VNE61(2)

VNE61(2)

இப்படி தன் மேல் உயிராக இருப்பவன், சௌஜன்யாவுடன் இருக்கிறான் என்பதை ஸ்ரீராம் கூறியபோது அவளால் நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக இருக்காது என்று வெகு உறுதியாக நம்பினாள். அதை அவனிடமும் கூறினாள். ஆனால் வாட்ஸ்அப்பில் படங்களை பார்த்தபோது காலுக்கு கீழே நிலம் நழுவியது போன்ற உணர்வு! பழைய படங்களில் காட்டப்படுவது போல, வீசும் காற்று நின்றதை போல, கடல் அலை ஒய்ந்து விட்டதை போல… என்று பலவிதமான எண்ணங்கள்.

அதிர்ச்சி… அதிர்ச்சி… மிகப்பெரிய அதிர்ச்சி மட்டுமே!

பேச முடியவில்லை… யோசிக்க முடியவில்லை… அருகில் யார் இருக்கிறார்கள் என்பதும் கூட தெரியவில்லை! அந்த வெறுமைக்கு அளவுகோலில்லை!

கண்கள் கலங்கியது… ஆனாலும் மனம் தைரியம் கூறியது! கண்டிப்பாக இது பொய்யாகத்தான் இருக்குமென்று! வேறு எதாவது காரணம் இருக்கலாம். அல்லது ஸ்ரீராம் பொய் சொல்லக் கூடும் என்று மனதின் ஓரத்தில் ரகசியமாக கூட நம்பினாள்.

அறைக்கு வெளியே காத்திருந்த போது எத்தனை முறை இறந்து பிழைத்தாள் என்பது கணக்கே இல்லை. ஆனால் ஸ்ரீராம் சொன்னது உண்மையான போது அவளது நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது. சௌஜன்யாவை பார்த்த போது அத்தனை ஆத்திரமாக வந்தது.

எவ்வளவோ ஆசையாக கனவு கண்டு வைத்திருக்க, அத்தனையும் ஒற்றை நொடியில் சீட்டுக் கட்டைப் போல சரிந்ததை அவளால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. ஷ்யாமை திரும்பிப் பார்க்கவும் பிடிக்கவில்லை. இனி வாழ்நாள் முழுவதுமே பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு தான் கால் போன போக்கில் நடந்தாள்.

அவன் வாங்கித் தந்த காரை பார்க்கும் போது மிளகாயை அரைத்து உடலில் பூசியதை போல இருந்தது.

இந்த வெறுமையை என்னவென்று சொல்வது?

காத்திருந்து கர்ப்பம் தரித்தவள், குழந்தையை காணும் முன், கர்ப்பம் கலைந்ததை போல…

எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாமல் கழிக்கும் முதியவளின் இரவை போல…

உயிர் போகும் வலி…

ஆனால் பேச முடியவில்லை…

இது அத்தனை எளிதான வெறுமையில்லை… அவன் என்ற பிம்பம் கலைந்த அந்த வெறுமை!

அந்த வெறுமை அத்தனையையும் வெறுக்க சொன்னது… பெற்றவர் உற்றவர் என்று அனைத்தையும் மறக்க சொன்னது… நியாய அநியாயங்கள் பின்னுக்கு சென்றது!

எதுவுமே வேண்டாமென நடந்தவள், மெளனமாக மின்சார ரயிலில் ஏறி அமர்ந்தாள். கையில் பணமில்லை… செக்கிங் செய்தால் கொடுக்க டிக்கட்டுமில்லை… இரண்டு மாநில சினிமா துறையை ஆள்பவன், அவனது மனைவி வித் அவுட்டில் பயணிக்கிறாள்!

நினைத்த போதே அவளுக்குள் வெறுமையான கசப்பான புன்னகை, இதழ்கடையோரம்!

எந்த ஸ்டேஷனில் இறங்குவது? என்ன செய்வது என்றெல்லாம் தோன்றவில்லை. ரயில் எங்குமே நிற்காமல் போய் கொண்டே இருக்காதா என்று தோன்றியது. ஒரு நான்கைந்து முறை பீச்சிலிருந்து தாம்பரம் போனது அந்த ரயில்.

அவள் அசையாமல் வெறுமையாக அமர்ந்திருந்தாள் அதே இடத்தில்!

கண்கள் அவ்வபோது கலங்கிக் கொண்டிருந்தது. அறிவு செயல் இழந்து இருந்தது. படித்த படிப்பும் நினைவில்லை… பார்க்கும் வேலையும் நினைவில்லை… பசியில்லை… தாகமில்லை… எதுவும் தோன்றவில்லை…

இறங்க வேண்டும் என்று தோன்றியது. எந்த இடமென்று தெரியவில்லை.

