கனமான காய்கறி பையுடன் தன் இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து கொண்டு இருந்தாள் சத்யபிரியா.

“ஹேமா டார்லிங், நீ சொன்ன எல்லா வெஜிடபிள்ஸும் வாங்கிட்டேன்! சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோ” என்று சொல்லி விட்டு ஸோஃபாவில் பெரிய மூச்சுகளுடன் அமர்ந்தவளுக்கு வியர்த்து வழிய, ஹாலுக்கு வந்து மின்விசிறியை போட்டு விட்டார் ஹேமாவதி.

“ஏய் வாலு! டார்லிங்ன்னு யாரை கூப்பிடணும் ன்னு உனக்கு தெரியுமா; தெரியாதா?” என்று சிரித்தவரிடம்

“இங்க பாருடா, சூரி கூப்பிட்டா மட்டும் உன் பேஸ்ல லைட் எரியுது. நான் கூப்பிட்டா அந்த லைட் எரிய மாட்டேங்குதே?” என்று சோகமாக முகத்தை வைத்துக் கொண்டாள் சத்யபிரியா.

“அட செல்லமே, அப்பாவும், நீயும் ஒண்ணா? நீ இப்படி கிண்டல் பண்றன்னு அப்பா தான் என்னை இப்போ அந்த மாதிரி கூப்பிடுறதே இல்லையே? இன்னமும் ஏன்டீ என்னையும், அப்பாவையும் சீண்டிட்டே இருக்க?” என்றார் சத்ய பிரியாவின் தாய் ஹேமாவதி.

“அடப் போ ஹேமா, நானே நம்ம வீட்ல உனக்கும், டாடிக்கும் ரொமான்ஸ் சீனே நடக்க மாட்டேங்குதுன்னு ஃபீல் பண்ணிட்டு இருக்கேன். பேசாம என் உடன் பிறப்புக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க. இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், அபார்ட்மெண்ட்ன்னு பில்டர் அண்ணாத்தை டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்கப் போறாராம்?” என்றவளிடம் புன்னகை முகத்துடன்,

“ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க ப்ரியா மேடம்? ரொமான்ஸை நாங்க பண்ணினா என்ன? நீங்க பண்ணினா என்ன? ரொம்ப ஆசையா இருந்ததுனா அப்பா கிட்ட பேசி உனக்கு சீக்கிரம் மாப்பிள்ளை பார்க்க சொல்லிடலாம்!” என்று தன் தங்கையிடம் பதில் பேசிய படி கம்பெனிக்கு கிளம்ப தயாராகி வந்தான் இளங்கோ.

“டைமாச்சு மா, நான் சைட்க்கு கொஞ்சம் சீக்கிரம் போகணும். ப்ரேக் பாஸ்ட் வெளியே பார்த்துக்கட்டுமா?” என்றான் கடிகாரத்தில் மணியை பார்த்த படி.

“குட்டிமா கிளம்பி தானே இருக்க; நீயும் சீக்கிரம் சாப்பிட்டுட்டு என் கூட ஆஃபிஸ் வா! எனக்கு வெளியில போற வேலை இருக்கு!” என்று தன் தங்கையிடம் கேட்டான் இளங்கோ.

“ஹலோ பாஸ்! நீங்க குடுக்குற சம்பளத்துக்கு காலையில 8 மணிக்கு எல்லாம் வேலைக்கு வரணுமா? என்னை மாதிரி ஒரு குட்டி பாப்பாக்கு போய் மாப்பிள்ளை பார்க்க சொல்றதுக்கு உனக்கு எப்படிடா மனசு வந்தது? உனக்கு சீக்கிரம் ப்ரேக் பாஸ்ட் பண்ணி தரணும்ன்னு தான் அம்மா என்னை மட்டும் மார்க்கெட்டுக்கு அனுப்பி வச்சாங்க. ஒழுங்கா சாப்பிட்டுட்டு கிளம்பு. நீ பேசின பேச்சில நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன். ஸோ இன்னிக்கு நான் லீவ் பாஸ்!” என்றாள் சத்யபிரியா.

