மெளனமாக பெசன்ட் நகர் வீட்டுக்குள் நுழைந்தான் ஷ்யாம். உடன் மஹா, கார்த்திக்.
அசாத்திய மௌனம் மூவரிடத்திலும்!
கார்த்திக் கோபமாக மகாவை பார்த்தான். விட்டால் அவளை நொறுக்கி தள்ளும் ஆத்திரம் அவனுக்கு!
வடபழனி கோவில் வாசலில் சௌஜன்யாவை மஹா அடிக்க, ஷ்யாமை தாண்டி அவன் முன்னே போனான், விட்டால் மஹாவை அடித்திருப்பான் . அந்தளவு கோபம் உச்சத்தில் இருந்தது. ஒரு நாள் முழுக்க பட்டினி கிடந்து அலைந்தது ஒரு பக்கம் என்றால், மனதளவில் பெரிய அடி வாங்கியிருந்த ஷ்யாமை பார்ப்பது இன்னொரு கொடுமையாக இருந்தது. அத்தனை வேதனைகளையும் வெளியே பெரிதாக காட்டிக் கொள்ளாமல் காலை முதல் அலைந்தவனுக்கு என்ன மரியாதை?
அதிலும் கிண்டிக்கு போலீசார் அழைத்தபோது போது ஒவ்வொரு நொடியும் அவன் மாண்டு மீண்டதை முழுக்க அறிந்த கார்த்திக்கால் மகாவின் செயலை ஏற்கவே முடியவில்லை.
வேகமாக போனவனை, “கார்த்திக்…” என்ற ஒற்றை அழுத்தமான அழைப்பில் தடுத்து நிறுத்தினான்.
“மச்சான்… இவ்வளவு நேரமா…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு ஆத்திரமாக இவன் கொதிக்க,
“பரவால்ல… விடு…” அவனது குரலில் அத்தனை அழுத்தம். அத்தனை இறுக்கம்.
இன்னமும் சௌஜன்யா கன்னத்தைப் பிடித்துக் கொண்டுதான் நின்றிருந்தாள். அவளது கண்களில் பயம் ப்ளஸ் லேசான கண்ணீர். எப்படி இருந்தாலும் ஷ்யாமை எதிர்த்து பேச முடியாத நிலை. அடித்தது அவனது மனைவி. அவள் ஒரு காலத்தில் சவால் விட்டாலும், இன்றைய நிலையில் ஷ்யாமை கண்டிப்பாக அவளால் எதிர்த்து கொண்டு நிற்க முடியாது.
அதிலும் அவனது பைனான்ஸ் என்ற லிமிட்டிலிருந்து அத்தனை சங்கங்களையும் தனது பாகாசுர கரங்களால் வளைத்து பிடித்துக் கொள்ள ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் கண்டிப்பாக அவனது மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதும் கூட அது அவனை எதிர்ப்பதாகத்தான் படும். கோபமாக குரலை உயர்த்திய கார்த்திக்கை கூட ஷ்யாம் அடக்கிய நிலையில், சௌஜன்யா கன்னத்தை பிடித்துக் கொண்டு நின்று விட்டாள்.
அவள் புறம் திரும்பிய ஷ்யாம், “சாரிம்மா… நீங்க கிளம்புங்க…” என்று முடித்துவிட, மஹா அடித்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் சௌஜன்யா வெளியே வரவில்லை.
“எதுக்கு சாரி சொல்ற ஷ்யாம்? அவளை நான் அடிச்சதுக்கா?” கோபமாக மஹா கேட்க, அவளுக்கு பதில் கூறாமல் கார்த்திக்கை பார்த்தவன், சௌஜன்யா புறம் திரும்பியவன்,
“சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… நீங்க கிளம்புங்க ம்மா….” என்று கூறி, விஜியை பார்த்து, “கிளம்புடா…” என்று முடித்துவிட, இருவருமே தலையாட்டிவிட்டு கிளம்பிவிட, கார்த்திக் புறம் திரும்பியவன்,
“கார்த்திக், உன் தங்கச்சிய காருக்கு கூட்டிட்டு போ…” அதே அழுத்தத்தோடு கூறினான்.
“முடியாது… நான் வர மாட்டேன்…” திட்டவட்டமான குரலில் மஹா கூற,
“கார்த்திக்… உன்னை கூட்டிட்டு போன்னு சொன்னேன்…” இத்தனை நாட்களாக இல்லாத இறுக்கம் அவனது குரலில்.
“நான் வர முடியாது…” மஹாவும் அதே பிடிவாதத்தோடு கூற,
“கார்த்திக்…” மிக மிக அழுத்தமாக, குரலை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அவன் கூறிய தொனியில் நிச்சயமாக விஜி அதிர்ந்தான்.