இறங்கினாள்… நடந்தாள்… மனம் போன போக்கில்… கடைசியாக வந்து சேர்ந்த இடம் வடபழனி முருகன் கோவில்!

எப்போதும் வரும் கோவில் என்பதாலோ என்னவோ, அவளறியாமல் வந்திருந்தாள்!

வந்தவள், ரொம்ப நேரம் முருகனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்!

இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அடுத்து ஒரு நொடி அங்கு நின்றிருந்தால் கூட அவளது இதயம் வெடித்திருக்க கூடுமே!

அதிலும் அத்தனை அலட்சியமாக சௌஜன்யா… அவளது பார்வையில் என்ன இருந்தது? பார்த்தாயா… உன்னை வென்று விட்டேன் என்றா?

அவள் வெற்றி பெற்றால்? இவள் யார்? எதற்காக இந்த திருமணம்? எதற்காக இத்தனை ஏமாற்று நாடங்கங்கள்?

மனம் அதன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

இரவு வெகு நேரமாகியதும் தெரியவில்லை… கோவில் நடை மூடப் போவதும் தெரியவில்லை…

கோவில் பாதுகாவலர், “ம்மா… கோவில் நடைய சாத்த போறோம்…” என்று இவளது தோற்றம் கண்டு தயங்க, மெளனமாக வெளியேறி பக்கவாட்டில் அமர்ந்து கொண்டாள்.

எதற்கும் பதிலில்லை!

சப்தம் கேட்டு திரும்பினாள்… அவளையே பார்த்தபடி ஷ்யாம்!

வெகுவான ஒய்ந்த தோற்றம்… அத்தனை சோர்வாக இருந்தான்!

கண்களில் நீரோடு அவனை பார்த்தாள்!

ஓடிப்போய் அவனை கட்டிக் கொண்டு விடு என்று மனம் அவளை தள்ளிவிட்டது… ஆனால் கால்களில் குண்டை கட்டி விட்டதை போல, அசைவை மறந்து இருந்தன அவளது கால்கள்!

ஒரு வழியாக அத்தனையும் உடைத்து நொறுக்கியபடி அவனை நோக்கி போக முயன்றவளின் பார்வை வட்டத்தில் விழுந்தாள் சௌஜன்யா.

அவளை பார்க்கும் போதே அத்தனை ஆத்திரம் கிளம்பியது. இவளால் தானே? இவள் தானே காரணம் என்று ஒரு மனம் கூறினாலும், ஒரு கை ஓசை கேட்குமா என்று கேட்டது இன்னொரு மனம். ஷ்யாம் ஒத்துழைக்காவிட்டால் இவளுக்கு என்ன வேலை என்று வேறு கேட்டு அவளது மனதை பியித்து எரித்தது மனசாட்சி!

ஆனால் இவளை அப்படியே விட்டு விடவும் முடியவில்லை. இவள் தன் வாழ்நாளில் மறக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டாள். எத்தனை தைரியம் இருந்தால் சவால் விட்டிருப்பாள். அன்றைக்கே அரை விட்டிருந்தால், அவனுக்கு அருகில் நெருங்கியிருப்பாளா என்று கேட்டது மனம்!

ஆனால் எத்தனை நாள் இவனை இப்படியே கண்காணிக்க முடியும்?அது அசிங்கமல்லவா! தன்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்திய சௌஜன்யாவை எரிப்பதை போல பார்த்தவள்,

பளாரென அடித்தாள், அவளது கன்னத்தில்!

அத்தனை ஆத்திரம்… ஆத்திரம் கண்ணை மறைத்தது!

****

“இல்ல… நான் வர மாட்டேன்…” என்றவள், எதிர் பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.

அதிர்ந்து பார்த்த கார்த்திக், ஷ்யாமை பார்க்க, அவனது முகம் உணர்வை தொலைத்து இருந்தது. சௌஜன்யாவை அவள் அடித்தது அவனது தன்மானத்தின் மீது விழுந்த அடி அல்லவா!

தவறே செய்யாமல் தண்டனை கிடைப்பது என்பது?!

அவசரமாக கார்த்திக் அவனது தங்கை பின்னே ஓடினான்.

“ஏய் மஹா… என்ன லூசா நீ?” கோபமாக அவளது கையை பிடித்து நிறுத்த,, அவனது கையை உதறியவள்,

“ஆமா லூசு தான் ண்ணா… உனக்கு நான் முக்கியமில்லாம போயிட்டேன்ல…” என்று பரிதாபமாக மஹா கேட்க, அவளை அணைத்துக் கொண்டான்.