“விளையாடாத ப்ரியா குட்டி, டைமாச்சு, அண்ணா சாப்பிட்டு ஆஃபிஸ் கிளம்பறேன். நீ சமர்த்தா 9.30 க்கு வந்துடு. உன்னை மாதிரி 23 வயசு குட்டி பாப்பாக்கு அம்மா மடியில தூக்கி வைச்சு தான் உப்புமா ஊட்டணும். அம்மா இந்த பேபிக்கு பௌல்ல போட்டு ஊட்டி விடுங்கம்மா!” என்றான் சிரிப்புடன். தன் அண்ணன் சொன்ன காலை உணவை காதில் வாங்கிய சத்யப்ரியா கோபத்துடன் தன் தாயின் பக்கம் திரும்பி முறைத்தாள்.

“ஹேமா யூ சீட்டர்! இதுக்கு தான் என்னை மார்க்கெட்க்கு பேக் பண்ணியா? இந்த உப்புமாவை சாப்பிடாம நான் கோபமா………ஹைய்யா தொப்பி தோசை; லவ் யூ மை டியர் மம்மி!” என்று சொல்லி பாதி சண்டையில் தனக்கு தோசை கொண்டு வந்த தன் தாயை கொஞ்சி விட்டு அண்ணனை வெறுப்பேற்றிய படி தன் நெய் ரோஸ்டை ரசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தாள் சத்யபிரியா.

“நிதானமா சாப்பிட்டு கிளம்பி வா, அண்ணா கிளம்பட்டுமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தவன் மாடியில் இருந்து இறங்கிய தன் தந்தையை பார்த்து, “குட் மார்னிங் அப்பா, நான் நம்ம சைட்டுக்கு கிளம்பறேன். நீங்க வரும் போது இந்த வாலை கூட்டிட்டு வந்துடுங்க. லீவ் போட ப்ளான் பண்ணிட்டு இருக்கா!” என்று சொன்னவனிடம் சூர்ய நாராயணன், “இளங்கோ எப்பவும் 8.30 க்கு தானே கிளம்புவ? உன் கிட்ட பத்து நிமிஷம் பேசணும்!” என்று சொல்லி அவனருகில் அமர்ந்து கொண்டார்.

“இன்னிக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு அந்த ரெஸ்டாரென்ட்டிற்கு போயிட்டு வாங்க!” என்றார்.

“என்ன டாடி திடீர் னு ரெஸ்டாரென்ட்டுக்கு போக சொல்றீங்க? ஏதாவது க்ளையண்ட் மீட்டிங் ஆ?” என்று கேட்ட தன் மகளிடம்

“நான் நாலு நாள் முன்னாடியே எல்லா விஷயத்தையும் உங்க கிட்ட தெளிவா பேசிட்டேன். நீங்க ரெண்டு பேரும் போறது உங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்க!” என்றார் சூரிய நாராயணன்.

“சூப்பர்ப்பா; அன்னிக்கு பேசறப்ப ரொம்ப நாள் ஆகும்னு அண்ணா சொன்னான். அதுனால நீங்க சொன்னப்போ நியாபகம் வரல. என்ன பாஸ் பொண்ணு பார்க்க போறோம்; இன்னிக்கு நான் லீவ் போட்டுக்கலாமா?” என்றாள் சத்யபிரியா.