அதீத கோபத்தின் போது மட்டுமே அவனது தொனி இப்படி இருக்கும். சாதரணமாக கோபப்படாதவன், கோபமென்று வந்துவிட்டால், அவனாடும் ருத்திர தாண்டவத்தை அவனன்றி யார் அறிய முடியும். ஆனாலும் அந்த இடத்திலும் கொஞ்சமும் பயமே இல்லாமல் நின்றிருந்த அவனது மனைவியை பார்த்து இன்னமும் பயமாக இருந்தது விஜிக்கு.
ஷ்யாமை வெறுப்பாக பார்த்துவிட்டு, கண்களை கொட்டி கண்ணீரை அடக்கி வேறு புறம் பார்த்தவள், உதட்டை மடக்கி துடித்த இதழ்களை அடக்கினாள்.
காலை முதலே அவளது உலகம் அவனோடு நின்று போயிருந்தது.
கண்டிப்பாக தனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை மிகுதியாக இருந்தது. அந்த நம்பிக்கை மிகுதியாக இருந்ததால் தான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதும். ஆனாலும் அந்த வீடியோ காட்சிகளை மறக்க முடியாமல், அவனையும் ஏற்க முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவளை சற்றும் தொந்தரவு செய்யவில்லை. அதை காட்டிலும், எதை பற்றியும் கவலை இல்லாமல், அவளோடு உடனான நேரங்களை மகிழ்ச்சியோடு அனுபவித்தது தான் அவளது காதலை இன்னமும் அழுத்தமாக அவன் மேல் படர வைத்துக் கொண்டிருந்தது.
“உன்னை வெச்சு ஊறுகாய் போட்டுட்டு இருப்பேன்னு நினைச்சியா?” என்று ஒருமுறை கேட்டவன், அதற்கு முற்றிலும் எதிராக அத்தனை கண்ணியமாக இருக்க, அவன் மேல் இருந்த காதல் இப்போது அவளுக்கு ஏக்கமாக மாறியிருந்தது. அவனது தொடுகைக்கும், அணைப்புக்கும் வெகுவாக ஏங்கி போயிருந்தாள்.
தொடுவான், அணைப்பான், முத்தமிடுவான்… ஆனால் அத்தனையிலும் ஒரு விதமான ஒதுக்கம் தெரிந்தது. முதன் முதலாக தலகுப்பாவில் அவளை முத்தமிட்ட அந்த நிமிடங்களை நினைத்துப் பார்த்தாள்.
மனதுக்குள் சொல்லத் தெரியாத குளுமை!
அவளது உயிரை வேரோடு பிடுங்கி எடுத்து கொண்டு அவனோடு உருக்கி அவனுக்குள்ளே கரைந்து விட்டதை போன்ற அந்த உணர்வை எந்த காலத்தில் அவளால் மறந்து விட முடியும்? வன்மையாகத்தான் முத்தமிட்டான்… ஆனால் அத்தனை மென்மையாக, பூவை கொய்வது போல, பூக்குவியலில் குளிப்பது போன்ற சில்லென்ற அந்த உணர்வை இப்போதும் மறக்கவே முடியவில்லை. ஒரு முத்தம் யுத்தம் நிகழ்த்துமா? கண்டிப்பாக பூகம்பமே கண்டது அவளுக்குள்! முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன், முழுமையாக அவளை கொள்ளைக் கொண்டதும் அப்போதுதானே!
ஆனால் அடுத்த ஒரு சில நொடிகளில் காரண்டி வாரண்டி கொடுத்துவிட்டு காதலிக்க முடியுமா என்று கேட்டானே… முழுமையாக உள்ளுக்குள் உடைந்து போனது மனது! அவன் எத்தகையவன் என்பதை அப்போதுதான் மனம் முழுமையாக உணர்ந்தது. அவனது காதலே வேண்டாம் என்று முடிவு செய்தவளுக்கு அவனது நட்பை அது போல வெட்டி விட முடியவில்லை. அவனது புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும், பேச்சும், செயலும் அவளை அத்தனை வசீகரித்து இருந்தது.
குறும்பு கிருஷ்ணன் வெண்ணை திருடினாலும் அவனை வெறுக்க முடியுமா?
அப்படித்தான் இருந்தது அவளது நிலை!
ஆனால் பிருந்தாவன கோபியருள் ஒருத்தியாக அவளால் இருக்க முடியாதே! அது அவளது சுயமரியாதைக்கு பெரும் இழுக்காயிற்றே!
