில்லை.
காலையில் விஜியை பார்த்துவிட்டு, அவனுக்கு தேவையானவற்றை கவனித்துவிட்டு, அதன் பின் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தாள். உடன் ஷ்யாம் எப்போதும் இருந்தான். அவளை தனியாக விஜியை பார்க்க எப்போதும் அனுமதிக்கவில்லை. என்ன செய்வதானாலும் நான் உன் கூடவே இருப்பேன் என்பது போல தான் இருந்தான்.
அவனது வேலைகளை ஒதுக்கி வைத்துக் கொண்டான். முடிந்த போதெல்லாம் விஜய்யோடு இருக்க முயன்றான். அவன் என்ன மனநிலையில் இருந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. விஜி செய்தது மிகப்பெரிய தவறு தான். ஆனால் அந்த கோபத்தில் தான் செய்தது சரி செய்யவே முடியாத பெரும் தவறல்லவா… அவனை வேறு எப்படி வேண்டுமானாலும் அடித்து இருக்கலாம். மஹா சொன்னது போல கொன்று இருந்தால் கூட அது அதோடு முடிந்து இருக்கும் என்ற குற்ற உணர்வு அவனை வாட்டியது.
ஷ்யாமின் பண பலமும் படை பலமும் போலீஸ் கேசை ஒன்றுமில்லாமல் செய்திருந்தது. மீடியாவையும் மொத்தமாக மௌனமாக்கியிருந்தான். யாரும் இந்த சம்பவத்தை பற்றி பேசாதவாறு செய்திருந்தான். ஆனால் விஜியின் மனநிலையை எப்படி சரி செய்வது என்று புரியவில்லை. நடுவில் இருந்த விஜய்யை தவிர்த்து பார்த்தால் எட்டு வருடமாக தனக்காக உழைத்தவனை நினைத்து அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. விஜி ஷ்யாமை மிரட்ட வீடியோ எடுத்து வைத்ததெல்லாம் நினைவிருந்தாலும், அவனது இப்போதைய நிலை மட்டும் தான் அவனை வெகுவாக உறுத்திக் கொண்டிருந்தது.
விஜி இந்தளவு பலகீனமான மனதை கொண்டிருப்பான் என்று ஷ்யாம் கனவிலும் நினைக்கவில்லை.
அவனை சோதித்த மருத்துவர் கூறியது நினைவுக்கு வந்தது.
“நீங்க ப்ராபர்டீசை எழுதி வாங்கினதுல மனசளவுல ரொம்ப பெரிய அடி வாங்கி இருக்கணும் பாஸ்… ரொம்ப பயந்து, ரொம்ப ஸ்ட்ரெஸ் அதிகமாகி இருக்கணும்… அதோட வெளிப்பாடு தான் உங்களை மிரட்ட அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கார்.
அதோட உங்களை ஏமாத்தறோம்னு குற்ற உணர்வும் வேற ரொம்ப நாளா இருந்து இருக்கணும்… தன்னோட இடத்தை தக்க வைக்க முடியலையேன்னு ஒரு ஸ்ட்ரெஸ். அவர் ஆசைப்பட்ட பொண்ணை அடைய முடியலைங்கற தவிப்பு வேற… தப்பு தப்பா யோசிக்க வெச்சுருக்கு…
எல்லாத்துக்கும் சிகரம் வெச்ச மாதிரி அன்னைக்கு நடந்த விஷயம்… எக்ஸ்ட்ரீம் ஸ்ட்ரெஸ்ல முதல் கட்டமா மூளை செலெக்ட்டிவா உங்களை மறந்துச்சு… தனக்கு எதுவுமே நியாபகம் இல்லைன்னு இன்னொரு ஸ்ட்ரெஸ்… எல்லாமா சேர்ந்து மொத்தமா டிஸ்ஓரியன்ட் ஆகிட்டார்…”
மெளனமாக அவர் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தவன்,
“இனிமே விஜியை மீட்க முடியாதா டாக்டர்?” என்று கேட்க,
“ஒய் நாட்? இது ரொம்ப ஷார்ட் லிவ்ட் தான் பாஸ்… அந்தளவுக்கு அவரோட மனசு வீக் கிடையாது… எப்ப வேணும்னாலும் சரியாக சான்ஸ் இருக்கு… ஆனா மனசு அமைதியா இருக்கணும்… நல்ல தூக்கம் வேணும்… அதை நாங்க பார்த்துக்கறோம் பாஸ்…” எனவும், மெளனமாக எழுந்து கொண்டான்.