அவளை தன் பார்வையினால் அடக்கிய இளங்கோ, “அப்பா….ப்ளீஸ்! எனக்கு இன்னும் ஒன் இயர் டைம் குடுங்க. அதுக்குள்ள இன்னும் கொஞ்சம் பிஸினஸை ஸ்டெப்லைஸ் பண்ணிக்கிட்டு…….” என்ற இளங்கோவை இடைமறித்து

“இளங்கோ உனக்கு இப்போ ஒரு ஸ்டெரஸ் பஸ்டர் கண்டிப்பா தேவைப்பா. இந்த வயசுல கல்யாணம் தான் அதுக்கு ஒரே சொல்யூஷன். உனக்கு இப்போ கல்யாணம் பண்ணினா தான் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு சத்யாவுக்கு கல்யாணம் பண்றதுக்கு சரியா இருக்கும். 28 வயசு ஆகிடுச்சு, இதுக்கு மேலேயும் லேட் பண்ண வேண்டாம் இளங்கோ, பிஸினஸ் லைஃப் ஒரு பக்கம் இருக்கட்டும். பேமிலி லைஃப் ஒரு பக்கம் இருக்கட்டும். அதையும், இதையும் ஏன் போட்டு குழப்பிக்கிற? நியூ இயர் அன்னிக்கு கண்டிப்பா ரீச் பண்ண முடியாதுன்னு நினைக்கிற அளவுக்கு கோல் செட் பண்ணிக்கிற….அதுல கிட்ட தட்ட முக்கால் வாசி அளவை வருஷம் முடியும் போது ரீச் பண்ணிடுற; என்னை விட நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியை நீ ரொம்ப திறமையா ரன் பண்ற. ஃப்ராபிட் சம்பாதிக்கிற; எல்லாம் ஓகே!
ஆனா இப்படி உன் வேலைகளுக்கு பின்னாடி ஓடிட்டு இருந்தா நீ எப்போ உன் வாழ்க்கையை வாழப் போற? வாழ்க்கையை ரசிக்கிறவங்க மட்டும் தான் வாழ்க்கையை வாழ முடியும். வாழ்தல் ஒரு பெரிய கலை கண்ணா. நீ இவ்வளவு நாள் இந்த பூமியில இருக்கிற; ஆனா இன்னும் நீ வாழவே ஆரம்பிக்கலை; பொண்ணை பார்த்துட்டு வா! அப்புறம் நம்ம பேசிக்கலாம்!” என்றவர் தன் மகளிடம் திரும்பி, “அண்ணா தனியா போக வேண்டாம். நீயும் அவன் கூட கண்டிப்பா போகணும். புரிஞ்சதா?” என்றார்.

அவள் அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு பெரிதாக தலையாட்டினாள்.

அவர் சாப்பிட்டு செல்லவும் சத்யா தன் அண்ணனிடம், “டேய் அண்ணா, ஏன்டா சூரியை தேவையில்லாம இவ்வளவு பேச வச்சு டையர்டு ஆக்குற? கல்யாணம் தானே பண்ணிக்க சொல்றாங்க? பண்ணிக்கோ!” என்றவளை முறைத்தான் இளங்கோ.

“உனக்கு புரியுதா, இல்லையா? பிரியா குட்டி, என் லைஃப்ல பேமிலிக்கும், பிஸினஸ்க்கு‌ம் தான் நான் இதுவரைக்கும் ப்ரியாரிட்டி கொடுத்திருக்கேன். இப்போ புதுசா ஒரு கமிட்மெண்டை அக்செப்ட் பண்ணிக்க எனக்கு பயமாயிருக்கு! அந்த பொண்ணு நம்ம கூட கம்பர்டபிளா இருப்பாளா? நம்ம பேமிலியோட மிங்கிள் ஆகிடுவாளான்னு தெரியலையேடா!” என்று தன் தங்கையிடம் தன் கவலையை சொன்னவனிடம்,

“நம்ம அப்பா, அம்மா உனக்கு லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணுறப்போ, இதெல்லாம் யோசிக்காமலா இருந்திருப்பாங்க? அப்பா நமக்கு தெரிஞ்ச பேமிலின்னு தான் சொன்னாங்க. ஸோ அண்ணி நீ எக்ஸ்பெக்ட் பண்ற மாதிரி தான் இருப்பாங்க. அவங்க கூட பேசிப் பாரு, அதுக்கப்புறம் டிஸைட் பண்ணு. சும்மா ஒரு மீட்டிங் தானே? ப்ரீயா விடு அண்ணா!” என்றவளிடம்