அதன் பின் எத்தனையோ மாற்றங்கள்… ஒரு நாள் முழுமையாக கிருஷ்ணனின் ராதையாகினாள்!
உத்தண்டி வீட்டில் அவனோடு மொத்தமாக ‘நீதானே’ என்று மயங்கிய அந்த பொழுது!
தோளில் உரசிய மூச்சுக்காற்றின் வெப்பம், அவளுக்குள் உணர்வு தீயை பற்ற வைத்த அந்த வேளை. தீயை பற்ற வைத்தவன், முத்தமிட்டு முத்தமிட்டு, அந்த தீயை கொழுந்து விட்டெரிய செய்து வெப்பத்தை கூட்டிக் கொண்டேயிருக்க, அந்த கனம் தாங்க முடியாமல் அவன் மார்பை தஞ்சம் கொண்டிருந்த அந்த கணங்களை அவளால் மறக்கவே முடியவில்லை.
வீடியோவை பார்த்த அந்த கோபம் வெகுவாக குறைந்திருக்க, அவனோடு மயங்கியிருந்த நேரமெல்லாம் நினைவுக்கு வந்து அவளை பழைய மஹாவாக்கியிருந்தது.
அதிலும் காலை எழுந்தது முதலே அத்தனை மகிழ்ச்சியாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தாள். திருமணமாகி நூறாவது நாள். கண்டிப்பாக ஷ்யாமுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாகவே அவளது மனதுக்குள் ப்ளான் ஓடிக் கொண்டிருந்தது.
அத்தனை கசடுகளையும் மறந்து விட வேண்டும் என்று உரு போட்டுக் கொண்டே இருந்தாள். தன்னை உயிராக தாங்கும் கணவனுக்கு இத்தனை நாட்களில் என்ன சிறப்பாக செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி வேறு மனதை வருத்திக் கொண்டிருந்தது.
அத்தனைக்கும் காரணம், அவனது காதல்! இருவருக்குமான உறவு என்பது பூ மலர்வது போல மென்மையாக, இயல்பாக இருக்க வேண்டும் என்ற அவனது எண்ணம்! அதை எத்தனையோ தடவை கூறியும் இருக்கிறான்.
“நானும் உன்னை ரொம்ப லவ் பண்றேன்… நீயும் அப்படித்தான்… உனக்குள்ள இருக்க இன்ஹிபிஷனை நீயா உடைச்சுட்டு வெளிய வா மஹா… உனக்காக நான் வெய்ட் பண்றேன்னு மட்டும் ஞாபகத்துல வெச்சுக்க…” என்று அவன் இப்போதெல்லாம் அடிக்கடி குறிப்பிட ஆரம்பித்து இருந்தான்.
‘டேய் மடையா… அந்த இன்ஹிபிஷனை நான் உடைக்க முடியாது… நீதான் உடைக்கணும்…’ என்று மனம் அவ்வப்போது சண்டித்தனம் செய்யவாரம்பித்து இருந்தது.
ஆனால் அந்த நூறாவது நாள் என்ற அந்த தினம், அனைத்தையும் உடைத்திருந்தது!
அவனுக்காக யாருமறியாமல் மோதிரம் வாங்கியவள், அதை அழகாக பேக் செய்து அறையில் ஒளித்து வைத்திருந்தாள். அதை அவனுக்கு அன்று இரவு அணிவித்து இனிய அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவளது ப்ளான்.
காலை முதலே அவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டு தானிருந்தாள்.
“டேய் மாமா… நான் உனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டா?” ஷேவ் செய்து கொண்டிருந்தவனிடம் கெஞ்சலாக அவள் கேட்க, அவளை புன்னகையோடு பார்த்தான்.
எப்போதுமே அவனுக்கு ஷேவ் செய்து விடுவதில் ஒரு தனி ஆர்வம் உண்டு. ஆனால் ஒழுங்காக அதை செய்யவும் தெரியாது. அழுத்தி இழுத்தால் கன்னத்தில் கிழித்து விடுமோ என்று பயந்து கொண்டே லேசாகத்தான் இழுப்பாள். அதில் ஷேவிங் க்ரீம் மட்டும் தான் வரும். அதனாலேயே அவள் பார்க்கும் முன்னே ஷேவ் செய்து முடித்து விடுவது அவனது வழக்கம். இன்று சற்று அவன் ஏமாந்து விட, அருகில் வந்து நின்று கெஞ்சியவளை மூக்கை சுருக்கிக் கொண்டு கல்மிஷமாக பார்த்தான்.