“டேய் குட்டிம்மா… நீ எனக்கு முக்கியம் தான். ஆனா அவசரகுடுக்கை மாதிரி நீ பண்றதை பாக்கறப்ப கோபமா வருதுடா…” என்று கார்த்திக் அக்யாயானப்பட,

“எனக்கு யாரும் வேண்டா ண்ணா… என்னை விட்டுடு…” என்று அவனை மீறி போக முயல,

“சரி எதுக்காக இப்படி குதிக்கற… அதையாவது சொல்லேன்…” கார்த்திக் முயன்றளவு அவளை மடை மாற்ற பேசினான்.

“இந்த வீணா போனவனை கட்டினேன் பாரு… நான் பைத்தியமா அலைய வேண்டியதுதான்…” கோபமாக கொதித்தாள். அடக்கி வைத்திருந்த லாவா எல்லாம் எரிமலை குழம்பாக வெளியே வந்தது.

“வார்த்தைய அடக்கு பாப்பா…என்ன பேச்சு பேசற?” என்ற கார்த்திக்கை,

“எதுக்கு அடக்கணும்? அவ்வளவு நம்பினேன்… எவ்வளவு தெரியுமா லவ் பண்ணேன்?அதுவும் இன்னைக்கு நூறாவது நாள் ண்ணா… அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு எவ்வளவோ ப்ளான் பண்ணி… ச்சே… வெறுத்து போச்சு… வேண்டாம்… போதும்… வாழ்ந்ததும் போதும்.. பட்டதும் போதும்..” மனம் வெறுத்து கூறியவளை உணர்வில்லாமல் பார்த்தான் ஷ்யாம்.

“சத்தியமா எதையும் என்னால மறக்க முடியல… ஆனா இவனுக்காக கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டேன்… இவனை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு… ஆனா இவன்…” கோபத்தில் கொதித்தாள். அவளை பாவமாக பார்த்தான் கார்த்திக்.

“மாமா கூட கேட்டாங்க… கல்யாணத்தை நிறுத்திட்டடான்னு? ஆனா அப்படி நின்னுட்டா இவன் கஷ்டப்படுவான்னு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்… ஆனா இவனுக்கு…” என்று பல்லைக் கடித்தவளுக்கு கண்ணீர் கொட்டியது.

“என்னை எதால அடிச்சுக்கறதுன்னே தெரியல… என்னத்த கண்டு இவனை லவ் பண்ணி தொலைச்சேன்னு தெரியல… போகவும் முடியல… இருக்கவும் முடியல…” என்றவள் உடைந்து அழ, அவளை உணர்வற்ற பார்வை பார்த்தான் ஷ்யாம். முதலிலேயே அவள் அவனை கொன்றுவிட்டாளே, இனி அவனை அடித்து என்ன புண்ணியம். அது வெறும் ஜடமல்லவா!

“அந்த வீடியோவை மறந்து தொலைக்கனும்ன்னு நானும் என்னன்னெவோ ட்ரை பண்ணேன் ண்ணா… ஈவன் குடிக்கலாம்ன்னு கூட நினைச்சேன்… குடிச்சா எல்லாம் மறந்துடுமா கார்த்தி அண்ணா?” பாவமாக தேம்பியபடி கேட்ட தங்கையை அணைத்துக் கொண்டான்.

“லூசே…” என்றவனுக்கும் கண்கள் கலங்கியது.

“இப்ப இதுக்கும் சேர்த்து குடிக்க போறேன் ண்ணா… அப்புறம் எல்லாத்தையும் மறந்துடலாம்… அப்புறம் இவன் யார் கூட போனா என்னன்னு நானும் இந்த கேவலத்துக்குள்ள மெர்ஜ் ஆகிடுவேன்… அதை தான இவன் எதிர்பார்க்கறான்…” என்று அழுகையோடு அவள் கூற,

“இப்படி பேசாத பாப்பா…” என்றான் கார்த்திக்.

“பேசுவேன்… ஏன்னா அவ்வளவு ஹர்ட் ஆகிருக்கேன்… என் லைப்பே போச்சு கார்த்தி ண்ணா… எப்படி பேசாம இருக்க முடியும்?” என்று கேட்க,

“வேண்டாம் பாப்பா… தப்பு டா இது…”

“பைரவி எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்தது… எல்லாம் நானும் குடிச்சு சீரழிய தான்… இல்லையா?” என்று கேட்டவளை முறைத்தான் கார்த்திக்.