“வாட்….சும்மா ஒரு மீட்டிங் தானேவா? என்ன ப்ரியா குட்டி இப்படி சொல்ற? ஒரு பொண்ணை பார்த்துட்டு, அவ கூட அரை மணி நேரம் பேசி அவ டேஸ்ட், ட்ரீம், பாஷன்(passion) இதெல்லாம் பத்தி கேட்டுட்டு ஜஸ்ட் ஒரு காஃபி குடிச்சிட்டு வரப் போறோம்னு நினைச்சியா நீ? எப்போ ஒரு பொண்ணை நமக்காக நேரம் செலவழிக்க சொல்றோமோ, அப்பவே அவ மேல உரிமையும், அக்கறையும் நமக்கு வந்துடணும். அந்தப் பொண்ணுக்கு என்னை பிடிச்சிருந்ததுன்னா அவ தான் என் பொண்டாட்டி. இதில எந்த வித செகண்ட் ஒப்பீனியனும் இல்லை!” என்றான் உறுதியாக.

“அண்ணி அவ்வளவு அழகா இருப்பாங்களா அண்ணா? போட்டோ பார்த்தே கவுந்துட்டியா?” என்று கேட்டவளிடம்

“ம்ஹூம்! நான் போட்டோல்லாம் பார்க்கல. நேர்ல தான் பார்க்க போறோமே? அவங்க எப்படி இருந்தாலும் எனக்கு ஓகே. பட் அவங்க டெஸிஷன் தான் முக்கியம்! பார்ப்போம்; ஒழுங்கா ஆஃபிஸ் வந்து சேரு! பை” என்றவனை

“அண்ணா உனக்கு லவ் பண்ணி மேரேஜ் பண்ணிக்கணும்ன்னு ஆசையா இல்லையாடா?” என்று ஆர்வத்துடன் அவன் முகத்தை பார்த்து கேடட்டவளின் தலையில் குட்டி விட்டு

“இப்போ தானே நான் ஒரு குட்டிப் பாப்பாவாக்கும்ன்னு ஸீன் போட்ட! அப்புறம் ஏன் ஓவரா பேசுற? நீ குட்டியாவே இரு செல்லம்! பை” என்று சொல்லி விட்டு சென்றான்.

“டேய் அண்ணா உனக்கு ஒரு ஹக் குடுக்கலாம் ன்னு தோணுது டா! நீ ரொம்ப நல்ல பையன்…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு தன் அண்ணனுக்கு கையசைத்து விடை கொடுத்தாள் சத்யபிரியா.

விஜய் பிரபு காவல் நிலையத்தில் மிடுக்கான தோற்றத்தில் தன் அறையில் அமர்ந்திருந்தான். தன் கேஸ் ஃபைல்களில் மூழ்கி இருந்தவனை மொபைல் அழைத்தது.

தன் சக ஊழியனிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து இருந்தான். அவனுடைய அழைப்பை அட்டெண்ட் செய்தவன், “சொல்லு ராஜ்!” என்றான் சற்று ஆவலுடன்.

“டேய் விஜய், ரொம்ப நல்ல பையன்டா, ரெண்டு நாள் அவன் பின்னாலேயே சுத்துனேன். வீடு, ஆஃபிஸ், அவனோட சைட் ஒர்க்ஸ் இது மட்டும் தான்டா அவனுக்கு தெரியும் போல இருக்கு; கிட்ட தட்ட சேனம் கட்டின குதிரை மாதிரி தான் இருக்கான். பட் கொஞ்சம் ஜோவியல் டைப். மொத்தத்தில் பக்கா!” என்று இளங்கோவிற்கு விஜயின் நண்பன் நற்சான்றிதழ் கொடுத்து கொண்டு இருந்தான்.