இப்போதைக்கு அவனது மனதுக்கு அமைதியை தருவது மஹாவின் அருகாமை. வேறென்ன சொல்ல?
அவனை பார்க்கவே கூடாது என்று பேயாட்டம் போட்டவன், இன்று பரிவாக அவனோடு உரையாடுவதை மெளனமாக அங்கீகரித்தபடி இருந்தான்.
ஷ்யாம் தான் அடித்ததும்… அவனே தான் இப்போது வருந்துவதும். தவறு செய்த குழந்தையை அடித்து விட்டு, அதன் பின் அழும் தாயின் மனநிலையில் இருந்தான். அடித்த அடியில் இறந்து போயிருந்தால் கூட இத்தனை வருத்தம் இவனுக்கு இருந்திருக்காது. ஆனால் யார் முன் கம்பீரமாக இருக்க ஆசைப்பட்டானோ அந்த மஹாவின் முன் படுக்கையில் மலம் கழித்த நிலையில் இருந்தவனை பார்க்க ஷ்யாமால் முடியவில்லை.
விஜி சரியாக வேண்டும் என்று உண்மையாக நினைத்தான். அவனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தான்.
இன்டர்ன்ஷிப்பில் அதிகம் விடுமுறை அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மஹா விடுமுறை எடுக்கவெல்லாம் முனையவில்லை. திருமணத்துக்காக வேறு விடுமுறை எடுக்க வேண்டுமே… அவனுக்காக நேரம் ஒதுக்கினாள். அவ்வளவே! ஆனால் உண்மையாக ஒதுக்கினாள். பரிதாபத்தை காட்டாமல் பரிவை காட்டினாள்.
கடைசி மூன்று மாத இன்டர்ன்ஷிப்புக்கு ஏதேனும் கிராமம் செல்ல வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது. ஆனால் இனி முடியுமா என்பது தெரியவில்லை. கல்லூரியில் எப்படி ஒதுக்குகிறார்களோ அப்படி செய்ய வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள்.
டிஸ்ஓரியன்ட்டேஷன் படிப்படியாக சரியாகிக் கொண்டிருந்தது. அவனது மனநிலையில் மெதுவான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. மனநல மருத்துவர்கள் முழுமையாக அவனை டேக் ஓவர் செய்து கொண்டனர். அனைத்துக்கும் வைத்தியம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவனது தாய் அங்கேயே தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருந்தான் ஷ்யாம். நீலாங்கரை வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலையும் நடந்து கொண்டிருந்தது.
பத்து நாட்கள் போன நிலையில், இன்று காலை வந்த போதே விழித்திருந்தான் விஜய். இப்போதெல்லாம் குளறல் குறைந்து இருந்தது. கண்கள் ரொம்பவும் அலைபாய வில்லை. ஆனால் ஐ டூ ஐ காண்டாக்ட் என்பது இன்னமும் வரவில்லை. பேசும் போது அங்கும் இங்கும் பார்த்தபடியே இருப்பது இப்போதைய வழக்கமாகி இருந்தது.
ஆனால் யாரோ தனது செயல்களையெல்லாம் ரெக்கார்ட் செய்கிறார்கள் என்ற பிதற்றல் குறைந்து இருந்தது. மெல்ல குணமாகிக் கொண்டிருந்தான்.
மெளனமாக அமர்ந்திருந்தவன், அருகே இருந்த நாற்காலியில் அமைதியாக வந்தமர்ந்த ஷ்யாமை திரும்பிப் பார்க்கவில்லை. சற்று நிலைக்கு வந்தபோதிலிருந்தே பார்ப்பதில்லை. ஷ்யாமை பார்க்கும் போது அவனையும் அறியாமல் மனதுக்குள் ஒரு அச்சம் கவ்விக் கொண்டிருந்தது. அந்த உணர்வு அவனுக்கு பிடிக்காமல் இருந்தது. அதனால் அவனை பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தான்.
“ஹாய் ப்ரோ… குட் மார்னிங்…” என்றபடி அருகே வந்த மஹாவை பார்த்துக் கொண்டே இருந்தான், மெல்ல தலையாட்டியபடி!
“ஷ்யாம்… ப்ரோக்கு குட் மார்னிங் சொன்னயா?” அவனது கேஸ் ஷீட்டை பார்த்தபடியே ஷ்யாமை வம்புக்கு இழுத்தாள் சிறு சிரிப்போடு.