“பாப்பா நிதானமா பேசு…” சற்று கோபமாக கார்த்திக் கூற,

“ஏன்? ஒரே ரூம்ல அவளோட இருந்து இருக்கானே…. அதை பாத்ததுக்கு அப்புறமும் எப்படி நிதானமா இருக்க சொல்ற?”

“ஏன் பாப்பா? உனக்கு பொறுமைன்னு ஒன்னு இருக்கவே இருக்காதா? அந்த ரூம்ல இவங்களை மட்டும் தான் பார்த்தியா? நான் உன் கண்ணுக்கு தெரியலையா? இல்லைன்னா டைரக்டர் மதி உனக்கு தெரியலையா?” என்று கேட்க, அதிர்ந்து குழப்பமாக பார்த்தாள்.

“பொய் சொல்லாத கார்த்தி ண்ணா…”

“நான் எதுக்கு பொய் சொல்றேன்? வேணும்னா அந்த ஹோட்டல் வீடியோ புட்டேஜ் எடுத்து செக் பண்ணு. நாங்க உள்ள இருக்கமா இல்லையான்னு தெரிஞ்சுடாதா?” என்று கேட்க,

“கார்த்திக்… ஸ்டாப் இட்… அவ கிட்ட இதையெல்லாம் சொல்லித்தான் என்னை ப்ரூவ் பண்ணனுமா?” ஷ்யாம் நிதானமாய் கேட்டாலும் அதில் மறைந்திருந்த கசப்பை கார்த்திக் அறிந்திருந்தான்.

மௌனமாய் கணவனை பார்த்தாள்.

அத்தனை குறும்பாக, சில்மிஷமாக எப்போதும் விளையாட்டாக இருந்த அவனது கண்கள், இப்போது உயிர்ப்பே இல்லாத ஜடமாய்!

வலித்தது!

“எந்த நிலைமைல யார் சொன்னாலும் நம்பியிருக்கக் கூடாது கார்த்திக். நம்பிட்டா… அதுவே எனக்கு ரொம்ப பெரிய அடி. அப்படி நம்பி, என்னை வந்து வேவு பார்த்து… அதுக்கப்புறம் விட்டுட்டு போய், என்னை அசிங்கப்படுத்தி, இப்ப அந்த பொண்ணை அடிச்சு, என்னை இன்னும் அசிங்கப்படுத்தி… ச்சே… போதும் கார்த்திக்…” என்று காயப்பட்ட குரலில் கூற, மெளனமாக அவனை பார்த்தாள்.

“ஒரே ரூம்ல இருந்தா தப்பு பண்ணிதான் இருக்கனும்ன்னு சொல்றாளே உன் தங்கச்சி… ஒரே ரூம்ல தான் நூறு நாளா என் கூட இருந்தா…” என்றவனுக்கு அதற்கும் மேல் சொல்ல முடியவில்லை. தொண்டையடைத்தது.

ஆனால் அவன் சொல்ல வந்ததை அவள் புரிந்து கொண்டாள். நெஞ்சம் வலிப்பது போலிருந்தது.

தான் செய்தது தவறா?

புரியவில்லை. என்ன செய்வதென தெரியவில்லை.

“கல்யாணம் ஆன் நாள்ல இருந்து விதவிதமா என்னை என்னன்னெவோ கேட்டு இருக்கா. மனசு வலிக்கும். ஆனாலும் தப்பு என் பக்கம் இருந்ததால எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். இவளா மாறணும்ன்னு விட்டுக் கொடுத்தேன் கார்த்திக். ஆனா இன்னைக்கு நடந்தது, வேற லெவல்…” என்றவன் நிறுத்தி எங்கோ பார்த்தான். அதுவரை அவளுடன் நேராக பேசவே இல்லை என்பதை உணர்ந்தாள்.

“நம்பிக்கை இல்லாத ஒரு ரிலேஷன்ஷிப்ப வலுக்கட்டாயமா பிடிச்சு வெச்சுட்டு இருக்கேன்ல… நான் முட்டாள்… வெளிய என்னவா இருந்து என்ன யூஸ்டா? நான் பர்சனல் லைப்ல தோத்துட்டேன்… ரொம்ப கேவலமா தோத்துட்டேன்…” என்றவனது வார்த்தைகளிலிருந்த அந்த வலியை மஹாவால் உள்வாங்க முடியவில்லை.

அவ்வளவு அடர்த்தியாக இருந்த வலியை அவன் எப்படி தனியே அனுபவிப்பான்?

மெல்ல நடந்து காரை நோக்கிப் போனாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!