“ஓகே ராஜ், ரெண்டு நாள் எனக்காக ஆஃப் டியூட்டி பார்த்ததுக்கு தேங்க்ஸ்டா!” என்றவனிடம்

“ஸிஸ்டர் மேரேஜ்க்கு கண்டிப்பா இன்வைட் பண்ணுடா. உன் அக்காவுக்கு பார்த்து இருக்கிற பையன் மாதிரி ஆளுங்கள எல்லாம் விசித்திரமான ஜந்துக்கள் லிஸ்டில் சேர்த்து டோக்கன் போட்டு கண்காட்சியாக காட்டலாம்!” என்றான் விஜயின் நண்பன்.

“இந்த காலத்துல ஒருத்தன் பெர்ஃபெக்டா இருந்தா எல்லா தப்பும் செய்றவன் எல்லாம் சேர்ந்து நல்லவனை வேலைக்காகதவன், விசித்திர
ஜந்துன்னு கிண்டல் பண்றது, உங்களுக்கெல்லாம் இதே வேலையா போச்சுடா! மிஸ்டர் இளங்கோவோட பேரண்ட்ஸ் அவருக்கு தேவையான சுதந்திரம் கொடுத்து இருப்பாங்க. ப்ரெண்ட்லியா ட்ரீட் பண்ணியிருப்பாங்க. அவரோட அப்பா அவருக்கு ரோல் மாடலா இருந்து இருப்பாங்க! அதனால தான் அவர் நல்லவரா இருக்க முழுசா வாய்ப்பு இருக்கு!” என்றவனிடம்

“யப்பா, டேய் நல்லவனே; ஆளை விடு, உன் வருங்கால மாமாவும், நீயும் ஒண்ணா சேர்ந்து நல்லவங்க கட்சி ஆரம்பிச்சு உங்களை மாதிரி இருக்கிற அரை மெண்டல் கேசுகளை தேடி சேர்த்துட்டு டெவலப் பண்ணுங்க!” என்றான் சிரிப்புடன்.

“நல்லவனா, ஒழுக்கமா இருக்கிறது தான்டா ரொம்ப சுலபமான வேலை. தேவையில்லாத பொய் சொல்லி, குழம்பிப் போய், கடன் வாங்கி, அவமானப்பட்டு, இப்படி எல்லா பிரச்சினைகளையும் யோசிச்சு பாரு. அதோட ஆரம்பப்புள்ளி ஏதாவது ஒரு கெட்ட பழக்கமா தான் இருக்கும்!” என்றான் விஜய் சிரிப்புடன்.

“ஆமா இன்னிக்கு என்ன தத்துவ மழையா கொட்டுற; என்னிக்குமே இல்லாம இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்க!” என்று ஆச்சரியத்துடன் கேட்ட தன் நண்பனை

“இல்ல! உனக்கும் ஸ்மோக்கிங், லிக்கர் ன்னு கொஞ்சம் தப்பான ஹேபிட்ஸ் இருக்குல்ல, ஏதாவது ஒரு நல்ல விஷயம் உன் காதுல ஏறாதான்னு தான் ட்ரை பண்றேன்!” என்றவனிடம்

“அந்த ஆணிய நாங்க பார்த்துக்கிறோம். நீ போய் வேற வேலை இருந்தா பாரு!” என்று போனை வைத்த நண்பனை “நல்லது சொன்னா உங்க காதுல ஏற மாட்டேங்குது. திருந்தி தொலைங்கடா!” என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் இருந்து எழுந்தான் விஜய் பிரபு.

மாலை ஆறு மணியளவில் இளங்கோவும், சத்யபிரியாவும் அந்த உணவகத்திற்குள் நுழைந்தனர். “ப்ரியா குட்டி, பொண்ணு போட்டோ பார்த்தியாடா? அவங்கள கண்டுபிடிச்சிடுவியா?” என்று தன் தங்கையிடம் கேட்டான் இளங்கோ.