தினம் வருவான் என்றாலும், விஜியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கோபம் என்ற உணர்வு வேறு. இது ஏமாற்றம், ஆற்றாமை அதனோடு சேர்ந்த குற்ற உணர்வு. அதை புரிந்து கொண்டவள், அவனை அவ்வப்போது இப்படி விஜி முன்பாகவே சீண்டுவாள்.
விஜி ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த போதெல்லாம் ஷ்யாம் ரொம்பவுமே கலங்கி அமர்ந்திருக்கிறான். அவனது கலக்கத்தை கண்டவளுக்கு உள்ளுக்குள் வெகு கலக்கமாக இருக்கும். தோளோடு மெல்ல அணைத்துக் கொள்வாள்.
என்ன மாதிரியான மனிதன் இவன்?
இவனையா ராட்சசன் என்று சொல்கிறார்கள் என்ற ஆற்றாமை அவளுக்குள்ளே நிறைய தோன்றியிருக்கிறது. வெளியில் எத்தனை கொடூரமானவனாக சித்தரிக்கப் படுகிறானோ, உள்ளுக்குள் அத்தனை மென்மையான அவனது மனதை கண்டவளுக்கு சற்று பெருமையாக இருந்தது.
இவன் என்னவன்!
இவனால் நம்பிக்கை துரோகத்தை சகிக்க முடிவதில்லை. ஆனால் அப்படி நம்பிக்கை துரோகம் செய்தவனுக்காக கூட வருந்துகின்ற மனம் இருக்கிறது. அந்த நிலைக்கு தான் மட்டுமே காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளும் தைர்யம் இருக்கிறது. இவன் வெளிப்படையானவன். உண்மையாக இருக்கும் பட்சத்தில் உயிரையும் கூட தரும் மனம் எத்தனை பேருக்கு வாய்த்து விடும்?
இருக்கும் இடத்திற்கு தக்கபடி இவன் மாறிக் கொண்டானே தவிர, அவனது மனம் உயர்வானதுதான் என்று மட்டுமே எண்ணத் தோன்றியது மஹாவுக்கு.
அவனது தூய்மையும், நேர்மையும், உண்மையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வெகு சிலருக்கு தான்.
காதலெனப்படுவதும் நட்பெனப்படுவதும் யாதெனில் அது நம்பிக்கை… துணை… உறுதி… நேர்மை… துணிவு!
அதன் செயல் வெறும் இன்பத்தில் பங்கெடுப்பது மட்டுமல்ல… உற்றவரின் துன்பத்தையும் தனதாக நினைத்து அதில் பங்கு கொள்வது. நானிருக்கிறேன் உனக்காக என்ற நம்பிக்கையை கொடுப்பது. உன்னை நானறிவேன் என்று இணையின் நேர்மையை தான் பறைசாற்றுவது. உனக்காக எதையும் செய்வேன் என்று எப்போதும் துணையிருப்பது. எந்த சூழ்நிலையாக இருப்பினும் உன்னை கைவிட மாட்டேன் என்ற உறுதியை கொடுப்பது. வாழ்க்கையின் கடைசி நொடிகளையும் இருவரும் கைப்பிடித்தவாறு அழகான புன்னகையோடு கடக்க முடியும் என்ற துணிவை கொடுப்பது காதல் மட்டுமல்ல நட்பும் கூடத்தான்!
இவன் தன்னுடைய காதலுக்கு மட்டுமல்ல… நட்புக்கும் உண்மையாக தான் இருந்திருக்கிறான். ஆனால் விதி… இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது போல!
அதே உணர்வோடு அவனை அடிக்கடி பார்த்தபடியே, விஜியின் வைட்டல்சை செக் செய்து கொண்டிருந்தாள்.
அவளது எண்ணப் போக்கை அறியாதவன், விஜியை பார்த்தபடியே அவனது மனதுக்குள் போராடியபடி இருந்தான்.
விரைவாக அவன் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே அவனது மனதுக்குள்!
திருமணத்திற்கு நகை எடுப்பது, வெட்டிங் கார்ட் செலக்ஷன், தாலி உருக்குவது என்று ஒவ்வொன்றிலும் மகிழ்ச்சியோடு பங்கு கொண்டான் என்றாலும், ஓரத்தில் விஜி உறுத்திக் கொண்டே இருந்தான்.
அதே உணர்வோடு தான் அங்கும் அமர்ந்திருந்தான். அவனது இயல்பே இந்த பத்து நாட்களில் முற்றிலுமாக தொலைந்து போயிருந்தது. பேச்சு வெகுவாக குறைந்து விட்டிருந்தது. யோசனை யோசனை யோசனை மட்டுமே!