“ம்ம்ம்… தாராளமா பண்ணு… ஆனா ஒரு கண்டிஷன்…” என்று கூறியவன், புருவத்தை உயர்த்தி கண்ணை சிமிட்டி சம்மதம் கேட்க, அவள் புன்னகையோடு,
“ம்ம்ம்… கண்டிஷனா?” என்று இழுத்தவள், “என்னன்னு சொல்லு…” என்று அவனுக்கு அழகு காட்டினாள்.
“அதாவது…” என்று ஆரம்பித்து, “அடிக்க மாட்டல்ல…” என்று குறும்பாக கேட்டவனை, செல்லமாக புன்னகையோடு முறைத்தவள்,
“ஏதோ கோக்குமாக்கா தான் கேக்க போற…”
“தெரியுதில்ல… அப்புறமும் ஏன்டி வம்பு பண்ற?” கண்ணடித்தவன், ஷேவ் செய்வதில் பிசியாக இருக்க, இவள் முறைத்தாள். ஆனால் முறைத்தால் இப்போது வேலைக்காகாது என்று முடிவு செய்து கொண்டு,
“மாமா… ப்ளீஸ் மாமா… ஒரே ஒரு தடவ… ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்ச,
“என்னடி இப்படி இறங்கிட்ட? இதே மாதிரி வேற எதுக்காவது கொஞ்சுனா கூட ஒரு யூஸ் உண்டு… போயும் போயும் ஷேவ் செய்யவா?” என்று அவன் தலையிலடித்துக் கொள்ள,
“ப்ளீஸ்… ஒரு தடவ… ப்ளீஸ் மாமா…” கண்ணையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு உதட்டை குவித்தபடி கெஞ்சியவளை சில்மிஷமாக பார்த்தவன், ஷேவிங் க்ரீமை அவளது மூக்கில் அப்பி விட, மூக்கை விடைத்து முறைத்தாள்.
“ஏய்… உன்னோட ஆசைக்காக என் மூஞ்சிய வெச்சு ரிஸ்க் எடுக்க முடியுமா? அதுவும் கழுத்துல ரேசரை வெச்சுதான் என்னை மிரட்டுவ வேற… ஓடுடி…” என்று அவளை விரட்ட,
“அது போன மாசம்…” அப்பாவியாக அவள் கூற,
“ம்ம்ம்ம்ம்… ஆஹான்… இது இந்த மாசமா?” என்று கேட்க, அவள் வேகமாக தலையாட்டினாள்.
“ஓகே… உன்னை ஷேவ் பண்ண விட்டா எனக்கென்ன கிடைக்கும்?” வரவை பற்றி கவலைப்பட்டான் அவளது கணவன்!
“ம்கூம்…” என்று இடித்தவள், “ச்சே… உன்னை மாமான்னு கூப்பிட்டது எல்லாம் வேஸ்ட்…” என்று நொடித்துக் கொள்ள,
“நீ மாமான்னு கூப்பிட்டா, எனக்கு வாம்மான்னு காதுல விழுது… அதுவும் கிக்கா…” என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டி கூற,
“ம்ம்ம்… விழும் விழும்…”
“ஏய் பொண்டாட்டி… அந்த பாவா என்னாச்சுடி? அது இன்னும் கிக்கா இருக்குமே…” என்று ஒரு மாதிரியான குரலில் கூற,
“கிக்கு வேணுமா கிக்கு?” என்று அவனது மண்டையில் கொட்டியவள், அவளது கையிலிருந்த ரேசரை வலுக்கட்டாயமாக பிடுங்கி அவனோடு நெருங்கி நின்று ஷேவ் செய்ய, அவளது வெற்றிடையில் அவனது கைகள் படர,
“டேய் கையை எடுத்துடு… என் கைல என்ன இருக்குன்னு தெரியும்ல…” என்று மிரட்டலாக கூறுவது போல கூற,
“என் கை சும்மா இருக்கேடி பொண்டாட்டி…” என்று கிறக்கமாக கூற,
“சும்மா இரு இல்லைன்னா எதையாவது சுமந்துட்டு இரு… அதுக்காக எதுக்குடா அங்க வைக்கற?” என்று கூறினாலும், கண்கள் சொருகியது அவளுக்கு.
“நீ அந்த வேலைய பாரு… நான் இந்த வேலைய பார்க்கறேன்…” என்று அவளிடம் வம்பிழுத்து, அவனது கன்னத்திலிருந்த ஷேவிங் க்ரீமை எல்லாம் அவளது கன்னத்துக்கு இடம் மாற்றி, ஒரு வழியாக ஷேவ் செய்து முடித்து, குளித்து, அவனோடு வம்பு வளர்த்துக் கொண்டே விளையாட்டாகத்தான் மருத்துவமனைக்கு கிளம்பினாள் மஹா.
Leave a Reply