“என் மொபைல்ல போட்டோ வச்சுருக்கேன். நீ பார்க்கணுமாடா அண்ணா?” என்று கேட்டவளிடம்

“ம்ஹூம்! இது ஒரு மாதிரி எக்ஸைட்டிங் ஆ இருக்கு! வந்ததும் நேரிலேயே பேசிக்கறேன். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு நீ என்னை டேய்ன்னு கூப்பிடக் கூடாது. சரியா?” என்றான் கெஞ்சலுடன்.

“டேய் அண்ணா, நான் சின்ன வயசுல இருந்தே உன்னை இப்படி தானே கூப்பிட்டுட்டு இருக்கேன். இன்னிக்கி மட்டும் என்ன புதுசா மரியாதை குடுக்க சொல்ற? மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாது ப்ரதர், அடி மனசுல இருந்து தானா வரணும்!” என்று சொல்லி விட்டு சிரித்தாள் சத்யபிரியா.

“என் செல்ல பிரியா குட்டில்ல நீ? அண்ணா உனக்கு ஒரு பளூடா வாங்கித் தர்றேன்ம்மா!” என்று தாஜா செய்து கொண்டிருந்தவனை பார்க்க பாவமாக இருந்தது சத்யாவிற்கு.

“கூப்பிட்டு தொலைக்கிறேன். அசிங்கமா கெஞ்சாத. ஆனா இன்னிக்கு ஒரு நாள் மட்டும் தான். சரியா?” என்றாள் கறாராக.

அவன் தன் தங்கையின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டான்.

“அண்ணா, அந்த ப்ளூ ஸாரி வித் ஆரஞ்ச் பார்டர்…. அவங்க தான் சாருலதா! பிடிச்சிருக்காப்பா?” என்று கேட்டவளிடம்

“என்னடா ப்ரியா, வாடா பிஸினஸ்ல இருந்து வாப்பா பிஸினஸ்க்கு‌ போயிட்ட? வாங்கண்ணா; இளங்கோண்ணா; இதெல்லாம் அடுத்து வரும்ன்னு எதிர்பார்க்கலாமா?” என்று சிரித்தவனிடம்

“டேய் உனக்கு அவ்வளவு தான்டா மரியாதை! பொண்ணு பிடிச்சிருக்கான்னு சொல்லுடா ” என்று பல்லைக் கடித்தவளிடம்

“ஈஸி, ஈஸி! நான் தான் அப்பவே சொல்லிட்டேனே, அவங்க ஓகேன்னு சொன்னா அவங்க தான் உன் அண்ணி!” என்றான் புன்னகையுடன்.

விஜய் பிரபு காரை பார்க் செய்து விட்டு தன் அக்காவின் அருகே வந்து நின்றான்.

சாருலதா ஒரு வித பதட்டத்துடன் நிற்பதைப் பார்த்து விட்டு, “ஆர் யூ ஆல்ரைட் சாரு?” என்றான் அவள் கையைப் பற்றி.

“விஜி, எனக்கு என்னவோ பண்ணுது. ஒரு மாதிரி…..நெர்வஸா! திரும்பி போய்டலாமா… இன்னொரு நாளைக்கு ப்ளானை போஸ்ட்போன் பண்ணிடலாம்!” என்றவளை பார்த்து ஒரு மெல்லிய புன்னகையுடன்

“அந்த இன்னொரு நாளும் உனக்கு இப்படி தான் சாரு டென்ஷனா இருக்கும். இட்ஸ் கொயட் நாச்சுரல்; இவ்வளவு தூரம் வந்துட்டு திரும்பி போனா நல்லா இருக்காது. உள்ளே வா!” என்று புன்னகையுடன் அழைத்த தன் தம்பியை ஆச்சரியமாக பார்த்தாள் சாரு.

அவளின் ஆச்சரியமான பார்வையை கண்டு இன்னும் சிரிப்பு வந்தது விஜய்க்கு.