“ஷ்யாம்ம்ம்ம்….” என்று சலுகையாக அழைத்த காதலியை பார்த்தான். என்ன யோசனையாகவே இருக்கிறாய் என்று கண்களால் உணர்த்தியபடி,
“என்னம்மா ஒரே திங்கிங்? அனுப்புன ராக்கெட் கவுந்து போச்சா?” விஜிக்கு மாத்திரைகளை எடுத்து வைத்தபடி கேட்க,
“ப்ச்…” என்று சலித்துக் கொண்டான்.
“ஏன் இவ்வளவு சலிப்பு?” என்று இவள் கேட்க,
“விஜிக்கு சரியாகிடுமா குல்ஃபி?” கவலையாக கேட்டான், அவனை வைத்தபடியே, அவனுக்கு புரியாது என்றெண்ணிக் கொண்டான் போல!
“அதெல்லாம் ஜம்முன்னு ஆகிடுவாப்ல… அதுக்கு ஏன்டா வயலின் வாசிக்கற?” என்று கேட்க,
“இல்ல மஹா… இவன் என்ன தப்பு பண்ணிருந்தாலும் நான் பண்ணது ரொம்ப தப்பு… நீ சொன்னப்ப எனக்கு புரியல… இப்ப ரொம்ப கஷ்டமா இருக்கு… ஒரு இடத்துல நிற்கவே நிக்காம ஓடிட்டு இருந்தவன். கட்டிட்டு வாடான்னா வெட்டிட்டு வருவான்… ஏன் இப்படி பண்ணான்னு இன்னமும் எனக்கு புரியல… ஆனா நான் இப்படி பண்ணிருக்க கூடாது…” என்று மனம் வருந்தியவனை அவளால் பார்க்க முடியவில்லை.
“முடிஞ்சு போன விஷயத்தை பேசி இப்ப ஒண்ணுமே ஆக போறதில்லைடி குட்டிம்மா… திரும்ப திரும்ப அதையே ரிவைண்ட் பண்ணி பார்க்காத… மனசு கஷ்டமா இருக்கும்… விஜி அண்ணன் சரியாகிடுவாங்க… அவ்வளவுதான்…” மென்மையாக அவனை செல்லமாக அழைத்தபடி காதலோடு அவள் கூற, அதை மௌனமாக அங்கீகரித்தான்.
இருவரும் தன்னைப் பற்றி பேசுவதை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் விஜய்.
உண்மையில் அவனுக்கு நினைவு மீண்டு கொண்டிருந்தது.
ஒருவிதமான ஆழ்ந்த அவமானத்தில் தான் மெளனமாக அவன் அமர்ந்திருந்தான். இருப்பது சுஷ்ருதா என்று தெரியும். தெரிந்தும் அவனால் ஏதும் செய்ய முடியாத நிலை. அதிலும் தன் முன் வந்து அமர்ந்த ஷ்யாமை அவனால் ஏறிட்டு பார்க்க முடியவில்லை. விரும்பவில்லை. கோபம் எல்லை மீறி வந்தாலும் அவனால் எழுந்து ஓடவெல்லாம் முடியாது. அடிக்கவும் முடியாது. கை கால்கள் வலுவிழந்த நிலையில் ஷ்யாமை எதுவும் செய்ய முடியவில்லையே என்ற கோபம் உள்ளுர கொதிக்கத்தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் ஷ்யாமின் வருத்தம் அவனை ஏதோ செய்தது. தான் எத்தனை அவனை ஏமாற்றி இருந்தாலும், அவனது அந்தரங்கத்தை பகிர்ந்து இருந்தாலும், அதற்கு பின் ஷ்யாம் அவ்வளவு கோபமாக இருந்ததை விஜியும் உணர்ந்தே இருந்தான். ஆனாலும் தனக்காக அவன் வருந்துவதை கண்ட போது மனது ஏதோ அழுத்தியது. இந்த வருத்தத்திற்கு தான் தகுதியானவன் தானா?
அதோடு மஹா அத்தனை பரிவாக அவனுக்கு உணவை தந்து மாத்திரையை தந்து, அவனோடு உரையாடி, அவனையும் உரையாடலில் இழுக்க முயல்வது, உண்மையிலேயே ஆடி விட்டான்.
எத்தனை தூய்மையானவள் இவள்!
இந்த தூய்மையும் உண்மையும் எளிமையும் தானே ஆனானப்பட்ட ஷ்யாமை அவளோடு கட்டிப் போட்டிருக்கிறது.