“நான் இன்னிக்கு கொஞ்சம் அதிகமா தான் பேசுறேனோ சாரு?” என்று கேட்டவனிடம்

“இப்படியே இரு விஜி, சந்தோஷமா இருக்கும்!” என்றவளிடம் “வா போகலாம்” என்று அவளை அழைத்து சென்றான்.

சத்யபிரியா தன் அண்ணனிடம், “இளங்கோண்ணா, அவங்க கூட ஒரு லேம்ப்போஸ்ட் சிரிச்சு சிரிச்சு பேசுறான் பாரேன்!” என்று கருவிக் கொண்டு இருந்தாள்.

“பிரியா குட்டி, அது அவங்களோட பிரதர் டா!” என்றான் சிரிப்புடன்.

விஜயும், சாருவும் அருகில் வந்ததும் இளங்கோவும், சத்யாவும் சென்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.

தன் வருங்கால அண்ணியிடம் கட்டிக் கொண்டு வரவேற்பு செய்த சத்யாவிடம், “ஹாய் ஐ’ம் விஜய்!” என்று கைகளை நீட்டிய படி நின்று கொண்டு இருந்தவன் புன்னகைத்தான்.

கண்களில் கவனத்துடன், “ஹலோ” சொன்னவளிடம்

“ஹேண்ட் ஷேக் பண்ண யாராவது கை குடுத்தா எதிர்ல இருக்கிறவங்களும் கை குடுக்கணும். உங்க பேரு சொல்லணும். இது பேஸிக் மேனர்ஸ்!” என்று அமைதியான குரலில் சொன்னான் விஜய்.

“ம்! அப்படியா? நான் மேனர்ஸே இல்லாத ராட்சஸி தான்னு நினைச்சுக்க, இப்போ என்ன அதுக்கு?” என்றாள் சத்யா சற்று காரமாக.

“இதுக்கு முன்னாடி மீட் பண்ணியிருக்கோமா?” என்றான்
விஜய் சத்யாவிடம்.

இல்லையென தலையாட்டினாள் சத்யா.

“அப்புறம் ஏன் கோபம்?” என்றான் விஜய் ஒரு ஆராய்ச்சி பார்வையுடன்.

“ம்ப்ச்! ஏன்னு தெரியலை!” என்று தோளைக் குலுக்கினாள் சத்யா.

“இவளுக்கு ஏன் என்னை பிடிக்கலை?” என்று யோசித்துக் கொண்டு இருந்த விஜய் தன் அக்காவிடம் சென்று, “ரெண்டு பேரும் சேர்ந்து பேசிட்டு ஒரு முடிவுக்கு வாங்க! நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல போயிட்டு வர்றோம். ஸார் உங்க ஸிஸ்டரை பத்திரமா பார்த்துக்கிறேன். சாரு பேசி முடிச்சிட்டிங்கன்னா கூப்பிடு. நான் வந்துடுறேன்!” என்று சொன்னவனிடம் “மிஸ்டர் விஜய் என் தங்கச்சி கொஞ்சம் வாலு; கவனமா பார்த்துக்கோங்க!” என்றவனிடம் சிரிப்புடன் தலையாட்டி விட்டு சத்யாவின் கையைப் பிடித்து இழுத்தான்.

“ம்ப்ச்! ஏய்! என்ன இது? கையை விடு!” என்று சொல்லியவளின் பேச்சு அவன் காதில் விழவில்லை.

தன் அண்ணனை பார்த்தவள், அவன் அந்த பெண்ணிடம் இயல்பாக பேசிக் கொண்டு இருப்பதைக் கண்டு, அடிக்குரலில்

“கையை விடுறா பொறுக்கி; நான் சொல்றது கேக்குதா? இல்லையா?” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.

விஜய் பிரபு ஆச்சரியத்துடன், “பொறுக்கியா…..நானா? இன்ட்ரஸ்டிங்” என்றான் ரசனையுடன்.

வார்த்தை வரம் தொடரும்!

error: Content is protected !!