எத்தனைக்கு எத்தனை அவனது மனம் எதையோ தேடியது என்பதை விஜய் அறிவான். எத்தனை பெண்களிடம் படுக்கையை பகிர்ந்தாலும் மனதை பகிராமல் இருந்த ரகசியமும் அவனுக்கு தெரியும். அவனது மனம் தேடிய ஒன்று அவனுக்கு அப்போதெல்லாம் கிடைக்கவே இல்லை.
அது இப்போது கிடைத்திருக்கிறது.
அதுதான் தூய்மையான மனது!
இதுவா இல்லை அதுவா என்ற அவனது தேடல் இப்போது முற்று பெற்று இருக்கிறது.
மஹாவின் அந்த தூய்மையில் ஷ்யாம் மட்டுமல்ல… விஜியின் அழுக்கும் அழுக்காறும் கூட அடித்து செல்லப்படுவது போல ஒரு பிரம்மை!
அந்த தூய்மைக்கு தான் ஈடு கிடையாது என்று எண்ணிக் கொண்டான்.
செடியில் பறித்த வாசனை மலர் கடவுளுக்கு அர்ப்பனமாவதும் விலைமகளை அலங்கரிப்பதும் அந்த மலரின் கையில் இல்லை. அது அத்தனையும் தாண்டிய ஒரு சுழற்சி விதி.
இவருக்கு இவர் தான் என்று எழுதி வைத்த ஒன்றை யார் மாற்ற முடியும்?
அவனது எண்ணப் போக்கு இப்படியாக இருக்க,
இன்னமும் ஷ்யாமின் முகம் தெளிவடையாமல் இருப்பதை கண்ட மஹா, விஜியின் பைலை பார்த்தபடியே, நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டு,
“ஷ்யாம்ம்ம்….” என்றழைக்க, திரும்பி அவளைப் பார்த்தவன், என்னவென்று புருவத்தை உயர்த்தி,
“என்னடி?” என்று கேட்க,
“எனக்கு சூயிங் கம் வேணுமே… உன்ட்ட இருக்கா?” நெற்றியை தேய்த்து விட்டபடி சற்றே இறங்கிய வெட்க வாடை வீசிய குரலில் கேட்க, ஷ்யாமின் முகம் குபீரென்று மலர்ந்தது.
விஜியோ அவன் சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சனைகளும் பின்னுக்கு அடித்து செல்லப்பட்டன.
“என்னடி இன்னைக்கு நீயே கேக்கற? எந்த பக்கம் மழை வருதுன்னு பாக்கறேன்…” சிரித்தபடி ஜன்னலை பார்ப்பது போல பாசாங்கு செய்ய,
“இருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லு…”
“சாரி ஸ்டாக் இல்லடி…” என்று கண்ணடிக்க, அவள் சுற்றிலும் பார்த்தாள். மருத்துவர்கள் அவர்களது வேலையை பார்த்துக் கொண்டிருக்க, விஜய் மெளனமாக அமர்ந்து கொண்டு உணவை உண்டு கொண்டிருக்க, இவனானால் இபப்டி வாரிக் கொண்டிருப்பதை சிரிப்போடு பார்த்தவள்,
“மகனே… இன்னைக்கு நீ செத்த….” என்றாள், புன்னகையோடு!
“அப்படீங்கற?” என்றவனை,
“ஆமாங்கறேன்…” என்றவளுக்கு முகம் விகசித்தது.
இருவரின் அன்யோனியத்தை கண்டவனுக்கு, தன்னுடைய நிலை இன்னமும் பூதாகரமாக தோன்ற, கண்கள் கலங்க ஆரம்பித்தது.
விஜியின் கலங்கிய முகத்தை கண்டவள்,
“விஜிண்ணா…” என்று அவனது தோளை தட்டினாள்.
அவன் அதற்கும் பேசவில்லை.
மெளனமாகவே இருந்தான். கண்கள் மட்டும் கலங்கியபடி இருந்தது.
“விஜி…” ஷ்யாமும் அழைக்க, அதற்கும் அவன் பதில் பேசவில்லை.
“மனோஜ் கம் ஹியர்…” அவனை தொடர்ந்து கொண்டிருந்த மருத்துவரை ஷ்யாம் அழைக்க, கை காட்டி தடுத்தான் விஜி.
ஷ்யாம் புரியாமல் பார்க்க, மகாவுக்கு புரிந்தது. விஜி தன்னுடைய நினைவுகளை மீட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை!
விஜியின் கண்கள் நிலையாக இருந்தது.
“வேண்டாம் பாஸ்…” என்றான் சற்று தெளிவாக!
Leave a Reply